Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 45_2
பிருந்தாவின் தலை மறையும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்மாவை நோக்கினான்.
அம்மாவைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் மாறினான். இதுவரை இருந்த பலமெல்லாம் வடிந்தது.  அம்மாவின் மடி தேடியது மனம்.
“ம்மா..” என்றான். குரலில் அப்படி ஒரு அசதி.. உடல் வலியும் சேர்ந்து கொண்டு வர அம்மாவைத் தான் பார்த்தான்.
மகனின் தலையை வருடிக் கொண்டே, “என்ன கண்ணா.. ரொம்ப வலிக்குதா..ம்மா? உடம்பெல்லாம் ரணமாகி இருக்கு டா.. வலிக்கத் தான் செய்யும்.. பயப்பட மட்டும் செய்யாத. சரி பண்ணிடலாம்..” பயமோ கலக்கமோ அவர் பேச்சில் இல்லை. மகன் மீண்டுவிட்டான்.. இது அவனின் மருஜென்மம்.. அவன் பிழைத்ததே போதும் என்ற எண்ணம் மட்டும்.
மேல் காயம் ஆறிவிடும் அதனால் அவர் பயம் கொள்ளவில்லை. அவர் அறியாத கண்ணனின் உள்காயம்? அதைச் சரி செய்ய முடியுமா? முடியும்.. ஒரே ஒருத்தியால் மட்டும்.. அவள் எங்கே?
அம்மாவின் வருடல்.. அதில் அவன் கண் சொருக…. கண்ணை மூடிக்கொண்டே கேட்டான்..
“எப்படிமா ஆச்சு? தலை.. உடம்பு பூரா அசைக்க முடியலை? வலி உயிர போகுதுமா.. இத கூட பொறுத்துப்பேன்.. ஆனா பாதி மயக்கமா இருக்கு.. ஒரு மாதிரி பொரட்டிகிட்டு வருதுமா..”
“இங்க வந்து ரெண்டு நாள் ஆச்சு.. என்னை பிக் பண்ண ஏர்போர்ட் வரப்போ குடிகாரன் இடிச்சுட்டான். ஏதோ கெட்ட நேரம்  ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. நம்ம நல்ல நேரம் உனக்கு ஒண்ணும் பெருசா பிரச்சினை இல்லை. தலைல காயம். காயத்துக்கு தையல் போட்டு கட்டுப் போட்டு இருக்காங்க. நீ டெய்லி ரெண்டு மணி நேரம் ஜிம்-ல வொர்க் அவுட் பண்ணுரது வேஸ்ட் ஆகலை.
உடம்பு ஸ்றாங்கா இருக்க நால,  கடவுள் கிருபையில ‘காலர் போன்’ ஃப்ராக்சரோட தப்பிச்சுட்டோம். நாலுலேந்து ஆறு  வாரத்தில அதுவே செட் ஆகிடுமாம். சில காயம் கொஞ்சம் ஆழம்.. சில காயமெல்லாம் வெறும் மேல் காயம் தான். ஆனா அதுவுமே இன்ஃபெக்ட் ஆகாம பார்த்துக்கணும்… கொஞ்சம் வாரம் ஆகும் காய.
போட்டிருக்க மருந்தினால மயக்கமா இருக்கதான் செய்யும். மருந்து வீரியம் குறையவும் மயக்கம் குறையும். நீ எதையும் யோசிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடு. சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்.”  தன் இதயத்தின் வேதனையையோ வலியையோ காட்டிக்கொள்ளாது அவன் தலையை வருடிய வண்ணம் கூறி முடித்தார்..
சுசீலா, மகன் விஷயத்தில் மட்டுமே இந்த  பரிதவிப்பும் அரவணைப்பும்! அவர்கள் தொழில் வட்டாரத்தில் ‘இரும்பு மனுஷி’ என்ற பெயரும் உண்டு! எட்ட முடியா உயரத்திற்கு ஒருவராய் தன் தொழிலை உயர்த்தியவர் ஆகிற்றே!
அஷோக்கின் உடல் அவனுக்கு செலுத்தப்பட்டிருந்த மருந்தையும் தாண்டி அதிகமாய்  வலிக்கவே, எதையும் சிந்திக்கவோ கேட்கவோ திராணியற்றவனாய் கண்ணை மூடி படுத்திருந்தான்.
ஏதோ நினைவு வந்தவன், கண்கள் மூடியவாறே கேட்ட “பாட்டி எங்க மா?”விற்கு பதில் கொடுப்பது அவ்வளவு கடினமாயில்லை.
அவன் கேட்கவிருக்கும் அடுத்த கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்தவர், சுதாவைப் பற்றி அவன் கேட்காமலே உறங்கவும் நெருடலாய் உணர்ந்தார்.
சுதா.. ஏன் அவளைப் பற்றி எதுவும் கேட்கவில்லை? அதுவும் இருவரும் ஒரே காரில் வந்த சமயம் விபத்து நேர்ந்ததால், கண்ணன் கண்டிப்பாய் அவளை பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வான் என நினைத்திருக்க, அவனோ சம்மந்தமே இல்லாமல் அவள் பாட்டியை விசாரித்து கொண்டிருக்கிறான். விபத்தைப் பற்றி நினைவில்லாததால் அவள் அவனோடு வந்ததும் நினைவில் இல்லையோ?
மெதுவாய் அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவர், நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டு  நாற்காலியில் சாய்ந்தார்.
கண்களை மூட, மூடியிருந்த கண்கள் இடுக்கின் வழியே நீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. இன்று தான் கண்ணீர் எல்லாம்.. மகன் கண்விழித்த பின். இறுகிய இதயம் தளர.. உடல் துவள.. கண்ணீர் எட்டிப் பார்த்தது.
கண் மூட, இதயம் திறக்க.. இறைவனை நோக்கி அழுதார். மனதார ஆயிரம் நன்றிகள் உறைத்தார்.
மகன் தான் அவரின் யானை பலம்.. அதையும் விட அவன் தான் அவரின் ஒரே பலகீனம். பழைய மாயாவி கதைகளில் வரும்.. ஏழு மலை தாண்டி.. ஏழு கடல் தாண்டி.. ஒரு குகையில்.. ஒரு பெட்டியில்.. ஒரு தங்கக் கூட்டில்.. ஒரு சிட்டுக் குருவிக்குள் ராட்சசன் உயிர் இருக்குமாம். சுசீலாவின் உயிரைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்.
அவனுக்காக எதையும் தாங்குவார்… செய்வார்! அவன் விருப்பமே அவர் விருப்பம். அவன் மகிழ்வில் அவர் வாழ்ந்தார். அது தந்த தைரியமே அவனின் அசாத்திய வளர்ச்சிக்கும் காரணம். மணிமேடையிலிருந்த சுதாவை தன்னவள் ஆக்கியதும் இதே தைரியத்தில் தான். அவன் எண்ணத்தில் தவறில்லை.
“அம்மா.. சுதா என் மனைவி.. உங்க மருமக..” இது மட்டுமே அவருக்கு போதும்.. சுதாவை மகளாய், மருமகளாய் தங்கத் தட்டில் தாங்க.
ஆனால் விதியின் விருப்பம்? வேறாய் போனதே!
மகன் உறங்கிப் போகவும் வெளியே சென்றார்.
சில மணி நேரம் கழித்து மீண்டும் மகனைக் காண சோர்வோடு சுசீலா வர அறையின் கதவு திறந்திருக்கவும் உள்ளிருந்து பேச்சு சத்தம் கேட்டது.  சுசீலா விரைந்தார். அஷோக் கட்டிலில் சாய்ந்தவண்ணம் அமர்ந்திருந்தான், நர்சோடு பேசிக்கொண்டு.
தாயைக் கண்டதும் தன் அழகிய பல் வரிசை தெரிய புன்னகைதான். முகம் தெளிந்திருந்தது.
“ஹாஸ்பிட்டல்ல இருக்க மகனுக்கு ஜூஸ் கூட கொடுக்காம எங்கம்மா போய்டீங்க..” பொய்யான கோபத்துடன் கேட்க, அருகில் வந்து அவன் தலையை வருடிவிட்டு அவன் உச்சந்தலையில் முத்தமிட்டார்.
அந்த ஒரு சின்ன முத்தம் அவனுக்கு தன் தாயின் உள்ளக் குமுறலை படமிட்டுக்  காட்டியது. அவர் உள்ளங்கையை இடது கையால் எடுத்து கண்களில் வைத்து.. அதில் முத்தமிட்டு, “ரொம்ப பயந்துட்டீங்களா..மா? அது தான் இப்போ சரியாகிட்டேனே அப்புறமும் இப்படிச் சோர்வா இருக்கணுமா?.. கொஞ்சம் சிரிக்கலாமே…” என்று கொஞ்சினான்.
மகன் கிடைத்துவிட்டான். அது மட்டும் போதவில்லை போலும், ஒருவித கவலை நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டிருந்தது.. “இப்போ மயக்கமா இருக்கா?”
“இல்ல மா.. தலை தான் ரொம்ப பாரமா இருக்கு. கையை  அசைக்காத வரைக்கும் தோள் வலி தெரியலை. மத்தபடி உடம்பு பூரா ரொம்பவே வலிக்குது” புன்னகைத்தான். அதில் வலி தெரியவில்லை.
மாலை நெருங்க, கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான் வெங்கட்டும் அவனோடு ஓர் இளம் பெண்ணும்.
வெங்கட், “என்னடா மச்சான்…” பெருமூச்சு விட்டு “இப்போ எப்படி இருக்க?” என்று அவனருகில் நின்று கொண்டான்.
“வா வெங்கட்.. வா மா.. ஜென்னி” என்று இருக்கையை காட்டினார் சுசீலா.
“இருக்கட்டும் ஆண்டி..” பதிலுக்குக் கூறிவிட்டு மீண்டும் அவனிடம் திரும்பி,
“எப்படி டா..? இப்படி? நீ தான் ரொம்ப கேர்ஃபுல்லா கார் ஓட்டுவியே அப்புறம்… உனக்கு எப்பிடி டா?” என்று ஆதங்கத்தோடு கேட்டுக்கொண்டே போனான்.
“இரு இரு… அடுக்கீ..ட்டே.. போகத.. ஓவ்வொண்ணா கேளு.. எப்படின்னு சுத்..தமா நினைவில இல்ல. எங்க.. எப்போ.. எப்படி.. ஏன்… எதுக்குமே பதில் இல்ல.. அத பத்தி ரொம்ப யோசிச்சா தலைய வலிக்குது! அதுவா… ஞாபகம் வரும்போது வரட்டும்னு விட்டுட்டேன்…”
சுசீலா, “எப்போ வெங்கட்  வந்தீங்க?”
“ஒரு மணி நேரம் முன்னாடி ஆண்டி! வீட்டுக்கு போய் லக்கேஜ வச்சுட்டு குளிச்சுட்டு நேரா வரோம்..”
அருகில் நின்ற பெண்ணிடம், “வீட்டில எல்லோரும் நல்லா இருக்காங்களாமா?” சுசீலா கேட்க
“இருக்காங்க ஆன்டி.. டாக்டர் என்ன ஆன்டி சொல்றாங்க?”
“சீரியஸ்சா ஒன்னும் இல்லமா.. காயம் ஆரணும்…”
சற்று தயங்கியவள் முற்றிலும் சுசீலா பக்கம் திரும்பி, “சுதா பத்தி கேள்விப்பட்டது.. மனசே ஆறல.. சாரி ஆன்டி, உங்களுக்கும் மனசு கஷ்டம் தானே.. ஏதோ கடவுள் புன்னியத்தில இவர் நல்ல படியா இருக்காரே.. அத நினைச்சு மனசை தேத்திக்கோங்க”
நின்று கொண்டிருந்தவள் தலை முற்றிலும் திரும்பியதும், ‘யார் இவள்?’ என்பது போல வெங்கட்டிடம்  உதட்டோடு புருவத்தை அசைதான் அஷோக்!
அதிர்ந்தவன் போல, “டேய் ஜென்னிடா!! ஓய்..ஜென்னி… மேக் அப் இல்லாம உன்ன அவனுக்கு அடையாளம் தெரியலை பாரு!” என்று சிரித்துக்கொண்டே  அவளை வம்புக்கு இழுத்தான்.
“என்ன ப்ரோ நீங்க? அவரோட சேர்ந்து நீங்களும் விளையாடாதிங்க..”  என்று உரிமையாய் முறைத்தாள்.
“ஓ..ஸாரி.. சட்டுனு ஞாபகம் வரல” என்று அவளை அடையாளம் தெரியாமல் முழித்துக்கொண்டே மீண்டும் வெங்கட்டிடம்,  “யாரு டா உன் கேள் ஃப்ரெண்டா? நிஜமாவா? நினைவில வரமாட்டேங்குதே!!.. எப்போல இருந்து?!” என்று கிசுசிசுத்தான். ஆனால் அனைவருக்கும் கேட்க தான் செய்தது.
அறையில் நின்றிருந்தவர்கள் முகம் மாற ஆரம்பித்தது.
சுசீலா சற்று அதட்டலாக, “கண்ணா விளையாட்ட நிறுத்து!!! எதுல விளையாடறதுன்னு இல்ல?”
குழப்பத்தோடு, “இல்லம்மா… நிஜமாதான் சொல்றேன். எனக்கு இவங்கள பார்த்த மாதரியே இல்ல… உம்ஹும்ம்… ஓண்ணும் ஞாபகம் வர மாட்டேங்குது!”
வெங்கட் பொறுமையோடு ஆரம்பித்தான், “டேய்… நான் சிங்கப்பூர் போனேன் இல்ல.. அப்போ அங்க.. ஆபீஸ்ல மீட் பண்ணி, நீ நூறு வாட்டி அவட்ட பேசி.. ரெண்டு மாசம் முன்ன எங்களுக்கு எங்கேஜ்மென்ட் ஆச்சே.. நீ வந்தியே டா.. ஞாபகம் வருதா?”
“என்னது? சிங்கப்பூர் போய்டியா?”
“என்ன டா? ஒண்ணு சொன்னா இன்னொன்ன அதிர்ச்சியா கேக்குற? நீயும் சுதாவும் செண்ட் ஆஃப் பார்ட்டிக்கு வந்தீங்களேடா?”
“சுதவா…? அது யாரு டா?” என்றான் குழப்பமாய்..
அதற்கு மேல் யாரும் ஒன்றும் பேசவில்லை. ஏ.சி-யின் உறுமல் மட்டுமே கேட்டது. 
‘சுதா! யாரந்த சுதா?’ என்ன கேட்டும் பதில் இல்லை அவனிடம்!
அவன்  சுவாசம் கொண்டு அவன் இதயம் எழுதிய கவிதை அவள்..
அவனின் உயிரின் தேடல் அவள்..
அவன் இரத்த அணுக்களுக்குள் அணு அணுவாய் கரைந்து போனவள்..
இன்று..
அவன் நினைவை விட்டு கரைந்தே போய்விட்டிருந்தாள்!
மூளை முழுதும் தேடிவிட்டான் பதிலில்லை. “சுதா? யார் நீ?”
அவன் நினைவுகள் சிதறிப்போயிருக்க.. அதில் அவன் அன்றிலின் பிம்பத்தைக் காணவில்லை.
சிதறிப்போன இதயத் துகள்களில் தேடியிருக்க வேண்டுமோ? அதை விடுத்து வேறு எங்கெல்லாமோ தேடிவிட.. பதில் கிடைக்கவேயில்லை.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடி பார்த்தேன்…

Advertisement