Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 45_1
 
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..
சென்னையில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று அது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான வி.ஐ.பி-களுக்கான தனியறை, நட்சத்திர ஹோட்டல் அறை தோற்றுவிடும்!
வி.ஐ.பிகளோ சாதார மனிதர்களோ வலி என்பது அனைவருக்கும் சமம். படுக்கையில் விழுந்தவர்களுக்கு ஒரு வித வலி என்றால், அவர்களை இதயத்தில் தாங்கி நிற்பவர்களுக்கு…
சோர்ந்து தான் போனார் சுசிலா.. அவர் வாழ்வின் விளக்கல்லவா அவர் கண்ணன். அரை மயக்கத்தில் ‘என் மகனை விட்டுவிடு.. என்னை எடுத்து கொள்’ என்ற வேண்டுதலோடு இறைவனோடு ஒரு போராட்டம்.. இரண்டு நாட்களாக… தாரக மந்திரம் போல்.
தலையில் கட்டும், மெருகேற்றி கட்டுமஸ்தாக வைத்திருந்த உடல் தசைகள் கிழிந்து, கிழிந்து போகாத இடங்கள் சிராய்க்கப்பட்டு, கன்றி, தடித்து.. உடைந்த எலும்போடு..  நினைவு மீளாமல் படுத்திருப்பவன் மேலிருந்து பார்வையை நொடிப் பொழுதும் எடுக்காமல்.. ஒரு ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் தாய்க்கு ஒருவர் ஆறுதலும் அவர் ரணத்தை ஆற்றப்போவதில்லை.
மகனிடமிருந்து வரவிருக்கும் ஒற்றை சொல்லுக்காக வானம் பார்த்த வாடிய பயிராய் சுசீலா..
ஒவ்வொரு நொடியும் மகன் விழிப்பானா.. விழிப்பானா… என்று எதிர்பார்த்துத் தவிக்கும் தாய் நிலை மோசமா.. மரணத்தை ருசி பார்த்து மீண்டு வந்திருக்கும் மகன் நிலை மோசமா? பார்க்கவே மனதைப் பிசையும் காட்சி. ஓரிருமுறை கண் திறந்தான், ஆனால் இன்னும் நினைவு திரும்பவில்லை.
“அம்மா” கூப்பிட மாட்டானா.. அப்படி ஒரு ஏக்கம் அவர் கண்களில். தோய்ந்து போன அந்த கண்களில் கண்ணீர் இல்லை… வலி வலி மட்டுமே நிரந்தரமாய் தங்கிக்கொண்டது. இமைக்கடியில் வந்த பருபோல்.
வலது கால் முட்டியில் பெரிய காட்டும் மறு காலில் ஆங்காங்கே  பிளாஸ்திரி இருக்க, கையில் நரம்பு வழி மருந்து இறங்கிக்கொண்டிருந்தது.
அறையில் இளம்பெண் மருத்துவர் நுழைய, அறையிலிருந்த செவிலி அவளிடம் விரைந்து வந்தவள், “குட் மார்னிங் டாக்டர்” என்று படுத்திருந்தவன் ‘ரிபோர்ட்’ அட்டவணையை எடுத்து நீட்டினாள்.
சுசீலா அவளைப் பார்த்ததும் நூறாவது முறையாக, “என்னமா.. ஒன்னும் பயப்படரதுக்கு இல்ல, ஃப்ளெஷ் ஊண்ட் தான்னு சொன்னீங்க… ரெண்டு  நாள் ஆச்சு இன்னும் கண் விழிக்கலையே..” எனப் பரிதவிக்க
மீண்டும் மீண்டும் அதே கேள்வி.. அவளை எரிச்சல் படுத்தியிருக்கவேண்டும், ஆனால் படுத்தவில்லை.. கேட்டது சுசீலா என்பதாலா இல்லை படித்திருப்பது அஷோக் என்பதாலா? அவள் மட்டுமே அறிவாள்.
கரிசனை மாறா குறலில், “நினைவு திரும்பிடுச்சு ஆண்டி.. ஆனா அடிபட்ட அதிர்ச்சி, ட்ரிப்ஸ்ல போட்டிருக்க மருந்து, உடல் வலி… இதனால கொஞ்சம் அசதியா தூங்கிட்டு இருக்கலாம்… மத்தபடி பயப்படரமாதரி…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவர்கள் சத்தம் கேட்டுக்  கண்விழித்தான் அஷோக்.
அவன் இமைகளே அவனுக்குத் திறக்க பாரமாய் கனத்தது. ஒருவழியாய் அதைப் பிரித்து, “ம்மா..” என்றான் பலவீனக் குரலில்.
இதோ.. இந்த ஒற்றை சொல்லுக்காக தானே உணவின்றி உறக்கமின்றி அவனையே சுற்றி வருகிறார். காய்ந்த விளைநிலத்தில் விழுந்த சொட்டு நீராய் தாய் மனம் உயிர் பெற்றது.
தோய்ந்து போயிருந்த அவர் முகத்தில் புன்னகை அரும்ப, ஒரு நிம்மதி பெருமூச்சு.  மகனின் சத்தம் ஒரு புத்துணர்ச்சியைத் தர,. கூடவே ‘மீண்டுவிட்டாயா.. இது போதும்’ என்ற நிம்மதியில் கால் துவண்டது. “ரெண்டு நாள்ல அம்மாவ என்னம்மா பயமுறுத்தீட்ட கண்ணா. இப்படி தான் அம்மாவை பயமுறுத்துவியா?“ செல்லமாய் கோபித்து அவன் தலையை வருடியவண்ணம் நெற்றியில் முத்தமிட்டார்.
அதில்.. அந்த செல்ல கோபத்தில் ஆயிரம் ஆயிரம் ‘செல்லமே.. பட்டே.. என் உயிரே’ அடங்கி இருந்தது மகனுக்கும் அன்னைக்கு மட்டுமே தெரியும்.
“பார்த்தீங்களா ஆண்டி எழுந்திட்டார்.. நீங்க தான் ரொம்ப பயந்துட்டீங்க..”, சொல்லிக் கொண்டே அவன் அருகில் சென்று அவன் கண்கள், அசைவுகள், நாடி துடிப்பு என்று சில வகை பரிசோதனைகளை செய்து நர்ஸ்சிடம் ஏதோ கூறிவிட்டு மீண்டும் அவனருகில் வந்தாள்.  
மருத்துவர் சுசீலாவிடம், “எல்லாம் நார்மல் ஆண்டி. இப்போ குடுக்கர மருந்துக்கே நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. சோ மருந்து இதுவே இருக்கட்டும். கொஞ்ச நேரத்தில சீஃப் டாக்டர் ரௌண்ட்ஸ் வருவார். ஃபர்தர் ட்ரீட்மென்ட் பத்தி அவர்ட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்.” என்று கூறிவிட்டு அவனிடம் திரும்பி, மென்னகையோடு, “ஹாய் அஷோக்.. என்னை நினைவிருக்கா?” என்று அவனையே பார்த்து நின்றாள், ஆர்வமாய் கண்ணில் விண்மீன் தெறிக்க..
மெலிதாய் புன்னகைதான். “உன்னை மறக்க முடியுமா? இத்தனை வருஷத்துக்கப்பரம் இப்படி மீட் பண்ணனும்னு இருக்கு! நீ  எப்படி இருக்க பிருந்தா?” என்றான்.
வானம் திறந்து வெண் பனியை அவள் மீது பூவாய் பொழிய.. அவள் இதயம் சிறகெடுத்துப் பறந்தது.
பிருந்தா.. வெண்ணையை மைதாமாவில் குழைத்து செய்திருப்பார்கள் போலும்.. பளீர், மாசு மருவற்ற வழுவழுப்பான சருமம். அடர்த்தியான கார்கூந்தல். மயக்கும் மான் விழி.. பார்த்தும் இதழ் பதிக்கத் தூண்டும் ஆப்பிள் கன்னம்.. மாதுளை வண்ண பளபளத்த உதடு. இது அத்தனையும் எந்த ஒப்பனையும் இல்லாமல். போட்டிருந்த வெள்ளை கோட்டை கழட்டினால் பளிங்கு சிலை தான்.. அதில் அவனுக்குமே ஐயமில்லை!
“அம்மா இவ என் பிரெண்ட் வினோத்தோட சிஸ்டர் பிருந்தா.. ஸ்கூல்ல என் ஜூனியர்..” என்று அறிமுக படுத்த
“ஏற்கனவே ஒரு தரம் நீ அறிமுக படுத்தியிருக்க.. அவளும் சொன்னா கண்ணா.. அவ மூலமா தான் விஷயம் எனக்கு வந்துது!”
அவள் அழகிய மான் விழியை வியப்போடு விரித்து, புன்முறுவல் விரிய, “பரவாலேயே இன்னும் என் பேர் கூட நினைவில வச்சிருக்க… ‘ஐ ஆம் வெரி மச் இம்ப்ரஸ்ட்’!” என்றாள்.
“நானே நினைச்சா கூட என்னால உன்ன மறக்க முடியாது பிருந்தா.. அதுகுள்ள டாக்டர் ஆகிட்டியா  என்ன?” அவனுக்குப் பேச்சு இயல்பாய் போனது.. ஏதோ மிகவும் பிடித்தவருடன் பேசுவது போல்.
“ம்ம்.. எப்பவோ.. நாம கடைசியா பார்த்து வருஷம் ஏழு ஆச்சு அஷோக்! நீ காலேஜ் படிக்கும் போது பார்த்தது!” அவளுக்குக் கொஞ்சமாய் அடைக்கத் தான் செய்தது.
“ம்ம்.. நினைவிருக்கு பிருந்தா! எதுவும் மறக்கல!” எனவும் அவளால் பழைய நினைவுகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தொண்டைக்கடியில் கசப்பை நீரின்றி குடித்திறக்கினாள்.
பளிங்கு முகத்திற்கு உணர்வை மறைக்கத் தெரியவில்லை. காது மடல் சிவத்தது. மெலிதான புன்னகையை இழுத்துப்பிடித்துக் கொணர்ந்தாள். முகத்தில் உஷ்ணம் பரவுவதைத் தவிர்க்கத் தெரியவில்லை… மனதைக் காட்டும் கண்ணாடியாய் அவள் முகம்.
அவனும் கவனிக்கத் தான் செய்தான். அதன் நிமித்தம் அடுத்த கேள்வி அவன் மனதில்.
“எப்படி இருக்கனு கேட்டேனே” என்றான் மீண்டும்.
“இருக்கேன் அஷோக்… நல்லா படிச்சேன்.. நீ சொன்ன மாதரியே… டாக்டரும் ஆகிட்டேன்.
இப்போ வாழ்க்கை ஓட்டத்தோட ஓட பழகிட்டேன்” உதட்டில் கசப்பான புன்னகை.
“கல்யாணம் ஆகிடுச்சா?” அவனுக்குத் தெரிந்தே ஆகவேண்டும். ஏனென்று இருவரும் அறிவர்.
“நீ என்ன நினைக்கர அஷோக்?” இதயம் துடிக்க, ஏக்கமாய் அவன் கண் பார்த்தாள்.
‘இன்னுமா?’ அவன் பார்க்க
‘வலியை எனக்குள் இறக்கிய நீயே கேட்கலாமா?’ என்ற பார்வை, அவளிடமிருந்து.
பளிங்கு முகம் அதையும் காட்டியது அவனிடம்.
இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றது. அதற்கு மேல் அவளைப் பற்றி அவன் கேட்ட விழையவில்லை. அவள் வலியைக் கிளர விருப்பமில்லை.
சுசீலா அவர்கள் சம்பாஷனையில் கலந்து கொள்ளவில்லை. இரண்டு நாளாய் பிருந்தாவின் அதீத அக்கரை.. மகனின் வித்தியாசமான பேச்சும் ஆர்வ பார்வையும் அவரை ஒதுங்கச் செய்தது.
இரண்டு நாளில் அவர் மகன் மேல் பிருந்தா காட்டிய அக்கரை, அவரை நெகிழ வைத்திருந்தது. அவளின் ஆறுதலான.. அன்பான வார்த்தைகள்.. இரவு பகல் பார்க்காமல் அவளின் சேவை உணர்வு.. சுசீலாவை வெகுவாய் கவர்ந்துவிட்டது.
“நான் எப்படி இங்க.. ஒண்ணும் ஞாபகம் வர மாட்டேங்குது..” பிருந்தாவை ஏறிட்டான்.
“ஒரு ஆக்ஸிடென்ட்… யு ஆர் ஓகே நவ். ஆக்ஸிடென்ட்க்கு அப்புறம் இப்போ தானே முழுசா கண் விழிச்சிருக்க?! அதனால கொஞ்சம் மறதி.
விபத்து பத்தி மறக்கரது ரொம்ப நார்மல். பட் டோன்ட் வொர்ரி அபௌட் இட்… சீக்ரம் எல்லாம் நினைவில வந்திடும். பார் என்னையே உனக்கு ஞாபகம் இருக்கு… உன் மெம்மொரி நல்லபடியா உள்ள இருக்கு. பயப்படாத!
ஃப்ரீயா விடு.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. ஆக்ஸிடென்ட் பத்தின டீடெயில்ஸ் மட்டும் தானே.. இப்போதைக்கு ரெஸ்ட் எடு. உடம்பைச் சீக்கிரம் குணமாக்கப் பார்ப்போம்.. ஞாபகம் இல்லாதது வேண்டாம்னு விட்டுடு.. அத யோசிச்சு உடம்பை கெடுத்துக்காத! சரியா?” என்று அவனிடம் கூறிவிட்டு,
“ஒரு ப்ராபளம் இல்ல ஆண்டி, பயப்படதீங்க.. விபத்து சம்பந்தபட்ட விஷயங்கள் மட்டும் தான் நினைவில இல்ல.. ரெண்டு நாள் பார்ப்போம்.. தன்னால எல்லாம் நினைவுல வந்திடும். பயப்பட ஒண்ணுமே இல்ல ஆன்டி!! பிரச்சனை இருந்தா ஸ்கேன்ல தெரிஞ்சிடும்” சுசீலாவிடம் கூறிவிட்டு அஷோக்கை இன்முகமாய் பார்த்தவள், “ஃபிரீ டைம் கிடைக்கும்போது வந்து பார்க்கறேன் அஷோக்… ரொம்ப ஸ்ட்றெயின் பண்ணாத.. மேட்டர் ஆஃப் டைம் எல்லாம் நினைவில வரும்..“
இருவரிடமும் கூறிவிட்டு நர்ஸ்சுடன் பேசிக்கொண்டே நகர்ந்தாள்.

Advertisement