Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 44_2
பாடல்களை ரசித்துக் கொண்டே கண்ணன் வாகனத்தை செலுத்த, சுதா மீண்டும் கண்ணயர்ந்தாள். பத்து நிமிடம் ஓடியிருக்க, அடுத்து வந்த பாடலின் அழகான பாடல் வரிகளில் மனம் லயிக்க.. உதடு தானாய் அசைந்தது 
“என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…”
வரிகளை வாய் பாடினாலும் மனம் முழுவதும் அவன் சுதா தான். முகத்தில் ஒரு வித கர்வம்.. கிடைக்க அரிதான வெற்றி பதக்கத்தை வென்றுவிட்டது போல.. அவன் வென்ற கோப்பை அவனருகில்.. ஆழ்ந்த நித்திரையில். 
சாலையைப் பார்த்து ஓட்டிகொண்டிருந்தாலும் அவன் கண் அவ்வப்போது அருகில் உறங்கி கொண்டிருந்தவளை தழுவி சென்றது. அவன் உயிராய் உணர்வாய் போனவள். அவன் வாழ்வின் நிறைவு அவள்.. பாடல் வரிகளை அவளுக்காய் அவனே எழுதிய உணர்வோடு அதை ரசித்துக்கொண்டே அவனும் சேர்ந்து பாட,
“உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்… உனக்குள் தானே நான் இருந்தேன்” என்ற வரி வரவும் உறங்கிக் கொண்டிருந்தவள் அவள் இனிமையான குரலில் பதில் கொடுக்கவும், இன்ப அதிர்ச்சியே அவனுக்கு.
புருவம் உயர்த்தி தலையைத் திருப்பி அவளை ஆவலாய் பார்க்கவும்,
“கழுத்து சுளுக்கிக்க போகுது ரோட்ட பார்த்து ஓட்டுங்க” கண்கள் திறவாமலே சொன்னவளைப் பார்த்து,
“நீ தூங்கிட்டு இருக்கனு நினைச்சேன்..”
“ம்ம்.. நீங்க திறந்து விட்ட அருவி என்ன எழுப்பிடுச்சு..” அழக்காய் சிரித்துக்கொண்டே கண்ணைத் திறந்தவள் கண்களில் அப்படி ஒரு தூக்கக் கலக்கம்.
“உன் கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு லட்டு.. ரொம்ப டையர்டா இருக்கா?”
புன்னகைத்தவள், “திரும்பவும் டையர்ட் ஆக.. இப்போவே ரெஸ்ட் எடுத்துகறேன்..” என்றாள் கள்ளச் சிரிப்போடு
“நான் பேசினா திட்டு.. நீ மட்டும் என்னவாம்? நல்லா பேச கத்துகிட்ட.. இந்த வெக்கம் வெக்கம்னு ஒன்னு இருக்குமே…” அவர்களின் புது மண தம்பதிகளுக்கான பேச்சு அதன் போக்கில் செல்ல காரை சிரிப்பு சத்தம் நிரப்பியது. முன் இரவு கொடுத்த புது உற்சாகம்.. அதன் புத்துணர்வு பேச்சிலும் முகத்திலும் நன்றாய் தெரிந்தது.
வானமும் பூமியும் விடியலை நோக்கிக் கொண்டிருந்தது.
கீழ் வானத்தில் சிகப்பு முற்றிலும் தெரியாதிருக்கும் வண்ணம் கருமேகம் ஆங்காங்கே கூட்டம் கூடி இருக்க, சூரியன் மிகச் சிரமப்பட்டு அதனுள்ளிருந்து  எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
வீதியின் இருபுறத்தையும் ஆக்கிரமித்த சரக்கொன்றையின் மஞ்சள் மலர்கள், இரவு மழையால் வீதியை அலங்கரித்திருந்தது. தன் வரவிற்காகவே  சாலையில் மஞ்சள் கம்பளி விரிக்கப்பட்டது போல அஷோக்கின் சொகுசு கார் அவர்களைச் சுமந்தவண்ணம் சீரிப்பாய்ந்து கொண்டு, தன் முன் சென்று கொண்டிருந்த டெம்போ வேனைத் தாண்டிச்  சென்றது.
நான்கு வீதி சந்திப்பில் மஞ்சள் விளக்குப் போடப்பட்டதும் வாகனம் சட்டென்று அதன் வேகத்தைக் குறைத்து ‘ஸ்டாப்’ கோட்டின் முன் நின்றது. பின் வந்த டெம்போ வேன்  கார் சென்ற வேகத்திற்கு அது நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும். ‘டமார்’ என்ற சத்தத்தோடு இடித்து அதை ஐந்து அடி முன் தள்ளிவிட்டு நின்றது.
காரின் இடது புற ஜன்னல் கீழிறங்கச் சுதா தலை வெளிவந்து மறு விநாடி உள் சென்றது. ஓட்டுநர் கதவு திறக்கப்பட்டது.
கீழே இறங்கிய அஷோக், இடது பக்க சாலையோரம் நின்றிருந்த லாரியில் இருந்த குணாவின் பார்வையில் விழுந்தான். நல்ல போதையிலிருந்தான். சற்று முன் வந்த தகவல் மூலம் அறிந்திருந்தான் அஷோக் வருவதை. ஆனால் இப்படி வகையாய் வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. சுதா காரின் உள்ளிருக்கவே அவளைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அமைதியாய் இருந்திருப்பான்.
சுதா.. அவள் தான் அவனுக்கு வேண்டும். நூறு கோடி கொடுத்தாலும் கிடைக்கவில்லை. அவளை அடைந்தபின் அவள் சொத்தும் அவன் ஆண்டு அனுபவிக்கலாம்.. ஆனால் அது இரண்டாம் பட்சம். கூர்கில் அவள் துடுக்குத்தனம்.. பேச்சு மிகவும் பிடித்து போனது. அவள் பின்னணி தெரியும் வரை அவளை அடைய மட்டுமே விருப்பம்.. அவள் மதிப்பு தெரிந்ததும் துணையாக்க விரும்பினான். தீபக்குடான ஆழமான நட்பு இத்தனை நாள் அவன் கையை கட்டிப் போட.. இனி அதற்கு தடை இல்லை. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருப்பதெல்லாம் அஷோக் என்னும் கோட்டைச் சுவர் மட்டும் தான்! தகர்த்துவிட்டால்?
கேழே இறங்கிய அஷோக் வாகனத்தைப் பார்வையிட்டான். பெரிதாக ஒன்றும் ஆகி இருக்கவில்லை. ஆனால் அவன் பென்ஸ் நடு ரோட்டில் நின்றிருந்தது.
காரினில் ஏற ஒரு காலை உள்வைத்தவன் கண்ணில் பட்டது.. அவன் எதிரில் வந்த லாரி. லாரி இடிக்குமேயானால் நேரே சுதாவின் மேல் தான் மோதும்.
ஒரு கால் மட்டுமே காரினுள் இருக்க.. அவளிருந்த பக்கமாய் வந்துகொண்டிருந்த லாரியை அவன் பார்த்துவிட.. நடக்க இருக்கும் விபரீதமும் அதனால் அவளுக்கு நேரவிருக்கும் சேதமும் அவனை நிலைகுலையச் செய்தது.
லாரியை கண்டு அவன் கண்கள் விரியும் முன்.. அந்த ஷண நேரத்தில்.. அவன் கண்முன்னே.. லாரி காரின் வயிற்றை இடித்து மோதியது!
அவன் ரோடின் மறுபக்கம் வீசி எறியப்பட்டான். ரோட்டை தேய்த்துக்கொண்டே போனவன் உடல் அங்கிருந்த கம்பத்தில் இடித்து நின்றது!  எல்லாம் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது.
அது ஞாயிறு விடியற்காலை.. ரோட்டில் அந்த மூன்று வாகனம் தவிர வேறு வாகனம் இல்லாது போகவே, அங்கிருந்த இரண்டு வாகனமும் இருந்த சுவடு தெரியாமல் மறைந்தது.
கீழே கிடந்த கண்ணன் தலையிலிருந்து இரத்தம் ‘குபு குபு’ என்று ரோட்டை நனைத்தது. அவனருகில் தேங்கியிருந்த மழை நீர் இரத்த குளமாய் மாறிக் கொண்டிருந்தது.
அவன் கண்கள் காரின் பக்கம் நிலைத்து நிற்க, காரினுள் அமர்ந்திருந்த சுதா இரத்தத்தால் தோய்க்கப்பட்டு அசைவற்று இருந்ததைக் கண்டான்.
சுதாவால் இம்மிகூட அசைய முடியவில்லை. கைகள் கால்களை அசைக்க முடியாத வண்ணம் செயலிழந்து  போயிருந்தது. கண்ணன் பக்கமாய் திரும்பி இருந்த தலையை அசைக்க முடியாமல் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவனிடம் ஒரு அசைவும் தெரியவில்லை. கண்ணனைக் காணக் காண அவள் நெஞ்சு இறுகி வலியை அதிகப்படுத்தியது.
“முன் காலத்தில ‘அன்றில்’னு ஒரு பறவை இருந்துதாம். ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் பிரிஞ்சு வாழவே வாழாதாம். தூங்கும் போது கூட பிரிஞ்சு இருக்காதாம்! அப்படியே.. ஒண்ணு மாட்டும் இறந்து போனா, அதோட துணை பறவையும் தன்னோட  உயிர விட்டுடுமாம்! நான் கூட அப்படி தான் சுதா.. உன்னைப் பிரிய நேர்தா அதுக்கு முன்னாடி என் உயர் பிரிஞ்சிடும்! உன்னோட மூச்சில தான் என் உயரே இருக்கு தெரியுமா?”
அவன் கூறிய வரிகள் அவள் இதயத்தைக் கிழித்து, மூச்சு குழாயை அடைத்தது.. காலையில் தானே சொன்னான். சொல்லிவிட்டுக் கொடுத்த முத்தத்தின் சத்தம் கூட காதை விட்டு நீங்கவில்லை.. உதட்டில் எச்சில் ஈரம் காயவில்லை.. அதற்குள் என்ன ஆனது என் கண்ணனுக்கு?
நானும் உன் அன்றில் என்று சொல்லவில்லையே.. மனம் துடித்தது. சொல்லிக்கொண்டாள் ஒரு முறை கீழே கிடந்தவனைப் பார்த்து,  ‘நானும் அப்படி தான் கண்ணன்.. நான் கூட உங்க அன்றில் தான்! நீ இல்லாமல் போனால் நான் இல்லை’ குத்தி கிழிக்கப்பட்டிருந்த வாயை அசைக்க முடியவில்லை ஆனால் அவள் மனம் பறைசாற்றியது.
வலியால் கண்கள் மடை திறக்க, நெற்றியில்  வழிந்த இரத்தம் அவள் கண்ணிமைகளைத் தொட, அவனை, இரத்த வெள்ளத்தில் அசையாமல் படுத்திருந்தவனை,  பார்த்த வண்ணம் அவள் கண்கள் மூட ஆரம்பித்தது. இமை மூட மூட அதை முயன்று இழுத்துப் பிடித்துத் திறந்து வைத்தாள். கண் நிறைய.. உள்ளம் நிறைய.. உடலில் ஓடும் ரத்தம் நிறைய.. அவள் காதல் கணவனை நிறைத்துக்கொண்டாள். ஒரு கட்டத்திற்கு மேல் உடல் ஒத்துழைக்க மறுக்க.. கண்களோடு அவள் மூளை செயல்பாடும் ஒரு நீண்ட நித்திரைக்குள் செல்ல ஆரம்பித்தது.
அசைவற்று அமர்ந்திருந்தவளை அவனால் அந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை. இரத்தத்தில் குளித்திருந்தாள். அவன் சுதா.. ஆசை ஆசையாய் காதலித்து, கனவோடு தாலி கட்டி.. ஓர் நாள்.. ஓரே ஒரு நாள் தன் மனைவியாய் இருந்தாள்.. எந்த அசைவுமே அவளிடத்தில் இல்லாதது அவன் உயிர் அவனை விட்டுப் போனது போன்ற உணர்வை அவனுள் கொடுத்தது. ‘லட்டு.. லட்டு’ காலியான இதய கூடு ஓலமிட்டது.
‘என் உயிர் தனியாய் துடிக்குதே யாராவது அவளைக் காப்பாற்ற மாட்டார்களா? கடவுளே என் சுதாவைக் காப்பாற்று!’ மனம் அடித்துக் கொண்டது. அதட்டிக் கூட பேச மாட்டான் அவளுக்கு வலிக்கும் என்று.. இன்றோ அவன் கண்முன் வலியில் செத்துக் கொண்டிருக்கிறாள். எப்படித் தாங்கும் அவன் இதயம்? இதயமா? அதை தான் அவளிடம் கொடுத்துவிட்டானே.. அவளில்லாமல் அவன் வெறும் கூடு தானே..
அவன் கனவெல்லாம் அவன் கண்ணீரோடு கரைந்தது. நினைவு அவனைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கி சென்றது..
முன்தினம் அவளைக் காதலாய் அணைத்தது.. உலகை மறந்து அவளை மட்டும் உள்ளும் புறமுமாய்.. ஆதியும் அந்தமுமாய்.. உணர்ந்த தருணம்..
செந்தாமரையாய் வீற்றிருந்தவள் கழுத்தில் தாலியிட்டு மனைவி ஆக்கிக்கொண்டது..
உணர்ச்சிவசப்பட்டு பால்கனியில் அவளிடம் தன்னை மறந்தது ‘சுதா சுதா’ என்று அவளுக்குள் கரைந்தது..
‘அதிரசம் நல்ல டேஸ்ட்’.. முதன் முதலாய் அவனை தன்னோடு இழுத்து அவள் அவனுக்கு மெய்மறக்க முத்தம் கொடுத்தது..
‘டேஸ்ட் வேணும்?’ கண்சுருக்கி ஈர இதழோது.. மாடியில் நெல்லிக் கனியோடு அவன் பிஞ்சு இதயத்தை அவள் இதழ் வழி உரிஞ்சியது..
அவன் வீட்டு மரத்தடியில், அவன் உயிர் வரை தீண்டிய காந்த கண்களால் அவனை தன் வசம் இழுத்தது..
‘மிஸ்டர் பனை மரம் சார்! ப்லீலீலீ..ஸ்.. சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!’ அவர்கள் வீட்டு மதில் சுவரில் வாலில்லா குரங்காய் தொங்கியது..
முதல் நாள் அவன் கையில் கண்மூடி கிடந்தது…
அவளை முதன் முதலாய் கண்ட நாள்.. அன்று அவள் மூடிய கண்கள் திறக்க அவன் இதயம் நின்று துடித்த நாள்..  இன்று ஓரேடியாய் துடிக்க மறுத்தது.
அதற்கு முன்தினம் என்று.. பின்னோக்கிச் சென்றது.. ஆறு மாதங்கள் முன் சென்றது அங்கு அவன் சுதா இல்லை.. மூளையின் இரத்த நாளங்கள் வலி குறைய, சிறிது நேரத்தில் அவளையே பார்த்திருந்தவன் கண்களும் தானாய் மூட..
என்ன நிறம் என்றே புரியாத, அந்த கடல் பாசி பச்சை கண்கள்.. இது வரை யாரிடமும் பார்த்திராத நிறம்.. அவனை கிரங்கடித்த கோலிக்குண்டு விழிகள், அவனைப் பார்த்துச் சிரித்தது..
காணகூடாத கோர காட்சியை கண்டது போல சூரியன் கருமேகம் பின் ஒளிந்து கொள்ள, மேகங்கள் வானத்தை மூட பலமாய் இடி இடிக்க ஆரம்பித்தது.
ஒரு காதல் காவியம் ஆரம்பிக்கும் முன் முடிந்துவிட்டதா?
இரு ஜீவன்கள் தங்கள் இணையைப் பிரிந்துவிட்டிருக்க.. வானம் சகிக்க முடியாமல் கண்ணீர் சொரிய ஆரம்பித்தது.
…. …. ….
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவை அழுதே
பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்… 
இருட்டு நிரந்தரமல்ல! விடியும் போது இரவு கடந்து பகல் வருகிறது. வாழ்கையும் அப்படித்தான்! இன்பமும் துன்பமும் அதில் நிரந்தரமல்ல!!
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே…
பாகம் 1 முற்றிற்று!

Advertisement