Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 38
“எதுக்கு கார்ல போர? ஆறு மணி நேர ட்ரைவ்! அதுவும் ட்ரைவர் வேண்டாம்னு சொல்ற! ஃப்லைட்ல போயேன்?” நீலாவதி, தீபக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
வீடு, வீட்டை விட்டால் அப்பாவின் அலுவலகம். இப்படி தான் சென்றது தீபக்கின் வாழ்க்கை. பழைய நட்புகளுடன் தொடர்பு இல்லை. பல மாற்றங்கள் அவன் வாழ்வு முறையில்.
திங்கள் காலை விடிந்தது.
அன்று மாலை, வேலையாய் கிளம்பிச் சென்று சில தினம் கழித்து வருவதாக அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம் நீலாவதி இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“எனக்கு ஒருவார வேல இருக்கு மா.. கார் இருந்தா வசதி.. ஜஸ்ட் சிக்ஸ் அவர்ஸ் தானே? நீங்க டிஃபன் எடுத்து வைங்க.. நான் வேலைக்கு கிளம்பணும்! ஈவ்னிங் ஒரு ஃபோர்-க்கு வரேன். வந்ததும் கிளம்பிடுவேன்”
பக்கத்து அறையில் சுதாவோ அவள் மாமாவிடம், “இப்போ எதுக்கு நீங்க ஆஃபீஸ் கிளம்புரீங்க? இன்னும் ஒரு மாசம் வீட்டுல இருக்கலாம் இல்ல?” சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல டா.. மாமா ரொம்ப ஸ்ட்றெயின் பண்ணமாட்டேன்.. நான் என்ன மத்தவனுக்கா வேலை பாக்கறேன்.. மாச கணக்கா படுத்துக் கிடக்க? அவனும் இருக்க தொழிலை பாக்காம வேற எதையோ இழுத்து வச்சுட்டு இருக்கான். ஏதோ எனக்கு முடியாம போகவே கொஞ்ச நாளா பார்த்துக்கரான். அதுவும் எத்தனை நாளோ? அப்போ நான் தானே டா பார்த்துக்கணும்?”
“உடம்ப பார்துக்கோங்க மாமா.. நீங்க உங்க மகனையே நினைச்சு நினைச்சு உடம்பை கெடுத்துகரீங்க! அவர் முன்ன மாதரி இல்ல.. பொறுப்பா இருக்க மாதரி தான் இருக்கு. கொஞ்சம் நாள் ஃப்ரீயா விடுங்க.. வந்திடுவார் உங்க துணைக்கு. சீக்ரம் சரி ஆகிடும் மாமா.. நீங்க நல்லா இருக்கணும்.. உங்க பேர பசங்களோட ஓடி விளையாட!”
அவர் தோளோடு தலை சாய்த்துக் கொள்ள, அவள் தலையை வருடிக்கொண்டே, “சீக்கிரம் உனக்கு நல்லவனா பார்த்து கல்யாணத்தை முடிக்கறேன்.”
“மாமா… மாமா..” அவள் தயங்க
“சொல்லுடா..”
“வந்து.. நான் இன்னைக்கு சாயங்காலம் பத்துவோட மாரேஜ்-கு கொச்சி கிளம்புரேன்ல… புதன் மேரேஜ் முடிஞ்சதும் கிளம்பி  ஃபிரண்ஸோட சின்னதா ட்ரிப் பொறேன்ல.. அப்படியே சனிக்கிழமை சென்னை போட்டா மாமா..”
“பாட்டி, சண்டே தானே வராங்க! தனியா போயிருக்க வேண்டாம். சண்டே நானே கூட்டிட்டு போறேன்.”
“ம்ம் சரி.. அன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”
அவள் நெற்றியில் முத்தம் வைத்துச் சென்றார். சென்றவரை அசையாய் பார்த்து நின்றாள். சுயநலமற்ற மாசில்லா அன்பு.. அவள் மாமா.. அன்பின் சிகரம்!
மாலை மூன்று மணியளவில் சுதா கிளம்பி பெட்டியோடு வந்தவள், “நான் கிளம்புறேன் அத்த” என்று அவரை கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.
“நீ எதுக்குமா கேப் எல்லாம் பிடிச்சுப் போர? டிரைவர் சும்மா தான் இருக்கார். உன்ன விட்டுட்டு வர சொல்லுறேன்.”
“வேண்டா அத்த.. உங்களுக்கு இருக்கட்டும். எதுக்காது தேவ பட்டா? மாமாவ பார்த்துக்கோங்க அத்த.. ஏதாவது பிரச்சினைனா, எனக்கு உடனே இன்ஃபார்ம் பண்ணுங்க. பத்து நம்பர் இருக்கில்ல?”
“ம்ம்.. இருக்கு மா. நீ பத்திரம் சுதா!”
“சரி.. பாய்” காரிடம் அவள் செல்ல.. மீண்டும் அவரிடம் வந்தவள் மனதில் ஒரு நெருடல்..
“என்ன டா சுதா? ஏதாவது எடுக்க மறந்துட்டியா?”
“இல்ல..த்த” என்று மீண்டும் அவரை கட்டிக்கொண்டு, அவர் கன்னத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்தவள், “லவ் யூ அத்த.. நான் உங்கட்ட சொன்னதில்ல.. ஆனா சொல்லணும் போல இருக்கு.. எனக்கு நீங்களும் மாமாவும் ரொம்ப இஷ்டம். உங்க ரெண்டு பேருக்குமே என் மேல அளவு கடந்த அன்பு இருக்குனு எனக்குத் தெரியும்.
அம்மா கூட என்னைத் திட்டுவாங்க.. ஆனா நீங்களோ மாமாவோ என்னை ஒரு வார்த்தை கடிஞ்சுப் பேசினது இல்ல. இங்க இருக்கும் போது தெரியல.. குட்டவிட்டு வெளியில போன பிறகு தான் தெரிஞ்சுது வார்த்தைகளால கூட தேள் கொட்டுர வலி கொடுக்க முடியும்னு..
நான் அவங்க மகங்கரனால தான் அம்மா அப்பா என் மேல அன்பு வச்சாங்க… ஆனா என் வாழ்க்கையில உங்கள மாதரி ஒரு செல்ஃப்லெஸ் பெர்சன்ன பார்த்ததே இல்ல. எனக்குச் சொல்ல தெரியலை.. எனக்கு அத்த மாமா இல்ல… நீங்க தான் என்னுடைய அம்மா அப்பா.. உங்க மனசுக்கு உங்களை மாதரியே நல்ல பொண்ணா உங்களுக்கு மருமக கிடைக்கணும்.. த்தாங்க்ஸ் அத்த.. லவ் யூ அத்த!”
அவரை கண்ணீர் மல்கக் கட்டிக் கொண்டவள் முதுகைத் தட்டிக் கொடுத்து, “டேய்.. சுதா… என்ன ஆச்சு? பெரியப் பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு? போய்ட்டு வா பத்திரமா.. இப்போ எதுக்கு கண் கலங்கர.. போடா போய் ஃப்ரெண்ஸ்சோட ஜாலியா இருந்துட்டு வா.. சும்மா சும்மா கண் கலங்கக் கூடாது” அவர் கண்ணில் நீர் கோர்க்க அவள் நெற்றியில் இதழ் பதித்தார்.
அவர் அண்ணனின் பொக்கிஷம்.. “என் மகளுக்கு… உலகம் தெரியாது.. கள்ளம் கபடம் தெரியாது. ரொம்ப சாது.. பூ மனசு அவளுக்கு.. எனக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரு தான் அவளுக்கு எல்லாம்.. பார்த்துக்கோ நீலா.. விட்டுடாதீங்க சதீஷ்.” இறக்கப் போவதை அறிந்திருந்தாரோ என்னவோ அவர் கண்மூடுவதற்கு முன்தினம் சதீஷ்-நீலா கரம் பிடித்து கண்ணீர் மல்க உறைக்க.. நீலா அழுது விட, சதீஷ், “சுதா என் மக.. நீங்க எதுக்கும் கவலை படாதீங்க,,, என் மகளா என் உயிரா பாரத்துப்பேன்” என வாக்கு கொடுத்தார்.
கொடுத்த வாக்கை இன்று வரை காத்து வருகின்றனர்.
சுதா கிளம்பும் நேரம் கேட்டிற்குள் நுழைந்தது ஸ்கார்ப்பியோ! பெட்டியை வேலையாள் கொண்டுச் செல்ல அத்தை கைபிடித்துச் சென்று கொண்டிருந்த சுதாவை பார்த்தவன்  அவன் அன்னையை நோக்கி, “எங்க போறா?” எனவும்,
“கொச்சி..” என்றார்.
விஷ்யம் தெரியாதவன் போல, “எதுக்கு?” என்றான்
“அவ ஃப்ரெண்டு கல்யாணத்துக்கு!”
“அதுகெதுக்கு இப்போ?”
“டேய் போரவள போகவிடாம என்ன கேள்வி?”
“கார்லையா?”
“இல்ல டாக்ஸி!”
“ஓஹ்.. கொஞ்சம் நேரம் இருக்க சொல்லுங்க! போர வழி தானே.. நான் டிராப் பண்றேன்.. நைட் நேரம் எதுக்குத் தனியா?” சொல்லிவிட்டு நேரே உள்ளே சென்று விட்டான்.
அவன் பேச்சுக்கு மருபேச்சேது? யோசித்த நீலாவதிக்கும் சரி எனப் பட, “சுதாமா.. இன்னைக்கு ரோடு இருக்க நிலைல நீ போய்ச் சேர எட்டு மணிக்கு மேல ஆகிடும்..   ராத்திரி நேரம் தனியா டாக்ஸில போகணுமா? வேண்டாம் வேண்டாம்.. நீ தீபக்கோட போடா. அவன் நேரா அவங்க வீட்டுல கொண்டு போய் பத்திரமா விட்டுடுவான். எனக்கும் மனசு அடிச்சுக்காது”
அதைக் கேட்ட சுதாவிற்குத் தான் மனது அடித்துக்கொண்டது. வீட்டில் இந்நாள் வரை அவனைத் தனியே சந்திக்கவில்லை. அன்று மாமாவிற்கு என்றபோது அவனோடு வந்தது. அப்பொழுது இவனைப் பற்றி யோசிக்க நேரமிருக்கவில்லை. ஆனால் இன்று? அத்தைக்கு அவனைப் பற்றிய விஷயம் ஒன்றும் தெரியாது.. தெரிவிக்க அவளுக்கு மனமில்லை. அமைதி காத்தாள்.
டிஃப்பன் அருந்திவிட்டு பொறுமையாய் வெளியே வந்தவன், “கிளம்புறேன் மா” என்றுவிட்டு போர்டிகோவில் அமர்ந்திருந்தவளிடம், “வா” என்ற ஒற்றை வார்த்தையோடு அவன் ஸ்கார்ப்பியோவை உயிர்ப்பித்தான்.
அரைமணி நேர பிரயாண நேரத்திற்கு பிறகும் அவள் படபடப்பு இறங்கவில்லை. வெளியே பார்த்துக்கொண்டிருந்தவள் அவளையும் அறியாமல் கண்ணசந்துவிட, கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன் முகத்தில் ஓர் கீற்றுப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. தீடிரென வண்டி நிற்கவும் விழித்தவள் வெளியே பார்க்க, இதயம் வேகமாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. வெளியே இருட்ட ஆரம்பித்திருந்தது.
அது ஒரு உணவகம். அவள் புறமிருந்த கதவைத் திறந்து உள்ளே அவளை பார்த்துக்கொண்டே, “வரியா? எனக்குத் தல வலிக்குது. டீ குடிக்கணும்.” சொல்லிவிட்டு அவன் செல்ல, அவன் முதுகையே பார்த்தமர்ந்திருந்தாள். அவளுக்குமே ஏதாவது உள்ளே சென்றால் நல்லாயிருக்குமென்று தோண, கீழே இறங்கி அவன் சென்ற இடம் நோக்கிச் சென்றாள்.
பத்து நிமிடத்தில் மீண்டும் பயணம் துடங்க, அவளுக்குக் கொஞ்சம் பயம் நீங்கி இருந்தது. அவளிடம் முகவரி வாங்கி அவளை அவர்கள் வீட்டில் விட்டவன், அங்குள்ளவர்களோடு பேசி அவள் பாதுகாப்பை அறிந்து விட்டே சென்றான்.
சுதாவிற்கே மலைப்பாக இருந்தது. ‘இவன் தானா? இவனைப் போலவே வேறொருத்தனா?’
வந்த நாள் முதல் பார்க்கத் தானே செய்கிறாள். மாறியிருக்கிறான் நன்றாய் தெரிந்தது. கண்களில் ஒரு தெளிவு.. குடி குட்டி எல்லாம் காணாமல் போயிருந்தது.
மறுநாள் நண்பர் பட்டாளங்கள் ஒன்று சேர, வீடு களைக் கட்டியது. கவலையில்லாமல் பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்த காலத்து நட்பு. சில பெண்களுக்குத் திருமணமாகி இருக்க, சிலர் வேலைக்குச் செல்கிறேனென்று இன்னும் தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்திருந்தார்கள். ஆண்களுக்குத் திருமண வயது வரவில்லையாம்.. அவர்கள் செட்டில் ஒருத்தனும் கமிட் ஆகி இருக்கவில்லை. 
காலங்கள் மாறினாலும் வயது மாறினாலும் நண்பர் பட்டாளம் ஒன்று சேர்ந்தால் அதில் வரும் குஷியே தனி தான். அவர்கள் மொத்தம் ஆணும் பெண்ணுமாக பதினைந்து பேர்! காதல் இடையிடாத சுத்தமான நட்பு அவர்களிடையே.
இரவெல்லாம் பேசி சிரித்து விடியலில் தான் படுக்கவே சென்றனர். சிலர் இருந்த இடத்திலேயே உறங்கி விட.. சிலர் அவரவர் அறைக்குள் போய் முடங்கினர். 
செவ்வாய் ஆரம்பிக்க ஆண்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். பெண்கள் மருதாணி இட்டுக் கொள்ள அமர்ந்தனர். அதற்கென்று விழா எல்லாம் இல்லை. யார் யாருக்கு விருப்பமோ அவர்கள் எல்லாம் இட்டுக்கொண்டனர்.
சிலர் தொப்பி வைத்து.. பூ போட்டுக்கொள்ள, சிலர் கை நிறைய கோலம் நிரப்பியது. சுதாவுக்கும் ஆசை வர இரண்டு கையிலும், முழங்கை வரை நீண்டது மெஹந்தி.. காலிலும் முழங்கால் வரை. அன்றைய பொழுதும் அரட்டை கச்சேரியில் களைகட்டியது.
புதன் கிழமை, திருமண நாளும் வர, சுதா பட்டுடுத்தி சகல அலங்காரத்தோடு மிகவும் அழகாகவே இருந்தாள். மணப்பெண் கோலத்தில்! தோழிகள் கூடி இருக்க, போட்டிப் போட்டு தங்களை அலங்கரித்துக் கொண்டனர். ஆண்களும் வெள்ளை பட்டு வேட்டியும் அவர்களுக்குப் பிடித்த நிறத்தில் ‘ரா சில்க்’ சட்டையுமாய் அசத்தினர். 
கேரள திருமணம் என்பதால் அனைவரும் வெண்பட்டு உடுத்தி இருக்க.. சுதாவும் வெண்பட்டும் ரோஜா நிற ரவிகையுமாய் தேவதையாய் தோன்றினாள். போட்டிருந்த அணிகலங்கள் அனைத்தும் ரோஜா நிற ரூபி கற்களாலும் வைரத்தாலும் நிரம்பி அவளை அலங்கரித்திருக்க கண்ணைப்பறித்தாள்.
மெருகேரியிருந்த காந்த கண்களும், ரேஸ்பெரி உதட்டு சாயமுமாய் நின்றவளை கண்ணன் பார்த்தால்.. அங்கேயே தாலி கட்டி தூக்கி சென்றிருப்பான். ஆனால் அவளை தேடி வந்தவன் கண்ணன் இல்லை!  
திருமணம் இன்னும் முடிந்திருக்கவில்லை. மூகூர்த்தத்திற்கு நேரம் இருந்தது. அரட்டை கச்சேரியில் இருந்தவளிடம் அரக்கப் பரக்க ஓடி வந்த ஒரு தோழி, “சுதா.. உன் அத்தான் வந்திருக்கிறார். வெளில.. பார்க்கிங்ல இருக்கார். ஏதோ அவசரம் போல.. உன்ன உடனே கூட்டிட்டு வரச் சொன்னார்.. உன் பெட்டியோட வருவியாம்!”
வந்த நபரின் பரபரப்பு இவளையும் தொற்றிக் கொள்ள, “எ..எதுக்கு? சொன்னாரா?”
“இல்ல.. பா.. ரொம்ப அவசரமாம்.. வா வா..”
சுதாவிற்குப் பயம் பிடித்துக் கொண்டது, “மாமா..” மனம் பதர ஆரம்பித்தது. “மாமாக்கு ஒன்னும் இருக்கக் கூடாது.. மாமா…. ப்ளீஸ் கடவுளே” என்று குழப்பத்தோடு தீபக் முன் வந்து நிற்க, அவள் லக்கேஜை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாய் வாங்கிச் சென்றான்.
அவளுக்குக் கேட்கப் பயம். அவனும் ஒன்றும் பேசவில்லை. இம்முறை முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.  கண்களை மூடி சாய்ந்தவண்ணம். முகம் வாடி இருந்தது. இன்றும் உணவு விடுதி முன் நிறுத்தினான்.
“நான் மூனு மணி நேரமா வண்டி ஓட்டுறேன். பசிக்குது. சாப்பிடனும். வரியா?”
ஒன்றும் பேசாமல் கூடவே நடந்தாள்.
மணப்பெண் போல இருந்தவளைப் பல கண்கள் தழுவிச் சென்றது. தர்மசங்கடமாய் போக, தலையை நிமிர்த்தவில்லை. 
அவள் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கக் காபி போதும் என்றுவிட்டாள். ‘இப்போ கூட இவனுக்குப் பசிக்குமா?’ கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். ‘நீ வயிர நிரப்பிட்டு அவனைச் சொல்லாத! அவனும் பாவம் தானே’ என்று எண்ணிக்கொண்டாள்.
இருவருக்கும் உணவைச் சொல்லிவிட்டு, “ரெஸ்ட் ரூம் போய்ட்டு வறேன்” என்று கழிவறை நோக்கிச் சென்றான்.
செல்லும் வழியில், “வந்துடீங்களா அண்ணே” என்று அங்கு வேலை செய்யும் ஒருவன் சிரிக்க, கண்களால் “ம்” சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இருவரும் உணவருந்தி விட இரண்டு தண்ணீர் பாட்டிலை வாங்கி கொண்டான், அவனைப் பார்த்துச் சிரித்த நபரிடமிருந்து. அவன் தான் அவர்களுக்கான உணவை பரிமாறியவன்!
மீண்டும் பயணம்.

Advertisement