Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 37
 
கேரளாவில் மழை அடித்துப் பெய்திருக்க இரவு எட்டுக்கெல்லாம் ஊரே இருட்டில் மூழ்கி இருந்தது. கேட்டை தாண்டி ஸ்கார்ப்பியோ உள்ளே வரவும் ஓட்டமும் நடையுமாய் வந்தார் நீலாவதி. முகத்தில் அப்படி ஒரு கலவரம். வீட்டிற்குள் நுழைந்த தீபக், “வராண்டாவ்ல என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க? ஒரே சாரலா இருக்கே.. உள்ள வாங்க?”
“தீபக்” என்று அவர் எச்சில் விழுங்கவும்..
“என்னமா ஏதாவது பிரச்சனையா? அப்பாக்கு ஒன்னும் இல்லையே?”
“அப்பா.. இல்ல டா.. சுதா!”
“ஏன் அவளுக்கு என்ன?”
“சாயங்காலம் வெளியில போனா.. கடைக்கு. அப்போ மழை எல்லாம் இல்ல. இருட்டிடுச்சு இன்னும் அவள காணம். சாயங்காலம் பூரா மழை. அதனால் அவ மழைக்கு ஒதுங்கி இருப்பானு நினைச்சேன். மழை விட்டு ஒரு மணி நேரம் ஆகுது. வெறும் தூரல் தானே.. வருவானு பார்த்தா இன்னும் ஆளக் காணம்?”
“ட்ரைவரோட தானே போயிருக்கா? வந்திடுவா.. மணி எட்டு தான் ஆகுது” கூறிவிட்டு அவன் உள்ளே செல்ல..
“இல்ல.. அவ சைக்கிளில்ல போயிருக்கா!” என்றதும் வாசலிலேயே நின்றுவிட்டான்.
அவன் கைப்பேசியைக் கையில் எடுக்கவும்.. “அவ ஃபோன் வீட்டுல தான் இருக்கு”
தீபக்கின் இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது.
அங்கிருந்த தேக்கு மர நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
“தீபக்.. அந்த பொண்ணு, அது தான் நீ வேண்டாம்னு சொன்னியே அவ உன் வீட்டுக்கு வந்துடாளாமே?” குணா சுதாவை விசாரித்தது அப்பொழுது பெரிதாய் தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது?
“யாரு சுதாவா? அவள் பத்தி நீ ஏன்டா கேக்கர?”
“தைரியமான ஒழுக்கமான பொண்ணு! பாக்க நல்லா இருக்கா.. அவளுக்கு நல்ல வசதியாமே, அதுனால அப்பா ஓகே சொல்லிடுவார். நீ தான் அவள கல்யாணம் பண்ணிக்கல. இன்னும் எத்தன நாள் தான் நானும் இப்படியே சுத்தரது.. செட்டில் ஆலாம்னு பாக்கறேன்..”
சத்தமாகச் சிரித்தவன், “யாரு? நீ? நீ கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணப் போரா? அத நான் நம்பணும். போடா போடா.. அங்க கைய் வச்சு இங்க கை வச்சு.. என் மடியிலேயே வைகரியா? வேண்டாம் குணா.. அவ என் வீட்டு பொண்ணு.. நீ நடுவில வராத!”
“எனக்கு உன்ன பிடிக்கும் தீபக். என் உயிர் காத்த உயிர்த் தோழன் நீ. உனக்கானத நான் தொடவே மாட்டேன். சத்தியம். அவ உன் வீட்டு பொண்ணுங்கரனால தான் இத்தனை நாள் ஒதுங்கி இருந்தேன்.. அவளுக்கு வேற ஆள் இருக்காமே.. இனி மேலும் அப்படி இருப்பேனு சொல்ல முடியாது”
‘குணா!’ பல்லைக் கடித்தவன் கோபம் எல்லாம் அம்மா மேல் திரும்பியது. அவன் கையில் சுதா சிக்கினால் சின்னப்பின்னாமாகி விடுவாளே..
“அவப் போரானா எங்க போரா என்னனு விசாரிச்சு அனுப்ப மாட்டீங்களா? இந்த இருட்டில எங்கப் போய் தேடுவேன்? அப்பாக்கு தெரியுமா?”
“இல்ல.. அப்பா கேட்டாங்க.. அவ படுத்திட்டானு சொல்லிட்டேன். அப்பாவும் மாத்திரை போட்டு படுத்துட்டாங்க! சின்ன பொண்ணுடா..” அவர் குரல் நடுங்க
“சரி வொரி பண்ணாதீங்க… நான் பாக்கறேன்..”
மழை சாரல் அடிக்க.. ஒரு வகை பயத்துடனே பைக்கை உயிர்ப்பித்தான். குணாவிடம் அவசரப் பட்டு கேட்க வேண்டாம் என்று எண்ணிக்கொண்டவன்.. அவள் சென்ற கடைப் பக்கமாய் வண்டியை ஓட்டினான். சாலை வெறிச்சோடி இருந்தது. இருபுறமும் மரங்கள் இருக்கவே இன்னும் இருட்டாய் காட்சியளித்தது.
வண்டியைப் பொறுமையாய் ஓட்டிக்கொண்டே கண்ணைச் சுழலவிட்டான். வெகு நேரம் சுற்றித் திரிந்தான். அவன் வந்து கொண்டிருந்த சாலையிலிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு சின்ன வழி உண்டு, வெறும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே போக முடியும். யோசனையாய் அந்த மண் பாதையில் வண்டியை ஓட்ட (உருட்ட) ஆரம்பித்தான். தெரு விளக்கில்லை. சுதாவிற்கு இருட்டு பயம். வெளிச்சம் இல்லாத இடத்தில் போகவே மாட்டாள். வண்டிச் சத்தம் கேட்கவே இரண்டு நாய் குருக்கும் நெடுக்குமாய் ஓட.. சென்று கொண்டிருந்தவனுக்கு ஏதோ நெருட வண்டை நிறுத்தி பார்க்க.. சுதாவின் சைக்கிள் மரத்தடியில் கிடக்க.. நான்கு நாய்கள் மரத்தடியில்.
பல்லி போல் மரக்கிளையில் சுதா! அவனுக்கு மூச்சு மட்டுமா வந்தது? அடக்க மாட்டாமல் வயிரைப் பிடித்துக் கொண்டு சிரிக்கும் அளவு சிரிப்பும் தான். அதுவரை அரண்டு போய் அமர்ந்தவள் அவனைப் பார்த்ததும் அவளுக்குமே அவள் நிலை சிரிப்பைத் தான் தந்தது. 
அத்தைக்காக அவருக்குப் பிடிக்குமென்று வாங்கி வந்த அசைவ உணவின் மணத்திற்கு நாய் துரத்த.. மரத்தில் இரண்டு மணி நேரமாகத் தஞ்சம். கையிலிருத்த உணவு பொட்டலத்தை தூக்கி எறிந்தால் நாய் சென்று விடும் என அவள் எண்ண.. உணவு பொட்டலம் கீழே விழவும் இரண்டு நாய் நான்காய் மாறியது தான் மிச்சம்.
தனக்குத் தெரிந்த எல்லா பாஷையிலும் சொல்லியாயிற்று.. உணவு காலி என்று!! ஆனால் நாய்க்குத் தான் புரியவில்லை. மரத்தின் பட்டையில் ஒரு துண்டு வருத்த மாமிசம் மாட்டியிருக்க.. அதன் மணம் நாயை அங்கேயே நிருத்தியிருந்தது.
தீபக்கைக் கண்டு மனம் மகிழுவாள் என்று கனவிலும் நினைக்காத நிஜம் அறங்கேரியது. 
அடக்க முயன்ற சிரிப்போடே அங்கிருந்த மர சுள்ளியை எடுத்து அவன் மேல் விட்டெறிய.. அவன், “தெருவில போர நாயக் கூட நீ விட்டு வைக்க மாட்டியா? அது கூட.. உனக்காகத் தவமா தவம் கிடக்கு.. வா கீழ!” என மரத்தடியிலிருந்த சேற்றை பொருட்படுத்தாமல் அவளைப் பத்திரமாக இறக்கி விட்டான்.
விரல் நுணியில் கூட அழுக்குப் பட்டால் அவனுக்குப் பிடிக்காது. அவன் கீழ் வேலை செய்பவர்களை அதிகம் மதிக்கக் கூட மாட்டன். கர்வம் அதிகம்.. அவனைக் கீழாக பார்க்கும் படியாய் நடக்க மாட்டான். ஒரு முறை தவறிவிட்டான். தவற்றைச் சரி செய்ய முயல்கிறான். அவளுக்கு நன்றாய் புரிந்தது. அவன் மழையில் நனைந்து அவளுக்காகச் சேற்றில் அவன் நின்றதை அவள் சித்தத்திலிருந்து எடுக்கவே முடியவில்லை. இரவில் தூங்கும் வேளையில் தீபக் தான் சுதா எண்ணம் முழுதும்.
அவன் மாறியிருந்தான். பழைய நட்பு வட்டாரங்களுடம் தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை. கண்ணில் போதை இல்லை. அவன் மாற்றம் அவள் மனதிற்கு அப்படி ஒரு நிம்மதியை கொடுத்தது. இனி மாமா அத்தையைப் பார்த்துக் கொள்வான்.. தவற மாட்டான் என்ற நிம்மதி. ஆனால் அவன் மனது அவள் புறம் சரியக்கூடும் என்று அவள் யோசிக்கக் கூட இல்லை.
அப்பாவும் மகனும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. இருவர் நடுவிலும் ஒரு திரை.. தன் மகனைப் பார்க்கக் கூடா கோலத்தில் பார்க்கவே அவர் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். ஒரு வருடம் பேசவே இல்லை. பின் ‘எப்படி இருக்க.. நல்லா இருக்கியா.. உடம்பைப் பார்த்துக்கோ’ என்ற ஓரிரு வார்த்தகைளே!. 
இங்கிருந்து போகும் முன் இவர்களை முன் போல் ஆக்க வேண்டும் என்பதில் சுதா குறியாயிருந்தாள். அதன் விளைவாய் அன்று மாலையே குடும்பமாய் கேரளாவில் மிக பிரசித்தி பெற்ற கோவளம் கடற்கரைக்குப் பயணம்.
சதீஷ் முன்னிலையில் தீபக்கோடு புன்னகை முகமாய் பேசி சிரித்தாள். அவரோடு பேச வைத்தாள். சுற்றுச் சூழல் அப்பா மகனுக்கான பனிக் கட்டியை மெல்ல மெல்ல உருக்கியது. அப்பாவும் மகனும் பேச ஆரம்பித்திருந்தார்கள். இனி எல்லாம் அவர்களுக்குள் சரி ஆகிவிடும்! மனம் அமைதியாய் இருந்தது.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அலைகளை ரசித்துக்கொண்டே கரையில் நின்றாள். மாலை சூரியன் கடலுக்குள் மூழ்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அந்தி வானம் பல இனிய நினைவுகளைக் கொண்டு வந்தது.
அலைகள் அவள் கால்களைத் தீண்டிச் சென்று மீண்டும் கண்ணன் நினைவோடு திரும்பி வந்தது.
“எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க” ஃபோனில் சுதா கேட்க
அஷோக், “வீட்டில லட்டு.. கொஞ்சம் வேலையா இருக்கேன்”
“அத அப்புறம் பாக்கலாம்! இப்போ உங்க பால்கனில இருக்க அந்த சன் ஃப்ளவர் செடி கிட்ட வந்து பீச்சை பாருங்க”
“விளையாடுறியா? அவசரமா வேல பார்த்துட்டு இருக்கேன்.. பீச்சா பாக்கணுமா.. ஏதாவது சொல்லிட போரேன்!”
“ஆமா.. உங்க கூட விளையாடலாம்னு தான் நினைச்சேன்… உங்களுக்கு குடுத்துவைக்கல.. பை!”
“ஏய் .. ஏய்… என்ன சொன்ன?”
“ம்ம்.. சொரக்காய்ல உப்பில்ல!”
“ப்ச்… ஹல்லோ? ஹல்லோ?”
“பை!”
இரண்டாவது நிமிடம் மாடியில் அவன்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளருகில்.
முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தவளிடம், “இதெல்லாம் ஓவர் என்ன? நீ இங்க இருக்கேனு சொல்ல வேண்டியது தானே? பீச்ச பாருனு சொன்னா.. தினமும் பாக்கரது தானேனு அப்பிடி சொன்னேன்.. இருட்ட போகுது.. தனியா என்ன பண்ற? உன் வானரங்க எல்லாம் எங்க?”
“உங்க கூட இருக்கலாம்னு வந்தேன்.. இனி மேல் அவங்களையே கூட்டிடு வரேன். என்னையும் தானே தினமும் பக்கறீங்க.. போங்க் போங்க.. உங்க வேலைய பாருங்க”
“உன்ன பாக்கரத விட வேற வேலை வேலையா?”
அவள் மிஞ்ச, அவன் கொஞ்சப் பேச்சும் சிரிப்புமாய் இதே போன்ற பீச்சில் தானே.. மூச்சுக் காற்றாகிப் போனான்.. அவன் சிந்தனையில்லாமல் ஒரு மணி நேரம் கழிக்க முடியவில்லை அவளால்.
“ரொம்ப இருட்டிச்சு லட்டு.. வா போலாம்!”
“என் கால் ஈரமா இருக்கு!”
“எனக்கும் தான்! அதுக்கு?”
“நடந்தா மண்ணாகிடும்” அவள் ‘தூக்கு’ என்பது கைதூக்க
“கூலி இல்லாம.. முடியாது!”
“முடியாது.. கடமையைச் செய் பலன் எதிர்ப்பாக்காதே..”
‘போடி..’ செல்லமாய் கோபித்துக்கொண்டாலும் கடமையைச் செய்தான்
கடல் மணலை கடந்து தரை சேரும்முன் யாருமில்லா அந்த கடற்கரையில் ‘பலனாய்’ கூலியைப் பெற்றிருந்தான்.
யார் ஆரம்பித்து யார் முடித்தது தெரியாது. கண்ணை மூடி காற்றில் மிதந்தாள் அன்று!
தன்னை மறந்து இதழை வருடிப் பார்க்க.. அதில் ஈரமில்லை! மீண்டும் வெறுமை வந்து அமர்ந்து கொண்டது. இன்னும் எத்தனை நாள்.. தினம் நூறு முறை நாட்காட்டியைப்  பார்த்தாலும் அது ஒவ்வொரு நாளாய் தான் நகர்ந்தது. ஒருவன் நினைவு இவ்வளவு படுத்துமா? 
அவள் ஆர்வம் அவனை வந்தடைந்ததோ?
மறுநாளே கண்ணனிடமிருந்து கைப்பேசியில் செய்திக்கான அறிவிப்பு வர.. அவளைக் கையில் பிடிக்க முடியவில்லை.
தமிழில் எழுதியிருந்தான்.
நீயின்றி இறந்து விட்டேன்! உயிர் தருவாயா?
எல்லாம் துடைத்துவிட்டு, மீண்டும்
உன்னிடமிருந்து துவங்க ஆசை! உன் கண்ணனாய்..
ஆங்கிலமும் ஸ்பானிஷும் எழுதப் படிக்கத் தெரியும். பள்ளியில் கற்றது. பின் ஃப்ரென்சு படித்தாள். கேரளாவில் அத்தை வசம் வந்ததும் மலையாளம் பேச கற்று கொண்டாள். மும்பை சென்றதும் மராட்டி பேச கற்றுக் கொண்டாள். ஹிந்தி புரிந்து கொள்வாள், பேசுவாள். வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழை நன்கு சரளமாய் பேசக் கற்றுக் கொண்டாள்.
முதன் முதலாய் படிக்க வேண்டிய சூழ்நிலை. எழுத்துக் கூட்டி படித்துப் பார்த்து, கூகிளில் போட்டுப் பார்த்து ‘இறந்து விட்டேன்’-னை பார்த்ததும் ‘ஐய்யோ.. தற்கொலை செய்து கொள்ள விழைந்தாரோ?’ என மனம் பதற ஆரம்பித்தது. நேரம் காலம் பார்க்காமல் கார்த்திக்கை அழைத்தாள்.
“ஏய்.. என்ன ஆச்சு?”
“நான் அனுப்பி இருக்க மெசேஜ் படிச்சு அது என்னானு சொல்லு…”
தூக்கக் கலக்கத்தில் படித்தவன்.. “ஏய் லூசு இதுக்குத் தான் இப்படி விடியரதுக்கு முன்னாடி என்னை எழுப்பினியா? நீ மதியம் சாப்பிட்டுட்டு கொரட்ட விட்டுட்டு அடுத்து பொழுது போகாம இப்படி மொக்கை கவிதையெல்லாம் படிக்க வைகுர? லூசு லூசு!” என்று ஏகத்துக்கும் வசை பாடினான்.
அவள் காதில் விழுந்தால் தானே.. “சொல்லு.. அதுல யாராவது சுயிசைட் பண்ணிக்கிட்டாங்களா?”
“இல்ல.. அத படிச்சதுக்கு நான் தான் பண்ண போறேன்!”
“டேய்.. அத ஒழுங்கா படிச்சு சொல்லு… இல்ல நீ சுயிசைட் பண்ணவேண்டாம் நானே உன்ன போட்டுடுவேன்..”
தூக்க கலக்கத்தில், “ஏய்.. அதுல ஒன்னும் இல்ல டி! எவனோ கண்ணனாம்.. நீ இல்லாட்டி செத்ததுக்குச் சமமாம். பழசை இரேஸ் பண்ணிட்டு புதுசா ஒன்ஸ் மோர் ஸ்டார்ட் பண்ணலாமானு கேக்கரான்..”
சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. “ம்ம்.. அப்புறம்?”
“அப்புறம்.. வடக்குப்புறம்!! ஆள பாரு! அவ்வளவு தான்! யாரு அனுப்பின ஃபார்வேட் இது?”
“அவர் அனுப்பி இருக்கிறார் டா..”
“ஹப்பா.. ஒரு வழியா சண்டை ஓஞ்சுதா?”
“ம்ம்..”
“ஒரு 5 மினிட்ஸ்ல.. ரெஸ் ரூம் போய்ட்டு வந்து கூப்பிடுறேன்..”
மீண்டுமாக அஷோக்கிடமிருந்து மெசேஜ் வந்தது. இம்முறை ஆங்கிலத்தில்..
“உலகத்தில சில பேருக்கு மட்டுமே எல்லாம் நல்லதா அமையும். அதுல நானும் ஒருத்தன்.
என்னையே உலகமா நினைச்சு வாழர அம்மா 
என்னைச் சிரிக்க வச்சு, எனக்கு வலிக்கும் போது என்னோட சேர்ந்து அழுது..
என் வலியப் போக்கப் போராடி, என் வாழ்க்கைக்கு விடிவெள்ளியா
என் கனவை அவங்க கனவா வாழர அம்மா.
எனக்கு அப்பா ஏக்கம் என்னைக்கும் வந்ததில்ல.. அம்மா மட்டுமே போதும்னு என்னால எப்போவும் சொல்ல முடியும்.
உயிர் கொடுப்பான் தோழன்.. அது தான் வெங்கட்.
இதுக்கும் மேல அவனைப் பத்தி சொல்ல வேண்டியதே இல்ல!
எனக்கு எல்லாம் அளவுக்கு அதிகமா இருந்தனால.. அம்மா என் ஒழுக்கத்தில கண்டிப்பா இருந்தாங்க.
அப்பாவோட ரத்த குணம் எனக்கு வந்திட கூடாதில்ல!
கண்டிப்பா எனக்கு அது வரலை..
வயசு பையனா.. அழக கண்ணால மட்டும் ரசிச்சு இருக்கேன்- அளவோட. அவ்வளவு தான்.
அதுக்கும் மேல யாருமே என்னை ஈர்த்தது இல்ல.
நான் எதிர்ப்பாக்காத நேரம், என் வாழ்க்கையோட நிறைவா நீ வந்த..
உன் காந்த கண்ணுல விரும்பியே என்னை தொலைச்சேன்.
ஒருத்தர பத்தி ஒருத்தர் அதிகம் தெரிஞ்சுக்காமலே காதலிக்க ஆரம்பிச்சோம்.
இன்னும் ஒரு தரம் கூட நீயோ நானோ ‘ல்வ் யூ’ சொல்லிகிட்டது இல்ல 
சொல்லி தெரியரதுக்கு முன்னமே உணர்ந்த காதல் நம்மளோடையது.
உனக்கு எப்பிடி நானோ..  அதே மாதரி எனக்கும் எல்லாமே நீ தான்!
நிஜமா சொல்லு.. என்னை நான் உன் கிட்ட உணர்த்தவே இல்லையா?
என் பரம்பரை, என்னுடைய குடும்பம், தொழில்… இது வேணா உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் யாருனு உனக்குத் தெரியும்.
ரெண்டு முழ மஞ்சள் கயரு கொடுக்கர நம்பிக்கையை ஆறடி மனஷனால கொடுக்க முடியலையா சுதா? உன்ன என் மனைவியா மனசார நினைச்ச பிறகு தான் உன் மேல விழுந்த என் பார்வை கூட மாறிச்சு! உனக்கு அது தெரியும் தானே? நான் தப்பானவனு நீ நம்பரியா?
‘என்னை விட்டுடுனு’ சொன்ன.. விடறேன்.. நான் செத்த பிறகு! அது வரைக்கும் உனக்காக மட்டுமே என் கரையாதா காதலோட காத்திருப்பேன்.
அன்னைக்கு நீ பேசினது எனக்கு வருத்தம் தான். கடைசில, என் அம்மாவை எந்த குற்ற உணர்வுமே இல்லாம, நிர்க்கதியா விட்டுட்டுப் போன அந்த மனுஷன் கூட என்னை கம்பேர் பண்ற அளவுக்கு நான் மோசம் இல்ல சுதா.. கொஞ்சம் கெட்டவன் தான்.. ஆனா நீனு வரும்போது நான் வெரும் நல்லவன் மட்டும் தான் சுதா. எனக்கு உன்ன அவ்வளவு பிடிக்கும். கொஞ்சுரதுக்கு உரிமை இருக்க உனக்குச் சண்ட போடவும் உரிமை இருக்கு.. ஆனா தள்ளி மட்டும் நிக்காத! சனிக்கிழமை கிளம்பறேன்.. உன்னை என் சுதாவா பாக்க அசை படுறேன்..”
படித்தவள் சிறகில்லாமல் பறந்தாள்.  
சற்று நேரத்தில் கார்த்தியோடு பேச.. நேரம் போவது தெரியாமல் பேசினார்கள். கைப்பேசியை அணைக்கும் முன் கார்த்தி அவளிடம், “அவர்ட்ட சண்ட போட்டு பேசம இருக்கரது சரி இல்ல. ரொம்ப தப்பு பண்ற சுதா.. உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். உன்ன பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு. இவ்வளவு காதலானு மலைப்ப இருக்கு. உங்க ப்ராப்லம்.. என்ன வேணும்னாலும் இருக்கட்டும்.. பேசி சால்வ் பண்ண பாரு உங்க பிரச்சினைய! கிடைச்ச பொக்கிஷத்தை கீழப் போட்டு உடைச்சிடாத!”
“இல்ல டா.. மாட்டேன். ஒரு வாரத்தில ஊருக்குத் திரும்பி வரார்.. அப்போ நேர்ல பேசறேன் கார்த்தி. ஃபோன்ல சரி படாது”
“என்னவோ பண்ணு.. அப்புறம் ‘டேய் கார்த்தி.. நான் அவரை தொலைச்சுட்டேன் டா’னு வந்து நிக்காத சரியா?”
“மாட்டேன்.. தாங்க்ஸ் டா.. லவ் யூ கார்த்தி!”
“போடி.. சொல்ல வேண்டியவங்கட்ட சொல்லாத.. போ போய் அவர்ட்ட சொல்லு…” இருவர் முகத்திலும் புன்னைகையோடே கைப்பேசியைக் கீழே வைத்தனர்.
யார் கூறியது.. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காமம் இல்லா பிணைப்பு இருக்க முடியாதென்று? 
அன்று மாலை வேளையில் எதிர் பாரா விருந்தாளியாய் சுதாவின் கல்லூரி தோழி பத்மாவதி வந்திருந்தாள். இவளைப் பார்ப்பாள் என்ற நம்பிக்கையோடு வரவில்லை. திருமண பத்திரிக்கையை இவர்களிடம் கொடுத்தால் சுதாவிடம் சேர்ப்பார்கள் என்றே வந்திருந்தாள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில் அப்படி ஒரு மகிழ்ச்சி!
பல வருடம் விட்டுப் போன கதையைப் பேசினார்கள்.
காபியும் நொறுக்குத் தீனியுமாய் போர்ட்டிகோவில் போய் அமர, தீபக் இருவரையும் பார்த்த வண்ணம் போர்ட்டிகொவின் பக்கத்து அறையில் போய் அவன் மடிக்கணினியுடன் அமர்ந்தான்.
அவன் அறை ஜன்னல் திறந்திருக்க அவர்கள் பேச்சு புள்ளி கமா முதல் எல்லாம் தெள்ளத்தெளிவாய் கேட்டது.
“இப்போ சென்னைல தான் வேலை. அவங்க வீடும் அங்க தான். அதனால தான் அங்க எங்கேஜ்மென்ட். அம்மா அப்பா இன்னும் இங்க தான் இருக்காங்க. மேரேஜ் எங்க சைட்.. சோ சொந்த ஊரான கொச்சின்-ல தான் மேரேஜ். இங்க இருந்து மூனு மணி நேரம் டிஸ்டன்ஸ் தான். நான் கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி தான் ஊருக்கு போறேன். முடிஞ்சா என்னோட வா.. இல்லாட்டி அட்லீஸ்ட் முந்தின நாள் வரனும். சரியா? வனஜாவும் அன்னைக்குத் தான் வரா. நம்ம ஃப்ரெண்ட்ஸ் கேங்க் எல்லாரும் வராங்க.. நீ வாராம இருந்திடாத.. சரியா?”
“புதன் கிழமையா? அதுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லையே..”
“நீ அன்னைக்கு கொடுத்த நம்பர்ல உன்ன ரீச் பண்ண முடியலை.. மாத்திட்டல்ல? முடிஞ்சிருந்தா எப்பவோ உனக்கு கார்ட் வச்சிருப்பேன். நேத்துல இருந்து லீவ். நேத்து தான் இங்க வந்தேன்! உன்னால வர முடியாதுனு தான் நினைச்சேன்.. உன்ன பார்த்ததில ரொம்ப ஹாப்பி.”
ஆசை தீர பேசி தோழியை வழி அனுப்பியவள் மனம் நிறைவாயிருந்தது. அவர்கள் இருவரும் திண்ணையை காலி செய்ய, உள்ளிருந்து வந்தவன் அங்கிருந்த திருமண அழைப்பிதழை புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
அருகிலிருந்த சுதாவின் கைப்பேசியைப் பார்க்க ‘அஷோக் கண்ணன்’ புகைப்படம் வழியாய் அவனைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தான். என்ன யோசித்தானோ, கைப்பேசி அணைக்கப்பட்டு அவன் சட்டைப் பையில் விழுந்தது.
மனம் கணக்குப் போட, கைப்பேசியில் சிலரைத் தொடர்பு கொண்டான். முகத்தில் இருந்த குழப்பமெல்லாம் நீங்க.. மீண்டும் தவழ்ந்தது புன்னகை.
அன்று இரவு சுதா என்ன தேடியும் கைப்பேசி கிடைக்கவில்லை. அவள் தேடுவதைப் பார்த்தவன் வாய் திறக்கவில்லை. அதிகம் அதைப் பயன்படுத்தும் பழக்கம் இல்லாது போகவே.. எங்காவது இருக்கும் இல்லை புதிது வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
தினமும் நான்கு முறை நாட்காட்டியைப் பார்த்துவிடுவாள். அடுத்த சனிக்கிழமை வந்துவிடுவான் கண்ணன். அவன் சென்னை வரும் சமயம் அவள் இங்கல்லவா இருப்பாள். அவள் வனவாசம் என்று முடியுமோ? ‘அவனைப் பார்க்க வேண்டும் அன்றே பார்க்க வேண்டும்’ உள்ளம் ஒரு நிலையிலில்லை. ஆசையாய் இருக்கக் கண்மூடி அவன் நினைவோடு பேசிக்கொண்டாள்.
அவள் தவிப்பு தீபகிற்கு கொஞ்சம் எரிச்சலை கொடுக்க தான் செய்தது.
“நல்லா கனவுல பேசிக்கோ.. ஒரு வாரம் தான்.. அப்பரம் அதுல அவன் வரக்கூடாது.” ஜன்னலின் பின் நின்றவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

Advertisement