Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 35
“என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா. மீரா படுத்திருக்க அவள் அருகிலிருந்த மெத்தையில் குழந்தையை மடியில் வைத்து அதன் குண்டு கன்னம் வருடி, திராட்சை கண்ணில் மயங்கி அதைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
பால் குடிக்க மட்டுமே கண் திறந்தாள் அனு குட்டி. அந்த நேரத்தைச் சுதா உபயோகித்து கொள்வாள். அழகான பெண் குழந்தை.. ராகுலின் ஜாடையில். குழந்தையைப் பார்க்கப் பார்க்க சுதாவிற்கு ஆசை அடங்கவில்லை. கூடவே உள்ளம் அடைத்தது. கண்ணன் ஜாடையில் அவள் மடியில் ஒரு குட்டி தேவதை வரும் வாய்ப்பை குழி தோண்டி புதைத்து விட்டு அமர்ந்தவளுக்கு தானே தெரியும் குழந்தையின் அருமையை.
“நாமா பிரிஞ்சடலாமா கண்ணன்.. எப்போவும் நமக்குள்ள சண்டை.. எப்பவும் யாரோ ஒருத்தர் மாத்தி மாத்தி வார்த்தையை விட்டுக் குத்தி கிழிச்சுக்கறோம்.. வேண்டாம். ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸ்-சா பிரிஞ்சடலாம்?” என்ன நினைத்துக் கேட்டாளோ.. கேட்டவள் வாயின் வாஸ்து சரியில்லை அன்று!
“உன் இஷ்டம்.. பார்த்துக்கோ.. உனக்கு அது தான் சந்தோஷம்னா.. அதையே செய்!” என்றுவிட்டான். சென்றவன், சென்றும் விட்டான் விமானம் ஏறி.
ஒரே ஒரு நொடியில் பீங்கான் கோப்பை கீழே விழுந்து சுக்கு நூறாய் சிதறியது. கோப்பை தானாய் விழவில்லை, சுதா வேண்டுமென்றே கீழே போட்டாள்.. சிதறிய பின் தான் உணர்ந்தாள் தன் மடத்தனத்தை.. அதுவும் மீராவையும் ராகுலையும் பார்த்த பின்.
ஆம்.. அவனையும் விட அவள் அதிகம் பேசிவிட்டாள். அவளுக்கே தெரிந்தது.. ஆனால் நிருத்தாமல் அவனை அடித்து சாய்க்கும் வரை பேசிவிட்டாள்.
“உங்களுக்கு என்னை விட உங்க தொழில் தானே முக்கியம். ஆறு வாரம் போயே ஆகணுமா? ஏன் இந்த ஒரு தரம் எனக்காக அத விட்டா என்ன? நீங்க என்னை காதலிச்சா தானே என் கூட இருக்க தோணும்?” என்று வள்ளென்று விழுந்த போது கூட.. எப்படி பொறுமையாய் விளக்கினான். மரமண்டை போல் நின்றேனே.. அவர் சொல்ல வந்த எதையுமே அன்று காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. 
‘அவர் தொழில் அவர் பிள்ளையல்லவா.. அதை விடு என்றால் எப்படி விட முடியும். ஒரு தரம் அவர் விட்டால் அவர் சரிந்து விட மாட்டாரா..? காற்றாடியின் நூலை விட்டுவிட்டு அதன் பின் ஓடவா முடியும்? ஏன் எனக்கு அது கூட புரியவில்லை!’
“உன் பிரச்சினை தான் என்ன? உனக்குச் சொன்னா புரியுமானு கூட தெரியல.. ஒரு குதிரை மாதரி நீ.. வெறும் எதிர்ல வரத மட்டும் தான் பார்ப்பியா? நீ அங்க தானே வேல பாக்கர.. நீ ஃபினான்ஸ் டிபார்ட்மென்ட் தானே.. கம்பனி டார்ன் ஓவர் என்னனு தெரியும் தானே? உன் ஃபிரெண்டு கார்த்திக் கிட்ட நாம கம்பனில எத்தன ஆயிரம் பேர் வேலை பாக்கராங்கனு கேட்டிருக்கியா? எத்தனை ஊர்ல நம்ம ப்ரான்ச் இருக்குனு தெரியுமா? எத்தனை குடும்பம் நம்ம நிழல்ல நிம்மதியா வாழராங்க தெரியுமா? 
இதெல்லாம்.. இந்த உயரம்.. எப்படினு நினைக்குர? உழைப்பு! போட்டிப் போட பயப்படாம மேல ஏறிப் போரத் தைரியம்! எத்தனை இரவு எத்தனை பகல் என் உழைப்பு அதுல இருக்குத் தெரியுமா? இதில நான் மட்டும் இல்ல.. என்னை நம்பி இருக்க குடும்பங்களும் சந்தோஷமா வாழணும்னு ஒரு வெறி.. எனக்கு அதுல தப்பு தெரியல!
எனக்கு என் குடும்பம் மட்டும் இல்ல.. என்னை நம்பியிருக்க குடும்பமும் முக்கியம்.. நீ சொன்னதும் வேல வெட்டிய விட்டுட்டு உன் பின்னாடியே என்னால சுத்த முடியாது. அத முதல்ல தெரிஞ்சுக்கோ.. நீ எவ்வளவு முக்கியமோ அதே அளவு என் உழப்புல வளர்ந்த இந்த கம்பனியும் இதில வேல செய்யரவங்க வாழ்க்கையும் முக்கியம்.
நான் உன்ன காதலிக்கரத என் வேலையை புறக்கணிச்சு தான் நிருபீக்கணும்னா.. நீ அந்த காதல தெரிஞ்சுக்கவே வேண்டாம். இது தான் என் ஐடென்டிட்டி.. விட முடியாது சுதா”
அவன் இப்படிக் கூறியதிற்கும் சண்டை இட்டாளே.. ஏன்? அப்படி என்ன தான் அவளுக்கு அவன் மீது கோபம்?
யாருக்கு தான் கோபம் வருவதில்லை.. எந்த குடும்பத்தில் தான் சண்டை வருவதில்லை. மீராவிற்கு உடல் சோர்வு.. பெண் குழந்தை ஒழுங்காய் பால் அருந்தாமல் நெறிகட்டி வலியில் மீரா அவஸ்தைப் பட.. வலி எல்லாம் கோபமாய் ராகுல் மேல் தான் காட்டினாள். அவனும் சில நேரம் புரிந்து கொள்வான் அவள் வலியை.. பொருத்து போவான். சில நேரம் சண்டை விண்ணைத்தொடும். ஆனாலும் அவன் தோள்சாய, அவளை அணைத்துக் கொள்வான். எல்லாமே தேவையே இல்லாத சண்டைகள். சண்டையிட தேவை இல்லாத விஷயங்கள்.. அவளுதைப் போலவே!
இது தான் வாழ்கையோ.. காரணமில்ல சண்டை எல்லா வீட்டிலும் வருவது இயல்பு தானோ? சுதாவிற்கு உறைத்தது. இவர்கள் சண்டையும் அர்த்தமற்றது தானே.
அன்று ஹோட்டலில் அஷோக்கின் கையில் மாலினியைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான். எழுந்து நின்றவள் அப்படியே நின்றுவிட்டாள்.
அறையினுள் நுழைந்தவனுக்குச் சுதாவைக் கண்டதும் அப்படி ஒரு குதுகலம். மாலினி பேசிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததற்கான அறிகுறி இல்லை. அவனுக்கோ தலை கால் புரியாத இன்ப அதிர்ச்சி. அவள் விழி பார்வையில் அவளையே கீழே விட்டவன், மாலினியே என்ன செய்வான்?
கீழே தொப்பென்று போட்டவன்  அவளைத் தாண்டி, சுதாவை நோக்கி இன்முகமாய், “ஏய்.. லட்டு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க.. என்னைப் பாக்க வந்தியா? பாக்க வந்திட்டு என் பி.எ. ரூம்ல என்ன செய்யர.. நம்ம ரூம்க்கு வர வேண்டியது தானே.. அதுக்கு தான் எனக்கு ஃபோன் போட்டியா? சாரி டா.. எடுக்க முடியல.  இவ கூட சேர்ந்து சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணினியா? சரி..ய.. இருக்கடி செல்லம்.. இந்த ட்ரெஸ்-ல லட்டு மாதரியே இருக்க லட்டு.. ஒரு கடி கடிச்சுக்கவா..” அவள் காதில் நேரம் காலம் தெரியாமல் கிசுகிசுக்க, பதிலாய் அவள் அனல் பார்வையையே வாங்கிக் கொண்டான்.
அவன் வெற்று மார்பில் அவள் கண் பதிய அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது அவன் நிலை. அவன் முகமும் குரலும் ஒன்று சேர மாறியது, “சுதா.. அது இவ குடிச்சுட்டு வாந்தி பண்ணிட்டா..” என சிறு குழந்தை போல் மாலினியைக் காட்ட,
கீழே விழுந்த கைப்பேசியை நிதானமாய் எடுத்தவள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற மாலினியின் அருகில் சென்று பல்லை கடித்துக்கொண்டே அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “என்ன மனசில நினைச்சுட்டு இத செஞ்சனு தெரியல.. தெரியவும் வேண்டாம். உன் கூனி, சகுனி.. வேலை எல்லாம் எங்கட்ட வேண்டாம்,. எனக்கு எ.கெ மில்ஸ், எ.கெ தெரியாம இருக்கலாம்… அதுக்காக என் கண்ணன கூடவா தெரியாது. எனக்குத் தேவ இல்லாத விஷயத்தை நான் தெரிஞ்சுக்கரது இல்ல.. அது என் சாய்ஸ்.. ஐ மே பி இக்னோரெண்ட்.. நாட் ஸ்டுப்பிட். (I may be ignorant… not stupid)
அன்பு, காதல், நம்பிக்கை.. நீ உருவத்தில பார்த்திருக்கியா? நான் அவரோட தான் மனசார வாழறேன்.. என்கிட்டயேவா?”
சரேலென அவள் மேலிருந்த கோட்டை உருவி இரு அடி முன் சென்றவள் ஒரு நொடி தன்னை நிதானப் படுத்தி நீண்ட மூச்சை இழுத்துவிட்டும் கோபம் தணியவே இல்லை.
மீண்டும் மாலினி அருகில் சென்றவள், “ட்ரை பண்ணினேன்.. முடியல.. இது என் புருஷன் பேர கேடுக்க நினைச்சதுக்கு” என்று அவள் முழு பெலன்கொண்டு ஓங்கி அறைந்து, கையிலிருந்த ஜாக்கெட்டை அஷோக்கின் நெஞ்சில் விட்டெறிந்துவிட்டு வாயிலை நோக்கி வேக நடை போட்டாள்.
ஜெக்கட்டை அணிந்துகொண்டே, கீழே ஒரு ஓரமாய் கிடந்த மாலினியை நோக்கி, “யூ ஆர் ஃபயர்ட்.. நீ என் கண்ணில படாம எங்கையாவது ஓடிடு.. அடுத்த தடவ உன்னைப் பார்த்தேன்.. தொலைச்சிடுவேன்..!” அவளிடம் காய்ந்துவிட்டுச் சென்றான். அப்பொழுதும் அவள் வேண்டுமென்றே செய்திருக்க கூடும் என்ற சிறு சந்தேகம் கூட அவனுக்கில்லை. சுதா முன் கேவல படுத்திவிட்டாளே என்ற எண்ணம் மட்டுமே.
பூனை குட்டி போல் சுதாவை  நோக்கி ஓடியவனைப் பார்க்க மாலினிக்குப் பொறாமையாக இருந்தது. சுதாவிடம் என்ன கண்டான் என்ற அவள் கேள்விக்குப் பதில் கிடைத்தது. பதில் ஒரே வார்த்தையில். ‘காதல்’!
“பாஸ்” மாலினி அழைப்புக்கு அவன் திரும்பிப் பார்க்க
“சாரி….” என்றாள் உணர்ந்து. 
“நீயே வச்சுக்கோ” என்றுவிட்டு அவன் ஓட்டமும் நடையுமாய் லிஃப்டின் முன் வரவும் லிஃப்டின் கதவு மூட, சுதா கீழ்த் தளம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள்.
ஒரு நொடி கூட அஷோக் யோசிக்கவில்லை. அவன் கால்களா.. லிஃப்ட்டா? போட்டிப் போட்டுப் படி இறங்க.. கீழ்த் தளத்தில் லிஃப்டின் கதவு திறக்க  அதன் முன் நின்றிருந்த அஷோக்கை ஆச்சரியமாய் சுதா பார்க்க அவன் உள் சென்று அவன் தள எண்ணை பதிந்தான்.
‘இருந்திருந்து ஒருத்தியை காதலிச்சா.. ஊரெல்லாம் வில்லெனா வரான்.. அவள் முகம் பேந்திடுச்சு.. என்னை என்ன பண்ணப்போராளோ.. ஈஷ்வரா காப்பாத்து’
உள்ளுக்குள் எழும் உதறலையெல்லாம் வெளியே காட்ட முடியுமா என்ன? அவள் கதைவை திறக்கும் பொத்தானை அழுத்தச் செல்ல, அவள் கையை பிடித்துக்கொண்டு, அலட்டலே இல்லாமல், “எங்க கிளம்பிட்ட? ரூம்-கு வா பேசலாம்!” என்றான்.
போக இருந்தவளை விட்டிருக்கலாம்.. விதி சதி செய்தது.
“எனக்கு உங்க கிட்ட பேச ஒன்னும் இல்ல!” சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது.
அதற்கு என்ன என்பது போல் அசராமல், “எனக்கு இருக்கு!”
அறையினுள் நுழைந்தவன் அவளிடம் தாழ்ந்த குரலில், “கோபப் படாத லட்டு.. புருஞ்சுக்கோ சுதா!”
முகம் இறுகி இருக்க ஒன்றும் பேசவில்லை, சுவரில் சாய்ந்து கையை மார்புக்குக் குருக்காய் கட்டி நின்றிருந்தாள். அவளுக்கு அவன் மேல் கோபம்.. எதற்கு அது இன்றுமே அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் கோபம்.. கண்மண் தெரியாத கோபம்.
இது வரை எல்லாம் சரியே தான் போனது.. அதன் பின் தான் யாரோ அவள் வாயில் குடித்தனம் நடத்த முடிவெடுக்க.. எல்லாம் மாறிப்போனது.
எல்லாம் சரியாய் சென்றிருக்க வேண்டும்.. அவளுக்கும் அவனைத் தெரிய, அவனுக்கு அவளைத் தெரிந்திருக்க.. எல்லாம் சரியாகத் தான் சென்றிருக்கவேண்டும். ஆனால் அவள் கோபம்.. கோபம் யோசிக்கும் திறனை செய்யலிழக்க செய்ய, தேவையே இல்லாமல் வார்த்தைகள் தடித்தது.
அவளைப் போக விட்டிருந்தால் கூட பிரச்சினை இல்லாமல் முடிந்திருக்கும்.
‘இப்படி யாரோ சொல்லித் தான் இவனைப் பற்றி நான் அறிந்து கொள்ளவேண்டுமா? எத்தனை முறை துணிக் கடை துணிக் கடை என்று கூறினான்.. ஒரு முறையேனும் அவன் தொழிலைப் பற்றி என்னிடம் கூறினானா? கூறியிருந்தால் இப்படி எவள் முன்னோ கேவலப் பட்டுப் போயிருக்க வேண்டாமே என்ற கோபம். எங்கள் உறவு எப்படி யார் முன்னோ கேவலப் பட வேண்டுமா என்ற கோபம். இவனால் தானே.. இவன் என்னை அறியாமையில் வைத்ததினால் தானே மாலினி எங்கள் நடுவில் வரப் பார்த்தாள், என்ற கோபம்! வாழ்க்கைத் துணையாக நினைப்பவனைப் பற்றித் தான் அறிந்திருக்கவில்லையே என்ற கோபம்.. என்னை விட்டு விட்டு வாரக் கணக்காய் போக போகிறானே என்ற பயம். பக்குவமில்லா வயது.. உணர்ச்சி வசப்பட்டுவிட்டாள்.
அஷோக்கை பார்க்க ஆசைப் பட்டது நிஜம். பார்க்க முடியாது என்று மனதைத் தேற்றி வைத்திருந்தாள். அவனை பார்க்கக் கூடாத கோலத்தில் பார்க்கவும்.. அடிபட்ட வலி.. நுண்ணிய உணவுகள் காயப்பட்டது. அதுவும் குடித்து வெறித்தது போல் நடிப்பவளை ஊரறிய உல்லாசமாய் தூக்கிக் கொண்டு! சாகவா கிடந்தாள்? தூக்கிக் கொண்டு சுற்ற? அவளுக்கு மட்டுமே சொந்தமானவன் மாற்றவளைத் தூக்கலாமா? என்ற கோபம் அனல் மூட்டியது!
“நீ என்னைச் சந்தேக படுரியா? எங்களுக்குள்ள ஒன்னும் நடக்கல சுதா..” பாவம் அவனுக்குத் தான் சுதா, மாலினியிடம் பேசியது எதுவும் கேட்க்கவில்லையே. அவனைச் சந்தேகப் படுகின்றாளோ? அவன் இருந்த நிலைக்கு யார் தான் சந்தேகப் பட மாட்டார்கள்? மாலியோடு அவனைப் பார்த்த கோபம் என்று எண்ணிக்கொண்டான்.. உண்மையில் ஏன் என்று அவனுக்குத் தெரியவில்லை.. ஆனால் வடிகால் அமைத்துக் கொடுத்தான்.
“ஏன் நடுவில நான் வந்து கெடுத்துட்டேனா?” பல்லைக் கடித்துக் கொண்டே இன்னும் அதிகமாய் அவனை முறைக்க
“நீ பார்த்த எதுவும் உண்மையில்ல சுதா! அவ குடிசுட்டு கீழ கிடந்தா.. மிட் நைட் ஃப்ளைட் சுதா.. அவளும் கூட வரதா தானே இருந்துது.. சொந்தக் கார பொண்ணு.. அப்பிடியே விட முடியாது. அவ இருந்த கோலத்துக்கு யார விட்டு அவளைத் தூக்க சொல்றது? அது தான் ரூமுக்கு..” இதற்கு மேல் என்ன சொல்லுவதென்றே அவனுக்கு தெரியவில்லை.
சுதா பேசும் பொது நிதானமாய் தானே இருந்தாள். நிமிர்ந்து நின்றாளே.. ‘மாலினி..’ என்று பல்லை கடித்துக்கொண்டான். வேண்டும் என்றே செய்திருக்கிறாள். அதற்குத் தான் ‘சாரி’ எல்லாம்!! ஆனால் இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை.
“ஓ அதுனால அவளுக்குச் சட்ட இல்லாம நீங்க சேவைச் செய்ய போனீங்களா?”
“வாந்தி பண்ணி தொலைச்சுட்டா டா.. அத எப்படி போட்டுக்க முடியும்? நீ என்னை நம்பல?”
நம்பிக்கை பற்றிப் பேசவும் கோபம் இன்னுமே அதிகமானது. “சும்மா இதே.. சொல்லிட்டு இருக்காதீங்க.. உங்கள நான் எதுக்கு நம்பணும்? என் கிட்ட உங்கள பத்தி என்ன சொல்லி இருகீங்க.. நீங்க சொன்னபடி இருக்கீங்கனு நான் கம்பேர் பண்ண?”
“நான் உன்ட்ட எத மறைச்சேன்?”
“மறைக்கல.. ஆனா ஒன்னும் சொல்லலை! உங்க பேரு கூட எனக்கு தெரியல! ரெண்டு அஷோக்கும் ஒருத்தர்-னு கூட எனக்கு தெரியல. அதனால தான் இவ ஒரு மக்கு, இவளுக்கு நான் ஜாஸ்தினு நினைச்சுடீங்களா?”
“ஸ்டாப் இட் சுதா!.. என்ன பேசர? என் பேர் தெரியாதா?” அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான்.
“ஏன் நீங்க என்ட்ட சொன்னீங்களா? சும்ம ஒரு பேச்சுக்கு நானே தெரிஞ்சுக்கறேன்னா.. அப்படியே விட்டுடுவீங்களா? நான் உங்க கீழ வேல பாக்கறேன் அது உங்க கன்சர்ன்னு, எதுவுமே எனக்கு தெரியல.. ஏன்னா நீங்க என்ட்ட மறச்சுட்டீங்க, இன்னும் என்னன்ன மறச்சீங்க?”
“என் பேரு கூட உனக்கு தெரியாதுனு எனக்குத் தெரியாது சுதா. நான் உன் கிட்ட மறைக்கல.. என் வீட்டில எல்லோரும் என்னைக் கண்ணன் தானே கூப்பிடுராங்க.. அவங்க எல்லாம் அஷோக்-ன்னு தெரியாமலா இருக்காங்க? அது மாதிரி தான் நீயும் கூப்பிடுரனு நினைச்சேன்.. இத்தன மாசத்தில ஒரு தரம் கூட நீ என்னை அங்க பாக்கலையா? உன்ன பாக்க தானே என் ஃப்லோர்ல மீட்டிங் வைக்காம அங்க வந்து போனேன்.. சரி விடு.. நம்ம ஆஃபீஸ் மேகசின்ல கூடவா நீ என்னை பார்க்கல? ஏன் போன மாசம் பிஸினஸ் மேகசின்ல கவர் பேஜ்ல நான் தானே இருந்தேன். நான் எப்படி உன் கிட்ட இவ்வளவு பெரிய விஷயத்த மறைக்க முடியும்? நான் எதுக்கு டா உன் கிட்ட மறைக்கணும்? காரணமே இல்லாம?  இதுல என் தப்பு எங்க இருந்து வந்துது?”
சுதாவிற்கு இன்னுமே அவமானமாய் போக.. தனக்கு தான் ஒன்று தெரியவில்லையோ.. அவ்வளவு மக்கா நான்’ என்ற எண்ணம் வேறு! எல்லாம் இவனால் தான்.. இவன் தான் சொல்லி இருக்க வேண்டும் என்று மீண்டும் அவன் மேல் பாய்ந்தாள்.
“ஆமா உங்க மேல தப்பே இல்ல.. என்னை வச்சு குடும்பம் நடத்தணும்னு ஏதாவது ப்ளான் இருந்தா தானே இதெல்லாம் சொல்லணும்.. உங்களுக்குத் தான் அந்த ஐடியாவே இல்லியே.. அப்பறம் எப்படி சொல்லுவீங்க?”
“திரும்பவும் முதல்ல இருந்தே ஆரம்பிக்காத! நான் தான் வேலை முடிஞ்சு வந்ததும் கல்யாண பேச்ச ஆரம்பிக்கலாம்னு சொன்னேனே.. அப்பறம் என்ன?”
கோபம் மூளைக்கு விடுமுறை கொடுக்க, “அன்னைக்கு அம்மாட்ட சொல்ல வேண்டாமானு கேட்டதுக்கு என்ன சொன்னீங்க? அத பத்தி மூச்சு கூட விட கூடாதுனு! ஆஃப்பீஸ்ல சொன்னாங்க.. கொஞ்சம் மாசம் முன்னாடி இதே மாதரி பார்ட்டில அவ குடிச்சாளாம் நீங்க ரூமுக்கு தூக்கிட்டு போனீங்களாம்.. அது மட்டுமா.. வீட்டுக்கெல்லாம் வருவாளாமே.. அவள தான் கல்யாணம் பண்ணப் போராத பேசிக்கராங்க! அப்போ ஊரரிய அவ, சீக்ரட்டா நானா?”
அவன் முகம் சிவக்க, “ஸ்டாப் இட் சுதா.. ஜஸ்ட் ஸ்டாப் இட்.. இப்போ இதையே வேற யாராவது சொல்லி இருந்தாங்க….” கண்மூடி பல்லைக் கடித்து கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தவன், “நீயா போய்ட.. பேசாம விடுறேன். போ தண்ணிக் குடிச்சுட்டு உள்ள போய் படு.. நாளைக்குப் பொறுமையா யோசி..”
ஏனோ வீம்பு வந்து ஒட்டிக்கொண்டது, “நான் இங்க தூங்கணும்.. நீங்க அவ கூட கிளம்பிடுவீங்க.. நாளைக்கு நான் எதை யோசிக்கணும்.. எதை? நான் எவன் கூட போரதுனா?”
“ஏயேயேயே..ய்.. மூடு வாய!”
முழு கோபத்தோடு அருகிலிருந்த பூ ஜாடியை அடிக்க, அது சென்றது சுவரை நோக்கி. 55” சோனி தொலைக்காட்சி பெட்டி, இவர்கள் சண்டையில் உயிர் தியாகம் செய்திருக்க அது அவர்கள் இருவரையும் பாதிக்கவில்லை.
“நான் ஏதாவது சொன்னா மட்டும் கோபம் வருது.. எப்பவும் எதையாது தூக்கிப் போட்டு உடைக்க வேண்டியது. உங்கள அப்படி ஒருத்தி கூட பார்த்தா எனக்குக் கோபம் வர கூடாதா? எதுக்கு அத உடச்சீங்க.. என்ன அடிச்சு சாகடிக்க வேண்டியது தானே.. இப்படி குடிச்சுட்டு கண்டவளோட கும்மாளம் போடுற  கன்ராவி எல்லாம் பார்க்க வேண்டாமே..”
அவள் போய் சோஃபாவில் தொப்பென்று அமரவும், அவனுக்குத் தெரியவில்லை.. அடுத்து என்ன செய்ய வேண்டும்? இது போல் சண்டை எல்லாம் அவன் தான் பார்த்ததே இல்லையே.. எங்கிருந்து எங்கெல்லாமோ வார்த்தைகள் செல்வதை உணர்ந்தான்.. அவள் ஏன் இப்படி எல்லா வார்த்தைக்கும் குற்றம் கற்பிக்கின்றாள் ஒன்றுமே அவனுக்குப் புரியவில்லை.
அவள் அருகில் அமர்ந்தவன் இழுத்து பிடித்த பொறுமையோடு, “நான் கிளம்பணும் சுதா.. இப்போ எதுக்கு இந்த தேவையில்லாதா சண்டை.. வேண்டாமே..”
அதற்கும் கோபித்துக் கொண்டாள்.. “என்னை விட உங்களுக்கு எல்லாமே தான் முக்கியம்? பார்ட்டி.. குடி.. எந்நேரமும் ஒரு மீட்டிங்.. வேலை.. ஏன் இந்த ஒரு தரம் எனக்காக அத விட்டா தான் என்ன?”
அதற்கும் பொறுமையாய் விளக்கம் கூறத் தான் செய்தான்.. அவள் காது கேட்கவில்லை.
“லட்டு.. எதுக்கெடுத்தாலும் கோவிச்சுக்காத.. குடும்பத்துக்கு ஆகது..” கூறிக்கொண்டே அவள் கையை பிடிக்க, அவன் கையை உதறிவிட்டு, “அவளைத் தொட்ட கையால என்னை தொடாதீங்க!”
“என்ன டி படுத்துர? கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டியா? அவ கூட என்னை பேசர.. ச்ச..” அவன் சலித்துக் கொள்ள… அறையில் மௌனம்.
நேரம் ஆகிக்கொண்டே போக அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பயணத்தையும் தள்ளிப் போட முடியாது.. இவளையும் விட முடியாது. தலை வலி வந்துவிடும் போலிருக்கச் சுதாவை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும், “சுதா..” என்று அவள் தோளைச் சுற்றி கைபோட, அவள் மூளையில் கோளார் பிடித்துக் கொண்டது.
சட்டென எழுந்தவள், “எப்பவும் எவளாவது வேணும் இல்ல.. உரசிகிட்டே இருக்க..”
அவனும் முழு கோபத்தோடு எழுந்து கொண்டே, “என்ன பேச்சிது.. யார்ட்ட பேசரன்னு பார்த்துப் பேசு! ஒரு தேர்ட் ரேட் பொறுக்கிட்ட பேசர மாதிரி என் கிட்ட பேசர?”
வெறுத்தே போனது…
“என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு சுதா! ரொம்ப பேசிட்ட. இன்னும் ஒரு வார்த்த.. ஒரு வார்த்த பேசக் கூடாது. உள்ள போய் படு. நாளைக்கு எழுந்து வீட்டுக்கு போ.. நான் கிளம்பறேன் எனக்கு வேலை இருக்கு!” அப்படி ஒரு அதட்டலை அவனிடம் இது வரை அவள் பார்த்ததில்லை.
கூறிவிட்டு அவன் அணிந்திருந்த ஜேக்கட்டை கழட்டி சோஃபாவில் வீசிவிட்டு பாத்ரூமுள் சென்று ஷவர் அடியில் நின்றுவிட, அவள் எதுவும் யோசிக்காமல், தொடுவதற்கே அவ்வளவு மிருதுவாயிருந்த  அந்த ‘டால்ஷே’ ஜேக்கட்டை தயவு தாட்சணியமே இல்லாமல் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டே வாசலை நோக்கி நகர்ந்தாள். 
‘நீ என்ன என்னை விட்டுப் போவது.. நான் போகிறேன்’ என்று நினைத்தாளோ? நமக்கு பிடித்த ஒருவர் நம்மை விட்டு செல்லும் முன் நாம் முந்திக் கொள்வதில் ஒரு நிம்பதி போலும்.
நீரில் மூழ்கியிருந்தவன் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தான். வரவேற்பறையில் அவளில்லை. படுத்திருப்பாள் என்று எண்ணிக்கொண்டான். ஹாலில் இருந்த பெட்டியிலிருந்து அங்கேயே உடைமாற்றவும், அவன் அறை தொலைப்பேசி அலற ஆரம்பித்தது. அதை எடுக்க, ரிஷப்ஷனிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அவனுக்காக இருவர் அங்குக் காத்திருப்பதாய்!
‘இது என்ன சத்திய சோதனை..? ஏற்கனவே லேட்.. ஒரு நாளைக்கு பத்தாதா?’ ஏகப் பட்ட அலுவலக வேலைகளில் பல நாட்களாகவே. ஒழுகான தூக்கமில்லை. இப்பொழுது உடலோடு உள்ளமும் அலுத்துப் போய்விடப் படுக்க வேண்டும் போலவே இருந்தது.
இந்த நேரத்தில யாருடா அது?’ அலுப்போடு நடந்து வந்துகொண்டிருந்தவன் பார்வை அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்த்திருந்த சுதா மேல் விழுந்தது. அங்கேயே உறைந்து நின்றுவிட்டான். அவள் அறையில் தூங்கிக் கொண்டிருப்பதாய் நினைத்திருந்தவனுக்கு அவளை இங்கே கண்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘இரண்டாம் நபர் யார்’ என்பதன் விடை அவள் அருகிலேயே இருந்தது.
அவள் அருகிலிருந்த சோஃபாவில் புதியவன்(ராகுல்) அவ்வப்போது அவளிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு அசதி. அவளோ கர்ம சிரத்தையாய் அவள் மடியிலிருந்த கை நகத்தை அழுத்திச் சுரண்டிக் கொண்டிருந்தாள்.
ராகுலாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தோடு அஷோக்கின் கைப்பேசி புதியவனை ‘க்ளிக்’ செய்து கொண்டது.
சுதாவின் முன் நிழல் தெரியவும் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிய, ‘மொதல்ல இருந்தா?’ என்றாகிவிட்டது அவனுக்கு.
இடது கையால் நெற்றியை அழுத்தி தேய்த்துக்கொண்டே அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில், “போதும் சுதா வா போலாம்.. என்னால முடியல ரொம்ப டையர்டா இருக்கு..” எனவும்
“இருக்கும் ஏன் இருக்காது..” அவளும் சத்தமெல்லாம் போடவில்லை. ஆனால் குரலில் பிடிவாதம் குறையவில்லை.
“ப்ச்.. வானு சொன்னேன்..”
“முடியாது..”
“எதுக்கு அடம் பிடிக்கரனு கூட தெரியாம என்னால உன்ன கட்டிகிட்டு அழ முடியாது சுதா.. வான்னா வார மாட்டியா? ரொம்ப படுத்தின.. போடினு போய்ட்டே இருப்பேன்!”
“போங்க.. அது தானே உங்க ப்ளான்.. கிளம்புங்க.. என்னை விட்டுடுங்க! மொத்தமா”
“என்ன உளரிட்டே இருக்க.. ஃபார் தி ஹன்ரட்த் டைம்.. எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு வா போலாம்” இந்த முறை சற்று கடினமாய் பேச..
“என் பர்ஸ் உங்க ரூம்ல இருக்கு, அத குடுங்க.. நான் ராகுலோட போறேன்”
‘இவனோடா?’ என்பது போல பார்த்தவன், சலிப்போடு “அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்.. சீன் க்ரியேட் பண்ணாம வா… சுதா..”
அஷோக்கை பார்த்துக்கொண்டே, நிதானமாய், “நானா? நானா சீன் க்ரியேட் பண்றேன்? நீங்க ரெண்டு பேரும் க்ரியேட் பண்ணின சீன் கொஞ்ச நேரத்தில நியூஸ்லயே வந்திடும்… ஏன் என்னை ரூம்க்கு கூட்டிட்டு போய் என்ன பண்ண போறீங்க? தூங்க சொல்லிட்டு அவ கூட கிளம்பத் தானே போறீங்க.. போங்க.. வாரம் என்ன? மாசக் கணக்கா போங்க? யார் வேண்டாம் சொன்னது.. ஆனா என்னை விட்டுடுங்க!”
பெருமூச்சை விட்டவன், “என்னை பாடா படுதர சுதா நீ.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்க ட்ரை பண்ண மாடேங்கர.. அவள வேலைக்கே வராதனு சொல்லிடேன் டி.. அவள யார் கூட கூட்டிட்டு போறா? மூர்த்தி மட்டும் தான் வரார். நான் யார்னு உனக்குத் தெரியாதா?”
“இப்போ தானே சொன்னேன்.. தெரியாதுனு! என்ன தான் தெரியும் உங்களைப் பத்தி எனக்கு?”
“அவ்வளவு தான் நீ என்னை புரிஞ்சுகிட்டதா?”
“நான் உங்களை நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.. என்ன விட்டுடுங்க!”
“அப்படி எல்லாம் விட முடியாது.. நீ என் பொண்டாட்டி..” ஸ்திரமாய் அவன் சொல்ல
“ஆமா பெரிய பொண்டாட்டி.. தாலி கெட்டாத பொண்டாட்டி.. நீங்க மாடும் தான் சொல்லிகணும்! பாட்டி சொன்னாங்க உங்க அப்பா பத்தி.. அதே ரத்தம் தானே உங்களுக்கும்.. அது தான் ஊருக்கெல்லாம் பொண்டாட்டின்னு சொல்லிக்க ஒருத்தி.. மத்ததுக்கு..நானா..” அவன் முகத்தை பார்த்து அதற்கு மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பேச்சு அதன் போக்கில் எல்லை தாண்டி விட..
ஒரு வழியாய் மழை பெய்து ஓய்ந்தது. கடைசியாய் வாயைப் பசை போட்டு ஒட்டிக் கொண்டாள்.  
அவன் கண்ணில் அப்படி ஒரு வேதனை.. ஆயுசுக்கும் அவளால் இந்த பார்வையை மறக்க முடியுமா?
அவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை, “நீ என்னையும் புரிஞ்சுக்கல என் அன்பையும் புரிஞ்சுக்கல.. இதுக்கு நீ என்னை கொன்னு போட்டிருக்கலாம்”
கூறியவன் சென்றுவிட்டான் அவள் தான் அசையவில்லை. கோபம் ஒரு வழியாய் வடிந்தது. கற்சிலை போல நின்றுவிட்டாள். என்ன வார்த்தை பேசிவிட்டேன்.. நானா இப்படிப் பேசியது? அவரின் இதயத்தைக் காயப்படுத்தி என்ன சாதித்தேன்? எதற்கு இந்த பாழாய்ப்போன சண்டை? அவளுக்கே அவளைப் பார்த்து வெறுப்பாய் போனது.
புண்படுத்தியது என்னவோ அவனை.. புண்பட்டு வலித்தது அவளுக்கும் தான்! எதற்கு இந்த சண்டை? ஒரு சண்டை முடிந்து இரண்டு நாட்கள் முடியவில்லை. மீண்டுமா? ஏன்? அதுவும் தெரியவில்லை.
அவன் மேல் துளி கூட சந்தேகமில்லை. அவளை விட அவனைத் தான் நேசித்தாள். விஷயங்கள் சில அவளுக்குத் தெரியாமல் போனதற்கா? இல்லை அவன் கையில் வேறொருத்தியை பார்த்ததுக்கா? அவளை விட்டு அவன் வாரக் கணக்காய் பிரிய போகிறானே.. அந்த பிரிவின் வலி.. அதற்கா? எதற்கு இந்த சண்டை? எல்லாவற்றிற்கும்  சேர்த்தா? தேவையே இல்லாமல் யார் சண்டை போடுவார்கள்?
‘என்னால் அவனோடு சேர்ந்து வாழ முடியவே முடியாதா? காதல் சொல்ல வேண்டும் என்று நினைத்த நாள் முதலே இது தான் நடக்கிறது.. இருவருக்கும் நிம்மதி தொலைந்த நாளே அது தானே..’
சிறிது நேரத்தில் அவள் கைப்பையை அங்குள்ள பணியாள் அவள் வசம் சேர்த்தான்.
அங்கேயே அமர்ந்திருந்தாள். இது சரி படாது என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிட்டது. மாற்றி மாற்றி ஏன் என்றே இல்லாமல் எதற்கும் சண்டை போல் தோன்ற.. இருவர் வாழ்வும் ஒன்றாய் இருந்தால் சுகிக்காதோ என்ற சந்தேகம் மலையாய் அவள் முன்.
‘இருவருக்கும் நிம்மதி போய்.. என்ன காதல் இது? ஒருவர் உணர்வை மற்றவர் காயப் படுத்துவது எப்படி காதலாகும்? அவளும் ராகுலும், அவளும் கார்த்தியும் சண்டை இட்டுக் கொண்டதே இல்லையே.. அம்மா அப்பா சண்டை இட்டதே இல்லையே. ஏன்.. அத்தை மாமா கூட சண்டையிட்டதே இல்லையே. இது என்ன..?
என் நிம்மதியும் போய் அவன் நிம்மதியும் போய்..? பிரிந்தால்.. பேசாமல், பார்க்காமல் தள்ளியிருந்தால்.. எல்லாம் சரி ஆகிவிடுமோ?
தாலி கட்டு என்று அவனைப் பிடுங்குவது… எனக்காக நேரம் ஏன் ஒதுக்கவில்லை என்று படுத்துவது.. ஏன் என்னிடம் விஷயத்தை மறைத்தாய் என்று பேய் போல் அவன் மேல் பாய்வது.. சந்தேகமே இல்லாத போதும் சந்தேக படுவது போலவே பேசி அவனைக் காயப் படுத்துவது.. ஏன்? இதுவா நான்? என் தன்மை எல்லாம் மாறி அவனைப் பாடாய்ப் படுத்த தான் அவனைக் காதல் என்ற பெயரில் கொன்று கொண்டிருக்கின்றேனா.. எங்களுக்குள் காதல் இருந்தால் இப்படி எல்லாம் சண்டை வராதோ? ஒன்றாய் வாழ முடியாதோ?’
அவளுக்குத் தெரியவில்லை.. உரிமை சண்டை, வலியில் சண்டை, கோப சண்டை, இயலாமையில் சண்டை, காரணமில்லா சண்டை என்ற சண்டைகள் கணவனோடு மட்டும் தான் என்று!
காதலனாய் உணரும் வரை தான் அவன் முன் நாணி கோணி அவனுக்குத் தலை ஆட்டுவதெல்லாம்.. கணவன் என்ற உரிமை வந்ததும் அவனை ஒருவழியாக்குவது, ‘பார்ட் ஆஃப் தி பேக்கேஜ்’ என்று அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
காதல் மணமாகி ஆறு மாதம் முடிந்தவரைக் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்.. ‘அரசியலில்’ இதெல்லாம் சகஜம் என்று!! பெற்றவர்கள், பிள்ளைகள் முன் சண்டை போடுவதில்லை என்று!
எல்லா தம்பதிகளாலும் உடனே ஒருமித்த சிந்தனையோடு வாழ இயலாதென்று!
சண்டை இல்லா இல்லற வாழ்க்கை இல்லை என்று!
மாதவிடாய் முன்னும் பின்னும் இப்படி தான் பாதி பெண்களும் காரணமே இல்லாமல் முட்டாள் போல் சண்டை இடுவர் என்று!
இப்படி “பல என்று”கள் அவளுக்குத் தெரியாமல் போகவே ரிசெப்ஷன் வழி வெளியே சென்று கொண்டிருந்த அஷோக்கின் அருகில் சென்றவள், அவசர அவசரமாக அவள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள விருப்பம் கொண்டு, அவனிடம் பிரிவை உரைத்துவிட்டாள்.
சென்று கொண்டிருந்தவனும் அவளை வெற்று பார்வை பார்த்து “உன் இஷ்டம்” என்று சென்றுவிட்டான். அவன் தலை மறையும் வரை பார்த்து நின்றாள். ஏனோ அழுகை எல்லாம் வரவில்லை. மீண்டும் கோபம் கோபமாய் வந்தது. “போகாதே.. இல்லை என்னையும் கூட்டி செல்” என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
“வேண்டாம் என்றால் விலகி விடுவானா?” தொண்டையை அடைத்தது. காதலின் சித்திரவதை வலி.. எங்கென்றே தெரியாமல், எங்கெல்லாமோ வலித்தது. நெஞ்சு கனத்தது. ஏற்கவே இருந்த வயிற்று வலி அதிகமானது. “என்ன தான் எனக்கு பிரச்சினை?” “தெரியவில்லை!” கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டாள்.
“வீல்”லென்ற குழந்தை சத்திற்கு உணர்வு பெற்றவள் குழந்தையை மீராவிடம் கோடுத்துவிட்டு அறைக்கு சென்றவள் படுக்கையில் விழுந்தாள். அது வரை அடக்கி வைத்த கண்ணீர் ஊற்றாய் கொட்டத் தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள். அஷோக் சென்றதிலிருந்து இன்னும் அவளிடம் பேசவில்லை. அவளும் தான்! தாங்கவே முடியவில்லை அவன் பிரிவை. அதற்குத் தான் சண்டையிட்டாளோ.. ஆறு வாரங்களுக்குப் பயந்து ஆயுசையும் தனியாய் கழிக்க வகை தேடிக்கொண்டாளோ?
‘என்னை விட்டு விடு’ என்று கேட்டாள் தான்.. இப்பொழுது அவன் விட்டு விட்டானோ என்று தோன்ற தொண்டைக் குழி முதல் அடி வயரு வரை இழுத்துப் பிடித்து அதிகமாய் வலித்தது. ‘சொன்னால் போய்விடுவானா?’ இன்னும் இன்னும் அழுகை வந்தது. கோபமெல்லாம் கண்ணீரில் கரைந்தது. ஊரில் இருக்கும் எல்லோரிடமும் இருந்து அழுகையை குத்தகைக்கு எடுத்து கொண்டாள்.
‘அப்படி எல்லாம் என்னை விட மாட்டான்.. அவன் தான் என்னை மனைவி என்றானே.. அவன் என்ன சொல்லுவது நான் தான்.. நான் மட்டும் தான் அவனுக்கு.. போக மாட்டான்..’ சமாதானம் கூறிக் கொண்டாள். 
‘முட்டாள் பெண்ணே உனக்கு என்று ஒன்றும் நிலைக்கவில்லை.. கடைசி வரை இருப்பேன் என்றவனோடு இருக்க உனக்குக் கொடுத்து வைக்கவில்லை’ அவள் பிம்பம் அவளைப் பார்த்துச் சிரித்தது. ‘அமைந்த வாழ்கையை வாழக் கூட எனக்கு தெரியவில்லையே’ என்ற கழிவிரக்கம் சேர்ந்து கொண்டது.
அடுத்த இரண்டு நாள் இப்படி தான் கழித்தாள். யோசனையும் கண்ணீருமாய்! 
அன்று இரவு இடியாய், பாட்டியிடமிருந்து அழைப்பு வந்தது. “உடனே வா” என்ற கட்டளையைத் தாங்கி. அப்படி என்னதான் உயிர் போகும் அவசரமோ அவருக்கு?!
ஏதோ போல் அமர்ந்திருந்தவள் மடியில் அனுவை வைத்துவிட்டு, மீரா அவள் தலை வருட, மீரா தோளில் சாய்ந்துகொண்டாள்.
அனுவின் கன்னம் வருட குழந்தை, பால் தர போகிறாள் என்று எண்ணி வாயை வாயைத் திறந்து சுதாவின் விரலை இதழ் கொண்டு தேய்த்துச் சூப்பவும்.. ஒரு அலாதி ஆனந்தம் சுதா மனதில். “குட்டி செல்லத்திக்கு பசிக்குதா? நீங்க என் கூட எப்போ விளையாடுவீங்க?” கொஞ்சலாய் அவள் பேச..
குழந்தை அவள் விரல் பிடித்து சத்தம் செய்தது. அவளுக்குச் சுற்றம் மறந்தது.
அன்று இரவு மீராவுடன் நேரத்தைச் செலவிட்டாள். அவளோடு பேசப் பேச ஒரு தெளிவு.
தன் வாழ்வு போகும் திசை சரி தானா? எடுத்த முடிவுகள் சரி தானா? காட்டாற்றிற்குள் மூழ்கப் பயந்து உதவ நினைத்தவனை மூழ்கடிக்கின்றேனா? ஏன் எதற்கு என்று இல்லாமலே குழம்பி இருக்கிறாள் என்பதில் ஒரு தெளிவு. கோபம் வருத்தம் எல்லாம் அதன் வெளிப்பாடு. குழப்பத்தை நீக்கவெல்லாம் முயற்சிக்கவில்லை. அதையே யோசித்து ஒரு பயணும் இல்லை. பிரச்சைனையை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றால் தானாய் அதுவே சரியாகி விடும்.. இல்லை அதைக் கையாள ஒரு பக்குவம் கிடைக்கும்.
அவள் மனதை வாட்டிய எல்லா உணர்வுகளையும் களைந்து தள்ளினாள். முகம் கழுவி வந்தவள் முகத்தில் ஒரு தெளிவு!
‘சோதனை யாருக்கு தான் வருவதில்லை..  யாருக்காகவும் எப்பொழுதும் நல்லவளாய் இருந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. கோபம் வந்தது திட்டி தீர்த்தேன்.. அழுகை வந்தது அழுது முடித்தேன்.. பாட்டி உருவில் தொல்லை வந்தால் என்ன? அது யார் உருவில் வந்தால் என்ன? அதையும் சமாளிப்பேன்!’ உள்ளுக்குள் வந்த சூராவெளி எல்லாம் அடங்கியது. அவரவர் வாழ்வு அவரவர் கையில்..

Advertisement