Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 33
 
கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி.
அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கெடுத்து கொள்வாளோவென்று.
கார்த்திக் ‘இவன் தான் அவன்’ என்ற நிஜத்தை அறிந்திருக்கவில்லை. அவளை டேனி வீட்டில் விட்டுச் செல்லும் பொழுது, “இது தான் குட்டிமா உன் வாழ்க்கை. நல்லபடியா வாழு. எதையும் யார் கிட்டையும் சொல்லிட்டு இருக்காத. உன் புருஷன் நல்லவனாகவே இருந்தாலும் பழசை எல்லாம் சொல்லணும்னு அவசியம் இல்ல. நீ சந்தோஷமா இருந்தா தான் உன்ன சுத்தி இருக்கவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. டேனியல் ரொம்ப நல்ல டைப்பா இருக்கார். பார்த்து இருந்ததுக்கோ ராணி!” என்று கூறி சென்றாலும் உள்ளுக்குள் பயமே. பேச்சாலோ செய்கையாலோ வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளக் கூடாதே என்று.
அன்று கார்த்தி பேசிக் கொண்டிருக்க டேனி வீட்டார் அவர்கள் இருந்த இடத்திற்கு வரவும் அந்த பேச்சு அதோடு நின்றுவிட்டது.
சென்னைக்கு அவன் கிளம்பும் சமயம் மீண்டும் அவளைப் பார்த்து, “சந்தோஷமா இருக்கத் தானே..” என்று அவன் கேட்கவும், புன்முறுவலுடன், “எப்பிடி இருக்கேன்.. நீயே பார்த்து சொல்லு” என்று பெரிதாய் முகம் மலர்ந்தாள்.
இப்பொழுது அவன் வருகிறான். அண்ணனுக்கு அவள் உண்டான விஷயம் தெரியும் முன், டேனி தான் அவள் உள்ளம் கவர்ந்தவன் என்ற விஷயத்தை கூற வேண்டும் என்றிருந்தது. ஏனோ அண்ணன் ‘இவள் இதயத்தில் ஒருவனுக்கு இடம் கொடுத்து இன்று வேரொவனிடம் மனம் ஒன்றாமல் வாழ்கிறாள்’ என்று நினைத்திருப்பதில் விருப்பமில்லை. உண்மை தெரிந்தால் அவனுக்கும் நிம்மதி தானே.
கார்த்திக் வந்து குளித்ததும் அவனுக்கு காபியும் அவளுக்கு ஒரு கப்பில் சத்துமாவு கஞ்சியுமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்.
“என்ன குட்டிமா.. இந்த கன்ராவி எல்லாம் குடிக்கர? உன் கால்ல விழுந்தா கூட குடிக்க மாட்ட? என்ன உன் வீட்டில பழக்கி விட்டுடாங்களா?”
அவனைப் பார்த்து புன்முறுவலைப் பதிலாகக் கொடுத்தவள், “வா நம்ம உக்காரலாம்.”
இருவரும் மொட்டை மாடி மதில் சுவற்றில் அமர்ந்து கொண்டு சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே காபி அருந்துவது இருவருக்கும் பிடித்த விஷயம். அவர்கள் சங்கடங்களையும் சுகங்களையும் அம்மா அப்பாவிற்குச் சொல்லாதா ரகசியங்களையும் இங்கு தான் பரிமாறிக் கொள்வர்.
“என்ன படியிலையே உக்காந்துட்ட? எங்கே உன் வீரம்?”
“மேல வேண்டாண்ணா.. விழுந்தா பிரச்சினை”
“என் உடன் பிறப்பா பேசுகிறது…? குட்டிமா…!! என்ன ஆச்சு…? கல்யாணம் ஆனதும் நல்ல குடும்ப ஸ்திரி பெட்டி ஆகிட்ட.. குட் குட்..” ஏதோ பேசினாலும் தங்கையின் மாற்றம் அவனுக்குள் சின்ன நெருடலைக் கொடுத்தது.
அவள் பார்வையை உணர்ந்தவள், “காபி குடி” என்று அவன் தோள் சாய்ந்து சூரியன் வரவைப் பார்த்துக்கொண்டே அவள் கையிலிருந்த கஞ்சியை காலி செய்தாள்.
“கார்த்தி..”
“ம்ம்”
“நான் ரொம்ப ஹாப்பியா இருகேன்ணா.. தங்க்ஸ்ணா..” என்று அவன் முகம் பார்க்க அவன் கண்கள் மகிழ்ச்சியில் நீர் கோர்க்க
“இதுக்கே அழாத.. இன்னும் இருக்கு.. எல்லாத்தையும் கேட்டுட்டு ஒன்னா விடு உன் ஆனந்த கண்ணீர!”
அவள் தலை வலிக்காமல் செல்லமாய் தட்டி, “சொல்லு பெரியமனுஷி.. ஆனந்தக் கண்ணீர் விடுரதா இரத்த கண்ணீர் விடுரதானு நான் டிசைட் பண்றேன்”
“நான் ஒருத்தரை விரும்பரேன் அதுனால எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்ல்ல..”
“இப்போ எதுக்கு ராணி அத பத்தி பேசர..” குரலில் அலுப்பு தட்ட
“நடுவுல பேசாதண்ணா..”
“..” பெருமூச்சு விட்டு வானத்தை வெறித்தான்.
“டேனி தான்ணா… அவர்”
அவன் முகத்தில் அப்படி ஒரு மாற்றம். உதடு தானாய் புன்னகை பூச.. “நிஜமா? வாவ்.. சூப்பர்.. எப்படி குட்டிமா?”
அவளுக்குத் தெரிந்த விபரம் எல்லாம் சொல்லி முடிக்க, “உன் ஆளு அவ்வளவு பெரியா ஆளா? ப்ளான் போட்டு உன்னையே கல்யாணம் பண்ணிகிட்டார்.. என்ட்ட அவ்வளவு நல்லா பேசினார்.. மூச்சு விடல உன்ன பத்தி. சூப்பர் போ..”
கார்த்திக்கிற்கு அப்படி ஒரு நிம்மதி மனதில். தங்கை விருப்பப்பட்ட வாழ்வையே வாழ்கிறாள் என்று.
“…”
“நல்ல மனுஷன்.. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்ல. அவங்க வீட்டுல எல்லாரும் எப்பிடி?”
“எல்லாரும் ரொம்ப நல்ல மாதரிண்ணா.. சௌண்டா கூட பேச மாட்டேன்றாங்க. எல்லாருக்கும் அவர்னா ரொம்பப் பிடிக்குதா.. அதனால என்னையும் ரொம்பவே நல்லா ட்ரீட் பண்றாங்க.. அதுலையும் இந்த அனி குட்டி ஏதோ தெய்வத்த பாக்கர மாதரி தான் என்னை பாக்கரா.. எனக்கு அவங்க எல்லோரையுமே ரொம்ப பிடிச்சிருக்குண்ணா..”
“அவங்க வீட்டுல இவர் மட்டும் செம ஸ்மார்ட் இல்ல.. மத்த மூணு பேரும் பாக்க சுமார் தான்… அவங்க எல்லாரும் கொஞ்சம் உயரம் கம்மி.. இவர் மட்டும் நல்ல வளத்தி.. கலரும் அப்படி தான்..”
“ம்ம்.. ஆமாண்ணா.. பாக்க தான் அப்பிடி… ஆனா நாலு பேரும் பழக ஒரே மாதரி.. ரொம்ப பாசமான குடும்பம்.. நீயும் ஒரு ரெண்டு நாள் அங்க இருந்தேனு வை… உன்னையும் அவர பாத்துக்கர மாதரியே பாத்துப்பாங்க! அவர் மேல அவங்களுக்கு ஏனோ அவ்வளவு பிரியம்.. அவருக்கு பிடிச்சா.. உடனே அவங்க எல்லோருக்கும் அது பிடிச்சுடும்.”
“எனக்கு அத்தானை முதல் தரம் ஃபோட்டோல பார்த்ததுமே ரொம்ப பிடிசிடுச்சு. இவர் தான் உனக்குனு மனசில உடனே தோணிடுச்சு.. ஏனு தெரியல அவர நேர்ல பார்த்ததும் ரொம்ப தெரிஞ்ச, பழகின முகம் மாதரி ஒரு ஃபீல்.. யோசிச்சு யோசிச்சு பார்த்தாலும் ஸ்ரைக் ஆக மாட்டேங்குது..”
பேச்சு அதன் போக்கில் போக.. அவள் சொல்ல வந்த விஷயம் இன்னும் சொல்லவில்லையே..
“ண்ணா..”
“ம்ம்..?”
“சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல விடேன்..” அவள் சலிப்பாய் கூற
“இன்னும் என்ன?” இந்த முறை அவன் கண்ணும் சிரித்துக்கொண்டிருந்தது
“அது .. அது வந்து..” முகம் தன்னால் நிறம் மாற ஆரம்பிக்க, “நான்.. நம்ம வீட்டுக்கு உன்ன மாமானு கூப்பிட பேபி வரப்போகுது….” வார்த்தைகளைத் தேடி அவள் சொல்லவும், அது அவன் காதில் சென்று சேருமுன் அடுத்த நொடி
“ராணி.. மாப்பிள்ளை ஃபோன்ல..” என்ற அம்மாவின் சத்திற்குச் சட்டென்று எழும்ப.. கால் புடவையில் சிக்கி கால் பிரண்டு விழப் போனவளை ஒரே தாவில் வயிற்றைச் சுற்றி கார்த்தி இழுத்துப் பிடித்து விட்டாலும், “அண்ணா…” என்று அலறிய சத்தம் கைப்பேசியோடு வந்த அம்மாவை மட்டுமல்ல அவள் கணவனையும் சென்று சேர்ந்தது.
“என்ன ஆச்சு ராணி..” அம்மா அருகில் ஓடி வர
அண்ணனிடம் ஒட்டிக் கொண்டவள், “அண்ணா.. தாங்க முடியலண்ணா.. வலிக்குதுணா..” என்று அழ ஆரம்பித்தாள்.
நிற்கமுடியாமல் நின்றவளை அவன் கையில் ஏந்த, “டேய் வயத்துல பிள்ளை இருக்கு டா.. பார்த்து..” என்ற அம்மாவின் கூற்றில் நின்றே விட்டான்.
அவள் கூறிய இனிய சொற்களை அவன் கிரகிக்கும்முன் அவள் விழப் போக, அம்மா சொன்ன பிறகு தான் அறிவுக்கு எட்டியது! ‘என் தங்கை வயிற்றில் பிள்ளையா? நான் மாமாவா?’
அவள் முக வாடலுக்கே கரையும் அண்ணன் இப்பொழுது ‘எதற்கு அழுகிறாள்.. என்ன வலிகிறது? பிள்ளைக்கு எதுவும் ஆகவில்லையே.. ஐய்யோ.. வயிற்றை நசுக்கி விட்டுவிட்டேனோ..’ மனம் கனக்க அவன் கண்ணிலும் கண்ணீர் எட்டிப் பார்க்க, கண்ணை மூடி நிமிடத்தில் சுதாரித்து அவளைக் கீழே தூக்கி வந்து, வராண்டாவிலிருந்த மூங்கில் சோஃபாவில் அமரவைத்தான்.
அவள் கார்த்தியின் கையை விடவில்லை, “அண்ணா.. கால் வலிக்குது ண்ணா.. உடஞ்சு போன மாதிரி வலிகுது ண்ணா..” என்று தேம்ப
“எந்த காலு?” என்றவனுக்குக் குரல் எழும்பவில்லை
பட்ட கால் தானே மீண்டும் மீண்டும் படும்! சோஃபாவில் காலை நீட்டி அமரவைத்தான்.
“அம்மா.. கார் சாவி எடுங்க.. அப்பாவ வர சொலுங்க..” என்றவனுக்குக் கோபம் ஒரு பக்கம்,
“அப்படி என்ன உனக்கு அவசரம்? பொறுமையா எழுந்திருக்க மாட்டியா? உன்ன தான் இந்த கன்ராவி புடவையைக் கெட்ட வேண்டாம்னு எத்தன தரம் சொல்லி இருக்கேன்?
‘பக்கத்தில தானே இருந்த.. என் பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்லையானு’ அத்தான் கேட்டா எங்க கொண்டு என் முகத்த வைப்பேன்…
அம்மா ஒரு சாவி எடுக்க இவ்வளவு நேரமா.. வலியில் அழுரா மா.. சட்டுனு வரிங்களா?” இயலாமையில் ஏகத்திற்கும் கத்திக் கொண்டிருந்தான்.
இவை எல்லாவற்றிற்கும் நடுவில் அவள் தலையை அவன் இடையோடு சேர்த்து அணைத்தே வைத்திருந்தான்.  
அம்மா கதவைப் பூட்ட, அப்பா காரை எடுக்கச் செல்ல, 
“ரொம்ப வலிக்குதா குட்டிமா.. இதோ டாக்டர பாக்க போலாம்..” என அவள் தலையை வருடி, மீண்டும் அவளைக் கையில் ஏந்தவும் தான் பார்த்தான் டேனி வீடியோ காலில் இருப்பதை. பதட்டத்தில் அருகிலிருந்த நாற்காலியில் அம்மா ஃபோனை வைத்துவிட்டு, மறந்து சென்றிருந்தார்.
டேனியின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அதில் அத்தனை வலி! அவள் அழுகுரல் அவனுக்குத் தான் நன்கு கேட்கிறதே! அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. அவன் மனைவி அழுவதைக் கேட்கப் பிடிக்காவிட்டாலும் அதை மட்டுமே கேட்க முடிந்தது.
“அம்மா.. அத்தான் ஃபோன்ல.. எடுத்துட்டு வாங்க”
அவளை காரில் அமரவைத்து, காலை பார்த்தால் அது புசு புசுவென்று நீர் கோர்த்து வீங்கிக் கொண்டிருந்தது.
தலையணையை வைத்து வாகாய் பின் சீட்டில் அமர்த்தி அவள் காலை மடிமேல் வைத்து அசையாவண்ணம் பிடித்துக் கொள்ள கார் கிளம்பியது.
கணவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு இன்னும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருவரும் ஒன்றும் பேசவில்லை.
அவனுக்குத் தொண்டை அடைத்தது. அவள் முகத்தில் தெரிந்த வலி, கண்ணில் நீர் முட்டியது. அவளைப் பார்த்துக் கொண்டே அமர்த்திருந்தான்.
தொண்டை கரகரக்க, “கீழ விழுந்தியா ஜானு?” கேட்க்கவே பயமாய் இருந்தது.
‘இல்ல’ என்பது போலத் தலையாட்டி, விசும்பலுடன் “அண்ணா பிடிச்சுட்டான்..”
அந்த வலியிலும் சிறு நிம்மதி இருவருக்கும்.
“கால் ரொம்ப வலிக்குதாடா?”
கண்ணில் நிற்காமல் நீர் வழிய, “ம்ம்” என்று மேலும் கீழுமாய் தலையாட்ட
பொறுமையாய் பேசினான், “கொஞ்சம் பொருத்துக்கோ ஜானு! எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும், கொஞ்ச நேரம் கண் மூடி படு.. பயப்படாத. எக்ஸ்ரே எடுக்கும் போது நீ ப்ரெக்னட்-னு மறக்காம சொல்லு. வயத்துக்கு ப்ரொடெக்ஷன் வச்சுவிடுவாங்க. ட்ரீட்மென்ட் முன்னாடி டாக்டர் கிட்டையும் சொல்லிடு.. ஆன்டி-பையாடிக் முடிஞ்ச வரைக்கும் எடுக்காத! ஸ்டீராய்ட்ஸ் இருக்க மருந்த எடுத்துக்க வேண்டாம். குடுக்கர மருந்து என்ன ஏதுனு கேட்டு தெரிச்சுக்கோ.. நான் கார்த்திட்ட சொல்றேன்.  இப்போதைக்கு உன்னால இங்க வர முடியாதுனு இருந்தா அழாதா, நான் வரேன். நீ அழ மட்டும் செய்யாதா சரியா.. நீ கார்த்திட்ட ஃபோன குடுத்திட்டு படு ஜானு..”
கார்த்தியின் மூலம் அவள் காலை பார்த்தவனுக்குத் தெரிந்துவிட்டது அவள் இப்போதைக்கு அங்கு வரப்போவதில்லை என்று. இப்பொழுது தான் விடுப்பு முடிந்து வந்திருக்கிறான். மீண்டும் விடுப்பு கிடைப்பது கடினம். என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
வயிற்றில் பிள்ளை வேறு.. அதற்கும் ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்ற வேண்டுதல்.
பார்க்காத ஒரு ஜீவனுக்காய் மனம் ஏங்குமா? அதுவும் அவன் உயிர் எனும்போது மனம் ஏங்கத் தானே செய்யும்!  
அவள் கால் பிரச்சினை இது வரை அவனுக்கு பெரிதாய் தெரியவில்லை. அது சரியாக இருந்திருந்தால் இன்று இப்படி ஆகி இருக்காதோ? கார்த்திக் அவளைப் பிடிக்காமல் இருந்திருந்தால்? நினைக்கவே அவனுக்குப் பயமாய் இருந்தது.
‘இன்று வரை அவள் காலை பற்றிக் கேட்காமல் விட்டுவிட்டேனே… மருத்துவரைப் பார்த்திருக்க வேண்டுமோ..’ என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது. காலை பார்த்திருக்கின்றான். அழகாக இருக்கும். பார்த்தால் ஒன்றும் வித்தியாசம் தெரியாது. நடக்கும் போது மட்டும் கொஞ்சம் வித்தியாசம்.. அதுவும் அவன் கண்ணிற்குத் தெரிந்ததே இல்லை.
பிரசவம் முடிந்து அவள் உடல் நிலை சரியானதும் அமெரிக்காவில் இதற்கு தீர்வு கிடைக்குத்தாவென்று பார்க்க வேண்டும்.. இன்னும் இன்னும் அவள் வலியில் தவிக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டான்.
“இனி என்று காண்பேனோ?” ஏக்கம் இருவருக்கும் பொது!! இதில் வலியோடு.. வயிற்றில் பிள்ளையோடு இருப்பவள் ஏக்கம்?
என்று தணியுமோ இந்த தாகம்!?

Advertisement