Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 32 (பகுதி – II)
ஒருவர் பொறை இருவர் நட்பு (நட்பு வளர, நிலைக்க, நீடிக்க; நட்பு கொண்ட இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதே சாலச் சிறந்த வழி.)
—————— —————— —————— ——————
அங்கே மும்பையில் எப்போது மீட்டிங் முடியும் என காத்திருந்த ஒரு ஜீவன் மீட்டிங் முடியவும் முதல் வேலையாய் சுதாவிற்கு அழைத்தான். மாலினி அருகில் இருக்கவே முழு ரிங் முடியும் வரை அவன் சிரித்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டாள். மீண்டும் மீண்டும் அழைப்பு வர மாலினி திரையைக் கவனித்துவிட்டாள்.
ஒன்றும் தெரியாதது போல், “இம்பார்ட்டென்ட்-ஆ இருக்க போகுது” எனவும்..
“ம்ம் பேசறேன்..” என்று இவள் முடித்துக் கொண்டாள்.
அடுத்த இரண்டாவது நிமிடம் கான்டீன் பையன் சுதாவிடம், “மேடம்.. உங்களுக்கு ஃபோன்” என்று பவ்வியமாய் அலுவலக வயர்லெஸ் தொலைப்பேசியை அவளிடம் தந்தான்.
‘எனக்கா?’ கேள்வியோடே, “ஹெல்லோ? யாரு?” என்றவளிடம்
மறுமுனை, “ஒரு முத்தம்.. என் காதலெல்லாம் கொட்டி உன் பாதத்தில தரவா? இல்ல ஆயிரம் முத்தம் உன்னுடைய குட்டி கால் விரல் நகத்தில கொடுக்கவா? எது குடுத்தா என்னை மன்னிப்ப லட்டு?” என்றது தான் தாமதம்,
“நான் அப்புறம் பேசறேன்” என்று வைத்துவிட்டாள். இதயம் உள்ளே அடித்துக் கொள்கிறதா வேளியே விழுந்து துடிக்கின்றதா? சத்தியமாய் அவனிடமிருந்து அழைப்பை அவள்  எதிர் பார்க்கவில்லை. விவஸ்தையில்லாமல் வரதன் தான் அழைத்திருப்பான் என்று நினைத்தாள்.
மீண்டும் பாதத்தில் முத்தமா.. கை கால் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது அவளுக்கு. ‘”கால விழறேன்”றத  எப்படி சொல்றார்.. எமகாதரன்..’
“கொஞ்சம் வேலை இருக்கு.. நான் ப்லேஸ் போரேன். நைஸ் மீட்டிங் யூ மாலினி!” என்று அவள் இடத்தில் அமரவும் அங்கிருந்த ஃபோன் சிணுங்கியது. வழக்கமாய் அவர்கள் இடத்திலிருக்கும் தொலைப்பேசி அலுவலகத்திற்குள் பேசிக்கொள்ள மட்டுமே பயன் படுத்துவார்கள் மற்றதற்குக் கைப்பேசியே வசதி என்பதால். தொலைப்பேசி சிணுங்கவும், வரதன் காய்ந்தார், “எடு.. எடுத்துப் பேசு.. சீட்டில உக்காரது இல்ல… அப்படியே உக்காந்தாலும் யார்ட்டையாது அரட்டை அடிக்கரது. எடு அத!”
அவரை மனதில் தாளித்துக் கொண்டே, “ஹெல்லோ..” எனவும் மீண்டும் அவள் கண்ணனே.. “சொல்லு லட்டு.. கால்ல வேண்டாமா.. வேற எங்க குடுத்தா மன்னிப்ப? லட்டு ப்ளீஸ் டி.. என்னால சத்தியமா முடியல!” இம்முறை அவள் உதடு சுரணையே இல்லாமல் கொஞ்சமாய் விரியத் தான் செய்தது. ‘ஆயிரத்து ஓராவது அழைப்பு! விடாக்கண்டன்!’
“நான் வேலையா இருக்கேன்..” வைத்து விட்டாள்.
‘இவர் எப்படி நான் இருக்க இடமா காள் போடுரார்.. ஃபாளோ பண்றாரோ?’ இருக்கையிலிருந்து எழுந்தவள் பார்வையை  நாலா பக்கமும் வீச.. ஏமாற்றமே.
“மேடம் உங்களுக்கு காள்” என்று பவ்வியமாய் வரதன் அவர் கைப்பேசியைச் சுதாவிடம் நீட்ட அவள் அரண்டே விட்டாள்.
“எனக்கா? யாரு?” எனவும்
“உங்க புருஷன்-னு சொல்ல சொன்னாங்க!”
திக்கித் திக்கி, “ஹெ..ல்லோ..” எனவும்
“எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு சுதா.. விளையாடாத! அவன்ட்ட ஃபோன குடுத்திட்டு காள் எடு” என்றுவிட்டு அவன் வைத்துவிட
இவள் வரதனைத் திரும்பிப் பார்க்கவும், வேகமாய் வந்தவர், “பேசியாச்சா மேடம்.. த்தாங்ஸ்” என்று கைப்பேசியை வாங்கி சென்றார்.
‘வரதன்.. அவனா? இந்தாள் எதுக்கு என்னை மேடம்னு கூப்பிடுது? என்னடா நடக்குது இங்க’ என்று தான் பார்த்தாள். கோபம் இருந்த இடத்தில் அப்படியே இருக்க அவள் மனம் தான் அங்கு இல்லை..
கண்ணை நினைத்துப் புன்னகை பூத்தது. ‘மூஞ்சியும் ஆளையும் பாரு.. கல்யாணம் பண்ண சொன்னா, என்னென்னமோ பேசிட்டு.. இப்போ இங்க கூப்பிட்டு புருஷனாமே.. என்னை அப்படி எல்லாம் பேசினதுக்கு நான் தானே கோவிச்சுக்கணும்? வேலை இருக்காம். இருக்குனா செய்ய வேண்டியது தானே.. அத விட்டுட்டு எதுக்கு எனக்கு காள் போடணும்?’ சொன்னவள் கண்ணும் மனமும் அவள் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் பாவம் அதன் பின் அழைப்பு தான் வரவில்லை. 
குடும்பத்தில் ஒன்றுமில்லா விடயத்திற்குக் கோபம் வரலாம் அது சண்டையாய்  மாறலாம். கோபத்திலும் தவறான வார்த்தையை விட்டுவிடக் கூடாது. அதை அஷோக் செய்துவிட்டான். இப்பொழுது கோபப்படுவது சுதாவின் முறை. அவள் அதை இழுத்துப்பிடித்து சண்டையை நீள விடலாம், மனக் கசப்பு ஏற்பட்டு இரு இதயங்களையும் காயப்படுத்திக் கொள்ளலாம்.. இல்லை தன் மீது அளவு கடந்த காதல் கொண்டவன் மன்னிப்பை யாசித்து நிற்க, அதைக் கொடுத்து இன்னும் அதிகமாய் காதலிக்க பெறலாம்.
காற்றில் வளையாது நிற்கும் மரம் முறிந்து விடும். அன்பில் நிலைத்து வாழவும், உறவு நீடிக்கவும், வாழ்வில் சிக்கல், பிரிவின் இழப்பு தவிர்க்க விட்டுக் கொடுத்தல், மன்னிப்பு கட்டாயம் தேவை.. வாழ்வின் இழப்புகளும் வலிகளும் சுதாவிற்கு இதை நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.
இவள், நடிகர் வடிவேலு ரகம் போல்.. ‘அவள் அவ்வளவு நல்லவள்’
மாலை அலுவலக நேரம் முடிந்தாலும் எப்பொழும் போல அலுவலகம் பரபரப்புடனே இருந்தது. இவளுக்குத் தான் ஜீவனே இல்லையே எங்கிருந்து பரபரப்பு வரும்? ‘ஏன் இவர் இன்னும் அழைக்கவில்லை… பெரிய இவர் மாதரி பேசரதோட சரி..’ திட்டிக் கொண்டே அவன் அனுப்பிய வாட்ஸ்-அப் மெசேஞ் எல்லாவற்றையும் பார்த்து முடித்தாள். எல்லாம் ஒரே போல் செய்தி!
“சாரி, லட்டு.. பேசு டா”
“டேய் சாரி டா”
“சுதா.. பேசு சுதா.. சாரி டி செல்லம்”
“ஒரு தரம் பேசேன்.. கொஞ்சம் கருணை காட்டேன்.. மன்னிக்கவே மாட்டியா”
“என்னை பார்த்தா பாவமா இல்லியா.. ப்ளீஸ் டி லட்டு.. பேசேன்..”
நான்கைந்து முறை அவனை அழைக்கக் கைப்பேசியை எடுத்தும் விட்டாள்.. ஆனால் அவன் பேசியதுக்கு நாலு நாளாவது அவனைத் தவிக்க விட்டால் தான் அறிவு வரும் என்று கைப்பேசியை அணைத்து பையில் போட்டுக்கொண்டாள்.
வேலை செய்யாமல் அவள் சிந்தனையில் இருக்க வரதன் அவள் பக்கம் திரும்பினால் தானே.  இன்னும் அவளுக்குச் சலாம் ஒன்று தான் வைக்கவில்லை அவர். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் கொசுத் தொல்லை நீங்கியது அவளுக்கு பிடித்திருந்தது.
ஆறு மணிக்குக் கிளம்பினாலும் அவர் பார்வையில் முறைப்பு இருக்கும். இன்றோ மணி 5:30 தொட்டதும், “இன்னும் கிளம்பலையா மேடம்” என்றார்.
‘மேடமா…?’ “இதோ கிளம்பிட்டேன்..” என்றவளுக்கு அவரிடமே கேட்க வேண்டும் போல் இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் சென்றாள். 
வரவேற்பறை தாண்டவில்லை அங்கிருந்த வரவேற்பாளர் அவளுக்காகவே காத்திருந்தவள் போல், “மேம்..” என்று அவள் முன் வந்து நின்றாள்.
அவசர வேலை என்று எட்டாவது தளத்திற்குக் கூட்டிச் சென்றவளிடம், “யாரைப் பாக்க?” எனவும்
பவ்வியத்தோடு, “உங்க ஹஸ்பன்ட்-னு சொல்ல சொன்னாங்க மேடம்” என்றாள்.
இந்த பதிலுக்கு என்ன சொல்லவேண்டும்? வாய் மூடி இருந்தாலும் மனமோ அவனோடு வாதிட்டது. ‘ஓ.. ஆஃபீசுக்கே வந்துட்டின்ங்களா?உங்கள..’
எ.கெ.வின் அறை அருகிலிருந்த கான்ஃபரன்ஸ் ஹாளுக்கு கூட்டி சென்றவள் சுதாவிற்குக் கதவைத் திறந்து விட அவள் உள்ளே செல்லவும், சட்டையில் ஒரு சிறு மைக்ரோ ஃபோன் பொருத்தி கதவைச் சாத்தி அதன் பின் காவலுக்கு நின்று கொண்டாள்.
‘என்ன நடக்குது’ என்று பார்க்கும் முன் அந்த பெரிய அறையிலிருந்த அத்தனை ஜென்னல் திறையும் இறங்க அறையில் மிதமான வெளிச்சம் மட்டுமே.. அவள் சுற்றும் முற்றும் பார்க்க அவள் பின்னால் இருந்த பெரிய திரை உயிர் பெற்றது.
சுதா திரும்பவும், கைகளை மார்புக்கு குருக்காய் கட்டி கொண்டு அழகாய் சிரித்து சாய்வாய் நின்றான் கண்ணன். சுவர் முழுவதும் இருந்த அந்த பெரிய திரையில் அவன் மட்டுமே. அதுவும் இதே போல் கான்ஃபரன்ஸ் அறை தான். கோட்டை கழட்டி அங்கிருந்த  நாற்காலியில் மாட்டியிருந்தான். வெள்ளை முழுக்கைச் சட்டைமேல் உடலை இறுக்கி பிடித்த அடர் நீல வெஸ்ட்.. ஜம்மென்று இருந்தான்.  
சட்டையில் மேல் இருந்த இரு பட்டங்களை கழட்டி விட்டு, சட்டை கையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டே, “லட்டுக்கு இன்னும் என் மேல கோபமா?” என்றவனை
‘அப்படி ஒன்றும் மன்னிப்பை யாசிப்பவன் போல் இல்லையே.. அவனும் அவன் பேச்சும்… ஆளப்பாரு.. உயிர எடுக்கரான்’ என்ன திட்ட முயன்றும் பாழாய் போன மனது வெட்கமே இல்லாமல் இவனை ரசிக்கத் தான் செய்தது.
காணாமல் போன கோபத்தை எங்கிருந்து கொண்டுவருவது? அதுவும் அவனை இப்படி பார்த்தபின்? பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்க்க..
அவன் புன்னகை எல்லாம் வடிய, “சாரி சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லனு தெரியும்.. பக்கத்தில இருந்திருந்தா இந்நேரம் கதையே வேற.. இங்க இருக்கேனா.. என்ன பண்றதுனே தெரியலை..”
‘என்னது இங்க இல்லியா? எங்கப் போனார்?’ நினைத்ததைக் கேட்கவில்லை.
“அவசர வேலையா மும்பை வந்திருக்கேன். இங்க இருந்து அப்படியே அப்ராட் கிளம்பவேண்டி இருக்கும்.. வர ஆறு வாரம் ஆகும், சுதா”
கேட்டவள் முகம் அப்படியே விழுந்து போனது.. என்னது ஆறு வாரமா? நாலு நாள் தாங்க மாட்டாளே.. கண்ணில் மளுக்கென்று நீர் திரையிட…
“ப்ளீஸ் அழாத… இதுக்கு பயந்தே உன் கிட்ட எதுவும் சொல்ல முடிய மாட்டேங்குது. எனக்கு இந்த ஆறு வார ட்ரிப் முன்னமே தெரியும்.. என்ன டேட் தான் மாறி போச்சு.. உன்ட்ட சொல்ல பயம்.. எங்க அழுவியோனு..”
“..”
“சாரி சுதா.. நிஜமாகவே ரொம்ப சாரி லட்டு! சின்ன சின்ன விஷயத்தெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சிட்டு… ஓரேடியா பேசிட்டேன்.. உன் மனசோட என்னுதும் தான் காயப்பட்டு போச்சு. என்ன வேணும்னாலும் நான் ரீசன் சொல்லலாம், ஆனா நான் அப்படி சொல்லியே இருக்க கூடாது. தப்பு. தப்பு தான்.
நிஜமா சொல்றேன்.. என் மேல சத்தியமா சுதா நீ எடுத்துக்கிட்ட அர்த்தத்தில நான் பேசவே இல்ல. நான் அந்த விஷயத்தை சத்தியமா என் மனச விட்டு எடுத்துட்டேன் சுதா.. நீ என் பொண்டாட்டி டி.. உன்ன நான் அப்படி நினைச்சா.. நான் என்ன ஆம்பள? நீ தப்பானவனு நான் ‘மீன்’ பண்ணவே இல்ல சுதா, அப்படி நினைச்சிருந்தா நீ போரேன்னு நின்னப்போ உன்ன தடுத்தே இருக்க மாட்டேனே..
தாலி கட்டல தான்.. இன்னும் கல்யாணம் ஆகல தான்.. ஆனா இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான் சுதா எனக்கு. நீ மட்டும் தான் என் மனைவியா. அந்த மிதப்பில தான் கொஞ்சம் ஓவரா போய்டேன். அதுக்கெல்லாம் நான் சாரி கேக்க முடியாது. என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு அது ஒரு அழகா தருணம்.. இந்த வார்த்தைகள் அதை களங்கப் படுத்தரத நான் விரும்பல.. நான் உன்ன தொடுரதுக்கெல்லாம் நீயா ரீசன் எடுத்துக்காத. ஒரே ரீசன் தான். நீ என்னுது.. நான் உன்னுது..
நேத்து உன் கூட நான் இருந்ததை ஒருத்தர் பார்த்தது எனக்கு பிடிக்கல. எனக்கு மட்டுமே சொந்தமான உன்ன.. என் கூட நெருக்கமா இருக்கத வேர ஒருத்தர் பார்த்தது எனக்கு சுத்தமா பிடிக்கல. 
நீ யோசி சுதா.. இது ஒன்னுமே இல்லதா விஷயம். என் பொண்டாட்டி என்னை கட்டிபிடிச்சுட்டு! இத ஒருத்தர் பார்த்த உணர்வே எனக்குப் பிடிக்காத போது, நான் உன்ன யார் கூடாவோ நினைப்பேனா? அப்படி ஒரு எண்ணம் என் மனசு ஓரத்துல கூட இல்ல சுதா.. நம்பு!
அப்புறம் ஏன் சொன்னேன்? தெரியல.. ஒரு ஃப்லோ-ல சொல்லிட்டேன் போல.. ஸ்டுப்பிட் மாதரி! நான் உன்ன தொடும்போது மட்டும் தான் அதே கேள்விய கேக்கரியா.. கொஞ்சம் கடுப்பாகிட்டேன். ஏன் நான் என்ன அவ்வளவு கேடு கெட்டவனா.. நம்பவே மாட்டேங்கரியேனு.. நான் ஒரு பெரிய முட்டாள்.. நீ என் கிட்டத் தானே கேக்க முடியும்.. அப்படி நீ கேக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்.. இது கூட எனக்கு புரியல.. நீ என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா உன் வாழ்க்கைத் துணையா என்னைத் தேர்ந்தெடுத்திருப்ப.. நான் அத கூட புரிஞ்சுக்கல… ஆயரமாவது முறையா சாரி சுதா!”
அவன் அவளைப் பார்த்து நிற்க, அவளும் அவனைப் பார்த்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை. அவன் அருகிலிருந்திருந்தால் கட்டி அணைத்திருப்பாள், அவள் முழு பலன் கொண்டு. என் வலிகளுக்கு என்றுமே மருந்தாய் அவன் இருப்பான் என்ற நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கையாய் மனதில் பதிந்து போனது. தீபக் விஷயம் கண்ணனிடம் பகிர அவன் வற்புறுத்தலே காரணம். இன்று ஏதேதோ தடை எல்லாம் அகன்ற உணர்வு. தன்னை என்றுமே விட்டுவிட மாட்டான் என்ற உணர்வு. 
சென்னை வந்த புதிதில் அவளுக்குத் தனிமை மூச்சு முட்டியது.. நீரில் அவளை யாரோ பிடித்து முக்குவது போன்ற மூச்சு முட்டல்.. இன்று? கண்ணன் அவள் வாழ்வின் முழுமையாய் தெரிந்தான். உடலுக்காகவோ.. உணர்வுக்காகவோ அவனைத் தேடவில்லை. அவளின் நிறைவாய் அவனைப் பார்த்தான். மூச்சை நன்றாய் விடமுடிந்தது. 
ஒரு நாள் கூட நீடிக்க விடாத இந்த சண்டை, நிழலின் அருமையை உணர்த்தியது. வெயிலில் வெந்தவர்களுக்கு மட்டுமே ஒரு மரத்தின் அருமை தெரியும். வெயிலாய் அவன் வார்த்தை சுட்டிருந்தாலும், இந்த நிமிடம் அங்கு இதமான வருடல் மட்டுமே. அவளுக்கு என்றுமே அவன் தான் நிழல்.
“என்னை மன்னிக்கவே மாட்டியா?”
மாட்டேன் என்பது போல் அவள் தலையசைக்க.. ‘ஹப்பா’ என்று மூச்சு விட்டான். அவனுக்குத் தான் தெரிந்துவிட்டதே, அவளுக்கு அவன் மீது கோபமில்லை என்று.
“நீ என் லட்டா?” தன்னால் ஒரு கொஞ்சல் அவன் பேச்சில் ஒட்டி கொண்டது.
‘இல்லை’ என்பது போல் தலையசைக்க
“என் செல்லமா?”
‘இல்லை’
“என் பட்டா?”
‘இல்லை’
“என் பொண்டாட்டியா?”
கண் விரித்து, “எனக்கு தெரியல.. அது உங்களுக்குத் தான் தெரியும். என் கழுத்தில தாலி இல்ல” என்றாள் காட்டமாய்.
“ஊருக்கு வந்ததும் முதல் வேலையே அது தான்! சரியா?”
“..” என்ன சொல்லியும் கேட்காமல் மான ரோஷத்தை எல்லாம் மதிக்காமல் இதழ் கொஞ்சமாய் விரிந்தது. ‘அவன் பாக்கரான்.. சிரிக்காத லூசு’ என்று பல்லால் இதழ் உள்ளிருந்த தோலைக் கடித்துச் சிரிப்பை வெளிக்காட்டவில்லை.
“இன்னும் என்ன?”
“..”
“நான் உன் புருஷனா?”
“இம்ம்!” என்றாள் முறைப்போடே..
“அப்போ நான் உன் கிட்ட அப்படி ஒரு கேள்வி கேட்டா… ‘நீ தானே டா என் புருஷன் உனக்குத் தெரியாதா நான் பத்தினியா இல்லியானு? நீ எப்படியோ அப்படி தான் நான்!’ அப்படி தானே நீ சொல்லி இருக்கணும்.. அத விட்டுட்டு நீ அழுவியா? என்னை அழ விடு.. நீ அழாத சரியா?”
“ம்ம்”
“நான் ஊர் ஊரா போறேன் சுதா.. ஒவ்வொரு ஊர்லையும் ஒவ்வொரு டைம் இருக்கும்.. உன்ன நினைச்சதும் பாக்க முடியாது.. அது ஏன், நினைச்சதும் உன் கூட பேச முடியாது.. இன்னும் ரெண்டு நாள் தான் நான் ஃப்ரீ.. இங்க தான் தாத்தா வீட்டுல இருப்பேன்.. அதுவரைக்கும் பேசலாம். அங்க போன பிறகு டைம் கிடைக்கும் போது பேசறேன்..”
பேசிக்கொண்டிருந்தவனை கண்முழுவதும் நிரப்பிக் கொண்டாள். ஆறு வாரம்.. இருவருக்கும் ஆறு நீண்ட வேதனையான வாரம்.
அவனையே தன்னை மறந்து பார்த்து நின்றவள்.. அவனிடமே கேட்டிருக்கலாம் எப்படி அவள் அலுவலக கான்ஃபரன்ஸ் ஹாளில் அவன் என்று! அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று!
கேட்டிருப்பாள்.. அவன், அவள் எதிரில் நின்று அவளை விழுங்காமல் இருந்திருந்தால். அவள் அவனை விழுங்க முற்படாமல் இருந்திருந்தால்.

Advertisement