Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 32 (பகுதி – I)
அலுவலக வேலையைக் கடனே என்று செய்து கொண்டிருந்தாள் சுதா.
அஷோக்கோடு முன் தினம் நடந்த மனஸ்தாபத்திற்குப் பின் இன்னும் பேசவில்லை. அவனும் கைக்கடுக்க அவளைக் கைப்பேசி மூலம் அழைத்துவிட்டான். அஷோக்கும் சுசிலாவும் விடியும்முன் மும்பை சென்றுவிடவே அவனால் சுதாவைச் சமாதானப் படுத்த இயலவில்லை. அவன் மும்பை சென்றுள்ள விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதை அறிவிக்க அவனும் படாத பாடு பட்டுவிட்டான். என்ன செய்ய.. வார்த்தைகளைப் பார்த்துக் கொட்டி இருக்கவேண்டும். இன்றிலிருந்து ஆறு வாரம் அவளைப் பார்க்க முடியாது.. இப்படிப் பேசவும் முடியாமல் போய்விட்டால்.. நினைக்கவே அவனுக்கு பயமாய் இருக்கச் சுதாவிடம் பேசியே ஆகவேண்டும் என்ற தீவிரம்.. மீட்டிங் அறை செல்லும் வரை அவளை அழைத்து அழைத்துக் களைத்துப் போனது தான் மிச்சம்.
சுதாவாலும் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை, ‘இன்னும் அழைத்துக் கொண்டு தான் இருக்கின்றானா’ பார்க்க மனம் துருதுருத்தது. ‘உனக்கெல்லாம் மானம்.. சூடு சொரணை எதுவுமே இல்லையா?’ அவளையே கேட்டுக் கொண்டாள்.
அவன் வார்த்தை தேள் கொட்டிய வலியை ஏற்படுத்தியது முற்றிலும் நிஜம். இரவெல்லாம் அவன் அழைப்பு வந்துகொண்டே இருக்க அதைப் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.. அழைப்பு அதிகாலை வரை நீடித்தது. வாட்ஸ்-ஆப்பில் மெசேஞ் குவிந்து கொண்டே இருக்க.. மெசேஜ் வந்துகொண்டிருப்பதற்கான தகவலையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். திறந்து பார்த்தாளில்லை. அதுவும் அதிகாலை நின்றது. தூங்கியிருப்பான் என்று அவள் எண்ண அவன் மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான்.
அஷோக்கின் இதயம் கனக்க இரவு கண்ணசர மறுத்தது. இதே மெத்தையில் தானே எல்லாம் ஆரம்பித்தது. அவள் அமர்ந்திருந்த இடத்தை அவ்வப்பொழுது கண்மூடி தடவி விட்டான். மனதை ஆட்கொண்ட அழகிய தருணங்கள் எல்லாம் அவன் ஒற்றைச் சொல்லால் வெயில் பட்ட பனியாய் காணாமலே போனது. அந்த வார்த்தைகளால் அவர்கள் காதல் காணாமல் போகப்போவதில்லை ஆனால் அவனின் பாதியைத் அவன் வார்த்தை சுட்டு பொசுக்கியது. இனி தன் வாழ்வின் வலியை அவனிடம் அவள் பகிரத் துணிவாளா? அவள் பனியிட்ட கண் வந்து கலங்கடித்தது. இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை. ‘நானா பேசினேன்.. என் சுதாவை நானா அழ வைத்தேன்..’ மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் அவன் மனதில். அவளிடம் பேசியே ஆகவேண்டும் இல்லை அவனால் கண்டிப்பாய் வேலையில் கவனம் செலுத்த முடியாது.
சுசிலா கேட்டுவிட்டார், “என்ன ஆச்சு.. முகமே சரி இல்லையே’ என்று! அதனால் ஒன்றும் அவர் அர்ச்சனையிலிருந்து அவன் தப்பிக்கவெல்லாம் இல்லை. கடைசி நேர பிரயாண மாற்றங்கள் அவனுக்கு முன்னே அவரை அடைந்திருக்க அதையெல்லாம் ஏன் ஒழுங்கும் கிரயமுமில்லாமல் இருக்கிறது என்று அவனை வறுத்தெடுத்துவிட்டார். வீட்டில் தான் ‘அம்மா’ எல்லாம். வேலை என்று வந்துவிட்டால், அவர் ‘ஹிட்லர்’.
மும்பை அடைந்ததும் விட்ட வேலையை மீண்டும் ஆரம்பித்தான்.. அதே பலன் தான். அவன் இரவு முழுவதும் அழைக்க, அழைப்பு முழுவதும் சென்ற பின்னே நின்றது. அவள் அழைப்பைத் துண்டித்திருந்தாலாவது கோபத்தில் இருக்கிறாள் என்று எடுத்திருப்பான். அவள் அதை எடுக்கவும் இல்லை, அணைக்கவும் இல்லை. அவள் தூங்கி இருக்க மாட்டாள் என்று தெரியும். கோபத்தை வெளிக்காட்டாத அவள் மனநிலை அவனை பயமுறுத்தியது.
இன்னும் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. மீட்டிங் ஆரம்பிக்க மீண்டும் அவனிடம் இருந்து மௌனம்.. அது போகும் மத்தியம் வரை. அது வரை அவன் அவள் நினைவை எப்படியாவது தள்ளி வைத்தே ஆக வேண்டும்.. முன்னிருப்பது அவன் ஒருவருட உழைப்பு!
வீட்டிற்குச் சென்றவள் என்ன முயன்றும் சமாதானம் ஆக முடியவே இல்லை. எப்படி அவன் அவளைப் பார்த்துப் பேசலாம் என்ற எண்ணமே. கைப்பேசியில் அவன் அழைப்பு வரும் பொழுதெல்லாம் திரையில் சிரித்து நின்ற அவன் முகத்தைப் பார்த்தே அமர்ந்திருந்தவள்.. பின் அவனிடமிருந்து அழைப்பு வருவது நிற்கவும் உறங்கிப் போனாள்.
அஷோக்கின் மேல் அவளால் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியாதென்று அவளுக்கும் தெரியும். அவன் உணர்ந்து கூறியிருக்க மாட்டான் தான்.. இருந்தும் இந்த நிமிடம் அவளுக்கு அவன் மேல் கோபம்.. வருத்தம்.. அதையும் விட, இவனே இப்படிச் சொல்லிவிட்டானே என்ற வேதனை. பாட்டி இவள் நடத்தை சரி இல்லை என்று பாடாதா நாள் இல்லை.. தினம் தினம் அதை கேட்டுக் கேட்டுப் புளித்தே போனாலும் இவன் சொன்னது அப்படி இல்லை.. அது கூர்வாளோடு வந்த சொல்.
அஷோக் அவள் மூளையைத் தின்று கொண்டிருக்க எங்கே வேலையில் கவனம் செலுத்துவது? வீட்டில் இருக்கலாம் என்று பார்த்தால்.. அது அதை விட கேடு. யார் பாட்டியிடம் வாய் கொடுப்பது?
நேற்றே அவள் வீட்டிற்குள் கண்ணீரோடு நுழைய அவளைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார்.. எங்குச் சென்றாய் ஏன் சென்றாய், கண் மை ஏன் கசிந்தது.. தாவணி ஏன் நலுங்கியது என்று.. இனி இதற்கு அடுத்து ஒரு வாரம் குத்தல் பேச்சு கேட்க வேண்டும். இப்படியே போனால் ஒன்று பாட்டி இல்லை சுதா யாராவது ஒருவர் பைத்தியக் கார ஆஸ்பத்திரியில் தான். அது சர்வ நிச்சயம்.
‘ஏன் இவர் இப்படி ஆகிவிட்டார்’ இந்த கேள்வி ஒரு புறம் சுதாவை அரித்துக்கொண்டிருந்தது. முன்பே அவளைப்  பாசத்தால் ஒன்றும் குளிப்பாட்டவில்லை தான்.. ஆனால் இப்படி இல்லையே! ‘பூவே பூ சூடவா’ பாட்டி போல் ஒரு பாட்டியைத் தான் எதிர்பார்த்து வந்தாள் ஆனால் கிடைத்ததோ, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக மீனாட்சி பாட்டி தான்!
பெற்ற மகளை ஒருவரால் வெறுக்க முடியுமா? மீனாட்சியம்மாள் ஒரு சராசரி ஆள். உலகின் சுக துக்கம் நான்கே சுவரின் நடுவின் முடித்துக் கொண்டவர். மகள் சென்றது தவறாயிருக்கலாம், ஆனால் அவரும் பெற்றவர்களுக்கு தன் நிலையை விளக்க எவ்வளவோ முயன்றார். பலன் இல்லாமல் போகவே கடைசியாய் வீட்டை விட்டுச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். மகளை மன்னித்திருக்கவேண்டும். அது தாய் மனம்.. ஆனால் மதிவானன் அவர் இருதயத்தைக் காயப் படுத்த ஒரு மன நோயாளி போலானார். மகளை மன்னிக்க முடியவில்லை. இப்பொழுது அவர் வழி வந்த வாரிசையும்!
தன் கணவனால், மகளால் உள்ளுக்குள் கீறிக்கொண்டவர் வாழ்வின் பிடிப்பாய் அவர் கண்ணனும் சுசிலாவும் மட்டுமே. அந்த வட்டத்தில் வேறு ஒருவருக்கும் அனுமதி இல்லை.
அன்று சுதாவின் தீ காயத்திற்கு மருந்து வாங்கி வந்தவர் காதில் விழுந்தது அஷோக்-சுதாவின் பேச்சு. அவர் இரு தலை முறை முன்னுள்ள கோட்பாட்டோடு வாழ்பவர். சுதா, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தீபக்கோடு தான் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
களங்கப்பட்ட சுதா எப்படி அவர் தோளில்  போட்டு வளர்த்த கண்ணனுக்கு மனைவி ஆக முடியும்? இதில் கார்த்திக்கை வேறு கட்டிப்பிடித்து கண்ணீர் பொங்க ‘லவ் யூ’ எல்லாம் சொல்லியிருக்கிறாளே? ‘இவள் தான் தீபக்கையும் விட்டு விட்டு இங்கு வந்திருப்பாளோ?’ இது அவரின் புது சந்தேகம். ஆக மொத்தத்தில் பத்தரை மாற்றுத் தங்கமான அவர் கண்ணனுக்குக் கொஞ்சம் கூட சுதா பொருத்தமில்லை.  கார்த்திக் போல்… தீபக் போல்.. அடுத்து கண்ணனையும் விட்டு எங்காவது சென்று விடுவாள்.. அதற்கு முன் அவர் அருமை பேரனை அவர் காத்தே ஆகவேண்டும் சுதாவின் பிடியிலிருந்து!
அவர் மனம் அப்படி இருக்க.. அவருள் ஒரே பயம் இவள் நீலிக்கண்ணீர் வடித்தே தன் பேரனைக் கரைத்து விடுவாளோ என்று. அதன் பிரதிபலிப்பே பாட்டியின் பேச்சுக்கள். அதற்காக சுதாவை வெறுத்து விட்டாரா என்றால் அதுவும் இல்லை. சுதா நன்றாய் இருக்க வேண்டும் ஒழுக்கமாய்.. தீபக்கின் மனையாளாய். அவ்வளவே!
மூளையை பலதும் ஆக்கிரமித்திருக்க எங்கே வேலை செய்வது.. எத்தனை முறை செய்தாலும் கணக்கு டாலி ஆகாமல் படுத்தி எடுத்தது சுதாவை. மத்தியத்திற்கு முன்பே இரண்டு முறை அவள் ஹெட்டிடம் திட்டு வாங்கி விட்டாள்.
ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்த வரதன், “என்ன வேலை பாக்குர நீ? கவனத்தை எங்க வச்சுட்டு இங்க இருக்க?” என்றார் முதல் முறை.
தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளிடம் “நீ மட்டும் இங்க இருக்கதுக்கு சம்பளம் தரதில்ல.. ஒழுங்கா வேலை செய்யரதுக்கு தான்” என்றார் அவளிடம்.
“ச்ச.. சீரி சிங்காரிசிட்டு வந்திடுரது என் உயிர எடுக்க! அவ ஒருத்தி லீவ் போட்டுப் பொய் தொலஞ்சமாதரி இதுவும் போய் தொலைய வேண்டியது தானே” அவள் காது படச் சத்தமாகவே முணுமுணுத்தார்.
சுதாவிற்கு, ‘என்ன மனிதர் இவர்’ என்று தான் எண்ணத் தோன்றியது.
அலுவலகம் சேர்ந்த இத்தனை நாட்களின் ஒரு முறை கூட அவள் வேலையில் தவறியதே இல்லை. கனி மொழி வரதனை பற்றி கூறியதுண்டு.. ஆனால் இன்று தான் அவரின் பேச்சு கேட்கும் பாக்கியம் கிடைத்தது. 
கார்த்திக் இல்லாமல் போகவே ஏனோ வேலைக்கு வர விருப்பமில்லாமல் போய்விட்டது. போதாத குறைக்கு அவளருகில் இருக்கும் கனியும் மசக்கை அதிகமாய் இருக்கவும் ஒரு மாத விடுப்பில் சென்று விட்டாள். கார்த்திக்கிற்கு அடுத்து கனியே அவளின் பேச்சு துணை.
கனியும் இல்லாது போகவே, இவளின் வேலையும் கனியின் வேலையும் சுதாவின் தலையில் விழுந்தது.
வரதனும் அதிக பிரஷர் கொடுக்க, தலை விண்ணென்று வலிக்க ஆரம்பிக்க, தலையில் கைகொடுத்து அமர்த்தவளிடம் தான் கத்திக் கொண்டிருந்தார் வரதன்.
‘இவரைப் பற்றி யாரிடம் புகாரளிப்பது?’ என்ற எண்ணவோட்டத்துடனே கேன்டீன் சென்றாள். யாரோடும் செல்ல விருப்பமில்லை.  தலை வலிக்குக் காபி தேவைப்பட்டது.
காபி அருந்திக்கொண்டே பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். சுதா, கார்த்திக், கனி, லாவண்யா, ஸ்ரீ, ப்ரித்வீ… எப்படி எல்லாம் கலாட்டா செய்திருப்பார்கள். அன்றைய இன்பமான நினைவுகள் இன்று இன்பமாய் இருக்கவில்லை. 
‘கார்த்தி ஏன் டா என்னை விட்டுட்டு போனா? இந்த வரதன் எல்லாம் என்னை திட்டுறான். நீ இருக்கும் போது பேசாத புள்ளபூச்சி எல்லாம் என்னைப் பார்த்து பேசுது’ பெரிதாக ஏக்க பெருமூச்சு விட்டாள். அவனோடு பேச எண்ணி ஃபோனை உயிர்ப்பித்து, பேச மனமில்லாமல் அதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவ்வப்பொழுது அவள் மனகசப்பு பெருமூச்சாய் வெளிவந்து போனது.
மாலினி இவள் பெருமூச்சைப் பார்த்து, “என்ன… நான் விட வேண்டிய பெருமூச்சை நீ விடுர?” என்று சுதா அருகில் வந்து நின்று கொண்டாள்.
நேற்று இரவு அஷோக் அறையில் மாலினி பார்த்த காட்சிக்குப்பின் வெறும் பெருமூச்சு மட்டும் தான் அவளால் விட முடிந்தது. கோவிலில் மாலினி குடும்பம் சுசிலாவை பார்க்க, சுசிலா அவர்களை வீட்டிற்கு அழைத்திருந்தார். முன்பொரு நாள் சுசிலா, மாலினியின் பெற்றோரிடம் பேசும் சமயம் அவள் திருமணம் குறித்து பேச்சுக் கொடுத்தார். அன்றே அவர்களுக்கு ஒரு யோசனை சுசிலா, அஷோக்கிற்கு மாலினியை பார்க்கின்றாரா என.. சுசிலாவின் எண்ணமும் அதுவே தான் இருந்தது கண்ணன் முடியவே முடியாது என்று சொல்லவும் அதற்கு மேல் பேச்சு போகவில்லை.
நேற்று அவர்களைப் பார்க்கவுமே சொந்தம் என்ற முறையில் சுசிலா வீட்டிற்கு அழைக்க சுசிலாவின் பின் அவர்களும் வந்துவிட்டனர். மாலினியும் வந்திருந்தாள். அவள் மனதிலும் ஆசை இருக்கத் தான் செய்தது. அதே ஆசையோடு மாடி அறைக்குச் சத்தமில்லாமல் சென்றவள் கண்டது அஷோக்கும் சுதாவும் தங்களை மறந்த நின்ற நிலையைத் தான்.. பேசாமல் சென்றும் விட்டாள். சுதாவைப் பார்த்ததும் அவள் யாரென்று கண்டுகொண்டாள். கான்டீனில் ‘இவர்கள்’ கூட்டம் செய்த ரகளைகள் அப்படி!  ஒன்றும் மாலினி கையில் இல்லை.. அதனால் மிச்சம் இருப்பது வெறும் பெருமூச்சு மட்டுமே.. அதையும் ஏனோ சுதா விட்டுக் கொண்டிருந்தாள்.
இனி இவள் தான் பாஸின் மனைவி.. இவளோடு தோழமையில் இருப்பது மாலினிக்கு நல்லது தானே.. அதனால் தான் சுதாவைப் பார்த்தவள், அவள் திமிர், அகங்காரம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து சுதாவோடு நட்பாய் பழக வந்து நிற்கிறாள்.
அப்பொழுது தான் சுதா கவனித்தாள் அருகில் நின்றிருந்தவளை. மிகவும் நேர்த்தியாய் இருந்தாள், மாலினி. எ.கெ-வின் வருங்கால மனைவி. அளவான புன்னகையுடன், “ஹாய்…?” என்றிழுத்தவளிடம்
“சுதா!” என்று எடுத்துக் கொடுத்தாள்.
“ஹாய் சுதா..ஐ ஆம் மாலினி. எ.கெ-வோட எல்லாம்” என்றாள்.. கொழுப்பு கொஞ்சம் ஒட்டிக்கொண்டு தான் இருந்து. அந்த ‘எல்லாமில் என்ன இருந்ததோ.. அவளுக்கு மட்டும் தான் தெரியும்! அப்படி சொல்லிக்கொள்வதில் ஒரு அற்ப சந்தோஷம்.
சுதா, “உக்காருங்க..” பக்கத்திருந்த காலி இருக்கையைக் காட்டி கொண்டே.., “தெரியும் உங்கள.. முன்னமே பாத்திருக்கேன்!” என்றாள் புன்னகையுடன்.
புருவம் உயர்த்தி மாலினி, “இஸ் இட்? உன்னையும் தான்..”
“..”
இவள் முகம் பார்த்தவள், என்னமோ இருவரும் பல வருடத் தோழிகள் போல், “என்ன அப்செட்டா இருக்க?” எனவும் 
“அப்பிடி எல்லாம் இல்ல..” என்றாள் சுதா, இழுத்து வரவைத்த புன்னகையோடு. என்ன தான் புன்னகைத்தாலும் அவள் முகம் அவளைக் காட்டிக் கொடுத்தது.
“சாரி.. உன் பெர்சனல் விஷயத்தில தலை இடுறேன்..” மிக இயல்பாய் பேசினாள்.
‘கார்த்தியிடம் கூறவேண்டும் ‘உன் சைட்’டுடன் பேசினேன் என்று. அவள் கர்வம் பிடித்தவள் எல்லாம் இல்லை. மிகவும் நல்ல மாதரி பேசினாள் என்று சொல்லவேண்டும்’ – இது சுதாவின் மன ஏட்டிலிருந்து.
“ச்ச.. சா.. அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்ல.. என் டீம் ஹெட்டால ஹெட் ஏக்…” என்று புன்னகைத்தவளை வித்தியாசமாய் பார்த்தவள், “கம் அகேன்… உன் பவர் தெரியாம உனக்கு ஒருத்தன் இங்க பிரச்சினை கொடுக்கிறானா? அஷோக் கிட்டச் சொல்ல வேண்டியது தானே?”
இம்முறை சுதா அவளை வித்தியாசமாய் பார்த்து வைத்தாள்.
“அஷோக்கா? அது யாரு??”
அவள் இவளை விசித்திரமாய் பார்த்து, “எ.கெ?!”
“ஓ.. இந்த அல்ப விஷயத்தை எல்லாமா அவர்ட்ட கொண்டு போக? நீங்க வேரங்க…” என்றாள் சிரித்துக் கொண்டே.
“அவர் உனக்காக இது கூடவா செய்ய மாட்டார்?”
சுதா.. ‘இவங்க என்ன கமல்ஹாசன் மாதிரி புரியாமலே பேசிட்டு இருக்காங்க?’ எண்ணியவள், “அவருக்கு நான் யாருனே தெரியாது.. அப்புறம் எனக்கு எதுக்கு?.. எனக்கு புரியல.. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு பேசரீங்க?! நான் சுதா இங்க ஃபினான்ஸ் டிப்பார்மென்ட்ல ட்ரெயினியா இருக்கேன்..”
‘எல்லாம் சரி தான்… ஆனால் இவளை தானே அஷோக்கோடு பார்த்தேன்’ மாலினி முகத்தில் அத்தனைக் குழப்பம், “அஷோக் உன்னோட பாய் ஃப்ரண்ட் தானே..” மண்டையை குடைந்த கேள்வியைக் கேட்டு விட்டாள்.
“வாட்? பாய் ஃபிரண்டா?” முகம் சுளிக்க, அடுத்த நொடியே, “சாரி.. ஏதோ கன்ஃபுஷன்.. நான் எ.கெ சர்ரா பார்த்தது கூட இல்ல.. அவர் உங்கள தான் மேரேஜ் பண்ண போரதா பேசிகிட்டாங்க.. நீங்க இப்பிடி கேக்குரீங்க!?”
யோசனையாய் அமர்ந்திருந்த மாலினி சுதாரித்துவிட்டு வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள். “நான் தான் சாரி சொல்லணும்.. வாய் தவறுதுலா ஃப்ரெண்டானு கேக்காமா பாய் – ஃப்ரெண்டானு கேட்டுடேன். ஒருத்தரோட உன்னைப் பார்த்தேன்.. கூட இருந்தவர் முதுகைத் தான் பார்த்தேன்.. அவர் பார்க்க அஷோக் மாதிரியே இருந்தாரே…” என்று இழுக்க..
இவளும் எதிரில் இருப்பவளை பற்றி எதுவுமே தெரியாமல் வெகுளியாய் சிரித்தவள், “உங்களுக்கும் அப்படி தான் தோணிச்சா? அன்னைக்கும் அப்படி தான் லிஃப்ட் கிட்ட பாஸ் முதுகை பார்த்திட்டு என்னோட கண்ணன்னு நினைச்சேன்!”
எதிரில் இருந்தவள் குழப்பமான முகத்தைப் பார்த்து, “கண்ணன், ஹீ இஸ் மை ஃபியான்சே (வருங்கால கணவன்)”
“ஓ.. கன்கிராட்ஸ்” என்றவளுக்கு இப்போது தலை வலித்தது.. ‘இவ லூசா.. இல்ல என்னை லூசாக்க பாக்கிராளா?’ என்று!
மாலினி, “ஒன் மினிட் இரு.. நான் ஒரு காபி வாங்கிட்டு வரேன்” என்றவளுக்கு மண்டை காய்ந்தது.
சுதா, மாலினியைத் தான் பார்த்திருந்தாள். ‘அவள மேரேஜ் பண்ண போரவனை என் பாய் ஃப்ரெண்டானு கேக்கரா? இவள என்ன செய்யலாம்? அப்போ இவளுக்கு அவன் லட்சணம் தெரிஞ்சே தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா? என்ன கேவலமோ..? பெரிய இடம்… பெரிய பிஸினஸ்மேன்.. அது தான் கண்டும் காணாமலும் போரப் போல! ரெண்டும் மேட் ஃபார் ஈச் அதர்!’ எங்கோ மேய்ந்த மூளையை, ‘அது அவங்க வாழ்க்கை உன்ட்ட யாராவது வந்து ஒப்பினியன் கேட்டாங்களா? உன் வேலையை பாரு சுதா!’ என அடக்கி, அழைத்த கைப்பேசியை எடுத்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் காபியோடு மாலினி வரவும் சுதா பேசிக்கொண்டிருந்த ஃபோனை ‘பாட்டிட்ட கேட்டுட்டு சொல்றேன்’ என அணைத்தாள்.
முகத்தில் அத்தனை கேள்வி ரேகை மாலினிக்கு..
“என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்? அப்ப இருந்தே உன் முகமே சரி இல்லை.. நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா? ஒரு ஃப்ரெண்டா தான் கேக்றேன்..” என்றாள் ஆழ்ந்த குரலில்.. அவளுக்கு சுதாவைப் பற்றி எல்லாம் தெரிந்தே ஆக வேண்டும்.. ஏன்.. இவளிடம் என்னத்தை கண்டான் அவன் என்று!
கேட்டவளிடம் என்னவென்று கூறுவாள். ஆனால் அவளிருந்த மனவருத்தத்திற்கு அவளுக்குமே ஒரு தோள் தேவைப் பட்டது.
“இல்ல.. பிரச்சைனைனு ஒன்னும் இல்ல. என் காலேஜ் ஃப்ரெண்ட் மீரா எனக்கு ரொம்ப க்ளோஸ்.. அவளும் அவ ஹஸ்பண்டும் நான் தனியா மும்பையில இருந்த போது எனக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க… அவளுக்கு இன்னைக்கு குழந்தை பிறந்திடுச்சாம்.. டியூ டேட் நெக்ஸ்ட் மந்த் தான்.. ஆனா மூணு வாரம் முன்னமே பிறந்திடுச்சு.. ராகுல் தான் ஃபோன்ல.. டிக்கெட் போடட்டானு கேக்கரான்…”
“நல்ல விஷயம் தானே? நாலு நாள் போய் இருந்துட்டு வா..”
“இங்க கனி வேற லீவ்-ல இருக்கா.. எனக்கும் எப்படி லீவ் கிடைக்கும்? இது கூட பரவால.. பாட்டி கண்டிப்பா விட மாட்டாங்க ஃப்ரெண்ட பார்க்கணும்னு சொன்னா அவ்வளவு தான்.. அது தான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்..”
“ஏதாவது ஆஃபீஸ் வேலைனு சொல்லிட்டு போய்ட்டு வா..”
“பொய்யா?”
“ஏன் சொன்னதே இல்லியா?”
“இந்த பாட்டி மத்த பாட்டி மாதரி வெகுளி எல்லாம் இல்ல.. ஓராயிரம் கேள்வி கேப்பாங்க.. கண்டிப்பா மாட்டிப்பேன்.. பொய் சொன்னா அதை மறைக்க இன்னும் ஒரு பொய் சொல்ல வேண்டி வரும்.. அப்புறம் சொன்ன பொய் எல்லாத்தையும் நினைவுல வச்சிருக்கணும்.. எதுக்கு இந்த வேண்டாத பிரச்சினைனு மாக்ஸிமம் பொய் சொல்றது இல்ல”
“ஓ..” என்றவள் சில பல உரையாடலில் புரிந்து கொண்டாள் சுதாவின் நிலையை. கொஞ்சம் ஆச்சரியம் கொஞ்சம் நிறைய அதிர்ச்சி..
மாலினி மிகவும் திறம்படைத்தவள். அதனால் தான் அப்படி ஒரு திமிர் அவளிடம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வம். எதிரில் இருப்பவரின் இயல்பு, திறமை, பலம், பலவீனம் அனைத்தையும் அழகாய் எடை போடும் திறமை இருந்தது. சாணக்கிய மூளை படைத்தவள். எந்த வேலை எடுத்தாலும் கச்சிதமாய் முடிப்பாள். அதனால் தான் அஷோக் அவள் விஷங்களில் விட்டுக் கொடுத்துவிடுவான்.. அலுவலகத்தில். 
அஷோக் விஷயத்தில் மட்டும் அவளுக்கு சிறு சருக்கல். அவளுக்கு அவன் கொஞ்சம் சலுகை கொடுக்கவே, தன்னை அவன் விருப்பாவதாக எண்ணிக்கொண்டாள். வீட்டிலும் ‘சுசிலா உன்னை அஷோக்கிற்குக் கேட்டால் சரி சொல்லவா? என்று கேட்க அவள் கணக்கு சரி என்றே நம்பினாள். 
ஆனால் மாலினி ஒன்று நினைக்க அஷோக் வேறு நினைத்திருந்தான். சுதாவைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. கொஞ்சம் வயிற்றெருச்சலாகவும் தான். ‘இப்படி தான் விருப்பம் கொண்டவன் பற்றிக் கூட தெரியாமல் ஒருத்தியா? இவ்வளவு பெரிய தொழிலதிபனுக்கு இவள் மனைவியா? இவளாலா நான் நிராகரிக்கப்பட்டேன்?’

Advertisement