Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 31
காத்திருந்த நாளும் வர, ஜான்சிக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்தது. அன்று இரவு டேனியோடு பேச அவனைக் கையில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது தான் அவனுக்கு விடிந்திருந்தது.
“உன்னுடைய ஃபர்ஸ்ட் டைம் டிக்கெட் ஆஃபீஸ்லயே எடுத்திடுவாங்க. நீ சொல்லு என்னைக்கு எடுக்கச் சொல்லட்டும். கார்த்தி வரும்போது வரியா? அவர் கூடவே அதே ஃப்ளைட்ல வரமுடியுமா தெரியல.. டிக்கெட் கிடைக்கணும்.. எதுக்கும் சீட் இருக்கானு பார்க்கறேன்? இல்ல உடனே வர மாதிரி எடுக்கட்டா?”
அதுவரை போகவேண்டும் என்ற கனவிலிருந்தவளுக்கு உரைத்தது, ‘இனி வருடத்திற்கு ஒருமுறையோ இல்லை இரண்டு வருடத்துக்கு ஒரு முறையோ தான் பெற்றோரை பார்க்க வர முடியும்.. கார்த்தியும் கூடவே வருவது ஒரு ஆருதல்.. அம்மா அப்பா தான் பாவம்..’  
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்தவளிடம், “என்ன ஜானு.. வர யோசிக்குர?”
அவனைப் புன்னகை முகமாய் பார்த்தவள், “ஒரு விஷயம் சொல்லட்டா.. வேண்டாமானு யோசிக்குரேன்!”
“இதுல யோசிக்க என்ன இருக்கு? சொல்லு செல்லம்..” கையிலிருந்த காபியை மறந்து அவள் முகம் நோக்கி ஆர்வமாய் அமர்ந்திருந்தான்.
“விஷயம் இன்னும் கன்ஃபர்ம் ஆகலை.. சொல்லட்டா?”
‘என்ன விஷயம்?’ சாய்வாய் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அமர்ந்துக்கொண்டான். “அழகி.. காலங்காத்தால என்ன டா பண்ற.. டென்ஷன் பண்ணாம விஷயத்தை சொல்லு ஜானு!”
அவள் முகம் செம்மையைத் தழுவக் கூடவே கொஞ்சம் வெட்கமும் ஒரு தவிப்பும்.
“அழகி சொல்லு டி.. உன் சிரிப்பே சரியில்லையே.. என்ன விஷயம்?” அவன் கொஞ்சல் வரவே, அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே புன்னகை மாறாமல்,
“உங்களுக்குப் பையன் வேணுமா? பொன்ணு வேணுமா?”  வெட்கமும் சிரிப்புமாய் கேட்டுவிட்டாள்.
புரியாமல் முதலில் முழித்தவன், அவள் முக பிரகாசமும் தவிப்பையும் பார்த்துப் புரிந்துக்கொண்டான்.
“நிஜமா?” அவனால் நம்பவே முடியவில்லை… அவனா? அவனுக்கா? இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தவன் மனம் குடித்து கும்மாளம் போட்டது.
அவளின் புன்னகை இன்னும் விரிய.. அவள் அருகில் இல்லையே.. அவளை அணைத்து கொஞ்ச முடியவில்லையே.. அவன் தவிப்பு அவனுக்கு!
“ஜானு குட்டி.. என் செல்ல ஜானு குட்டி… லவ் யூ என் செல்ல அழகி.. தேனோடு கலந்து ஒலித்ததோ? அவ்வளவு மென்மையாய் பேசத் தெரியுமா ஒரு ஆண்மகனுக்கு?
“த்தாங்ஸ் ஜானு.. ரொம்ப ரொம்ப த்தாங்ஸ் ஜானு… த்தாங்ஸ் டி செல்லக் குட்டி..” குரலில் அப்படி ஒரு துள்ளல்.
கண் பனிக்கத் தொண்டை கரகரக்க.. “இப்போ பார்த்து பக்கத்தில இல்லாம போய்டேனே.. உன்ன அப்பிடியே கட்டி பிடிச்சு முகம் பூரா.. இல்ல.. அந்த குட்டி வயிறு பூரா முத்தம் கொடுக்கணும்..” துள்ளலும் தவிப்பும் கலந்த ஒரு வித புது உணர்வு அவனுள்.
மைல்கள் அப்பால் இருந்தாலும் அவர்கள் இதயம் இணைந்தே இருந்தாலும் இது போன்ற தருணம் கணவன் கைச்சிறையில் இருக்கத் தானே மனைவி ஏங்குவாள். ஆண்களும் இது போன்ற உணர்வுகளுக்கு விதிவிலக்கல்ல.. அவனுக்கும் அதே ஆசை தான்.. தன் சிசுவைத் தாங்கும் தன் அன்பு மனையாளை அவன் கையணைப்புக்குள் வைத்து கண் வலிக்கும் வரை பார்த்து.. வாய் வலிக்கும் வரை முத்திரை பதிக்க.
“ம்ம்.. அங்க வந்த பிறகு வயிறு இன்னும் பெருசாயிடும் அப்போ நிறைய குடுங்க!”
“வர முடியும் இல்ல? தல சுத்தல் எதுவும் இருக்கா? வாந்தி எல்லாம் வருதா? ரொம்ப கஷ்ட்டமா இருக்கா? பத்திரமா வந்திடுவியா? டாக்டர் என்ன சொல்றாங்க?” புதிதாய் ஒட்டிகொண்ட பயம் வேறு!!
அவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, புன்னகைத்தவள், “இன்னும் டாக்டர் கிட்ட கன்ஃபர்ம் பண்ணல.. டேட் தள்ளி போச்சேனு.. நானே வீட்டில பார்த்தேன்!”
“அம்மாவா கூட்டிட்டு நாளைக்குப் போய் பாரு!”
தயங்கியவள், “இன்னும் யாருக்கும் தெரியாது. எனக்கு கூச்சமா இருக்கு வீட்டுல சொல்ல!”
“இதுல என்ன கூச்சம்?”
“நமக்கு இப்போ தான் கல்யாணமாச்சு..”
அவள் கூச்சத்தில் நெளிய அவனோ டி.ஷர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டே, “எனக்கு எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா? சாரோட திறமையை பார்த்தல்ல..”
“இருக்கும் இருக்கும்.. ஏன் இருக்காது உங்களுக்கு? நான் எப்பிடி எல்லார் முகத்திலேயும் முழிக்கனு முழிசுட்டு இருக்கேன்!?”
“என் அருமை பொண்டாட்டி..  கல்யாணம் பண்றதே வாழ்கையைச் சேந்து அனுபவச்சு வாழவும், பிள்ளை பெத்துக்கவும் தான் செல்லம்..
யாரும் செய்யாததை ஒன்னும் நாம செய்யலை.. இதுக்கெல்லாம் பார்த்தா ஆகுமா? நான் வேணும்னா வீட்டுல சொல்லட்டுமா?”
“வேண்டாம் வேண்டாம் தப்பாயிடும்… நானே சொல்றேன்.. நாளைக்குக் காலைல சொல்றேன்.”
“டாக்டர் கிட்ட மறக்காம கேளு எப்போ டிக்கட் எடுக்கரதுனு.”
“ம்ம்.. கேக்கறேன்.. அவங்க இப்போ வேண்டாம்னு சொன்னா கூட நான் வருவேன்..”
“அவங்க ஏன் சொல்ல போராங்க? என் ஃப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ண ஆள் வர முடியாதுனு அவ செவந்த் மந்த் காரைக்குடி போரா.. சோ உனக்குத் தலை சுத்து.. வாந்தி பிரச்சினை இல்லனா வரதில ப்ராப்ளம் இருக்காது..”
“நிஜமா இருக்காதில்ல..”
“நிஜமா இருக்காது ஜானு!”
கண்ணில் நீர் கோர்க்க, “என்னால முடியலங்க.. எனக்கு உங்கள பார்க்கணும் போல இருக்கு.. நாள் தள்ளிப் போனதுமே.. உங்க நினைப்பு தான்… இப்போ எல்லாம் ரொம்ப அதிகமா உங்களைத் தான் தேடுறேன்.. என்னால முடியலங்க.. வந்திடுவேன் தானே? பிரச்சினை இருக்காதே?”
இது என்ன பிழைப்போ என்று தான் இருந்தது இருவருக்கும். நான்கு வருட பிரிவு.. அதன் பின் மூன்று வாரம் சேர்ந்திருந்தனர்.. இப்பொழுது மீண்டும் சேரும் நாளை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டு…
அவன் முகம் வாட அவனை சமாதானப்படுத்தும் பொருட்டு, “நான் வந்திடுவேன்.. ஒரு வாரம் தானே.. பெட்டி வாங்கி.. திங்க்ஸ் அடுக்கவே சரியா போய்டும்.. நான் என்ன கொண்டுவரணும்னு சொல்லுங்க.. வாங்கிட்டு வரேன்..”
அவன் முகம் தெளியாமல் போகவே, “நான் ஒரு லூசு உங்களையும் படுத்தி எடுத்துக்கிட்டு.. சிரிங்க அப்போ தான் உங்க பாப்பாவும் சிரிச்ச முகமா பிறக்கும்..” ஏதேதோ பேசினாள். பேசிக்கொண்டே இருக்கத் தோன்றியது.
அவனை அனுப்பியதும் வடிந்த தைரியம் தான்.. ‘இவனின்றி எப்படி இருப்பேனோ’ என்று எண்ண வைத்தே சென்றிருந்தான். ஆசைப் பட்ட நாளும் கைக்கெட்டும் தூரத்தில்.. ஆனால் ஏனோ மனதில் ஒரு பயம்.. கணவன் கை சேர  நாளாகுமோவென்ற பயம்..
“நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.. உங்க முகம் தெளிவா இருந்தா தான் நான் இங்க ஹாப்பியா இருபேன்” அவள் சிரித்து அவன் சிரிக்கும் வரை பேசினாள்.
பேசிவிட்டு அவன் குஷி மூடில் ஆஃபீஸ் செல்ல அவளும் அவன் நினைவில் படுக்கச் சென்றாள். 
மறுநாள் காலை தயங்கித் தயங்கி நின்ற மருமகளைப் பார்த்த ஷாலினி, “என்னமா, ஏதாது வேணுமா? இந்தா இந்த காபிய குடி..” என்றவரிடம்
“இல்ல மாமி… இனி கொஞ்ச நாள் காபி வேண்டாம்”, கிணற்றிலிருந்து சத்தம் வந்தால் கூட நன்றாய் கேட்டிருக்கும்.
தயங்கி தயங்கி நின்றவளிடம் வந்தவர், “ஏன் டா.. என்ன செய்யுது?”
“அது வந்து.. எனக்கு டாக்டர பாக்கணும்”
ஜான்சியின் கழுத்தைத் தொட்டு பார்த்துக்கொண்டே, “முடியலையா? என்ன பண்ணுது.. எதுக்குத் தயங்கர ராணி?” கொஞ்சமாய் பதட்டம் அவரிடம் ஒட்டிக் கொண்டது. சிலருக்கு மட்டுமே இப்படி மாமியார் அமையும்.
மகனை நேசிக்கும் அம்மா.. ஆசை ஆசையாய் மகனுக்குத் திருமணம் முடிப்பார். மருமகள் வீட்டிற்கு வந்ததும், ‘மாமியார்’ என்ற பதவி அவரை என்ன செய்யுமோ தெரியாது, மருமகள் மகனோடு சிரித்தால் கூட பிடிக்காது. மருமகள் வீட்டிற்கு வருவதே அவர்களுக்கு உழைக்க தான் என்பது அவர்கள் எண்ணமாய் மாறிவிடுகிறது. மகனிடம் மருமகளைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசிப்பது அவர்களுக்கு அலாதி இன்பம் தரும். அவள் மகிழ்ச்சியோடு தன் மகன் வாழ்வு இணைந்திருப்பதை ஒரு சிலரே உணர்ந்து வீட்டிற்கு வந்த மருமகளைத் தன் வீட்டின் ஒரு நபராய் கருதுகின்றனர். அப்படிப் பட்டவர் தான் ஷாலினி.
“வந்து.. நான் ப்ரெக்னென்டா இருக்கேன் மாமி.. வீட்டில பார்த்தேன். எதுக்கும் டாக்டர பாப்போமா?” ‘என்ன நினைப்பார்களோ.. மூன்று வாரம் தானே அவர் இருந்தார்.. வெட்கமாய் போனது!’
அவளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து, வாயில் சர்க்கரை பொட்டு, “எவ்வளவு நல்ல விஷயம் சொல்லி இருக்க..  இத சொல்ல இவ்வளவு தயக்கமா? இரு உனக்கு பிடிச்ச பாதாம் அல்வா செஞ்சு தரேன்.”
அவரை கையில் பிடிக்க முடியவில்லை. “என்னங்க.. நாம தாத்தா பாட்டி ஆக போறோம்..”
அவர் ஒருபக்கமென்றால் அனி, “சூபர் மைனி.. குட்டி பேபி வரப் போகுது… பாப்பாவ நான் தான் பார்த்துப்பேன்.. பாப்பா என் செல்லம்..” ஒருபக்கம் குதிக்காத குறை தான்.
மாமனாரோ, “நல்லா இருமா.. என்னைக்கும் இதே மாதரி சந்தோஷமா இருக்கணும்” சொல்லிச் சென்றவர் வீட்டிற்குள் வரும்போது பாதாம், பிஸ்தா, குங்கும பூ என்று பார்த்ததை எல்லாம் வாங்கி வந்தார்.
பெற்றோருக்கும் சொல்ல, காலையிலேயே கிளம்பி ஊரில் இருக்கும் பழக் கடைகளை இறக்கினர்.
கார்த்திக் சென்னையை காலி செய்து வீட்டிற்கு வரவிருப்பதால் அவனிடம் தானே நேரில் கூறிக்கொள்வதாய் சொல்லிவிட்டாள். அவள் அண்ணிடமாவது அவள் நேரில் சொல்ல வேண்டும்.. அவன் இனி ‘மாமா’.. ஆசையாய் இருந்தது அண்ணன் தோள் சாய…
வீட்டில் அனைவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பீதி கிளம்ப ஆரம்பித்தது. ‘டாக்டர பார்க்கல, இன்னும் கன்ஃபர்ம் பண்ணலை.. அதுக்குள்ள பிள்ளைக்குப் பேர் வச்சிடுவாங்க போல இருக்கே..’ நினைத்ததோடு நில்லாமல் தனிமையில் அவள் தாயிடம் கேட்டே விட்டாள்.
சாந்தா தான் அவளைச் சமாதானம் செய்தார்.
“வீட்டில எடுத்த டெஸ்டுல ப்ரெக்னென்ஸி கன்ஃபர்ம் ஆகிட்டா, ப்ளட் டெஸ்ட்ல கண்டிப்பா பாசிட்டிவ் ரிசல்ட்டு தான்.. கவல படாதா!”
“அப்போ எதுக்கு டாக்டர்?”
“இது என்ன பேச்சு? ஒரு டாக்டர பார்த்து கேட்டுட்டா நல்லது தானே? உன் ஃபிரண்டு பிருந்தா டாக்டரா இருக்கால்ல, அவட்ட கேளு!”
“மா.. அவ சென்னையில இருக்கா மா..”
“இருந்தா என்ன.. பிருந்தா டாக்டர் தானே? அவ கிட்ட ஒரு நல்ல டாக்டர ரெஃபர் பண்ண சொல்லு!”
”ம்ம்.. ஆனா அவ கைனி எல்லாம் இல்ல.”
“என்ன பண்றா? ப்ராக்டீஸ் பண்றாளா? இல்ல அவளும் சும்மா சுத்திட்டு இருக்காளா?”
“மேல் படிப்புக்கு அவளுக்கு லண்டன் போகணுமாம். பெரிய நியூரோசர்ஜன் ஆகனுமாம்.. அவ மாமா மாதரியே.. இப்போதைக்கு அவ மாமாவோட மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ல வேல பாக்கரா.. அவ அப்பா அவளுக்கு ஆறு மாசத்துகுள்ள மாரேஞ் முடிக்கணும்னு துடிக்கரார்.. ஏதோ ஜாதகத்தில என்னமோனு சொனனா.. சோ, கல்யாணம் செஞ்ச கையோட கிளம்பிடுவா.. டாக்டர் மாப்பிளை வேணுமாம். மாப்பிள லண்டன்ல இருந்தா பெட்டரா இருக்கும்னு ஃபீல் பண்றா!”
“நல்ல மரியாதையான பொண்ணு.. நல்ல இருந்தா சரி தான்.. அவ சொந்த ஊர் இங்க தானே.. அவளுக்குப் போக வர தெரிஞ்சிருக்கும்.. கேட்டு பாரு, இல்லியா.. நம்ம அருணாக்கு பார்த்த ஜெயராணி டாக்டரையே பார்ப்போம். அருணாக்கு சுக பிரசவம் தானே.. ரெண்டு பொண்ணுங்க கிட்டயையும் கேட்டு சொல்லு, அப்பாயின்மென்ட் வாங்கலாம்.”
“மாமிட்ட கேக்கவேண்டாமா?”
“மைனிக்கு தெரியலை.. அவங்களும் விசாரிச்சு சொல்றேன்னு சொன்னாங்க. நமக்கு நல்ல டாக்டர் தெரிஞ்சா.. அவங்களையே பாக்கலாம்னு சொல்லிட்டாங்க!”
“அம்மா.. நான் ஒன்னும் இங்க இருக்கப் போரது இல்ல.. நான் அவர்ட்ட போறேன்.. ஏதோ ஒரு டாக்டர் போதும்.. வெரும் கன்ஃபர்ம் பண்ணி.. ஊருக்கு போரதுல்ல பிரச்சினை எதுவும் இருக்கானு கேட்டுக்கணும் அவ்வளவு தான். நான் அங்க ஒரு நல்ல டாக்டரா பார்த்துகறேன்”
“அதெல்லாம் இருக்கட்டும்… நீ கேட்டு சொல்லு!”
ஒரு வழியாய் தோழிகளிடத்தில் பேசி பார்த்து இருவரும் ஒரே மருத்துவரையே கூற அவரிடமே செல்ல தீர்மானிக்க, ஒரு வாரம்  கழித்தே மருத்துவரை சந்திக்க நியமனம் கிடைத்தது.
நாட்களை நகர்த்துவது அவ்வளவு எளிதாயிருக்கவில்லை. டேனிக்கு மனைவியைப் பார்க்க மாட்டோமா என்றிருக்க, அவளுக்கும் கணவனின் அணைப்புக்குள் அடங்க மனம் துடித்தது. எல்லாம் சரியாய் நடந்தால் சரி தான்!

Advertisement