Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 30
கட்டிலில் அமர்ந்தவள் முதல் வேலையாய் அங்கிருந்த டீ.வி. ரிமோட்டில் டீ.வியை உயிர்ப்பித்தாள்.
எண்ணங்களை மூட்டை கட்டி ஓரமாய் போட்டு, கர்மமே கண்ணாய் காலின் காயத்தைப் பற்றி விசாரிக்க, ஏனோதானோ என்று பதில் கூறியவளிடம், “கொஞ்சம் கூட அக்கரையே இல்லமா பதில் சொல்ர.. இரத்தம் கட்டியிருக்கானு கூடவா பாக்க மாட்ட?” எனக் காய,
ச்சானல் மாற்றிக் கொண்டிருந்தவள் “உங்களுக்கு அக்கரைனா நீங்களே பார்த்து மருந்து போடுங்க.. ஒருதருக்கும் என் மேல அக்கர இல்ல.. சும்மா எதுக்கெடுத்தாலும் என்னையே திட்டிட்டு” கார்த்திக் விட்டு சென்றதும், பாட்டி திட்டியதும் ஒன்று சேர அவன் மேல் எரிந்து விழுந்தாள்.
கோபத்தோடு கையிலிருந்த ரிமோட்டை மெத்தையில் விட்டெறிய, அது கட்டிலைத் தாண்டி மறுபக்கம் கீழே விழுந்தது.
தொலைக்காட்சி அதன் பாட்டில், “மலரே மௌனமா..மலர்கள் பேசுமா?” எனப் பாடிக் கொண்டிருக்க
“இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்..” எனக் கூறிக்கொண்டே காலைப் பார்க்க, இரண்டு முறை ஒரே இடத்தில் அடி பட்டிருக்கவும் அங்கே இரத்தம் கட்டியிருந்தது.
டீ.வியை பார்த்துக் கொண்டே சென்று மருந்தை எடுத்து வந்தவன் அதை அவள் காலில் தேய்க்க, “என்ன எண்ணை இது… நாத்தம் அடிக்குது” என் சிணுங்கினாள்… “என் பாவாடை எல்லாம் நாசம் ஆகிடும்..”
கடுப்பானவன், “அப்போ கழட்டி வச்சிடலாமா?” என்று அவள் முகம் பார்க்க அதன் பின் அவள் ஏன் வாய் திறக்கப் போகிறாள். அவனைப் பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது.
“வலிக்காத மாதிரி நீவி விடுறேன்.. ஒரு ஃபை மினிட்ஸ் பொருத்துக்கோ.. உள்ள இறங்கிடும்.. அப்புறம் சுடுதண்ணி வச்சு துடைச்சிடலாம். எண்ணை இருக்காது.”
இருவரும் அமைதியாய் இருக்க… பாடல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. ரசிக்கும் படியாய் இருக்க, கேட்டுக்கொண்டே எண்ணையைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
பாட்டின் கடைசியில் வந்த குழைவு, அவனை மீண்டும் டீ.வியின் பக்கம் திருப்பியது. கட்டிய மூட்டை கொஞ்சம் கொஞ்சமாய் அவிழ ஆரம்பித்ததோ? மன குரங்கு எங்கெங்கோ கூட்டிச் சென்றது.
“தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே.. 
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிராயே..” என்று அடுத்த பாட்டும் ஆரம்பித்திருந்தது.
புருவத்தை உயர்த்தியவன், தொண்டையைக் கனைத்து விட்டு, பாத் ரூமிலிருந்து சுடு தண்ணி எடுத்து வந்தான்.
அவளை பார்த்தான். யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் காலை நீட்டிக்கொண்டு, வாயைப் பிளந்து பாட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெண்ணீரில் பொறுமையாய் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே எண்ணையைத் துடைத்து எடுத்தான்.
“கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுது..
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே..
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிராயே…”
டீ.வி பக்கம் தலை திருப்பும் போதெல்லாம் அவனை ஏக்கம் கொள்ள வைக்கும் காட்சியே ஒளி பரப்பாக்கி கொண்டிருந்தது.
முட்டி வரை தூக்கி விடப் பட்டிருந்த பாவாடை அதனால் தெரிந்த அழகிய கால் இப்பொழுது அவனுக்கு வேறு கதை சொன்னது. சிறிது நேரம் முன் கட்டி வைத்த மூட்டை தன்னால் முடிச்சு அவிழ, மீண்டும் படையெடுத்தது வாலிப வயதின் ஏக்க அலைகள்
“இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் மோக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு
நேர் மரம் சாய்க்காமல்
முதல் புயல் முடியாது”
அவள் வலி எல்லாம் இப்பொழுது அவன் நினைவில் இல்லை. பளிங்கு போல நீண்டு வழவழப்பாய் இருந்த காலும் அதன் வனப்பும் மட்டுமே அவன் கவனத்தில். அவன் மென்மையாய் அவள் காலை வருட, அவன் கையோடு இதயமும் வழுக்க ஆரம்பித்தது. சிந்தனைகளும் மாற..
அவன் தொடுதலிலிருந்த வித்தியாசம் அவளையும் தாக்க, கொஞ்சமாய் நெளிந்தாள். அவனைப் பார்க்க, அவனும் அவள் முகம் பார்த்தான். அவன் பார்வை அவளை என்ன செய்ததோ.. அவள் கண்கள் தானாய் தரை நோக்கியது. இதயம் வேகமாய் அடிக்க,  அவள் உணர்வுகளும் விழித்துக் கொண்டது. டி.வி. பக்கம் தலையைத் திருப்ப.. அது உதவவில்லை அவளுக்கு! ரிமோட்டை தூக்கிப் போட்டதிற்காய் வருந்தினாள்.
“போதும்.. வலி போயுடுச்சு” பாவாடையை இறக்கிக் கொண்டே சொல்ல அவள் பாதத்தை எடுத்து அவன் மடியில் வைத்துக் கொண்டான். அவள் கால் விரல்களை அவன் நீவ, அது அவள் தலை வரை அனல் பரப்பியது. குனிந்து அவள் விரல்களில் அவன் இதழ் பதிக்க, அதன் ஈரம் அவள் உடல் முழுவதும் சிலிர்த்தது.
“எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்..
அது தினம் தினம் வரும் மீண்டும்…
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்கள் ஆகும்..”
நேரம் காலம் தெரியாமல் தொலைக்காட்சி அவர்களுக்குத் தூபம் போட்டு, தூண்டி விட்டுக் கொண்டிருந்தது.
காலை சரேல் என உருவியவள் வெளியே பால்கனிக்கு ஓடிச் சென்றிருந்தாள். இதயம் தாறுமாறாய் பட படத்தது. இது வரை இப்படி நடந்ததில்லை. அவனின் மறுபெயரே மிஸ்டர்.கட்டுப்பாடு தான். முன் காலத்தில் முனிவனாய் பிறந்திருப்பானோ என்று எண்ணிய காலங்களும் உண்டு! விஸ்வாமித்திரன் தவத்தை கலைத்த மேனகையே இவள் தானே..
இழுத்து மூச்சு விட்டவள், சமன்படுத்த நினைத்த மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல், அங்கிருந்த விரிந்தும் விரியாமலும் இருந்த மல்லி மொட்டுக்களைப் பறிக்கச் சென்றாள்.
அவள் பின்னோடு வந்த அவனும் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். பாடல் இன்னும் ஒலித்து கொண்டே இருக்க.. அவனுக்கும் இன்னும் வேண்டும் போலவே இருந்தது. அவனால் அவளைப் போல வெளி வர முடியவில்லை.
கண்ணெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கீழே வாசல் கதவின் அழைப்பு மணி கேட்டது. அவன் மனதில் பதியவில்லை. அம்மா இல்லை! வேறு யாரோ வந்திருக்க வேண்டும். அம்மா ஏற்கனவே வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் ராமுவிடமிருந்து இந்நேரம் இவனுக்கு இன்டெர்காமிலிருந்து அழைப்பு வந்திருக்கும். யாராய் இருந்தால் அவனுக்கு என்ன? அவன் அதி முக்கியமான வேலையிலிருந்தான். கண்ணெடுக்காமல் சுதாவைப் பார்க்கும் வேலையில்..
அவனுக்கோ உடலெல்லாம் உஷ்ணம் பரவிக் கொண்டிருந்தது. மூச்சு முட்டுவது போல் இருக்க,  அவளோ ஒன்றும் நடவாதது போலக் கதை அடித்துக் கொண்டே பூ பறித்து கொண்டிருந்தாள். தலை மேலிருந்த மொட்டுகளை கை உயர்த்தி எக்கி எக்கி பறிக்க, காற்றில் கொஞ்சமாய் விலகிய தாவணி அவனைப் பாடாய்ப் படுத்தியது.
உள்ளே எழுந்து செல்லவும் மனதில்லை..    கண் சிமிட்டாமல் பார்த்து அமர்ந்திருந்தான். ‘அவள் என்னுடையவளே.. பார்த்தால் என்ன’ என்று அவனையே கேட்டு கொண்டான். இப்பொழுது தயக்கமே இல்லாமல் ரசித்தான்.
அவள் நாக்கில் ஏதோ புகுந்துகொள்ள
“என்னத்த பார்த்திட்டு இருக்கீங்க?”
‘கவனித்து விட்டாள் போலும்’ ஒருவழியாய் பார்வை அவள் முகத்தை நோக்க, அவள் இன்னும் மேலிருந்த பூக்களை பறிக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.
அவன் முகம் பார்க்காமல், “அங்க சும்மா உக்காந்திருக்கதுக்கு இங்க வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமில்ல”
அருகில் வந்தவன், “என்ன ஹெல்ப்?” என
“மேல இருக்கப் பூவ பறிக்கணும்” என்றாள்.
நின்ற வாக்கில் குனிந்தவன் அவள் முட்டிக்கு மேல் பகுதியில் கைகளைச் சுற்றித் தூக்கினான். “இந்த ஹைட் போதுமா?”
அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி பயந்தவள், “என்னை யாரு தூக்க சொன்னா? நீங்கப் பறிக்க வேண்டியது தானே?”
“வேணும்னா பிச்சுக்கோ.. இல்ல இறக்கி விடறேன்.. என்னால பறிச்சு தர முடியாது.”
மேலிருந்த பூக்களைப் பறித்துக் கொண்டே, “ரொம்ப பண்றீங்க.. அம்மா இருக்கும் போது நான் கேட்டா செய்யறீங்க.. இன்னைக்குப் பறிக்க என்னவாம்?”
அவள் பேசியது எதுவும் காதில் விழ வில்லை. இது வரை தூர இருந்து பார்த்ததை, மிக அருகில் பார்த்து கொண்டிருந்தான்.
அவன் இரத்த நாளங்கள் சூடேற, அவள் வெற்று இடையால் மட்டுமே அவன் தவிப்பை அடக்க முடியும் என்று நினைத்தானோ? அவளின் பளிங்கு வயிற்றில் முகம் புதைத்து நின்றான். இது வரை பறித்து தாவணியில் பொதிந்து வைத்திருந்த மலர்களால் அவனுக்கு மலராபிஷேகம் நடந்தது.
கூச்சம் பிடுங்கித் தின்ன அவனிடமிருந்து விடுபட நெளிந்தாள். அவன் விட்டால் தானே இறங்குவது. அவள் நெளிய நெளிய அவனுக்கு இன்னும் பரவசம் கூடியது.
“விடுங்க..” அவளுக்கே கேட்கவில்லை.
அவன் முகத்தில் உரசிக்கொண்டே அவளைக் கீழே இறக்கினான். இருவர் உடலும் ஜிவ்வென்றது. அவள் கழுத்தில் முகம் புதைத்து அணைத்திருக்க, இருவர் இதயமும் பந்தயம் வைத்து அடித்துக் கொண்டிருந்தது.
சுதாவின் மென்மை முதன்முதலாய் அவன் உடலிலும் மனதிலும் வயதுக்கேற்ற மாற்றுகளைச் செய்ய, அவனோடு அவளையும் உணர்ந்தான். 
‘இவள் என்னவள்.. எனக்கு மட்டுமே சொந்தமானவள்.. என்னுள் சரி பாதி’ மனம் கூப்பாடு போட்டது.
அவன் காதல் பொங்கும் கண்கள் காதலையும் தாண்டி எதையோ கெஞ்ச, அவளும் தடை போடவில்லை.
இந்த புது உணர்வின் தாக்கத்தில், கழுத்தில் இதழ் பதிய, “சுதா..சுதா” என்று மந்திரம் போல முணுமுணுத்துக்கொண்டே இருந்தான். அவன் பிதற்றல் அவளை ஆகாசத்தில் இறக்கையின்றி பறக்கவிட்டது. அவள் ஏதோ பேச வாய் திறக்க, அவன் இதழ் அவள் பேச்சை வெளி வரவிடவில்லை. இன்று அவன் கையும் வாயும் அவன் பேச்சைக் கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. வெற்றிடையை மேய்ந்து அவன் கைகளோடு இதயமும் மேடுகளைத் தாண்டி குன்றுக்குள் சருக்க.. இருவருக்கும் ஒரு இன்ப அவஸ்த்தை. வேண்டாம் என்னும் தருணம் அவள் கண் பட்டென்று திறக்க.. வேண்டும் என்று அவள் திறந்த இமையை மூட வைக்க கற்றிருந்தான்.
இருவரும் தங்களை மறந்த தருணம்… காதலில் காமம் துளிர்த்த தருணம்.. இடம் பொருள் ஏவல் மறந்த தருணம்.. தங்களையே மற்றவருக்குள் துலைத்துக்கொண்டிருந்த தருணம்.. ஒன்றோடு ஒன்றாய் உருகிக் கரைந்து.. கண் மூடி அனைத்தையும் பார்த்த உணர்வுப் பூர்வமான நேரம்.. பூசை நேரக் கரடியாய் ஏதோ கீழே விழும் சத்தம் அவனை சுய நினைவிற்குத் திரும்பி வரச் செய்தது. எரிச்சலாய் வந்தது.. அவளிடம் இருந்து பிரிவதா.. மனம் வரவில்லை.  
இதழும் கையும் ஒருவழியாய் மனதே இல்லாமல் வேலை நிறுத்தம் செய்தது. அவள் செவிகளின் எதுவும் விழுந்ததற்கான அறிகுறி இல்லை. அவன் அணைப்பிலிருந்து அவளை விடவில்லை.  
மெதுவாய் அவளிடமிருந்து தன்னை பிரித்தவனை அவளால் எதிர் கொள்ள முடியவில்லை.
வெட்கம் தாண்டிய தன் நிலை நினைத்தாளோ இல்லை இன்னும் ஒட்டிக் கொண்டிருந்த நாணத்தாலோ.. தலை குனிந்து முகம் சிவந்து நின்றவள் முகம் பிடித்து நெற்றி, கண் இமைகள், சிவப்பேறிய கன்னங்கள், உதடு என அழுத்தி அவன் முத்திரைகளைப் பதித்த பின்னே விட்டான்.
அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அவள் அமர, அறைக்குள் சென்றவன் முகம் கேள்விக் குறியாய் மாறியது.
கீழே விழுந்து உடைந்து போயிருந்தது அவன் அறை ஓரத்திலிருந்த விலை உயர்ந்த கலைப் பொருள்.
நெருப்பு கோழி முட்டையில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கண்ணைப் பறிக்கும் விதமாய் செதுக்க பட்ட  கலைப் பொருள் அது. ஐரோப்பா கண்டம் சென்றிருந்த போது அது போல் வடிவமைக்கப் பட்ட முட்டையைப் பார்த்து, அது பிடித்துப் போய், அவன் ரசனைக்கேற்ப சொல்லி வடிவமைக்கச் செய்து, ஒரு லட்சம் கொடுத்து வாங்கியிருந்தான். அது ஒரு ஸ்டான்டோடு கண்ணாடி கேஸ்சில் இருந்தது. 
இடித்து தள்ளினாலே ஒழிய அது கீழே விழச் சாத்தியம் இல்லை.
‘யாராயிருக்கும்? என்ற கேள்வியோடு நின்றுவிட்டான். சுசிலாவும் சுதாவையும் தவிர அவன் அறையில் ராமு மைதிலி மட்டுமே வருவார்கள் அதுவும் அவன் அனுமதியுடன் அவன் இல்லாத வேளை அதைச் சுத்தம் செய்ய.. வேறு வேலையாட்களைக் கூட அனுமதித்ததில்லை.
சுசிலா வரும்போதே குரல் கொடுத்துக்கொண்டே தான் வருவார்..
யார் வந்தது? எதற்கு?
யாராயிருந்தாலும் கீழே சென்றதும் தெரிந்துவிடும்.. ஆனாலும் அவனுக்கு யாரோ ஒருவர் அவன் அறைக்கு வந்தது சுத்தமாய் பிடிக்கவில்லை. அவனைப் பொருத்தவரை இது அவனுக்கும் அவன் மனைவிக்குமான இடம்.. அவளோடு அவன் இருக்கையின் அவன் அனுமதி இன்றி யாரோ உள்ளே வந்தது எரிச்சலைக் கிளப்பியது.
சுதாவை அவன் மற்றவர் முன் ஆசை பார்வை கூட பார்க்க மாட்டான். அதனால் தானோ சுசிலாவிற்கு அஷோக்கின் பிடித்தம் இன்னும் தெரியவில்லை. இவன் இப்படிப் பட்டவனாயிருக்க.. அவன் முழு உணர்ச்சியில் சுதாவோடு அதிக நெருக்கமாய் இருந்ததை எப்படி ஒருவர் பார்க்கலாம் என்ற எண்ணம்.. உள்ளுக்குள் எரிமலையாய் எரிந்தது.
அவன் வீட்டில்.. அவன் அறையில் அவனுக்குத் தனிமை இல்லையா? ‘நினைத்தவர் வந்துவிடும் அளவிற்கு என் வீட்டை வைத்திருக்கின்றேனா? யாருக்கு அத்தனை மிதப்பு.. என் அனுமதியின்றி என் அறையில்?’
இதே யோசனையில் அவன் அறையில் நின்று கொண்டிருக்க.. நேரம் காலம் தெரியாமல் அவன் கைப்பேசி அழைத்தது..
“என்ன மூர்த்தி..” வந்த எரிச்சலை உள்ளுக்குள் போட்டு புதைத்துக்கொண்டான். வேலை விஷமான பேச்சு
“என்ன மூர்த்தி எல்லாரும் என்ன பண்றீங்க? இன்னும் ஒரு வாரம் கழிச்சு  தானே போரதா இருந்துது.. மூணே நாள்ல என்னலாம் பாக்கரது… த்ரீ டேஸ் காப்ல எத்தன தரம் நான் அப் அண்ட் டவுன் ஃப்ளை பண்ணனும்? நிஜமாவே நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்கனே தெரியலை.. கழுத்தை நெரிக்கர அளவுக்கு ப்ரெஷர் என் மேல போடாதீங்க..” எனக் காய்ந்தான்
“..”
“இது ஏன் மாலினி என் கிட்டச் சொல்லலை? தண்டத்துக்கு வந்துட்டு போங்க எல்லாரும். நாளைக்கு காலைல நைன்-கு நான் மும்பை ஆஃபீஸ்-ல இருக்கணும்.. நீங்களும் தான். க்ளையண்ட் பார்ட்டி சென்னைல வேண்டாம்.. என்னால சும்மா சும்மா இங்கேயும் அங்கேயுமா அலைய முடியாது. சேஞ் தீ அரேஞ்மென்ட்ஸ்.. அங்கேயே முடிச்சிடலாம். அங்க இருந்தே கிளம்பறேன்..” இன்னும் சில விஷயங்கள் பேசி வைத்தான்.
வேலை கழுத்தை நெரித்தது. லண்டன் போகவேண்டிய தினம் அருகில் நெருங்கிக் கொண்டிருக்க புது புது குழப்பங்கள்.. மாறுதல்கள்.. ஒரு வாரம் கழித்துச் செய்ய வேண்டிய வேலை மூன்றே நாளில்.. இதற்கு இடையே நாளையே ஒரு க்ளையண்ட் மீட்டிங் மும்பையில். சென்னையில் நடக்க வேண்டியது..
ஏக பட்ட மாற்றங்கள்… விடியலில் மும்பை பறந்து வேலை முடித்து, இரு தினங்கள் அங்கு குடும்பத்தோடு இருந்துவிட்டு, இந்த டீலையொட்டி பெரிய அளவில் சம்பந்தப்பட்டவர்களோடும் பெருந்தலைகளோடும்  பார்ட்டி.. அதை முடித்து மறுதினமே ஸ்விஸ்.. பின் லண்டன்.. இது சரியாய் முடியும் பட்சத்தில் பாரீஸ். எல்லா வேலையும் முடிய ஆறு வாரங்கள்.. நினைக்கையில் மலைப்பாய் இருந்தது.
சுசிலாவிடம் பேச வேண்டும்… கடைசி நிமிட குளறுபடி சுசிலாவிற்கு பிடிக்காது. அவருக்கு எல்லாம் சரியாய் இருக்கவேண்டும். அவரிடம் பேசி, சம்மதிக்க வைத்து… ‘ஹப்பா..’ என நடந்தவன் காலில் குத்தியது உடைந்த முட்டை.
மீண்டும் முருங்கை மரம் ஏரியது வேதாளம்… அப்படி ஒரு எரிச்சல் அவனுள்..
சுதாவோ இதை எதுவுமே அறியாமல் அவள் சிந்தனையில்.
அஷோக்கை உயிராய் நேசித்தாள். முதல் முத்தம் பதித்ததுமே அவள் சரி பாதியாய் கண்ணன் மாறியிருந்தான். இன்று கொஞ்சம் எல்லை மீறல் வேறு… இருவர் உணர்ச்சிகளும் கட்டுக்குள் இல்லை என்பது வெளிச்சம்.
வெறும் உணர்வு மட்டும் கண்ணனைத் தேடவில்லை.. சற்றுமுன் அனுபவித்த புது சுகம்.. உணர்வோடு உடலும் அவனைத் தேடியது. 
அவனும் அப்படி தானே உணர்கிறான்.. சுதா சுதா.. என்று பிதற்றினானே.. இதற்கு மேல் ஏன் தள்ளி இருக்க வேண்டும்.
ஒன்று சேர தடை இல்லை. சுசிலாவிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவர் திருமணவேலையை ஆரம்பித்துவிடுவார்.. ஒரு முறை ருசித்தாயிற்று.. இனி அடிக்கடி மனம் இதையே கேட்கும்.. திருமணம் செய்வது தான் சரி..
சுதா இப்படி நினைத்துக் கொண்டு.. அவன் மார்பில் மனைவியாய் முழு உரிமையோடும் சாயும் தருணத்தை கனவு காண, பால்கனி வந்தவன் முகத்தில் எள்ளும் கொள்ளும்..
பாவம் அதை அவள் கவனித்தாளில்லை.
அவள் அங்கிருந்த நாற்காலி விளிம்பில் அமர்ந்திருக்க அவன் அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் இன்னும் அதே கடுகடுப்பில்.
அசை முழுவதும் கண்ணில் தேக்கி உள்ளத்தில் காதல் பொங்க, “கல்யாணம் பண்ணிக்கலாமே..” என்றாள் ஏக்கமாய்.
அவ்வளவு தான் கேட்டாள், எங்கிருந்து அவனுக்கு அத்தனை கோபம் வந்ததோ.. கோபம் வந்த வேகத்தில் அவன் எழும்பி அவள் அருகில் வர ஊஞ்சல் உச்சக்கட்ட வேகத்தில் ஆட ஆரம்பித்தது.
அப்பொழுது தான் அவன் முகம் பார்த்தாள்.. ஏன் இத்தனை கோபம் புரியவில்லை அவளுக்கு! என்ன கேட்டுவிட்டேன்.. அவள் விழிக்க.. நெருப்பாய் அவள் தலையில் விழுந்து அவன் வார்த்தைகள்.
“உனக்கு வேற நினைப்பே இருக்காதா? எத்தன தரம் சொல்றது எனக்கு டைம் கொடுனு! நான் என்ன சும்மாவா சுத்திட்டு இருக்கேன்.. ஆயிரம் வேலை இருக்குத் தலை மேல..  நாளைக்கு ஆரம்பிச்சா ஆறு வாரத்துக்கு மூச்சு விட கூட நேரம் இல்ல. இதில கல்யாணம் ஒன்னு தான் கேடு..
நீ என்னை விரும்பர தானே.. இவ்வளவு கூட என்ன நம்ப மாட்டியா? என் விரல் உன் மேல படனும்னா நான் உன்ன கல்யாணம் பண்ணியிருக்கணுமா? தாலி என்ன.. நான் உன்ன தொடுறதுக்கான பர்மிட்டா? அப்படியே.. நான் தாலி கட்டாமா தொட்டா கரஞ்சு ஒன்னும் போயிட மாட்டியே.. மனசில என்ன பத்தினி தெய்வம்னு நினைப்பா?..” என்ன பேசுகிறோம் ஏன் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம்.. எதுவும் உணராமல் மூளைக்கும் நாக்கிற்கும் சம்பந்தமே இல்லாதது போல் சுள்ளென்று அவள் மேல் எரிந்து விழுந்தான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அவன் வார்த்தைகள் இடியாய் இறங்கியது இதயத்தில். அவள்  இருந்த மனநிலைக்கு இது முற்றிலும் மாறான நிலை.. “என்ன பேசிவிட்டான்? என்னென்ன பேசிவிட்டான்? மனைவியாகத் தானே கேட்டேன்.. சொல்லி காட்டிவிட்டானே? நான் அவன் மனைவியாகத் தகுதியில்லை என்று நினைக்கிறானோ? இதைத் தான் பாட்டியும் சொன்னாரோ? இவனும் நான் சுத்தமில்லையென்றுவிட்டானே..’ அவள் மனம் அவனுக்கும் மேல் குதிரையாய் சீரி பாய்ந்தது.
ஒரு நொடி அவன் யோசித்துப் பேசி இருக்கலாம். அவன் அவளை அணுஅணுவாய் நேசித்தான்.. யோசிக்காமல் பேசிவிட்டான்.. ஆம்.. நிஜத்திற்குமே அவன் யோசிக்கவே இல்லை அவன் சொன்ன வார்த்தையின் ஆழத்தையும் அது அவளிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும்!
இதையே முன் சொல்லியிருந்தால்.. அவளிடம் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.. ‘ஆமா பத்தினி தான்! இல்லேனாலும் இப்போ என்ன?’ என்றிருப்பாள். ஆனால் இன்றைய நிலையே வேறு! அவள் மறக்க நினைத்தாலும் ஏனோ இன்று பாட்டியின் தேவையில்லா பேச்சு ‘அதையே’ தான் அவளுக்கு நினைவூட்டுகிறது.
அவள் முகம் விழுந்து போக.. அழுகை முட்டிக் கொண்டு வர.. அமைதியாய் அவன்முன் நின்றாள். அவன் பேசி முடிக்கவும், “த்தாங்க்ஸ்.. என்  நிலையை நினைவுபடுத்தினதுக்கு! நான் கிளம்பறேன்..” என்று அவள் நகரவும் தான் அவனுக்கு உறைத்தது..
“சுதா.. சுதா.. ப்ளீஸ்.. நான் சத்தியமா அப்படி நினைக்கல.. நிஜத்துக்கு நான் எதுவுமே நினைக்கல… யார் மேலோ இருந்த கோபம்.. சாரி டி லட்டு.. நான் உன்கூட இருந்ததை யாரோ பார்த்த உணர்வு பிடிக்கலை.. ஏதேதோ பேசிட்டேன்.. வேலை வேர.. ப்ளீஸ் சுதா புரிஞ்சுக்கோ.. கல்யாணம் தானே பண்ணிக்கலாம்.. நான் வேலையா போறேன்.. வந்ததும் நம்ம கல்யாணம் தான்..” அவள் கையை பிடிக்கவும்..
அவள் முகத்தில் அப்படி ஒரு வேதனை… ‘திருமணம் செய்ய வேண்டும் என்பதை அவன் உணர வேண்டாமா.. இது என்ன தேர்தல் முன் தரும் வாக்குறுதிப் போல்..?’
“ப்ளீஸ்..” என்று கண்ணீர் நிறைந்த கண்ணை விரித்து.. நா தழுதழுக்க அவன் முகம் பார்த்தவள், “எல்லாருமே என்னைக் கீழா பாக்கர நிலைல தான் நான் இருக்கேனா? இதற்குத் தான் நான் வேண்டாம் போரேன்னு சொன்னேன்.. எல்லை மீறாத நீங்க.. என்னை அப்படிபட்டவளா நினைக்கவே தான்.. அதுனால தான் நீங்களே.. என்கிட்ட.. இப்போ?” வார்த்தைகள் வரவில்லை. கையை உருவியவள் வேகமாய் சென்றுவிட்டாள்.
எல்லாம் தவறாய் போய்விட்ட உணர்வு. தேவையே இல்லாமல்.. ச்ச… அவனைப் பார்த்தே அவனுக்கு எரிச்சலாய் வந்தது. ‘ஒரு கேள்வி தானே கேட்டாள்.. உனக்கும் அது பிடித்தம் தானே.. சரி என்ற ஒற்றை வார்த்தை சொல்ல உனக்கு என்ன கேடு?’
‘எத்தனை ஆசையாய் அவளைத் தொட்டேன்.. என்னவள் என்ற நினைப்பில் தானே.. காதலில்லா காமுகனாய் நினைக்க வைத்து விட்டேனே..’  இனி என்ன செய்ய வேண்டும் என்று கூட அவனுக்கு உதிக்கவில்லை. தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். அவளை சமாதானம் படுத்த அவகாசமும் இல்லை. அடுக்கடுக்காய் வெளியூர், வெளிநாட்டுப் பயணம் அவனுக்காகக் காத்திருந்தது.
கார்த்திக் அவளை விட்டுச் சென்றதே அவள் மனதில் பெரிய பாரத்தை ஏற்படுத்தி இருக்க.. பாட்டி வார்த்தையால் அவளைக் கொல்லுவது போதாதென்று இவனுமா… சோர்ந்துவிட்டாள்.
எதுவுமே பிடிக்கவில்லை. அழவும் தான்!!

Advertisement