Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_2
நிசப்தம் தகர்க்கபட்டது.
“கிளம்பறீங்களா?” என்றாள்.
அவன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள்.
“மூனு மணி நேரத்தில நியூயார்க் ஃப்ளைட். நாளைக்கு அங்க இருந்து சென்னை”
“ஓ..”
“சொல்லு என்ன விஷயம்?” என்றான், கேள்வியாய் அவள் முகம் பார்த்துக்கொண்டே.
தயக்கத்தோடே ஆரம்பித்தாள்.
“நேத்து என் கூட பேச கூடாதுனு சொன்னீங்க…?”
“ஆமா.. அதுக்கு என்ன இப்போ?”
“ஏன்?”
“அத தெரிஞ்சுக்க தான் வந்தியா?”
“ம்ம்..”
“வேற ஒன்னும் சொன்னேனே?”
“என்ன?” என்றாள் ஆர்வமாக
“பாய்-னு!”
“பச்… சொல்லுங்க ஏன் என் மேல கோபம் உங்களுக்கு? ஏன் என் கூட பேச கூடாதுனு சொன்னீங்க?”
“ஏன்னு என் கிட்டயே கேக்கறீயா? உனக்குத் தெரியாதா?” முகத்தின் மென்மை போன இடம் தெரியவில்லை.
“இல்ல… தெரியல. நீங்க சொன்ன தான் தெரியும் உங்க பிரச்சினை என்னனு”
“எனக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கு. இப்போ என் பிரச்சினையை தெரிஞ்சு, நீ என்ன பண்ண போற? செத்தா சாகுனு விட்டுட்டு போனவ தானே நீ… இப்போ என் முன்னாடி என்ன சாதிக்க வந்திருக்க?” மீண்டும் கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.
“ஏன் இப்படி எல்லாம் பேசரீங்க?” நா தழுதழுத்தது.
“வீட்டில உன் புருஷனையும் பிள்ளையையும் விட்டுட்டு இங்க என்ன பண்ற சுதா?” எரிச்சலாய் வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.
“…” அவன் பேச்சு அவளுக்கு வலியைக் கொடுக்க.. பேச்சு வரவில்லை.
“நீலிக் கண்ணீர் மட்டும் வடிச்ச… நீ யாருண்ணு கூட பார்க்க மாட்டேன். அறைஞ்சிடுவேன்”
நீண்ட மௌனம்.
நேரத்தைப் பார்த்தவன், “என் கோட்ட கொடுத்ததுக்கு ரொம்ப தேங்கஸ். கிளம்பு சுதா. எப்பவும் போல உன் வேலையை பாரு போ… எனக்கு நேரமாகுது” என்றான் பொறுமையாக. உள்ளுக்குள் எரிமலை சீறிக்கொண்டிருந்தது.. வார்த்தையில் காட்டவில்லை.
அவனைப் பார்த்து நின்றாளே தவிர அவளிடம் எந்த அசைவும் இல்லை. கையை மார்புக்கு குறுக்காய் கட்டி சுவரோடு சுவராய் நின்றிருந்தவள், சிலையாய் நின்று கொண்டே இருந்தாள்.
அவள் பார்வை அவனை ஏதோ செய்ய, அது அவனுக்குப் பிடிக்கவில்லை. தன்னை ஒரு பொருட்டாக கூட நினைக்காதவளைப் பார்த்து ஏன் மனம் இளக வேண்டும்? தனக்குள் இறுகிக் கொண்டான்.
“கிளம்பு சுதா!” இரண்டே சொற்கள்.. அதில் சூடு மிக அதிகம்.
“மாட்டேன். நீங்க உங்க பிரச்சனையை சொல்ர வரைக்கும் நகர மாட்டேன்!”
அவள் வீம்பாய் நிற்க… அவன் இழுத்துப் பிடித்திருந்த பொறுமை நிமிடங்களோடு கரைந்து போயிருக்க, “என்ன தெரியணும் உனக்கு? என் பிரச்சனை தானே தெரியணும்..? சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. நீ தான்! நீ மட்டும் தான் என் பிரச்சினை! என்னை வாழவும் விடாம சாகவும் விடமா உயிரோட சாகடிக்கர நீ தான் என் பிரச்சினை.
இருக்க வாழ்க்கையை வாழாம, பேரு கூட தெரியாத உன்ன நினைச்சு.. உன் நினைவிலேயே செத்திடலான்னு நினைச்சா… அதுவும் ஒட்டிகிட்டு என்னை விட்டுப் போய் தொலைய மாட்டேங்குது! நான் உன் நினைவா உயிரோட இருக்கது தான் என் பிரச்சினை. அது எவ்வளவு பெரிய தப்புனு உனக்கு தெரியுதா? 
யாரு நீ? எனக்கு நீ யாரா இருந்த? அது தெரியல.. அது தான் என் பிரச்சினை.
உன்ன என்னைக்கு அந்த பாழாப்போன ஆஸ்பத்திரில பார்த்தேனோ அன்னைக்கு போச்சு என் நிம்மதி! நீ யாருனு தெரியாம… என் கனவில வரவ தான் நீனு நினைச்சு உன் கிட்ட வந்தா… அப்போ தான் தெரிஞ்சுது நீ கார்த்திக்க விரும்பறனு. அப்போ கனவுல வந்தவ? அவ யாருனே தெரியல! நீ தான் எனக்கில்லனு ஆகிடுச்சேனு என் மேல உயிரா இருந்தவளுக்கு வாக்கு கொடுத்தேன். நீ விட்டியா? திரும்பவும் கனவில வந்து டார்சர் பண்ணின… நேர்ல வந்து கேட்கலாம்னு  பார்த்தா நீ போய்ட்ட! நான் எனக்கும் உண்மையா இல்ல… என்னை நம்பி வந்தவளுக்கும் உண்மையா இல்லை. உன்னால, என் மனசோட அவ மனசையும் சுக்குநூறா உடைச்சிட்டேன்.
தெரியுதா என் பிரச்சினை என்னனு?
எனக்கு மன நோய். இருந்தேன் உன்னால.. ஆறு மாசம் பைத்தியக்கார ஆஸ்பத்திரில! இப்போவும் அங்க தான் போக போறேன்.. ஏன் தெரியுமா? ஏன்னா நேத்து நைட்டும் அசிங்கம் பிடிச்சக் கனவைக் கண்டேன்.
ஒருத்தன் பொண்டாட்டி… ஒரு குழந்தைக்கு அம்மா நீ…. உன் கூட நான் நெருக்கமா இருக்க மாதரி கேவலமான கனவு கண்டேன். இது தான் என் பிரச்சினை. தெரியுதா? நான் ஒரு கேவலமான சைக்கோ… அடுத்தவன் பொண்டாட்டி கூட… அவளுக்கே தெரியாம, அவ கூட கனவில வாழர கேவலமான அறுவெறுப்பான சைக்கோ நான்!
என்னால இந்த நரகமான வாழ்க்கை வாழ முடியல! செத்து தான் போகணும்… அது நடந்தா என் பிரச்சனை முடியும்!”
“கண்ணன்..?” கத்திவிட்டாள். அவள் கண்ணீர் அவனுக்குள் அப்படி ஒரு கோபத்தை கொடுக்க..
அருகில் வந்தவள், “சாரி..” சொல்லி முடிக்கவில்லை
“வாய மூடு! எவனுக்கு வேணும் உன் சாரி!”
“ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க..”
“உன்ன பேச வேண்டாம்னு சொன்னேன்.. சொன்னேனா? வாய மூடு. பேச வேண்டிய நேரம் எங்க போன? இப்போ எதுக்கு வந்த? இருக்கேனா… இல்ல பைத்தியம் முத்தி செத்துடேனானு பார்க்க வந்தியா?”
அவள் சுவரோடு இருக்க அவன் கரம் அவள் கழுத்தில்!
ஏன் இத்தனை கோபம்? இது வலியால் வந்த கோபம். இரவு, மலைப் பிரதேசத்தில்.. ஒரே கட்டிலில் அவன் மேல் அவள் படுத்திருக்க.. அவன் அவளை அணைத்திருக்க.. அது தந்த கோபம். முன் தினம் அவள் மேல் வந்த நறுமணம் சில நினைவுகளைத் தூண்டி விட்டிருக்க.. அதனால் வந்த நினைவலைகள் அவனுள் ஒரு அருவெறுப்பை கொண்டுவந்திருக்க… அதை அவள் மேல் காட்டிக் கொண்டிருக்கின்றான்.
“என்ன சொல்ல போர? சாரி அஷோக்… நீ என்ன பேசரனே தெரியலை. உன்ன ஃப்ரெண்டா நினைச்சு தான் பழகினேன். நான் அறியாம தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்கோ! நான் அப்படி எல்லாம் நினைச்சு உன் கூட பழகலனு சொல்ல போறியா? அத நீ சொல்லி தான் எனக்கு தெரியணும்னு இல்ல!
என்ன தெரியணும்னு கேட்டியே… எனக்கு தெரியணும்! உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருந்ததுனு தெரியணும். இந்த கனவெல்லாம் ஏன் வருதுனு தெரியணும். என் வாழ்கையோட இருண்ட போன பக்கங்கள் தெரியணும். சொல்ல முடியுமா? முடியாதில்ல… வெளில போ..”
அவன் கத்த… அவன் கோபம் கை வழி அவள் கழுத்தில் இறங்கியது. கை அவள் கழுத்தை நெரிப்பதை அவன் உணரவே இல்லை. அசையாது நின்றிருந்தவள் கண்ணீர் அவன் கையை நனைக்கும் வரையுமே அவன் உணரவேயில்லை.
சூடான கண்ணீர் அவனை நிலைக்குக் கொண்டு வர.. சட்டென்று கையெடுத்தவன்.. நொந்தே போனான்.
“போ சுதா… என்னை விட்டு போய்டு..” என்றான் விரக்தியாய்.
தொண்டை வலிக்க, கண்ணீரோடு அவனையே பார்த்து நின்றாள். 
நெற்றி காயத்திலிருந்து இரத்தம் புருவம் வரை வழிந்து நின்றது.
இருமிக் கொண்டே ஒரு வாய் நீர் அருந்தியவள், அங்கிருந்த குளியலறையிலிருந்து முதலுதவி பெட்டியோடு வந்தாள்.
அவனை அமரவைத்தவள், நெற்றி காயத்தைச் சுத்தம் செய்து கொண்டே, “ரொம்ப ஆழம் இல்ல… ஆனா ரத்தம் கசியுது.” என்றாள், ஒன்றுமே நடவாதது போல்.
“சோ உங்களுக்குத் தான் அந்த பொண்ணுங்க அர்ச்சனை பண்ணிட்டு போனாங்களா?”
சூழ்நிலையை இயல்பாக்க நினைத்தாள். பயனில்லை.
அவன் வாய் திறந்தானில்லை. முகம் பார்க்க, கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.
காயத்தைத் துடைத்துச் சிறு பாண்டேஜ் போட்டவள் கண், அருகிலிருந்த தழும்பில் நிலைத்தது. கோர விபத்து கண்முன் தோன்றி மறைந்தது. உயிரோடு இருவரை விழுங்கிய விபத்து. உச்சி முதல் பாதம் வரை மின்சாரம் பாய்ந்து மறைந்தது.
கை நடுங்கத் தழும்பை வருடினாள். காயாத காயங்கள் ஏது? காலத்தின் கையில் ஓர் மந்திர கோல் உள்ளது. காலம் மாற காயங்களும் காயும். இதோ இந்த காயம் ஆறிவிட்டதே. ஆனால் இதோடு சேர்ந்து வந்த மனக்காயம்? ஆறாமல்.. அது தந்த வலி மட்டும் நிரந்தரமானதேனோ?  
எல்லா காயங்களுக்கும் பின் உணர்வுப் பூர்வமான கதை இருப்பதில்லை. ஆனால் இந்த தழும்பு.. இது ஒரு வித்தியாசமான தழும்பு… ஆறு மாத காதலைப் பறைசாற்றும் தழும்பு! மேலே தழும்பாய் மாறினாலும் உள்ளுக்குள் இன்னும் உயிரோடு.. ரத்தமும் சதையுமாய் ஒன்றிப்போன காதல் கதையைச் சொல்லும் தழும்பு அது.
காதல் மாறவில்லை… அடி நெஞ்சம் வரை சென்று தித்தித்த காதல்.. வெளிக் காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளே அடைத்துக்கொண்டு வலியை மட்டும் இன்றும் தந்தது.
உள்ளிருக்கும் காதல் வெளிவந்துவிடாமல் அதை வெள்ளை  துணி போட்டு மூன்று வருடம் முன் மூடிவிட்டனர். மலர் வளையம் வைத்தாயிற்று. மறந்து விட்டோம்.. மாறிவிட்டோம் என்றனர். அதற்குச் சாட்சியாய் இழுத்து பிடித்த புன்னகை! என்றாவது ஒரு நாள் தங்களையும் மறந்து கல்லறை முன் நின்று விடுவதுமுண்டு!
இன்றும் அப்படி ஒரு நாள்.   
நெற்றி தழும்பை விரல் நடுங்கத் தடவ.. மனம் பல கேள்விகள் கேட்டது.
‘பார்த்த மாத்திரத்தில் ஏன் காதல் வயப்படவேண்டும்? நாளை என்று ஒன்றில்லாதது போல் ஏன் காதலிக்க வேண்டும்? எதிர்பாராத வேளை ஏன் கனவாய் எல்லாம் கலைய வேண்டும்?
மணிக் கணக்காய் போட்டுக் கொண்டிருந்த ரங்கோலி கோலம் முடியும்முன் மழையில் கரைந்தால்.. அது யார் தவறு? மழை நின்றதும் அதே இடத்தில் புது கோலம் போடப் படுவதில்லையா? அவன் விரும்பியோ.. விரும்பாமலோ ஒருத்தியை மணந்து விட்டான். இவளிடத்தில் வேறொருத்தி வந்துவிட்டாள். அவளோடு மனம் ஒன்றி வாழ வேண்டாமா?’
நின்று கொண்டிருந்தவளைப் பார்க்காமலே, தழும்பிலிருந்து அவள் கையை விலக்கினான். அவன் தனியே சுமக்கும் சிலுவையின் பாரம் புரிந்தது.
கண்ணீர் துளிர்க்கச் சொன்னாள்.
“நான் சொல்றேன். ஆறு மாசம் நமக்கு மட்டுமேயான வாழ்கையைப் பத்தி நான் உங்களுக்கு சொல்றேன். ஆனா அதுக்கு, நீங்க எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும்! முடிஞ்சு போன தருணங்களை ஒரு நிகழ்வா நினைச்சு… அதைத் தள்ளி வச்சிட்டு நீங்க உங்க மனைவி குழந்தைகளோட நிம்மதியா வாழணும்.
மந்திர விளக்குக்கு உள்ள என்ன பூதம் இருக்குனு நினைச்சு நினைச்சு வாழ்க்கையை கெடுத்துக்காம, இருக்க வாழ்க்கையை நல்ல முறையில நீங்க வாழணும்!”
“இதுக்கு ஒத்துகிட்டா சொல்றேன்.”
“சொல்லட்டுமா…?” பதிலுக்காக அவன் முகம் பார்த்து நின்றாள்.
 …
 
என்றேனும் யாரேனும் என் பெயரை உனக்கு நினைவுபடுத்தலாம்…
ஒரு நாள் உன் நினைவுகள் மீளலாம்
நான் உனக்கு யாராயிருந்தேன் என்ற உண்மை தெரியவரலாம்..
கலங்காதே… கலங்கி நின்றுவிடாதே..
வாழ்க்கை ஒரு ஓட்டம்… நன்றாய் ஓடிய நீ என்னால் நின்றுவிடாதே!
உனக்குத் துணையாய், ஒளியாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
உன்னை உருக்குலைத்த பாவியாய் நான் அறியவேண்டாம்.
நீ என்னை விட்டுவிடவில்லை
நான் உன்னை விட்டுவிட்டேன்
‘என்னை விட்டுவிடாதே என்று நீ என்னிடம் யாசித்தது நினைவிருந்தும் உன்னை விட்டுவிட்டேன்’
உன்னை விட்டதால் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிவிடாதே.
காலத்தின் விளையாட்டில் இருவரும் பகடைக் காயானோம்.
நம் காதல் புதைக்கபடலாம். ஆனால்-
நம் உயிர் மறையும் வரை
காதலர்களாய் இல்லாவிட்டாலும் –
உன் உள்ளத்தின் ஓரத்தில் நானும்;  என் உள்ளதின் ஓரத்தில் நீயும் என்றும் வாழ்வோம்… நிரந்தரமாய்.
 

Advertisement