Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_1
அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா!
அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம் உடற் பயிற்சி, பின் நீச்சல் குளம் என்று உடல் தூக்கத்திற்கு ஏங்கும் வரை அதை வருத்தினான்.
அவன் எதிர்பார்க்கவில்லை இன்றும் கனவில் வருவாளென்று. விடியுமுன்பே எழுந்து அமர்ந்து கொண்டான். கனவிலிருந்து தப்பிக்க வழி தெரியவில்லை. ‘அவளிடமே கேட்டிருக்க வேண்டுமோ… இல்லை! இங்கு வந்திருக்கவே கூடாது..’ என்றது மனம். ஒருவேளை அவளிடமே கேடிருந்தால்..? பதில் கிடைத்திருந்தால்.. இப்படிப் பட்ட கனவுகள் வராமல் தடைப்பட்டிருக்குமோ?
மனம் ஒற்றை புள்ளியைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. எங்குச் சென்றாலும் மீண்டும் மீண்டும் மனம் ‘யு’ டர்ன் போட்டு அங்கேயே வந்து நின்றது. அது அவன் ‘கனவு’. ஏதோ கொஞ்சம் நெருக்கமான காதலர்கள் என்பதையும் தாண்டிய கனவு. மனதைப் பிசைந்தது. முதன் முதலாய் எதிலோ மாட்டிக்கொண்ட உணர்வு. தப்பிக்க வழி தெரியவில்லை.
மற்றவர்களுக்கு எப்படியோ.. அவனுக்குக் காதல் என்பது சிறையாய் போனது. அவன் சிறகை அறுத்து சிறையில் தள்ளிவிட்டிருந்தது காதல். எதனால் இந்த போராட்டம்? தெரியவில்லை அவனுக்கு. பதில் கிடைக்கும் வேளை சிறை தகர்க்கப்படலாம்.. சிறகும் முளைக்கலாம். ஆனால் இன்று? அவன் நிலை கேள்விக் குறியே! ஒற்றை காதலால் ராசியங்கள் மண்ணை கவ்வியிருக்க இவன் எம்மாத்திரம்?
கனவிலிருந்து கண்டிப்பாக விடுதலை வேண்டும். மீண்டும் சென்று சுதாவைப் பார்க்கும் எண்ணமில்லை. பார்த்துவிட்டுப் படும் அவஸ்தை போதும்! மருத்துவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். சில மணி நேரத்தில் விமானம் மூலம் நியூயார்க்.. அடுத்த விடியற்காலை அங்கிருந்து சென்னை. அவன் கிளம்பிக்கொண்டு இருக்க.. அவளோ?
சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. கண்ணனை விட்டு வந்ததே அவன் நிம்மதியாக உயிரோடு வாழவேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் அவன் முகத்தில் இரண்டிற்குமான சாயல் இல்லை. அவனோடு பேச வேண்டும். அவன் வருத்தம் போக்க வேண்டும் என்ற உந்துதல்.
சொன்னானே.. ‘வெங்கட்டிடம் பேசுவதில்லை’ என்று! ‘உன்னோடும் பேசக் கூடாது’ என்று. கண்ணனுக்கும் அவளுக்குமான உறவு முடிந்துவிட்டது தான். இருந்தும் அவன் மனதில் அவளைப் பற்றின எண்ணத்தை அவளால் ஏற்க முடியவில்லை. அவன் கோபத்திற்கான காரணம் அறிந்து அதைக் களைந்துவிட வேண்டும். அவனுக்கு என்ன வேண்டுமோ அதை உறைத்துவிட வேண்டும். இனியாவது நிம்மதியாக வாழட்டுமே,
காலை மணி ஒன்பதைத் தொடச் சுதாவின் கார் நேரே நின்றது அஷோக் தங்கியிருந்த ஹோட்டல் வளாகத்தில்.
கார்த்திக்கிடம் அஷோக்கைப் பார்க்கப் போகக் கேட்டதுமே அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“பேசணும் கார்த்தி..” என்று கேட்க.. முதன் முறை சுதா கார்த்திக்கின் கோபத்திற்கு ஆளானாள். அவனுக்கு கண்மண் தெரியாத கோபம். “என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” என்று தான் ஆரம்பித்தான். அவள் கண்ணீர் அவனை அசைக்கவில்லை.
கார்த்திக்கு அஷோக்கைப் பிடிக்கும். ஆனால் சுதா அஷோக் என்பது முடிந்த உறவு. அவன் எதிர்பார்க்காததும் கூட! நிகழ் காலத்தில் கடந்த காலத்திற்கு வேலையில்லை என்றான். “அவரை இப்போ பார்த்து என்ன காணப்போற?” என்றான். அனல் அடித்தது அவன் பேச்சிலும், பார்வையிலும். அவள் என்ன கெஞ்சியும் அஷோக்கைப் பார்க்க, கார்த்தி சம்மதிக்கவே இல்லை.
அவன் மறுக்க மறுக்கக் கெஞ்சினாள். கல்லே கரையும் அவள் முகம் பார்த்தால்… கார்த்தி எம்மாத்திரம்?
அவள் முகம் பார்த்து யோசித்தவனுக்குப் புரிந்தது. அவளின் காயம் ஆராத காயமென்று. மேலே மூடியிருந்தாலும் உள்ளே சீழ் பிடித்திருப்பது அவன் நேற்று உணர்ந்தது. காயம் கீறப்படவேண்டும்.. வலியோடு அதைச் சுத்தம் செய்தாலே ஒழிய அது ஆறப் போவதில்லை. அதனாலேயே, அவள் வாடிய முகம் பொறுக்காதவனாக எரிச்சலோடு, “என்னவோ பண்ணித் தொலை” என்றான். “பத்திரமா போய்ட்டு வா. எதனாலும் ஃபோன் போடு.” என்று அனுப்பிவிட்டான். மீண்டும் வரும் போது கண்டிப்பாக முகமூடியைத் தகர்த்துவிடுவாள் என்பது அவன் நம்பிக்கை.
சுதா, ஹோட்டல் வந்தாயிற்று… மின்தூக்கியில் ஏறியாயிற்று… இன்னும் ஒரு சில நிமிடத்தில் கண்ணனைப் பார்த்துவிடலாம். ஆனால் கால் நகர மறுத்தது. அவள் இறங்கவேண்டிய தளம் தாண்டி மின்தூக்கி மேலே செல்ல ஆரம்பித்தது. அமைதியில்லாமல், அதில் மாறிக்கொண்டிருந்த தள எண்களைப் பார்த்து நின்றாள்.
அவள் மின்தூக்கியில் ஒவ்வொரு தள எண்களையும் அவஸ்தையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, குளித்து முடித்து காலை உணவை அறையிலேயே முடித்து விட்டவன், பெட்டியோடு கிளம்பிவிட்டான்.
பெட்டியோடு வெளியே கால் வைக்கச் சில்லென்று தேகம் சிலிர்த்தது.
கோட்டை எடுக்க மீண்டும் உள்ளே சென்றான். உள்ளே இல்லை. அதைச் சுதா வீட்டில் விட்டு வந்ததை உணர்ந்தான்.
‘அவ கிட்ட எல்லாத்தையும் விட்டுட்டு போகணும்னு இருக்குப் போல’ எண்ணிக்கொண்டே கதவைத் திறந்து வெளிவர, எங்கிருந்தோ ஏதோ அவனை நோக்கி வருவது போல் இருக்கவும் சற்று நகர, ஒரு கொத்து சாவி அவன் நெற்றியைப் பதம் பார்த்து கீழே விழுந்தது.
அந்த ஹோட்டல் காரிடர் அரவமில்லாமல் இருக்கவே ஒரு பெண் தன் சாவிக் கொத்தை மறுபுறம் இருந்த மற்றவளிடம் தூக்கி எறிய, எதிர்பாராமல் அங்கு வந்த அஷோக்கை அது தாக்கியிருந்தது.
ஏற்கனவே இருந்த நெற்றி தழும்பின் அருகில் படவும் சரியான வலி! கீ செயினில் ஏகப்பட்ட உபகரணங்கள்… அதில் ஒன்று ‘கற்கள் மின்ன இரும்பிலான ஹை ஹீல் ஷூ’! அந்த இரும்பு ஹீல் அவன் நெற்றியைக் கிழித்திருக்கவே இந்த வலி.
அவனுக்கே உரியக் கோபம் எட்டிப் பார்த்தது. அடக்கிக்கொண்டு மீண்டும் உள் சென்றவன் சோஃப்பாவில் போய் அமர்ந்து கொள்ள, கதவு தட்டும் சத்தத்திற்கு எழுந்து வந்தான். கதவிற்கு முன்னிருந்த இருபெண்களும், “சாரி சர்.. வெரி சாரி..” என்றாரம்பித்தனர்.
அவர்கள் முடிப்பதற்கு இடம் கொடுக்காமல் பார்வையால் அவர்களைச் சாம்பல் செய்ய முடியாததால், கதவை அடித்து சாத்திவிட்டு மீண்டும் உள்ளே சென்று  அமர்ந்து கொண்டான். ஏற்கனவே அவன் இருந்த மனநிலைக்கு அவர்கள் முகம் தப்பித்தது அவர்களின் நல்ல நேரம்!
“என்ன டி.. பாக்க சூப்பரா இருக்கானே.. நல்லவனா இருப்பானு பார்த்தா.. ரொம்ப தான் பண்றான்.. முசுடு.. அழகா இருந்தா போதுமா.. அழகான பொண்ணுங்க கிட்டப் பழகத் தெரிய வேண்டாம்.. சின்ன காயத்துக்கே ஓவரா சீன் காட்றான்.” அவன் நெற்றியை காயபடுத்தியது மாட்டும் அல்லாமல் ஏகத்துக்கும் அவனை வசை பாடி சென்றனர் அந்த இரு பெண்கள். ஆங்காலத்தில் தான்! கால் கிலோ சாவிக் கொத்தை அவள் தலையில் வீசி இருந்தால் அவளுக்குத் தெரிந்திருக்குமோ?
அவர்களைத் தாண்டி வந்து கொண்டிருந்த சுதாவின் காதுகளில் அவையனைத்தும் விழ, ‘யாரு டா அந்த புண்ணியவான்.. காலங்காத்தால இவளுங்க வாய்ல.. பொண்ணுங்க அழகா இருந்தா பாக்கரவன் எல்லாம் எழுந்து சலாம் போடணுமா என்ன..’ என்ற அவள் எண்ணவோட்டம்  தடைப்பட்டது அவன் தங்கியிருக்கும் அறை எண்ணைப் பார்த்ததும். பார்த்தவளின் சிந்தனை, யோசனை, புத்தி, அறிவு, மதி… இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ.. அவை எல்லாம் ஒன்றாய் ‘டாட்டா’ சொல்லிச் சென்றுவிட்டது.
அவன் ஜாக்கெட்டை இறுகப் பிடித்தவள், மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிலைப் படுத்தி, கதவின் மேல் கை வைக்க, அது தானாய் திறந்தது. பெட்டியோடு வெளியே வந்து கொண்டிருந்தான்.
ஓங்கிய கை கீழிறக்கத் தோன்றாமல் அவனைப் பார்க்க அவன் முகத்தில் அதுவரை குடிகொண்டிருந்த எரிச்சல், கோபம் எல்லாம் அவளைப் பார்த்த நொடியில் போன திசை தெரியவில்லை. முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், “சுதா?” என்றான் கண்ணில் மின்னலோடு.
கையை அப்படியே ஆட்டி, “ஹாய்” சொன்னவள்
“உள்ள வரட்டா? இல்ல கிளம்பணுமா?” அவஸ்தையாய் பார்த்தாள்.
“சாரி.. உள்ள வா.. கிளம்ப இன்னும் டைம் இருக்கு. என் ஜாக்கெட்டை எடுத்துட்டு வந்தியா? தேங்க்ஸ்..” முசுடு மென்மையாகச் சிரித்தது.
“ம்ம்.. அதுவும்.. இதுவும்” என்று டி-ஷர்ட்டின் கழுத்தில் சொருகி வைத்திருந்த அவன் கருப்பு கண்ணாடியை எடுத்து கொடுத்தாள்.
புன்னகையோடு வாங்கிக் கொண்டான்.
“ஏதாவது குடிக்கறியா?”
“இல்ல வேண்டாம்..”
“ஜோ குட்டி எப்படி இருக்கான்? அப்பரம் அழுதானா?”
“இல்ல அழல… நல்லா தூங்கினா சரி ஆகிடுவான்..”
அறையில் இருவர் மட்டும். ஒவ்வொரு மூலையில்.
மூச்சு விடும் சத்தம் கூட இல்லை. ஒரு வித விரும்பதகாத நிசப்தம்.

Advertisement