Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 68_1
“அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்….”
கண்ணை மூடி பாடல் வரிகளில் மூழ்கியிருந்தவன் மடியில் எதுவோ விழ.. அசைந்து கொண்டிருந்த தாடிக்கார முரடன் வாய் சட்டென்று நின்றது. அவன் மடியில் விழுந்தவளைப் பார்க்கின்றானா? கருப்பு கண்ணாடி வில்லனாய் அவன் கண்ணை மறைத்தது. மரத்தின் மேல் மரமாய் சாய்ந்து அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். பாவம் கனவு கலைந்துவிடும் என்று நினைத்துவிட்டானோ? அப்படி தான் போலும். முகத்தில் லேசான ரசனையின் சாயல் எட்டிப்பார்க்கத் தான் செய்தது,
நீட்டி இருந்த தொடையில், அவன் கை மேல் சுதா முகம் குப்புற விழுந்திருந்தாள். அவன் கையில் அவள் முகம் புதைந்து மீண்டது.
விழும் வேகத்தில் ஒரு கை அவன் காலரில்லா டி-ஷர்டின் கழுத்தை இழுத்துப்பிடித்திருந்தாள். அவன் கண் திறக்கவும் அவள் ஒருவாறு புரண்டு திரும்ப, அவனைப் பார்த்ததும் நடுங்கிப் போனாள் பெண். தாடி மீசையோடு காலையில் பார்த்தவன் தான். வயிற்றைப் பிசைந்தது. கோபத்தில் அறைந்து விட்டால்.. விழ ஒரு நொடி என்றால்… எழுந்து ஓட அரை நொடி எடுத்துக் கொண்டாள். அவள் கையை அவன் நெஞ்சில் கொடுத்து அவள் எழுந்து ஓட… மீண்டும் அவன் மேல் விழாத குறையாய்.. மடிமேல்… எப்படி?
அவன் தலை மரத்தில் சாய்ந்திருக்கவில்லை. அவளைக் கண்டுகொண்டானா? இல்லை கோபத்தில் இழுத்தானா? எதுவோ ஒன்று… அவன் மடியில் அவள்.. அவன் முகம் பார்த்து… இல்லை முகம் மேல் இருக்கும் முகமூடியைப் பார்த்து. ஒரு அந்நிய மனிதன் மேல் விழுந்துவிட்ட அசௌகரியம். அவன் கை அவள் கையை இறுக பிடித்திருக்க… வலித்தது, அடித்துவிடுவானோ? கண்ணில் எக்கச்சக்க பயம். அடுத்து வந்து நின்றது புது கேள்வி… முகத்தில் கேள்வியும்.. பின் கோபமும்..
இந்த பெண்ணால், நொடியில் எத்தனை பாவனைகளை முகத்தில் காட்ட முடிகிறது? அவனுக்கு வியப்பாயிருக்கவில்லை. இதைத் தானே தினமும் கண்டு ரசிக்கிறான்.
முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளைப் பார்த்ததும்.. எப்பொழுதும் வருபவள் தானே என்று எண்ணினான் போலும். அவனிடம் அவளுக்கில்லாத உரிமையா? அவன் கொடுத்தா அவள் உரிமை எடுக்கிறாள்? அவளை பார்த்தான்.. சில நொடிகள் தான் நீண்டது அந்த சந்திப்பு!
அந்த சில நொடிகளில் அவன் கவனத்தில் அவள் மட்டும் தான். நாட்டியமாடும் அந்த தேன் நிற கண்கள்… அசௌகரியம், வலி, பயம், கேள்வி, கோபம்… இத்தனை உணர்வையும் காட்டும் முகம்… அவன் உறைந்து தான் போய்விட்டான்.
“ஏய்… நீ எதுக்கு எங்களையே ஃபாளோ பண்ணிட்டு வர… பூச்சாண்டி மாதரி இருந்துட்டு.. பிள்ளைபிடிக்கரவனா நீ?”
அவன் பிடி தளரவும்.. கையை பிரித்துக்கொண்டு.. கண்ணில் நீர் கோர்த்து உதடு பிதுக்கி நின்ற அருளைத் தூக்கிக் கொண்டு ஓடியே விட்டாள்.
விழுந்தோம்… எழுந்தோம்.. தலை தெறிக்க ஓடினோம்… இது அவள் நிலை!
இவன் என்ன தான் செய்துகொண்டிருக்கிறான்? ஒரு அழகான பெண் அவன் மேல் விந்து விழுந்தால் கூடவா உணர்விருக்காது? அவள் சென்றே விட்டாள்! அவன் புத்தனும் இல்லை அது போதி மரமும் இல்லையே… இன்னும் என்ன தான் செய்கிறான் அந்த பாழாய்ப் போன மரத்தடியில்? எழுந்து தான் தொலையேன்…
அவனுக்குப் புரியவில்லை.. ஏன்? அவன் லட்டா இப்படிப் பேசியது? கண்ணால் பேசி உதட்டால் அவன் உயிரை உரிபவள்.. ஏன் இப்படி பேசினாள்? அவன் முகத்தில் ஒரு வித குழப்பம். நீ தூங்கவில்லை விழிப்பதற்கு… எழுந்து போ… யார் அவனை அங்கிருந்து கிளப்புவது?
ஓடியவள் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவன் சிலை போல் அமர்ந்திருந்தான்… அவளை பார்த்துக்கொண்டே.. கண்ணாடியின் பின்னிருந்த கண்ணில் என்ன உணர்வு குடிகொண்டுள்ளது? காதலா? இன்னும் அவன் மாறவில்லையா? அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தான். 
‘புத்தி சுவாதீனம் இல்லாதவனோ? பார்த்தால் அப்படி இல்லையே… ச்சா… இன்னும் கொஞ்சம் நல்லா பார்த்திருக்கணும்.. பயந்து ஓடி வந்திருக்கக் கூடாது’
கார் அருகில் வரவும் அழுது கொண்டே அவளிடம் வாஞ்சையாய் தாவிய குட்டி வாண்டை மேரி கையிலிருந்து வாங்கியவள், அவன் கன்னம் துடைத்து முத்தமிட்டு கார்த்தியை முறைத்தாள். என்ன மாயம்..? அவளிடம் வந்ததும் குழந்தை அழுகை நின்றது. அவளைக் கழுத்தோடு கட்டிக்கொண்டது.
அவர்கள் வீட்டை நோக்கிச் செல்ல… இவள் மனம் பின்னோக்கி சென்றது. பயம் தெளிந்து, மனம் சமாதான படவும், கையை பார்த்தாள். அவன் பிடித்த இடம் சிவந்திருந்தது. அவள் கைப்பட்ட அவன் கழுத்து,  அவன் மார்பு.. அவள் முகம் பட்ட முரட்டுக் கை.. அவளை ஏதோ செய்தது. அவன் மேல் வந்த நறுமணம்..? தாடி மீசையில்லாமல் அந்த முகம்..? யோசித்தவளுக்குச் சுருக்கென்றது! அப்படியும் இருக்குமா? அவளுக்குத் தெரிந்துவிட்டதா? சின்னதாய் ஒரு சந்தேகம்! மனம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஏன் இந்த கோலம்? இல்லை என்றது மனது.. அதே மனது… ஆம் என்றது. தடுமாறிப் போனாள் பெண்.
அவன் நிலை? அவள் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஓட… அவன் அங்கு தான் அமர்ந்திருந்தான். மனதில் ஆயிரம் கேள்விகளோடு.
கண்ணை மூடினால் தானே கனவில் அவள் வருவாள்? இன்று கண்ணைத் திறந்த பின் எப்படி? எனக்கு முத்தி விட்டதா? மீண்டும் மருத்துவரா…? பச்!
பின்னங்கையில் அவள் உதட்டுச் சாயம்.. கருப்பு டி-ஷர்டின் மேல் தூசி படிந்த கை தடம். கண்ணாடியைக் கழட்டினான். ‘லட்டு?’ மனம் அடித்துக்கொண்டது. வலியோடு ஒரு நிம்மதி.  
‘அவள் உண்மை தானா? கண்ட எதுவும் கனவில்லையா? இங்கு தான் இருக்கின்றாளா? என்னைத் தெரியவில்லையா? சென்றுவிட்டாளா?’ மனம் பாடுபட்டது.
‘எங்கே அவள்?’ கற்சிலைக்கு உயிர் பெற்று அங்குமிங்குமாய் நடந்தது. கண்கள் கூட்டத்தை ஆராய்ந்தது. காது ஒவ்வொரு சத்தத்தையும் கவனித்தது. எட்டாவது ஸ்வரம் கேட்கவில்லை. அவள் விட்டு சென்ற தடத்தை தொட்டு பார்த்துக்கொண்டான். பின்னங்கையை பார்த்தான்… பார்த்துக்கொண்டே நின்றான். அந்த முரடன் முகம் கூட கனியுமா? அவள் என்று வந்துவிட்டால் அவன் என்று அவனாயிருந்தான்? அதனால் அவன் முகமாற்றத்தில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே.
வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஓரிடத்தில் இல்லை. முரடனிடம் மனம் முட்டி நின்றது. அவள் மேல் அவன் வாசம்.. அவனே தான் என்றது மனது. யோசிக்கவில்லை. மேரியிடம் இரவு உணவுக்கான வேலைகளைச் சொல்லி, வெளியில் செல்வதாய் கூறிவிட்டு மீண்டும் பூங்காவிற்கு பயணப்பட்டு வந்தாள். இருட்ட ஆரம்பித்துவிட்டிருந்தது. மரத்தடிக்கு ஓடினாள். நின்ற மரம் மட்டும் இருக்க… அவன் இல்லை.
உடல் படபடக்க… மனம் எதையோ தேட.. அங்குமிங்கும் சென்று தேடினாள். பயனில்லை. கையிலிருந்த இதயம் வழுக்கி கீழே விழுந்தது. ஒற்றை இதயம் அவளிடம் பாடாய் பட்டது! அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள். முழங்காலைக் கட்டிக்கொண்டு.. அதற்குள் முகம் புதைத்து, அவனைப் போல் அசையாமல் அமர்ந்துகொண்டாள். இரண்டு வருடம் பின் மீண்டும் முட்டி நனைய.. சுற்றம் மறக்க அமர்ந்திருந்தாள். முழுவதும் இருட்ட.. கார்த்திக்கிடமிருந்து அழைப்பு வந்தது.
திட்டிக் கொண்டிருப்பான் போலும்… “ம்ம்..” என்றதோடு சரி, வேறு பதிலில்லை அவளிடம். ஒருமுறை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அவள் விருப்பம் சரியா தவறா என்று கூட உணரமுடியவில்லை. பழைய தோழியைத் தூரத்தில் பார்த்தால் மீண்டும் பார்க்க ஆசை வருவதில் தவறில்லையே.. தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
அன்றைய இரவு.. இருவருக்கும் விடியா இரவாகிப் போனது. அவள் புகைப்படம் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம்.. கையறு பட்ட நிலை அவனுக்கு.
இருகுடும்பமும் ஒன்றாய் இருக்க அடுத்து வந்த பகல் பொழுது சுதாவிற்கு அதன் போக்கில் சென்றது.  
கார்த்திக் பிள்ளைகளோடு வெளியில் சென்று வந்தான். டேனியும் ஜான்சியும் மத்தியம் படுக்கச் சென்றிருக்கச் சுதா தனியே அடுப்பங்கரையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
“தனியா என்ன பண்ற? உன் ரெண்டு எடுபிடியும் எங்க?” கூடவே அவனும் அவளோடு உருட்டுவதில் சேர்ந்து கொண்டான்
“அப்படி சொல்லாதனு எத்தன தடவ சொல்றது. பொட்டீக்ல ஒரு பெரிய ஆர்டர்.. லிண்டா பாக்க போயிருக்கா. பார்த்துட்டு அதுக்கு வேணுங்கர மெட்டீரியல்ஸ் பத்தி சப்ளையர் கிட்ட பேசிட்டு வருவா. இன்னைக்கு பொட்டிக்ல யாரும் இருக்க மாட்டாங்க… அதனால மேரியும் கூடவே போயிருக்கா.”
“நீ நிஜமாவே விலக போறியா… இப்போ எல்லாம் உன் பார்ட்னர் தான் பொட்டிக்க பார்த்துக்கரா போல?”
“ம்ம்ம்… இத பத்தி நாமா பேசியாச்சே பா… இன்னும் என்ன?”
“சரி விடு.. உனக்கு பிடிச்சத செய்!”
லிண்டா அவள் தொழில்(bridal boutique) கூட்டாளி. மேரி அவர்கள் வீட்டு வேலையில் துணையாயிருப்பவள்.
மாலை தேநீரோடு உண்ண, பஜ்ஜிக்கான கடலை மாவு தோய்த்த வாழைக்காயை எண்ணெய்யில் போட்டுக்கொண்டே, “பசங்க என்ன பண்றாங்க?” சுதா கேட்க
பஜ்ஜிக்குச் சட்டினி அரைத்துக்கொண்டே, “ரெண்டும்  குரட்ட..” என்றான் கார்த்திக்.
அவளைப் பார்த்தவனுக்கு எதுவோ தோன்றியிருக்க வேண்டும். அவளருகில் சென்றவன், “என்ன டா… என்ன ஆச்சு?” என்றான். அவளின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவனாய்..
“என்ன?” அவனை பார்த்து விழிக்க
“ஏதோ… என்னனு நீ தான் டா சொல்லனும்?”
அவன் முகம் பார்க்க முடியவில்லை… தேநீருக்கு இஞ்சி இடிப்பது போல் குனிந்து கொண்டாள். “ஒன்னும் இல்ல.. கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்” என்றாள்.
அவள் கையை பிடித்தவன், தன் பக்கம் இழுத்து நாடி பிடித்து அவள் முகம் தூக்கி, “என்ன மா? என்ன ஆச்சு?”
அவனின் இந்த மென்மைக்கு அவள் என்ன செய்வாள்?
அவன் புஜத்தில் தலை சாய்த்துக்கொண்டாள்… “தெரியலை.. ஒரு மாதரி இருக்கு. அவ்வளவு தான்!” என்றாள்
சுதாவின் தலையை வருடியவன் அதன்பின் ஒன்றும் கேட்கவில்லை.
“சாரி…” என்றாள் மொட்டையாக
“எதுக்குமா?”
“என்னை எதுவும் கேக்காதீங்க… ப்ளீஸ்” என்றாள்.
“இல்ல டா.. நான் ஒன்னும் கேட்கல… நான் டீ போடுறேன். நீ போய் முகம் கழுவிட்டு ராணியை எழுப்பு, அவங்களுக்கு நேரமாகுது”
“இம்ம்…” பேசாமல் அவன் சொன்னதைச் செய்யச் சென்றாள். அவள் தலைமறையும் வரை அவளையே பார்த்து நின்றான்.
அவனுக்குத் தெரிந்தது அவளிடம் ஏதோ சரியில்லை என்று. இன்னும் இரண்டு முறை கேட்டால் அவளே சொல்லிவிடுவாள் மறையாமல். அவளாய் கூறும் வரை கேட்க மாட்டான். வருந்தவும் விட மாட்டான். அவனிடம் ஒன்றை மட்டும் அவள் கூறியது இல்லை. மற்றபடி அவளைப் பற்றி அவன் அறியாத விடயம் என்று ஒன்றில்லை!
இன்று அவள் மனவேதனையின் காரணத்தை அவனிடம் கூறுவாளா? இல்லை என்று தான் தோன்றுகிறது. அவள் அதைச் சொன்னால் அவள் வேஷம் கலைந்து விடாத? அதனால் அவனுக்கு ஏற்படும் வேதனை? அவன் வேதனையை எப்படிச் சகிப்பாள்? எப்பொழுதும் போல் புன்னகை என்ற அவள் முகமூடியைத் தறித்துக் கொண்டாள்.
நேரம் கடக்க… தேநீர் நேரம் முடிய.. ஜான்சி அருளைக் கிளப்ப ஆரம்பித்தாள். அவர்கள் கிளம்பவும் அருள் சுதாவை கட்டிக்கொண்டு அழுதான், “கம் வித் அஸ் அய்ட்ட..” என்று
“மாமாட்ட வா..” கார்த்தி அவனை தூக்கிக்கொண்டே, “அத்தையும் நானும் ஈவினிங் ஒரு ஃபங்ஷனுக்கு போகணும்.. அத்தையும் நம்மக் கூட வந்தா ரொம்ப டையர்ட் ஆகிடுவாங்க.. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்… சரியா? பாரு அத்த முகமே சரியில்ல.. இப்போ நீ சமத்தா இருந்தா, டூ வீக்ஸ் கழிச்சு அத்த உன் கூடவே டூ வீக்ஸ் இருப்பாங்க.. மாமாவே அத்தையை கூட்டிட்டு வந்து உன் கிட்ட விடுவேன் போதுமா?” மனம் நிறைய.. “லவ் யூ சோஓஓஓஓ மச் அய்ட்ட” தன் இருகரங்களையும் விரித்துக் காண்பித்து.. கார்த்தி கையிலிருந்துகொண்டே சுதா கண்ணில் நீர் வரும் வரை முத்த மழை பொழிந்து, மாமா கழுத்தைக் கட்டிக் கொண்டு கிளம்பினான்.
அனைவரும் அவளைப் பாச மழையின்  நனைத்து விட்டுக் கிளம்ப.. வீட்டில் தனித்து இருந்தவள் உள்ளம் எதை எதையோ அசை போட்டது. மனதில் ஒரு பாரம் அழுத்தியது. தெரிந்தும் தெரியாத நிலை.. ஒன்றும் செய்ய முடியாது! பார்த்தது அவன் தானா? ஒரு முறை கண்ணனைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. வேறு எந்த எண்ணமும் இல்லை… அவன் சிரிக்கும் கண்ணைப் பார்க்க வேண்டும். இந்த ஜென்மத்திற்கு அது போதும்.
‘தீரா ஆசையோடு இந்த ஜென்மம் முடிந்தால் மறு ஜென்மம் உண்டாமே… அப்படி இருந்தால், அதில் அவனோடு வாழலாம்..’. கண்ணை மூடி படுத்துக்கொண்டாள். என்ன முயன்றும் மூச்சு முட்டல் சரியாகவில்லை. நேரமாகவும் எழுந்து கிளம்ப ஆரம்பித்தாள்… எல்லாவற்றையும் பின் தள்ளி! எப்பொழுதும் போல்!

Advertisement