Advertisement

அத்தியாயம் – 2

 

வதனா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘எப்படி?? எப்படி?? இந்த தகவல் மீடியாவிற்கு சென்றது. போதாதிற்கு இந்த படம், இது யார் கொடுத்திருப்பார்??’

 

‘இவனை யார் இங்கே வரச்சொன்னது, இவ்வளவு நாள் தொலைந்து தானே போயிருந்தான். அது போல் தொலைந்து போயிருக்கக் கூடாதா’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவன் மேல்.

 

எதையோ அவசரமாய் யோசித்தவள் “பார்த்திபன்” என்று கிட்டத்தட்ட கர்ஜனை குரலில் கத்த வேகமாய் உள்ளே ஓடிவந்து அவள் முன் நின்றான் அவன்.

 

முதல் நாள் போல் அல்லாமல் அவனுக்கு அவளின் மேல் ஒரு மரியாதை வந்திருந்தது. அதனாலேயே அவள் கூப்பிட்ட குரலுக்கு வந்திருந்தான் அவன்.

 

“மேடம்”

 

“எப்படி மீடியாக்கு நியூஸ் போச்சு?? நேத்து நான் உங்ககிட்ட சொன்னேனா இல்லையா நியூஸ் மீடியாக்கு போகக் கூடாதுன்னு அப்புறமா எப்படி போச்சு??” என்றவளின் குரலில் நிதானமில்லை.

 

“நீங்க சொன்ன பிறகு மீடியாக்கு நாங்க எப்படி சொல்வோம் மேடம். ஆனா விஷயம் அதுக்கு முன்னாடியே போய்டுச்சு மேடம்” என்றான் அவன் நிதானமாய்.

“எப்படி?? யாரு??”

 

“மீடியா மட்டுமில்லை மேடம் போலீசும் அவரை தொடர்ந்து வந்திருக்காங்க??” என்று சொல்லவும் அவனை புருவமுயர்த்தி பார்த்தாள்.

 

அவளிடத்தில் இப்போது சற்று நிதானம் வந்தது போல் இருந்தது. பார்த்திபன் தொடர்ந்தான்.

 

“உண்மை தான் மேடம்… வந்தவர் ஒண்ணும் லேசுப்பட்டவர் இல்லை மேடம்… இங்க அவர் வந்த உண்மையான காரணம் என்ன தெரியுமா…” என்றவன் நீண்ட விளக்கம் கொடுக்க அதை கேட்டவளின் முகம் அதற்கேற்ப பாவங்களை காட்டியது.

 

அவளை பார்க்கும் போது பார்த்திபனுக்கு ‘நேத்து இவங்களை சொர்ணாக்கான்னு நினைச்சது ரொம்ப தப்பு. நிமிஷத்துக்கு ஒரு ரியாக்சன் கொடுக்கறாங்க’

 

அவளிடம் சொல்லி முடித்தவன் “விஷயம் இப்படி தான் மீடியாக்கு போயிருக்கு மேடம்”

 

“அது மட்டுமில்லாம வந்து சார் நீங்க… உங்க கல்யாணம்…” என்று இழுத்தான்.

 

வதனா இப்போது அவனை முறைத்திருந்தாள். “சாரி மேடம்”

 

“அந்த போட்டோ??” என்று கேள்வியாக்கினாள்.

 

“தெரியலை மேடம்… ஆனா உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கலாம் இல்லை சார்கிட்ட வேணா கேட்கட்டுமா மேடம்” என்று சொன்னவனை முறைத்தாள்.

 

“நீங்க போங்க…” என்றவள் “ஒரு நிமிசம் பார்த்திபன், ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்போ தெரியும்??”

 

“இல்லை நைட் நீங்க சார் ரிலீஸ் பண்ணி அனுப்புன இரண்டு மணி நேரத்துல தெரியும் மேடம்”

 

“ஏன் என்கிட்ட உடனே சொல்லலை??”

 

“உங்ககிட்ட பேசலாம்ன்னா கபிலன் சார் நீங்க தூங்குறீங்கன்னு உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னார்”

 

“அதான் நீங்க எப்போ கூப்பிடுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மேடம்” என்றான் விளக்கமாய்.

 

அவசரமாய் அவள் மேஜையை துழாவி ஒரு கார்டை எடுத்தவள் அதன் பின்னே அவளின் பெர்சனல் எண்ணை எழுதினாள்.

 

“இது என்னோட பெர்சனல் நம்பர், என்கிட்ட உடனே சொல்ல வேண்டிய விஷயமா இருந்தா எந்நேரமா இருந்தாலும் எதுவா இருந்தாலும் தயங்காம எனக்கு போன் பண்ணுங்க பார்த்திபன். ஓகே வா”

 

“ஓகே மேடம்” என்றான்.

அவன் சென்றதும் தலையை வலிப்பது போல் இருந்தது அவளுக்கு. கைகளால் தலையை தாங்கிக் கொள்ள அவளால் முடியாது போலிருந்தது.

 

அவசரமாய் இண்டர்காமை அழுத்தி அவளுக்கு காபி கொண்டு வரச்சொன்னாள்.

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆவி பறக்க அவள் முன் இருந்த காபியை அருந்திய பின்னே தான் சற்று தலைவலி குறைந்தது போலிருந்தது.

 

ஆனால் அதன்பின்னே தான் அவளிடத்தில் யோசனைகள் இன்னமும் அதிகமாகியது.

 

நேற்று போல் தான் அவன் எப்போதும் அவளிடத்தில் நடந்து கொள்வான்.

 

அவன் மீது தப்பு இல்லையென்றால் நடவாத ஒன்றை நடந்ததாக சொல்லி அவனை நிரூபிக்க முயலுவான்.

 

இது கல்லூரி காலத்தில் இருந்தே அவன் செய்யும் ஒன்று.

 

முதன் முதலில் அவன் செய்யாத ஒரு குற்றத்திற்கு அவள் அவனை மாட்டி விட்டிருக்க பின் தவறு அவனது அல்லாது என்று அறிந்ததும் அவனிடத்தில் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறாள் அவள்.

 

அதன்பின் தான் இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் ஆரம்பித்திருந்தது. அதன்பின் எப்போது அவன் செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்கிறானோ அப்போதெல்லாம் அதை தான் தான் செய்ததாக சொல்லி அவனை பார்க்க வரும் அவளிடத்தில் சொல்லி ஒரு பார்வை பார்ப்பான்.

 

அந்த பார்வை குற்றமற்றவனின் பார்வை என்பதை அவளும் கண்டுக்கொண்டு தன்னாலானதை செய்திருக்கிறாள்.

 

கல்லூரியில் இது போல் இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்திருந்தது அப்போது. ஏன் இப்படி செய்கிறாய் என்று அவனிடத்தில் கேட்டால் அதற்கு ஒரு முறை காரணம் வேறு சொன்னான் அவன்.

 

அவனுக்கு மிகப்பிடித்த படம் எதிர்நீச்சல். மிகப்பிடித்த டைரக்டர் பாலசந்தரின் படம் அது. இந்த காலத்து பிள்ளையாய் இருந்தாலும் அவனுக்கு பழைய படங்கள் பார்ப்பதில் அலாதி பிரியம்.

 

அந்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு காட்சி ஒன்று. நாகேஷ் ஏழ்மையான கதாப்பாத்திரம் தாங்கி நடித்திருப்பார் படத்தில்.

 

வேலை செய்துக்கொண்டு படிக்கும் அவரின் ஏழ்மையை பயன்படுத்தியே அவர் மீது வேலைகள் மட்டுமில்லை குற்றங்களும் சுமத்தப்படும்.

 

இப்படி எல்லாவற்றுக்கும் தலையை கொடுத்தவர் செய்யாத தவறுக்கும் பழி ஏற்க நேரிடும். அதில் நாயர் கதாபாத்திரமான முத்துராமனின் கைக்கடிகாரம் தொலைந்துவிடும்.

அதற்கு சற்று முன்பு தான் நாகேஷ் நாயரிடம் அந்த கடிக்காரம் அழகாக இருக்கிறது என்பார்.

 

அதுவும் அந்த வீட்டில் இருக்கும் மற்ற அங்கத்தினர்களின் பொருட்கள்  காணாமல் போனதும் அதை நாகேஷ் தான் எடுத்திருப்பார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்.

 

நாகேஷிற்கு ஆதரவு கொடுக்கும் மேஜர் சுந்தர்ராஜன் கூட நாகேஷின் மீது சுமந்தப்பட்ட குற்றத்தை நம்பலாமா வேண்டாமா என்று நினைக்கும் போது ஒவ்வொருவராக தொலைந்த பொருட்களை சொல்லிக்கொண்டு வர தன்னை நிரூப்பிக்க நாகேஷ் நாயரின் வாட்சை விட்டுடீங்களே என்று கேட்பார்.

 

அந்த வார்த்தை மேஜர் சுந்தர்ராஜனை யோசிக்க வைக்கும். குற்றம் செய்தவன் எப்படி இதை சொல்ல முடியும் என்பது போன்று ஒரு காட்சி.

 

அந்த படத்தில் அவன் மிகவும் ரசித்த காட்சி அது. தன்னை நீயாவது நம்பேன் என்று தன்னை நிரூபணம் செய்ய வேண்டி அவர் நிற்கும் அந்த காட்சியை அவன் அவளிடத்தில் சொல்லியிருக்கிறான்.

 

வதனாவுக்குள் அவன் சொல்லியதெல்லாம் நினைவிற்கு வர நேற்றைய அவன் பேச்சு அவளை இன்னமும் குழப்பியது.

 

அவன் கண்களில் தெரிந்த தெளிவு அவன் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பதாய். அவன் பார்வையில் அவன் தவறிழைத்தவன் என்றே சொல்ல முடியாத ஒரு பார்வை.

 

நேற்று அவளை கண்ணோடு கண் நோக்கி அவன் எதிர்கொண்டது இன்னமும் அவளால் மறக்க முடியாத ஒன்று.

 

மற்றவர்கள் அவனை குற்றவாளி என்று சொல்லியிருந்தால் கூட உடனே அவள் நம்பியிருக்கலாம்.

 

ஆனால் அவனே தன் வாயால் செய்யாத ஒன்றை செய்ததாய் சொன்ன போதே அவளுக்கு புரிந்து போனது அவனிடத்தில் தவறில்லை என்று.

 

அதனாலேயே அவனை அடித்திருந்தாள். எதில் தான் விளையாட வேண்டும் என்பதில்லையா!!

 

தெரிந்து பேசினானோ தெரியாது பேசினானோ அவன் பேசியதும் அதற்கு அவள் அடித்ததும் அவனை மீண்டும் அடைத்து வைக்க சொன்னதும் தானே இன்று தலைப்பு செய்தியாகி இருக்கிறது.

 

‘எல்லாம் அவனால் தான்!! ஏன்டா என்னை படுத்தி எடுக்கிறாய்!! விட்டுச் சென்றாயே அப்படியே சென்று விட்டிருக்க வேண்டியது தானே!!

 

இன்றெதற்கு வந்திருக்கிறாய்!! வந்ததும் அல்லாமல் தான் குற்றமற்றவன் என்று எதற்கு நிரூபிக்க முயற்சி செய்கிறாய்.

நீ உன்னை பற்றி இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன??

 

இது நேற்றைய நிகழ்வுக்கா அல்லது இத்தனை வருடங்களாய் நீ என்னைவிட்டு போனதும் குற்றமில்லை என்று சொல்வதற்கா??’ என்று அடுக்கடுக்காய் கேள்விகள் அவள் மனதில்.

 

எதுவாய் இருந்தாலும் கடந்து சென்ற பத்துவருடத்தின் வலி அவள் கண் முன்னே வந்து போனது. இருபதுகளில் தொலைத்து தொலைந்து போனவன் வந்திருப்பது முப்பதுகளில்.

 

இத்தனை காலங்களாய் மறந்திருந்ததாய் நினைத்திருந்த ஒவ்வொன்றும் மறவாமல் ஞாபகச்சுவடுகளில் வந்து போனது.

 

அவள் விசிறியடித்த செய்தித்தாள் காற்றில் படபடக்க சற்று தள்ளி கீழே கிடந்திருந்த அதை கையில் எடுத்தாள்.

 

முதல் பக்கத்தில் கலியுக கண்ணகி வசனத்தோடு இருவரின் திருமண புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

 

அதற்கு அடுத்த பக்கத்திலேயே அவன் குற்றமற்றவன் என்பதை விளக்கும் செய்திகள் விரிவாய் இடம் பெற்றிருந்தது.

 

சற்று முன் பார்த்திபன் சொன்ன விஷயங்கள் மேம்போக்காய் இடம்பெற்றிருந்தது.

அவனை பற்றிய எண்ணங்களும் அதனை ஒட்டிய சிந்தனைகளுமாய் இருந்தவளுக்கு இன்னமுமாய் தலைவலி தான் கூடிப்போனது.

 

அவள் மனதில் இப்போது குழப்ப மேகங்கள் உலா சென்றதில் சோர்ந்தாள் அவள். அப்போது அவள் கைபேசி அழைக்க எடுத்து பார்த்தாள். புது எண்ணாய் இருந்தது.

 

அழைப்பை ஏற்று காதில் வைக்க அழைத்தது பார்த்திபன் என்று அவன் சொன்ன பின்னே அறிந்தாள். ”சொல்லுங்க பார்த்திபன் அதுக்குள்ள என்ன முக்கியமான விஷயம்??” என்றாள்.

 

“முக்கியமான விஷயம்ன்னு சொல்லலாம் இல்லைன்னும் சொல்லலாம் மேடம்” என்றான் அவன் பதிலாய்.

 

‘இதென்ன விளங்காத ஒரு பதில்’ என்று சட்டென்று ஆத்திரம் மூண்டது அவளுக்கு.

 

“தேவையான விஷயத்துக்கு தான் பார்த்திபன் உங்களை எனக்கு கூப்பிட சொன்னேன். இப்படி பூடகமா பேசுறதுக்கு இல்லை” என்றாள் அவள் முகத்தில் அடித்தது போல்.

 

“சாரி மேடம்…” என்றவன் “இங்க சார் வந்திருக்கார் உங்களை பார்க்க… கபிலன் சார் அவரை அலோவ் பண்ணலை. அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னு…” என்று இழுத்தான் அவன்.

‘அவன் எதுக்கு என்னைப் பார்க்க வந்தான். என்னவா இருக்கும்??’ என்ற ஆவல் இத்தனை வருடம் கழித்தும் அவனை பற்றி தெரிந்து கொள்ள மனம் விழைந்ததை கட்டுப்படுத்த முடியாமல் அப்படியே அமைதியாய் இருந்தாள்.

 

அவள் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவும் விருப்பமில்லை.

 

ஆனால் அவனை பார்த்து எதற்கு வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள மட்டும் விருப்பம் அவளுக்கு.

 

‘இவனை ஏன் தான் பார்த்தோம் தன் வாழ்வில்’ என்று சலிப்பாய் உணர்ந்தாள் அக்கணம்.

 

“மேடம்” என்று தொடர்ந்த அழைப்பை பார்த்திபன் கொடுப்பது உணர்ந்தவள் “சொல்லிட்டீங்கல்ல நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு போனை வைத்து வெளியில் வந்தாள்.

 

வாயிலில் அவன் நின்றிருக்க கபிலன் அவனை விரட்டிக் கொண்டிருந்தது கண்ணில்ப்பட்டது.

 

‘இதெல்லாம் உனக்கு தேவையா?? உரிமையாய் வந்து பார்க்க வேண்டிய இடத்தில் எப்படி வந்து கெஞ்சி நிற்கிறான்’ என்று தோன்றியது அவளுக்கு.

 

அவள் நின்ற இடத்தில் இருந்தே “கபிலன்” என்றழைத்தாள்.

 

“மேடம்” என்று வந்திருந்தான் அவன்.

 

“அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க??”

 

“இல்லை மேடம் அது வந்து சார் உங்களை பார்க்கணும்ன்னு…”

 

“சரி அதுக்கு”

 

“அதான் அவரை வெளிய போகச் சொல்லிட்டு இருக்கேன்” என்றான் தயங்கி.

 

“நீங்க எப்போ என்கிட்ட அவர் என்னை பார்க்க வந்திருக்கறதா சொன்னீங்க?? நான் எப்போ வேணாம்ன்னு சொன்னேன்??” என்றாள் கேள்வியாய்.

 

“அது மேடம் உங்களுக்கு பிடிக்காது… நீங்க தலைவலின்னு இருந்தீங்க…” என்று மேலும் தயங்கினான்.

 

“உள்ள அனுப்புங்க… நான் கூப்பிடுற வரை வேற யாரையும் அலோவ் பண்ணாதீங்க” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

 

செல்லும் அவளையே தன் விழிகளுக்குள் நிறைத்துக் கொண்டு உதட்டில் தோன்றிய மிதமான புன்னகையும் உள்ளே மறைத்துக்கொண்டு அவளை காணச் சென்றான்.

 

மரியாதை நிமித்தம் அறைக்கதவை தட்டினான். அவளின் எஸ் என்ற பதிலில் கதவை திறந்து உள்ளே நுழைந்திருந்தான் அவன்.

 

அவளை பார்த்ததும் மறைக்க நினைத்த புன்னகை தன்னை மீறி வெளியே வந்தது.

 

‘எதுக்கு இப்போ என்னை பார்த்து சிரிக்கிறான்’ என்று பல்லைக்கடித்தாள் அவள் கோபத்தில்.

 

“எப்படி இருக்கே பிபி??” என்று அவன் சொன்னதும் அவளுக்கு வந்ததே ஆத்திரம் மேஜையில் இருந்த பேன் ஸ்டான்ட்டை வீசியிருந்தாள்.

 

“பொறுமை டியர் எதுக்கு இவ்வளவு கோபம் அதுவும் என்னைப் பார்த்து. உன்னோட பதவிக்கு இவ்வளவு கோபம் உனக்கு ஆகாது செல்லம்”

 

“ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று பாட்டாய் வேறு பாடி காண்பித்தான்.

 

‘நிதானம் நிதானம்’ என்று பலமுறை சொல்லிக் கொண்ட போதும் அவளுக்கு அந்த பொறுமையே இல்லாமல் போனது.

 

“என்ன வேணும்??” என்றாள் மொட்டையாய்.

 

“எல்லாமே வேணும்…”

 

“என்ன??”

“நான் தொலைச்சது எல்லாமே வேணும்” என்றான் நிறுத்தி நிதானமாய்.

 

அவ்வளவு தான் அவளால் அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கே நீ?? நான் என்ன நீ தூக்கிப்போட்டு விளையாடுற பந்துன்னு நினைச்சியா?? தூக்கிப் போட்டதும் கைக்கு வர”

 

“எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்ட வந்து இப்படி பேசுவ?? எனக்குன்னு யாருமில்லைன்னு நினைச்சியா நீ??” என்று பொரிந்தாள் அவள்.

 

கோபம் கண்ணை மறைத்தது அவளுக்கு. முகம் ரத்தம் நிறம் கொண்டு விட்டது.

 

“உனக்கு யாருமில்லைன்னு யார் சொன்னது?? எல்லாருமே இருக்காங்க??”

 

“வேணாம் எனக்கு எதுவும் வேணாம்”

 

“நீ வேணாம்ன்னு சொன்னாலும் உன்னை வந்து சேர வேண்டியதை இனி யாராலும் தடுக்க முடியாது” என்றான் அவனும் பூடகமாகவே.

 

அவன் பேசுவது புரியவில்லை அவளுக்கு எதை சொல்கிறான் இவன் என்று.

 

அவன் இப்போது எழுந்திருந்தான். “போ இப்படியே போய்டு” என்றாள் அவள் அவன் கிளம்பப் போகிறான் என்றெண்ணி.

 

“போறேன் நீ எப்போ வருவே பிபி??”

 

“அப்படி கூப்பிடாதே” என்று கத்தினாள்.

 

“சரிங்க வதனா வல்லவராயன்” என்று வேண்டுமென்றே நீட்டி முழக்க அவன் அப்படி கூப்பிட்டதும் கூட அவளுக்கு நாராசமாகவே இருந்தது.

 

அவள் பார்வை தீயை கக்கியது இப்போது. “சரி சரி இந்த பார்வையில எரிக்கிறது எல்லாம் வேணாம்”

 

“விளையாட்டு விட்டு தான் கேக்குறேன். நீ எப்போ வருவே??”

 

“வெளிய போடா” என்று கர்ஜித்தாள் பொறுமை முற்றிலும்விட்டு.

 

அதையெல்லாம் அவன் சட்டையே செய்யாமல் அவளருகே வந்திருந்தான்.

 

“வேணாம் வதும்மா நீ எமோஷனல் ஆகாதே” என்றவன் எழுந்து நின்றிருந்த அவள் தோள் மேல் கைவைத்து சாந்தப்படுத்த முயல அவன் கையை தட்டிவிட்டாள்.

 

“இப்போ எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ணுறே??”

 

“நீ எதுக்கு இப்போ வந்தே?? நான் பெரிய பதவியில இருக்கேன் வந்து ஒட்டிக்கலாம்ன்னு பார்க்கறியா?? என்னை வைச்சு காசு பார்க்கலாம்ன்னு நினைக்கறியா??” என்று வாய்க்கு வந்ததெல்லாம் கேட்டாள்.

 

“போதும் நிறுத்து”

 

“நீ பேசுறதை எல்லாமே கேட்கணும்ன்னு எனக்கு அவசியமில்லை. நான் எதுக்கும் உனக்கும் விளக்கம் சொல்ல விரும்பலை. எல்லாமே உனக்கே போகப் போக புரியும்”

 

“வேண்டாம் எனக்கு எதுவுமே புரிய வேண்டாம். உன்னை நம்புற முட்டாள்த்தனத்தை நான் திரும்பவும் செய்யறதா இல்லவே இல்லை”

 

“என்னை நம்பி நீ எப்பவும் முட்டாள் ஆனதில்லை”

 

“ஏன் இப்போ நான் உன் முன்னாடி அப்படி தானே நிக்கறேன்??”

 

“நீ எங்க முட்டாளா நிக்கறே?? எல்லாமே யோசிச்சு முடிவெடுக்க அதிகாரம் படைச்ச ஒரு புத்திசாலியா தானே நிக்குறே” என்று அவன் சொல்லவும் உள்ளே லேசாய் குளிர்ந்ததுவோ!!

 

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவா முடியும். அவன் சொன்னதை கேட்டு அவனை முறைத்தாள் இப்போது.

“நான் சொன்னதை நீ நம்பலையா வது… நிஜம் தான் செல்லம்மா…” என்றவனின் பேச்சில் அவ்வளவு கனிவிருந்தது.

 

‘எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கான் இவன்??’ என்ற சலிப்பும் வெறுப்பும் நம்பாத பாவமும் அவளிடத்தில்.

 

“நான் அப்போ பார்த்த மாதிரியே…” என்று அவன் முடிப்பதற்குள் “பேசாம வெளிய போய்டு, இல்லை மரியாதை கெட்டிரும்” என்றிருந்தாள் அவள் நிதானமில்லாத குரலில்.

 

“நான் சொல்லி முடிச்சுடறேன் வதும்மா… நான் அப்போ பார்த்த மாதிரியே நீ இப்போ இல்லைன்னு தான் சொல்ல வந்தேன்”

 

“இப்போ உனக்குள்ள ஒரு தெளிவு தெரியுது. உன் படிப்பும் அது கொடுத்த அறிவும் சேர்ந்து இப்போ உன்னை ரொம்ப அழகா காட்டுது”

 

அவன் பேச்சு மேலும் மேலும் அவளுக்கு போதை ஏற்றுவதை அவளால் உணர முடிந்தது.

 

அதை தொடர அவளுக்கு ஒரு சதம் கூட விருப்பமில்லை. ஆனால் அவனோ தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

 

அவன் பேசுவது அவள் மனதை குளிர வைத்துக் கொண்டிருந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளால். ‘அப்போதெல்லாம் இப்படி பேசியதில்லையே இவன்…’ என்ற எண்ணமும் ஒருங்கே எழுந்தது.

 

அவளுக்கு கோபம் கனன்றது அவனை பார்த்து நிறுத்து என்பதாய் கைக்காட்டினாள்.

 

அவன் பேசுவதை நிறுத்தி அவளை பார்க்க “இப்போ எதுக்கு இங்க வந்தே?? அதை மட்டும் சொல்லு, தேவையில்லாத பேச்சு எல்லாம் வேணாம்”

 

“நீ வேணும்!! நீ என்னோட வரணும்!! வர்றேன்னு சொல்லு!! வா!!”

 

“நீ நினைச்சா உனக்கு நான் வேணும். இல்லைன்னா நீயே வேணாம்ன்னு தூக்கி போட்டு போவே நான் அதுக்கும் சரின்னு பேசாம இருக்கணுமா”

 

“என்னை நீ என்னன்னு நினைச்சே?? மரியாதையா இங்க இருந்து போய்டு. நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் இங்க இருக்கவங்க உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க” என்று எச்சரிக்கை செய்தாள் அவனை.

 

அவனோ அவள் பேச்சை கேட்டு சிரித்தான். “கொஞ்சம் அறிவு இருக்கு ஆனா கொஞ்சம் இல்லை. அப்பப்போ கடன்க்கு விட்டிருவியோ!!” என்று சொல்ல ஆத்திரம் அவளுக்கு அவள் குடித்து வைத்திருந்த கப்பை எடுத்து அவனை நோக்கி விசிறியடித்தாள்.

 

அந்தோ பரிதாபம் அவன் அதை உணர்ந்திருக்க சற்று விலகிய தருணத்தில் அழகிய அந்த கப் உடைந்து சிதறியது.

 

கீழே சிதறியிருந்த கப்பையும் அவனையும் மாறி மாறிப்பார்த்தவள் “இப்படி என் வாழ்க்கையை சிதறவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எப்படி என்னை கூப்பிட்டே??”

 

“வாயால தான்” என்று வழக்கடித்தான்.

 

அவனை முறைத்தாள். “வேற மாதிரி ட்ரை பண்ணு பிபி… முறைக்கிறதுக்கு பதிலா வேணா கிஸ் பண்ணேன்” என்று சொல்லி அவள் கோபத்தை இன்னமும் கிளறினான் அவன்.

 

அவள் முகம் சீரியஸாகி கண்கள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுகைக்கு தயாராவதை கண்டதும் அவன் மனம் இளகியதுவோ!!

 

தன்னை அவன் கண்டுக்கொண்டதை உணர்ந்ததும் கண்ணீரை உள்ளே இழுத்து முகத்தை கோபமாய் காட்டிக்கொண்டாள்.

 

அவளை மேலும் சீண்ட வேண்டாம் என்று அவனும் அமைதியாய் நின்றான் இப்போது.

 

“சரி நான் கிளம்பறேன்”

 

“இதுக்கு தான் வந்தியா??” என்றாள்.

“வேற எதுக்கு வந்திருப்பேன்னு நீ நினைக்கிற??”

 

“நீ வேற ஏதோ என்கிட்ட எதிர்பார்க்கறே?? அப்படி தானே… என்னால உனக்கு ஏதோ வேலை ஆகணும் அதுக்கு தானே இப்போ என்னைத் தேடி வந்திருக்கே??” என்றாள் அவன் நோக்கம் அறிந்துக்கொள்ளும் பொருட்டு.

 

“உண்மையை சொன்னா உலகம் நம்ப மாட்டேங்குதே!!” என்று சத்தமாய் சொல்லி ஒரு பெருமூச்சை வெளியேற்றினான் அவன்.

 

“நான் இப்போ வந்தது நமக்காக தான்!! உன்னை வான்னு சொல்லி கூப்பிடத்தான்!!”

 

“எப்படி நீ கூப்பிட்டதும் வள்ளுவர் மனைவி வாசுகி மாதிரி இறைச்சுக்கிட்டு இருக்கற தண்ணியை அப்படியே விட்டு ஓடிவர்ற மாதிரி வருவேன்னு நினைச்சியா!!”

 

அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு லேசாய் சிரிப்பு வந்தது. அப்படி அவள் தனக்காய் எல்லாம் விட்டுவந்தால் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

 

அப்படி விட்டுவருவதை அவன் விரும்ப மாட்டான் தான் ஆனாலும் அந்த நினைப்பு லேசாய் இனித்ததுவோ!!

 

“நீ அப்படி வரணும்ன்னு நான் சொல்லவேயில்லையே!!”

 

“அப்புறம் எதுக்கு என்னை கூப்பிடறீங்க?? எது கொடுத்த தைரியம் அது??”

 

“உன்னை கூப்பிட்டது நீயும் நானும் சேர்த்து வாழத்தான். இத்தனை வருஷமா விட்டுப்போனதை தொடரத்தான்”

 

“நான் இன்னும் சின்னப் பெண்ணில்லை!!”

 

“அதனால தான் உன்னை கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா தூக்கிட்டு தான் போயிருப்பேன். இப்போ உன்னை தூக்கிட்டு போறது கொஞ்சம் கஷ்டம் தான்”

 

“கொஞ்சம் நல்லா குண்டா வேற ஆகிட்ட, ஆனாலும் பரவாயில்லைன்னு தூக்கி போயிருப்பேன். சில விஷயங்கள் தடுக்குது அதனால தான் அப்படியே இருக்கேன்”

 

‘தூக்கிட்டு போயிருப்பானா… பேச்சை பாரு!! எவ்வளவு திமிர் இவனுக்கு… தூக்கிட்டு போயிருப்பானாம்ல!!’ என்று அவள் பற்களை நறநறப்பதை அவனால் உணர முடிந்தது.

 

அவன் பேசப்பேச உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தது எல்லாம் உருகியதோ என்ற சந்தேகம் அவளுக்கு.

 

கோபம், இயலாமை, இப்போது அவன் உருகி பேசுவது கண்டு இளகிக்கொண்டிருப்பது என்று எந்த உணர்வுகளையும் அவளால் கட்டுப்படுத்த முடியாது போனது.

அனைத்து உணர்வுகளும் ஒருங்கே தாக்க அவள் தன் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருந்தாள். அதீத உணர்ச்சி கொந்தளிப்பில் அவளுக்கு பிட்ஸ் வந்துவிட கை கால் எல்லாம் இழுக்க ஆரம்பித்தது.

 

இன்று அவளிடம் அதிகப்படியாய் பேசிவிட்டோம் என்று தோன்றிவிட அவன் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் நகர்ந்திருந்தான்.

 

எதுவோ தோன்ற வெளியேறும் முன் நின்று திரும்பி பார்த்தவன் அதிர்ந்து போனான் அவள் கோலம் பார்த்து.

 

அவன் ஓடிவந்து தாங்குவதற்குள் அவள் சிதறியிருந்த காபி கப்பின் மேலேயே விழுந்திருக்க கண்ணாடி துண்டுகள் ஒன்றிரண்டு அவள் உடலை பதம் பார்த்து இதோ வந்துவிட்டேன் என்று ரத்தம் வெளிவந்தது.

 

அவளின் அந்த கோலம் கண்டு அவன் துடித்து தான் போனான்.

 

அவசரமாய் அவளை கைகளில் தூக்கிக்கொண்டு கதவை திறக்க முடியாமல் திறந்து வெளியில் வந்தவனை பார்த்த கபிலன் விரைந்து வந்தான்.

 

“என்ன செஞ்சே நீ இவளை?? சொல்லுடா என்ன செஞ்சே?? இதுக்கு தான் உன்னை நான் உள்ள விடமாட்டேன்னு சொன்னேன்”

 

“மறுபடியும் வந்து ஏன்டா அவளை இப்படி கொல்றே??” என்று அவன் சட்டையை பிடித்திருந்தான் அவன்.

கபிலனை ஆச்சரியமாய் பார்த்திருந்தான் பார்த்திபன். பின்னே வதனாவை மேடம் மேடம் என்று மூச்சுக்கு மூன்னூறு முறை அழைப்பவன் அவளை மரியாதை குறைவாக பேசுவது அவனுக்கு வித்தியாசமாய் இருந்தது.

 

இருவருக்கும் ஏற்கனவே பரிட்ச்சயமிருக்கும் என்பதை உணர்ந்தான். வேகமாய் அருகில் வந்து “கபிலன் சார் அவரை விடுங்க. நான் பார்த்துக்கறேன் அவரை… நீங்க மேடம்க்கு என்ன வேணும்ன்னு பாருங்க” என்றான்.

 

கபிலன் அவனை முறைத்து கைபேசியில் யாருக்கோ அழைத்து அப்புறம் செல்ல “சார் மேடமை ப்ளீஸ்…” என்று பார்த்திபன் சொல்ல அவன் கைகளில் துவண்டு கொண்டிருந்தவளை அருகிலிருந்த சோபாவில் கிடத்தினான் அவன்.

 

மனம் முழுக்க வேதனை மண்டிக் கிடந்தது அவனுக்கு. அவளை இந்நிலையில் விட்டுச்செல்ல பிரியமில்லை அவனுக்கு. ஆனால் இது தன்னால் என்பதால் விலகி நடக்க ஆரம்பித்தான்.

 

“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?? நான் தான் நீங்க வந்திருக்கீங்கன்னு மேடம்கிட்ட சொல்லி உங்களை பார்க்க வைச்சேன். இப்போ மேடம்க்கு இப்படி ஆகிப்போச்சு”

 

“எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு சார்…” என்ற பார்த்திபனை ஆழமாய் பார்த்தவன் சுற்று முற்றும் பார்த்தான். அருகே யாருமில்லை என்பதை உணர்ந்தவன் பார்த்திபனின் கைபேசியை சட்டென்று பறித்தான்.

 

அவசரமாய் அதில் சில எண்களை அழுத்த இப்போது அவன் கைபேசி அடிக்கவும் காலை கட் செய்து பார்த்திபனிடம் கைபேசியை கொடுத்தான்.

 

பார்த்திபன் இவர் என்ன செய்யப் போறார் என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருக்க ஓரிரு நிமிடங்களிலேயே அவன் கைபேசி அவனிடம் வந்திருந்தது.

 

“உங்க பேரு??”

 

“பார்த்திபேந்திரன்”

 

வதனாவை போலவே அவனும் “நல்ல பெயர்!!” என்று முணுமுணுத்தான்.

 

“சார் ஒரு நிமிஷம்… உங்களோட முழுப்பெயர்??” என்றவனிடம் சொன்னான் அவன்…

 

உறவானவளை

உரிமையாய் அழைத்தான்

உதறிவிட்டு சென்ற உன்

உறவே வேண்டாமென்றாளவள்

மீண்டும் விட்டுச் செல்வானோ??

இல்லை கூட்டிச் செல்வானோ??

 

Advertisement