Advertisement

அத்தியாயம் – 5

 

“ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”

 

“ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு… நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”

 

“இல்லை நீ என்னமோ எண்ணை ஒரு மாதிரியா தான் பார்க்குற??” என்று மறுபடியும் சொன்னாள்.

 

“சுகுணா…” என்றழைத்தான்.

 

“என்னங்க??” என்றவாறே வந்தவள் “ஹேய் ஹாய் இப்போ தான் வந்தீங்களா… என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள வழக்கம் போல பஞ்சாயத்தா??”

 

“அதுக்கு தான் என்னை கூப்பிட்டாரா!!” என்று அத்தனையும் வதனாவை பார்த்தே சொன்னாள்.

 

“அடியேய் கூப்பிட்டது நானு… நீ என்ன அவகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கே??” என்று முறைத்தான் ராம்.

 

“சரி என்னன்னு சொல்லுங்க…”

 

“இங்க உட்காரு…” என்று தன் மடியை காண்பித்தான்.

 

“என்ன விளையாடுறீங்களா??” என்று முறைத்தாள் கணவனை.

 

“நம்ம விளையாட்டெல்லாம் நம்ம ரூம்ல வைச்சுக்கலாம். நீ இங்க உட்காரலன்னா இங்கவாச்சும் உட்காரு…” என்று அருகிருந்த இருக்கையை காட்டினான்.

 

அவளும் வந்து உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்தாள்.

 

“இப்போ சொல்லு என் பார்வையில எதுவும் வித்தியாசம் தெரியுதா” என்று.

 

“வித்தியாசமாவா ஏன் லென்ஸ் வேற கலர்ல எதுவும் போட்டு இருக்கீங்களா??”

 

“அந்த மாதிரி வித்தியாசம் இல்லை சுகும்மா… இப்போ நான் நார்மலா தானே பார்க்கறேன். இல்லை உன்னை ரொமான்ஸ்ஆ பார்க்குறேனா??”

 

“அய்யே!! அப்படி எல்லாம் எதுவுமில்லை. எப்பவும் போல அதே முட்டைக் கண்ணோட தான் இருக்கீங்க…”

 

ராம் இப்போது வதனாவை திரும்பி பார்த்தான். “கேட்டுக்கோ என் பொண்டாட்டியே சொல்லிட்டா, நான் புதுசா எல்லாம் பார்க்கலையாம். எப்பவும் போல தான் இருக்கேனாம்”

 

வதனாவோ “ம்ப்ச் போடா” என்றாள்.

 

“சுகுணா நீ போய் லஞ்ச் ரெடி பண்ணும்மா… நான் ஆபீஸ் கிளம்பறேன், பார்த்துக்கோ இவளை” என்றுவிட்டு அவன் எழ ‘என்ன இவன் என்னிடம் எதுவும் கேட்காமலே போகிறானே??’ என்றிருந்தது வதனாவிற்கு.

 

‘அய்யோ அங்க ஒருத்தன் என்னை ஒரு மாதிரி படுத்தறான்னா இவன் என்னை வேற மாதிரி படுத்துறானே!!’ என்று ராமை மனதிற்குள் திட்டினாள்.

 

“என்னை எதுவும் திட்டினியா??”

 

“ஹான்…” என்றவள் “இல்லையே”

 

“ஹ்ம்ம் ஓகே… நான் ஆபீஸ் கிளம்பறேன், சரியா!! நீ பசங்களோடவும் சுகுணாவோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணு” என்றவன் எழுந்திருந்தான் இப்போது.

 

‘நான் வந்திருக்கேன் என்னைவிட இவனுக்கு ஆபீஸ் தான் முக்கியமா போச்சா… வீட்டில இருக்கேன்னு சொல்ல மாட்டானா’ என்று அவளுக்கு கோபம் புசுபுசுவென்று வந்தது.

 

அவன் உள்ளே செல்லப் போக “டேய்” என்று அழைத்துவிட்டாள்.

 

கபிலன் சொன்னது ரொம்பவே சரி, இவன் பேசாமலே என்னை பேச வைக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

 

“என்ன??”

 

“நான் ஏன் வந்தேன்னு கேட்க மாட்டியா??”

 

“ஏன் நீயே சொல்ல மாட்டியா??” என்று விதண்டாவாதம் செய்தான்.

 

“போ நீ எதுவும் கேட்க வேண்டாம் என்கிட்ட!! அங்க இருக்க முடியாம இங்க ஓடிவந்தேன் பாரு என்னைச் சொல்லணும்” என்றவளுக்கு இப்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

 

“சுகுணா”

 

‘அடடா இவர் ஒருத்தரு அப்பப்போ என்னைய கூப்பிட்டுகிட்டு இருக்கார்’ என்று சலித்துக்கொண்டே அவள் வந்தாள்.

 

“என்ன??” என்றவளிடம் “உட்கார்” என்றான்.

 

அவள் வதனாவை பார்க்க அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

அவளருகே சென்று அமர்ந்தவன் “நீயா சொல்லுவியா?? இல்லை நான் என்னன்னு கேட்டா தான் சொல்லிவியா??”

 

அவள் முழங்காலை மடித்து அதில் முகம் புதைத்து ஓவென்று அழுதாள்.

 

அவள் தலையை மெல்ல வருடினான் ஆறுதலாய். ‘என்னாச்சு’ என்று வாயசைப்பில் கேட்டாள் அவன் மனைவி.

 

‘வல்லவன்’ என்று வாயசைப்பின் மூலமே பதில் கொடுத்தான் அவன்.

 

‘நீங்க பேசுங்க நான் உள்ளே போறேன்’ என்றவளை வேண்டாம் எங்கே வா என்பதாய் தலையசைக்க சுகுணா எழுந்து அருகே வந்தாள்.

 

“ஏன் வந்தேன்னு உன்னை நான் எப்பவும் கேட்க மாட்டேன்னு உனக்கு தெரியும்… ஆனா இப்போ நீ ஏன் அழறேன்னு எனக்கு சொல்லு” என்றான்.

 

சோபாவில் வதனாவின் அருகில் சுகுணா வந்து அமர்ந்தவள் அருகிருந்தவளை தன் மடி மீது சாய்த்துக் கொள்ள ஒரு நொடி யோசித்தவள் அடுத்த நொடியே அங்கு தஞ்சம் புகுந்தாள்.

 

சுகுணா அவள் தலைக்கோத “ஏய் நான் லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கேன். நீ என்னமோ அழுதிட்டே இருக்கே?? என்னன்னு சொல்லிட்டு அழு” என்று கொஞ்சம் சத்தமாகவே ராம் சொல்ல நிமிர்ந்து கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

 

“அவனை பார்த்தேன்”

 

“சரி அதுக்கென்ன இப்போ??”

 

“நான் அவனை பார்த்தேன்னு சொன்னேன்…”

 

“அது எனக்கு புரியுது அதுக்கு எதுக்கு நீ அழணும்??” என்று முறைத்தான் அவளை.

“எப்படி கேட்கிறான் பாரு சுகுணா?? இவனுக்கு என் பீலிங்க்ஸ் புரியவே இல்லை”

 

“என்ன புரியணும் எனக்கு?? முதல்ல எழுந்திரு நீ?? இப்போ எதுக்கு அழறே?? அவனை பார்த்ததாலயா??”

 

“அவனை பார்த்தா என்ன இப்போ?? உனக்கு எதுக்கு இந்த தடுமாற்றம்?? உன்னால அவனை இன்னும் மறக்க முடியலையா??” என்று அவள் மனம் படித்து கேள்வி கேட்டவனை நிமிர்ந்து பார்த்திருந்தாள்.

 

“தெரியாது…”

 

“இதென்ன பதில் தெரியாதுன்னு… உனக்கு என்கிட்ட சொல்ல வேற பதில் இல்லை அதனால தானே இப்படி சொல்லுற??”

 

‘ஏன்டா இவ்வளவு புத்திசாலியா இருந்து தொலையுறே??’ என்று அவளின் மனம் அவனை திட்டியது.

 

“அதெப்படி எல்லாம் மறந்து போகும் எனக்கு. மறக்கக்கூடிய எதுவும் நடக்கலையே!!”

 

“என் கூடவே இருந்து எல்லாம் பார்த்தவன் தானே நீ அப்புறம் எப்படி உன்னால இப்படி கேட்க முடியுது”

 

“உன் கூடவே இருந்ததால தான் கேட்குறேன். உன்னால அவனை மறக்க முடியலை… அவனை பார்த்ததும் உனக்கு தடுமாற்றம் அதை ஒத்துக்கோ முதல்ல”

“ஆமா என்னால அவனை மறக்க முடியலை. ஆனா தடுமாற்றம் எல்லாம் இல்லை” சொல்லும் போதே தடுமாற்றம் வந்தது அவளுக்கு.

 

அவன் எதுவும் பேசவில்லை அமைதியாய் அவளை ஊடுருவி பார்த்திருந்தான். ‘என்கிட்டயேவா’ என்ற பார்வையை கொடுத்தான்.

 

“நானும் நீ சென்னை போனதுல இருந்து உன்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். அப்போ எல்லாம் இங்க நீ இப்படி ஓடிவரலையே!!”

 

“நேத்து கவர்னர் கொடுத்த விருந்து அவன் வந்தான். என்ன நடந்துச்சுன்னு தெரியுமா உனக்கு” என்றவள் வல்லவரையனை பார்த்தது முதல் நேற்று வரை நடந்ததை சொன்னாள்.

 

“இதுல ராஜசேகர் சார் வேற அட்வைஸ் பண்ணுறாரு… அவருக்கு என்ன விஷயம் எதுவும் தெரியாது, அவர் சொல்றார் நீ தனியா இருக்காதேம்மா, சேர்ந்து வாழுன்னு”

 

“என்னால அங்க இருக்கவே முடியலை. நிம்மதியா சுவாசிக்க கூட முடியாத மாதிரி இருக்கு”

 

ராம்க்கு அவளின் நிலை புரிந்தது. ஆனாலும் அவளிடம் மேலும் வம்பு வளர்த்தான்.

 

“ராஜசேகர் சார் சொன்னது சரி தானே, அதையே நீ செஞ்சிடலாமே…”

“என்ன??” என்று முறைத்தாள்.

 

“நிஜமா தான் சொல்றேன்”

 

“உனக்கென்ன பைத்தியமா?? நான் அப்படி செய்வேன்னு உனக்கு என்ன திண்ணம்” என்று கத்தினாள்.

 

“சிம்பிள் நீ நீயா இல்லை…”

 

“அதுக்காக??”

 

“பெட்டர் நீ கவர்னர் சார் சொன்ன மாதிரி அவனோட வாழ்ந்தா தான் என்ன!!” என்றவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.

 

ராம் அதற்கெல்லாம் கலங்குபவனே அல்ல!! அவள் பார்வையாய் தூசியாய் ஊதி தள்ளினான்.

 

“முறைக்காம நான் சொல்றதை கேளு…”

 

“நீ எதுவும் சொல்ல வேணாம்??”

 

“இப்படி நீயா முடிவெடுத்து தான் இப்போ இந்த நிலையில நிக்கறே??” என்று குத்திக்காட்டினான்.

 

சட்டென்று அவள் முகம் வாடியது. அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் அவளை சாடினான்.

 

வலிக்காமல் எப்படி குழந்தை பெற முடியாதோ, மருந்துண்ணாமல் நோயும் குணமாகாது என்று எண்ணுபவன் அவன்.

 

கபிலனோ அவளுக்கு கஷ்டமாயிருக்கும் அவள் வருந்துவாள் என்று எண்ணி அவளுக்கு எது நிம்மதியோ அதை மட்டுமே எண்ணுவான்.

 

இருவருமே அவளுக்கு நட்பாயிருப்பவர்கள் தான். ஆனால் எண்ணங்கள் வேறுவிதம் இருவருக்குள்ளும்.

 

கபிலன் அவளுக்கு பாகற்காய் பிடிக்காது என்றால் கொடுக்க மாட்டான். ராம் அப்படியல்ல அது தான் அவளுக்கு மருந்தென்றால் வாயில் வைத்து திணிக்கும் ரகம்.

 

இப்போதும் அப்படியே அவளை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தான்.

 

மளுக்கென்று கண்ணீர் விட்டவளை கடுமையாக பார்த்து வைத்தான்.

 

“உனக்கு சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனா பார்த்தியா நீ எவ்வளவு கோழையாகிட்டேன்னு”

 

“நான் ஒண்ணும் கோழையில்லை” என்றவள் சுகுணாவின் மடி மீதிருந்து எழுந்து அமர்ந்திருந்தாள். கண்ணை அழுந்த துடைத்தாள்.

 

“இப்படி செஞ்சா மட்டும் நம்பிடுவேனா”

“நீ கோழை தான் பயந்தாங்கொள்ளி தான். யாருக்கோ பயந்து இங்க வந்து ஒளிஞ்சுட்டு இருக்கே??”

 

“இது தான் நீயா?? பத்து வருஷம் முன்னாடி நீ எப்படி இருந்தியோ அதே இடத்துக்கு மறுபடியும் வந்திட்டே” என்று தொடர்ந்து வலிக்க வலிக்க குத்தினான் அவன்.

 

“ஏன்டா இப்படி பேசறே?? நான் என்ன செஞ்சா நீ நம்புவே??” என்று யோசிக்காமல் வாயைவிட்டாள்.

 

“கவர்னர் சொன்னதை செய்…”

 

“அப்படி செஞ்சா நீ என்னை கோழையில்லைன்னு ஒத்துக்குவியா!!”

 

“ஒத்துக்கறேன்…”

 

“சரி இதை சொல்லு நான் ஏன் அவர் சொன்னதை செய்யணும்??”

 

“இப்போ தான் நீ சரியா பாயிண்டுக்கு வந்திருக்கே??” என்றவன் சுகுணாவிற்கு கண் ஜாடை காட்டினான்.

 

அவளும் புரிந்தவளாய் “என்னங்க எனக்கு வேலையிருக்கு மதியம் உங்களுக்கும் சேர்த்து சமைக்கறேன். பிரியா… சரி சரி முறைக்காதீங்க. வதனா வந்ததுனால ஸ்பெஷல் இன்னைக்கு”

 

“பிரியாணி பண்றேன் ஓகே வா!!” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள்.

“அதான் நீ ஜாடை காமிச்சு அவங்க உள்ள போய்ட்டாங்கல்ல இன்னும் என்ன சொல்ல வந்ததை சொல்லு” என்றவளை பார்த்து லேசாய் புன்னகை செய்தான்.

 

“சிரிக்காதடா எனக்கு கோபமா வருது”

 

“அவன் இப்போ எப்படி இருக்கான்??” என்ற கேள்விக்கு நண்பனை முறைப்பாய் பார்த்தாள்.

 

“இங்க பாரு கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு…”

 

அவள் இப்போதும் பதில் சொல்லவில்லை. “சும்மா சும்மா முறைக்காம பதில் சொல்லுடி”

 

‘என்ன தான் வேணும்டா உனக்கு’ என்று சலித்துக்கொண்டே அவனை பார்த்ததை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

 

காலேஜ் படிக்கும் போது இருந்ததை விட இப்போ இன்னும் நல்லா தான் ஆகிட்டான் என்று எண்ணியவள் அதை அப்படியே சொன்னாள்.

 

“அவனுக்கென்ன முன்னைவிட இப்போ நல்லா தான் இருக்கான் வாட்டசாட்டமா… வெயிட் போட்டான்” என்றவளை இப்போது ராம் குறுகுறுவென்று பார்த்தான்.

 

“நான் என்ன கேட்டேன் நீ சொன்னே??” என்றான் கரகாட்டக்காரன் கவுண்டமணி பாணியில்.

“என்ன கேட்டே??” என்றாள் அவள் உடனே செந்திலாய் மாறி.

 

“அவன் இப்போ எப்படி இருக்கான்னு கேட்டா… ஆளு வெயிட் போட்டான் பார்க்க நல்லா இருக்கான்னு பதில் சொல்லுறே…”

 

“அப்போ நீ அவனை சைட் அடிச்சிருக்கே??” என்று சொல்ல அவளுக்கு வந்த கோபத்தில் சோபாவில் இருந்த குட்டி குட்டி தலையணைகளை தூக்கி அவன் மீது அடித்துக் கொண்டிருந்தாள்.

 

அனைத்தையும் பிடித்து தன்னருகில் போட்டுக் கொண்டவன் “எதுக்கு இப்போ அடிச்சே?? உண்மையை சொல்லிட்டேன்னா??”

 

“இங்க பாரு நான் கேட்டது அவனை பத்தி… அதாவது அவன் இப்போ என்ன பண்ணுறான்?? என்ன தொழில் இப்படி?? அவனோட பிசிகல் அப்பியரன்ஸ் பத்தி இல்லை…” என்று சொல்ல வதனா திருதிருத்தாள்.

 

“எதுக்கு இப்படி ஆந்தை மாதிரி முழிக்கிறே??”

 

அவன் கிண்டலில் சிலிர்த்தவள் “அவனை பத்தி நான் எதுக்கு தெரிஞ்சுக்கணும்?? எனக்கு என்ன அவசியம் அதுக்கு??” என்று பொரிந்தாள்.

 

“அவனை பத்தி தெரிஞ்சுக்க வேணாம். ஆனா சைட் அடிக்க மட்டும் வேணுமா” என்று வம்படித்தான் ராம்.

 

“என்ன தான்டா வேணும் உனக்கு?? அதை மட்டும் சொல்லு. இப்படி தினுசு தினுசா யோசிச்சு கேள்வி கேட்காதே!! எனக்கு பதில் சொல்ல தெரியலை” என்றவள் அவளுக்கு கீழிருப்பவர்களை கண்ணில் விரல்விட்டு ஆட்டி வைப்பாள்.

 

இப்போது அவளை ஒருவன் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மட்டுமே அவளும் பணிவாள், அடங்கிப் போவாள். அவன் சொன்னதை செய்வாள்.

 

இந்த பத்து வருடமும் அப்படி தான் சென்றிருந்தது. தனக்காய் சொந்த கருத்துக்கள் இருந்தாலும் அதை அவள் அவனிடம் முன் வைத்தாலும் கடைசியில் அவன் சொல்வதை செய்வாள்.

 

ஏனென்றால் அவன் மீது அப்படியொரு நம்பிக்கை அவளுக்கு. அவன் சொல்வதில் தவறு இருக்காது, அதில் தன் நன்மையே இருக்கும் என்ற எண்ணம் உறுதியாய் எப்போதும் அவள் மனதில்.

 

“அவனோட சேர்ந்து வாழு. அவனை பழி வாங்கு…” என்றான்.

 

அவன் சொன்னதை கேட்டவள் “என்ன??” என்று விழிவிரித்தாள்.

 

“கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னேன், கோட்டான் மாதிரி பார்க்காதேன்னு…”

 

“ஏன்டா உனக்கு புத்தி இப்படி போகுது. என்னைவிட்டு போனவன்கிட்ட என்னை மறுபடியும் போகச் சொல்றே?? அறிவில்லையாடா உனக்கு??”

 

“நீ தெளிவா யோசிக்கறவன்னு நினைச்சேன். இப்படி பழைய பட வில்லி ரேஞ்சுக்கு என்னை பழிவாங்க சொல்லி சொல்லுற”

 

“அப்படி செய்யறதுல எந்த தப்புமில்லை. அவன் உனக்கு செஞ்சதை நீ அவனுக்கு செய்யப் போறே அவ்வளவு தானே”

 

“என்ன பேசறே நீ?? நானும் அவனும் ஒண்ணா!! அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்??” என்றாள்.

 

“எதுக்கு உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கணும்?? நீ உன்னை புத்தரா காமிச்சுக்க போறியா அவன்கிட்ட!!”

 

“இல்லை நீ தான் ஏசுநாதர் பரம்பரையை மறுபடியும் அடிடான்னு இன்னொரு கன்னத்தை காட்டுறதுக்கு” என்று அவளை சீண்டிவிட்டான்.

 

“அப்போ என்னை என்ன பண்ண சொல்றே??”

 

“இவ்வளவு நேரம் சொன்னது உன் காதுல ஏறவேயில்லையா??”

 

“அப்படி செஞ்சா தப்பில்லையா??”

“அப்படியே அறைஞ்சேன்னு வை, காது கிழிஞ்சுடும் சொல்லிட்டேன்”

 

“ஏன்டா திட்டுறே??” என்றவளுக்கு கண்ணீர் கட்டியது.

 

“மறுபடியும் அதேவா… இந்த கண்ணீர் விடுற பழக்கத்தை எப்போ தான் விடப் போறேன்னு தெரியலை”

 

“சும்மா இப்படி சொல்லாதே… நான் அவன் முன்னாடி எல்லாம் அழவே இல்லை தெரியுமா!! போடாங்கற மாதிரி தான் இருந்தேன்” என்றாள் ராமிடம்.

 

“நீ எப்படியோ போ?? இனி நான் உனக்கு அட்வைஸ் பண்றதா இல்லை…” என்றுவிட்டு அவன் எழவும் எதிரில் அமர்ந்திருந்தவள் வேகமாய் எழுந்து வந்து அவன் கைப்பிடித்து அமர வைத்தாள்.

 

“சரிடா நீ சொல்றதை கேக்குறேன்…”

____________________

 

கவர்னர் மாளிகையில் இருந்து வெளியில் வந்திருந்த பிரியன் கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தான்.

 

வெறுமை!! வெறுமை!! வெறுமை!! மட்டுமே அவன் வாழ்வில்.

 

இத்தனை நாட்கள் கருப்பு வெள்ளையாய் கடந்திருந்த நாட்கள் இப்போது தான் வண்ணமாய் மாறியிருப்பதாய் தோன்றியது. மீண்டும் வந்த வசந்தத்தை மீண்டு வந்தவன் இழக்க தயாராயில்லை.

 

அதனாலேயே அவனுக்கு கோபமாய் வந்தது. சிறு முகசுழிப்பும் கூட அவனுக்கு சுணக்கமாய் இருந்தது.

 

மீண்டும் அவளை எப்படி பார்க்கலாம்?? அடுத்து என்ன என்ற மலைப்பே அவனுக்குள்.

 

அப்படியே பிளாட்பாரத்தில் அமர்ந்துவிட்டான் தலையில் கை வைத்து. சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தவன் சட்டென்று எழுந்து நின்றான்.

 

மனதிற்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தான். மறுநாள் இரவே ஊரைவிட்டு கிளம்பினான்.

 

எப்படியோ ஆளைப்பிடித்து ரயிலில் டிக்கெட் வாங்கி ஏறி அமர்ந்ததும் தான் அவனுக்கு கொஞ்சம் ஆசுவாசமானது.

 

மீண்டுமொருமுறை பார்த்திபனுக்கு அழைத்து அவள் எண்ணை கேட்க அவன் இம்முறையும் தன்னிடம் இல்லையென்றே சாதித்தான்.

 

வேறு வழியில்லாமல் நிர்மலாவிற்கே அழைத்தான். பொதுவாய் அவன் இரவு நேரத்தில் எல்லாம் அழைக்க மாட்டான் என்பதால் அவன் காலை பார்த்ததும் அட்டென்ட் செய்தார் நிர்மலா.

 

“சொல்லு பிரியன் என்ன இந்த நேரத்துல??”

“மேடம் எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணணும்”

 

“என்ன உதவின்னு சொல்லுங்க?? என்னால முடியும்ன்னா கண்டிப்பா செய்யறேன்”

 

“உங்களால கண்டிப்பா முடியும் மேடம்”

 

“சரி கேளு பிரியன்”

 

“எ… எனக்… எனக்கு வதனா… வதனா மேடமோட போன் நம்பர் வேணும்” என்று திக்கி திக்கி கேட்டு முடித்தான்.

 

“எதுக்குன்னு நான் கேட்க மாட்டேன்?? என்னை உன் சிஸ்டரா நினைச்சா ஷேர் பண்ணிக்கணும்ன்னு தோணிச்சுன்னா சொல்லு”

 

“மேடம்!!”

 

“சரி சரி நம்பர் வாங்கி தரேன்… மதி சார்கிட்ட பேசிட்டு லைன்ல வர்றேன்” என்று போனை கத்திரித்தவர் மதியிடம் பேசி எண்ணை வாங்கி பின் அவனுக்கு அழைத்தார்.

 

அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லுங்க மேடம்” என்றிருந்தான்.

 

“எதுக்கு இந்த அவசரம் பிரியன்??”

 

“அவசரமில்லை அவசியம் மேடம்”

 

“எங்கயோ வெளிய கிளம்பிட்ட மாதிரி இருக்கு. ட்ரைன் சத்தமெல்லாம் கேட்குது…” என்று அவன் பொறுமையை சோதித்தார்.

 

“ஹ்ம்ம் ஆமாம் மேடம் ஊருக்கு போயிட்டு இருக்கேன்”

 

“எந்த ஊருக்கு??”

 

அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ‘இப்போ அதை தெரிஞ்சு இவங்க என்ன பண்ணப் போறாங்க’ என்று கோபம் வந்தது.

 

அவரால் தனக்கு வேலை ஆக வேண்டுமென்பதால் பொறுமையாயிருந்தான்.

 

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை பார்க்க ஊருக்கு போயிட்டு இருக்கேன் மேடம். அப்புறம் அந்த நம்பர்…”

 

“உன் வேலையில நீ கண்ணா இரு…” என்றவர் “இந்த நம்பரை வாங்குறதுக்குள்ள அந்த மதி சார் என்னை ஒரு வழியாக்கிட்டார்”

 

“வதனாக்கே போன் பண்ணி கேட்டுட்டு தான் நம்பரை எனக்கு கொடுத்தார். என்னை மாட்டி வைக்காதே பிரியன்”

 

“பார்த்து பேசிக்கோ… என் உதவி எப்போ தேவைப்பட்டாலும் கேளு… பெஸ்ட் ஆப் லக்… இனி எல்லாமே உனக்கு நல்லது தான் நடக்கும்” என்றுவிட்டு போனை வைத்தார் நிர்மலா.

காலையில் அவன் அந்த ஸ்டேஷனில் வந்து இறங்கும் போது எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது.

 

அவன் பழகிய ஊர் தான் ஆனாலும் புதிதாய் தெரிந்தது இப்போது. ஆம் அவனும் ஹைதராபாத்திற்கு தான் வந்து இறங்கியிருந்தான்.

 

அவனின் நெருங்கிய நண்பர்கள் பலர் அந்த ஊரில் இருந்தும் ஒருவரையும் அவன் அணுகவில்லை.

 

கால்கள் தன் போக்கில் நடந்து ஒரு ஹோட்டலுக்கு சென்றது. அங்கேயே அறை எடுத்தான்.

 

காலை வேலைகள் அனைத்தும்  முடித்தவன் வேறு உடைமாற்றி அங்கிருந்த ரெஸ்டாரண்ட் வந்து அமர்ந்தான் காலை உணவிற்காய்.

 

சாப்பிட்டு முடித்ததும் கைபேசியில் பதிந்திருந்த அவள் எண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடம் பேச வேண்டும் என்று தான் அவளின் எண்ணை வாங்கினான்.

 

ஆனால் நிர்மலா சொன்னதை பார்த்தால் பேசாதே என்பது போல் இருக்க, ‘அப்புறம் எதற்கு இது’ என்று கோபம் துளிர்த்தது.

 

எப்படி பேச?? பார்க்க?? என்ற கேள்வியே மீண்டும் மனதிற்குள் வியாபித்தது. ஒருவனால் முடியும் அவளை அவனிடத்தில் பேச வைக்க அவனால் முடியும். ஆனால் செய்வானா அவன்…

சீண்டல்கள்

சீண்டுவதற்கு அல்ல

சிக்கல்களை அவிழ்ப்பதற்கே!!

 

அவிழுமா முடிச்சுகள்??

சேருமா?? அவனிட்ட

மூன்று முடிச்சுகள்??

Advertisement