Advertisement

அத்தியாயம் – 36
விகேபியோ மற்றவர்களோ எதுவுமே பேசவில்லை. அனைவருமே அமைதியாகவே இருந்தனர். தங்கள் பக்கம் இருக்கும் தவறு புரிந்தது.
நான்கு பேரப்பிள்ளைகளும் ஒவ்வொருவராய் அடுத்தடுத்தது இறந்த போது கூட இவ்வளவு தளர்வு இல்லை அந்த மனிதரிடம். அவ்வளவு நொந்து போயிருந்தார் இப்போது.
ஆனால் அதை அவனிடம் ஒத்துக்கொள்ள முடியுமா என்ன?? அதற்கு அவர்கள் ஈகோ துளியும் அனுமதிக்காதே.
விகேபி இன்னமும் அதே கம்பீரத்துடன் தான் இருந்தார். எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளே நொறுக்கித் தான் போனார்.
“உங்க பிள்ளைகளை உங்க கண்ட்ரோல்ல வைச்சுக்க தெரிஞ்ச உங்களுக்கு உங்க பேர் சொல்லும் பேரப்பிள்ளைகளை கண்ட்ரோல்ல வைச்சுக்க தெரியலையே”
“ஹ்ம்ம் பாசம் கண்ணை மறைச்சிருக்கும்” என்றான் சிறு இகழ்ச்சியோடு.
“போதும்” என்று கையை காட்டினார் அவனிடம்.
அவன் இவ்வளவு பேசியதே அதிகம், அவனை பேசவிட்டதே தப்பு என்று கூட தோன்றியது அவருக்கு.
“நீ சொன்னதை செய், இப்போ நீ கிளம்பு” என்றார் அதிகாரமாய்.
“நமக்கு வாக்கு மாறுற பழக்கமில்லை”
“எனக்குமில்லை” என்று மொழிந்தார் அவர்.
அங்கிருந்து கிளம்பியவன் சந்திரசேகரின் மனைவிக்கு நன்றி சொல்லியே கிளம்பினான்.
நடந்ததை வதனாவிடம் சொல்லி முடித்திருந்தான் பிரியன். அவன் சொன்னதை கேட்டு வாயை பிளந்து நின்றாள் அவள். 
எவ்வளவு செய்திருக்கிறான் இவன், அனைத்தும் எனக்காக என்று நினைக்க நினைக்க உள்ளே எதுவோ பாரமாய் அழுத்த அவளிடம் பெரும் கேவல் வெடித்தது.
“வது” என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள அவன் ஈரத்தில் குளித்தான். அவளை அழுகையை நிறுத்தவில்லை.
“எனக்காகவா ஏங்க??”
“என்ன கேள்வி வது, நீ தானே எனக்கு எல்லாம்”
“ஐ லவ் யூ பவள்”
“ஹேய் என் பழைய வது திரும்பிட்டா” என்றவன் “இன்னொரு முறை சொல்லேன்” என்றான்.
‘என்னது’ என்று அவள் பார்க்க “ஐ லவ் யூன்னு சொன்னியே அதை சொல்லேன். வித் ஸ்வீட் கிஸ் ப்ளீஸ் பேபி” என்றான்.
“சீய்!!” என்று அவன் தோளில் அடித்து அவன் மேல் சாய்ந்தாள்.
இரண்டு வருடம் கழித்து
———————————————-
“இதுக்கு தான் நான் வேணாம்ன்னு சொன்னேன்” என்ற பிரியன் மருத்துவமனை வளாகத்தில் அங்குமிங்கும் நடந்தவாறே புலம்பினான்.
“டேய் இதெல்லாம் சகஜம்டா. ரொம்ப ஓவரா பண்ணாதே வல்லா” என்று ராம் அவனை சமாதானப்படுத்தினான்.
“டேய் ராம் அப்போவும் இப்படி தான் வலியால கத்தினாளாடா” என்று கேட்க ராமிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“வல்லா கூல், இப்போ கஷ்டமா இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல உன் குழந்தை பார்க்கும் போது இந்த வலி எதுவும் இருக்காதுடா”
“யார் சொன்னா அதெல்லாம் இல்லை. எனக்கு இங்க வலிக்குது ராம்” என்று அவன் இதயத்தை காட்டி சொல்ல “டேய்” என்று அணைத்துக்கொண்டான் ராம் அவனை.
“நான் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா இல்லை. எனக்கு நினைக்க நினைக்க ஆறவே மாட்டேங்குது ராம்” என்றவனின் கண்கள் கலங்கியது.
“இதுக்காக தான் நான் வேண்டாம்ன்னு சொன்னேன். எங்களுக்கு இசை மட்டும் போதும்ன்னு சொன்னேன், இந்த வது கேட்கவேயில்லை ராம்”
பிரியன் அவன் நண்பன் ராமின் பெயரை ஜெபித்ததை அந்த ஸ்ரீராமன் தனக்கென்று எண்ணினானோ என்னவோ அவன் மனைவிக்கு பிரசவ வலி அதிகரித்து அவள் அழகிய ஆண் குழந்தையை ஈன்றாள்.
——————–
“ஸ்ரீ ஏன்டா என்ன படுத்தறே, சாப்பிட்டு போயேன்டா”
வதனா பிரியனின் செல்ல மகன் ஸ்ரீராம் தன் அன்னைக்கு போக்குக்காட்டி தன் தந்தையிடம் ஓடிவிட்டான்.
ஆம் பிரியன் எந்த நேரத்தில் ராம நாமம் ஜெபித்தானோ அதை அவன் வாழ் நாள் முழுக்க உச்சரிக்க விருப்பம் கொண்டானோ அன்றி தன் நண்பன் மீதான அன்பை பறைசாற்ற விரும்பினானோ தன் மகனுக்கு ஸ்ரீராம் என்ற நாமத்தையே சூட்டியிருந்தான்.
ராம் மட்டும் சும்மாயிருப்பானா தன் மகளுக்கு லக்ஷ்மி பிரியா என்று பெயர் வைத்து ஓயாமல் பிரியா என்றழைக்கும் பிரியனின் பிரியமான நண்பனாயிற்றே.
“உங்க பிள்ளையை பாருங்க சாப்பிட அடம் தூங்க அடம் எல்லாத்துக்கும் அடம் என்னை ட்ரில் எடுக்கறான் ரொம்ப, சிரிக்காதீங்க. நீங்களே இவனை சாப்பிட வைங்க” என்றுவிட்டு அவனிடம் உணவு கிண்ணத்தை நீட்டினாள்.
அது என்ன மாயமோ மந்திரமோ ஸ்ரீராம் பிரியன் உணவை ஊட்ட ஊட்ட சத்தமில்லாமல் சாப்பிட்டு முடித்தான்.
“இவ்வளவு சைஸ்ல இருந்திட்டு எதுக்குடா இம்புட்டு அழும்பு உனக்கு. உங்கப்பா ஊட்டினா தான் சாப்பிடுவியா. என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு”
“வது அவன் குழந்தை மிரட்டாம அன்பா சொல்லு. அவனுக்கு புரியும்”
“நான் என்ன மிரட்டிட்டேன் இப்போ, அவன் சாப்பிடணும் தானே அவன்கிட்ட மல்லுக்கட்டறேன். இசை இவனை மாதிரியா இருக்கா, எவ்வளவு சமத்து தெரியுமா அவ”
“சின்ன வயசுலவே அவ்வளவு சமத்து அவ. இவன் வாலா இருக்கான்”
“என் பொண்ணு என்னை மாதிரி. பையன் உன்னை மாதிரி” என்று போகிற போக்கில் அவன் சொல்ல தண்ணீர் தம்ளர் பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.
“பார்த்தியா அம்மாவுக்கு புள்ளை தப்பாம பிறந்து இருக்கான்னு நான் சொன்னது உண்மை தானே”
பிரியனின் கைபேசி ஒலியெழுப்ப அதை பார்த்தவன் முகம் மென்மையானது. “சொல்லு ராம், ஹ்ம்ம் இதோ வர்றேன்” என்றுவிட்டு போனை வைத்தான்.
“என்னவாம் அவனுக்கு உங்களை அங்க கிளம்பி வரச் சொல்றானா”
“இல்லை”
“அப்புறம் என்னவாம்” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க வீடியோ கால் செய்திருந்தான் பிரியன்.
“சொல்லுடா எப்படி இருக்க. சுகுணா சிஸ்டர், சரண், லச்சு குட்டி எப்படி இருக்காங்க”
“எல்லாரும் நல்லா இருக்காங்க எங்க என் பொண்ணு இசையை காணோம்”
“அவ எங்கம்மா அப்பா கூட கோவில்க்கு போயிருக்கா”
பிரியனின் தந்தை ஆளவந்தானும் அன்னை உமையாளும் இப்போது அவர்களுடனே தான் இருக்கிறார்கள். பிரியனின் தங்கை கூட தன் கணவர் பிள்ளைகளுடன் ஒரு முறை தன் அண்ணன் குடும்பத்தை நேரில் வந்து கண்டு சென்றாள்.
“ஜூனியர் என்ன செய்யறார்” என்றான் அவன்.
“ராம்ன்னு அவனுக்கு பேர் வைச்சது தப்பா போச்சுடா. என் பேச்சை நீயும் கேட்க மாட்ட, உன் பேரை வைச்சதால என் பையனும் கேட்க மாட்டேங்குறான்” என்று இடையில் அவனை எட்டிப் பார்த்து பொரிந்தாள் வதனா.
ராமும் பிரியனும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
“கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும். எனிமிஸ் மாதிரி முறைச்சுட்டே இருந்தவனுங்க எப்படி தான் இப்படி ஆனானுங்களோ எப்போ பார்த்தாலும் முஸ்தபா முஸ்தபா தான் போங்கடா” என்று திட்டி நகர்ந்தாள் அவள்.
“கண்ணு வைக்காதம்மா, போ, போய் வேற வேலை இருந்தா பாரு” என்றான் ராம் போனின் வழியாக.
“போயிட்டேன்டா” என்றுவிட்டு அவள் நகர்ந்திருந்தாள்.
“சொல்லு வல்லா என்னாச்சு” என்றான் ராம்.
“ஒண்ணுமில்லைடா”
“இல்லையே நீ டல்லா இருக்கியே, என்ன பிரச்சனை” என்றவனை பார்த்து பெருமையாக இருந்தது பிரியனுக்கு.
பிரியனின் சிறு முகச்சுணுக்கம் கூட ராமின் கண்களுக்கு தப்பாது. அது போலவே பிரியனும் ராமை விசாரிப்பான்.
“அது கவர்மென்ட் டென்டர் ஒண்ணு ரொம்ப நம்பி இருந்தேன். கையை விட்டு போச்சு, அது வந்திருந்தா பிசினெஸ் கொஞ்சம் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கும்டா. அதான் கொஞ்சம் டல்”
“நான் பேசி பார்க்கவா வல்லா”
“வேணாம் ராம். நமக்கு கிடைக்கணும்ன்னு இருந்தா கிடைச்சிருக்கும். இப்போ என்ன இன்னும் கொஞ்சம் கூடுதலா உழைக்கப் போறேன். இந்த வருஷம் இல்லைன்னா என்ன அடுத்த வருஷம் அது நமக்கு கிடைக்கும்” என்றான்.
——————–
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்று அய்யர் சொல்ல பார்த்திபன் மணமகளான காவ்யாவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன் பாதியாக்கிக் கொண்டான்.
பிரியனின் குடும்பத்தினர், ராமின் குடும்பத்தினர் மற்றும் கபிலன் குடும்பத்தினர் அனைவருமே அங்கே குழுமியிருந்தனர்.
மணப்பெண்ணை வதனா தான் தேர்வு செய்திருந்தாள். அவள் ஐஏஎஸ் தேர்வெழுதிய போது உடன்பயின்ற தோழன் சைத்தன்யாவின் தங்கை தான் அவள்.
கபிலனும் அவளும் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகியிருக்க சைத்தன்யன் அப்போது ஆந்திராவில் இருந்தான். பின் கடலூருக்கு தன் குடும்பத்தினருடன் சென்றுவிட்டான் என்ற தகவல் மட்டுமே அவள் அறிந்தது.
கலெக்டர்கள் மாநாடு ஒன்றில் தான் அவனை மீண்டும் கண்டாள். அவன் தங்கை பற்றி கேள்விப்பட்டதும் அவளுக்கு பார்த்திபனின் நினைவு.
பார்த்திபனின் அன்னைக்கும் தெரிவித்து அவர்களுக்கும் பிடித்தமாக போகவே உடனே பேசி முடித்து இதோ திருமணமும் முடிந்துவிட்டது.
இசை பெரிய பெண்ணாகியிருந்தாள் அவள் பேச்சும் அறிவும் அப்படியே வதனாவையே கொண்டிருந்தது. சரணும் நன்றாய் வளரந்திருந்தான்.
திருமணத்தில் அங்குமிகும் ஓடிக் கொண்டிருந்த கொண்டிருந்த வதனாவை “வது இங்க வா” என்றழைத்தான் பிரியன்.
“என்னங்க??”
“ஓடிட்டே இருக்கியே, கொஞ்சம் ரெஸ்ட் எடு”
“இது நம்ம வீட்டு கல்யாணம்”
“நான் இல்லைன்னு சொல்லலையே”
“அப்போ நாம அப்படியே உட்கார்றதா… நான் பார்த்து முடிச்சு வைச்சிருக்கேன் அவங்க நல்லாயிருக்கணுங்க” என்றாள்.
“ரொம்ப நல்லாயிருப்பாங்க வது… நாம கிளம்பலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க எல்லாரும் வருவாங்க” என்றான்.
“வரட்டும் அவங்களுக்கு பயந்து என்னை ஓடி ஒளிய சொல்றீங்களா” என்று பாய்ந்தாள் அவனிடம்.
“ஓடி ஒளிய சொல்லலை. வீணான தர்மசங்கடத்தை உருவாக்க வேணாம்ன்னு தான் சொல்றேன். என்ன இருந்தாலும் அவரோட மகன் கல்யாணம், தாலி கட்டுறதை பார்க்கலைன்னாலும் அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய வேணாமா”
“நாம இங்க இருந்தா எல்லார்க்கும் தர்மசங்கடம் வது. எப்படியும் பார்த்தி நம்மோட தான் வரப்போறான். நம்ம வீட்டு பக்கத்துல தானே அவனை குடி வைச்சிருக்கோம்”
“இப்போ என்ன நாம கிளம்பணும் அதானே”
“ஆமா…”
“கிளம்பலைன்னா”
“எனக்கொண்ணும் இல்லை, என் மாமனார் குடும்பத்தோட”
பிரியனை முறைத்தவள் “மாமனார்ன்னு உங்களுக்கு யாருமே இல்லை, கிளம்புங்க வீட்டுக்கு போவோம்”
——————–
மணமக்களுக்கு சுகுணாவும் வதனாவும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர். பார்த்திபன் அவன் அன்னையை அவனுடனே அழைத்துக் கொண்டிருந்தான்.
வரமுடியாது என்றவரை வலுக்கட்டாயமாக தான் அழைத்து வந்திருந்தான். மகன் திருமணம் முடிந்ததும் ஊருக்கு சென்றுவிடுவேன் என்று சொல்லித்தான் அவர் வந்திருந்தார்.
பிரியனும் வதனாவும் அவர்களுக்கு அறையை தயார் செய்து வைத்துவிட்டு தங்கள் வீடு திரும்பியிருந்தனர்.
அவர்கள் அறைக்குள் நுழைந்திருந்த பிரியன் அக்கடாவென்று கட்டிலில் விழுந்திருந்தான். 
“ஏங்க”
‘ஆஹா இது அதுல்ல’ என்ற எண்ணம் தான் பிரியனுக்கு. அவள் கூப்பிட்டது காதில் விழுந்தும் அமைதியாகவே இருந்தான்.
“என்னங்க??” என்றாள் இம்முறை சற்று அழுத்தமாய்.
‘தூங்கிட்டு இருக்க மாதிரி நடிப்போமா’ என்ற தோன்றிய எண்ணத்தை ரப்பர் கொண்டு அழித்தான்.
“நான் கூப்பிடுறது காதுல விழலையா உங்களுக்கு” என்று திரும்பி படுத்தவள் அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.
“என்ன??”
“எனக்கு ஒரு டவுட்டு”
‘மறுபடியும் முத இருந்தா, எதிர்பார்த்தேன். இவ டவுட்டு என்னவாயிருக்கும்ன்னு தான் எனக்கே தெரியுமே’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன் எதுவாக இருந்தாலும் அவள் வாயாலே வரட்டும் என்றிருந்தான்.
“நீங்க என்கிட்ட முழுசா எல்லாம் சொல்லிட்டீங்களா… இன்னும் என்னவோ மிச்சமிருக்கும் போல இருக்கே” என்றாள் அவனை கூர் பார்த்தவாறே.
“இத்தனை வருஷம் கழிச்சு உனக்கு ஏன் அப்படி தோணுது??”
“தோணுச்சு… இப்போ இல்லை அப்போவே, சரி சும்மா சும்மா கேட்டு தொல்லை பண்ண வேணாம்ன்னு விட்டுட்டேன்”
“இன்னைக்கு கல்யாணத்துல அவங்களை பார்த்தப்போ ஞாபகம் வந்திடுச்சு. அதான் கேட்கறேன் சொல்லுங்க”
“எதையும் மறைக்கவெல்லாம் இல்லை”
“அப்போ”
“முழுசா உண்மையை சொல்லலைன்னு வேணா சொல்லலாம்”
“சரி நீங்க சொல்லாம விட்ட உண்மை என்னன்னு நான் சொல்லவா இப்போ” என்றவளை ஆச்சரியமாய் பார்த்தான்.
“எப்போமே தான் தான் புத்திசாலின்னு நினைக்கக்கூடாது. நாங்களும் யோசிப்போம், என்ன சொல்லவா”
“ஹ்ம்ம் சொல்லேன்”
“அந்த கிழவனார் இன்னும் திருந்தின மாதிரி தெரியலையே எனக்கு. இப்போ அவர் விட்டுக்கொடுத்ததும் கூட அந்த சாமியார் சொல்லித்தானோன்னு…” என்று முடிக்காமல் இழுத்தாள்.
“எப்படி வது??”
“அவர் முகத்தில இருந்த அந்த அகங்காரம் சொல்லிச்சு. இவரெல்லாம் மாறுற ஆளில்லைன்னு. என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்க”
“அது வந்து…”
“வந்து… வந்துன்னு இழுக்கற வேளை எல்லாம் வேணாம். என்னன்னு சட்டுப்புட்டுன்னு சொல்லுங்க”
“பார்த்தியோட அம்மாவும் விகேபியும் ஊருக்கு போனாங்கன்னு சொன்னேன்ல”
“ஆமா…”
“அப்போவே அவர் சொல்லிட்டார் போல, நிலைமை கைமீறி போயிடுச்சு. நீங்க விட்டுக்கொடுத்து போறது தான் நல்லதுன்னு”
“ஓ!! அதனால தான் அப்படி நடந்துக்கிட்டாரா”
“ஆனா அவர் திரும்ப வந்து அன்னைக்கு ஹோட்டல்ல கலாட்டா பண்ணது எல்லாம்”
“அது உண்மை தான். அவங்களா விட்டிருந்தா அப்படி நடந்து இருக்க மாட்டார். நாங்க கூட்டிட்டு வந்த கோபம் அதான் அப்படி”
“அன்னைக்கு அவர் பேச்சுல அவ்வளவு வீரியம் இல்லாதப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்”
“என்கிட்ட அதுக்கு வேற மாதிரி காரணம் சொன்னீங்க”
“எனக்கு அப்போ அப்படித்தான் இருக்கும்ன்னு தோணுச்சு அதை தான் உன்கிட்டயும் சொன்னேன்”
“பார்த்தியோட அம்மா பார்த்திகிட்ட விஷயத்தை சொன்னப்போ தான் தெரியும்”
“அவரே பேசாம தான் விட்டிருப்பாரு, ஆனா எனக்கு அவங்களை சும்மாவிட மனசில்லை. அதான் வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட்ஸ்ன்னு எல்லாத்தையும் லீக் பண்ணேன்”
“உனக்கு இன்னொன்னு தெரியுமா. இதுல சில விஷயங்கள் எனக்கே தெரியாது. எல்லாம் பார்த்தி அம்மா கேள்விப்பட்ட விஷயங்கள் தான். அதை தோண்ட தோண்ட கிடைச்ச விஷயம் தான் அவ்வளவும்”
“பார்த்தி அம்மா இல்லைன்னா இவ்வளவும் செஞ்சிருக்க முடியாது. நான் கலெக்ட் பண்ணதை வைச்சு பெரிசா செஞ்சுருக்க முடியாதுன்னாலும் அவங்களை சில வருஷங்களுக்கு முடக்கி வைச்சிருப்போம். ஆனா பார்த்தி அம்மா கொடுத்த இன்பார்மேஷன்ஸ் தான் எல்லாத்துக்கும் அஸ்திவாரம்”
“அந்த விகேபியோட அஸ்திவாரமும் அப்போ தான் ஆட்டம் காண ஆரம்பிச்சது. எனக்கு பயந்து எல்லாம் அவர் விட்டதா நான் நினைக்கலை. அவர் என்ன வேணா செஞ்சு இதை அழிச்சிருக்க முடியும்”
“அந்த சாஸ்திரி சொன்னதால அமைதியா போய்ட்டார். பார்த்தி கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் மாறும்ன்னு அவர் சொல்லியிருந்தாராம்” என்று முடித்தான் அவன்.
“எப்படி மாறுமாம்??”
“அது எனக்கெப்படி தெரியும்”
“அவங்களாம் நினைச்சாலே எனக்கு எரிச்சலா இருக்கு. பார்த்தியே அவங்க கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு தானே சொன்னார். நீங்க தான் வந்திட்டு போகட்டும்ன்னு சொன்னீங்க” என்று தன் கணவனை முறைத்தாள்.
“பார்த்திக்காக இல்லைன்னாலும் அவங்க அம்மாக்காக நாம பார்க்கணும்ல. அவங்க மனசு கஷ்டப்பட்டா பரவாயில்லையா நீயே சொல்லு” என்று சொல்ல வதனா அமைதியானாள்.
சில நொடி மௌனமாகவே கழிந்தது. “இப்போ கூட நடந்ததெல்லாம் என்னால நம்பவே முடியலை. உங்களை விட்டு பிரிஞ்சது, அந்த இடைப்பட்ட காலம், நீங்க திரும்ப வந்தது, இதோ இப்போ நாம இருக்கறது எல்லாம். இதெல்லாம் நடந்திருக்காமலே போயிருக்கலாம்ல”
“எல்லாருமே சந்தோசமாவே இருந்திட்டா எப்படி வது. வாழ்க்கைன்னா ஏற்ற இறக்கங்கள், இன்பம் துன்பம்ன்னு எல்லாமே இருந்தா தான் நல்லது. அது தான் நம்மை பக்குவப்படுத்தும்”
“எப்படிங்க அந்த பத்து வருஷமும் இருந்தீங்க??” என்று எப்போதும் கேட்கும் கேள்வியை இப்போதும் கேட்டாள்.
“உன்னை நினைச்சுட்டே”
“நான் அப்படி என்ன செஞ்சிட்டேன் உங்களுக்கு. இதுக்கெல்லாம் நான் என்னங்க செய்யப் போறேன் உங்களுக்கு”
“நீ என்ன செய்யணும்ன்னு சொல்றேன் செய்வியா” என்றான்.
“என் உயிரையும் கொடுக்க நான் ரெடி” என்றாள்.
“இந்த சினிமா டயலாக் எல்லாம் வேணாம். நான் சொல்றதை மட்டும் செய்”
“என்னன்னு சொல்லுங்க”
“என்னை மட்டும் காதல் பண்ணு”
“என்னது”
“ஒரு புன்னகை பூவே!!
சிறு பூக்களின் தீவே!!
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…”
“என்ன டைட்டில் சொல்றீங்களா…”
“ஆமா சொல்லித்தானே ஆகணும், கதை முடியப் போகுதுல”
“விளையாட்டுக்கு சொல்லலை வது. நிஜமா தான் சொல்றேன், எனக்கு எப்பவும் உன்னோட காதல் மட்டும் போதும். அது என்னைக்கும் மாறாம எப்பவும் புதுசா எனக்கே எனக்கா கிடைக்கணும்”
“ஒவ்வொரு நாளும் புதுசா பிறக்குற மாதிரி தினமும் ப்ரெஷா நாம காதல் பண்ணிட்டே இருக்கணும்”
“செய்வியா??” என்றவன் சொல்ல அவள் முகம் சிவந்து சிரம் தன்னையும் போல் மெல்ல ஆடியது.
அதில் மகிழ்ந்தவனை அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான் அவன்.
முற்றும்

Advertisement