“நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் ஆதங்கமாய்.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், ஆனா எதுக்குன்னு சொல்லு”
“இதென்ன கேள்வி எதுக்குன்னு, ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா எதுவும்” என்று கோபமாய் எழுந்து அமர்ந்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்தவன் “தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான் எப்போ சொன்னேன். உனக்கு சொல்லாம நான் எங்கே போகப் போறேன்”
“அப்போ சொல்ல வேண்டியது தானே, அதைவிட்டு மாத்தி மாத்தி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. நானா கேட்கறவரை நீங்களா எதும் என்கிட்ட சொல்றதில்லை” என்று வருத்தத்தோடு கேட்டாள்.
“என்னென்ன தெரியணுமோ ஒவ்வொண்ணா கேளு பதில் சொல்றேன்”
“அதான் சொன்னேன்ல என்ன செஞ்சு அவங்களை பேசாம ஆக்குனீங்க… அவங்க அப்படியே விடுவாங்கன்னு நானே நினைக்கலை”
“அவங்களை என்ன செய்யலாம்ன்னு நான் தீவிரமா யோசிச்சுட்டு இருக்க எதுவுமே நடக்காத மாதிரி நீங்க இருக்கீங்களே அதுவே சொல்லுதே நீங்க எதுவோ செஞ்சு இருக்கீங்கன்னு என்ன அது” என்று அவள் கேட்க அவன் அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்.
அன்று
————-
பிரியனின் கைபேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவன் ‘இந்த நேரத்தில் யாராய் இருக்கும்’ என்று எண்ணிக்கொண்டே எண்ணை பார்த்தவன் ‘இவரா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு போனை எடுத்து வெளியில் வந்தான்.
“சொல்லுங்க??”
“உன்னை பார்க்கணும்ன்னு அப்பா சொல்றார்”
“எதுக்காக??”
“பேசணுமாம்”
“என்ன விஷயமா??” என்று அவன் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்கும் போதே எதிர்முனையில் ராஜசேகரிடமிருந்து போனை பிடிங்கியிருந்தார் விகேபி.
“பேசி தீர்க்க வேண்டி இருக்கு, உன்னை நேர்ல பார்க்கணும். எதுவும் செஞ்சிட மாட்டேன், உறுதி கொடுக்கறேன். நீ தைரியமா வரலாம்”
“நீங்க எதுவும் செஞ்சிடுவீங்கன்னு எல்லாம் நான் தயங்கலை. இனி யாரும் எதுவும் எங்களை செய்ய முடியாது” என்று உறுதியாகவே சொன்னான் பிரியன்.
அவன் மனஉறுதியை மனதிற்குள் மெச்சிக் கொண்டவர் “அப்புறம் எதுக்கு யோசிக்கறே”
“உங்ககிட்ட எல்லாம் யோசிக்க தானே செய்யணும்”
இப்போது விகேபிக்கு கோபம் எட்டிப்பார்த்தது. அதுவரை சீண்டியவன் சட்டென்று “சரி வர்றேன், எப்போ??” என்று கேட்க அவரும் பதில் சொன்னார்.
இதோ அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறான் அவன். சிறிதும் அவனுக்கு பயமில்லை. அவர் கண்ணை நேருக்கு நேராய் நோக்கியவாறே இருந்தான், அவர் என்னப் பேசப் போகிறார் என்று.
“உனக்கு என்ன வேணும்??”
“நிம்மதி…”
“பதிலுக்கு”
“உங்க குடும்ப நிம்மதி”
“யாருடா நீ?? இன்னைக்கு என்னை இந்த நிலைமையில நிக்க வைச்சிருக்கே, என்னைப்பத்தி என்ன தெரியும் உனக்கு” அப்போதும் திமிராகவே அவனை நோக்கிக் கேட்டார் அவர்.
“இந்த ஊழலுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு தெரியும்” என்று அவன் சொல்லவும் அவனை ஒரு பார்வை பார்த்தார்.
“அப்புறம் ஏன் இப்படி?? நான் இத்தனை வருஷமா காப்பாத்தி வைச்சிருந்த எல்லாமே சரிஞ்சு போச்சே”
“அதுக்கு நான் காரணமில்லை”
“அப்போ நானா காரணம், வீடியோ எடுத்து அதை எடிட் பண்ணி என்னெல்லாம் வேலை பார்த்திருக்கடா நீ”
“வீடியோ எடுத்தது உண்மை தான். ஆனா எடிட் எல்லாம் பண்ணலை. அந்த சந்தர்ப்பத்துல நீங்க பேசின வீடியோ மட்டும் தான் அது”
“நான் இதுவரை ஒரு உயிரைக் கூட கொல்லணும்ன்னு நினைச்சதில்லைடா. எனக்கு எப்பவும் அதிகாரத்துல இருக்கணும்ன்னு வெறியே இருக்கு, இப்பவும் அது இருக்கு”
“அதுக்காக எல்லாரையும் உருட்டி மிரட்டி இருக்கேன், அடிச்சிருக்கேன் உயிர் போற அளவுக்கு. ஆனா எங்களால எந்த உயிரும் இது வரைக்கும் போனதில்லை, உன் உயிர் உட்பட”
“தெரியும்”
“அப்புறம் ஏன் எங்களை இப்படி சிக்க வைச்சிருக்க??”
“அதான் சொன்னேனே எனக்கு என் குடும்ப நிம்மதி முக்கியம்ன்னு”
“அது இனி என்னாலோ என்னோட குடும்பத்தாலோ நடக்காது போதுமா” என்று ஆத்திரமாய் கத்தியவர் இதுவரை யாரிடமும் அப்படி இறங்கியதில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது அவரின் கோபம்.
“நன்றி”
“யாருக்கு வேணும் அது??” அசட்டையாய் தோளைக் குலுக்கினார் அவர்.
“உங்க பேமிலிக்கு என்னால எப்பவும் எதுவும் ஆகாது. ஆனா நீங்க ஒரு உண்மையை தெரிஞ்சுக்கணும்”
‘என்னவென்பது போல்’ அவனை ஏறிட்டு பார்த்தார்.
“நடந்த ஊழல் எல்லாம் உங்களாலையோ உங்க பிள்ளைகளாலேயோ நடக்கலை” என்று நிறுத்தினான்.
‘அது தான் எனக்கே தெரியுமே’ என்ற பார்வை பார்த்தார் அவனை நோக்கி.
“ஆனா உங்க குடும்பத்தால தான் நடந்திச்சு. ஊழல் மட்டுமில்லை, ஒரு அரசு ஊழியர் அப்புறம் ஒரு பெண் கற்பழிச்சு கொலை பண்ணது”
“ஏய்!!” என்று அந்த வீடே அதிரும்படி சத்தமிட்டார் அவர்.
அதுவரை அவர்கள் பேச்சை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அவரின் பிள்ளைகள் உள்ளே வந்திருந்தனர் இப்போது.
“உங்களுக்கு தெரிஞ்சிருக்கலை. அப்படித் தானே”
“இங்க யாரும் அப்படியில்லை”
“உங்க பிள்ளைங்களோட பிள்ளைங்க கூடவா…” என்று இழுத்தான்.
“அவங்க யாரும் இப்போ உயிரோட இல்லை. செத்தவங்களை பத்தி பேசினா அது பாவம்”
“பாவம் பண்ணதுனால தான் அவங்களுக்கு மரணமே”
“அவங்க பெத்தவங்களோட இன்ப்லுயன்ஸ் வைச்சு பண்ண எல்லாமே தெரியும் எனக்கு”
“நான் திரும்பி வந்ததுல இருந்து உங்களையே தானே கண்காணிச்சுட்டு இருக்கேன். எப்போ தப்பு பண்ணுவீங்க, எப்படி பண்ணுவீங்க, உங்களை என்ன செஞ்சு மாட்ட வைக்கலாம்”
“இப்படி தான் ஒவ்வொரு நாளும் நினைப்பேன். ஒவ்வொருத்தரையும் நானே நேர்ல போய் பாலோ பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும். உங்களுக்கே தெரியாம இந்த வீட்டை உளவு பார்த்தேன்”
“நான் கத்துக்கிட்ட அறிவியல் எனக்கு உதவுச்சு, அதை எனக்கு சாதகமா பயன்படுத்தினேன். எனக்குன்னு சொந்தமா சில சாப்ட்வேர் நானே உருவாக்கினது எல்லாம் உங்க நடத்தைகளை கண்காணிக்க மட்டும் தான்”
“உங்க போன் பேச்சு ஒட்டுக்கேட்டதுல இருந்து எல்லாம். உங்க பேரப்பிள்ளைகள் செஞ்ச எல்லா தகிடுதத்தமும் தெரியும். உங்களுக்கும் இவங்களுக்கும் அதுல எந்த தொடர்பும் இல்லைன்னு நல்லாவே தெரியும்”
“உங்க பையன் உங்க கையெழுத்தை உங்களை விட பிரமாதமா போடுவான் உங்களுக்கு தெரியுமா” என்றான் குலசேகரனை பார்த்து.
அதை கேட்டவர் முகம் அப்படியே விழுந்தது. சிறு வயதில் அவன் பள்ளி மார்க் ஷீட்டில் அவர் கையெழுத்தை அவன் போட்டாதாக கம்பிளைன்ட் செய்த பள்ளி நிர்வாகத்தின் முன் தான் சென்று நின்ற நினைவு வந்தது அவருக்கு.
“உங்க சைன் கூட நல்லா போடுவான்” என்று இப்போது ராஜசேகரை பார்த்து சொன்னான்.
“காரணம் புரியுதா அந்த காண்ட்ராக்ட்ல உங்க சைன் எப்படி வந்துச்சுன்னு”
“கவர்மென்ட் ஏமாத்தினா என்ன நடக்கும் அதான் இப்போ உங்களுக்கு நடந்துச்சு”
“ஆனா இதை நாங்க செய்யலையே”
“செஞ்சது உங்க பிள்ளைங்க தானே. எனக்கும் வதுக்கும் கல்யாணம் ஆனா அந்த சமயத்துல உங்க மூத்தப் பேரன் தவறிட்டார் இல்லையா. அதுவும் குடும்பத்தோட போனவரு ஆக்சிடென்ட்ல இறந்திட்டார்”
“அதனால தானே உங்களுக்கு எங்க கல்யாணம் பத்தி தெரியாம போய்டுச்சு. தெரிஞ்சிருந்தா அப்போவே அவளை உங்க கூட கூட்டிட்டு போயிருப்பீங்க. அதை விடுங்க”
“இல்லாதவங்களை பத்தி பேசக்கூடாது தான். வேற வழியில்லாம தான் இங்க நான் அவங்களை பத்தி பேச வேண்டியாதா இருக்கு, அவங்களை குறை சொல்லணும்ன்னு நினைக்கலை. ஆனா அது தான் உண்மை”
“ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு பிசினஸ் பண்றாங்கன்னு நீங்களாம் நினைச்சுட்டு இருந்தீங்க. பில்டிங் காண்ட்ராக்ட், சிமென்ட் காண்ட்ராக்ட், ரோட் காண்ட்ராக்ட்ன்னு ஒவ்வொண்ணும் அவங்க பிளான் பண்ணி பண்ணது தான்”
“கெடுவான் கேடு நினைப்பான்னு சும்மாவா சொன்னாங்க. அளவுக்கு அதிகமான செல்லமும், சுதந்திரமும் அவங்களை தப்பு பண்ண தூண்டி இருக்கு. நீங்க உங்க பிள்ளைங்களை நம்பலை, ஆனா உங்க பேரப்பிள்ளைகளை அவ்வளவு நம்புனீங்க”
“அது தான் உங்களை இப்போ இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. எப்படி என்னன்னு கேள்வி கேட்டிருந்தா இந்தளவுக்கு வந்திருக்கவும் வந்திருக்காது”
“மணல் ஏலம் எடுக்கற காண்ட்ராக்ட்ல தான் உங்க  ரெண்டாவது பிள்ளையோடு மகன் அந்த அதிகாரியை மிரட்டி இருக்கான். அவர் அதை ரெக்கார்ட் பண்ணினதுனால பதிலுக்கு அவரையே இல்லாம பண்ணிட்டாங்க”
“அத்தோட சும்மா விடலையே, அவரோட தங்கை கோர்ட்க்கு போவேன்னு சொன்னதை தடுக்க அவளோட வாழ்க்கையை சீரழிச்சது உங்க கடைசி பேரன். அதுக்கு கிடைச்ச தண்டனை தான் அவனோட சிமென்ட் பேக்டரி இடிஞ்சு விழுந்தது. அது தானா விழுகலை, அந்த பொண்ணை சேர்ந்தவங்க தான் அதை செஞ்சாங்க” என்றுவிட்டு குலசேகரனை பார்த்தான் அவன்.
இந்த செய்தி எல்லாமே அவர்களுக்கு புதிது. பேக்டரி விபத்தாகி அதில் தன் மகன் இறந்ததாய் தான் அவர் நினைத்திருக்க மற்றவர்களும் அப்படியே தான் நினைத்திருந்தனர்.
பிரியன் சொல்ல சொல்ல தாங்கள் வெளியில் மட்டுமே அதிகாரம் காட்டி வாழ்ந்திருக்கிறோம். தங்கள் பிள்ளைகளை தெரிந்து கொள்ளாமலே விட்டோமே என்று தான் எண்ணினர்.
குலசேகரனுக்கு தன் மகனை ஓரளவிற்கு தெரியும், ஆனால் இந்தளவிற்கு அவன் செய்திருக்கிறான் என்பதை அப்போது தானறிவார்.
“இதெல்லாம் தெரிஞ்சும் நான் ரொம்ப யோக்கியமா தடுக்கலையேன்னு உங்களுக்கு தோணும். நான் இங்க வர்றதுக்கு முன்னாடி நடந்த தப்பை எல்லாம் மிச்சமிருந்த ரெண்டு பேரனுங்க பேசினப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“முன்னாடியே தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா தடுத்து தான் இருப்பேன்”
“அம்மா, அப்பா சேர்த்து வைக்கிற சொத்து பிள்ளைகளுக்கு தானே சேரும். அப்படித்தானே பிள்ளைங்க செஞ்ச தப்பு அவங்க ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதிக்கும்”
“அவங்களோட மரணம் உங்களுக்கு மட்டும் தான் இழப்பு. ஆனா மத்தவங்களை பொறுத்தவரை அவங்க செஞ்சதுக்கான தண்டனையா தான் எல்லாரும் பார்ப்பாங்க”
“ஒருத்தர் செய்யற தப்பை இன்னொருத்தர் தட்டிக் கேட்டிருந்தா இந்தளவுக்கு வந்திருக்காது”
“எல்லாரையும் விடுங்க. உங்க பெரிய பிள்ளை பண்ணதை சரின்னு சொல்லிடுவீங்களா நீங்க” என்று விகேபியை பார்த்து கேட்டான் பிரியன்.
“என்ன தப்புன்னு யோசிக்கறீங்களா?? வதுவோட அம்மாவை நீங்கலாம் சொன்னீங்கன்னு கை கழுவினாரே அது. முக்கியமா பொண்டாட்டிக்கு தெரியாம அந்த பொண்டாட்டி உயிரோட இருக்கும் போதே இன்னொரு பெண்ணை…” என்றவன் அதற்கு மேல் சொல்லவில்லை.
“அதெல்லாம் சரியா… இத்தனை வயசாகுது உங்களுக்கு, ஜாதகத்தை நம்புறவர் தான் நீங்க. உங்க மனைவி இறந்த பிறகு தான் அதுவும் அந்த ஜாதகம் சொல்லவும் தான் உங்க அறுபது வயசுல பார்த்தி அம்மாவை ரெண்டாவதா கல்யாணம் பண்ணியிருக்கீங்க அதுவும் ஊரறிய”
“சரியோ தப்போ அதை பகிரங்கமா செஞ்சிருக்கீங்க. நீங்களும் தப்பு பண்ணியிருக்கீங்க, அது மத்த பிள்ளைக்களுக்கு எல்லாமுமா இருந்த நீங்க பார்த்தியை அப்படியே விட்டுட்டீங்க. வது உங்க வீட்டு வாரிசுன்னு நீங்க நினைக்கலை. என்னையும் அவளையும் பிரிக்க நீங்க யாரு??”
“அந்த பாவம் எல்லாம் எந்த கணக்கில சேரும்” என்றவன் மனதில் தோன்றிய அனைத்துமே கொட்டி தீர்த்திருந்தான் அவரிடம்.