Advertisement

அத்தியாயம் – 35
ராஜசேகரை எம்பி பதவியில் இருந்து நீக்கச்சொல்லி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவர்களின் ஆளும்கட்சியும் அதை ஆதரிக்க கட்சி அலுவலத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது.
கட்சியின் மூத்த உறுப்பினரான விகேபிக்கும் அவர்கள் அழைத்துப் பேசியிருக்க அவர் தன் மகனிடம் “நீயே ராஜினாமா பண்ணிடு, அவங்க நீக்கினா அது நமக்கு அவமானம்” என்று சொல்ல ராஜசேகரும் நேரிலேயே சென்று தன் ராஜினாமாவை சமர்பித்து வந்திருந்தார்.
இரண்டு நாளாய் தினம் ஒரு வீடியோ பதிவு ஆடியோ பதிவு என அவர்கள் குடும்பம் முழுவதுமே ஆடிப் போகும் அளவிற்கு ஒவ்வொன்றாய் வந்தது.
விகேபி இந்தளவிற்கு முடங்கிப் போவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டர். அவர் வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்ததுண்டு.
அதையெல்லாம் தூசாக்கி தான் அவர் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறார். ஏனோ இன்று இந்த மீட்சியை அவரால் தாங்கவே முடியவில்லை.
தன் சொந்த ரத்தபந்ததால் அது நடந்ததென்பதாலன்றி வேறென்ன இருக்க முடியும். என்ன தான் வதனாவை இழிவாக பேசியிருந்த போதும் அவள் தன் மகனின் உதிரத்தில் உதித்தவள் தானே என்ற எண்ணம் அவருக்கு தோன்றாமலில்லை.
அதனால் தானே இன்று இவ்வளவு நடந்திருக்கிறது. அவரின் ரத்தமான இந்தரும் தானே இதற்கு காரணம். மனம் ஒரேடியாய் வெறுத்து போயிருந்தது அவருக்கு.
சில வருடங்களாய் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்திருந்த இழப்புகள் அதை சரி செய்ய வதனாவை தங்களிடம் கொண்டு வரும் முயற்சியில் இவர்கள் செய்திருந்தது இப்போது இவர்களுக்கு திருப்பியடித்திருந்தது.
கிட்டத்தட்ட இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது விகேபி தன் அறையைவிட்டு வெளியே வந்து. உணவு கூட அவர் அறைக்கே சென்று விடும். அதுவும் அவர் கேட்டால் மட்டுமே செல்லும். 
கார் விபத்தில் மூத்தப்பேரனும் அவன் மனைவியும் அவள் சுமந்திருந்த கருவும், பின் புற்றுநோயில் ஒருவர், பேக்டரி விபத்தில் ஒரு பேரன், கடைசியாய் என்ன வியாதி என்று கண்டுப்பிடிப்பதற்குள் அதன் வலி தாளாமல் தூக்க மாத்திரை விழுங்கி ஒருவன் என்று அனைவருமே போய் சேர்ந்துவிட்டனர்.
வீட்டில் நிம்மதி வேண்டும் என்று எண்ணித்தான் அவர் இவ்வளவும் செய்திருந்தார். அடுத்தடுத்த இழப்புகள் இனி நேரக்கூடாது என்று எண்ணி பெரும் தவறை செய்துவிட்டோம் என்று உணர்ந்தாலும் தன் குடும்பம் என்ற சுயநலம் மட்டுமே இப்போதும் அவர் முன் நின்றது.
என்ன தோன்றியதோ தன்னறையில் இருந்து வெளியே வந்திருந்தவர் “அவனுக்கு போன் போடுங்க” என்றார்.
“யாருக்குப்பா??” என்றார் ராஜசேகர்.
“அதான் அவனுக்கு…”
அண்ணன் தம்பிகளுக்கு அவர் யாரை சொல்கிறார் என்று சுத்தமாய் புரியவில்லை. ஒரு வேளை இந்தரை பார்க்க நினைக்கிறாரோ என்று நினைத்து “இந்தர்க்கு கூப்பிட வாப்பா” என்றார் இளைய மகன் குலசேகரன்.
“அவனை இல்லை. அந்த பிரியனை கூப்பிடு”
“அவனை எல்லாம் கூப்பிட்டு நீங்க ஏன்பா பேசணும். அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட போய் பேசணும்ன்னு நினைக்கறீங்க…” என்று ராஜசேகர் குதிக்க மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
“ஹ்ம்ம்…” என்று அவர்களை ஒரு முறை முறைத்தார் அவர்.
“இத்தனை வருஷமா நான் கட்டிக்காப்பாத்தினதை ஒரு நொடியில இடிச்சு தள்ளிட்டான். அது அவனால முடிஞ்சிருக்கு, அவன் புத்திசாலிங்கறதை ஒத்துக்கிட்டு தான் ஆகணும்”
‘இவருக்கு நம்மை பார்த்தா மட்டும் புத்திசாலியா அறிவாளியா தெரியவே தெரியாதா’ வேறு யாராய் இருக்கும் குலசேகரனின் எண்ணவோட்டம் தான் இது.
பிரியனின் இல்லத்தில்
——————————————-
ராமின் வீட்டிலேயே இசை தனியே படுத்து பழகியிருந்ததால் இப்போதும் அவள் தனியே வேறு படுக்கையறையில் படுத்திருந்தாள்.
பிரியனுக்கு அவளை தங்களோடு படுக்க வைத்துக் கொள்ளும் ஆசை கொள்ளை கொள்ளையாக இருந்தது. அதை வதனாவிடமும் அவன் வெளிப்படுத்தவே செய்தான்.
“வேண்டாங்க அவ வளர்ந்திட்டா இனி தனியாவே படுக்கட்டுங்க. அது தான் அவளுக்கு நல்லது” என்றுவிட பிரியனும் மனமேயில்லாமல் ஒத்துக்கொண்டான்.
“ஏங்க”
“என்னம்மா”
“அன்னைக்கு எப்படிங்க என்னை அவங்ககிட்ட இருந்து கூட்டிட்டு வந்தீங்க. எனக்கு இப்போ நினைச்சாலும் பேக்ரவுண்ட்ல சம்போ சிவசம்போன்னு நாடோடிகள் மியூசிக் தான் கேக்குது”
“அடியேய்!! நாங்களே உசிரை கையில புடிச்சுக்கிட்டு உன்னையை வந்து கூட்டிட்டு வந்தா எங்களை காமெடி பீஸ் ஆக்குறியா”
“யோவ் நானெங்க உங்களை காமெடி பீஸ் ஆக்குனேன். அன்னைக்கு நடந்து எல்லாம் அப்படி தான் இருந்துச்சு அவ்வளவு வேகம்”
“போ… போன்னு அதுல சசிக்குமார் கையை காட்டுவார். இங்க நீங்க வா வான்னு என்னை இழுத்துட்டு வந்தீங்க”
“ஆமா அன்னைக்கு அந்த பெரியவர் எங்க போனாரு. நீங்களும் சரியா கோவிலுக்கே வந்துட்டீங்க. உங்களுக்கு எப்படி தெரியும்??”
“அதெல்லாம் பார்த்தி முழுசா சொல்லலையா??”
“இதே தானே அன்னைக்கும் கேட்டீங்க. அவர் சொன்னதை தான் அன்னைக்கே சொன்னனே. நீங்களும் அங்க எப்படி வந்தீங்கன்னு சொன்னீங்க தான், ஆனா முழுசா சொல்லலையோன்னு நினைச்சேன்”
“அன்னைக்கு உங்க தாத்தா பார்த்தியோட அம்மாவை கூட்டிட்டு அந்த சாஸ்திரியை பார்க்க போயிருந்தார்”
“யாருக்கு தாத்தா?? யாரந்த சாஸ்திரி??” என்றாள்
“உனக்கு தாத்தா தானே அவரு”
“அப்படி சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்”
“அப்பாவை வேணா சொல்லலாம். பெரிய மனுஷன் அவரை சொன்னா என்னவாம்”
“வேணாம்ன்னா வேணாம். எனக்கு பிடிக்கலை”
“ஏன்??”
“உங்களை என்கிட்ட இருந்து பிரிச்சது அவரு தானே. அதனாலேயே அவரை நான் மொத்தமா வெறுக்கறேன். இப்போ மட்டுமில்லை எப்பவும் அப்படி தான்” என்று உறுதியாய் சொன்னாள்.
பிரியன் மேற்கொண்டு அவளிடம் பேச்சை வளர்த்தவில்லை. “அந்த சாஸ்திரி சொல்றதை தான் அவர் கேப்பார். அந்த நேரத்துலயும் உன்னை இங்க கொண்டு வரச்சொல்லிட்டு அவரு அங்க போயிட்டாரு”
“கூடவே பார்த்தியோட அம்மாவையும் கூட்டிட்டு போயிட்டாரு. அதுக்கு காரணம் பார்த்தி அவங்க அம்மாகிட்ட பேசக்கூடாதுன்னு தான். அவங்க போன் அவரு போன் எல்லாமே ஆப் பண்ணி வைச்சுட்டார்”
“இவரும் வேற நம்பர்ல இருந்து தான் அவர் பசங்களுக்கு பேசிட்டு இருந்தாரு அந்த டைம்ல. அதை தான் நாங்க பயன்படுத்திக்கிட்டோம்”
“அவர் சொன்னதா சொல்லி கோவில்ல பூஜைக்கு உங்க எல்லாரையும் வரவைச்சோம். இந்தர் தான் அதை யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி செஞ்சான்”
“ராஜசேகர் கொஞ்சம் உஷாராவே இருந்தார். அவர் விகேபிக்கு போன் பண்ணுவாருன்னு கெஸ் பண்ண நாங்க அவங்க வீட்டில இருக்க எல்லார் போன் டீடைல்ஸ் எடுத்து இரண்டு நாளா அவங்க தொடர்ச்சியா பேசிட்டு இருந்த நம்பரை எல்லாம் டிரேஸ் பண்ணோம்”
“அப்படி தான் விகேபி டெம்பரரி நம்பர் கிடைச்சது. ராஜசேகர் பேசும் போது மறுநாள் கோவில் பூஜை இருக்குன்னு சொன்னீங்களாமே, நாங்க போயிட்டு வரவான்னு கேட்க அவரும் கோவில் பூஜை தானேன்னு சரி போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டார்”
“ரெண்டு பேருமே முழுசா பேசியிருந்தா விஷயம் விளங்கியிருக்கும். ஆனா அதுக்கான அவகாசத்தை நாங்க கொடுக்கவே இல்லை. ராஜசேகர் பேசும் போது பார்த்தியும் அங்க தான் இருந்தான்”
“அவர் பேசி முடிக்க முன்னாடியே அவங்க லைன் கட் பண்ணிவிட்டுட்டோம்”
“எப்படி கட் பண்ணீங்க??”
“பார்த்தி அவன்கிட்ட இருந்த ஜாமரை கொஞ்ச நேரத்துக்கு ஆன் பண்ணிவிட்டுட்டான்”
“அவன் வெளிய வரும் போது அதை ஆப் பண்ணிவிட்டுட்டான். சோ அவங்க அதை கண்டுப்பிடிக்கலை”
“எனக்கு புரியலை, கோவில்ல பூஜைன்னு சொன்னா அவர் சரின்னு சொல்லிடுவாரா”
“நான் தான் சொன்னேன்ல அவருக்கு சாமி, ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் ரொம்பவும் நம்பிக்கைன்னு”
“தவிர நாங்க அவங்க கால் ரெக்கார்ட் பண்ணிட்டு இருந்ததால அவங்க என்ன பேசறாங்கன்னு நாங்க கேட்டுட்டே தான் இருந்தோம். அவங்க பேச்சு வேற மாதிரி போயிருந்தா அப்போவே கட் பண்ணிவிட்டு இருப்போம்”
“ஆனா பூஜைன்னு சொன்னதும் அவர் சரின்னு சொல்ல இவரும் எல்லாரையும் அதுக்கு தயாராகச் சொல்லிட்டார்”
“பூஜையே உனக்காகன்னு அதுக்கு பிறகு அவர்கிட்ட பில்டப் பண்ணி உன்னையும் வரவைச்சோம்”
“நீயும் வந்தே…”
“நீங்களும் வந்தீங்க” என்று அவள் சொல்லும் போது முகம் மென்மையானது.
அதை கண்டுகொண்டவன் “அப்படியே ஓடி வந்து கட்டிப்பிடிச்சியே” என்று இன்று நடந்ததை போல் சொல்ல அவளுக்கு வெட்கமாகிப் போனது.
அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியானாள். “என்னாச்சு வது?? ஏன் டல்லாகிட்ட??”
“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”
“என்னம்மா??”
“இல்லை அன்னைக்கு அவரு வைப்கிட்ட நான் கொஞ்சம் ஹார்ஷா பீகேவ் பண்ணிட்டேன்”
வதனா யாரைச் சொல்கிறாள் என அவனுக்கு புரிந்தது. சந்திரசேகரின் மனைவியை சொல்கிறாள் என்பதறியாதவனா அவன்.
“அவங்க தானே என்னை உங்ககூட போக சொன்னாங்க. அவங்க மட்டும் மத்த எல்லார்கிட்டயும் சொல்லியிருந்தா நீங்க ரொம்பவும் கஷ்டப்பட வேண்டி இருந்திருக்கும்ல” என்றாள்.
“ஹ்ம்ம் ஆமாம்” என்று அவனும் உணர்ந்தே சொன்னான். “ராஜசேகரையும் வரவிடாம பண்ணுறதுக்குள்ள ரொம்பவே சிரமப்பட்டு தான் போனோம்”
“அந்த குடும்பத்து ஆளுங்களால உனக்கு பிரச்சனை வந்திருந்தாலும் அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்க தான் உன்னை காப்பாத்தவும் உதவி பண்ணியிருக்காங்க”
“அந்தம்மா, பார்த்தி அப்புறம் அவனோட அம்மா” என்று அவன் சொல்ல வதனாவும் தலையாட்டினாள்.
“பார்த்திக்கு நாம ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கோம்ங்க”
“அவன் அதெல்லாம் எதிர்பார்த்து எதுவும் செய்யலை வது”
“தெரியுங்க ஆனாலும் பார்த்தி இல்லைன்னா எதுவும் அவ்வளவு சீக்கிரம் சாத்தியம் இல்லை தானே”
“நிச்சயமா” என்றான்.
வதனா மீண்டும் ஆரம்பித்தாள் “ஏங்க??” என்று
“ஹ்ம்ம்”
“என்னங்க??”
“என்னம்மா”
“எனக்கு கொஞ்சம் டவுட்டுலாம் இருக்கு”
“என்ன டவுட்டு??”
“டவுட்டுன்னு சொல்ல முடியாது. சில விஷயங்கள் தெளிவில்லாம இருக்கு. அதுக்கு பதில் சொல்வீங்களா??”
“என்ன தெரியணும் உனக்குன்னு சொல்லு” என்றவன் நன்றாக அவளை நோக்கி திரும்பிப்படுத்தான்.
“என்ன செஞ்சு அவங்களை அமைதியாக்குனீங்க??”
“அது எதுக்கும்மா உனக்கு” என்றவன் சொன்னதும் அவள் முகம் சுருங்கியது.

Advertisement