Advertisement

அத்தியாயம் – 34
பிரியன் வதனாவிடம் பேசிவிட்டு சற்று நேரம் வெளியே சென்று வருவதாக கூறினான் அவளிடம்.
பிரியனின் மீது ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அவள். பிரியன் அவளிடம் மெதுவே “வது நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன்”
“எங்கே போறீங்க மறுபடியும் என்னைத் தனியாவிட்டு. இனிமே உங்களை நான் எப்பவும் தனியா விடுறதா இல்லை” என்று சொன்னவள் அதை நிச்சயம் விளையாட்டாகவோ அவன் மேல் நம்பிக்கை இல்லாமலோ சொல்லவில்லை.
மீண்டும் ஒரு பிரிவை தாங்க அவளிடத்தில் சக்தி என்பதில்லை என்ற எண்ணமே அவனிடம் அப்படி பேச செய்தது அவளை.
“உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன். இனி யாருமே நம்மை பிரிச்சு வைக்க முடியாது வது. வீண் கவலை இனி வேண்டாம்டா”
“நான் போக போறது நமக்கு உதவி பண்ணவங்களுக்கு நன்றி சொல்லத் தான். தவிர இன்னும் சில சின்ன சின்ன வேலைகள் இருக்கு முடிக்க”
“நன்றி சொல்லத் தானே நானும் வர்றேன். எனக்கும் என்னோட கொலிக்ஸ் எல்லாம் பார்க்கணும்”
“கண்டிப்பா அவங்களை பார்க்கலாம். நானே நாளைக்கு அவங்களை இங்க வரவைக்குறேன் போதுமா. நீ அவங்களை அப்போ பார்த்துக்கோ. இப்போ நான் கிளம்புறேன்” என்று அவசரம் காட்டினான் அவன்.
“அதான் அவங்க நாளைக்கு வரப் போறாங்கல அப்பவும் நீங்க வெளிய போகணுமா என்ன” என்றவள் கலக்கமாய் நின்றிருந்தாள் லேசான முகத்திருப்பலுடன்.
“வது… இங்க பாரு… என்னைப்பாருன்னு சொல்றேன்ல”
“என்னன்னு சொல்லுங்க” என்றாள் லேசாய் அவனை நோக்கித் திரும்பி. ஆனாலும் அவனை நேருக்கு நேராய் பார்க்கவில்லை.
“என் முகத்தை பார்க்க மாட்டியா??”
“ஹ்ம்ம் பார்த்திட்டேன் சொல்லுங்க”
“அவங்க நம்மை திரும்பவும் எந்தவிதத்துலயும் தொந்திரவு செய்யக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்”
“சரி அதுக்கும் இதுக்கும்”
“வெயிட்!! வெயிட்!! என்னை முழுசா பேசவிடு. நாம இங்க இருந்து போகும் போது இந்த பிரச்சனை முடிஞ்சு தான் போகணும்”
“அதான் முடிஞ்சிடுச்சுல”
“இன்னும் முடியலை. அவர் சும்மா இருப்பாருன்னு நினைக்கறியா. இவ்வளவு தூரம் செஞ்சவங்க எதுவும் செய்வாங்க”
“அவர் தான் இனி நான் அங்க வரத் தேவையில்லைன்னு சொல்லிட்டாரே. அதுக்கு மேல என்ன செய்திடுவாரு”
“அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு போனது. நீ வரலைங்கறது அவரோட கோபத்தை இன்னமும் அதிகப்படுத்தி தான் இருக்கும்”
“அவரைப்பத்தி எங்கப்பா கொடுத்த பில்டப் பார்த்து நான் கூட அவரை பெரிய அப்பாடக்கர் ரேஞ்சுக்கு நினைச்சிருந்தேன். ஆனா அவர் தான் அன்னைக்கு பொசுக்குன்னு கிளம்பி போயிட்டாரே”
“அப்படி போறது அவர் இயல்பில்லைன்னு எனக்கு தோணுது வது. நீங்கலாம் அவரை எதிர்த்து பேசவும் அதை பொறுக்காம தான் கிளம்பினாருன்னு நான் நினைக்கிறேன்”
“சிலருக்கு தங்களை மற்றவங்க புகழ்றதை கேட்கப் பிடிக்கும். சிலர் ஒரு சொல் கூட பொறுக்காதவங்களா இருப்பாங்க. இந்த ரெண்டு குணமும் அவர்கிட்ட இருக்கு”
“அவருக்கு புகழ்ச்சி பிடிக்கும். எப்பவும் தன்னை எல்லாரும் மதிச்சு தான் நடக்கணும்ன்னு நினைக்கிற பிடிவாதமும் அவருக்கு உண்டு. அதனால தான் பிள்ளைங்களை கூட அவர் இப்பவும் ஆட்டுவிக்கிறார். அவங்களும் அவர் பேச்சை இப்போவரை கேட்டுத்தான் நடக்கறாங்க”
“இன்னைக்கு நீயும் பார்த்தியும் அவரை மாத்தி மாத்தி எதிர்த்து பேசினதை அவருக்கு பொறுக்க முடியலை. ஒருத்தர்ன்னா கொஞ்சம் பேசி அவங்களை மிரட்டலாம், ரெண்டு பேரு விடாம அவரை எதிர்கறது அவருக்கு புதுசா இருந்திருக்கலாம்”
“இங்க இனியும் இருந்தா நமக்கு மரியாதை இல்லைன்னு நினைச்சிருப்பாரு. அதான் கிளம்பிட்டாரு, அதுக்காக அவர் சும்மாவிட்டு போவாருன்னு அர்த்தமில்லை”
“என்ன பண்ணிடுவாரு அவரு. அவரை என்கிட்ட விட்டுடுங்க நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் பாருங்க” என்று கோபாவேசமானாள் வதனா.
“வது உன்னால முடியாதுன்னு நான் சொல்லலை. கண்டிப்பா உன்னால முடியும், ஆனா வேணாம். நான் இருக்க நீ ஏன் கஷ்டப்படணும்??”
“அவங்க உங்களை எதுவும் செஞ்சிட்டா??” என்றவள் அவர்களை தான் பார்த்துக்கொள்கிறேன் என்று வீர வசனம் பேசியவளா என்று நம்புவது கஷ்டமே. 
அஃது ஒரு மனைவியாய் தன் கணவனின் நலன் குறித்த அக்கறையும் பயமுமும் கொண்ட சாதாரண பெண்ணின் மனநிலை அது.
பிரியனுக்கு அது புரியாமலில்லை. “என்ன செய்வாங்கன்னு நிச்சயம் நான் அலட்சியமாய் இருக்க மாட்டேன் வது”
“அவங்க என்னெல்லாம் செய்வாங்க எப்படியெல்லாம் செய்வாங்கன்னு எனக்கு இப்போ கொஞ்சம் அத்துப்படி. இத்தனை வருஷத்துல நான் என்ன செஞ்சிட்டு இருந்தேன்னு நினைக்கிறே”
“அவங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாங்கறது மட்டும் தான் மனசுல ஆழமா பதிஞ்சு போயிருந்தது. நீ கவலைப்படாதே, அவங்களை முடக்க முடியுமோ அத்தனையும் செய்வேன் வது. இது எனக்கு கிடைச்ச அடியில இருந்து நான் கத்துக்கிட்ட பாடம்”
“இப்போ நான் போயிட்டு வர்றதுக்கு மட்டும் நீ அனுமதி கொடு. என்னோட பார்த்தி வருவான். கபிலன் இங்க தான் இருப்பாரு அடுத்த அறையில, நீ பயப்பட வேண்டாம்”
“எனக்கு என்னைப்பத்தி பயம் எல்லாம் இல்லைங்க. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, அப்படி யாரும் வந்தா பயந்து ஓட நான் பழைய வதனா எல்லாம் இல்லை” என்று அவள் சொல்ல பவளப்பிரியனின் முகத்தில் புன்முறுவல்.
“தெரியும் வது. நீ பயப்பட வேண்டாம்ன்னு நான் சொன்னதை என்னைப்பத்தி உனக்கு பயம் வேணாம் அப்படிங்கறதுக்காக”
“நல்லா சமாளிக்கறீங்க, அப்புறம் எதுக்கு அந்த கடன்காரன் கபிலனை எனக்கு காவல் வைச்சுட்டு போறீங்களாம்” என்றாள் தன் கணவனின் மனமறிந்தவளாக.
“அது என்னோட திருப்திக்காக” என்றவன் “சரி நீ இப்போ சொல்லு நான் போயிட்டு வரவா” என்று அனுமதி வேண்டி நின்றான்.
“ஹ்ம்ம் போயிட்டு சீக்கிரம் வாங்க. எல்லாமே நல்லதா தான் நடக்கும்” என்று கடைசியில் அவனிடத்தில் சொன்னதை மனதோடு மறுமுறை தனக்குமாய் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.
அன்று வெகு நேரம் கழித்து அறைக்கு வந்திருந்தவனின் முகத்தில் அப்படியொரு திருப்தி நிலவியதை கண்டதுமே உணர்ந்தாள் வதனா.
என்ன செய்தான் ஏது செய்தான் என்று எதையும் அவனிடத்தில் கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும் நியாயமாய் தான் அவன் செய்வான் என்ற எண்ணம் மட்டும் உறுதியாய் இருந்தது அவளிடத்தில்.
பிரியன் அறைக்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்திருந்தான் இப்போது. “சாப்பிட்டியா வது??”
இல்லையென்பதாய் அவள் தலை ஆடியது.
“ஏன்??”
“நீங்க சாப்பிட்டாச்சா??”
“இனி தான்…”
“சேர்ந்து சாப்பிடலாம் தானே”
“கண்டிப்பா அதுக்காக தான் சாப்பிடாமலே வந்தேன். பார்த்தியும் கபிலனும் கூட கூப்பிட்டாங்க நான் தான் நீ வெயிட் பண்ணுவேன்னு சொல்லிட்டு வந்தேன்”
“அங்க நான் வெயிட் பண்ணுவேன்னு சொல்லிட்டு வந்து இங்க நான் ஏன் சாப்பிடலைன்னு கேட்கறீங்க” என்று பொய்யாய் முறைத்தவள் அறையில் இருந்த போனை எடுத்து தனக்கும் அவனுக்குமாய் உணவிற்கு ஆர்டர் செய்தாள்.
“கபிலனையும் பார்த்தியையும் இங்க நம்மோட சாப்பிட கூப்பிட்டிருக்கலாம்ல”
“நான் சொன்னேன். ஆனா அவங்க கேட்கலை”
“ஏன் கேட்கலை?? நான் இந்த கபிகிட்ட கேட்குறேன்” என்று எழுந்தவளின் கரம் பிடித்து இழுத்தான் பிரியன்.
அதில் லேசாய் சரிந்தவளை நன்றாய் இழுத்து அவன் மேல் சரித்துக் கொண்டான்.
“நாம ரொம்ப நாள் கழிச்சு ஒண்ணா சேர்ந்திருக்கோமாம். அதனால ரொமான்ஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க” என்றவனின் மார்பில் தன் கைகளால் குத்தினாள் அவள்.
“எங்க உண்மையை சொல்லுங்க சொன்னது அவங்களா இல்லை நீங்களா. எனக்கு கபியை தெரியாது. அவனுக்கு எப்பவும் எல்லாரோடவும் சேர்ந்து சாப்பிட பிடிக்கும்”
“ஹேய் என்னடி என்னைய அடிக்கறே, நான் ஒண்ணும் சொல்லலை. எல்லாம் அந்த கபிலன் தான் வேணா அவனை அடிச்சுக் கூட கேளு”
“பிராடு எல்லாம் நீ தான்யா பண்ணியிருப்பே” என்றாள் பிரியனை அறிந்தவளாய்.
“ஆமா நான் தான் இப்போ என்ன. உன்னோட ரொமான்ஸ் பண்ணக்கூடாதா நானு”
“நான் வேணாம்ன்னு சொன்னேனா” என்று அவள் சொல்லவும் சட்டென்று அவள் இதழ் நோக்கி அவன் குனிய சரியாய் அழைப்புமணி இசைத்தது கரடியாய்.
விகேபியின் இல்லத்தில்
———————————————–
அன்றைய நிகழ்வுக்கு பின்னே வீட்டில் வந்து தாம் தூமென்று குதித்திருந்த விகேபி, அடுத்து என்ன என்ற யோசனையிலே சதாசர்வகாலமும் இருந்தார். அவரால் வதனாவும் பார்த்திபனும் அவருக்கு எதிராய் பேசியது அத்துனை எளிதில் மறக்க முடிந்திருக்கவில்லை.
அவர்களை சும்மா விடுவதா என்ற எண்ணமே. இருவருமே தனக்கு வேண்டாம் என்றாலும் அவர்களை அப்படியே விடும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை.
அவர் அதிகம் யோசித்தால் எதுவும் செய்வார் என்று உணர்ந்தவன் போன்று பிரியனும் அவனுக்கு துணையாய் பார்த்திபனும் அடுத்து அவர்கள் எழவே முடியாது தொடர்ந்து அடிகளை கொடுக்க காய்களை தயாராய் நடந்தி வைத்திருந்தனர்.
அது வெடித்ததில் தான் விகேபியின் குடும்பமே இடிந்து போய் அமர்ந்திருந்தது. அவர்கள் இதுவரை செய்திருந்த ஊழல், ஆக்கிரமிப்பு பற்றிய செய்திகளே அவை.
வழிவழியாய் வேறு அவர்கள் அதை செய்வதாய் வேறு செய்திகள் இடம் பிடித்திருக்க விகேபி கொதித்தெழுந்தார்.
“யார்டா இந்த நியூஸ் கொடுத்தது. வழி வழியா நாம செய்யறதை இவங்க பார்த்தாங்களா. வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டு இருக்கானுங்க. ஆதாரம் இருக்கா இவங்ககிட்ட” என்று டென்சனில் பேச “தகுந்த ஆதாரங்களும் சாட்சிகளும் விரைவில் வெளியிடப்படும்” என்று அடுத்து சொல்ல கையில் கிடைத்தை தூக்கி வீச சுவரில் இருந்த அந்த டிவி கன்னாபின்னாவென்று உடைந்தது.
இரண்டு நாட்கள் கடந்த வேளை விகேபியின் கைபேசி அழைக்க புதிய எண்ணை கண்டு எடுப்பதா வேண்டாவா என்று யோசித்து அழைப்பை தவறவிட்டார் அவர்.
“என்னாச்சுப்பா?? யாரு போன்ல” என்று வந்தார் குலசேகரன்.
“யாருன்னு தெரியலை, புது நம்பரா இருக்கு”
“இங்க கொடுங்க நான் ட்ரூ காலர்ல பார்க்குறேன்” என்றவாறே அந்த எண்ணை தன் போனில் போட்டு அவர் செக் செய்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அவ்வெண்ணில் இருந்து அழைப்பு.
“அப்பா இது அவன்…” என்று குலசேகரன் சொல்ல “எவன்??” என்றிருந்தார் தந்தை.
“எல்லாம் அவன் தான் அந்த பிரியன்”
“அவன் எதுக்குடா எனக்கு போன் பண்ணுறான். அவ்வளவு தைரியம் ஆகிப்போச்சா, எனக்கே போன் பண்ணுற அளவுக்கு” என்று தன் மகனிடம் கத்திக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மீண்டும் நின்று போயிருந்தது.
“நீ பண்ணு அவனுக்கு” என்றவர் அடுத்து என்ன யோசித்தாரோ “வேணாம் நீ பண்ணாதே. நாம இறங்கி போய் பேச அவன் தகுதியானவன் இல்லை” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு வந்தது.
“அப்பா” என்று தன் தந்தையை பார்த்தார் குலசேகரன்.
“கொடு” என்று தன் கைபேசியை வாங்கியவர் “ஹலோ” என்றார்.
“எப்படியிருக்கீங்க??” என்றது எதிர்முனை.
“அதைப்பத்தி உனக்கென்னடா கவலை” என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் விகேபி.
“ஓ!! கண்டுப்பிடிச்சுட்டீங்களா!! சரி தான் நானே அறிமுகப்படுத்திக்க வேண்டி இருக்குமோன்னு நினைச்சேன்”
“உனக்கு இப்போ என்ன வேணும். எதுக்கு எனக்கு போன் பண்ணே??”
“பொறுங்க… பொறுங்க… என்ன அவசரம், அதைச் சொல்ல தானே உங்களுக்கு போன் பண்ணேன்”
“நீ சொல்றதை எல்லாம் பொறுமையா கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் போனை வைக்குறேன்” என்றார் அவர்.
“ஹலோ!! ஹலோ!! வைக்காதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க”
“நான் ஏன்டா வருத்தப்படணும், பிள்ளைப்பூச்சி நீ… உன்னைக் கண்டு நான் வருத்தப்படணுமா…”
“என்னை கண்டு நீங்க வருத்தப்பட வேண்டாம். நான் செஞ்ச காரியத்துனால நீங்க வருத்தப்படுவீங்க”
“என்ன சொல்றே??” என்றார் குரலில் மிரட்டலாய்.
“உண்மையை சொல்றேன்”
“என்ன சொல்லணுமோ அதை சொல்லித் தொலை”
“அப்புறம் நியூஸ் பார்த்தீங்களா??”
“என்ன நியூஸ்??”
“ஏதோ ஊழல் கேஸ் அது இதுன்னு ஏதோ கேள்விப்பட்டனே”
“அதைப்பத்தி உனக்கென்ன??”
“அந்த நியூஸ் கொடுத்தது நான் தான்” என்றான் வெகுநிதானமாய்.
“டேய்” என்று பல்லைக்கடித்தார் அவர்.
“உன்னை உயிரோட விட்டது தப்பா போச்சுடா. உன்னையெல்லாம் கண்காணா தேசத்துலேயே குழி தோண்டி புதைச்சு இருக்கணும். பிள்ளைப்பூச்சின்னு நினைச்சு பாவம் பார்த்ததுக்கு என் மேலவே பாயுறியா நீ” என்றார்.
“யானை காதுக்குள்ள போன எறும்புன்னு சொல்லிக்கலாமா”
“யானை போல நீங்க பெரிசுன்னு சொல்லலை. வயசுல பெரிசுன்னு சொன்னேன். எறும்பு போல நான் சின்னவன்னு சொல்லலை, வயசுல சின்னவன்னு சொல்லுறேன்” என்று அவன் விளக்கியதில் மேலும் மேலும் கடுப்பாகினர் அவர்.
“உன்னை என்ன செய்யறேன்னு பாரு” என்று இந்தப்பக்கம் உறுமினார் அவர்.
“இந்த கத்தல் எல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட வைச்சுக்கோங்க. அதுக்கெல்லாம் அவங்க தான் பயப்படுவாங்க, நானில்லை”
“இப்போதைக்கு வெறும் நியூஸ் மட்டும் தான் வந்திச்சு. ஆதாரம் எல்லாம் இனி தினம் ஒவ்வொண்ணா வரும். இப்போ ஒரு சாம்பிள் உடனே டிவி ஆன் பண்ணிப் பாருங்க”
“டேய், உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று கத்தி போனையும் தூக்கி எறிந்திருந்தார் அவர்.
“அப்பா உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அன்னைக்கு டிவியை உடைச்சீங்க, இன்னைக்கு போனை போட்டு உடைக்கறீங்க. தினமும் ஒண்ணா வாங்கி வைக்க முடியும்” என்று குரலில் அப்பட்டமான எரிச்சலை காண்பித்தார் குலசேகரன்.
“டிவி… டிவி போடு”
“எதுக்கு??”
“போடுடா” என்று அவர் கத்திய கத்தலில் வீட்டிலிருந்த அத்தனை பேரும் அங்கு வந்திருந்தனர் என்னவோ ஏதோவென்று.
குலசேகரன் டிவியை ஆன் செய்திருக்க சில வீடியோ பதிவுகள் வந்துக் கொண்டிருந்தது விகேபியின் வாரிசுகள் செய்யும் அட்டகாசங்கள் என்ற தலைப்பில். அப்படியே தொப்பென்று தரையில் அமர்ந்தார் விகேபி.

Advertisement