Advertisement

“வது அதெல்லாம் விட்டு தள்ளு”
“எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க… எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ”
“உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி அழ பிரியன் அவளை ஆதரவாய் இறுக்கிக் கொண்டான்.
“என்னால நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க, எப்படிங்க அதெல்லாம் தாங்கிக்கிட்டீங்க, ஒரு நிமிஷம் கூட என்னைவிட்டு போய்டணும்ன்னு உங்களுக்கு தோணலையா”
“அந்த பெரியவர் சொன்னாரே நம்ம ரெண்டு பேரையும் பிரிக்கணும்ன்னு, உங்ககிட்ட சொல்லியிருப்பாங்க தானே, என்னை மறந்திடுன்னு” என்று மிகசரியாய் யோசித்து கேட்டாள் அவள்.
“ஹ்ம்ம் சொன்னாங்க”
“அப்புறம் ஏன் நீங்க அதை செய்யலை??”
“ஏன் செய்யணும் வது??”
“உங்களை நிச்சயம் டார்ச்சர் பண்ணியிருப்பாங்க தானே”
“அதுக்காக உன்னை அவங்ககிட்ட விட்டுக் கொடுக்க சொல்றியா… அவங்க பண்ணது தப்பு தான், அவங்க யாருன்னு சொல்லி உன்னை அவங்களோட வந்து இருக்கச் சொல்லியிருந்தா அது வேற”
“ஒரு வேளை உனக்கும் அப்பான்னு ஒரு எண்ணம் வந்திருக்கலாம். என்கிட்டயும் அவங்க நியாயமா கேட்டிருந்தா நான் என்ன உன்னை போக வேணாம்ன்னா சொல்லியிருப்பேன்”
“ஆனா அவங்க எல்லாத்தையும் அவங்க அதிகாரத்தால அடையணும்ன்னு நினைச்சாங்க. அங்க தான் அவங்க தோத்து போக ஆரம்பிச்சாங்க, நான் ஜெயிக்க ஆரம்பிச்சேன். அன்பு எப்பவும் அகங்காரத்துக்கும், அதிகாரத்துக்கும் அடிமையா இருக்காது வது”
“அவங்க உன்கிட்ட அன்பை கொடுத்திருந்தா பதிலுக்கு நீ பல மடங்கு திருப்பிக் கொடுத்திருப்பே… எனக்கு கொடுத்த மாதிரி… அங்க தான் நம்ம நேசம் ஜெயிச்சது வது”
“மத்தவங்களுக்கு பார்க்க தோல்வியாவோ நான் கஷ்டப்பட்டதாவோ தோணியிருக்கலாம், அவங்க அதிகாரத்திமிர் என்னை அவங்ககிட்ட பிடிவாதம் பிடிக்க சொல்லுச்சு, உன்னை விடவே கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் உன்னையே நினைக்க வைச்சுது” என்றவன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் அவளிடம் பகிர்ந்தான்.
அவன் சொல்லச் சொல்ல அவள் இமைகள் கண்ணீரை சொரிந்த வண்ணமேயிருந்தது. “அங்க இருந்து இங்க வந்து இத்தனை வருஷமாச்சு, நீ கேட்டியே ஏன் என்னை வந்து பார்க்கலைன்னு”
“நான் இந்தியா வந்ததுமே முதல்ல ஹைதராபாத்க்கு தான் வந்தேன். நான் இறங்க முன்னாடி எனக்கு முன்னமே உங்க சித்தப்பா வந்து அங்க நின்னுட்டு இருந்தார்”
“இப்போ எதுக்குடி முறைக்குறே??”
“எனக்கு சித்தப்பான்னு எல்லாம் யாருமில்லை, பேரு சொல்லியே சொல்லுங்க” என்றாள் முறைப்பை கைவிடாமல்.
“சரி சரி” என்றவன் “குலசேகரன்கிட்ட தான் என்னை அழைச்சுட்டு போனாங்க. அங்க தான் உன்னைப்பத்தி எனக்கு தெரிஞ்சது. அப்போ தான் அவரு நான் செத்து போயிட்டேன்னு உன்கிட்ட சொல்லிட்டதா சொன்னார். உனக்கு வேற நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டதாவும் சொன்னார்”
“அவர் என்ன சொன்னாலும் நீங்க நம்பிடுவீங்களா??” என்று மீண்டும் ஒரு முறைப்பை கொடுத்தாள் அவனிடம்.
“வது அன்னைக்கு இருந்த சூழ்நிலையை யோசிச்சு பாரும்மா, தவிர நான் உன்னைவிட்டு பிரிஞ்சு கிட்டதட்ட வருஷங்கள் பல ஓடிபோயிருந்தது”
“நூத்துல ஒரு வார்த்தையா நீ உன்னோட குடும்பத்தோட கூட சேர்ந்திருக்கலாம். என்னவும் நடந்திருக்கலாம், எல்லாமே மாறியிருக்கலாம் தானே”
“அவர் சொல்ற அத்தனையும் நான் நம்பிட்டேன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா யோசிச்சு பார்க்கும் போது ராம் மூலமா அப்படி நல்ல நிலை உனக்கு உருவாகியிருந்தா எனக்கு சந்தோசம் தானே”
“அதுமில்லாம என்னோட அம்மா, அப்பா, தங்கைன்னு அத்தனை பேரையும் அவங்க நிழலா தொடர்ந்திட்டு தான் இருந்தாங்க அன்னைக்கு அவர் பேசினதுல தெரிஞ்சுக்கிட்டேன். இனிமேலும் தொடருவோம்ன்னு சொன்னாங்க”
“என்னால ஏற்கனவே நீ எந்தளவுக்கு கஷ்டப்பட்டிருப்பேன்னு உன்னை நேர்ல பார்க்கலைன்னா கூட என்னால உணர முடிஞ்சது. அதே போலொரு கஷ்டம் என்னை பெத்தவங்களுக்கும் கூட பிறந்தவளுக்கும் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்”
“உன்னை பார்க்க மாட்டேன்னு அவங்ககிட்ட சொல்லியிருந்தாலும் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க நான் முயற்சி பண்ணது உண்மை வது”
“நேரடியா இல்லைன்னாலும் மறைமுகமா உன்னைப்பத்தி விசாரிக்க நினைச்சேன். ஹைதராபாத்ல இருந்த என்னோட பழைய பிரண்ட்ஸ் பிடிக்க ட்ரை பண்ணேன்”
“ஒண்ணு ரெண்டு பேரை கண்டுப்பிடிச்சு ராம் பத்தியும் விசாரிச்சேன். ராம் ரொம்ப விவரம் உன்னைப்பத்தி எந்த ஒரு விஷயத்தையும் அவன் எங்களோட பழைய பிரண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கவே இல்லை”
“ராக்கிகிட்ட கூட விசாரிச்சேன், அப்போ தான் ராக்கி ராம் என்னைப்பத்தி விசாரிச்சு ஒரு முறை அவனுக்கு போன் பண்ணதா சொன்னான்”
“நம்ம கல்யாணம் அங்க நெறைய பேருக்கு தெரியாது. என்னோட ஆபீஸ்ல வேலை பார்த்த என்னோட காலேஜ்மேட்ஸ் ஒண்ணு ரெண்டு பேருக்கு தான் தெரியும். இது உனக்கும் தெரியும் தானே”
“அதுல ஒருத்தனை பிடிச்சப்போ தான் ராம் அவன்கிட்டயும் என்னைப்பத்தி விசாரிச்சதா சொன்னாங்க. தவிர விகேபி என்னோட ஆபீஸ்லயும் நிறைய விளையாடி இருக்கார்”
“அவங்களோட குரூப் ஆப் கம்பெனிஸ் மூலமா அதுல ஷேர்ஸ் வாங்கி இவங்க சொல்றது தான் சட்டம்ன்னு அங்க அவங்க பண்ண வேலை தான் என்னோட பாஸ்போர்ட் அவங்க கைக்கு போனதுக்கு காரணம்”
“ஆபீஸ்ல என்னை வெளிநாட்டுக்கு அனுப்புறதுக்காக கேட்கறாங்கன்னு அதை நான் அங்க கொடுத்திருந்தேன். அதை வைச்சு அவங்க நெறைய விளையாடிட்டாங்க”
“அந்த பிரண்ட் தான் ராம் வீட்டுக்கு போக சொல்லியிருந்தேன். தற்செயலா பார்க்கற மாதிரி தான் போய் விசாரிக்க சொன்னேன். உன்னைப்பத்தி சொல்லி எல்லாம் விசாரிக்கலை அவன்”
“ஜஸ்ட் அங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்த்திட்டு அவன் எனக்கு போன் பண்ணான். என்னைப்பத்தி பேசி பாரு அதுக்கு ராம் எப்படி ரியாக்ட் பண்ணுறான்னு பார்த்திட்டு சொல்லுன்னு சொல்லியிருந்தேன்”
“ராம் வீட்டில உன்னை பார்க்க முடியலை. என் பிரண்ட் என்னைப்பத்தி பேசினதுக்கு ராம்கிட்ட பெரிசா எந்த மாற்றமும் இல்லாம இருந்துச்சுன்னு சொன்னான்”
“அதுவே எனக்கு சொல்லுச்சு அவன்கிட்ட தான் நீயிருப்பேன்னு. உண்மையாவே என்னை பிடிக்காம இருந்திருந்தா அவனைப்பத்தி எதுக்கு என்கிட்ட பேசறீங்கன்னு பேச்சை முடிச்சும் இருக்கலாம். அதுவே என்னை யோசிக்க வைச்சுது”
“கடைசியா எனக்கு புரிஞ்ச விஷயம் என்னன்னா ஒரு வேளை உனக்கு கல்யாணம் ஆகி வேற இடத்துக்கு போயிருக்கலாம்ன்னு தான்”
“என் மேல அவ்வளவு நம்பிக்கை. உங்களை மறந்திட்டு நான் வேற கல்யாணம் பண்ணியிருப்பேனா”
“உன்னோட வருத்தம் எனக்கு புரியுது வது. ஆனா அந்த நேரம் என்னோட நிலைமை யோசிச்சு பாரு. அப்படி ஒரு நினைப்பு எனக்கும் வலி தானே, அதையும் மீறி நீ நல்லாயிருக்கணும்ன்னு தான் மனசு யோசிச்சது” என்று அவன் சொல்லவும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
சிறிது நேரம் அப்படியே இருந்தவன் பின் அவளை விலக்கி அவன் விளக்கத்தை தொடர்ந்தான். “ராம் வீட்டுக்கு போயிட்டு வந்த முயற்சிக்கு பிறகு நான் எந்த தேடுதலும் செய்யலை”
“தவிர நான் உன்னை தேடுற விஷயம் உங்க சித்தப்பா காதுக்கு போய் அவர் ஆளுங்க மறுபடியும் என்னைத் தேடி வந்திட்டாங்க. அவங்க மிரட்டலுக்கு எனக்கு எந்த பயமுமில்லை தான்”
“ஆனா, இந்த முறை என் தங்கை விஷயத்துல கொஞ்சம் ஆட்டம் காட்டிட்டார் அவர். கல்யாணம் ஆகி வெளிநாடு போக வேண்டிய பொண்ணு விசா பேப்பர்ஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா”
“அந்த பேப்பர்ஸ் எடுத்திட்டு என்னை பார்க்க வந்திருந்தாங்க அவங்க, உன் தங்கச்சி ஒழுங்கா ஊர் போய் சேர வேணாமான்னு கேட்டு, அதுக்கு பிறகு நான் என்னோட முயற்சியை மொத்தமா விட்டுட்டேன்”
“என் தங்கை அவ புருஷனோட போய் செட்டில் ஆனபிறகு அம்மா அப்பாவை சுத்தி என்னால முடிஞ்ச செக்யூரிட்டியை போட்டு வைச்சேன்”
“அந்த நேரத்துல தான் உன்னைப்பத்தி நியூஸ் ஒண்ணு பேப்பர்ல பார்த்தேன். அது நீ இதே ஊர்ல இருந்த நேரம் ஞாபகமிருக்கா”
“ஹ்ம்ம் நான் கொஞ்ச நாள் மைசூர்ல இருந்தேன்” என்றாள் அவளும் ஒப்புதலாய்.
“நாங்க உன்னை எப்படி காப்பாத்தினோம்ன்னு நினைச்சே… இங்க கபிலன் மூலமா ஹெல்ப் கேட்டப்போ அவங்க அது நீன்னு தெரிஞ்ச பிறகு ரொம்ப மரியாதையா பேசினாங்க”
“அவங்க எல்லாரும் ரொம்பவே உதவியா இருந்தாங்க. இல்லைன்னா ராஜசேகர் சார் இங்க வைச்சுட்டு உன்னை நாங்க வெளிய கொண்டு வர்றது கஷ்டமாவே தான் போயிருக்கும்”
பிரியன் சொல்ல சொல்ல வதனாவிற்கு என்னவோ போலானது. மைசூரில் அவள் சிறிது காலம் பணி செய்திருக்கிறாள், ஆனால் இங்கிருப்போர் அவளுக்கு இவ்வளவு உதவி செய்திருக்ககூடும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அவர்களை எண்ணி உள்ளம் பூரிக்கவே செய்தது அவளுக்கு. 
“அப்போ என்னைப்பத்தி நியூஸ் பேப்பர்ல பார்த்திட்டு என்னை தேடி வந்திருக்கலாம் தானே”
“வந்திருக்கலாம் தான், ஆனா குலசேகரன்கிட்ட உன்னை நானா வந்து பார்க்க மாட்டேன்னு தான் சொல்லியிருந்தேன்”
“இதுக்கு இடையில நான் இந்த ஊருக்கு திரும்பி வந்து எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க வேண்டிய நிர்பந்தத்துல இருந்தேன். நான் மலேசியால இருந்தப்போ எனக்கு சம்பளமா வந்த பணத்தை முதலீடா வைச்சு சின்ன அளவுல ஒரு சர்வீஸ் சென்டர் போலத் தான் முதல்ல திறந்தேன்”
“நிர்மலா மேடம் நீ மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். அவங்க லேப்டாப் ரிப்பேர் ஆகி என்கிட்ட தான் சர்வீஸ்க்கு வந்துச்சு. அப்போல இருந்து அவங்க பழக்கம்”
“அப்புறம் என்ன பிரச்சனை இருந்தாலும் என்கிட்ட தான் வந்தாங்க. என்னோட சர்வீஸ் பிடிச்சு போய் அவங்க தான் கவர்மென்ட் ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் சஜெஸ்ட் பண்ணாங்க”
“கொஞ்சம் நஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் மேலே வந்தேன். ஒரேடியா மேல இல்லைன்னாலும், படிப்படியான முன்னேற்றம் தான், என் வேலையில. உன்னை நான் திரும்ப பார்க்கும் போது ஓஹோன்னு இல்லைனாலும் ஒண்ணுமில்லாம இருக்ககூடாதுன்னு நினைச்சேன்”
“நீங்க ஏன் பழைய மாதிரியே ஐடில போய் இருக்கக்கூடாது”
“சர்டிபிகேட்ஸ்… என்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் அவங்க எப்பவோ எரிச்சுட்டாங்க”
“மறுபடியும் வாங்கி இருக்கலாம்ல”
“அதுக்கு நான் ஹைதராபாத் தானே வரணும். நிச்சயம் அவங்க என்னை அங்க வரவிட மாட்டாங்கன்னு தெரியும்”
“சோ என்னால முடிஞ்ச வேலையா என்னோட ஸ்கூல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். அதெல்லாம் தமிழ்நாட்டுல நான் படிச்சதால ஈசியா வாங்க முடிஞ்சது”
“அப்போகூட என்னை பார்க்க வரணும்ன்னு உங்களுக்கு ஒரு முறை கூட தோணலையா…” என்றாள் வருத்தமாய்.
“உன்னை ஒரு முறையாச்சும் பார்த்திட்ட மாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்தவனுக்கு உன்னை பேப்பர்ல பார்த்ததும் எப்படி இருந்துச்சு தெரியுமா” என்றவன் அந்நிகழ்வு இன்று நடந்தது போல் அவளை அப்படியே தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
“அதை சொல்ல வார்த்தையே இல்லை வது. ஒரு முறை பார்த்த எனக்கு அதுவே போதும்ன்னு இருக்க முடியலை. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்”
“உன்னை இங்க வரவைக்க என்ன வழின்னு யோசிச்சேன்”
“அப்போ நான் சென்னை வந்தது எல்லாம் உங்க பிளான் தானா”
“இல்லை வது, அது கடவுள் செயல் தான் என்னோட குரல் அவனுக்கு கேட்டிருச்சு போல. அந்த அய்யப்பன் என்னை சோதிச்சது போதும்ன்னு தான் உன்னை என் கண்ணுல காட்டினான் போல”
“நான் ஹைதராபாத்ல இருந்து ட்ரைன்ல சென்னைக்கு வந்தப்போ கூட ட்ராவல் பண்ண ஒருத்தர் சொன்னார். எல்லா பிரச்சனையும் அய்யப்பன்க்கிட்ட விட்டுடுங்க. நீங்க அவர்க்கு வேண்டிக்கிட்டு மலைக்கு போயிட்டு வாங்க, உங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்ன்னு”
“அதுல இருந்து வருஷா வருஷம் மாலை போட்டு மலைக்கு போக ஆரம்பிச்சேன். அந்த ஆண்டவன் என்னோட வேண்டுதலுக்கு செவி சாய்ச்சுட்டான்”
“உன்னை நான் பார்த்தேன், அது ஒரு மோசமான சூழ்நிலையா இருந்தாலும் எனக்கு அதெல்லாம் பத்தி கவலையில்லை. உன்னை பார்த்ததே போதுமாயிருந்தது. குலசேகரன்கிட்ட நான் சொன்ன மாதிரி உன்னை விடவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்”
“அப்போ கூட கொஞ்சம் பயம் இருந்துச்சு உனக்கு வேற வாழ்க்கை எதுவும் அமைஞ்சு இருந்தான்னு… அதெல்லாம் இல்லைங்கற மாதிரி உன்னோட பேரை அவங்க சொன்னதும் அப்படியொரு சந்தோசம் எனக்கு” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஆதுரமாய்.
“ஆனா எனக்கு அப்போ இசைப்பத்தி தெரியாது வது. தெரிஞ்சிருந்தா இன்னமும் முன்னாடியே உன்னைத்தேடி வந்திருப்பேன்” என்று அவன் வருந்திச் சொல்ல அவளுக்கு கோபம் வந்தது.
“அப்போ எனக்காக நீங்க வரணும்ன்னு நினைக்கலையா” என்று முறுக்கிக் கொண்டாள்.
“உனக்காக தான் வந்தேன்னு உனக்கு நல்லா தெரியும் வது. சின்னப்பிள்ளை போல அதை புரிஞ்சுக்கமா பேசாத. இசைக்காக நான் சீக்கிரம் வந்திருப்பேன்னு சொன்னது எதுக்காகன்னு புரிஞ்சுக்கோ”
“ஒரு அப்பாவா அவளைப்பத்தி எனக்கு தெரியலை. அந்த குழந்தை அப்பா நான் உயிரோட இருந்தும் இல்லாம வளர்றது எல்லாம் கொடுமை வது”
“நம்ம பொண்ணுக்கும் உன் நிலைமை வந்திருக்கக்கூடாதுங்கற ஆதங்கம் தான் வது புரிஞ்சுக்கோ. ராம் அளவுக்கு என்னால என் பொண்ணை பார்த்துக்க முடியாது தான்”
“ஆனாலும் நான் அவளை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன்னு உனக்கு சொன்னா புரியாது வது. நம்ம பொண்ணோட குழந்தை பருவத்தை நான் மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னா தான் உனக்கு புரியுமா வது”
“அய்யோ நான் அப்படியெல்லாம் நினைச்சு கேட்கலைங்க. என்னமோ நீங்க அப்படி சொன்னதும் எனக்காக இல்லையோன்னு ஒரு பொறாமை. உங்களுக்கு நான் தான் எப்பவும் முதல்ல, அப்புறம் தான் இசை ஓகே வா” என்று சிறுபிள்ளை போல் அப்போதும் பேசுபவளை “போடி” என்று தான் பார்த்தான்.
“சரின்னு சொல்லுங்க”
“நீ தான் என்னோட முதல் குழந்தை போதுமா”
“ஹான் அப்படி தான் சொல்லணும்”

Advertisement