Advertisement

அத்தியாயம் – 33
அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது போல் செய்திகள் தான் அதில் முதலிடம் பிடித்திருந்தது.
விகேபியின் அதிகாரத்திற்கும் அகந்தைக்கும் கிடைத்த பெரிய அடி அது. இப்போதும் அவர் வீட்டில் குதித்துக் கொண்டு தானிருந்தார்.
“ஏன்டா நீங்க எல்லாம் என்னோட பிள்ளைங்களாடா ஒரு தப்பைக் கூட தப்பில்லாம பண்ணத் தெரியாதா, அவன் பண்ணதுல இருந்து இதோ கடைசியா இவன் பண்ண வரைக்கும் எல்லாத்தையுமே போட்டு வெட்ட வெளிச்சமாக்கிட்டானுங்க”
“எல்லாம் அந்த நாசமா போனவ இந்த வீட்டில அடியெடுத்து வைச்ச பிறகு தான் நடந்துச்சு” என்று அவர் புதுக்கதை கற்ப்பித்தார் அதற்கு.
மைசூரில் வதனா, இந்தர் இருவரும் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்கவுமே அதை தாங்க முடியாமல் அங்கிருந்து கிளம்பியவர் வீட்டிற்கும் சென்று அதே புலம்பல் தான்.
இந்த முறை அவரிடம் சிக்கியது இந்தரின் அன்னை தான். “எனக்கு தெரியாம ஐந்து மாசத்துக்கு மேல அந்த தறுதலையை வயித்துக்குள்ள வைச்சிருக்கும் போதே உன்னையெல்லாம் கொன்னிருக்கணும்டி. எல்லாம் உன்னால தான் இன்னைக்கு அது எனக்கு எதிராவே வளர்ந்து நிக்குது”
“என்னையவே மரியாதை இல்லாம பேசுது. இதோ பெரியவன் எனக்கு தெரியாம பண்ணத்தப்பு அதுவும் எனக்கு எதிரா வந்து பேசுது”
“உங்க எல்லாராலையும் தான் இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை” என்று அவர் கத்திய கத்தலை இந்தரின் அன்னை சுத்தமாய் பொருட்படுத்தியிருக்கவில்லை.
அவருக்கு தன் மகனை குறித்து பெருமிதமே. அவனால் ஒரு குடும்பம் பிழைத்திருக்கிறது என்று. யார் அறிவார் அவன் செய்த புண்ணியம் மாத்திரமே அந்த குடும்பத்தை ஒரேடியாக உடைந்து போகாமல் காக்கும் என்று.
அதே நாளில் ஹோட்டல் அறையில் வதனா கோபமாய் மேலும் மேலும் பேசி அவள் தன்னையும் வதைத்து பிரியனையும் வதைத்தாள்.
கடைசியாய் அவள் பிரியனை பார்த்து “எவ்வளோ செல்பிஷ்டா நீ??” என்று கத்தியிருக்க பதிலுக்கு ராமிற்கு வந்ததே கோபம்.
அதுவரையில் வதனாவிடத்தில் அவன் அப்படியொரு கோப முகத்தை காட்டியதேயில்லை எனலாம்.
“வதனா போதும் நிறுத்து. நீ அடிக்கடி ஒண்ணு சொல்வியே வார்த்தையை விடாத அள்ள முடியாதுன்னு. அதே தான் சொல்றேன் உனக்கு. அவன் சூழ்நிலை என்ன மனநிலை என்னன்னு தெரியாம பேசாத” என்று அதட்டினான் ராம்.
“நீயும் ஒரு ஆம்பிளை தானே அவனுக்கு தானே நீயும் சப்போர்ட் பண்ணுவே. என் வலி எனக்கு தானே தெரியும், தனியா நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்”
“நீயும் என்னோட இல்லைன்னா நான் இசையை வைச்சுட்டு என்ன பண்ணியிருப்பேன் சொல்லு ராம். ஆரம்பத்துல சரி, ஆனா திரும்பி வந்த பிறகு என்னைத் தேடி வந்திருக்கலாம்ல”
“நான் என்ன ஜடமா ராம். எனக்குள்ளயும் இவரு எப்போ வருவாரு… வருவாரா மாட்டாரான்னு எவ்வளவு நினைப்பு இருந்திருக்கும். இவ்வளோ வருஷத்துல என்னை பார்க்கணும்ன்னு ஒரு முறை கூட  எப்படி தோணாம போச்சு இவருக்கு”
“அப்போ நான் தனியா கஷ்டப்படுறதை இவர் எட்டி நின்னு வேடிக்கை பார்த்தாரா”
“யார் வேடிக்கை பார்த்தாங்க… என்னமோ நீ தனியா கஷ்டப்பட்டேன் கஷ்டப்பட்டேன்னு சொல்றியே, உனக்கு நான் கூட இல்லையா…” என்று கத்தினான் ராம் இப்போது.
வதனாவின் பேச்சில் அவனுமே நிதானமிழந்திருந்தான். பிரியனோ மனைவியின் பேச்சில் காயப்பட்டு போயிருந்தான். ஒன்றுமே பேசவில்லை அவன். முகத்தில் அப்படியொரு இறுக்கமிருந்தது.
“நீ தானே இருந்த, நீ மட்டும் தானே என் அம்மாவா, அப்பாவா, நண்பனா எல்லாமுமா இருந்து என் சுக துக்கங்களை பகிர்ந்துகிட்ட”
“உன்னைப் போய் நான் எதுவும் சொல்வேனா. ஆனா இவர்… இவருக்கு இவரு பொண்டாட்டி ஞாபகம் வரலை தானே” என்று சொல்லும் போது அவள் விழிகள் கண்ணீரை உகுத்தது.
“வதனா நான் கூட உன்… என்ன சொன்னே, என்னமோ சொன்னியே ஹான்… உன்னோட ஹாப்பி அண்ட் சேட் சைடு நான் ஷேர் பண்ணிக்கிட்டேன்னு. அது கரெக்ட் தான், ஆனா என்னை உனக்கு எப்போல இருந்து தெரியும்”
வதனா அவனின் கேள்வியில் புரியாமல் அவனை பார்த்தாள். என்ன சொல்ல வருகிறான் இவன் என்று.
“சொல்லு வதனா என்னை எப்போல இருந்து உனக்கு தெரியும்”
“ராம் வேணாம் விட்டிரு… அவகிட்ட நான் பேசி புரிய வைச்சுக்கறேன், அவ என்னை புரிஞ்சுக்கறதுன்னா புரிஞ்சுக்கட்டும் இல்லன்னா என்ன நடக்குதோ நடக்கட்டும்” என்றான் விரக்தியாய்.
“வல்லா நீ கொஞ்சம் பேசாம இரு. உனக்குன்னு பேச நான் இருக்கேன், இப்போ நான் தான் பேசியாகணும், நீ எதுவும் பேச வேணாம்” என்றவன் வதனாவை நோக்கித் திரும்பினான்.
“ஓ அப்போ உனக்கு என்னைவிட அவன் தான் முக்கியமா, உனக்கு நான் தானே பிரண்ட்”
“ஆமா எனக்கு அவன் தான் முக்கியம். அவனுக்கு பிறகு தான் நீ எனக்கு பிரண்ட். நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு வதனா”
“இதென்ன கேள்வி ராம்??”
“பதில்” என்றான் அழுத்தமாய்.
“நான் காலேஜ் படிக்கும் போதுல இருந்தே தெரியும்”
“அப்போ நீயும் நானும் பிரண்ட்ஸா”
“இல்லை…”
“உனக்கு நான் சீனியர் காலேஜ் போகும் போது வரும் போது என்னை பார்த்திருக்க, அவ்வளவு தான் நம்மோட பழக்கம் சரி தானே…”
“என்ன சொல்லப்போறே ராம்?? சுத்தி வளைக்காம நேரா சொல்லு”
“ஒரு முறை நீ எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க அந்த பிரவீன் விஷயத்துல” என்று சொன்னாள் சட்டென்று ஞாபகம் வந்தவளாக.
“ஹ்ம்ம் கரெக்ட் கூட படிக்கிற பொண்ணாச்சேன்னு செஞ்ச ஹெல்ப். அதுக்கு பிறகு நீ என்னை எப்போ பார்த்தே??”
“எங்க வீட்டில”
“நான் எப்படி அங்க வந்தேன்னு யோசிச்சியா??”
‘இவன் என்ன சொல்றான், அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம்’ என்று மலங்க விழித்தாள்.
“இதோ நிக்கறானே… இவன்… இவன் சொல்லித்தான் வந்தேன்… அவன்கிட்ட கேட்டியே என்னை தனியா விட்டு போயிட்டேன்னு…”
“இவனை கடத்திட்டு போன இடத்துல இருந்து போன் பண்ணான் எனக்கு. அவங்க கண்ணுல எப்படியோ மண்ணைத் தூவி எனக்கு போன் பண்ணி அவன் கேட்டது ஒரே ஒரு விஷயத்தை தான். அது உன்னை நான் பார்த்துக்கணுங்கறது…” என்று அன்று நடந்ததை அவளுக்கு சொன்னான்.
“அப்போ கூட நான் ஏதோ ராங் கால்ன்னு தான் நினைச்சேன். எங்க ரெண்டு பேருக்குள்ள எப்பவும் ஒரு மோதல் இருக்கும். அது உனக்கும் தெரிஞ்சிருக்கும்”
“அப்போ எல்லாம் இவனை ஏதோ எதிரி மாதிரி தான் பார்த்திருக்கேன். ஆனா எனக்கே தெரியாம இவனோட நட்பை நான் விரும்பியிருக்கேன்னு எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது”
“இவன் சொன்னதை நான் செய்யறேன்னும் சொல்லலை செய்ய மாட்டேன்னும் இவன்கிட்ட சொல்லலை”
“சரி போய் பார்ப்போம் உண்மையா பொய்யான்னு… நான் வந்து பார்க்கும் போது தான், நடந்தது எல்லாம் உண்மைன்னு எனக்கு தெரியும். அப்புறம் நடந்ததெல்லாம் தான் உனக்கே தெரியுமே” என்று ராம் சொல்ல வதனாவின் கண்களில் கண்ணீர் அருவியாகியது.
“என்னை எப்படி நம்பி அவன் இதை சொன்னான்னு எனக்கு தெரியலை. ஆனா அவனோட அந்த நம்பிக்கையை கண்டு உண்மையிலேயே நான் பிரமிச்சு தான் போனேன்”
“அவனுக்காக அவனோட வதனாவை நல்லா பார்த்துக்கணும்ன்னு நினைச்சேன். இதோ இப்போ அவன்கிட்ட உன்னை நான் ஒப்படைக்கணும், அவன் எப்பவும் உன்னோட பிரியன் தான் அதை நீ நம்பு…”
ராம் சொல்லி முடிக்கும் முன்னே அவள் ஓவென்று கதறியவாறே ஓடிவந்து பிரியனை அணைத்திருந்தாள். அவளின் கண்ணீர் கரையுடைத்து அவனையும் நனைத்தது.
இப்படியொரு திருப்பம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளின் வாழ்க்கையில் தான் எவ்வளவு திருப்பங்கள், எதுவுமே அவளாலோ பிரியனாலோ நடந்ததல்ல. பிறரால் நடந்தது, அதில் இருவரும் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள் போல் தான் ஆகினர்.
அவளின் மனம் ஏதேதோ எண்ணி யோசனையில் செல்ல அவளின் நினைவை ராமின் பேச்சு கலைத்தது.
ராம் அத்துடன் முடிக்கவில்லை “உனக்காச்சும் நாங்க இருந்தோம் வதனா. ஆனா வல்லாக்கு யாரு இருந்தாங்கன்னு யோசிச்சு பார்த்தியா” என்ற நண்பனின் குரலில் பிரியனை இன்னும் இன்னும் இறுக்கினாள்.
“வல்லா இனி நீ பேசு, மனசுவிட்டு எல்லாம் பேசி முடிங்க. உங்களுக்குள்ள எந்த குழப்பமும் இனி இருக்கக்கூடாது. நான் இசையை கூட்டிட்டு சென்னைக்கு கிளம்பறேன்”
“நீங்க நாளைக்கு கிளம்பி வந்து சேருங்க…” என்றவன் வாயில் வரை சென்று பின் திரும்பியவன் “அவங்க இனிமே வரமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். நாளைக்கு பேசுவோம்”
“பை வதனா, டேக் கேர்” என்று சொல்ல அப்போதும் பிரியனிடமிருந்து அவள் பிரியவில்லை.
“வது, ராம்க்கு பதில் சொல்லு” என்று பிரியன் தான் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.
“இட்ஸ் ஓகே வல்லா, அவகிட்ட நான் இதெல்லாம் எதிர்பார்க்கறதில்லை. அவளை நான் சரியா வளர்க்கலை, இந்த பத்து வருஷத்துல. அதான் என்னை மதிக்க மாட்டேங்குறா” என்றான்.
நண்பனின் பேச்சில் அவள் முகத்தில் அப்போது தான் லேசாய் ஒரு புன்னகை அரும்பியது.
“நீயே பார்த்துக்கோப்பா உன் பொண்டாட்டியை இவளை கட்டி மேய்க்க நான் பட்டபாடு இருக்கே, அந்த வேதனை இருக்கே அந்த வேதனை…” என்று அவன் வடிவேல் பாணியில் சொல்ல இப்போது பிரியனும் சிரித்தான்.
வதனா பக்கென்று சிரித்தவள் “நீ தெலுங்கு படம் பார்க்கச் சொன்னா வடிவேல் காமெடியா பார்த்து கெட்டு போயிருக்க, சரி சரி நீ கிளம்பு காத்து வரட்டும், எங்களுக்கு இடையில நீ எதுக்கு நந்தியாட்டாமா” என்றாள்.
“ஏன்மா சொல்ல மாட்டே, நீ ஏன் சொல்ல மாட்டே?? உன்னைய பார்த்து பார்த்து வளர்த்ததுக்கு நீ காட்டுற நன்றிக்கடனா இது”
“டேய் போடா…”
“அய்யய்யோ ரொம்ப மரியாதை தேயுதே…” என்றவன் “கிளம்புறேன் வல்லா… வதனா தேவையில்லாதது பேசாத, நீ நிறைய பேசிட்டே, அவனைப் பேசவிடு சரியா…” என்று சொல்ல வதனா மெதுவாய் தலையசைக்க அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.
இருவரின் மனநிலையை சற்று லேசாக்கவே ராம் இலகுவாய் பேசிச் சென்றிருந்தான். ராம் கிளம்பிச் சென்ற பின்னே சிறிது நேரம் அந்த அறையில் அமைதியே நிலவியது.
யார் முதலில் பேச என்ன பேச எப்படி ஆரம்பிக்க என்று பிரியன் அவளைப் பார்த்த நொடி அவளே பேச்சை துவங்கினாள்.
“நீங்க என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். இப்போ நான் எதையும் கேட்க மாட்டேன்”
“வது நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா??” என்றான் பிரியன் கசங்கிய குரலில்.
“புரிஞ்சதுனால தாங்க சொல்றேன். நீங்க எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம். என்னை தனியாவிட்டு போயிட்டீங்களேன்னு எனக்கு அந்த நேரத்துல வருத்தம் கோபம் எல்லாமே இருந்தது உண்மை தான்”
“இந்த நிமிஷம் எனக்கும் எதையுமே தெரிஞ்சுக்க விருப்பமில்லை. ஏன் தெரியுமா??” என்றாள் இமையோரத்தில் கண்கள் கரிக்க.
“நீங்க எங்க இருக்கீங்க என்னன்னு எதுவுமே தெரியாம இருக்கும் போது கூட எனக்கு என்ன ஆகும், நான் என்னாவேன்னு நினைச்சீங்க பாருங்க, எனக்கு அது போதும்…”
“அது மட்டும் போதும்… ஒரு நல்ல நட்பை எனக்கு பாதுகாவலா வைச்சுட்டு நீங்க மட்டும் எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு இருக்கீங்க… உங்க அளவுக்கு நான் எதையும் அனுபவிக்கலை”
“நீங்க இல்லைங்கறது தவிர எனக்கு எந்த குறையும் ராம் வரவிட்டதேயில்லை…” என்றவளின் உணர்வுகள் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வார்த்தையில்லாமல் அவன் முகத்தில் தன் முத்திரையை பதித்தது கணக்கில்லாமல்.
மனைவியின் எதிர்பாரா முத்த யுத்தத்தில் முதலில் தடுமாறிய பிரியன் அவளுடன் தானும் ஒன்றி நின்றிருந்தான்.
“உங்களை காதலிச்சதுக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காகவும் நான் அவ்வளவு பெருமை படறேங்க” என்றாள்.
“வது நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருக்க… கண்ட்ரோல் யூவர் செல்ப்”
“போடா…” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.
அதில் அவனுக்கு லேசாய் புன்னகை அரும்பியது. “வது நீ தெரிஞ்சுக்க விரும்பாம இருக்கலாம். நான் ஆனா எல்லாமே சொல்லியாகணும்ன்னு நினைக்கிறேன். ப்ளீஸ் என்னை பேசவிடும்மா”
வதனா ஒன்றும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள். “என்ன வது பேசாம இருக்கே??”
“அதான் நான் கேட்கலைன்னாலும் நீங்க சொல்லுவேன்னு அடம் பிடிக்கறீங்களே” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.
பிரியன் அவளை அணைத்தவாறே அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தான். “நான் சொல்றதை கேட்க உனக்கு விருப்பமில்லையா” என்றான் மெதுவான குரலில்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை, எனக்கு யாருமேயில்லைன்னு நினைச்சேன். என்னோட முதல் உறவு நீங்களும் என்னைவிட்டு போயிட்டீங்கன்னு தான் எனக்கு கவலை”
“ஏங்க நான் தான் ரொம்ப சுயநலவாதியா இருந்துட்டேன். என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்குங்க. நான் உங்களை எவ்வளவு திட்டியிருப்பேன் அந்நேரம், அதெல்லாம் நினைச்சாலே எனக்கு உங்க முகத்துல கூட முழிக்க முடியலை”
“என்னங்க நானும் நெறைய தப்பு பண்ணியிருக்கேன், உங்களை புரிஞ்சுக்காம போன என்னை மன்னிப்பீங்களாங்க??” என்று கலங்கிய குரலில் அவள் சொல்ல “என்ன வது மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு, நீ வேற நான் வேற இல்லைம்மா… நமக்குள்ள மன்னிப்புக்கு எப்பவும் அவசியமில்லை”
“தவிர உன் மேல எந்த தப்பும் இல்லை, நடந்தெல்லாம் இல்லைன்னு ஆகிடாது தான்… ஆனா நாம அதை மறைக்க முயற்சி பண்ணுவோம்” என்றான்.
“நடந்த அத்தனை களேபரமும் என்னால தான் உங்களுக்கு நடந்துச்சு. நீங்க எல்லாம் உன்னால தானேன்னு ஈசியா கையை காட்டி சொல்லியிருக்க முடியும். அது உண்மையும் கூடத்தானே, யாருமே இல்லைன்னு மறுக்க முடியாதே…”

Advertisement