Advertisement

“வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது.
“என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க… தூ… நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை சொன்னே நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”
“உன்னை கொன்னாலும் கொன்னிடுவேன். நீயெல்லாம் என்ன அப்பன், அந்த வார்த்தையை சொல்லவே அசிங்கமா இருக்கு எனக்கு”
“உனக்கு உன் பதவி முக்கியம் உங்கப்பன் பேச்சு முக்கியம்ன்னு அன்னைக்கு ஆயிரம் விளக்கம் சொன்னியே. உனக்கு கொஞ்சம் கூட நீ பெத்த பொண்ணு மேல பிரியமே இல்லாம போச்சா”
“நீயே என்னை பொண்ணுன்னு பார்க்கலை, அப்புறம் நான் ஏன்யா உன்னை அப்பான்னு பார்க்கணும்” என்று கத்தியவள் இப்போது விகேபியின் முன் நின்றாள்.
“நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா, அப்படி சொல்லிக்க உனக்கே வெட்கமாயில்லை. வந்ததும் ஒண்ணு சொன்னியே என்னது அது, நான் என்ன ஜாதியோ என்ன குலமோ??”
“நீயெல்லாம் என்ன ஜாதி?? உன்னையெல்லாம் விலங்குன்னு கூட சொல்ல முடியாது, ஏன்னா அது விலங்குகளை அசிங்கப்படுத்துறது போல ஆகிடும்”
“உன்னை மாதிரி பெரிய மனுஷன் போர்வையில இருந்திட்டு சின்னத்தனமான வேலை செய்யற உன் பார்வை எங்க மேலப்பட்டாலே அது தீட்டு தான். நீ ஜாதியை பத்தி பேச வந்துட்டே”
“அப்புறம் ஒண்ணு சொன்னியே என் முகத்தை பார்க்கவே உனக்கு பிடிக்கலையா… உன் முகத்தை கூட தான் பார்க்க எனக்கு பிடிக்கலை, செத்து போய்டறியா, இல்லை ஆசிட் வாங்கி ஊத்திறவா” என்றாள் இடக்காகவே.
“ஹேய் என்னடி கொஞ்சம் விட்டா பேசிட்டே போறே??” என்றவர் அவள் கையைப் பிடித்து முறுக்கப் போக எதிர்பாரா விதமாய் அவர் கையை இவள் பிடித்து முறுக்கியிருந்தாள்.
அவர்கள் கூட்டி வந்திருந்த அடியாட்கள் எல்லாம் கபிலனும் ராமும் அப்போதே வேறு அறையில் அடைத்து வைத்தனர். விகேபி அந்த ஹோட்டலுக்கு வரும் முன்னேயே அந்த ப்ளோரில் இருந்த அத்தனை அறைகளையும் காலி செய்ய வைத்திருந்தார். இவர்கள் தங்கியிருந்த அறைகளை தவிர.
அந்த ப்ளோரில் இவர்களை தவிர வேறு ஆட்கள் எவருமே வரவிடாது செய்த பின்னே தான் அங்கு வந்திருந்தனர். அதனால் நடந்த களேபரம் பிறர் அறியர்.
“வது அவரை விடு” என்றான் பிரியன்.
அவனை நிமிர்ந்து தீப்பார்வை பார்த்தாள் அவள்.
“வது விட்டிடு, அவர் தான் வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கலைன்னா நீயும் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணுறே, விடு வது” என்றவன் அவள் கையை பிடித்து விகேபியின் கையை விடுவித்தான்.
விகேபி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவரை யாருமே எதிர்த்து நின்றதேயில்லை. அதனாலேயே அவரிடம் எப்போதும் ஒரு அகங்காரமும் திமிரும் குடிக் கொண்டிருக்கும்.
வதனா அதுவும் ஒரு பெண் தன்னை அசிங்கப்படுத்துவதா என்று அவரின் உள்ளம் கொதிக்கவே செய்தது. தன் வயதிற்கு தனக்கு இதெல்லாம் தேவை தானா என்ற சுயபச்சாதாபம் வேறு சேர்ந்துக்கொண்டது.
இப்படி அவமானப்படுவதற்கு தான் இவ்வளவு கஷ்டப்பட்டோமா. இதற்கு தன் குடும்பத்திற்கு வாரிசே வேண்டாம் என்ற எண்ணமே எழுந்தது அவருக்கு. இனி இழப்பதற்கு எந்த வாரிசு இருக்கிறது அவர்களிடத்தில்.
அது தான் தன் மக்களுக்கு இருந்த பிள்ளைகள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்களே. இனி யாருக்காக இதெல்லாம் பார்க்க வேண்டும். தான் இருக்கும் வரை அதிகாரமாய் இருந்து போக வேண்டும் என்ற சுயநலம் எழ அடுத்து பேசவாரம்பித்தார்.
“ஆமா எல்லாமே நான் தான் செஞ்சேன். எல்லாம் அந்த சாஸ்திரியால வந்தது. நீ வந்தா தான் குடும்பம் தழைக்கும்ன்னு சொன்னான், அதுனால தான் இப்படி செஞ்சேன்”
“நீ இவனோட சேர்ந்து வாழ்ந்தா எல்லாமே பாழா போகும்ன்னு சொன்னான். தவிர இவன் யாரோ எவனோ உன்னை திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணுவான்னு அப்போ நாங்க நினைக்கலை”
“அது எங்களுக்கும் பிடிக்கலை. ஒரு மாச சம்பளக்காரன் உன் புருஷனா இருக்கக் கூடாதுன்னு தான் அவனை உன்கிட்ட இருந்து பிரிச்சேன்”
“உன்னையே எங்க குடும்பத்துக்குள்ள சேர்க்க ஆயிரம் யோசிக்கறவன் நீ கட்டிக்கிட்டவன எப்படி சேர்ப்பேன். நீயாச்சும் ஒரு வகையில என் புள்ளையோட ரத்தம்ன்னு ஏத்துக்கலாம்”
“ஆனா இவனெல்லாம் யாரோ?? எவனோ?? அவனை நீ கட்டிக்கிட்ட நாங்க எப்படி ஏத்துக்குவோம். அதான் அவனை பிரிச்சேன்”
“குலசேகரனை வைச்சு மிரட்டினதும் நான் தான். இவன் திரும்பி வந்தாலும் இவனுக்கு எங்க மேல பயம் இருக்கணும்ன்னு தான் அவனோட அம்மா, அப்பா, தங்கைன்னு அத்தனை பேரையும் எங்க பார்வை வட்டத்துலையே வைச்சிருந்தோம்”
“இவனா உன்னை சந்திக்க எப்போ வந்திருந்தாலும் அவங்களை என்னவும் செய்வோம்ன்னு அவனுக்கு நல்லாவே தெரியும்”
“இவன் ஒண்ணும் லேசுபட்டவனில்லை. நாங்க இவ்வளவு செஞ்சும் எங்களை எப்படியோ ஏமாத்தி மறுபடியும் உன்னை பார்த்திட்டான். அதுக்கு பிறகு இவனால ஏகப்பட்ட தலைவலி எங்களுக்கு”
“இப்போ கடைசியா என் விரலை வைச்சே இப்போ என் கண்ணையும் குத்திட்டான்” என்றவரின் பார்வை பிரியனையும் பார்த்திபேந்திரனையும் தொட்டு நின்றது துவேஷத்துடன்.
“சாஸ்திரி சொன்னாதால தான் உன்னை எங்க குடும்பத்துக்குள்ள கூட்டிட்டு வரணும்ன்னு நினைச்சேன். அதுவும் வேண்டா வெறுப்பா தான். இப்போ நான் முடிவு பண்ணிட்டேன்”
“இனிமே நீ எங்களுக்கு வேண்டாம் இப்போ மட்டுமில்லை எப்பவும். நீ வந்து தான் எங்க குடும்பம் செழிப்பா ஆகணும்ன்னா அது இனி தேவையே இல்லை. என்னால பார்த்துக்க முடியும்”
“குலசேகரா கிளம்புவோம். சந்திரசேகர் உன் பசங்களோட சேர்ந்து உன் பொண்ணும் செத்துட்டான்னு நினைச்சுக்கோ. நாளைக்கே அவளுக்கும் சேர்த்து பிண்டம் வைச்சிரு சரியா” என்று பேச்சு முடிந்தது என்பது போல் அவர் ஒருவரையும் பார்க்காமல் வெளியேறினார்.
“ஹலோ மிஸ்டர் எங்க நீங்க பாட்டுக்கு கிளம்பி போயிட்டே இருக்கீங்க… நீங்க பண்ணதுக்கு எல்லாம் நீங்க தண்டனை அனுபவிக்க வேணாமா… இவங்க உங்களை சும்மாவிட்டாலும் நான் உங்களை சும்மா விடுறதா இல்லை…”
“நீயெல்லாம் நல்ல குடும்பத்து பொம்பளையா, என்னா பேச்சு பேசற, சின்னவங்க பெரியவங்கன்னு மரியாதை இல்லாம. நீயே இப்படி பேசுனா, உன் ஆத்தாகாரி எந்தளவுக்கு இருந்திருப்பா அப்போ” என்று அவர் தன் அன்னையை சாடவும் வந்ததே அவளுக்கு கோபம் விகேபிக்கு நன்றாய் திருப்பிக் கொடுத்தாள்.
“நான் நல்ல அம்மாவுக்கு தான் பிறந்தேன். ஆனா ரத்தத்துல உங்க குடும்பத்து சாக்கடையும் சேர்ந்து இருக்குல அப்போ என் பேச்சும் அப்படித்தானே வரும்”
“எல்லாத்தையும் பேஸ் பண்ண தயாரா இருங்க. நான் கண்டிப்பா உங்களை சும்மாவிட மாட்டேன்” என்று காட்டமாக சொன்னாள் அவள்.
“உன்னாலாதை பார்த்துக்கோ, அதுக்கெல்லாம் பயப்படுறவன் கிடையாது இந்த விகேபி” என்று திமிராய் சொல்லி வெளியேறினார் அவர்.
ஏதோ தோன்ற திரும்பி இந்தரை பார்த்தார். “உனக்கும் சேர்த்தே பிண்டம் வைச்சிடறேன்” என்றார் அவர்.
“நான் எப்பவோ உங்களுக்கு வைச்சிட்டேன்” என்றான் அவனும் பதிலுக்கு சளைக்காமல்.
விகேபி வெளியேறிய பின்னர் சந்திரசேகர் தன் மகளை நோக்கி வர அவளோ “என் பக்கத்துல வந்தீங்க, அசிங்கப்பட்டு போவீங்க” என்று கத்த குலசேகரன் அவரை வீல்சேருடன் வெளியே தள்ளிச் சென்றார்.
சில நொடிகள் அங்கு பலத்த அமைதி மட்டுமே. மழையடித்து ஓய்ந்தது போலிருந்தது அந்த இடம். இந்தர் அந்த அறையில் இருந்து சோர்ந்து வெளியே செல்ல பின்னோடே கபிலன் சென்றான். 
“என்ன பார்த்தி கஷ்டமாயிருக்கா?? இவங்களுக்காக நீ ஏன் பீல் பண்ணுறே??”
“இல்லை சார் இவங்களுக்காக எல்லாம் இல்லை, எங்கம்மாவுக்காக தான் பீல் பண்ணேன்” என்றவன் தலையை குலுக்கிக்கொண்டான். 
“நான் ஓகே தான் சார்” என்று அவன் சொல்ல “சரி வா ரூமுக்கு போவோம்” என்ற கபிலன் அவர்கள் இருவரும் தங்கியிருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்றான்.
ராம், பிரியன், வதனா மட்டுமே அந்த அறையில் இருந்தார்கள் இப்போது. வதனா பிரியனை நோக்கி வந்தாள். “ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை??”
“என்னன்னு சொல்லணும்??”
“இவங்க தான் உங்களை என்கிட்ட இருந்து பிரிச்சாங்கன்னு நீங்க ஏன் சொல்லலைன்னு கேட்கறேன்” என்றாள் சத்தமாக.
“சொன்னா??”
“ஹ்ம்ம் சொன்னா??”
“நீ நம்பியிருப்பியா??”
“ஏன் நம்பியிருக்க மாட்டேன்??”
“உனக்கு இப்படி ஒரு அப்பா இருக்கார்ன்னும் அவரும் அவர் குடும்பமும் தான் இப்படி செஞ்சதுன்னும் நான் சொன்னா நீ நம்புவியா வது”
“நான் ஏன் நம்பியிருக்க மாட்டேன்??”
“எந்த அடைப்படையில நான் சொல்லியிருப்பேன். எனக்கே அவங்க கஸ்டடியில இருக்க வரைக்கும் தெரியாது என்னை எதுக்காக கடத்தினாங்கன்னு”
“என்னை அவங்க விட்ட பிறகு தான் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்”
“எப்போ உங்களை விட்டாங்க??”
“இப்போதான் ஒரு நாலஞ்சு வருஷமிருக்கும்”
“அப்போ கூட நீங்க என்னை உடனே வந்து பார்க்கலை ஏன்??” என்றாள் உள்ளே எழுந்த வலியை மறைத்தவாறே.
“எப்படி வது பார்க்க முடியும்?? நான் போன அத்தனை நாட்கள்ல எதுவும் நடந்திருக்கலாம்ல தானே, ஒரு… ஒரு வேளை உனக்கு வேற ஒரு கல்யாணம் நடந்திருந்தா” என்று அதை சொல்லும் போது அவன் குரல் தடுமாறியது.
“அப்போ என் மேல உங்களுக்கு அவ்வளவு தான் நம்பிக்கை அப்படித்தானே…”
“வது உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியாது. ஏற்கனவே நொந்து போய் வந்திருந்தேன், ஒரு வேளை என்னை மறந்து உனக்கு ஒரு வாழ்வு அமைஞ்சி இருந்தா எனக்கு அப்போ அது சந்தோசம் தான் வது”
“அதை நான் எப்படி கெடுக்க முடியும். அப்படி ஒரு சூழ்நிலையை என்னால பார்க்கக்கூட முடியாது வது. என் மனநிலையை நீ யோசிச்சு பாரு”
வதனா இப்போது ஓவென்று கதறி அழுதாள். திடிரென்று அவள் அப்படி வெடித்து அழவும் ராம் பிரியன் இருவருமே பதறி அவள் இருப்புறமும் வந்து நின்றனர்.
“வதனா எதுக்கு இப்போ நீ அழறே?? அதான் அவன் சொல்றான்ல அவனையும் கொஞ்சம் நீ புரிஞ்சுக்கோம்மா” என்றான் ராம்.
“என்னடா புரியணும் எனக்கு… சொல்லு என்ன புரியணும் எனக்கு… நான் பைத்தியக்காரி மாதிரி இவனையே நினைச்சுட்டு இருந்தேன்”
“திரும்பி வந்தவன் என் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைச்சானாம். நான் எக்கேடும் கெடட்டும்ன்னு நினைச்சு தானே என்னை விட்டான்”
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கு தானேடா ராம் தெரியும். இவன் இல்லைங்கறதுக்காக செத்துப்போக கூட நான் முடிவெடுத்தேன்ல. இவன் நான் வேற வாழ்க்கை அமைச்சு இருந்திருப்பேன்னு நினைச்சானாம்”
“எப்படிடா அப்படி இவனால நினைக்க முடிஞ்சது?? நான் தனியா கஷ்டப்படட்டும்ன்னு தானே விட்டுட்டான்” என்று சொல்லி சொல்லி அழுதாள் அவள்.
அவனை பிரிந்து அவளிருந்த நாட்களின் ரணம் வெளிவந்துக் கொண்டிருந்தது அவளின் வார்த்தையில். அவள் பேச்சைக் கேட்டு பிரியனின் முகம் இறுக்கமானது. “இப்போ மட்டும் நான் வேணும்ன்னு எப்படி உங்களுக்கு தோணிச்சு” என்றாள் அடுத்த கேள்வியாய்.
“வதனா உன்னோட எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்றேன்” என்ற ராம் நடந்ததை சுருங்கச் சொன்னான்.
“ஓ அப்போ இவரு அவங்ககிட்ட சொல்லிட்டதால தான் என்னை வந்து பார்க்கலை. நான் இருக்கேனா செத்தனான்னு கூட தெரிஞ்சுக்க விரும்பலை அதானே”
“எவ்வளோ செல்பிஷ்டா நீ??” என்று பிரியனை பார்த்து கத்த அவன் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

Advertisement