Advertisement

அத்தியாயம் – 32
வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்.
கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் சிறு பயம் இருக்கத்தான் செய்தது.
இவர்களை மீறி அவனால் வரமுடியுமா, தான் எங்கிருக்கிறோம் என்று அவனறிவானா. வந்து தங்களை அவனால் அழைத்து செல்ல முடியுமாவென ஆயிரம் யோசனைகள் அவளுக்குள் இருந்ததே உண்மை.
பார்த்திபனையும் கபிலனையும் கண்ட நொடி மனதினுள் அப்படி ஒரு நிம்மதியை அவள் உணர்ந்திருந்தாள். பிரியன் வரவில்லையோ என நினைத்த கணம் அவனுமே அவள் முன் வந்து நின்று அவளுக்கு அதிர்ச்சி கொடுத்தான்.
எப்படியோ ஒருவழியாக வதனாவையும் இசையையும் அழைத்துக் கொண்டு அவர்கள் மைசூரில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது விகேபியின் கட்டளை என்று சொல்லித்தான் பார்த்திபன் அவர்களை கோவிலுக்கு வரவைத்திருந்தான்.
அங்கும் செக்யூரிட்டி எல்லாம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் கபிலன் தன் நண்பன் ஒருவனின் உதவிக்கொண்டு அவர்களை சமாளித்திருந்தான்.
ராஜசேகர் கடைசிநொடி வரை கிளம்பவிடாமல் செய்ததில் பார்த்திபனின் பங்கே அதிகமிருந்தது. ராஜசேகர் வந்தால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடும் என்று அவர்கள் முன்பே ஊகித்திருந்தனர்.
ஆகவே அவர் கிளம்பும் நொடி அவருக்கு கட்சியில் இருந்து போன் செய்வதாக கூறி ஏதேதோ பேசி குழப்பி அவர் வருவதை தாமதப்படுத்திவிட்டான். மற்றவர்களை அவர்களால் மிக எளிதாக சமாளிக்க முடிந்தது.
பார்த்திபன் கணித்தது போல் வதனாவை மும்பையில் இருந்த அவர்களின் வீட்டில் வைத்திருக்கவில்லை. பெங்களூரில் இருந்தவளை மைசூரில் அவர்களின் பினாமியின் பெயரில் இருந்த அவர்களின் கெஸ்ட் ஹவுஸிற்கு மாற்றிவிட்டிருந்தனர்.
ஒரே இடமாக இருந்தால் பிரியன் அவர்களை கண்டுகொள்வது எளிது என்று எண்ணி ஒவ்வொரு இடமாக மாற்றிக் கொண்டிருக்க முடிவு செய்திருந்தனர். 
நடந்தனைத்தும் விகேபியின் எண்ணமே. அதை அவரின் மக்கள் செயல் வடிவம் கொடுத்திருந்தனர். மைசூரில் இருந்து மறுநாள் மும்பைக்கும் அதன்பின் திருவனந்தபுரத்திற்கும் மாற்ற ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்குள்ளாக தான் பார்த்திபன் அந்த இடத்தை கண்டுக்கொண்டு பிரியனையும் கபிலனையும் அழைத்து வந்திருந்தான்.
இசையின் கழுத்தில் அவள் அணிந்திருந்த அந்த செயினை கழற்றி அதை மும்பைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
பிரியனும் அதனாலேயே வதனாவும் இசையும் மும்பையில் இருப்பார்கள் என்று நினைத்திருந்தான். அவர்களை குழப்பவே விகேபி வேண்டுமென்றே அவ்வாறு செய்திருந்தார்.
மும்பையில் அவர்கள் இல்லையென்றால் அடுத்து எந்த இடம் என்று பார்த்திபன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் கபிலன் விகேபிக்கும் அவர்களின் மக்கள் மற்றும் அவர்களின் பினாமியின் பெயரில் இருந்த வீடுகள் அடங்கிய தகவலை கொடுத்திருக்க அது சுலபமாயிருந்தது அவனுக்கு சிந்திக்க.
ஏனோ அவனுக்கு அவர்களை வைத்திருக்கும் இடம் பெங்களூர் என்பதாக இருக்கும் என்ற கணிப்பு. அதையே அவன் மற்றவர்களிடமும் சொல்ல பிரியன் அதில் இருந்த ஒவ்வொரு முகவரியையும் பார்த்துக் கொண்டே வந்தான்.
எதுவோ ஒரு சிந்தனை தோன்ற “பார்த்தி எனக்கு தெரிஞ்ச வரையில விகேபி ஒண்ணும் லேசுப்பட்டவர் இல்லை. கண்டிப்பா நாம யூகிக்க முடியாத அளவுக்கு தான் எல்லாம் செய்வார்”
“ஏன் அவர் என்னையே ஒவ்வொரு இடமா மாத்தி மாத்தி தானே விட்டார். அதையே ஏன் இதுலயும் செஞ்சிருக்க கூடாது”
“நாம இப்படி யோசிச்சு பார்ப்போம். இப்போ நைட் டைம் ஆச்சு. இன்னைக்கு அவங்க பெங்களூர்ல இருக்காங்க. நாளைக்கு மே பீ அவங்க மைசூர் இல்லனா கூர்க்ல இருக்கற ரிசார்ட்ஸ்ல மூவ் பண்ண வாய்ப்பிருக்கு”
“எனக்கு தோணுறது மைசூரா இருக்கலாங்கறது. நாம இப்போ இந்த ரெண்டு லொகேஷன் கண்காணிச்சா போதும்” என்று சொல்ல அதன்பின் மளமளவென்று கபிலனும் பார்த்திபனும் அவர்களுக்கு தெரிந்தவர்களை வைத்து விசாரித்து முடிக்கும் தருவாயில் அவர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருந்தனர் விமானத்தில்.
பெங்களூர் வந்து சேர்ந்த பின்னே தான் வதனாவை வைத்திருக்கும் இடம் மைசூர் என்னும் தகவல் வந்திருக்க ஒரு காரை புக் செய்து விடியற்காலையிலேயே அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“வது இன்னும் ஏன் அழுதிட்டே இருக்கேம்மா”
“நான் ஒண்ணும் அழுகலை”
“அப்போ இதுக்கு பேரு என்னவாம் பிபி” என்று அவள் கண்ணீரை துடைத்து கையில் இருந்ததை காண்பித்தான்.
“அது நான் சந்தோசமா இருக்கேன்ல அதான் வந்திடுச்சு”
“நீங்க வருவீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலைங்க. என்னை கண்டுப்பிடிக்க எவ்வளவு கஷ்டப்படுவீங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சுட்டு இருந்தேன்…” என்றவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்து “ஆமா நீங்க எப்படி அங்க வந்தீங்க??” என்றாள்.
“அதான் பார்த்தி சொன்னானே வது…”
“அது என்னை எப்படி அங்க இருந்து கூட்டிட்டு வந்தீங்கன்னு தான் சொன்னாரு. மத்தப்படி நான் இவங்ககிட்ட தான் இருப்பேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்??”
ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் தான் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது. இசை ராமிடம் இருந்தாள். ஆம் ராமும் சுகுணாவும் கூட வந்துவிட்டிருந்தனர் அவர்களை தேடி.
அதுவரை குழப்பத்திலும் அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டத்திலும் இருந்த வதனா பிரியனிடத்தில் வந்து சேர்ந்ததும் தான் நிம்மதி கொண்டாள்.
அதன் பின்னே தான் அவளின் மனம் ஒவ்வொன்றையும் யோசித்து அவனிடம் கேள்வி கேட்க வைத்தது.
“என்னாச்சு நான் கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்க??” என்று அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து கேட்டாள்.
படபடவென்று கதவை தட்டும் சத்தம் கேட்டது அந்நேரம். “யாரு கதவை தட்டுறது” என்று முணுமுணுத்தவாறே வதனா எழுந்திருக்க “வதனா நீ இரு, நான் பாக்குறேன்” என்று எழுந்து சென்றான்.
“என்னாச்சுங்க??”
“அவங்க தான் வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்…”
“அதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன், நாம சென்னைக்கு போய்டலாம்ன்னு…”
அதற்குள் பிரியன் கதவை திறந்திருக்க அங்கு விகேபியும் குலசேகரனும் நின்றிருந்தனர். அவர்களோடு அடியாட்கள் போன்று இன்னும் சிலரும் வந்திருந்தனர்.
கதவு திறந்ததும் விகேபி நேரே உள்ளே வந்துவிட்டார். குலசேகரனை ஜாடை காட்ட வெளியில் சென்ற அவர் வீல்சேரில் இருந்த சந்திரசேகரை தள்ளிக்கொண்டு வந்தார்.
சத்தம் கேட்டு ராம் விரைந்து வந்தான் அங்கு உடன் கபிலனும் பார்த்திபனும்.
“டேய் இந்தர் அறிவில்லை உனக்கு. பெத்த அப்பனை எதிர்த்து நிக்கறியே நீயெல்லாம் என்ன மனுசன்டா. நான் அப்போவே நினைச்சேன்டா நினைச்சேன் நீயும் இவங்களோட கூட்டு சேர்ந்திருப்பேன்னு. நீயெல்லாம் என் புள்ளையாடா”
“அப்போவே சொன்னாரு சாஸ்திரி நீ எனக்கு எதிரியா தான் வந்து நிப்பேன்னு. அதுக்காக தானே உன்னை தொலைச்சு தலை முழுகணும்ன்னு நினைச்சேன். இத்தனை வருஷமா உன்னை பார்க்காம தானே இருந்தேன்”
“அவரு சொன்ன மாதிரியே நீ என் எதிரியா வந்து நிக்கற. உங்கம்மாகிட்ட நான் சொன்னதை எல்லாம் கேட்கலையா” என்று கன்னாபின்னாவென்று கத்தினார் அவர்.
வதனா அப்போது தான் அவரை பார்த்தாள். பார்த்ததுமே அவளுக்கு புரிந்தது சந்திரசேகர் சொன்ன அவரின் அப்பா இவர் தான் என்று. தாத்தா என்றுகூட அவள் மனம் நினைக்கவில்லை.
‘ஆமா இப்போ என்ன சொன்னாரு இந்தரா, யார் அது?? அவரு புள்ளைன்னு வேற சொன்னாரே??’ என்று யோசித்தவாறே விகேபி கத்திய திசையில் திரும்பி பார்க்க அங்கு கபிலனும் பார்த்திபனும் தான் நின்றிருந்தனர்.
‘யாரை இவரு இந்தர்ன்னு கூப்பிட்டு இருப்பாரு’ என்று யோசித்தவளுக்கு அது பார்த்திபனை என்பது மெல்லத்தான் புரிந்தது. இதனால் தான் அவன் தனக்கு உதவியிருப்பானோ என்று நினைத்தாள்.
விகேபி அடுத்து வதனாவைத் தான் பார்த்தார். “ஹேய் நீ என்ன இன்னும் இங்க நின்னுக்கிட்டு. கிளம்பு வீட்டுக்கு போவோம். உன் முகத்தைக் கூட எனக்கு பார்க்க பிடிக்கலை”
“அந்த சாஸ்திரி சொல்லலைன்னா உன்னை கூட்டிட்டு போகவே மாட்டேன். அப்படியே கொன்னு தான் புதைச்சிருப்பேன். நீயெல்லாம் என்ன ஜாதியோ என்ன குலமோ??” என்று அவர் சொல்லிக்கொண்டே போக “வாயை மூடுங்க இல்லை மரியாதை கெட்டிடும்” என்று கத்தினாள் வதனா.
“ஹேய் யாரை பார்த்து மரியாதை இல்லாம பேசறே நீ??” என்று அவளை அடிக்க கையை ஓங்கியவரின் கரத்தை அவள் தடுப்பதற்கு முன்னே பார்த்திபன் விரைந்து தடுத்திருந்தான்.
“அவங்க மட்டுமில்லை நானும் சொல்றேன். இதுக்கு மேல நீங்க என்ன பேசினாலும் நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன். உங்க மரியாதை கண்டிப்பா கெடுற மாதிரி செஞ்சிடுவேன்” என்று மிரட்டலாகவே சொன்னான் அவன்.
“டேய் நான் உன் அப்பன்டா”
“அப்படியா??”
“டேய்…” என்று பல்லைக்கடித்தார் அவர்.
“எனக்கும் சரி மேடம்க்கும் சரி அப்பாங்கற உறவு வெறும் பெயருக்கு மட்டுமே தான்”
“அதிலயும் நீ எனக்கு அப்பன்னு சொல்லிக்கவே நான் விரும்பலை” என்று மேலும் மேலும் பேசி அவரின் கோபத்தை தூண்டிக் கொண்டிருந்தான்.
“வீணா பிரச்சனை பண்ணாதீங்க. மரியாதையா இங்க இருந்து கிளம்பிடுங்க” என்று பிரியன் அவரின் முன்னே வந்து சொல்ல அதில் இன்னமும் அதிகமாய் கடுப்பாகிப் போனார் அவர்.
“டேய் யாருடா நீங்க எல்லாம். என்னையே எதிர்த்து பேசறீங்க, விகேபி யாருன்னு தெரியாம பேசறீங்கடா. உனக்கு தெரியாதா என்னைப்பத்தி சொல்லு உனக்கு என்னைப்பத்தி தெரியாதா??”
“தெரிஞ்சதுனால தான் சொல்றேன் மரியாதையா போய்டுங்க. இல்லைன்னா நீங்க என்ன பண்ணீங்கன்னு நானும் போலீஸ்ல சொல்ல வேண்டி வரும்” என்று பிரியன் சொல்ல விகேபி அதைக்கேட்டு சிரித்தார்.
“எங்கே போய் போலீஸ்ல சொல்லித்தான் பாரேன். அதை எல்லாம் நம்ப அவன் என்ன கேனையனா இல்லை என் மேல நீ கொடுக்கற கம்பிளைன்ட் வாங்குற துணிவு தான் அவனுக்கிருக்குமா”
“எங்க அவங்களை கம்பிளைன்ட் வாங்காம போகச்சொல்லுங்க பார்ப்போம். ஒரு பட்டன் தான் தட்டினா அத்தனை சோசியல் மீடியாவுலயும் நீங்க மட்டும் தான் டிரென்டிங்ல இருப்பீங்க, செய்யட்டுமா” என்றான் இப்போது பார்த்திபன்.
வதனா நடப்பதை இப்போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆக தன்னைத்தவிர அங்கிருக்கும் அனைவருக்கும் தன்னைப்பற்றி தெரிந்திருக்கிறது என்ற எண்ணம் எழ அவளுக்குள் கோபம் எக்கச்சக்கமாய் வந்தது.
அதற்கு தூபம் போல் அடுத்தடுத்த பேச்சுக்கள் அங்கே சென்றுக் கொண்டிருந்தது.
“சரி போலீஸ் ஸ்டேஷன்ல போய் என்னன்னு கம்பிளைன்ட் கொடுப்பே??”
“இவ யாருன்னு எங்ககிட்ட பர்த் சர்டிபிகேட்டே இருக்கு. யாரும் எதையும் நம்ப மாட்டாங்க” என்றார் அவர் ஆணவமாய்.
“இந்த வீடியோவே சொல்லும் நீங்க யாருன்னு. பார்க்கறீங்களா” என்று அவன் வீடியோவை பிளே செய்து காட்டினான்.
அது குலசேகரன் சென்னையில் பிரியனை மிரட்டிய வீடியோ பதிவு. அப்போது குலசேகரன் பதவியில் இருந்தார், அது கொடுத்த ஆணவத்தில் அவர் பேச்சும் அப்படியே வந்து விழுந்திருந்தது.
“என்ன பெரியவரே இது போதுமா, இல்லை இன்னும் வீடியோவா இறக்கணுமா சொல்லுங்க… எல்லாத்தையும் மொத்தமா பேஸ்புக்ல போட்டுவிடுறேன்” என்றான் பார்த்திபேந்திரன்.
“டேய்…” என்று கத்தினார்.
“இவரை மேடம்கிட்ட இருந்துச்சு பிரிச்சதுல இருந்து நீங்க பண்ண ஒவ்வொண்ணும் உங்க சீமந்த புத்திரர்கள் வாயாலேயே சொன்ன அத்தனையும் இருக்கு அதை ஞாபகத்துல வைச்சுக்கோங்க”
‘என்ன இவரை என்கிட்ட இருந்து பிரிச்சது இவங்க தானா…’ என்று அதிர்ச்சியாய் பார்த்தவளின் முகம் இப்போது கசங்கியது.
பிரியனை அவள் ஏறிட்டு பார்க்க அவன் பார்வை ஆமென்பதாய் தலையசைக்க அவள் கண்களில் சிவப்பேறியது.
பத்து வருடம் முழுதாய் பத்து வருடம் அவள் அவனை பிரிந்திருக்கிறாள். ஏன் சென்றான்?? எதற்கு சென்றான்?? எப்போது வருவான்?? என்று அவனைத் தேடி தேடி உழன்ற நாட்கள் கண் முன்னே வந்து போக ருத்திர அவதாரமெடுத்தாள் பிரியனின் பிரியமானவள்.

Advertisement