Advertisement

அத்தியாயம் – 31
“உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி.
“இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி இந்த பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு இப்போ??” என்றாள் வேண்டா வெறுப்பாய்.
“வதனா தப்பும்மா, அவங்க உங்க அம்மா மாதிரி…” என்று சட்டென்று உணர்ச்சி வசப்பட்டார் சந்திரசேகர்.
“யாரும் என் அம்மாவா ஆகமுடியாது” என்று முகத்திலடித்தது போலவே சொல்லிவிட்டாள் வதனா.
அப்பெண்மணிக்கு அந்த வார்த்தையை கேட்டதும் கண்கள் கலங்கிவிட “நீங்க பேசிட்டு கூப்பிடுங்க நான் அப்புறம் வர்றேன்…” என்று சொல்லி சந்திரசேகரை உள்ளே தள்ளிக்கொண்டு வந்து விட்டுச்சென்றார்.
“என்னம்மா இதெல்லாம் இப்படி தான் அடுத்தவங்க மனசை காயப்படுத்தறதா” என்று கண்டிப்பான பார்வை பார்த்தார் அவர்.
வதனா அவர் பேச்சை கேளாதது போலவே நின்றாள். அவரே தொடர்ந்தார்.
“உங்கம்மா இப்படி கிடையாது. அவளுக்கு எல்லாரையும் மதிக்க தெரியும். யாரையும் அவ காயப்படுத்தினது இல்லை. நான் யாருன்னு தெரிஞ்ச்சு தான் அவ என்னை ஏத்துக்கிட்டா” என்றார் அவர் விளக்கம் போல்.
“ரொம்ப சரியா சொன்னீங்க. எங்கம்மா நீங்க சொன்ன மாதிரி தான் ஒத்துக்கறேன். ஆனா நான் அப்படி இல்லை. அவங்களுக்கு யாரையும் காயப்படுத்த தெரியாது தான்”
“அதனால தானே நீங்க அவங்களை காயப்படுத்துனீங்க” என்றுவிட்டு அவரை ஆழமாய் பார்த்தாள் அவள்.
‘இவள் என்ன சொல்கிறாள்’ என்பது போல் அவர் நன்றாய் ஏறிட்டு அவளை பார்த்தார்.
அதற்குள் இசை இவளருகே வந்தவள் “வதும்மா இவங்க யாரு??” என்றாள்.
“நான் உங்க தா…” என்று சந்திரசேகர் முடிப்பதற்குள் “தாத்தா மாதிரி இசை அவ்வளோ தான்…” என்று முடித்தாள் வதனா.
“ஓ சரி வதும்மா”
“இசை”
“சொல்லுங்க வதும்மா”
“நீ கொஞ்ச நேரம் உள்ள ரூம்ல இருடா, அம்மா இவங்ககிட்ட பேசிட்டு வர்றேன்…”
“சரி வதும்மா” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
“நீங்க என் குழந்தைக்கு எப்பவும் தாத்தா ஆகமுடியாது. இனி அந்த உறவை சொல்லாதீங்க அவகிட்ட” என்றாள் காட்டமாய்.
“நான் தான் உங்கப்பாங்கறது மாறிடாது…” என்றார் அவரும் பதிலுக்கு. குரலும் கொஞ்சம் உயர்ந்திருந்ததுவோ!!
“நான் பிறக்க காரணமானவர்ன்னு வேணா சொல்லுங்க” என்றாள் அவள் இன்னும் இறுக்கமாய்.
“உனக்கு என் மேல என்ன வெறுப்பும்மா. எதுக்கு இப்படி பண்றே??” என்றார் நேரடியாகவே.
“எனக்கு அப்பாவா நீங்க என்ன செஞ்சிருக்கீங்க??” என்றாள் அவளும் முகத்திற்கு நேராகவே.
“என்னோட நிலைமை உங்கம்மாக்கு தெரியும். நான் அப்போ மினிஸ்டரா வேற இருந்தேன்”
“சரி அதுக்காக…”
“உங்கம்மா தெரிஞ்சு தான் என்னை…” என்று அவர் சொல்ல “எப்போ தெரியும் எங்கம்மாக்கு நீங்க மினிஸ்டர் ஆனதுக்கு அப்புறம் தானே எல்லாம் சொன்னீங்க…”
“எனக்கு விபரம் புரியாத வயசில்லை. நீங்க யாருன்னு நான் பார்த்ததில்லையே தவிர எங்கம்மா கடைசியா எனக்கு புரியும்ன்னு நினைச்சு சொன்னாங்களோ புரியாதுன்னு நினைச்சு சொன்னாங்களோ… எல்லாம் சொன்னாங்க”
“இப்படி என்னை அம்போன்னு யாரும் இல்லாம விட்டுப் போறேன்னு வருத்தப்பட்டு துடிச்சு போய் தான் இறந்தாங்க…”
“எனக்கு அப்பா பேரும் அவர் தொழிலும் தான் தெரியும். இதுவரை அதை நான் யார்கிட்டயும் சொன்னதில்லை. என் கணவருக்கு கூட தெரியாது”
“சின்ன வயசுல மினிஸ்டர்ன்னா என்னன்னு தெரியாது. தெரிஞ்சப்போ அப்பா யாருன்னு நானும் தெரிஞ்சுக்க விரும்பலை. சோ தயவுசெஞ்சு இனிமே அப்பா சொப்பான்னு சொல்லி என்னை வெறி ஏத்தாதீங்க”
“உங்க கூடப்பிறந்தவர் தன்மையா என்னை கூப்பிட்டு இருந்திருந்தா கூட நான் வந்திருப்பனோ!! என்னவோ!! அவர் அதிகாரத்தை காட்டி என்னை கூட்டிட்டு வந்து இங்க விட்டு போயிருக்கார்”
“கடைசியா ஒண்ணு சொல்றேன், எனக்கு நல்லது பண்ணணும்ன்னு நீங்க நினைச்சா, என்னை என் வழியில போக விடுங்க…”
“இல்லன்னா என் புருஷன் வந்து என்னை கூட்டிட்டு போவாரு. அதுவரைக்கும் நான் பல்லைக்கடிச்சுட்டு இங்க இருப்பேன்…” என்று அது தான் அவள் முடிவென்பதை திட்டவட்டமாய் அவரிடம் தெரிவித்தாள்.
“இங்க நீ வந்தது என்னோட விருப்பம் மட்டுமில்லை. இந்த குடும்பத்துக்கு ஒரே வாரிசு நீ தான், உன்னைத்தவிர வேற வாரிசுகள் யாரும் இங்கில்லை. எங்கப்பா உன்னை இங்க இருந்து அனுப்ப மாட்டார்”
“அவரை மீறி எங்க யாராலையும் எதுவும் செய்ய முடியாதும்மா” என்றார் சந்திரசேகர்.
அவரின் பேச்சைக்கேட்டு இன்னமும் அதிகமாய் முகம் சுளித்திருந்தாள் வதனா.
“ஆக உங்களுக்கு வாரிசு இல்லைன்னு என்னை வரவெச்சு இருக்கீங்க அப்படித்தானே. இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லை. அப்புறம் எந்த உரிமையில என்னை பொண்ணுன்னு சொந்தம் கொண்டாடுறீங்க”
“நீ அளவுக்கு அதிகமா பேசறே??” என்றார் அவரும் சற்றேறிய குரலில். விகேபியின் வாரிசாயிற்றே அப்படி தான் பேசுவார்கள் போலும்.
வதனாவும் சளைத்தவள் அல்லவே “பேசத்தான் செய்வேன்” என்றாள் ஆங்காரமாய்.
“உன் புருஷன் வருவான்னு கனவுல கூட நினைக்காதே…”
“நான் ஏன் கனவு காணனும் நிஜத்துலவே அது நடக்கும்”
“பத்து வருஷமா உன்னைவிட்டு போனவங்கறதை மறந்திடாதே”
“நான் பிறக்கறதுக்கு காரணமா இருந்ததோட சரின்னு போனவரே இத்தனை வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்காரு. நான் அவரோட கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தாலும் எனக்கு அவரை தெரியும்”
அவரிடத்தில் ஒரு அலட்சிய சிரிப்பு பின் பேசியவர் “நீ அவனை பிரிஞ்சி இருந்த நாள்ல உனக்கு அந்த நம்பிக்கை ஏன் போச்சு”
“நம்பிக்கை போச்சுன்னு உங்களுக்கு தெரியுமா. அவர் கூட இல்லைங்கற ஆற்றாமை எனக்குள்ள இருந்துச்சே தவிர அவர் வந்திடுவாருங்கற நம்பிக்கை என் மனசுல இருந்திட்டே தான் இருந்துச்சு”
“அப்போ உனக்கு அவன் மேல கோபமே இல்லைன்னு சொல்ல வர்றியா”
“கோபமிருக்கு இல்லைங்கறது எங்களுக்குள் இவ்வளவு விளக்கம் நான் உங்களுக்கு சொல்லணும்ன்னு எனக்கு அவசியமில்லை” என்று முடித்தாள்.
“உன் எண்ணம் வெறும் பகல் கனவு, இனி இங்க தான் உன் வாழ்க்கை, வாழ பழகிக்கோ”
“ரொம்ப நன்றி கிளம்புறீங்களா இப்போ… எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும், அடுத்து யாரு வந்து அடுத்த அட்வைஸ் மழை பொழிவாங்களோ, அவங்ககிட்ட பேச எனக்கு தெம்பு வேணும் இல்லையா, கிளம்புங்க…” 
சந்திரசேகர் ஆத்திரத்தில் தன் மனைவியை சத்தமாக அழைத்தார். மகளை எதுவும் செய்ய முடியாத இயலாமை அவரை கோபப்படுத்தி இருந்தது.
எதிர்த்து பேசும் அவளிடத்தில் அவரால் நின்று பேசவும் முடியவில்லை. உள்ளே மகள் என்ற பாசம் எங்கோ ஒளிந்திருந்தது, அவளின் பேச்சில் அது ஆட்டம் கண்டு  அவர் விகேபியின் மகன் என்பதை நிரூபித்தார்.
வதனாவை பொறுத்தவரை அவளைப் பெற்றவர் இத்தனை வருடம் கழித்து தன்னை தேடி வந்திருக்கிறார் என்று தான் எண்ணியிருந்தாள். 
வாரிசில்லாத அந்த குடும்பம் தன்னைத் தான் அவர்களின் குடும்ப சொத்து என்று எண்ணி அழைத்திருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு பிரியனை அவள் பிரியக் காரணம் அவர்கள் தான் என்று தெரியாது. அது தெரிந்தால் அவள் அனைவரையும் ஒரு வழி செய்து விடுவாள் என்பதை அவர்கள் அறியவில்லை.
சென்னையில்
—————————
“பார்த்தி என்ன பண்ணப்போறோம்??” என்று மறுநாள் காலை அவனை நேரிலேயே தேடிக் கொண்டு வந்து கேட்ட பிரியனை பார்க்க அவனுக்கும் பாவமாகவே இருந்தது.
இரவெல்லாம் தூங்காமல் இருந்திருப்பார் என்பதை விழிகளின் சிவப்பு பறைசாற்றியது. வேதனையின் சாயல் அப்பட்டமாய் அவன் முகத்தினில் தெரிவதும் கண்டான்.
“சார் கொஞ்சம் பொறுங்க அவங்க எங்க இருப்பாங்கன்னு தான் நான் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்”
“ஏன்?? ஏன் பார்த்தி?? கண்டுப்பிடிக்க முடியாதா, நான் தான் சொன்னேன்ல அவங்க வீட்டுக்கு தான் போகணும்ன்னு. இடம் கூட மும்பை தானே??”
“சார் நிச்சயம் அவங்க அங்க இல்லை”
“உங்கம்மா அவங்க நமக்கு உதவ மாட்டாங்களா…” என்றான் அவன் நிராசையாக.
“கண்டிப்பா செய்வாங்க, ஆனா அவங்களுக்கு லைன் போக மாட்டேங்குது. நாம போற வழியை அடைச்சிட்டதா நினைக்கறாங்க. அதை உடைச்சு நாம அவங்களை கண்டுப்பிடிக்கணும் சார்”
அப்போது பிரியனின் கைபேசி அழைத்தது. “சொல்லுங்க கபிலன்… இல்லை நான் இப்போ ஒருத்தரை பார்க்க வந்திருக்கேன். அசோக்நகர்ல இருக்கேன், ஓ நீங்களும் பக்கத்துல தான் இருக்கீங்களா…”
“சரி வந்திடறேன், நீங்க சொன்ன இடத்துக்கு வர்றேன்…” என்றுவிட்டு போனை வைத்தான்.
“பார்த்திபன் நான் அவசரமா கிளம்பறேன். நீயும் என்னோட வர்றியா??”
“கண்டிப்பா வர்றேன் சார், நீங்க கபிலன் சாரை தானே பார்க்க போறீங்க…”
“ஆமா பார்த்தி, உனக்கு கபிலனை தெரியுமா…”
“சார் மறந்திட்டீங்களா நானு கபிலன் சார் மேடம் எல்லாம் கவர்னர் மாளிகையில தானே இருந்தோம்”
“சாரி பார்த்தி எனக்கு மைன்ட் வேலையே செய்யலை. வதுவும் இசையும் பார்க்கற வரை நான் நானாவே இருக்க மாட்டேன் போல”
“சார் இப்போ தான் நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அப்போ தான் நம்மால தெளிவா யோசிக்க முடியும். நீங்க நைட் எல்லாம் தூங்கலைன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு போனதும் கொஞ்சம் தூங்குங்க”
“அப்போ தான் உங்க மைன்ட் ப்ரஷாகும். இன்னமும் வேகமா தேட அது உதவும்…” என்றான்.
வயதில் சிறியவன் என்றாலும் அவன் பேச்சு தெளிவாக இருந்ததை மெச்சிக்கொண்டான் பிரியன்.
“சரி கிளம்புவோம் பார்த்தி…” என்றுவிட்டு இருவரும் நேரே கிளம்பி சரவணபவன் உணவகத்திற்கு வந்து சேர்ந்தனர்.
கபிலன் அவர்களை அங்கு சந்திப்பதாக சொல்லியிருந்தான்.
“கபிலன் இங்க இருக்கோம்…” என்று பிரியன் குரல் கொடுக்க அவர்களை நோக்கி வந்தான் அவன்.

Advertisement