Advertisement

இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான்.
அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம் என்று பிரியன் நினைத்திருக்க அவர்கள் அவன் கண்ணில் மண்ணைத் தூவியிருந்தனர்.
சரண் காணாமல் போய் முழுதாய் பதினாலு மணி நேரம் ஆகியிருந்தது. பிரியனுக்கு குழந்தை இருக்குமிடம் தெரிந்தாலும் அவனால் உடனே எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை.
எதிரிகளின் அமைதி அவனை யோசிக்க வைத்தது. ராமிடம் சொல்லி போலீஸில் ஒரு கம்பிளைன்ட் மட்டும் கொடுக்கச் செய்திருந்தான்.
வதனாவும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தானிருந்தாள். அவளுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க மூர்த்தி”
“எப்போ?? எங்கே?? போலீஸ்க்கு தகவல் கொடுத்தாச்சா?? ஹ்ம்ம் வர்றேன், நான் உடனே கிளம்பி வர்றேன்…” என்றுவிட்டு போனை வைத்தவள் பிரியனை பார்த்தாள்.
“என்ன வது?? எதுவும் பிரச்சனையா??”
“ஹ்ம்ம் ஆமாங்க… இங்க காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கற ஒரு சிவன் கோவில்ல உள்ள சிலையை கடத்த பார்த்து இருக்காங்க. ஊர் பொது மக்களே அவங்களை பிடிச்சு வைச்சு இருக்காங்களாம்”
“நான் உடனே ஸ்பாட்க்கு போயாகணும். கலெக்டர், போலீஸ் எல்லாரும் வரச்சொல்லி தகவல் கொடுத்திருக்கேன்”
“நீ கண்டிப்பா போகணுமா??”
“என்ன இப்படி கேட்கறீங்க, என் வேலை கோவில் பராமரிப்பு மட்டுமில்லை, கோவில் பாதுகாப்பும் சேர்த்து தான்…”
“அதுக்குன்னு தனியா ஆளுங்க இருப்பாங்க தானே… சிலைக்கடத்தல் பிரிவு போலீஸ் எல்லாம் என்ன செய்யறாங்க??”
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை??” என்றாள் அவனை பார்த்து.
அவன் என்னவென்று சொல்வான். தன் மனகலக்கத்தை தனக்குள் புதைத்துக் கொண்டவன், “ஒண்ணுமில்லை நீ போயிட்டு வா… எனக்கு போன் பண்ணு அப்பப்போ… வேற எதுவும் போன் வந்தாலும் பிரச்சனையா இருந்தாலும் சொல்லு…”
“என்ன பிரச்சனை?? என்ன போன்??”
“அதில்லை சரண் பத்தி…” என்றுவிட்டு நிறுத்திக்கொண்டான். 
“நீ போயிட்டு பத்திரமா வந்து சேரும்மா…”
“நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கும் புரியுது. சரண் வேற காணோம், இந்த நேரத்துல நான் வேலையா வெளிய போறனேன்னு தானே. காஞ்சிபுரம் தானே, போயிட்டு சீக்கிரமே ரிடர்ன் வந்திடுவேன்…”
“சரண் பத்தி என்ன தகவல் வந்தாலும் சொல்லுங்க…” என்று சொல்லி சென்றவள் தான் திரும்பி வீட்டிற்கு வரவேயில்லை.
அவள் கிளம்பி சென்றுக் கொண்டிருக்க வழியில் அவளை இடைமறித்து வந்து நின்றது அந்த கார்.
அதில் இருந்து இறங்கியவர் சென்ட்ரல் மினிஸ்டர் ராஜசேகர். அவரை பார்த்ததும் கண்ணை சுருக்கியவள் ‘இவர் எதுக்கு நம்மளை பார்க்க வர்றாரு?? இந்த கேஸ்ல இவர் எதுவும் பிரஷர் கொடுப்பாரோ’ என்று எண்ணியவாறே முகம் மாறாமல் வண்டியில் இருந்து இறங்கினாள் அவள்.
வந்தவர் நேரே விஷயத்திற்கு வந்துவிட்டார். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா??”
“சொல்லுங்க சார்…” என்றவளை அமைதியாய் பார்த்தார் அவர். அவர்களின் அன்னையின் ஜாடை கொஞ்சம் அவளிடத்தில் தெரிந்தது அவருக்கு.
சிறிது நேரம் காத்திருந்தவள் அவர் பேசாமலே இருக்கவும் “சார் என்ன விஷயம்ன்னு சொல்லுங்க சார். நான் இப்போ அவசரமா காஞ்சிபுரம் போய்க்கிட்டு இருக்கேன்…”
“அதுக்கெல்லாம் அவசியமில்லைம்மா, அதெல்லாம் இனி நீ பார்க்க வேண்டி இருக்காது. அப்புறம் அந்த தகவலும் உண்மையில்லை…”
அவள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் பார்த்தவள் அவரின் பேச்சின் முடிவில் அவளுடன் வந்திருந்த மூர்த்தியை பார்க்க அவர் தலைகுனிவதிலேயே ஏதோ புரிந்தது.
எதற்கு என்னை இவர் பார்க்க வந்திருக்கிறார். என்னைச்சுற்றி என்ன நடக்கிறது?? என்று எண்ணும் போதே அவளுக்குள் லேசாய் பயம் துளிர்விடத்தான் செய்தது.
அதை பிறர் அறியாமல் மறைத்தவள் ‘என்னவென்ற’ பார்வை கொடுத்தாள் ராஜசேகரிடம்.
“நாம வண்டியில போய் பேசுவோம்…”
“தேவையில்லை இங்கவே சொல்லுங்க…”
“கவலைப்படாதம்மா என்னால உனக்கு எதுவும் பிரச்சனை வராது. உன்னோட பிரண்டு தானே ராம்… ஹ்ம்ம் அவனுக்கு ஒரு பையன் கூட உண்டுல, பேரு கூட”
“சரண்… சரண்க்கு என்னாச்சு??” என்றாள் பதட்டமாக.
“கார்ல போய் உட்கார்ந்து பேசுவோமா??”
“ஹ்ம்ம்…” என்றவள் அவர் வந்திருந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவர் தனியாக வந்திருக்கவில்லை அவரின் பாதுகாவலர்கள் அவரை சுற்றித்தான் இருந்தனர்.
“சொல்லுங்க சரண் எங்கே??” என்று அவசர அவசரமாய் கேட்டாள்.
“நம்மகிட்ட தான் இருக்கான்…”
“அவனை எதுக்கு நீங்க கடத்துனீங்க??” என்றாள் கோபமாய்.
“உனக்காக தான்”
“என்ன உளர்றீங்க??”
“உண்மை தான். நீயும் இசைப்பிரியாவும் நம்ம வீட்டுக்கு வரணும்…”
“யார் நீங்க?? வந்ததுல இருந்து தலையும் புரியாம வாலும் புரியாம பேசிட்டு இருக்கீங்க…” என்று அவள் சத்தமாய் பேசவும் சைகை காட்டி அவளை அமைதியாய் பேசுமாறு சொன்னார் ராஜசேகர்.
அவள் முடிக்கவும் அவள் யார் என்பதை அவளிடம் சொல்ல வதனாவிற்கு சத்தியமாய் புரியவில்லை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று.
அவளின் தந்தை பெயர் சந்திரசேகர் என்பதை அவளறிவாள். அதற்கு மேல் அவளுக்கு எந்த விவரமும் தெரியாது. அவள் தலையைப்பிடித்து அமர்ந்திருப்பதை பார்த்த ராஜசேகர் போனில் யாருக்கோ அழைத்திருந்தார். பின் அவ்வழைப்பை அவளிடம் கொடுத்தார்.
“நீ ஒரு ஆசிரமத்துல வளர்ந்தியே ஞாபகமிருக்கா?? அந்த அய்யா தான் பேசறாங்க பேசு…” என்று சொல்ல வாங்கி பேசியவளிடம் அவரும் விபரத்தை சொல்ல வதனாவின் முகம் இறுகிக்கொண்டே சென்றது.
ஒரு புறம் தனக்கும் ஓர் உறவிருக்கிறது என்று உள்ளுக்குள் ஒரு எண்ணம் லேசாய் தோன்றினாலும், அவர்கள் தெரிந்தே தன்னை ஆஸ்ரமத்தில் விட்டு வைத்திருந்தது அவளுக்கு பெரும் வேதனையை கொடுத்தது.
அவளின் அய்யாவின் பேச்சு அப்படித்தானிருந்தது. அவளுக்கு ஸ்பான்சர் செய்தது விகேபியின் குழுமம் என்பதை அவர் தெளிவாய் அவளிடம் சொல்லியிருந்தது அவளை இன்னும் காயப்படுத்தியது.
அவள் முகத்தில் முற்றிலும் கோபத்தின் சாயலே இப்போது. அருகில் அமர்ந்திருந்தவரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்.
“என்ன வேணும் இப்போ உங்களுக்கு??”
“நீ வீட்டுக்கு வரணும்”
“முடியாதுன்னு சொன்னா??”
“சரண் அவங்க வீட்டுக்கு போக வேண்டாமா…” என்று அவர் சொல்லவும் நிமிர்ந்து வெறுப்பாய் அவர் முகத்தை பார்த்தாள்.
“சரி போகலாம்” என்று சட்டென்று முடிவெடுத்தாள்.
“சரண்…”
“நீ வீட்டுக்கு வந்ததும் அவனும் அவங்க அப்பா அம்மாகிட்ட போய்டுவான். அப்புறம் நீ மட்டுமில்லை உன்னோட பொண்ணு அதான் எங்க பேத்தி இசைப்பிரியாவும் சேர்ந்து தான் வீட்டுக்கு வரணும்”
ஆக இவர்களுக்கு என்னைப்பற்றி நன்றாய் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் தெரியாதது போல் இத்தனை வருஷமாக இருந்திருக்கிறார்கள் என்று நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது.
எதுவும் செய்ய இயலா நிலைமையில் தானிருப்பது புரிய கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
“இப்போ வர்றேன்னு சொல்லிட்டு சரண் அவங்க வீட்டுக்கு போனதும் நீயும் கிளம்பிட கூடாது. சோ…” என்றவர் அவளின் முன்னே சில காகிதங்களை நீட்டினார்.
“நீ மனசு ஒப்பித்தான் எங்களோட வர்றேன்னு இதுல ஒரு கையெழுத்து போடணும். படிச்சுப் பார்த்திட்டு போடலாம்…” என்றார் அவர்.
அவள் பற்களை நறநறவென்று கடித்தாள். அதை பிடுங்காத குறையாக வாங்கியவள் வேகமாய் அதில் பார்வையை ஓட்டினாள். பின் அவரை நோக்கி கையை நீட்ட அவர் பேனாவை கொடுக்கவும் அதில் ஒப்பமிட்டாள்.
சட்டென்று ஏதோ தோன்ற “என்னோட ஹஸ்பன்ட்”
“அவன் உனக்கு வேணாம்…” என்று முகத்தை ஒரு மாதிரியாய் வைத்துக்கொண்டு சொன்னார் ராஜசேகர்.
“அதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. அப்புறம் இனி நீ என்னை சித்தப்பான்னு தான் கூப்பிடணும்” என்றார் அதிகாரமாய்.
“பார்க்கலாம்…” என்றாள் மற்றவள் அலட்சியமாய்.
“பார்க்கத்தானே போறேன்…”
“நான் வீட்டுக்கு பேசணும்” என்று அவள் கைபேசியை எடுக்க அதை தட்டிப்பறித்து அதிலிருந்த சிம் கார்டை வெளியில் எடுத்து உடைத்து தூர எறிந்தார் அவர்.
“எதுக்கு இப்படி செய்யறீங்க?? நான் தான் உங்களோட வர்றேன்னு சொல்லிட்டேன்ல”
“ஆமா சொல்லிட்ட, அப்புறம் நீ யாருக்கு பேசணும். இனி உன்னோட வீட்டு ஆளுங்கன்ன அது நாங்க தான்…” என்றவர் வெளியில் யாருக்கோ கண் ஜாடை காட்ட அவர் வந்து வண்டியை எடுக்க வண்டி அந்த சாலையில் சீறிப்பாய்ந்தது.
“என் பொண்ணு இங்க இல்லை…”
“தெரியும் இந்நேரம் அவளோட ஸ்கூல்ல போய் அவளை கூட்டிட்டு வந்திருப்பாங்க நம்ம ஆளுங்க. நாம ஏர்போர்ட்ல அவளை பிக்கப் பண்ணிக்கலாம்…” என்று முடித்தார் அவர்.
அவர்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று அங்கிருந்த ஏர்போர்டில் இருந்த இசையை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றனர்.
இசை பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை என்று ராம் போன் செய்த போது தான் விஷயமே புலப்பட்டது பிரியனுக்கு. வதனாவிற்கும் அவன் அழைத்து பார்த்திருக்க சட்டென்று ஊகித்தான் என்ன நடந்திருக்கும் என்பதை.
இனி அடுத்து என்னவென்று வதனா யோசித்து அமர்ந்திருக்க இசையின் குரல் அவளை அழைத்தது.
“சொல்லு இசை…”
“வதும்மா யாரோ கதவை தட்டுறாங்க…”
“நீ போ நான் பார்த்துக்கறேன்” என்றவள் கதவை நோக்கிச் சென்றாள்.
அங்கு வீல் சேரில் ஒருவர் அமர்ந்திருக்க அருகில் ஒரு பெண்மணி நின்றிருந்தார். இருவருமே அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் முகத்துக்கு நேரே கையசைத்து “என்ன வேணும் யார் நீங்க??” என்றாள்.
வீல்சேரில் இருந்த சந்திரசேகருக்கு தான் பெற்ற மகளே தன்னை யார் என்று அறியாமல் கேள்வி கேட்டது உள்ளத்தை அறுக்க கண்ணில் லேசாய் நீரும் நிரம்பிவிட்டது.
“உங்கப்பாம்மா…” என்றிருந்தார் அருகில் இருந்த அப்பெண்மணி.
வதனாவின் கண்கள் இடுங்க அவள் இருவரையும் கூர்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இறுதியை நெருங்கியது
சதுரங்க ஆட்டமது
ஈசனவன் போடும் திட்டமது
பகைவனுக்கு கட்டமது
மீளமுடியா வட்டமது…
ஆட்டம் இனி
அவன் கையில்
ஆடிடுவான்
வென்றிடுவான்
தன்னவளை
மீட்டிடுவான்…

Advertisement