Advertisement

அத்தியாயம் – 30
நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது.
யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன்.
“என்ன பார்த்தி அமைதியா இருக்கே??”
“என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க… நீங்க ரொம்பவும் வேதனை அனுபவிச்சு இருக்கீங்கன்னு நல்லாவே புரியுது”
“இதை கேட்கும் போதே எனக்கு கொலைவெறி ஆகுது. எங்க ஆளுங்களை அப்படியே கொல்லணும்ன்னு வருது சார்”
“அவங்களை கொன்னு நாம என்ன செய்ய, எனக்கு வதுவும் இசையும் வேணும், எப்பவும் அவங்களை நான் பிரியக்கூடாது. இனி ஒரு பிரிவுன்னு அது நான் செத்தா தான் வரணும்…” என்று சொல்லும் போது அவன் கண்கள் ஈரத்தில் பளபளத்தது.
எதிரில் இருந்து பார்ப்பவனுக்கு மற்றவனின் துயரம் பார்க்க சகிக்க முடியாததாய் இருந்தது. அவர்களுக்காக தன் வீட்டினரை எந்த அளவிற்கும் எதிர்க்கவும் அவன் மனம் உறுதி கொண்டது.
“சாரி பார்த்தி, ரொம்ப எமொஷனலாகிட்டேன். எனக்கு இப்போ நீ ஒரு உண்மை சொல்லணும் சொல்வியா??”
“நான் யாருன்னு உங்களுக்கு தெரியணும். ஐ மீன் அவங்களுக்கும் எனக்கும் என்ன உறவுன்னு சரி தானே சார்??”
“ஹ்ம்ம்… நீ நிச்சயம் அவங்க காசுகொடுத்து ஏற்பாடு செஞ்ச ஆளு இல்லைன்னு எனக்கு தெரியும். உன்னைப்பத்தி விசாரிச்ச வரைக்கும் நீ அவங்க ஆளுங்கற வரை தான் என்னால கண்டுப்பிடிக்க முடிஞ்சது…”
“ஆனா எந்த வகையில உனக்கும் அவங்களுக்கும் சம்மந்தம்ன்னு எனக்கு தெரியலை…”
“சரி நீங்க எனக்கு இதை சொல்லுங்க முதல்ல, நான் உங்களுக்கு எப்படி ஹெல்ப் பண்ணுவேன்னு நீங்க நினைச்சீங்க??”
“இதுவரைக்கும் நீ எனக்கு அது மட்டும் தானே பார்த்தி செஞ்சிருக்க… அவங்க கூட இருக்க ஒருத்தர் எனக்கு உதவி செய்யறாங்கன்னா அது அவங்களுக்கு வேண்டியும் வேண்டாதா ஒரு ஆளா இருக்கனும்ன்னு தோணுச்சு…”
“நல்லா தான் யோசிச்சு இருக்கீங்க. உங்க ஊகம் கிட்டத்தட்ட சரி தான் சார். அவங்களுக்கு வேண்டியும் வேண்டாத ஒரு ஆளு தான் நானு…”
பிரியன் மற்றவனை இன்னும் ஆழமாய் பார்த்தான். அவன் சொல்வதின் அர்த்தம் விளங்க பார்த்தானா அன்றி விளங்கச் சொல் என்பது போல் பார்த்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்.
“அந்த பெரியவர் என்னோட அப்பா” என்றுவிட்டு நிறுத்த சத்தியமாய் அது பிரியனுக்கு அதிர்ச்சியான செய்தியே.
பார்த்திபன் அவர்களுக்கு உறவினனாக இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருந்தான் தான். வதனாவின் அப்பாவிற்கோ அவரின் தம்பிகளுக்கோ பிறந்த பிள்ளையாய் இருப்பானோ என்று கூட எண்ணியிருக்கிறான்.
ஆனால் வதனாவின் தந்தைக்கு அவன் தம்பியாய் இருப்பான் என்று யோசித்திருக்கவில்லை அவன். 
“நம்ப முடியலைல சார், ஆனா அதான் நிஜம் சார்… அந்த பெரிய மனுஷனுக்கு அவர் தான் எப்பவும் பெரிய மனுஷனா இருக்கணும்ன்னு நினைப்பு… அதுக்காக அவர் பண்ண அத்தனையுமே சின்னத்தனமானது…”
“அவர் எப்பவும் தான் தான் அதிகாரமா இருக்கணுங்கறதுக்காக என்ன வேணாலும் செய்வார். சிலர் தன்னையே நம்புவாங்க, சிலர் அடுத்தவங்க சொல்றதை கேட்டு நடப்பாங்க… இன்னும் சிலர் ஜாதகம் ஜோசியம் இப்படி…”
“அதுல அவர் கடைசி ரகம். ஜாதகம் என்ன சொல்லுதோ அது உண்மை சொல்லுதா பொய் சொல்லுதான்னு எல்லாம் யோசிக்கறதும் இல்லை நினைக்கறதும் இல்லை. அது சொல்றதை அப்படியே செய்வாரு…”
“அப்படி தான் எங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். பாவம் எங்கம்மாக்கு ரொம்ப வருஷமா கல்யாணமே ஆகாம இருந்திருக்கு. எங்க தாத்தாக்கும் பாட்டிக்கும் அவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆனா போதும் அப்படிங்கற நிலைமை”
“கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி வேற, பெரியவர் அதை தனக்கு சாதகமாக்கிகிட்டார். எங்கம்மா பெரியவருக்கு தூரத்து சொந்தம். வீட்டில இருக்கவங்க சந்தோசத்துக்காக அப்பா வயசுல உள்ளவரை அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…”
“நடந்ததுல ஒரு ஹைலைட் விஷயம் என்ன தெரியுமா, அந்த பெரியவர்கிட்ட அந்த ஜோசியர் சொன்ன ஒரு விஷயம் தான்…”
“அது என்னன்னா அவர் அவரைவிட வயசு குறைவா உள்ள ஒரு பொண்ணை இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கறது. ஆனா அவங்களுக்கு குழந்தை பிறக்கக்கூடாது இது தான் அந்த ஹைலைட்”
“எங்கம்மாவுக்கு இனிக்க இனிக்க கல்யாண வாழ்க்கை இல்லைன்னாலும் குறையாத செல்வமா தாய்மை வேணும்ன்னு நினைச்சாங்க…”
“பெரியவருக்கு தெரியாம என்னை சுமந்தாங்க… எப்பாடுபட்டாவது என்னை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தே ஆகணும்ன்னு அவங்க படாதபாடுபட்டு போனாங்க…”
“அவங்களுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ரெண்டு மூணு வருஷம் கழிச்சு தான் அவங்க என்னை சுமந்தாங்க… மாசம் ஏற ஏற அவங்க வயிறு காட்டிக் கொடுத்திச்சு”
“பெரியவருக்கும் உண்மை தெரிய வந்துச்சு… எங்கம்மா கெஞ்சின கெஞ்சல்ல பாவம் பார்த்து அந்த மனுஷன் திரும்பவும் அந்த ஜோசியரை தேடி ஓடியிருக்கார்…”
“இப்பவும் கதையில ஒரு ட்விஸ்ட்டு, அது என்னன்னா உங்களுக்கு அடுத்து பொண்ணு பிறந்தா குடும்பம் ஓஹோன்னு இருக்கும். பையனா இருந்தா அவன் தான் உங்களுக்கு முதல் எதிரியா இருப்பான்னு சொல்லியிருக்காங்க…”
“செம ட்விஸ்ட்ல சார், ஆண்டவன் எல்லாருக்கும் பார்த்து பார்த்து தான் செய்யறான். ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் உண்மையோ பொய்யோ எனக்கு தெரியலை, ஆனா அந்த டர்னிங் பாயிண்டா அவர் சொன்ன விஷயம் எனக்கு பிடிச்சுது”
“நான் பிறந்ததும் என் முகத்தை கூட பார்க்கலையாம் அந்த பெரிய மனுஷன். திரும்பவும் ஒரு ஓட்டம் தான் வேற எங்கே அதே இடம் அதே ஆளு… இந்த முறை அவர் சொன்னது நானும் பெரியவரும் நேருக்கு நேராய் பார்க்கக்கூடாதுன்னு”
“எங்கம்மாக்கு நான் பிறந்ததே பெரிய வரம்ன்னு இருந்திட்டாங்க. அந்த பெரிய மனுஷன் சொன்னார்ன்னு என்னை அவங்க அண்ணன் வீட்டில கொடுத்து வளர்க்க சொல்லிட்டாங்க…”
“குழந்தை இல்லாத எங்க மாமாக்கும் அத்தைக்கும் நான் தான் உயிர். அவங்களை நான் மாமா அத்தைன்னு கூப்பிட்டதில்லை அம்மா அப்பான்னு தான் கூப்பிட்டேன்”
“எங்க அப்பா அதான் எங்க மாமா போலீஸ்ல வேலையில தான் இருந்தாங்க. அவங்க இறந்ததுனால தான் எனக்கு அந்த வேலை கிடைச்சது, நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது”
“எங்க அப்பா என்னை அவங்க மகனாவே சுவீகாரம் எடுத்துகிட்டாங்க… அதனால தான் வேலையில இருக்கும் போதே எங்கப்பா இறந்ததால எனக்கும் போலீஸ்ல வேலை எனக்கு கிடைச்சது”
“அது எங்கம்மாவோட ஆசையும் கூட, அதாவது எங்க அத்தையோட ஆசை”
“ஆனா பார்த்தி…” என்றுவிட்டு சட்டென்று அமைதியானான் பிரியன்.
“சொல்லுங்க சார்”
“இல்லை நீ இந்த வேலையை ஏதோ பிடிக்காம பண்ணுறதா சொன்னியே”
“உண்மை தான் சார். வேலைக்கு சேர்ந்த புதுசுல பிடிச்சு தான் பண்ணேன், எப்போ அந்த பெரியவர் தலையீடு இதுல வந்திச்சோ அப்போ இருந்து அந்த வேலை எனக்கு பிடிக்கலை”
“இவ்வளோ தான் சார் என்னோட பிளாஷ்பேக்” என்று வெகு சாதாரணம் போல் சொல்லியவனை சற்று ஆச்சரியம் கலந்து தான் பார்த்தான் பிரியன் அவன் மனதில் உள்ளது சாதா ரணம் அல்ல என்று.
“அப்போ இதுவரை நீங்க உங்க அப்…”
“அந்த பெரியவரை நான் நேர்ல பார்த்ததில்லை. பார்க்கவும் விரும்பலை” என்று சொல்லும் போதே அவன் முகம் போன போக்கு அவனின் மனநிலையை எடுத்துக்காட்டியது மற்றவனுக்கு.
சிறிது நேரம் அவ்விடத்தில் சற்று அமைதி நிலவியது. ஒருவர் பற்றி மற்றவர் அறிந்ததினாலும் அடுத்து என்னவென்று யோசிக்க வேண்டி இருந்ததாலும் அவ்வமைதி போலும்.
அதை கலைத்தவன் பார்த்திபனே. “அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க??”
“எனக்கு வதுவும் இசையும் வேணும் பார்த்தி. உன்னால என்ன செய்ய முடியும்ன்னு சொல்லு, அப்போ தான் என்ன செய்யலாம்ன்னு…” என்று முடிக்காமல் விட்டான் பிரியன்.
“நான் இதுல எந்த அளவுக்கு உதவ முடியும்ன்னு எனக்கு தெரியலை. ஆனா கண்டிப்பா உங்களுக்காகவும் மேடம்காகவும் எதுவும் செய்வேன். இப்போ முதல்ல தெரிய வேண்டியது அவங்க எங்க இருக்காங்கன்னு தான்”
“வேறெங்க இருப்பாங்க அவங்க வீட்டில தான்”
“வீடுன்னா நீங்க ஈசியா வந்திடுவீங்கன்னு தெரியும். அந்த பெரிய மனுஷன் அங்கெல்லாம் வைச்சிருப்பார்ன்னு தோணலை எனக்கு. வேற எங்காச்சும் வைச்சிருக்க வாய்ப்பிருக்கு”
“இல்லை பார்த்தி உறுதியாவே சொல்றேன் அவங்க வீட்டில தான் வைச்சு இருக்காங்க. இசை கழுத்துல நான் போட்ட செயின் இருக்கு, அதுல ஜீபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் வைச்சிருக்கேன். அது அந்த இடத்தை தான் காட்டுது”
“அவங்க கேடிங்க சார் அதெல்லாம் எப்பவோ கழட்டி வீசி இருப்பாங்க…”
“அதுமட்டுமில்லை பார்த்தி, என் உள் மனசும் அது தான் சொல்லுது. என்னால அங்க தான் ஈசியா நுழைய முடியாது, ஏன்னா உங்க அ…” என்றுவிட்டு நாக்கை கடித்து நிறுத்தியவன் “அந்த ராஜசேகர் அரசியல்ல தானே இருக்கார் இப்பவும்”
“கண்டிப்பா வீட்டில செக்யூரிட்டி இருப்பாங்க. இன்னொரு காரணமும் இருக்கு, வதுவை அப்பா பாசம்காட்டி அங்கவே இருக்க வைக்க ட்ரை பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று முடித்தான்.
பிரியனின் கூற்று ஓரளவிற்கு ஒப்புதலாகவே தோன்றியது மற்றவனுக்கும். இருந்தாலும் என்று அவன் மனம் இடித்துக் கொண்டே இருந்தது.
——————–
“வதும்மா இது யார் வீடு??”
“எனக்கு சுகும்மா பார்க்கணும். ராம் அப்பாகிட்ட போகணும், சரண் வேணும்…” இப்படியாக வதனாவை தொடர்ந்து கேள்வி கேட்பதும் சிணுங்குவதுமாக இருந்தாள் இசை.
வதனா மட்டுமென்ன அங்கு விரும்பியா இருக்கிறாள். இப்படி தன் வாழ்க்கை தன் அனுமதியில்லாமலே மற்றவர்களால் ஆட்டுவிக்கப்படுவது மட்டும் தொடர்கதையாய் போவதை அவளாலும் தான் ஜீரணிக்க முடியவில்லை.
புதிதாய் அப்பாவென்று ஓர் உறவு. கேட்டாளா அவள் அப்பா வேண்டுமென்று கேட்கவில்லையே. ஆனாலும் தேடி வந்திருக்கிறது அவ்வுறவு.
‘இவ்வளவு நாளாக எங்கே போயிருந்தாராம் இவர்’ என்ற ஆற்றாமையும் அவளுக்குள் எழத்தான் செய்தது.
‘சரண்…’ அவனுக்காக மட்டுமே அவள் இப்போது இங்கிருக்கிறாள். நடந்த நிகழ்வுகளை அவள் மனம் எண்ணிப்பார்க்கலானது. பிரியனும் பார்த்திபனுடன் பேசி முடித்தபின்னே அந்நிகழ்வுகளை மனதில் ஒரு முறை நினைத்துப் பார்த்தான்.
சரணைக் காணவில்லை என்றதுமே அவளுக்கு கலக்கமே. ‘என்னவாகியிருக்கும் ஏதாகியிருக்கும் என்று, ஒரு வேளை ராமின் கிரானைட் கம்பெனி பிரச்சனையில் சிக்கியவன் இப்படி செய்திருப்பானோ’ என்றெல்லாம் கூட யோசித்தது அவள் மனம்.
அதையே அவள் ராமிடமும் பிரியனிடமும் கூட சொல்லியிருந்தாள். இருவருமே அவள் சொன்னதை மறுக்கவில்லை, அமைதியாகவே இருந்தனர்.
பிரியன் ஏற்கனவே ராமிடம் கூறியிருந்தான் வதனாவுக்கு தானாகவே அவளைப்பற்றிய உண்மைகள் தெரியட்டும் என்று.

Advertisement