Advertisement

அத்தியாயம் – 3

 

பிரியன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான். நடந்துவிட்ட நிகழ்வுகளை அவனால் மாற்ற முடியாது தான் ஆனால் சரிசெய்ய முடியுமே!!

 

அந்த எண்ணத்தில் தான் அவன் தொலைத்ததை தேடிச் சென்றான். அது லேசில் கிட்டாது என்று தெரிந்தும் சென்றான் தான்.

 

கடைசியில் தன்னால் தானே எல்லாம் என்ற குற்றவுணர்வு அவனுக்கு எழாமலில்லை. இதற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மட்டும் அவன் கண் முன்னால் வந்தால்… என்று பல்லைக் கடித்தான்.

 

வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு புரிந்தது. ஆனாலும் அவனால் இனியும் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது என்பது திண்ணம்.

 

கண்கள் மூடி அன்றைய நாளை நினைவுக்கு கொண்டு வந்தான். அவன் தேடாமலே தேடிய செல்வத்தை அன்று தானே மீண்டும் கண்டான்…

____________________

 

பிரியன் தகவல் தொழில்நுட்பப்பிரிவில் வேலை செய்கிறான். அவனுக்கென தனியாக ஒரு சிறிய அலுவலகம் அவனே சொந்தமாய் வைத்திருந்தான்.

 

அதுவும் இந்த இரண்டு வருடமாகத் தான். அப்படியே அவன் சின்ன சின்ன ஆர்டர் எல்லாம் பிடித்து கொஞ்சம் வளர ஆரம்பித்திருந்தான். இப்போது தான் இரண்டு அரசாங்க ஆர்டர் கூட எடுத்திருந்தான்.

 

அதில் ஒன்று தான் அந்த மியூசியம். அங்கிருக்கும் புராதானப் பொருட்களை பாதுகாக்க அரசாங்கம் அதற்கு தகுந்த கண்காணிப்பில் வைத்திருந்தது.

 

அங்கிருந்த சிசிடிவி கேமரா மட்டுமல்லாது கணினியின் பராமரிப்பும் அவன் பொறுப்பே.

 

வைரவாளும் கீரிடமும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குனர் நிர்மலா அவனை அழைத்திருந்தார்.

 

அவர் வீட்டு கணினி, மடிகணினி அனைத்தும் அவனே பரமாரிப்பு அதனால் அவருக்கு அவன் வெகு பழக்கம்.

 

அவனின் வேலையை பார்த்து தான் அவர் அருங்காட்சியகத்தின் பொறுப்பை அவனுக்கு கிடைக்கச் செய்திருந்தார்.

 

அவர் அழைப்பிற்கிணங்க அவரை காணச் சென்றான். அவர் வீட்டிற்கு தான் அவனை வந்து பார்க்கச் சொல்லியிருந்தார்.

 

அதனால் வீட்டிற்கு தான் சென்றிருந்தான் அவன். அவரின் அலுவலக அறைக்குள் லேசாய் கதவை தட்டி அவர் அனுமதித்ததும் உள்ளே சென்றான்.

 

“உட்காரு பிரியன்” என்றார் அவர்.

“சொல்லுங்க மேடம்… சிஸ்டம் எதுவும் ப்ராப்ளமா?? சர்வீஸ் பண்ணனுமா??”

 

“நீ தான் அதெல்லாம் ஒழுங்கா மெயின்டெயின் பண்ணுறியே?? அதுல எதுவும் பிரச்சனையில்லை பிரியன்…” என்றவர் யோசனைக்கு சென்றார்.

 

“என்னன்னு நேரடியா சொல்லுங்க மேடம்?? ஏதோ யோசனையா இருக்கீங்களே??”

 

“ஏதோ ஒரு பயம் பிரியன். ரெண்டு நாளைக்கு முன்ன ராஜஸ்தான்ல இருந்து மக்கள் பார்வைக்காக கொண்டு வந்த வைரவாள் பத்தி நீ கேள்விப்பட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்”

 

“ஹ்ம்ம் ஆமாம் மேடம். பேப்பர்ல பார்த்தேன், டிவில கூட சொன்னாங்க”

 

“அதே தான்…”

 

“அதுக்கு என்ன மேடம்??”

 

“என்னமோ ஒரு இல்லுஷன் எனக்கு…” என்றவர் இடைவெளி விட்டார்.

 

“எதைப்பத்தி??”

 

“அந்த வாளை யாரும் அபகரிக்க நினைப்பாங்களோன்னு ஒரு பயம். என்னோட எண்ணம் சரியே அப்படிங்கற மாதிரி ஒரு அனானிமஸ் கால் ஒண்ணு வந்திச்சு. இதை கொள்ளையடிக்கப் போறதா… பத்திரமா பாதுக்காக்க சொல்லி” என்றார்.

 

‘இதை எதுக்கு நம்மகிட்ட சொல்றாங்க’ என்று அவனுக்கு தோன்றாமலில்லை. ஆனாலும் “நீங்க போலீஸ் சொல்லிட்டீங்களா மேடம்”

 

“ஹ்ம்ம் சொன்னேன்… அவங்களும் செக் பண்ணிட்டு அப்படி ஒரு காலே வர சான்ஸ் இல்லைன்னு சொல்றாங்க”

 

“நான் எனக்கு கால் வந்த நம்பரை கொடுத்தேன். அப்படி ஒரு நம்பரே கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடியலை”

 

“எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணணும் பிரியன். அந்த வைரவாளும் கீரிடமும் இங்க இருந்து போற வரை நம்மோட பொறுப்பு”

 

“அதாவது அதை பத்திரமா அந்த நாட்டுக்கு திருப்பிக் கொடுக்கற வரை அதோட பாதுகாப்புக்கு நாம தான் துணையா இருக்கணும்”

 

‘இதுல நான் என்ன பண்ணணும்ன்னு இப்போவரை சொல்லலையே இவங்க’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தான்.

 

“நீங்க எனக்கு இதுல ஜிபிஎஸ் ட்ராக்கிங் பிக்ஸ் பண்ணி கொடுக்கறீங்களா!!”

 

“என்ன மேடம் சொல்றீங்க??” என்று திகைத்தான் பிரியன்.

 

“ப்ளீஸ் பிரியன் நான் சொன்ன மாதிரி செய்ங்களேன்… எனக்கு தெரியும் உங்களால முடியும்ன்னு… நீங்க ஆல்ரெடி இது போல எல்லாம் செஞ்சு இருக்கீங்க”

 

“உங்க ப்ராஜெக்ட்ஸ் பார்த்திட்டு தானே நான் உங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்க ஏற்பாடு பண்ணேன்”

 

“இந்த வாள்ல அது இருக்கறது போலவே தெரியாம உங்களால கண்டிப்பா ரெடி பண்ணி தர முடியும்”

 

“எனக்காக பிரியன் கொஞ்சம் செஞ்சு கொடுங்க” என்று அவர் சில பல ப்ளீஸ் போட்டு அவனை கேட்க அவரால் அவனுக்கு விளைந்திருந்த நன்மைகளை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதித்தான்.

 

சொன்னது போலவே ஜிபிஎஸ் கருவி வடிவமைத்து அந்த வாளிலும் கீரிடத்திலும் பதித்துவிட்டான்.

 

சட்டென்று பார்த்தால் யாராலும் அதை கண்டுப்பிடிக்க இயலாது நேனோ வகையில் உருவாக்கியிருந்தான். வாளில் பதித்திருந்த கல் போல தான் அது தோன்றும், அவ்வளவு சிறிய வடிவில் இருந்தது.

 

அது நடந்து அடுத்த இரண்டு நாட்களில் அந்த வாளும் கீரிடமும் காணாமல் போகும் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

முதல் நாள் மாலை தான் சிசிடிவியில் ஏதோ பழுது என்று அவனை அழைத்திருந்தனர்.

 

அவன் சென்று முயற்சி செய்து பார்த்து அன்று வேலை முடியாததால் வெகு நேரம் இருந்திருந்தவன் மறுநாள் காலை வந்திருந்தான்.

 

அப்போது தான் வாளும் கீரிடமும் காணாமல் போயிருந்ததிற்கான விசராணை நடந்து கொண்டிருந்தது.

 

அவர்கள் கேட்டதிற்கு பதில் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன் முதலில் அழைத்தது நிர்மலாவிற்கே.

 

“சொல்லு பிரியன் எங்கே இருக்கே?? மியூசியத்துல தானே நான் என்டிரன்ஸ்ல தான் இருக்கேன். ஒரு ஐஞ்சு நிமிசத்துல உள்ள இருப்பேன்”

 

“நீ என் ரூமுக்கு நேரா வந்திடு உன்கிட்ட பேசணும்” என்றுவிட்டு அவனை பேசவிடாமல் போனை வைத்துவிட்டார் அவர்.

 

அதுவரையிலும் அவன் அங்கிருந்து நகரவில்லை. அவர் வரவிற்காய் காத்திருந்தான். அவரின் கார் உள்ளே நுழையவும் அவர் இவனுக்கு பத்து நிமிடம் காத்திரு என்று சைகை செய்து உள்ளே சென்றார்.

 

பின் ஒருவர் வந்து அவனை அழைக்க நிர்மலாவை சந்திக்கச் சென்றான்.

 

அவன் உள்ளே நுழைந்ததும் மெதுவான குரலில் அவனிடம் “நான் பயந்தது போலவே நடந்திடுச்சு பிரியன் பார்த்தியா!!” என்றார் கண்களில் கலவரத்தை தேக்கி.

 

“மேடம் இப்போ என்ன பண்ணுறது??”

 

“அதைப்பத்தி பேசத்தான் இப்போ உன்னை கூப்பிட்டேன் பிரியன். உன்னால அதை டிராக் பண்ண முடியும் தானே. கொஞ்சம் சீக்கிரம் கண்டுப்பிடியேன்” என்று சொன்னவரை வித்தியாசமாய் பார்த்து வைத்தான் அவன்.

 

“மேடம் தெரிஞ்சு தான் சொல்றீங்களா!! நாம இப்படி ஒண்ணு செஞ்சதே யாருக்கும் தெரியாது. இதுல நான் போய் கண்டுப்பிடிக்கிறதாவது”

 

“என்ன மேடம் பேசறீங்க?? வேற வழியே இல்லை மேடம் இந்த விஷயத்தை இப்போ வந்த ஆபீசர்ஸ்கிட்ட நீங்க சொல்லுங்க”

 

“அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் பண்ணுறேன் மேடம். மத்தப்படி நானே இதுல நேரா இறங்குறது எல்லாம் நடக்குற விஷயமில்லை” என்று தெளிவாய் சொன்னான்.

 

நிர்மலாவிற்கும் அது புரிந்தே தான் இருந்தது. இருந்தாலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் அதற்கும் அவர் நிறைய பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

காணாமல் போனதை விட இது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்று அவருக்கு தோன்ற, அவரும் அவன் சொன்னதிற்கு ஒப்புக்கொண்டார்.

 

பின்னர் அத்தகவல் வந்திருந்த காவல்துறை அதிகாரிகளிடம் பகிரப்பட அவனையும் நிர்மலாவையும் போட்டு அவர்கள் துளைத்து எடுத்துவிட்டனர்.

 

பிரியன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான் ‘ஒரு ஐஏஎஸ் அதிகாரியையே இப்படி கேள்வி கேட்கிறார்கள் நானெல்லாம் எம்மாத்திரம் என்று’

 

ஏதோ தோன்ற “சார் சிசிடிவி பதிவு எல்லாம் சரியா பார்த்தாச்சா” என்றதும் அதிகாரி அவனை முறைத்தார்.

 

“அதெல்லாம் அப்போவே பார்த்தாச்சு. அது ரொம்ப கிளியரா இருக்கு. எங்களுக்கு தெரியாததையா நீ சொல்லிடப் போறே” என்றுவிட்டு கண்டனப் பார்வை பார்த்தார்.

 

“நான் ஒரு முறை பார்க்கலாமா சார். ஏன்னா நான் நேத்து இங்க வந்திருந்தப்போ வேற ப்ளோர்ல தான் கேமரா வொர்க் ஆகலைன்னு சொன்னாங்க”

 

“ஆனா பிரச்சனை நடந்திருக்கறது வேற ப்ளோர்ல எதுக்கும் ஒரு முறை நான் பார்க்கட்டுமா” என்று அவன் தணிவாகவே கேட்கவே மற்றொருவர் முதலாமவரை அமைதியாய் இருக்குமாறு சொல்லி அவனை பார்க்கச் சொன்னார்.

 

பின்னர் அவன் விரல்கள் கணினியில் வேகமாய் கோலம் போட அங்கிருந்த செக்யூரிட்டியை அழைத்தவன் “அண்ணா நீங்க கடைசியா எப்போ போய் அதை செக் பண்ணீங்க??”

 

அவரும் ஐந்து மணி வாக்கில் என்று கூற அதன் பின்னான பதிவுகளை பார்க்க கொஞ்சம் அவனுக்கு புரிவது போல இருந்தது.

 

அவசரமாய் காவல்துறை அதிகாரியை அழைத்து அவன் சொல்ல அவர்களும் அவன் சொன்னதை கேட்டு உடனே செயல்பட துவங்கினர்.

 

நடந்தது இது தான் ராஜஸ்தானில் இருந்து வந்திருந்த அந்த வாளை எடுத்து வந்தவர்கள் அரசாங்க விருந்தினர்களாக கவர்னர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

 

சம்பவம் நடந்த அன்று அவர்கள் மியூசியத்திற்கு வந்த பதிவுகள் அதில் இருந்தது, மற்ற ப்ளோருக்குள் அவர்கள் நுழைந்த பதிவுகள் வெளியேறிய பதிவுகள் எல்லாம் இருந்தது.

 

குறிப்பிட்ட அந்த வாளும் கீரிடமும் இருந்த பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததிற்கான எந்த அடையாளமும் இல்லை.

 

கொண்டு வந்தவர்களே அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டிருந்தது அம்பலமாகியது. அது மட்டுமல்லாது பிரியன் வைத்திருந்த டிராக்கிங் டிவைஸில் காட்டிய இடமும் ஆளுநர் மாளிகையாய் இருக்க அவர்கள் சந்தேகம் நூறு சதம் உறுதியாகியது.

 

யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் பிரியனை முதலில் உள்ளே அனுப்பினர்.

 

பிரியனும் உடன் மற்றொருவனும் உள்ளே வந்திருக்க உடன் வந்தவன் ஏதோவொரு இடத்தில் பிரிந்துவிட அவனை கவனிக்காமல் முன்னேறிய பிரியன் தான் அங்கிருந்த பாதுக்காப்பு அதிகாரிகளிடம் மாட்டியிருந்தான்.

 

அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவர்கள் வதனாவை அழைத்து வந்திருக்க அவளை கண்டதும் தன் ஜென்மமே சாபல்யம் அடைந்துவிட்டது போல் ஓர் உணர்வு அவனுக்கு.

 

அவளை கண்டதும் உள்ளுக்குள் தோன்றிய உணர்ச்சிகளை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

தன்னை அவளிடம் நிரூபித்துவிடும் எண்ணம் தோன்ற செய்யாத ஒன்றை செய்ததாய் சொன்னான் பவளப்பிரியன் என்னும் வல்லவராயன்.

 

வீட்டில் சிவனின் பெயர் வைக்க வேண்டும் என்று அவன் பாட்டி தாத்தா சொல்ல அவனுக்கு பவளப்பிரியன் என்று பெயர் வைத்தனர்.

 

ஆனால் பொன்னியின் செல்வனின் மேல் தீராத காதல் கொண்டிருந்த அவன் தந்தை அந்த கதையின் முக்கிய நாயகன் வல்லவராயன் பேரை தன் பங்காய் மகனுக்கு வைத்தார்.

 

அவள் வந்து அவனிடம் கோபமாய் பேசியதும் அடித்ததும் கூட அவனுக்கு இன்பமாயிருந்தது.

 

சற்று நேரத்திற்கெல்லாம் அவனைத் தேடி மற்ற காவல் அதிகாரிகள் வரவும் விஷயம் புரிந்து அவனை உடனே விடுவித்திருக்க அவன் உதவியுடன் அந்த வைரவாளும் கீரிடமும் கடத்தியவர்களிடம் இருந்து கைப்பற்றி அவர்களை கைது செய்திருந்தனர் காவல் துறையினர்.

____________________

 

வதனா இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் திரும்பியிருந்தாள்.

 

மீடியாவிற்கும் அவளைப்பற்றிய விஷயங்கள் இப்போது அவலாகி எல்லோருக்கும் ஆவலாகிக் கொண்டிருந்தது.

 

மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களில் தன்னை ஒருவாறு மீட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

 

தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர பழக்கியிருந்தாள். இதில் கபிலன் வேறு அவளை வறுத்தெடுத்திருக்க தன்னை மாற்றிக் கொண்டாள்.

 

கபிலன் ஐஏஎஸ் தேர்வின் போது அவளின் பேட்ச் மேட்!! சாதாரணமாய் ஆரம்பித்த அவர்களின் பழக்கம் நல்ல நட்பை உருவாக்கி தன்னை பற்றி அவனிடம் பகிரும் அளவிற்கு வளர்ந்திருந்தது.

 

கபிலன் வதனாவின் நலம் விரும்பி மட்டுமல்ல உற்ற நண்பன் ஆவான். உடுக்கை இழந்தவன் கைப்போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு அவர்களின் நட்பு.

 

மூன்று வாரங்கள் தன்னை போல கடந்திருந்தது. நிம்மதியாகவா என்று கேட்டால் அது அவளுக்கே தெரியாது.

 

அன்று ஆளுநரின் சென்னை வருகை என்பதால் வதனா சற்று பரபரப்பாயிருந்தாள்.

 

மறுநாள் தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதால் அவருக்கு சிறிய அளவிலான பார்ட்டி ஒன்று மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அடுத்த இரண்டு நாளில் புது நீதிபதியை நியமிக்கும் வேலை வேறு இருந்ததால் அவள் பம்பரமாகவே சுழன்று கொண்டிருந்தாள்.

 

அவளைப் பற்றி வந்த செய்திகளை எல்லாம் மொத்தமாய் புறந்தள்ளினாள்.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை மற்றவர்கள் வசம் ஒப்படைத்திருந்தாலும் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து விபரம் கேட்டறிந்து கொண்டிருந்தாள். விழாவில் கவர்னரின் உரை இருக்கிறது என்பதால் அதை கவனமாய் தயார் செய்தாள்.

இரவு விமானத்தில் வந்திறங்கினார் அவர். அன்று இரவு அவர் உரையின் ஒப்புதலுக்காய் அவரை காணச் சென்றாள்.

 

கவர்னர் வேற்று மாநிலத்தவர் என்பதால் வதனா அவளறிந்த அவரின் மொழியிலேயே அவருடன் உரையாடினாள்.

 

அவரோ அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பேச்சு நமக்கு தமிழில்.

 

‘இவர் எதற்கு இப்படி பார்க்கிறார்’ என்று தோன்றினாலும் அதை அவரிடத்தில் அப்படியே கேட்க முடியாமல் அவள் அவருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

எல்லாம் பேசி முடித்ததும் அவள் கிளம்பும் தருவாயில் அவளை இருக்கையில் அமருமாறு சொன்னார்.

 

“சொல்லுங்க சார்”

 

“போன வாரம் நடந்த விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன்” என்றார்.

 

அவர் எதை சொல்ல வருகிறார் என்று அவளுக்கு புரிந்தது.  அவருக்கு லேசாய் தன் தலையசைப்பை பதிலாய் கொடுத்தாள்.

 

“என்னாச்சு??” என்று தெரிந்தே அவளிடம் கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்ல வேண்டியது அவள் கடமையாயிற்றே.

 

நடந்ததை முன்னமே அவரிடம் விவரித்திருந்தாலும் மீண்டுமொருமுறை விவரித்தாள்.

 

அவரோ எல்லாம் கேட்டு முடித்து “வாட் அபௌட் Mr.வல்லவராயன்”

 

வதனாவின் முகம் ஒரு நிமிடம் விழுந்து பின் தன்னை மீட்டது. சட்டென்று அவருக்கு என்ன பதில் சொல்வது என்று அமைதி காத்தாள்.

 

அவளின் நிலை புரிந்தவர் போன்று அவரே தொடர்ந்தார். “நீ என்னோட பொண்ணு மாதிரி தான்மா வதனா”

 

“நீ ஏன் தனியா இருக்கே?? எதுக்காகன்னு எல்லாம் எனக்கு தெரியலை. ஒண்ணு மட்டும் சொல்லணும் தோணுது நீ கேட்பியா??” என்றுவிட்டு அவள் முகத்தை பார்த்தார்.

 

தன் கம்பீரம் தொலைக்காது அவரையே பார்த்தாள் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று.

 

கவர்னர் ராஜசேகர் ரெட்டி இந்த இரண்டு வருடங்களாய் மட்டுமல்ல அதற்கு முன்பும் அவர் அவளுக்கு அறிமுகமே.

 

அவள் முதன் முதலாய் போஸ்டிங் ஆகிவரும் போது முதலில் இருந்த ஊரில் அவர் ஒரு துறையில் மந்திரியாய் இருந்தார்.

 

அப்போதிருந்தே அவளுக்கு லேசாய் பழக்கம் தான். அவ்வப்போது பார்க்கும் தருணங்களில் பேசிக் கொள்வதும் வழமையே.

 

ஆனால் இப்படி அவளின் தனிப்பட்ட விஷயத்தை பேசுமளவு அவரிடம் நெருக்கமில்லை. இன்று அவரோ அதைப்பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு வியப்பே!!

 

“என்னன்னு கேட்க மாட்டியாம்மா?? இல்லை நான் இதைப்பத்தி பேசுறது உனக்கு பிடிக்கலையோ??” என்றுவிட்டு ஆழ்ந்து அவளை உற்று நோக்கினார்.

 

“அப்படி எல்லாம் ஒண்ணும்மில்லை சார். நீங்க சொல்லுங்க”

 

“சரியோ தப்போ என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது தான். எனக்கு என்னமோ நீ உன் கணவரோட சேர்ந்து இருக்கறது தான் நல்லதுன்னு தோணுது”

 

“நான் சொல்றது உனக்கு தப்பா கூட தோணலாம். ஆனா பின்னாடி ஒரு நாள் அது சரின்னு உனக்கு புரியும். உன்னை எனக்கு சில வருஷமா தெரியும்”

 

“இத்தனை நாள்ல உன்னைப்பத்தி நான் அதிகம் தெரிஞ்சுக்கிட்டது இல்லைன்னு நீ நினைக்கலாம். ஆனா எனக்கு உன்னைப்பத்தி தெரியும்.என்னோட பதவிக்காலம் முடியப் போகுது”

 

“இன்னும் இரண்டு மாசம் தான் நான் இருப்பேன்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் வேற ஒருத்தர் வருவாங்க”

 

“இதுக்கு அப்புறம் உன்கிட்ட இப்படி பேச சந்தர்ப்பம் கிடைக்கும்மான்னு எனக்கு தெரியலைம்மா!! நான் இப்போ போனா இதோட இரண்டு மாசம் கழிச்சு தான் வருவேன்”

 

“அதாவது பிரிவு உபசார விழாவுக்கு தான் வருவேன்னு நினைக்கிறேன். உன்னையும் என் மகளா நினைச்சு தான் இதை சொல்றேன்” என்றவர் அவள் பதிலே பேசாது அமைதியாய் இருக்கவும் அவரும் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

 

“சரிம்மா நேரமாச்சு நீ போ…” என்றுவிட அவளும் எழுந்திருந்தவள் ஒன்றும் சொல்லாது நகரப் போனாள்.

 

பின் ஏதோ தோன்றியவளாய் “ரொம்ப தேங்க்ஸ்பா…” என்று கலங்கிய விழிகளுடன் சொல்லிவிட்டு விரைந்து வெளியில் வந்திருந்தாள்.

 

அவள் அறைக்கு வந்து கதவை அடைத்தவளுக்கு அப்படி ஒரு அழுகை வந்தது.

 

அழப்பிடிக்கவில்லை அவளுக்கு வழிந்த கண்ணீரை துடைத்தெறிந்தாள்.

இந்த அழுகையும் உணர்ச்சிவசப்படுவதும் தான் தன்னை பலவீனமாக்கும் என்பதை உணர்ந்து கட்டுப்படுத்தினாள்.

 

கண் மூடி மனதை ஒருமுகப்படுத்த சில நிமிடங்கள் அது அவள் பேச்சு கேளாமல் போக்குக்காட்டி பின் அவள் வசத்திற்கு வந்தது.

 

அரைமணி நேரம் கடந்த பின்னே தான் கண் விழித்தாள். மனம் தெளிவடைந்திருந்தது.

 

என்றும் இல்லா திருநாளாய் இன்று அதிசயத்திலும் அதிசயமாய் கவர்னர் அவளிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்.

 

அதுவும் அவளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி. இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அவர் இப்படியெல்லாம் தன்னிடம் பேசியதில்லையே!! என்று வியப்பு எழுந்தது அவளுக்கு.

 

திடிரென்று தன் வாழ்வில் ஏதோ மாற்றங்கள் ஏற்படுவது போன்ற உணர்வு.

 

பத்து வருடங்களுக்கு முன் ஒரே நாளில் அவள் வாழ்வு மாறியது. அதே போல் இப்போதும் ஒரே நாளில் தன் வாழ்வு மாறியது போல் ஒரு மாயை அவளுக்கு.

 

கவர்னர் பேசியதை மனதுக்குள் மட்டுமே ஏற்றியவள் மூளைக்கு கொண்டு செல்லவில்லை. ஏனென்றால் அது அந்த பேச்சை கேட்க தயாராக இல்லை.

 

அடுத்து வந்த இரண்டு நாட்களும் விரைவாகவே கடந்து சென்றிருந்தது.

 

மறுநாள் கவர்னர் மீண்டும் டெல்லிக்கு செல்வதால் முதல் நாள் தனிப்பட்ட முறையில் அவர் அழைத்திருந்த  விருந்தினர்களுக்கு தன் மாளிகையில் சிறப்பு விருந்தளிக்க வேண்டும் என்று அதன் ஏற்பாடுகளை வதனாவிற்கு அடுத்திருந்த மற்றொரு செயலாளரை அழைத்து கவனிக்க சொல்லியிருந்தார்.

 

வதனாவிற்கு வேறு வேலைகள் கொடுத்திருந்ததால் அவளும் அதனை பெரிதாய் கண்டுக்கொள்ளவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஏற்பாடுகள் சரியாக நடக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டாள்.

 

அப்போது அவளுக்கு பார்த்திபன் அழைத்தான். ‘இவன் எதுக்கு எனக்கு போன் பண்ணுறான் இப்போ??’ என்று எண்ணிக் கொண்டே “சொல்லுங்க பார்த்திபன்” என்றாள்.

 

“சாரி மேடம் உங்க வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணுறேன்”

 

“அதான் பண்ணிட்டீங்களே அப்புறம் எதுக்கு சாரி எல்லாம் சொல்லி வேஸ்ட் பண்ணுறீங்க??” என்று சிடுசிடுப்பாகவே சொன்னாள்.

 

‘என்ன கோபத்துல இருக்காங்களோ’ என்று நினைத்துக் கொண்டே “மேடம் இன்னைக்கு கவர்னர் சார் விருந்து கொடுக்கப் போறார் தெரியுமா மேடம் உங்களுக்கு”

“எனக்கு தெரியாம இருக்குமா… எல்லாம் எங்களுக்கு தெரியும். இதை சொல்லவா எனக்கு கூப்பிட்டீங்க!! நான் தான் உங்கக்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கேன்ல அவசியமானதுக்கு மட்டும் கூப்பிடுங்கன்னு”

 

“எதுக்கு தேவையில்லாததுக்கு எல்லாம் என்னை கூப்பிடுறீங்க…” என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு அவனை வறுத்து பொரிந்தெடுத்தாள்.

 

அவனோ அதற்கு பின் வாயே திறக்கவில்லை. ‘”டேய் பார்த்தி இதெல்லாம் உனக்கு தேவையாடா!! யார் யாருக்கு விருந்து வைச்சா உனக்கென்ன வைக்கலைன்னா உனக்கென்ன!!”

 

“நீ பாட்டுக்கு வந்தியா உன் வேலையை பார்த்தியான்னு இருக்க வேண்டியது தானே!!”

 

“அதான் அவங்களுக்கு தெரியுமாமே வல்லவராயன் சார் வர்றது அப்புறம் நீ வேற எதுக்குடா புதுசா சொல்றா போல போனை போட்டு வாங்கிக்கட்டிக்குறே” என்று முணுமுணுப்பாய் தனக்குள்ளே பேசிக் கொண்டான்.

 

விருந்தினர்கள் இரவு விருந்துக்கு வருவதாய் ஏற்பாடாகியிருந்தது. வதனாவுக்கு வருபவர் யாரென்று அதுவரை தெரியாது.

 

அப்போது தான் நினைவு வந்தவளாய் அவளுக்கு அடுத்திருந்த செயலாளர் மதிவாணனை அழைத்து விசாரித்தாள்.

 

மதிவாணன் அவளைவிட வயதில் மூத்தவர் என்பதால் அவரை மரியாதையாகவே விளிப்பாள்.

 

“மதி சார் இன்னைக்கு வரப்போற கெஸ்ட் யாரு??”

 

“நிர்மலா குணசேகர் மேடம் பேமிலியோட வர்றாங்க. இப்போ கூட ரிசென்டா அந்த ராஜஸ்தான்ல இருந்து வந்த வாளையும் கீரிடத்தையும் சமயோசிதமா பாதுகாத்து அதை அந்த கவர்மென்ட்கிட்ட பத்திரமா ஒப்படைச்சாங்களே!!”

 

“அதை பாராட்டி தான் சார் அவங்களை மீட் பண்ணனும்ன்னு கூப்பிட்டிருக்கார்” என்று சொல்லிவிட்டு அவர் அப்புறம் நகர ஏதோவொரு நெருடல் அவளுக்குள்.

 

அவனையும் அழைத்திருப்பார்களோ என்று ஆனால் மதிவாணன் அப்படி சொல்லவில்லையே!!

 

நிர்மலாவும் அவர் குடும்பத்தாரும் என்று தானே சொன்னார் என்று எண்ணியவளுக்கு பெருமூச்சு வந்தது.

 

அது அவன் வரமாட்டான் என்ற நிம்மதியிலா இல்லை வருத்தத்திலா என்றறியாள்!!

 

வருபவர்கள் கவர்னருடன் அமர்ந்து விருந்துண்ணுவர். நமக்கு என்ன வந்தது என்று எண்ணியவள் அறைக்கு செல்லப் போக ராஜசேகர்ரெட்டி அவளை அழைத்தார்.

 

“சார்” என்று அவரெதிரில் நின்றிருந்தாள்.

 

“இன்னைக்கு நிர்மலா வர்றாங்க நீங்களும் எங்களோட டின்னர்க்கு ஜாயின் பண்ணிக்கோங்களேன்” என்று அழைப்பு விடுக்க அவளுக்கு ஒரு மாதிரியாகி போனது.

 

அவ்வப்போது இது போன்ற விருந்துகளில் அவள் கலந்து கொள்வது தான்.

 

ஆனால் இன்று தனிப்பட்ட நபருக்கான விருந்தில் தன்னை கலந்துக் கொள்ள அழைக்கிறாரே என்ற எண்ணத்தில் இருந்தாள் அவள்.

 

“என்னாச்சும்மா??”

 

“நத்திங் சார்… நானும் ஜாயின் பண்ணிக்கறேன்” என்றாள்.

 

“அவங்க எட்டு மணிக்கு வந்திடுவாங்க. நீங்க போய் தயாராகி வாங்க”

 

“தெரியும் சார் மதிவாணன் சார் சொன்னார்” என்றுவிட்டு அவள் விட்டால் போதும் என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

 

‘எங்கே போனான் இந்த கபிலன் ஆளே காணவில்லை வெகு நேரமாய்??’ என்றவள் மறந்திருந்தாள் அவன் விடுப்பில் ஊருக்கு சென்றிருக்கிறான் என்று.

 

அவனை திட்டிக்கொண்டே அவன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.

 

அவளின் அழைப்பை பார்த்து உடனே எடுத்தவன் “ஏய் எங்கே போனே?? உனக்கு எவ்வளவு நேரமா நான் போன் பண்ணிட்டே இருக்கேன் லைனே போகலை” என்று அவள் பேசுவதற்கு முன்பே பொரிந்தான் கபிலன்.

 

வதனாவும் கபிலனும் போனிலோ அல்லது தனித்து சந்திக்கும் சந்தர்ப்பங்களிலோ இயல்பாகவே எப்போதும் உரையாடிக் கொள்வர்.

 

வதனா மிக இயல்பாய் சகஜமாய் பேசும் ஒரு நபர் என்றால் அது கபிலனும் அவனும் மட்டுமே.

 

இங்கு அவன் என்றது அவளின் உற்ற எதிரியான நண்பனொருவன். பின்னர் வருவானவன்.

 

மேலும் ஒருவனிடமும் அவள் சகஜமாய் உரையாடுவாள் தான் ஆனால் அதெல்லாம் சில வருடங்களுக்கு முன்!!

 

“டேய் மேடம்ன்னு கூப்பிடாம இதென்ன மரியாதை இல்லாம பேசுறே” என்றாள் அவள்.

 

“நான் இன்னைக்கு லீவு தெரியும்ல. அங்க வந்தா தான் மரியாதை எல்லாம்”

 

“அச்சோ நான் மறந்திட்டேன்டா கபி. சரி நீ அங்க பாரு, நான் வைக்குறேன்” என்று போனை அவள் வைக்க போக “வதனா கொஞ்சம் இரு” என்று அப்புறம் கத்தினான் அவன்.

 

“என்னடா??”

 

“இன்னைக்கு ஏதோ விருந்துன்னு??”

 

“ஆமா…”

 

“யார் வர்றாங்கன்னு தெரியுமா??” என்றவனின் குரலில் இருந்தது என்னவென்பதை அவளால் உணர முடியவில்லை.

 

“தெரியுமே!!”

 

“உனக்கு முன்னாடியே தெரியுமா??” கேள்வியும் யோசனையும் அவனிடத்தில்.

 

“இல்லை இப்போ தான் கொஞ்சம் முன்னாடி மதி சார் சொன்னார். கவர்னரும் என்னை கூப்பிட்டு சொன்னார்”

 

“ஓ!!” என்றவன் வேறொன்றும் சொல்லவில்லை.

 

“சரி பார்த்துக்கோ!! எதுவானாலும் எனக்கு போன் பண்ணு சரியா!!”

 

“எதுக்குடா இப்படி சொல்றே?? நான் உனக்கு போன் பண்ணாம வேற யாருக்கு பண்ணப் போறேன்”

 

“ஹ்ம்ம் சரி ஓகே பை” என்றுவிட்டு அவன் அப்புறம் போனை வைத்தான். பேசிப்பேசி அவள் டயர்ட் ஆகி இருந்தாள்.

 

அறைக்கு சென்று காபி வரவழைத்து குடித்தவள் லேசாய் ஒரு குளியலை போட்டு அழகிய டிசைனர் புடவை ஒன்றை உடுத்தினாள்.

 

வெங்காய சருகின் நிறத்தில் அவள் அணிந்திருந்த புடவையும் அதே நிறத்தில் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட கிளோஸ் நெக்கும் முழங்கை வரைக்குமாய் அவள் அணிந்திருந்த ரவிக்கையும் அவளுக்கு வெகு பொருத்தமாய்!!

 

அதிகம் உறுத்தாத அளவிற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு கண்ணாடியில் பார்க்க ஏனோ அவள் அலங்காரம் இன்று அதிகப்படியாய் தோன்றியது அவளுக்கு.

 

எப்போதும் இதைவிட கிராண்டாக உடுத்தக் கூடியவள் தான். என்ன தோன்றியதோ அணிந்திருந்த உடையை மாற்றி அதையும் விட சிம்பிளாய் ஒன்றை உடுத்தினாள்.

 

குங்கும நிற சில்க் காட்டன் சேலை அவளுக்கு ஒரு தனி கம்பீரத்தை கொடுக்க இப்போது கண்ணாடியில் தன்னை திருப்தியாக பார்த்துக் கொண்டாள்.

 

“ரொம்ப அதிகமா தெரியலை இப்போ” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

இன்று ஏன் இதெல்லாம் பார்க்கிறோம் என்று புரியவில்லை. இப்படி அவள் பார்த்து பார்த்து செய்வது சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது மனகண்ணில் வந்தாலும் அதை ஒதுக்கி அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அப்போது மதிவாணன் அருகே வந்து அவளை அவசரமாய் அழைத்தார்.

 

“என்னாச்சு சார்??”

 

“கெஸ்ட் வந்திட்டாங்க மேடம்… கொஞ்சம் பார்மாலிட்டிஸ் இருக்குல அதான் கொஞ்சம் யர்லியா வரச் சொன்னேன்”

 

“நீங்க வந்து வெல்கம் பண்ணுங்க” என்றுவிட்டு யாருக்கோ கண் ஜாடை காட்ட அவர்கள் அவள் கையில் பூங்கொத்தை கொடுத்தனர்.

 

வாயிலுக்கே வந்துவிட்டவள் காரில் இருந்து இறங்கிய நிர்மலாவை பார்த்து புன்சிரிப்பை கொடுத்து அவளிடம் பூங்கொத்தை நீட்டினாள்.

 

“வெல்கம் டு தி பேலஸ் அண்ட் பெஸ்ட் விஷஸ் பார் யூ” என்று சொல்லி வரவேற்றாள்.

 

“தேங்க்யூ” என்றார் அவரும் புன்னகையாகவே.

 

அதற்குள் வதனாவின் கைகளில் இன்னொரு பூங்கொத்து வைக்கப்பட்டது யோசனையாய் அவள் மதிவாணனை பார்க்க அவர் கைக்காட்டிய திசையில் நின்றிருந்தவனை அவளுக்கு தெரியவில்லை.

 

அவனை கண்டதும் கண்மண் தெரியாத கோபமொன்று எழுந்து அவள் கண்ணை மறைத்ததுவே!!

 

அவனோ புன்னகை முகமாய் அவள் முன் வந்து நின்றான். அவன் வதனாவை தன்னவளாய் கொண்டவன் பிரியன் என்ற வல்லவராயன்….

 

பிறர் அறியாவண்ணம் லேசாய் அவளை பார்த்து கண் சிமிட்டியவனை முறைத்தாள் அவள்….

 

விலகலா??

விலக்கலா??

வில்லங்கம்

யாரிடத்தில்??

Advertisement