Advertisement

“அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்… ஏன் அனுப்புனீங்க??”
 
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
 
“என்னோட கேள்விக்கு பதில் வேணும்…” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
 
“வதனாவோட சித்தப்பா நான்…” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
 
“இம்பாசிபிள்…”
 
“பாசிபிள் தான்… அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்…”
 
“வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை…”
 
“ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை தான்…”
 
“அப்புறம் நீங்க சொல்றதை நான் எப்படி நம்புவேன்…”
 
“நீ எதுக்குடா நம்பணும்… இருந்தாலும் உனக்கு தெளிவாவே சொல்றேன் வதனாவோட அப்பா சந்திரசேகரன் அம்மா மாதவி…”
 
‘ஆம் இது அவனறிந்த விஷயமே! இதை வதனாவே அவனிடம் சொல்லியிருக்கிறாள்… ஆனால் இவர் என்ன சொல்கிறார்…’ என்று யோசிக்க மண்டை வலித்தது.
 
“ரொம்ப யோசிக்க வேணாம்… வதனா எங்க வீட்டு பொண்ணு அவளை எப்படி பார்த்துக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்… உன்னை மாதிரி ஒருத்தன் கூட அவளை சேர்த்து பார்க்கவே அசிங்கமா இருக்கு…” என்று சொல்லி அவன் தன்மானத்தை சீண்டினார் அவர்.
 
“என்ன மாதிரி ஒருத்தன்னா…” என்றார் அவரை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து.
 
“எங்களோட கால் தூசிக்கு வருவியாடா நீ…”
 
“அப்புறம் எதுக்கு அவ அநாதை ஆசிரமத்துல இருந்தா??”
 
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது…”
 
“என் மனைவி அவ… நீ எப்படி தேவையில்லாததுன்னு சொல்லுவே… அவளுக்கு ஒண்ணுன்னா நான் தான் கேட்பேன்… நீங்களாம் இவ்வளோ நாளா எங்க இருந்தீங்க, எங்களை பிரிச்சுக்க வைக்கற உரிமையை உங்களுக்கு யாரு கொடுத்தா…” என்றவனின் கண்கள் சிவக்க அவரை அடித்துவிடும் வேகம் அவனுக்குள் பிறந்தது. எழுந்து நின்று அவர் முன்னே வந்திருந்தான் இப்போது.
 
“நீ தான்டா இப்போ அவளுக்கு யாரோ… ஆனா நான் அவளோட சித்தப்பன், அவளோட அப்பாவோட கூட பிறந்தவன்… எங்களுக்கு எல்லா உரிமையும் அவ மேல இருக்கு… எங்க வீட்டு வாரிசு அவ…”
 
“அப்புறம் என்ன இதுக்கு…” என்றவனின் வாயில் கெட்ட வார்த்தைகள் தான் வந்தது. “வந்துட்டாங்க புதுசா உறவு கொண்டாட” என்று முணுமுணுத்தான்.
 
“டேய் என்னடா கொஞ்சம் விட்டா பேசிட்டே போறே… ஆமா விட்டு தான் போனோம்… அவ நல்ல முறையில பிறந்திருந்தா ஏன் விட்டிருக்க போறோம்…”
 
“அவ பிறந்த வழி சரியில்லை… அதுல எங்களுக்கு கோபம் அதிலென்ன தப்பிருக்கு… எப்படியிருந்தாலும் அவ எங்க வீட்டு பொண்ணு… அவளுக்கு என்ன தேவைன்னு நான் பார்த்துக்குவோம்…”
 
“நல்லா பார்த்தீங்களே அவ கஷ்டப்படும் போது ஒரு நாயும் கூட இல்லை, அப்புறம் நீங்களாம் எதுக்குடா இப்போ வரிஞ்சு கட்டிட்டு வர்றீங்க…” என்று பிரியன் ஆக்ரோஷமாய் கத்த குலசேகரனின் கோபம் கட்டுக்கடங்காமல் அவனை ஒரு எத்து எத்தினார்.
 
எதிர்பாரா தாக்குதலில் சட்டென்று சோபாவின் மேல் விழுந்தான் அவன். மீண்டும் அவன் எழும் முன்னே அவரின் குரலுக்கு ஓடிவந்த கூட்டம் அவனை நகரவிடாமல் பிடித்துக் கொண்டது.
 
அவர்களை தள்ளிவிடுவது ஒன்றும் அவனுக்கு சிரமமான காரியம் இல்லை தான். இருந்தாலும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் வேகமும் அவனுக்குள் வந்திருந்தது.
 
“நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா… என்னை கட்டி வைச்சுட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா… என்னை வதுகிட்ட இருந்து பிரிச்சு வைச்சா அவ என்னை மறந்திருவாளா இல்லை நான் தான் மறந்திருவேனா…”
 
“வதனா உன்னை மறந்திட்டா… நீ செத்துப் போயிட்டேன்னு தான் அவ நினைச்சிட்டு இருக்கா… இப்போ அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை தயாரா இருக்கு… அதை தான் நீ கெடுக்கணும்ன்னு நினைக்கறீயா??” என்று அவன் எதை சொன்னால் அடங்குவான் என்று பார்த்து அடித்தார் அவர்.
 
தன்னையே இந்த கதிக்கு ஆளாக்கியவர்கள் வதனாவிடம் தான் இறந்து விட்டதாக கதை கட்டியிருக்க சாத்தியம் உண்டு என்பதை அவன் மனம் ஒத்துக்கொள்ளத் தான் செய்தது அக்கணம்.
 
பின்னே அவன் அவளைப் பிரிந்து மூன்று வருடங்களுக்கும் மேலாகவே ஆகிபோயிருந்ததே!! வதனா தன்னை மறந்திருப்பாளா!! வேறு வாழ்க்கைக்கு அவள் தயாராகிவிட்டாளா!! என்று நினைக்கவே அவனால் முடியவில்லை.
 
அவர் சொல்வது அடியோடு உண்மையாக இல்லாவிட்டாலும் தன்னை குறித்து வதனாவிடம் அப்படி சொல்லியிருக்க கூடும் என்று எண்ணினான்.
 
தானும் அவளை பிரிந்து இத்தனை ஆண்டுகள் ஆனதினால் இடைப்பட்ட காலத்தில் எதுவும் நடந்திருக்க கூடும். எது எப்படியிருந்தாலும் ராம் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டிருப்பான் என்று மட்டும் உறுதியாய் நம்பினான்.
 
ராம் அவளை பார்த்துக் கொள்வதாய் சொல்லியிராத போதும் பிரியன் ஏனோ அப்படி எண்ணியிருக்கவில்லை.
 
இதோ சித்தப்பா என்று வந்து நிற்கும் இவர் போன்றவர்களிடம் நிச்சயம் அவளை விட்டிருக்க மாட்டான் என்ற எண்ணமும் ஓடியது.
 
அவனை பிடித்திருந்தவர்கள் பிடியை தளர்த்தியது கூட உணராதவன் எண்ணங்களின் பிடியில் ஆக்கிரமித்திருந்ததில் பொத்தென்று சோபாவில் விழுந்தான். அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பேசவாரம்பித்தார் குலசேகரன்.
 
“இப்போ புரிஞ்சுதா உனக்கு… மரியாதையா திரும்பவும் எங்கயாச்சும் தப்பிச்சு ஓடிரு…”
 
“அதை சொல்ல நீ யாரு??”
 
“உன்னையலாம் அப்படியே விட்டிருக்கணும் வதனாக்கு நீ நண்பன்னு நினைச்சு அந்த பிரவீனை உள்ளத்தூக்கி போட்டப்போ அப்படியே உன்னை உள்ளேயே இருக்கட்டும்ன்னு விட்டு வைச்சிருக்கணும்…”
 
“வெளிய கொண்டு வந்தது தப்புன்னு இப்போ புரியுது… எங்கப்பா சொன்னாரு இப்பவும் அவனை இந்தியாவுக்கு வரவே விடக்கூடாதுன்னு… நான் தான் உன்கிட்ட பேசினா புரிஞ்சுக்குவேன்னு சொல்லி உனக்கு பாவம் பார்த்தேன்…”
 
பிரியனுக்கு சில உண்மைகள் இப்போது புரிந்தது. பிரவீனால் ஜெயிலுக்கு சென்றவன் எப்படி வெளியே வந்தான் என்ற உண்மையை குலசேகரன் வாயிலாக அறிந்தான்.
 
இன்னமும் அவனுக்கு புரியாதது பெண்ணை பெற்றவரை விட்டு மற்றவர்கள் எல்லாம் ஏன் இதில் தலையிடுகிறார்கள் என்பது தான். அதை அவரிடமே கேட்கவும் செய்தான்.
 
“நீங்க யாருங்க இதெல்லாம் செய்யறதுக்கும் கேட்கறதுக்கும்… வதனாவோட அப்பா உயிரோட தானே இருக்காரு இல்லை செத்துட்டாரா…”
 
“டேய்…” என்று அவர் கர்ஜனை செய்ய “எங்கண்ணனால வரமுடியாது… அதெல்லாம் உனக்கு சொல்லணும்ன்னு எனக்கு அவசியம் இல்லை… ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதை கேட்டா உனக்கு நல்லது…”
 
“இல்லைன்னா என்ன செய்வீங்க??”
 
“திரும்பவும் உன்னை நாடு கடத்தவோ அடிச்சு துன்புறுத்தவோ போறதில்லை… அப்புறம் உன்னை கொல்றதும் எங்க நோக்கமில்லை… அதுக்காக எங்களால அதெல்லாம் முடியாதுன்னு நீ நினைக்க வேண்டாம்…”
 
“கொலை எங்க வேலையுமில்லை அதை செய்யறதை நாங்க விரும்பலை… சோ எங்களுக்கு தெரிஞ்சவரை உன்னை என்ன செஞ்சாலும் நீ தாங்குவேன்னு நல்லா புரிஞ்சு போச்சு….”
 
“அப்புறம் உங்கம்மா அப்பா வாழ்ந்து முடிச்சவங்க… ஆனா உன் தங்கச்சிக்கு இப்போ தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு… வெளிநாடு எல்லாம் போகப் போறாளாம்…”
 
‘என்ன என் தங்கை வாசவிக்கு கல்யாணம் ஆகிடுச்சா… நான் இல்லாமலே அது முடிஞ்சிடுச்சா…’ என்று யோசிக்க மனம் வலித்தது.
 
‘அவர்கள் இல்லாமல் தானே உன் திருமணமும் நடந்தது’ என்று அதே மனசாட்சி அவனை குத்திக்காட்டவும் தவறவில்லை.
 
தன்னால் அவர்களுக்கு ஒரு கஷ்டம் வருவதை அவன் விரும்பவில்லை. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலே குலசேகரனின் கைபேசி சிணுங்கியது.
 
அழைப்பை ஏற்று காதில் வைத்தவருக்கு எதிர்முனையில் கேட்ட செய்தி உவப்பானதாய் இருக்கவில்லை. கை கால்கள் எல்லாம் உதறல் எடுத்தது.
 
தன்னை சமாளித்துக் கொண்டவர் “இனி உன்கிட்ட சொல்ல வேற எதுவும் இல்லை… நீயே முடிவெடு, உன்னை எப்பவும் எங்களோட ஆளுங்க கண்காணிச்சுட்டே தான் இருப்பாங்க…” என்றார் அவர்.
 
வந்தபோது இருந்ததை விட இப்போது அவர் குரலில் வேறுபாடு இருந்தது. அதே மிரட்டல் தான் ஆனால் அதில் அழுத்தமில்லை. அதன் காரணம் அவனுக்கு அப்போது தெரியவில்லை.
 
“டேய் பார்த்துக்கோங்க… நான் அவசரமா கிளம்பணும், இவன் பதில் சொன்னதும் தான் இவனை வெளிய அனுப்பணும்…” என்று அவர் சொல்ல அதற்கு அவசியமே இல்லாமல் பிரியனின் குரல் வாசலுக்கு சென்றுக் கொண்டிருந்தவரை நிறுத்தியது. “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு போங்க…” என்றான்.
 
மனதிற்குள் ஒன்றை முடிவெடுத்தவனாய் நிமிர்ந்து நின்றிருந்தான். “நீங்க சொன்னதை கேட்டு பயந்து போய் இதை நான் ஒத்துக்கறேன்னு நினைச்சா நீங்க முட்டாள்…”
 
“இனி வதுவோட வாழ்க்கையில நானா தேடி போக மாட்டேன். ஒரு வேளை அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருந்தாலோ, அமையப் போறதா இருந்தாலோ அதை நான் போய் கெடுத்ததா இருக்கக் கூடாது…”
 
“அப்புறம் எங்க வீட்டு ஆளுங்களை எதுவும் செஞ்சிடுவேன்னு பேடிங்க மாதிரி பேசுறதை இன்னையோட நிறுத்திக்கோங்க…”
 
“வதுவுக்கோ அவங்களுக்கோ உங்களால எதுவும் ஆச்சுன்னு நடக்கற எதுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்…”
 
“நீங்க என்ன என்னை கண்காணிக்கறது நான் எப்பவும் உங்களை கண்காணிச்சுட்டு தான் இருப்பேன்… என்னை கடத்திட்டு போனப்போ என்ன ஏதுன்னு தெரியாம இருந்தா அந்த பிரியன் இப்போ இல்லைன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்…”
 
“அவ்வளவு தானா பேசிட்டியா, நான் கிளம்பணும்…” என்றார் அவர்.
 
“கடைசியா இதையும் கேட்டுட்டு போங்க… நானா என் வதுவை தேடி போக மாட்டேன்… சந்தர்ப்பமோ சூழ்நிலையோ எங்களை திரும்ப பார்க்க வைச்சா எந்த ஜென்மத்திலையும் அவளை என்கிட்ட இருந்து உங்களால பிரிக்கவே முடியாது…” என்று அழுத்தந்திருந்தமாக உரைத்தான்.
 
அவர் கிளம்பும் அவசரத்தில் அவன் பேசியதை பாதி கேட்டும் கேளாமல் கிளம்பிச் சென்றுவிட்டார்… பின் அங்கிருந்து கிளம்பியவன் தன் கையிருப்பை கொண்டு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினான். வாடகைக்கு வீடு கிடைக்கும் வரை அங்கேயே தானிருந்தான்.
 
உடனே வேலை கிடைக்குமா என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் தன் உழைப்பையே மூலதனமாய் கொண்டு சொந்த தொழில் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
 
வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்து குடியேறினான். அதே போல வாடகைக்கு மேலும் ஒரு இடம் பிடித்து அதை அவன் அலுவலகமாக்கினான்.
 
அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் உடனே எந்த வேலையும் கிடைத்து விடாதே. அப்போது தான் சையத்தின் உதவியை நாடினான்.
 
அவனுக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள் மூலமாய் உதவ முடியுமா என்று கேட்க அவனின் நண்பன் பெங்களூருவில் இருந்தவனை கைக்காட்டினான் அவன்.
 
சையத்தின் பெங்களூரு நண்பனுக்கு சென்னையில் தெரிந்த சிலரை பிடித்து பிரியனுக்கு உதவி செய்ய அவன் வேலையும் படிப்படியாய் உயர்ந்தது.
 
ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் நன்றாகவே வேலை செய்தான். குலசேகரனிடம் சொன்னது போல அவரை கண்காணித்தான்.
வதனாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர்கள் அறியாமல் நேரிலேயே சென்று கண்டு வந்தான். அவர்கள் வீட்டில் அடுத்தடுத்து எதிர்பாரா இழப்புகளினால் அக்குடும்பம் மிகுந்த துயரத்தில் இருந்தது.
 
அதன்பின் அவர்களை அவன் அதிகம் கண்டுக்கொள்ளவில்லை, ஆனாலும் ஒரேடியாய் விட்டுவிடவும் இல்லை. அவன் பார்வை எப்போதும் அவர்கள் மீது இருக்கும்படியே தானிருந்தான்.
 
அத்தனையும் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் சொல்லி முடித்திருக்க இந்தர் என்று அவன் வீட்டினராலும் பார்த்திபன் என்று மற்றவர்களாலும் அழைக்கப்படும் பார்த்திபேந்திரன் வியந்து போய் அமர்ந்திருந்தான் மற்றவன் சொன்னதை கேட்டு…
 
உருக்குலைக்க
செய்ததனைத்தும்
உருக்குலைந்து
தான் போனதுவோ
ஊருக்குள் வாராது
சத்ரு அவன்
செய்த வினை
அவனுக்கே
திரும்பியதோ…
மண்ணுலகில்
இல்லாது அவன்
வம்சம் தரிசாகி
போகிடுமோ…

Advertisement