Advertisement

அத்தியாயம் – 29
 
ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.
 
“சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்…” என்றான் மீண்டுமொருமுறை.
 
“கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்…” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.
 
“ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும், நான் ஒண்ணு ரெண்டு முறை பார்த்திருக்கேன். அது விகேபி அப்புறம் ராஜசேகர்ன்னு வரும்… இவங்க போன் வரும் போது தான் உங்களுக்கு மருந்து ஏத்துறது எல்லாம் நடக்கும்…”
 
பிரியன் அந்த பெயரை இதுவரை கேட்டதேயில்லை. ‘அவங்க யாரா இருக்கும், எதுக்காக இப்படி செய்யறாங்க… இதுனால அவங்க அடையற லாபம் என்ன??’
 
‘என்னை நாடுக்கடத்துற அளவுக்கு நான் எதுவுமே செய்யலையே… யார் செஞ்சிருப்பாங்க??’ அடுத்தடுத்த கேள்விகள் அவனிடத்தில்.
 
அவனை இப்படி தனித்தீவாய் நிற்க வைத்தவர்களை ஒரு முறையாவது நேரில் கண்டுவிட வேண்டும் என்ற வித்து அந்த நொடி அவன் மனதில் வெகு ஆழமாய் விழுந்தது. அது நடக்க அவன் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியதாய் போனது.
 
ஆனந்த் தொடர்ந்தான். “இதுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இருக்குமான்னு எல்லாம் எனக்கு தெரியாது… நீங்க கேட்டதுனால எனக்கு தெரிஞ்ச இந்த விஷயத்தை உங்ககிட்ட சொன்னேன் சார்…”
 
“தேங்க்ஸ் ஆனந்த்… நான் திரும்பவும் ஊருக்கு போக…”
 
“அது உங்களால இப்போதைக்கு முடியாது சார்…”
 
“நான் எங்கயும் போகணும்ன்னு எல்லாம் நினைக்கலை… நான் எந்த ஊர்ல இருக்கேன்னு இங்க வந்து தெளிவான பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன்…”
 
“இங்க இருந்து வெளிய போகுறது ஒண்ணும் சுலபமில்லைன்னு தெரியும் ஆனந்த்…. ஆனா என்னை எதுக்காக இங்க விட்டாங்க, அதைப்பத்தி எதுவும் தெரியுமா உனக்கு…”
 
“உங்களை இங்க யாருக்கிட்டயாச்சும் வேலை பார்க்க வித்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்… இங்கெல்லாம் குறைஞ்ச செலவுல வீட்டு வேலைக்கு ஆள் பார்ப்பாங்க…”
 
“என்னது வீட்டு வேலையா, ஆனா நான் வந்தப்போ ஏதோ குதிரை கொட்டில்ல தான் வேலை பார்த்தேன்…” என்று சொல்ல “இருக்கலாம் சார் அது மாதிரி வேலையும் இருக்கலாம்…” என்றான் அவன்.
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க சார்… உங்களுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு உங்க ஓனர் நினைக்கறது, அவரோட வேலைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுங்கறதுக்காக மட்டும் தான்…”
 
“எக்காரணம் கொண்டும் உங்களை வெளிய மட்டும் அனுப்ப மாட்டாங்க, சக்கையா தான் புழிவாங்க… உழைப்புக்கு தகுந்த ஊதியமும் தரமாட்டாங்க… சிலர் காசை மிச்சம் செய்யத்தான் இப்படி ஆளுங்களை காட்டிவிடச் சொல்லி வேலை வாங்கிக்குவாங்க…”
 
“நீ கொடுத்த தகவலுக்கு எல்லாம் ரொம்ப நன்றி ஆனந்த்…”
 
“இருக்கட்டும் சார்… நான் கிளம்பட்டுங்களா…” என்றவனின் பார்வை சுற்றுமுற்றும் பார்த்தது.
 
மற்றவனுக்கு நன்றியுடன் ஒரு தலையசைப்பை பரிசாக கொடுக்க அவனும் விடைப்பெற்று சென்றுவிட்டான்.
 
இரண்டொரு நாளில் அவன் நன்றாய் குணமடைந்திருக்க அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்த அந்த மலாய்க்காரர் வந்து அழைத்துச் சென்றார். அவரின் பெயர் முகம்மது.
 
மீண்டும் வேலை வேலை என அவன் பொழுது நகர்ந்தது. முன்பு போல் இறங்கி அவன் வேலை செய்ய வேண்டியதாயிருக்கவில்லை. அவனின் முதலாளிக்கு என்ன தோன்றியதோ இவனுக்கு மேற்பார்வை பார்க்கும் வேலைகள் மட்டுமே கொடுத்திருந்தார்.
அதுவே மிகப்பிழிவதாகத் தான் இருந்தது. மற்றவர்கள் சிறு தவறிழைத்தாலும் அதற்கு இவன் தானே பொறுப்பாவான். இப்படியே அந்த நாட்களெல்லாம் கடந்தது.
 
சில முறை இவன் வெளியே செல்ல முயன்றிருக்கிறான். அந்த முயற்சியெல்லாம் ஒவ்வொரு முறையும் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
 
பிரியன் அந்த நாட்டைவிட்டெல்லாம் போக நினைக்கவில்லை. அது அவனால் முடியாதும் கூட, ஏனென்றால் அவனின் பாஸ்போர்ட் விசா எல்லாமே அந்த முகம்மதுவின் வசம்.
 
ஆரம்பத்தில் அவனின் பாஸ்போர்ட் எப்படி அவரிடம் வந்திருக்கும் என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அது அவன் வெளிநாடு செல்வதற்காய் அலுவலகத்தில் கொடுத்து வைத்திருந்தது.
 
அந்த ஓனர் வைத்திருந்தது அவனின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தான் என்பதை ஒரு முறை அவர் அவன் வெளியே செல்ல முயலும் போது அதைக்காட்டி அவனை மிரட்டி இருக்கச் செய்த போது பார்த்திருந்தான்.
 
ஆக தன்னை திட்டமிட்டே தான் நாடு கடத்தியிருக்கின்றனர் என்று அவனுக்கு புரிந்தது. நடந்த விஷயங்களை வைத்து அவன் ஊகித்தது அவர்கள் நிச்சயம் பணபலமும் அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்தவர்கள் என்பதும் தான்.
அதனால் அவன் தப்பிக்கவெல்லாம் யோசிக்கவில்லை, வெளியே சென்று வர நினைத்தான். யாருக்கேனும் போன் செய்து முயற்சிக்கலாம் என்பது அவன் எண்ணம்.
 
அவன் இருந்த இடம் ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமான இடம். சுற்றிலும் அதிகம் வீடுகளில்லை. அதனாலேயே வெகு சுலபமாய் பிடிபட்டும் போவான்.
 
அவன் வேண்டுதலெல்லாம் வதனாவை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதும் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களை நேரில் பார்க்க வேண்டுமென்பதும் தான்…
 
கஷ்டமான அத்தருணங்களில் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கிக் கொண்டிருந்தான் அவன். இரண்டு வருடங்கள் கடந்திருந்த வேளையில் அந்த முகம்மதுவின் மகன் சையத் வந்திருந்தான்.
 
அமெரிக்காவின் தன் படிப்பை முடித்து சொந்த நாடு திரும்பியிருந்தான் அவன். அன்று தற்செயலாய் தந்தையின் குதிரை கொட்டில் பார்க்க வந்திருந்தான். அவனுக்கு குதிரை ஓட்டுவது மிகப்பிடிக்கும்.
 
முகம்மதுவிடம் இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகள் உண்டு. அதையெல்லாம் அவர் ரேஸ் விடுவதற்கும் விற்பதற்கும் வளர்ந்து வந்தார்.
 
ஒவ்வொரு வருடமும் புது குதிரைகள் வருவதும் போவதுமாய் இருப்பதுண்டு. சையத் வந்திருந்தவன் குதிரை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் சுற்றி வந்தான்.
 
பின் அங்கிருந்த அவர்கள் அலுவல் அறையில் அமர்ந்து அவன் மடிகணினியுடன் சிறிது நேரமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.
 
பிரியன் அவனைத் தான் பார்த்திருந்தான், அவன் வந்ததும் ஒரு சினேக சிரிப்புடன் கடந்திருந்தான் முகம்மது அறிமுகம் செய்த போது.
 
மெதுவாய் அவனருகே சென்றவன் “மே ஐ ஹெல்ப் யூ…” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க மற்றவனோ இவனை மேலிருந்து கீழாய் பார்த்தவன் என்ன தோன்றியதோ “எஸ் ப்ளீஸ்…” என்றுவிட்டு மற்றவனுக்கு இடம் கொடுத்தான் சையத்.
 
பிரியன் ஹைதராபாத்தில் இருந்த போதே கணினியை வெகு ஆர்வமாய் கற்றவன், சாப்ட்வேர் மட்டுமல்லாது ஹார்வேரும் அவனுக்கு அத்துப்படி.
 
ஒரு பத்து நிமிடம் அதையும் இதையும் செய்ய இப்போது அக்கணினி உயிர்பித்து வேலை செய்ய அதுவும் நன்றாகவே வேலை செய்தது.
 
சையத் அவனுக்கு நன்றியுரைத்து சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தான். அவன் முகம்மதுவிடம் என்ன சொன்னானோ ஏது சொன்னானோ இரண்டொரு நாளில் பிரியனை சையத் தன்னுடனே வைத்துக் கொண்டான்.
அவனிடம் நடந்ததனைத்தும் சொல்லியிருந்தான் பிரியன். அதைக்கேட்ட மற்றவனுக்கு வருத்தமாயிருந்தது. தன்னால் அவனுக்கு செய்ய முடிந்த உதவியை செய்ய நினைத்தான் அவன்.
 
உடனே பிரியனை அவன் நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை அவன். மாறாய் அவனை தன்னுடன் வைத்துக்கொண்டு அவன் புதிதாய் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கினான்.
 
தனக்கு தெரிந்த உத்திகளனைத்தும் பிரியனுக்கு கற்றுக் கொடுத்தான். அவனிடம் இருந்து தானும் கற்றுக்கொண்டான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆசானாய் இருந்து கற்கவும் கற்றுக்கொள்ளவும் முனைந்தனர்.
 
பிரியனுக்குள் நம்பிக்கை விதை முளைக்க ஆரம்பித்திருந்தது. தான் மீண்டும் தன் தாயகம் திரும்புவோம் என்று.
 
அவன் நம்பிக்கை பொய்க்காது ஓர் நாள் சையத் அவனை அழைத்தான். “பிரியன் திஸ் இஸ் பார் யூ” என்று சொல்லி அவனிடம் ஒரு கவரை கொடுத்தான்.
 
பிரியனும் என்னவென்ற பார்வை மற்றவனை நோக்கி கொடுக்க அவனோ பிரித்துப்பார் என்பதாய் சைகை காட்டினான். அதை பிரித்து பார்த்தவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை.
 
அதில் அவனின் பாஸ்போர்ட், விசா மற்றும் அவன் இந்தியா செல்வதற்கான டிக்கெட் அனைத்தும் இருந்தது. எப்போது செல்வோம், செல்வோமா, மாட்டோமா என்றிருந்தவனுக்கு அதை கண்டதும் கண்களின் ஓரம் லேசாய் நனைந்தது.
 
“கூல் ப்ரோ…” என்றவன் அவனிடம் கத்தையாய் மலேசிய நோட்டுக்களை திணித்தான்.
 
“திஸ் இஸ் பார் யூ… யுவர் சேலரி அமௌன்ட்”
 
பிரியனுக்கு திக்குமுக்காடி போனது. “எதுக்கு இவ்வளவு எல்லாம்??” என்றான் அவன் மற்றவனிடத்தில் ஆங்கிலத்தில்.
 
“இப்போ கொடுத்ததே கொஞ்சம் தான்… நீங்க ரொம்ப கேஷ் எடுத்திட்டு போக முடியாதுல அதனால கம்மியா தான் இருக்கு… நீங்க உங்க ஊருக்கு போனதும் பேங்க் அக்கவுன்ட் ஓபன் பண்ணிட்டு சொல்லுங்க, அதுல போடுறோம்…”
 
“எனக்கு ஏற்கனவே அக்கவுன்ட் இருக்கு…”
 
“அது ஆக்டிவ்வா இருக்கான்னு தெரியாது இல்லையா… சோ நீங்க செக் பண்ணிட்டு சொல்லுங்க… இன்னும் ஒரு வாரத்துல நீங்க கிளம்ப வேண்டி இருக்கும்… உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க…” என்றவன் பிரியனுக்கு ஒரு கைபேசியையும் பரிசளித்தான்.
 
பிரியனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது அக்கணம்… இன்னும் ஒரு வாரத்தில் தன் மனைவியை காணப் போகிறோம் என்பதே உவப்பானதாய் இருந்தது அவனுக்கு.
 
அனால் அதற்குள்ளாக காலம் விட்டுவிடுமா என்ன?? அவன் அவளை காணப்போகும் நாள் வெகு தொலைவில் இருந்ததை அவனறியான்.
 
மலேசியாவில் இருந்து அவன் கிளம்பும் நாளும் வந்தது. முகம்மதுவும் சையத்தும் அவனை வழியனுப்ப விமான நிலையத்திற்கே வந்திருந்தனர்.
 
ஒரு வழியாய் விமானத்தில் ஏறி அமர்ந்தவனின் நிம்மதியான உணர்வை சொல்லி மாளாது. அதற்கு ஆயுசு குறைவென்றாலும் அந்த நொடி நிறைவாகவே உணர்ந்தான் அவன்.
 
விமானம் ஹைதராபாத் வந்தடைந்தது. அவன் இறங்கி வெளியில் வர அவன் முன் வந்து நின்றது ஒரு டவேரா.
 
அவன் அதை உணருமுன்னே அவனை இழுத்து அதில் போட்டிருந்தனர். பிரியனும் திமிறவெல்லாம் இல்லை, அங்கிருந்தவர்கள் யார் யார் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“உங்களை யார் அனுப்பினா??”
 
“அதை நீயே அங்க போய் பார்த்து தெரிஞ்சுகோ” என்றான் ஒருவன்.
பிரியனும் மேற்கொண்டு அவர்களிடம் பேச்சை வளர்த்தவில்லை. வண்டி வெகு நேரம் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் அவன் ஓரிடத்தில் நிறுத்த இறங்கினால் அங்கு பெரிய பங்களா வீடொன்று இருந்தது.
 
அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள் ஒன்றும் இல்லை. அது ஒரு பண்ணைத் தோட்டத்துடன் இணைந்த வீடு போலும்.
 
“உள்ள போ…” என்று ஒருவன் அவன் கழுத்தில் கை வைத்து தள்ள சுள்ளென்று மூண்ட கோபத்தில் அவனை ஓங்கி ஒரு அறைவிட்டான்.
 
ஒரு அறைக்கே அவன் சுருண்டு விழுந்தான் சற்று தள்ளி. பிரியனின் கைகள் வேலை செய்து செய்து நன்றாய் உரமேறி இருந்தது. தவிர சையத்துடன் சேர்ந்ததில் இருந்து அவனின் பிரத்தேயக ஜிம்மில் அவனும் பயிற்சி எடுத்துக் கொண்டான்.
 
தற்காப்பு கலைகள் கற்க வேண்டுமென்ற அவன் விருப்பத்தையும் சையத் நிறைவேற்றிக் கொடுத்திருந்தான்.
 
“ஹேய்…” என்று கத்திக்கொண்டு மற்றவர்கள் அவனை நோக்கி வர “உங்க கூட எல்லாம் சண்டை போடுற மூட்ல நான் இல்லை… நீங்க என்னை தொடாம வந்தா நான் பேசாம இருப்பேன்…”
 
“இல்லன்னா அத்தனை பேருக்கும் மூக்கு உடையும் பரவாயில்லையா…” என்றான்.
 
தலைவன் போலிருந்தவன் “டேய் விடுங்கடா முதல்ல அவனை அய்யா பார்க்கட்டும்…” என்றுவிட ‘அய்யாவா யார் அவர்…’ என்று சிந்தனையோடே அவன் சென்றான்.
 
அங்கு அவன் கண்டது குலசேகரனை தான். வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்து பெரிய மனித தோற்றத்தில் இருந்தவரை கண்டதும் மற்றவர்கள் கும்பிடு போட பிரியன் அவரை அளவிடுவது போல பார்த்திருந்தான்.
 
“பெரியவங்களை பார்த்தா மரியாதை கொடுக்கற பழக்கம் இல்லையா உனக்கு…” என்றான் ஒருவன் ஏக வசனத்தில்.
 
பிரியன் அவனை வெறுமே திரும்பி பார்த்து முறைத்திருந்தான். குலசேகரனோ அவர்களை கையமர்த்தி வெளியே செல்லுமாறு சைகை செய்தார்.
 
“அய்யா இவன் கொஞ்சம் முரடனா…”
 
“நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க…” என்றுவிட்டு பிரியனை திரும்பி பார்த்தார்.
 
“உட்காரு…” என்று அவர் சொல்லி முடிக்குமுன்னே அவன் உட்கார்ந்திருந்தான். எதுவாகினும் எதிரே இருப்பவரே பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தான்.
“இப்போ எதுக்கு இங்க வந்தே??”
 

Advertisement