Advertisement

அத்தியாயம் –28
 
எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.
 
கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.
 
இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”
 
“நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு மேல ஒரு பிரிவை என்னால எப்பவும் தாங்கவே முடியாது… இதுவரைக்கும் அவங்க என் வாழ்க்கையை ஆட்டி வைச்சாங்க, இனி அவங்களை நான் ஆட்டி வைக்கப் போறேன்…”
 
“வல்லா அவங்க செல்வாக்கான ஆளுங்க… நம்மால முடியாதுன்னு”
 
“இருக்கட்டும் ராம், யானை காதுல போன எறும்பு மாதிரி அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்க என்னால முடியும்…”
 
“வல்லா நான் உடனே கிளம்பி அங்க வர்றேன்”
 
“வேண்டாம் ராம் தேவைப்படாது, நான் பார்த்துக்கறேன்…”
“வல்லா… கபிலன் நாளைக்கு சென்னை வர்றான், நான்அவன்கிட்ட பேசறேன், உன்னை பார்க்க சொல்லியிருக்கேன்… உனக்கு எதுவும் உதவி தேவைன்னா அவன்கிட்ட கேளு வல்லா… அவனுக்கு கொஞ்சம் பொலிட்டிக்கல் சைடுல இன்ப்ளுயன்ஸ் இருக்கு…”
 
“தேங்க்ஸ் ராம் கபிலன் வரட்டும் நான் பார்த்துக்கறேன்…” என்றுவிட்டான் அவன்.
 
மறுநாள் வல்லவரையனின் முன்னிருந்தான் அவன்.“உன்னால மட்டும் தான் எனக்கு உதவ முடியும்…” என்றான் வல்லவரையன்.
 
“எப்படி சொல்றீங்க??”
 
“நீ யாருன்னு எனக்கு தெரியும்??”
 
“அதை கண்டுப்பிடிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆச்சா??”
 
“உங்க அளவுக்கு எனக்கு செல்வாக்கு இல்லையே… தாமதம் தான் ஆனா ரொம்ப இல்லை…” என்ற பதில் எதிரில் இருந்தவனை புன்னகைக்க வைத்தது.
 
“நான் என்ன பண்ணணும் அப்படிங்கறது தெரியறதுக்கு முன்னாடி உங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியணும்…”
 
“அது இதுக்கு இப்போ??”
“எனக்கு மட்டுமில்லை எல்லாரும் அது தெரியத்தான் காத்திட்டு இருக்காங்க…”
 
“ஏன் உனக்கு தெரியாதா??”
 
“கொஞ்சம் தான் தெரியும், நீங்க சொன்னா தான் தெரியும் நீங்க அதுல எவ்வளவு பாதிக்கப்பட்டீங்கன்னு… தவிர அப்போ எனக்கு அவ்வளவு விவரமில்லை… இப்போதான் இந்த விஷயம் கூட தெரியும்…”
 
அது நாள் வரை தன் மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்திருந்த அந்த இருண்ட பக்கத்தை ராமிற்கு பிறகு அவனிடம் தான் சொல்லவாரம்பித்தான் வல்லவரையன்.
 
அந்த நாளின் நினைவுகள் கண்களில் ஈரத்தை வரவழைத்தது. பளபளப்பாய் அது மின்னியதில் எதிரில் இருந்தவனுக்கு அவனின் வலி புரிந்தது.
 
——————–
 
வதனாவிடம் கோபத்தை காட்டிவிட்டு வெளியில் வந்து நின்றிருந்தவனுக்கு அந்த கோபம் ஒரே நொடியில் சென்றுவிட்டது.
 
‘ச்சே அவசரப்பட்டு கோபப்பட்டுடனே… என்னை நம்பி தானே வந்திருக்கா, அவளுக்கு யாரு இருக்கா… எனக்குசட்டுன்னு கோபம் வருது… நான் ஒரு மடையன்…’ என்று தன் பின் தலையில் தானே தட்டிக்கொண்டான்.
 
‘உள்ள போவோம்…’ என்று எண்ணி அவன் திரும்பவும் அந்த நொடி ஒரு வித்தியாசமான நெடியை உணர அடுத்து நிகழ்ந்தது எதுவும் அவனுக்கு தெரியவில்லை.
 
கண்களை திறக்கவே முடியவில்லை, தலையும் வெகு பாரமாய் இருந்தது.சிரமப்பட்டு அவன் கண்களை திறந்து திறந்து மூடியவன் நன்றாய் விழிக்க நேரம் பிடித்தது.
 
கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தானிருப்பதை அப்போது தான் உணர்ந்தான். சுற்றிலும் பார்க்க அது முற்றிலும் வேறான ஒரு இடம் என்பதை உணர்ந்தான்.
 
தான் எதற்காய் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்று கூட அவனுக்கு புரியவில்லை. ‘எதுக்கு இப்படி பண்றாங்க?? யாருக்கு என் மேல கோபம்??’ என்று நினைத்த நொடி அவன் கண்முன் தோன்றியது பிரவீன் தான்.
 
‘அய்யோ எல்லாத்துக்கும் காரணம் பிரவீன் தானா… அப்போ வது என்னோட வதுக்கு என்னாகியிருக்கும்…’ என்று மனம் ஓலமிட “யாராவது இருக்கீங்களா??” என்று சத்தமாக கத்தினான் அவன்.
 
சத்தம் கேட்டு அவனை கட்டி வைத்திருந்தவர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் தெலுங்கில் “நீ என்ன சொன்னே??” என்று கேட்க இவனோ “என்னை எதுக்கு இப்படி கட்டிப்போட்டு வைச்சு இருக்கீங்க??” என்றான்.
 
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது…” என்றான் ஒருவன்.
 
“இப்படியே இருந்தா மட்டும் யாரும் கண்டுப்பிடிக்க மாட்டாங்களா என்ன… என் வைப் என்னைக் காணோம்ன்னு போலீஸ்ல கம்பிளைன்ட் பண்ணுவா, அப்போ நீங்க எல்லாரும் மாட்டத்தானே செய்வீங்க…”
 
“அதெல்லாம் என்ன பண்ணணும்ன்னு எங்களுக்கு தெரியும்” என்றான் முதலாவது பேசியவனே.
 
“உங்களை அனுப்பினது பிரவீனா?? எங்க அவன் கூப்பிடுங்க அவனை…” என்று இவன் கட்டி வைத்திருந்த சேரில் இருந்து திமிறி எழ முயற்சி செய்ய அவர்களில் ஒருவன் “நல்லாயிருக்கே அந்த பிரவீனையே நாம மாட்டிவிடலாம் போல இருக்கே??” என்று சொல்லவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
 
‘அப்போ இதுக்கு பிரவீன் காரணமில்லையா’ என்று யோசிக்கவும் அவனில்லை என்றே இப்போது தோன்றியது.
 
பிரவீனாயிருந்தால் அவனின் ஒரே நோக்கம் வதனாவை அடைவது தான், பிடித்திருந்தால் இருவரையுமே தான் அவன் பிடித்திருக்க வேண்டும். ஆனால் நான் மட்டும் ஏன்?? யாராய் இருக்கும்?? என்ற யோசனைக்கு முடிவு தான் இல்லை அவனிடத்தில்.
 
“அப்போ யாரு இப்படி செஞ்சதுன்னு ப்ளீஸ் சொல்லுங்க??”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்லை…” என்றவன் தான் அவர்களுக்கு தலைவனாயிருப்பான் போலும். அவனின் கண்ணசைவில் மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.
 
ஒருவன் மீண்டும் இவனிடத்தில் எதையோ கொண்டு வர பிரியன் சுதாரித்துக்கொண்டு முகம் திருப்ப அவன் வலுக்கட்டாயமாய் பிரியனை மயங்கச் செய்தான்.
 
அடுத்து அவன் கண் விழிக்கும் போது கசகசவென்ற பேச்சுக்குரல் கேட்டது. அதை காதில் வாங்க முயன்றான் பிரியன்.
 
“இவனை நாடு கடத்தச் சொன்னாங்க அது தான் இப்போ நமக்கு முதல் வேலை… இன்னும் கொஞ்சம் நேரத்துல இவனோட பாஸ்போர்ட் எல்லாம் வந்திடும், இவனுக்குவிசாவும் கொஞ்ச நாள்ல வந்திடும் அதுவரைக்கும்…” என்றவனின் பேச்சு இப்போது சுத்தமாய் கேட்கவில்லை அவனுக்கு.
 
பிரியனின் உடலில் இருந்த அத்தனை செல்களும் விழித்துக் கொண்டன. அவன் மூளை இப்போது வதனாவை குறித்து யோசிக்க ஆரம்பித்தது ‘கடவுளே இப்போ அவ என்ன செய்வா, என்னை காணோமேன்னு தவிச்சு போயிருப்பாளே நான் என்ன செய்வேன்’
 
‘அவளுக்கு இங்க யாரையுமே தெரியாதே… அவளை தனியா விடக்கூடாதே… என்ன செய்ய…’ என்ற எண்ணமே அவனுக்குள் ஓடியது.
 
அந்த அறையில் ஒரு கடிகாரம் இருந்தது நிமிர்ந்து அதைப்பார்க்க மணி ஐந்தை காட்டியது அது. இவ்வளவு நேரமாகவா தான் இவர்களிட மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வேறு ஓடியது.
 
சுற்று முற்றும் பார்த்தான் எதுவாவது ஒரு வழி இருக்கிறதா இங்கிருந்து தப்பிக்க என்று. கண்கள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தது.
 
அவன் தப்பிக்கும் மார்க்கம் மட்டும் தெரியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டான். மூடிய இமைகளுக்குள் வதனாவின் முகமே வந்து அவனை இம்சைக்குள்ளாக்கியது.
 
அவளை தனித்துவிடக் கூடாது என்று அவன் மனம் திரும்ப திரும்ப உருப்போட்டுக் கொண்டே இருந்தது. அப்படியொரு மனநிலையில் தான் அங்கிருந்த போன் அவன் கண்ணில்ப்பட்டது.
 
யாருக்கு போன் செய்வது என்ற ஆராய்ச்சி தான் இப்போது அவனுக்குள். அவன் கைப்பேசி இப்போது அவன் வசம் இல்லையென்பதை அவனறிவான்.
 
அவன் முதலில் கூக்குரலிடும் போதே வந்தவர்களில் ஒருவனின் கையில் இவன் கைப்பேசி இருந்ததை பார்த்திருந்தான்.
 
எல்லா எண்ணும் அதில் தானிருக்கிறது. கைப்பேசி வந்தது மறதியையே உண்டு செய்திருந்தது அனைவரிடத்திலும்.
 
மூளை சேமித்து வைத்திருந்த எண்கள் போக பின்னே டெலிபோன் டைரியில் பதிந்து வைத்திருப்போம். இப்போது எல்லாமே கைப்பேசியில் என்ற போது யார் எண்ணும் அவன் நினைவிற்கு வரவில்லை.
 
அவன் அன்னை தந்தை எண்ணை தவிர வேறு எண்கள் ஞாபகத்தில் வரவில்லை, ராகேஷ் வேறு ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அவனையும் அழைக்க முடியாது.
 
அப்படி அவன் நினைக்கும் வேளை தான் இவனை அமர்த்தியிருந்த ஒற்றை இருக்கை சோபா நாற்காலிக்கு முன்னே இருந்த டீப்பாய் மேஜையின் அடியில் போன் இன்டெக்ஸ் பார்த்தான்.
 
அது பார்க்கும் போதே தெரிந்தது, பழைய இன்டெக்ஸ் என்று. இருந்தாலும் அது ஏதாவதொரு வகையில் தனக்கு உதவாதா என்ற நப்பாசை அவனுக்கு.
 
கொஞ்சம் சிரமப்பட்டு தன் கைகளை கட்டியிருந்த கயிற்றில் இருந்த தளர்வாக்கினான். வெகு நேரமாய் முயற்சி செய்வதால் அது தன் பிடியை சற்றே தளர்த்தியிருந்ததும் ஒரு காரணமே.
 
இன்னும்கொஞ்சம்முயன்றால் ஒரு கையை வெளியே எடுக்க முடியும் என்று தோன்ற உடம்பையும்கையையும் இப்படியும் அப்படியுமாக அசைத்து ஒரு பிடி மொத்தமாய் தளர்ந்திருந்தது.
 
அதை விடுவித்த பின்னே சுலபமாகவே அந்த இன்டெக்ஸ் வெளியே எடுத்துவிட்டான். மூளையில் சட்டென்று ஒரு மின்னல் மின்ன முதலில் வேண்டாமென்றும் பின் அதில் தவறில்லை என்றும் அவன் மனமும் புத்தியும் மாற்றி மாற்றி போராட்டம் செய்து பின் புத்தி மனத்தை வென்றுவிட அதன்படி நடந்தான் பிரியன்.
 
அவன் எண்ணத்தில் இப்போது ராம் வந்திருந்தான். உதவியை அவனிடமே கேட்பதென்பது தான் இப்போதைய அவன் முடிவு.
 
அவன் எதிரியானவன் தான் ஆனால் நேர்மையானவன் என்பதறிவான் பிரியன். ஒருவாறுஅங்குமிங்கும் புரட்டி ராமின் அலுவலக எண்ணைத் தான் கண்டுப்பிடிக்க முடிந்தது.
 
அது போதாதே அவனுக்கு, இந்த அதிகாலை நேரத்தில் அலுவலகம் இருக்காதே. இனியும் தாமதித்தால் எப்படியும் அங்கு இருப்பவர்களின் கண்ணில் அவன் செய்யப்போவது தென்பட்டுவிடுமே.
 
மூளையை கசக்கி ராமின் தந்தையின் பெயரை மனதில் கொண்டு வந்தான். அதைவைத்து அவர்களின் வீட்டு முகவரியை கண்டுப்பிடிக்க அதில் இருந்த எண்ணை குறித்துக்கொண்டான்.
 
ஒரு தடையை கடந்தாயிற்று அதாவது போன் எண்ணை கண்டுப்பிடித்தாயிற்று. அது மட்டும் போதாதே இனி ராமிற்கு பேசவேண்டும்.
 
ராம் அவன் பேசுவதை உண்மையென்று நம்ப வேண்டும், இவ்வளவிற்கு பின் அவன் வதனாவை காப்பாற்ற ஒப்புக்கொள்ள வேண்டுமே… பிரியனின் மனதில் இப்போதிருந்தே பிரார்த்தனை தான்.
 
அவனை கட்டியிருத்த சோபா நாற்காலியை ஒட்டி நான்கு பேர் அமரும் சோபா இருக்க அதற்கு மறுபுறம் இன்னுமொரு தனியிருக்கை அதை ஒட்டியே டேபிளில் இருந்தது அந்த போன்.
 
அவனின் வலக்கை இன்னமும் இருக்கையில் தான் பிணைந்திருந்தது. இடக்கையால் வலக்கையின் முடிச்சை அவன் அவிழ்க முயல அது சற்றும் முடியவில்லை அவனால்.
 
இதற்கு மேல் முயற்சிப்பது வீண் என்று தோன்ற நேர விரயம் செய்யாமல் அடுத்ததை பார்ப்போம் என்றுவிட்டான்.
 
இருக்கையில் இருந்து அவனால் எழ முடியாது ஆனால் அதை நகர்த்த முடியும் என்று தோன்ற மெதுவாய் நகர்ந்தான் அவன்.
 
சோபாவை அப்புறப்படுத்தாமல் அவனால் அந்த புறம் செல்ல முடியாது. தன் காலால் மெல்ல சோபாவைபின்னால் கொஞ்சம் கொஞ்சமாய் சத்தம் வராமல் நகர்த்தினான்.
 
அவன் கட்டப்பட்டிருந்த இருக்கை நகரும் அளவிற்கு அவன் தள்ளியிருக்க இருக்கையுடனே மெதுவாய் நகர்ந்தான் அவன்.

Advertisement