Advertisement

அத்தியாயம் – 1

 

சுவாமியே சரணம் ஐயப்பா

ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா

மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா

வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா

கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா…

 

இன்று காலை

 

கார்த்திகை மாதம் முதல் தேதி பிறந்தாலே விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம்.

 

அதில் பிரியனும் ஒருவனே. அதிகாலையில் எழுந்து குளித்து ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

 

வீட்டிற்கு வந்தவன் கடவுளின் முன்னே நின்று ஐயப்பச் சரணத்தை சொல்லி வழிபாடு செய்து முடித்து காலை உணவை அருந்தியவன் வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.

 

வெறும் காலுடன் சாலையில் நடக்க ஆரம்பித்தான். இந்த ஐந்து வருடங்களாகத் தான் அவன் சபரிமலைக்கு செல்வது.

 

அதற்கு முன்பு வரை அவனிருந்த இடமே வேறு. தன் சுயம் தொலைத்து அவன் இப்போது இருக்கும் இடம் வேறு.

 

அவன் வழமையாய் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தான் இப்போது. அவன் அருங்காட்சியகத்தை வந்தடைய அங்கு ஒரே பரபரப்பு….

____________________

 

இன்று இரவு

 

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். அந்த அறையில் இருந்த அவளின் தொலைப்பேசி தொடர்ந்த அழைப்பைக் கொடுக்க மெதுவாய் கண்விழித்திருந்தாள்.

 

அவள் வந்து படுக்கும் போதே இரவு வெகுநேரமாகிப் போயிருந்தது. சில நேரங்களில் இப்படி தான் நடக்கும் என்பதை அவளறிந்தாலும் ஏனோ இன்று எழவே பிடிக்கவில்லை அவளுக்கு.

 

முக்கியம் அல்லாத விஷயத்திற்கு யாரும் அவளை அழைத்திருக்க மாட்டர் என்றறிவாள் அவள். எழுந்து அருகிருந்த கைபேசியை பார்க்க அதில் பல அழைப்புகள் தவறவிட்டிருந்தாள்.

 

மாலை நடந்த மீட்டிங்கின் போது கைபேசியை சைலன்ட்டில் போட்டிருந்தாள். அதை எடுக்க மறந்திருந்தாள் அப்போது.

 

தொலைப்பேசி அடித்து ஓய்ந்து மீண்டும் சத்தம் கொடுக்க ஆரம்பிக்க அவசரமாய் எழுந்து அதனருகில் சென்று அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

எதிர்முனை சொன்ன சேதியில் பதட்டம் அவளுக்கும் வந்திருக்க வேண்டும் முகமதை காட்டியது.

 

வேகமாய் சென்று வேறு உடைக்கு மாறியவள் கைபேசியை நார்மலுக்கு மாற்றி அங்கிருந்து வெளியில் வந்தாள்.

 

கீழே இறங்கி வந்து பார்க்க காவலர்களிடம் சலசலப்பு அவள் வரவைப் பார்த்து.

 

“மேடம் வர்றாங்க, கொஞ்சம் அமைதியா இருங்க!! அவங்க பார்த்துக்குவாங்க!!” என்பது போன்ற குரல்கள் கொஞ்சம் சத்தமாய் எழுந்து அவள் படியிறங்கி அவர்களை நோக்கி வந்த போது சுத்தமாய் அடங்கியிருந்தது.

 

புதிதாய் வந்திருந்த காவலன் அவன் “யார் இவங்க?? எதுக்கு எல்லாரும் கப்சிப்ன்னு ஆகிட்டாங்க” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை அருகிலிருந்தவரிடம் கேட்க அவரோ அவனை முறைத்து பார்த்தார்.

 

‘கேள்வி கேட்டா குத்தமா அதுக்கு எதுக்கு இவரு முறைக்கிறாரு’ என்று எண்ணிக்கொண்டவன் பார்வையில் கடுமையுடன் வந்து நின்றவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘இவங்க யாரா இருக்கும்!! பார்க்கவே ஏதோ சொர்ணாக்கா மாதிரி இருக்காங்க!! கொஞ்சம் கூட கருணையோ!! கனிவோ!! இல்லையே இவங்க முகத்துல’ என்ற எண்ணம் அவனுக்கு.

 

‘என்ன தான் சொல்லப் போறாங்கன்னு பார்ப்போம்’ என்ற ரீதியில் வந்திருந்தவளை பார்த்தான்.

 

“எங்க வைச்சிருக்கீங்க??” என்று மட்டும் தான் கேட்டாள் அவள்.

 

“இந்த அறையில தான் பூட்டி வைச்சிருக்கோம். எவ்வளவு கேட்டாலும் முன்னுக்கு பின்னாடி முரணா பேசிக்கிட்டு இருக்கான் மேடம்”

 

“அவன் பேசுற எதுவும் உண்மை போலவே இல்லை” என்றார் முன்னால் வந்து நின்ற அதிகாரி.

 

“கபிலன்” என்றழைக்க அவர் முன்னால் வந்து நின்றார்.

 

“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? இதெல்லாம் ஏன் பார்க்கலை, இவ்வளவு டைட் செக்யூரிட்டி இருக்கும் போது அவனை எப்படி உள்ள விட்டாங்க??”

 

“செக்யூரிட்டி பொறுப்பு உங்களோடது தானே?? அதுல இன்னும் கவனமா இருக்கணும்ன்னு உங்களுக்கு தெரியாதா??” என்று கபிலனை சரமாரியாக கேள்வி கேட்டு அவரை ஒரு வாங்கு வாங்கியவள் அடைத்து வைத்திருந்த கதவை திறக்கச் சொன்னாள்.

 

“அவனை வெளிய கூட்டிட்டு வாங்கன்னு நான் சொன்னா தான் கூட்டிட்டு வருவீங்களா” என்று முறைக்க ஒரு பயத்துடனே உள்ளிருந்தவனை இழுத்து வந்தார் அதிகாரி ஒருவர்.

 

“யார் நீ??” என்று அவள் கேள்விகேட்க வாங்கியிருந்த அடியில் சற்று மயக்கமாயிருந்தான் போலும் அவன். பேசும் குரல் கேட்க பதில் சொல்ல நிமிர முயற்சித்தான் நிமிர முடியவில்லை அவனால்.

 

அவள் கண்களால் ஜாடை காட்ட ஒருவர் அவன் முகத்தை நிமிர்த்தினார்.

 

எதிரிலிருந்தவனை பார்த்ததுமே அவளுக்கு அடையாளம் தெரிந்தது, மனமோ ‘இவனா?? இங்கெப்படி?? தெரிந்து வந்தானா?? இல்லை தெரியாமலா??’ என்ற தொடர் கேள்விகள் எழுந்தது மனதில்.

 

“யார் நீ?? இங்க எதுக்கு வந்தே??” என்று உறுமலாய் கேட்டவளை அப்போது தான் பார்த்தான்.

 

லேசாய் சிரித்தானோ என்பது போல் இருக்க அப்படியொன்று இல்லவேயில்லை என்பது போல் பாவம் அவனிடத்தில்.

 

இப்போது சத்தம் போட்டு சிரித்தான். சொன்னான் நான் “கவர்னரை கொல்ல வந்திருக்கேன்” என்று.

 

“மேடம் இப்போ தான் அவன் உண்மையை பேசி இருக்கான். இவ்வளவு நேரம் அடிச்சு உதைச்சு பார்த்தோம் பதிலே இல்லை!! நீங்க வந்ததுமே உண்மையை சொல்லிட்டான்” என்று அவளை காக்கா பிடிக்க கூறிய அதிகாரியை துச்சமாய் பார்த்தாள் அவள்.

 

“எப்படி இன்னைக்கு காலையில அவர் ஊருக்கு போயிட்டார்ன்னு தெரிஞ்சு அவரை நீ கொல்ல வந்தியா??”

 

“இங்க இருக்கவங்க எல்லாம் முட்டாள்ன்னு நினைச்சியா?? இல்லை எல்லாரும் எப்பவும் முட்டாளாவே இருப்பாங்கன்னு நினைச்சியா??”

 

“என்ன நினைச்சு நீ இங்க வந்தே?? சொல்லுடா??” என்றாள் கண்களில் கனலை தேக்கி.

 

அவன் மீண்டும் சிரித்துக்கொண்டே அழுத்தந்திருத்தமாய் சொன்னான் “கவர்னரை கொல்றதுக்கு தான் வந்தேன்” என்று.

 

“கபிலன் இவனை இப்போதைக்கு வெளிய விட வேண்டாம். இங்க இருக்கற அறையிலேயே அடைச்சு வைங்க. இவனை பத்தின முழுத்தகவலும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள எனக்கு வந்தாகணும்”

 

“ஒருத்தனை பார்த்தா தெரியாதா அவங்க எப்படின்னு?? ஆள் கிடைச்சா போதும்ன்னு கண்டவனையும் தூக்கிட்டு வந்து அடிச்சு உதைப்பீங்களா??”

 

“இவன் எதுக்கு வந்தான்னு மட்டும் தெரியட்டும் அப்புறம் இருக்கு உங்க எல்லாருக்கும்” என்றுவிட்டு திரும்பி அவனை பார்க்க மீண்டும் சிரித்தான் அவன் இப்போது அவளை பார்த்து கேலியாய்.

 

அதில் வெகுண்டெழுந்தாள் அவள். அதை பார்த்து அவனும் திருப்தியாக இன்னமும் அதிகமாக நகைத்தான்.

 

‘உன் வேலையை என்கிட்ட காட்டுறியாடா!!’ என்ற ஆத்திரம் கனன்ற திரும்பி அவனருகே வந்தவள் யாரும் எதிர்பாரா நேரத்தில் அவனை ஓங்கி அறைந்துவிட்டாள்.

 

அதற்கும் அவன் புன்னகையை பதிலாக கொடுக்க அவளுக்குள் கோபம் தீயாய் தகித்தது. ‘என்னை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறானா இவன்’ என்று எண்ணினாள்.

 

அங்கிருந்தோரின் பார்வை அவள் ஏன் அடித்தாள் தங்களையே அடிக்கக்கூடாது என்று சொன்னாளே என்பது போலிருந்தது.

 

ஆனாலும் யாரும் வாயை திறந்து கேட்டுவிடவில்லை. அவள் கண்ணசைவில் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

 

“நாம அடிக்கக்கூடாதாம் ஆனா இவங்க அடிப்பாங்களாம். நாம நம்ம டியூட்டியை தானே செஞ்சோம். எவ்வளவு திமிர் இவங்களுக்கு??” என்று முதலில் பேசிய அதே காவலன் முணுமுணுத்தது தெளிவாகவே வெளியில் கேட்டுவிட்டது.

 

அவள் இருந்ததினால் அங்கு நிலவியிருந்த அமைதி அப்படி. முணுமுணுப்பு கூட தெளிவாய் கேட்டு தொலைத்தது.

 

சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்திருந்தான் புதிதாய் வந்திருந்த அந்த காவலன். மற்ற காவலர்களும் அதிகாரிகளும் அவனை முறைப்பாய் பார்த்த பின்னே தான் எல்லோருக்கும் கேட்டுவிட்டதை உணர்ந்தான் அவன்.

 

எச்சிலை கூட்டி விழுங்கியவாறே அவளை பார்க்க மெதுவாய் நடந்து அவனருகே வந்திருந்தாள். அவனை ஏற இறங்க அவள் பார்த்த பார்வையே அவனுக்கு குளிரை பரப்பியது.

 

“என்ன திமிரை என்கிட்ட நீங்க கண்டுட்டீங்க??” என்று அவள் கேட்டவிதமே எப்படிடா அப்படி கேட்பே என்பது போலிருந்தது அவனுக்கு.

 

அவனோ “இல்லை… அது வந்து…”

 

“புடிக்கலைல… ஒரு பொண்ணு நல்லா படிச்சு மேல வந்திடக்கூடாதுல… அப்படியே அவ நல்லா படிச்சிட்டாலும் உயர்ந்த பதவிக்கு மட்டும் வந்துடக்கூடாது அப்படி தானே…”

 

“அப்படி வந்திட்டா எங்களுக்கு திமிரு, கொழுப்பு, தான்தோன்றித்தனம்ன்னு சொல்வீங்க அப்படி தானே” என்றவளின் பேச்சில் அவ்வளவு காரமிருந்தது.

 

நாகரீகம், வளர்ச்சி என்று பேசிக்கொண்டு இன்னமும் பெண்களை சமூகம் பார்க்கும் பார்வையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

‘என்ன தான் முடிவு இதற்கு’ என்று ஒரு கணம் தோன்றிய போதும் அதை பற்றி நினைக்க இதுவல்ல நேரம் என்று தோன்ற கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.

 

பின் அந்த காவலனை நோக்கிச் சொன்னாள். “உன் வீட்டு பொண்ணுங்கன்னா இப்படி தான் சொல்லுவியா??”

 

“நான் என்ன என்னை பேசினதுக்கு உன் மேல கேஸ் போட்டேனா!! இல்லை உன்னை வேலையை விட்டு தூக்கினேனா எதை வைச்சு நீ அப்படி பேசினே??” என்றவளின் பேச்சில் இதெல்லாம் என்னால் செய்ய முடியும் செய்யவில்லை என்ற தொனி இருந்தது.

 

அதெல்லாம் புரியாதவனில்லையே அந்த காவலன். “என்ன மேடம் மிரட்டுறீங்களா?? எனக்கு அதை பத்தி எல்லாம் கவலையில்லை”

 

“இந்த வேலையில்லைன்னா வேற வேலை தேடிக்குவேன். எங்கப்பாவோட வேலையாச்சேன்னு தான் வந்தேன் மேடம்”

“யாருக்கும் அடிமையா இருக்க இங்க வரலை. அதுவும் இல்லாம ஒண்ணு கேட்டீங்களே உங்க வீட்டு பொண்ணுன்னா கேட்பீங்களான்னு”

 

“கேட்பேன் மேடம், தப்பு செஞ்சா சொல்லுவேன் கேட்பேன். தப்பை சுட்டிக்காட்டுவேன். நான் உங்களை பார்த்து திமிர்ன்னு சொன்னது வேணா அதிகப்படியான வார்த்தையா இருக்கலாம்”

 

“ஆனா நீங்க செஞ்சதுக்கும் நாங்க செஞ்சதுக்கும் பெரிசா வித்தியாசமில்லையே… எங்களை சொல்லிட்டு நீங்களே அதை செஞ்சா அது சரியாகிடுமா” என்று தன் முன் துணிவாய் நின்று கேட்டவனை அவளுக்கு பிடித்தது.

 

பின்னே இங்கிருப்பவர்களில் ஒருவர் கூட அவளுக்கு முன் நின்று கேள்வி கேட்கவில்லையே. தப்பை சுட்டிக்காட்ட கூட ஒருவரும் முன்வரவில்லையே.

 

அவளுக்கு பெண்களின் முன் கூழை கும்பிடு போடுவர்களையும், பயம் கொள்பவரையும் கண்டால் ஆகவே ஆகாது, இரண்டுமே போலி என்பதை அவளறிவாள்.

 

அதனால் அப்படி ஆண்களை சிரித்தே கடந்துவிடுவாள் அல்லது கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுவாள். இத்தனை வருடத்திற்கு பிறகு தன் முன்னே ஒருவன் தன்னை எதிர்த்து பேசியிருக்கிறான்.

 

அதுவே அவனிடத்தில் நட்பு கொள் என்று அவள் மனதிடம் சொன்னதுவோ!! இல்லை பின்னாளில் இவன் உன் துணை நிற்பான் என்று அவள் முன்னமே அறிந்திருந்தாளோ என்னவோ!! அவனை பார்த்து சிநேகமாய் சிரித்தாள்.

 

“உங்க பேரு??” என்றவளிடத்தில் மரியாதை வந்திருந்தது.

 

“பார்த்திபேந்திரன்” என்றான் முழுப்பெயரை.

 

“நல்ல பேர்… நான் ஏன் அடிச்சேன்னு உங்களுக்கு தெரியணுமா??”

 

அவன் அவளை வித்தியாசமாய் பார்த்தான். அவன் பார்வையில் ஒரு ஆராய்ச்சி தெரிந்தது.

 

“இப்போ உள்ள கூட்டிப் போனவரை நீங்க எல்லாம் உண்மையை சொல்லச் சொல்லி அடிச்சீங்க. நான் அவர் பொய் சொன்னதுனால அடிச்சேன்”

 

“நான் அடிக்கலை மேடம்” மறுத்தான் அவன்.

 

“ஏன்??”

 

“அவரை பார்த்தா தப்பா தெரியலையே?? அவர் எதுக்கு வந்தாருன்னு பொறுமையா அவர்கிட்ட கேட்டாலே சொல்லியிருப்பார்” என்றவனை மெச்சுதலாய் பார்த்தாள்.

 

“உள்ள வாங்க…” என்று அவனைப் பார்த்து தலையசைக்க அவள் பின்னோடு சென்றான் பார்த்திபன்.

 

“பார்த்திபன்… கபிலன் இப்போ அரெஸ்ட் ஆனவர் பத்தி டீடைல்ஸ் எல்லாம் கொடுப்பார். அதை கொஞ்சம் விசாரிச்சு என்னன்னு எனக்கு சொல்லணும்”

 

“இந்த விஷயம் மீடியாக்கு போகாம பார்த்துக்கோங்க” என்று அவனிடம் சொல்ல ‘இவர் என்ன என்னிடம் போய் இதையெல்லாம் சொல்கிறார்’.

 

‘எனக்கு மேலே உயரதிகாரிகள் இருக்கிறார்கள். நான் இதற்கு தகுதியானவனா என்ன??’ என்ற கேள்வி அவனிடத்தில்.

 

பார்த்திபன் இன்னமும் அங்கேயே நின்று சிந்திப்பதை பார்த்தவள் என்னவென்று புருவமுயர்த்தினாள்.

 

“இல்லை மேடம் நா… நான் எப்படி மேடம் இதெல்லாம். வெளிய டிஜிபி எல்லாம் இருக்காங்க…” என்று தயங்கினான்.

 

“எனக்கு சொன்னதை மட்டுமே செய்யற ஆளு வேண்டாம். நான் சொன்னது சரியா தப்பான்னு யோசிச்சு செய்யற ஆளு தான் வேணும். புரிஞ்சுதா” என்றாள்.

 

அவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க லேசாய் மண்டையை உருட்டினான். ஆனாலும் அவனுக்கு இன்னுமொரு கேள்வி தோன்ற “இப்போ என்ன??” என்றாள் அவள்.

 

“நீங்க யாரு மேடம்?? இங்க என்னவா இருக்கீங்க?? ஏதோ நல்ல போஸ்ட்ன்னு மட்டும் தெரியுது… ஆனா என்னன்னு எனக்கு தெரியலை”

 

லேசாய் ஒரு சிரிப்பு அவள் இதழோரத்தில் தோன்றியது. “அப்போ நான் யாருன்னு தெரியாம தான் இங்க வந்தீங்களா??”

 

“ஆமா மேடம். இங்க கவர்னர்க்கு பாதுகாப்புக்குன்னு தான் வந்தேன். அதனால எனக்கு தெரியலை மேடம். நான் இப்போ தான் ஒரு ஆறு மாசமா வேலையில இருக்கேன். இந்த ரெண்டு மாசமா தான் நான் இந்த ஊர்ல இருக்கேன்”

 

“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா… நீங்க??” இழுத்தான்.

 

“அது தெரியாம தான் என்கிட்ட எதிர்த்து பேசிட்டு இருந்தீங்களா… தெரிஞ்சா பேச மாட்டீங்களோ…”

 

‘இவங்க எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்கறாங்க’ என்று நினைத்தவன் “எப்படி இருந்தாலும் நான் பேசுவேன் மேடம்” என்றான்.

 

“வதனா… வதனா வல்லவராயன்…” என்றாள் மிடுக்காய்.

 

இப்போது அவள் தன் பெயரை சொல்ல கேள்விப்பட்ட பெயராக தோன்றியது அவனுக்கு. அவளிடம் எல்லாம் தெரிந்தது போல் தலையாட்டிவிட்டு வெளியில் வர கபிலன் எதிரே வந்தார்.

 

“சார் மேடம் யாரு?? அதாவது அவங்க இங்க என்னவா இருக்காங்க??” என்றவனை அறிய ஜந்துவை போல் பார்த்தான் கபிலன்.

 

“ஏன் உனக்கு தெரியாதா?? தெரியாமலா இங்க வந்தே??” என்று அவனும் அதையே கேட்டான். என்ன சற்று காட்டமாய் கேட்டு வைத்தான்.

 

‘இதென்னடா வம்பா போச்சு… சொன்னா சொல்லுங்க சொல்லாட்டி போங்க’ என்று ரீதியில் அவன் நகர்ப்போக கபிலன் சொன்னது கேட்டு அப்படியே நின்றுவிட்டான் அவன்…

 

மீடியாவுக்கு தகவல் செல்ல வேண்டாம் என்று அவள் சொல்லிவிட்டு சென்றிருக்கஆனால் அந்த தகவல் அலுங்காமல் குலுங்காமல் மீடியாவின் கையை சென்றடைந்தது.

 

ஊசி நுழைய முடியா இடத்திலும் பேனா முனை நுழைந்துவிடும் என்பர். இன்றைய காலகட்டத்தில் நவீனயுத்திகளின் மூலம் உள்ளேநுழைந்திருந்தனர் அவர்கள்…

____________________

 

உறக்கத்தில் இருந்து எழுந்த பிரியனுக்கு முன்தினம் காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அணிவகுத்தது.

 

அருங்காட்சியகத்தின் பரபரப்பை பார்த்து என்னவோ ஏதோவென்று பிரியன் வேக எட்டுக்கள் போட்டு உள்ளே நுழைந்தான்.

 

“ஏன்பா பிரியன் நேத்து நைட் நீ தானே கடைசியா கிளம்பினே??” என்று வந்து நின்றார் செக்யூரிட்டி ஒருவர்.

 

“ஆமாண்ணே என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா??”

 

“ஆமாப்பா ஆமா… உனக்கு ரொம்ப நேரமா போன் போட்டுக்கிட்டே இருக்கேன். நீ எடுக்கவே இல்லை”

 

“உள்ள வா… பெரிய ஆபீசர் எல்லாம் வந்திருக்காங்க. போலீஸ் எல்லாம் கூட இங்க தான் வந்திருக்காங்க” என்று சொன்னவர் இன்னமும் என்ன விஷயம் என்று சொல்லவேயில்லை.

 

“அண்ணே என்ன விஷயம்ன்னு சொல்லுங்க முதல்ல”

 

“ராஜஸ்தான்ல இருந்து வந்த அந்த அறிய பொக்கிஷமான வைர வாளும், விலையுயர்ந்த அந்த மாணிக்கம் பதிச்ச கீரிடமும் காணோம்ப்பா”

 

“நாளைக்கு நாம அதை அவங்க கவர்ன்மென்ட்க்கு திருப்பி கொடுக்கணும்”

 

“உனக்கு தான் தெரியுமே அது இங்க மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டதுன்னு” என்று சொல்லிக்கொண்டே அவனை உள்ளே கூட்டிச் சென்றார்.

 

அங்கிருந்தோர் அவனை சுற்றி நின்று கேட்ட கேள்விக்கு எல்லாம் சளைக்காமல் பதில் சொன்னான் அவன். அவனிடத்தில் எந்த குறையும் இல்லை குற்றமும் இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.

 

இரவில் அவ்வளவு டைட் செக்யூரிட்டி இருந்தும் எப்படி அது காணாமல் போனது என்றே அவர்களுக்கு புரியவில்லை.

 

செக்யூரிட்டி கேமரா முதல் அனைத்தும் அலசியும் ஒன்றும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

செக்யூரிட்டி கேமராவில் செய்திருந்த தில்லு முல்லை இன்னமும் அவர்கள் கண்டிருக்கவில்லை.

 

அதற்குள் பிரியன் எதையோ யூகித்திருந்தான் போலும், ஏதோ யோசனையிழாந்தான்… அவன் ஊகம் சரியே என்பது போல் அன்று இரவே அவன் தேடியதை கண்டு பிடித்திருந்தான்.

 

மறுநாளைய செய்தித்தாள்கள் சில விஷயங்களை சுமந்து வந்திருந்தது.

 

தலைப்பு செய்தியே அனல் பறந்தது. கலியுக கண்ணகி…

கணவனை கொன்ற பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள் அன்றைய கண்ணகி. கட்டிய கணவனையே தவறிழைத்தான் என்று கைது செய்ய சொன்னார் இன்றைய கலியுக கண்ணகி வதனா வல்லவராயன்.

 

மேலும் வாய்(கை)க்கு வந்ததை எல்லாம் எழுதி தள்ளியிருந்தனர். கவர்னரின் முதன்மை செயலாளர் (Princhipal Secretary to Governor) துணிகரம் என்று என்னென்னவோ எழுதியிருந்தது அதில்.

 

மேஜையில் இருந்த அந்த செய்தித்தாளை புரட்டியவளின் நெஞ்சம் எரிமலையாய் சீறிக்கொண்டிருந்தது.

 

அதிலிருந்த போட்டோவை பார்த்து இன்னமும் உள்ளம் கொதிக்க செய்தித்தாள் அவள் மேஜையில் இருந்து பறந்து சென்றது.

____________________

 

“என்னப்பா பிரியன் ஊரெல்லாம் உன் பேச்சா தான் இருக்கு… ஒரே நாள்ல என்னென்னவோ செஞ்சு பரபரப்பாக்கிட்டியே!!” என்றார் அவர் வீட்டின் மாடியில் இருந்து இறங்கி வந்த அந்த வீட்டின் உரிமையாளர்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அங்கிள். என் கடமையை தானே நான் செஞ்சேன்”

 

“எதுவுமே சொல்லாம கமுக்கமா இருந்திட்டியேப்பா!! இனிமே நீ பெரிய ஆளு!! பெரிய போஸ்டிங் தான்”

 

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அங்கிள். நான் ஒரு சாதாரணமான ஆளு” என்றான் அலட்டாமல்.

“என்னப்பா காயம்??”

 

“சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு அங்கிள். சண்டைன்னா அடிப்பட தானே செய்யும். அதான் இப்படி”

 

“நாளைக்கு நீ அங்க போயிடுவியா??”

 

“எங்க போக சொல்றீங்க அங்கிள்?? நான் உடனே வீடு காலி பண்ணித் தரணுமா உங்களுக்கு??”

 

“அதில்லைப்பா நீ போக வேண்டிய இடத்துக்கு போய்டுவியான்னு கேட்டேன்”

 

“நான் எங்கயும் போகலை அங்கிள். இங்க தானே இருப்பேன், இது தான் எனக்கு பிடிச்சிருக்கு”

 

“ஏன்பா உனக்கு பிடிக்கலையா??”

 

“பிடிச்சதுனால தான் அங்கிள் இங்கவே இருக்கேன்” இருபொருள்பட சொன்னானோ!! சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டான்.

 

பின்னே காணாமல் போன வைரவாளும், கீரிடமும் கண்டுப்பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறானே!! பெரிய விஷயமல்லவா அது… அதனாலேயே அவன் செய்தித்தாளில் இடம் பிடித்திருந்தான்….

 

கொண்டவன்

கொல்ல வந்தவனல்ல

கொள்ளை கொண்டவன்??

Advertisement