Advertisement

சிற்பமும் அவள் சிற்பியும் அவள்
 
பல வருடங்களுக்கு முன்பு…
எந்த வருடம்???? அது ரகசியம்… ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும்.
“கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?” – ஸ்வேதா, கவியின் அம்மா.
கவிக்கு தாயின் குரலைக் கேட்டதும் வியர்த்துக் கொட்டாத குறை. அம்மாவிடம் என்ன பொய் சொல்வது?
            “நான் பிரேமிடம் ஒரு முத்தம் கேட்டேன்” என்று சொன்னால்? அடித்து துவைத்து விடுவாள்.
“அவன் எனக்குக் கொடுத்த முத்தம் என்னை பைத்தியமாக்கி அவன் சொன்னதையெல்லாம் செய்யச் சொன்னது” என்று சொன்னால்? இந்த ஜென்மம் முழுவதும் பேசமாட்டாள்.
     மொட்டைமாடியில் அவள் புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு இதயம் வேகமாக அடிக்க, படி இறங்கி கீழே முதல்தள வீட்டிற்குச் சென்றாள். அவள் கைபேசியில் அவன் எண்களை அழித்தாள். தாயின் கண் மறைவில் அவன் கொடுத்த கீரிட்டிங் கார்ட், ஐபாட் ஆகியவற்றை மெத்தையின் கீழ் ஒளித்து வைப்பது இமயம் ஏறுவதை விட சவாலான காரியம்.
            அதையும் செய்து முடித்தாள் கவி.
 
நான் கவி….
என்  பெயர் கவி
பிரேமின் கைகள் என்மேல் இருந்த கணமெல்லாம் என் பெண்மையை உணர்ந்தேன். அவனது உதடுகள்… ஆஹ்… அவனது கைகள்… ஆஆஹ்…
முதல் நாள் ஆறு முத்தங்களாக இருந்த முத்தக்கணக்கு மறுநாள் எட்டானது, அதன் மறுநாள் பத்தானது… அதன் மறுநாள் கணக்கில்லாமல் போனது. எனது தனிமை… பெற்றோர் என்னை நம்பிக் கொடுத்த தனிமை முழுதும் அவனுடன் என்றானது.
இன்று…
September மாதம்…
2019…          
“கவி.. நில்! உன்னை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் விட்டுவிடுறேன். நீ ஏன் நடந்து போற?”-  அகில்.
“சரி அகில் இன்றைய நாள்பொழுது எப்படிப்போச்சு? ”- கவி.
“ரொம்ப நன்றாகத்தான்… ரொம்ப வேகமாகவும் போச்சு very very fast actually…”
“என்னப்பா அகில், உன் செல்போனுக்கு பாரத் மேட்ரிமோனியில் இருந்து ஸ்.எம்.ஸ் வந்திட்டே இருக்கு? உனக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியாச்சு போல?”
“எல்லாம் அம்மா வேலை கவி, ரொம்ப அவசரப்படுறாங்க.”
(ஆசிரியர் குறிப்பு : இந்தக்கதையில் வரும் முகம் அறியா மனிதர்கள் யார் என்று கண்டிபிடிக்க முயலுங்கள். ரொம்ப பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்லைங்க)
**********
முகம் அறியா மனிதர்கள்..
**********
அது ஒரு பெரிய பஸ் ஸ்டாப். அதில் பஸ் ஏற வந்த பெண் ஒரு ஆண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் அவள் சென்ற பின் தனது காரில் பறந்து விட்டான்.
இதை வேறொரு பெண்ணின் கண்கள் நோட்டமிட்டது.
“ஏய் என்ன செய்யிற? சும்மாயிரு. என் வேலையைப் பார்க்கவிடு. அவர்கள் அப்புறம் இடத்தைக் காலி செய்திடுவாங்க.” என்று தன்னை தனது உளவு வேலை செய்யவிடாமல் இம்சிக்கும் அவனிடம் அவள் சொன்னாள்.
 “உனக்கு ஒரு சேலை எடுக்க பத்து நிமிஷம்தான் நேரம் ஒதுக்கிற ஆனா இவர்களை வேவு பார்க்க மூன்று மாதமாக நாளுக்கு மூன்று மணி நேரம்! என் பேச்சுளர் நாட்கள் இப்படியா இவர்களை நோட்டம் விட்டே கழியணும்? இன்னும் எத்தனை நாள்? ” –  அவன்.
            இப்போது அவன் நிஜமாகவே கோபம் கொண்டதால் அவள் தான் பார்த்ததை மனதில் பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு, இடத்தைக் காலி செய்து, சலித்துக் கொண்ட ஆணின் இரு சக்கர வாகனத்தின் பின்னே ஏறிச் சென்று விட்டாள்.
மீனாட்சிமிஷன் மருத்துவமனை
            கவி வேமாக உள்ளே நுழைகிறாள். லிஃப்டிற்குக் காத்திருக்காமல் படியில் ஏறி தனது ஆலோசனை அறைக்குச் செல்கிறாள். தலைமை மருத்துவர் நாராயணன் கவி வந்து சேர்ந்த சில நிமிடங்களில் வந்து விட்டார். கவி நேற்று நடந்து முடிந்த ஒரு அறுவை சிகிச்சையைப் பற்றி நாராயணன் கூறக் கூற குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். இருவரும் அறைக்கதவு திறக்கப்படவும் நிமிர்ந்து பார்த்தபோது கதவை நன்றாக தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கௌஷிக். கௌஷிக் சீஃப்பை பார்த்ததும் சத்தமின்றி தனது குட்மாரினிங் சொல்லிவிட்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.
            ஒரு மணி நேரம் நாராயணன் கொடுத்த சிறு சிறு வேலைகளைச் செய்தவர்கள் வெளி நோயாளிகள் சந்திப்பிற்குத் தயாராகிறார்கள். அப்போதுதான் கவியின் கைபேசி அடித்தது. கவி கைபேசியின் ஒலியை முற்றிலும் குறைத்துவிட்டு அதில் பளிச்சிட்ட எண்ணைப் பார்த்தாள்.
‘சுதா ஏன் இந்நேரம் அழைக்கிறாள்? ஏதாவது காரணம் நிச்சயம் இருக்கும். ஆனால் இப்போது பேச முடியாதே…’ என்று நினைத்தவள் கைபேசியை மேஜை மேல் ஓரமாய் வைத்தாள். கைபேசி ஓய்ந்தது.
            ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மீண்டும் அதிர்ந்தது. பிறகு ஓய்ந்தது. மீண்டும் அதிர்ந்தது. ஆனால் இப்போது இரண்டு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளி.
            கவி பொறுமை இழந்தாள். “நல்ல வேளை, சார் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் கண்ணாலே திட்டியிருப்பார்” என்று நினைக்கையில் கவியின் கைபேசி அதன் தொல்லையை நிறுத்தியது.
            ஆனால் அதை இப்போது அனுபவித்தவன் கௌஷிக். அவன் கைபேசி அவனை விடாது துரத்தியது. கண்டிப்பாக அவன் இன்று நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும். இல்லையென்றால், தலைமை மருத்துவர் நாராயணன்  “கௌஷிக் இது ஹாஸ்பிட்டல்” என்று அவனுக்கு நினைவு படுத்தியிருப்பாரா?
 கௌஷிக் உடனே ஒரு சாரி சொல்லிவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். சென்றவன் சிறிது நேரத்தில் உள்ளே வந்தான்.
“சார், ஒரு எமர்ஜன்சி கவியைப் பார்க்க அவங்களுக்கு தெரிஞ்சவங்க கீழே காத்துக் கிடக்காங்கலாம். உடனே வரணுமாம். நான் கவியை அழைச்சிட்டுப் போகவா?  ஒரு அரை மணி நேரம் வேணும் சார்”
நாராயணன் “சரி” என்று தலையாட்டவும் வேகமாகவும் இருவரும் இடத்தைக் காலி செய்து வெளியே வந்தபோது கவி அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கத்தினாள், “ஏன் என்னை கூட்டிட்டு போற? சுதா தான் உனக்கும் கால் செய்ததா? ”
            “ஆம்” என்ற நாசூக்கான பதில் தந்தவன், சுதா நிற்கும் இடம் தெரிந்ததும் கையசைத்து அவளை அவர்களிடம் வரச் சொன்னான். சரியான நோயாளிகள் கூட்டம். அந்த ரிசப்சன் முழுவதும் மக்கள் கூட்டம். சிலர் மேல் மோதி, சிலர் கைப்பையைத் தட்டிவிட்டு சுதா அவர்களிடம் வருவதற்குள் கவிக்குப் பொறுமை போதவில்லை.
“ஏன் சுதா எங்களை கூப்பிட்ட?”, கவி சுதாவிடம் கேட்க, சுதா கௌஷிக்கிடம் கேட்டாள், “அகில் அம்மா உன்னிடம் பேசினார்களா?”
            அவன், “ஆம்” என்ற பதில் தந்ததும், அடுத்த கேள்வியைக் கேட்டாள்,
“அகிலுக்கு தெரியுமா?” – சுதா.
“Nooooo…. அகிலுக்கு நிச்சயம் தெரியாது.”-  கௌஷிக்.
“ஓ! கவிக்குத் தெரியுமா விஷயம்?” என்று சுதா அவனைத் துளைக்க, அவன் இல்லையென்று தலையாட்டவும் கவி வெகுண்டு எழுந்தாள்.
            “என்ன விஷயம் சுதா? நீங்க இரண்டு பேர் மட்டும் பேசுவதாக இருந்தால் நான் கிளம்புறேன்.”
            சுதா இப்போது நன்றாக கவி முன்பாகத் திரும்பிச் சொன்னாள், “அகில் அம்மா, இன்று காலை எனக்கு கால் செய்தாங்க. நீயும் அகிலும் கல்யாணம் செய்தால் நல்லாயிருக்கும் என்று சொன்னாங்க. உன் விருப்பத்தைக் கேட்கச் சொன்னாங்க. நீ என்ன நினைக்கிற கவி?”
            “வாட்? கௌஷிக் இங்க என்ன நடக்குது? ஐ கான்ட் பிளீவ் திஸ் இஸ் ஹாபன்னிங். என்னால் துளிகூட நம்பமுடியவில்லை. அகிலுக்கு தெரியுமா? “
            “ஹும் ஹும் நிச்சயம் தெரியாது” என்று கௌஷிக் சத்தியம் செய்தான். பிறகு கௌஷிக் தான் ஆரம்பித்தது.
“கவி, அகில் அம்மா, “கவி அகிலை திருமணம் செய்து கொள்வாளா?” என்று இன்று காலை என்னிடம் கேட்டாங்க.”
     “வாட்? ஆனால் நீ இன்று என்னைப் பார்க்கும்போது அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரியவில்லையே? You were very normal…” என்று கவி வெடித்தாள்.
சுதாவும் கவியிடம், “என்னிடமும் இன்று காலை அதே கேள்வி கேட்டாங்க கவி.”
            “ஓ! நீங்க என்ன சொன்னீங்க மேடம்!”
            “நான் உன்னிடம் கேட்டு சொல்வதாகச் சொன்னேன்.”- சுதா.
            “இதிலே கேட்பதற்கு ஒன்றும் இல்லை சுதா. என் பதில், ‘ஸ்டிரிக்ட் நோ’ தான். நாங்க இரண்டுபேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். அதற்குமேல் ஒன்றுமேயில்லை.”
            “ஏன் கவி நீ அகிலை கல்யாணம் செய்தால் நல்லாயிருக்குமே. எனக்குத் திருமணம் நிச்சியம் ஆனபோது கூட நான் இவ்வளவு சந்தோஷப்படலைப்பா, அகில் அம்மா என்னிடம் பேசியதும் நீ சரி என்றால் எப்படியிருக்கும் என்று நினைக்கையில் மனம் சிரித்து பூரித்தது தெரியுமா?
            “சுதா உனக்கு திருமணம் செய்து கொள்ளும் மனப்பக்குவம் வந்திடுச்சு. ஆனால் எனக்கு இன்னும் அது வரவில்லை. வரும்போது மாப்பிள்ளை பார்க்கலாம் சரியா?”
            “கவி, அகில் ரொம்ப நல்ல மனுஷன். அவனும் நீயும் நல்ல ஜோடி தெரியுமா? நீ இந்த ப்ரபோசலை கொஞ்சம் யோசியேன்.” – கௌஷிக்.
            “கௌஷிக் இப்ப மணி பத்து நாற்பது. அங்கே இப்ப நாம போகலைன்னா இரண்டு பேர் சீட்டும் கிழியும் பரவாயில்லையா?” –  கவி
            “கவி, நீ போ. நான் கௌஷிக்குடன் பேசணும்”-  சுதா.
            “என்னமும் செய்துக்கோ. நான் கிளம்புகிறேன்.” என்று சொன்ன கவி, இருவரையும் ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு இடத்தைக்காலி செய்தாள்.
            சுதா கௌஷிக்கிடம் கேட்டாள், “அகிலுக்கு கவியைப் பிடிக்குமா?”
            “அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்றல்லவா நீ கேட்டிருக்கணும்!”
            “சரி. அகில் பை எனி சான்ஸ் கவியிடம் ப்ரபோஸ் பண்ண வழியிருக்கா?”
            “நிறைய சான்ஸ் இருக்கு. ஆனால் அவனும் நாங்க வெறும் குட் ஃப்ரண்ட்ஸ் என்று சொல்ல வாய்ப்பிருக்கு.”
“ஓகோ. உன்னிடம் கேட்க வேண்டியதை கேட்டாச்சு நீ கிளம்பலாம். போ போ.”
அடிப்பாவி என்னைத் துரத்துரியே. மனதில் என்ன திட்டம் வச்சிருக்கே? உன்னைக் கல்யாணம் செய்யப்போகும் புண்ணியவான், அந்த செந்தில் ரொம்பப் பாவம் என்று மனதுக்குள் ஒரு நிமிடம் பேசியவன் தனது சந்தேகத்தை அவள் நகரும் முன் கேட்டான்.
            “அகில் அம்மாகிட்ட என்ன சொல்லப்போற?”
            “கவி நோ சொல்லிட்டான்னு தான் சொல்லப் போறேன். உனக்கு ஒரு குட் நியூஸ், அகில் இன்னும் கொஞ்சம் நாளில் கவியிடம் ப்ரபோஸ் பண்ணுவான்.”
            கௌஷிக் சுதாவின் பேச்சைக் கேட்டது என்னவோ தமிழில் தான். ஆனால் ஒவ்வொரு சொல்லாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான். தமிழ்மொழி கொடுத்த பொருள் தான் வந்தது. பிறகு இந்தியில் மொழிபெயர்த்தான். அதுவும் அதே பொருள்தான் தந்தது. அர்த்தம் புரிந்து அடுத்தக் கேள்வி கேட்பதற்கு அங்கே சுதா இல்லை. அதனால் யார் பெற்ற மகனோ… இவன் யார் பெற்ற மகனோ… கௌஷிக் தனியே பேசினான், “அகில் இன்னும் கொஞ்ச நாளில் கவியிடம் ப்ரபோஸ் பண்ணுவான், சரி Fine , Good, ஆனால் கவி ஒத்துக்குவாளா? She hates marriage… “
***********

Advertisement