Advertisement

மறுநாள் விடிந்ததும் கவி தன் வேலைகளை துரிதமாகச் செய்தாள். இரவு முழுவதும் கவி மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆச்சி தன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்து, அவர் ஓய்வாக அமர்நதபிறகு கேட்டாள்.
            “ஆச்சி உங்களுக்குத் தெரியுமா இப்போது அவன் என்ன செய்யிறான்னு?”
            “மாதம் இருபதினாயிரம் சம்பாதிக்கும் நல்ல வேலையில் இருக்கான் கவி.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தார் ஆச்சி. பிறகு கவியிடம் கேட்டார், “கவி இப்ப நீ சாப்பிட வரியா?”
“ம் வர்றேன் ஆச்சி”
கவியின் செயல்களில் மாற்றம் தெரிந்தது. ஸ்வேதா இதைக் கவனிக்கத் தவறவில்லை. கவி தனது அறையில் முடங்கிக்கிடக்காமல் சுதாவுடன் சேர்ந்து ஹாலில் படித்தாள். தனது கைபேசியை அம்மாவின் அறையிலேயே வைத்திருப்பாள். அவளுக்கு வரும் அழைப்புகளை அம்மா முன் நின்றே பேசுவாள். பேசி முடித்ததும் அம்மாவின் அறையிலேயே கைபேசியை வைத்துவிடுவாள். ஒரு மாதம் பள்ளிக்குச் செல்லாததால் குவிந்த பாடங்களைப் படித்து முடித்தாள்.
கவி கணிதம் படித்துக் கொண்டிருந்தாள். ஸ்வேதா, தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழையும்போது தான் கவனித்தாள், கவி இருந்த ஹாலின் ஃபேன் ஓடாமல் இருந்தது. மின்விசிறி சுவிச்சை அழுத்தினாள் ஸ்வேதா.
கவி உடனே, “வேண்டாம்மா… ஃபேன் போட்டால் காற்று வரவர தூக்கம் வருதும்மா. அதான் போடலை.” என்று காரணம் சொன்னாள்.
            ஸ்வேதா தனது பிரமிப்பை காட்டாமல் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
            கவிக்கு தனிமை நிறையவே கிடைத்தது. தனது உடலின் ஒரு அங்கமான மூளையை கசக்கிப் பிழிந்தாள்.
பிரேம்…. தவறான இன்பம் என்ற தெரிந்து தானே மனம் துணிந்தது? ஆறு மாதத்திற்கு பிறகு இந்த உறவு எங்கே செல்லும் என்று ஏன் நான் யோசிக்கவில்லை?
மூடி வைத்த பாத்திரத்தை திறந்து என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்வரை தான் மனதிற்குள் பரபரப்பு இருக்கும்.. அந்த மூடியை திறந்ததும்  அடுத்த நொடி ஆர்வம் அடங்கிவிடுகிறது. மூடி இறுக்கமாக இருந்தால் ஆர்வம் இன்னும் கூடுகிறது. அந்த மூடியை அருகில் உள்ள மேஜையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு பாத்திரத்தை திறந்த பிறகுதான் நிம்மதி. அதனால்தான் தனக்கும் பிரேமிடம் ஆர்வம் உண்டானதா? இல்லை.. புத்தியை இரவல் கொடுத்து, அழுக்கை உடல் முழுவதும் தாமே அப்பிக்கொண்டோமோ?
            கவி நான் ஏன் தவறினேன்? ஏன் பிரேமின் தொடுகைக்கு மயங்கினேன்? என்று தன்னிடம் கேட்டு கேட்டுப் பார்த்தாள். பதில் தான் வரவில்லை. தொலைத்துவிட்ட பேனாவை அலமாரியை தலைகீழாகக் கவிழ்த்து தேடுவது போல.. கவி பதிலைத் தேடினாள். பதில் தான் பேனாவைப் போல அகப்படவேயில்லை. பேனா அலமாரியில் இருந்தால்தானே கிடைப்பதற்கு?
            அதே கதிதான் கவியின் கேள்விக்குரிய பதிலுக்கும். பதில் அவளுக்கு வேறு ரூபத்தில் வந்தது.. ஆம் சுஜாதா அங்கிள் ரூபத்தில் வந்தது..
            கவியின் ஆச்சி மறுநாள் சாயங்கால வேளையில் கோவிலுக்குச் சென்றார். சுதாவும் கவியும் படித்துக் கொண்டிருந்தனர். ஆச்சி செல்லும் முன் இருவரிடமும் பத்து வகை கொள்ளை சம்பவங்களை விவரித்துச் சொல்லி புத்திமதி கூறவும், சுதாவே பொறுமை இழந்து “ஆச்சி கோயில்ல எட்டு மணிக்கு நடை சாத்திடுவாங்கலாம்” என்று சொன்னதும் தனம் அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
            கடிகாரம் அரை மணி நேரம் ஓடி ஓய்ந்த பிறகு சுஜாதா அங்கிள் அங்கு வந்தார்.
            “சுதா, ஆச்சி எங்கே?” – சுஜாதா அங்கிள்
            “அவங்க கோயிலுக்கு போய்யிட்டாங்களே அப்பா!”- சுதா.
            “ச்ச.. நேரமாகிட்டதே அவங்களுக்கு பிடிக்குமே என்று பிச்சிப் பூவ பறிச்சி உங்க அம்மாகிட்ட கொடுத்து சரமா கட்டிக் குடுக்கலாம் என்று பார்த்தா…”- சுஜாதா அங்கிள்.
            கவியின் காதுகளில் பிச்சிப்பூ என்ற அந்த வார்த்தை மட்டும் நன்கு கேட்டது.
            சிறு சந்தேகம் பிறந்தது. திரும்ப கேட்டுவிடுவதுதானே என்றது அவள் உதடு!
            “பூக்கடையில் வாங்கினீங்களா அங்கிள்?” – கவி கேட்டாள்.
            “ச்ச.. ச்ச.. பறிச்சி கட்டினால் தான் பிச்சியில் நல்ல வாசம் வரும்..!”
            சரியாகத்தான் கேட்டிருக்கிறேன் என்றது காது!
            “எங்கயிருக்கு பிச்சிக்கொடி?” கவியின் அடுத்த தூண்டில்.
            “என் கண்ணுக்கு தப்புமா? உங்க ஆச்சி இங்க வந்த நாளில் இருந்து தேடிக் கண்டுபிடிச்சேன்! இந்த ஏரியாவில் எத்தனை பிச்சிக்கொடி இருக்குன்னு எனக்குத்தான் தெரியும். கணக்குல நான் கெட்டி கவிம்மா. நான் டென்த்ல 100 /100 தெரியுமா? “
ஆகா! மாட்டியது மீன் !   
            அப்படியானால்… அந்த நூறு மார்க் பார்ட்டி இவர்தான் என்று காட்டிக் கொடுத்தது மூளை! சுஜாதா அங்கிள் கையில் கத்தியோடு நிற்பதுபோல கற்பனை செய்தாள். கற்பனை சகிக்கவில்லை.
            சுஜாதா அங்கிள் கண்களில் கண்ணாடியும் கைகளில் புத்தகமும் இருப்பதுபோல் கற்பனை செய்தாள். கற்பனையில் கண்ட இந்த உருவம் அவளுடன் பேசியது. சிரித்தது. கவியம்மா என்று கொஞ்சியது. பதினைந்து வயதில் கத்தியைப் பிடித்துக் கோழி வெட்டிய கையை விட நாற்பது வயதில் புத்தகம் பிடித்திருந்த கையில் சாந்தம் இருந்தது. கவி அவருடன் தன் நிலையை ஒப்பிட்டுப்பார்த்தாள். பிரேம் முத்தமிட்ட இதழுக்கும், நேற்று ஆச்சியிடம் “ஆ” காட்டி பால் சோறு வாங்கிய இதழுக்கும் வித்தியாசம் புரிந்தது. பிரேம் தொட்ட இதழைவிட ஆச்சி சோறு ஊட்டிய இதழ் பிடித்தது. தன்னுள்ளே கேட்கும் அயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் புரியாது விழித்தவளுக்கு ஏதோ புரிந்ததுபோல இருந்தது.
            கவி, சுஜாதா அங்கிள் பற்றிய தன் கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லவில்லை. தெரிய வேண்டாம் என்ற தானே நினைத்தார்கள். அதனால் தனக்கு தெரிந்தது அவர்களுக்குத் தெரியாமலே இருக்கட்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
**********
                        “ஒரு மாதம். முப்பது நாட்கள். அம்மா நம்முடன் பேசி முப்பது நாட்கள்.” என்று மனதில் கணக்குப்போட்டாள்.
கவி உள்ளுக்குள் அழுது மனதைக் கண்ணீரில் மூழ்கடித்தாள். சேறுக்குள் விழுந்து விட்டால்.. உள்ளே உடல் அமுங்குமாமே? எளிதில் வெளியே வரமுடியாதாமே? அப்படிப்பட்ட சேறுக்குள் உடல் முழுதும் சிக்கிக்கொண்ட பிரம்மை கவிக்கு.
            “அம்மா” என்று அழுதுகொண்டே கூப்பிட்டால் கூட ஸ்வேதாவிடம் இருந்து பதில் வராது. பத்து நாள் நம்முடன் பழகிய பூக்கார அம்மா ஏதோ ஒரு நாள் “பூவைத் தொடாமல் பாரும்மா” என்று ஒரு அதட்டுப்போட்டால் மனது வாலைச் சுருட்டிக்கொண்டு முனங்கும் நாய்குட்டிபோல அமைதியாகி விடுமே!
            பிறந்தநாள் முதல் தன்னிடம் தாய்மொழியோடு முத்தத்தையும் கலந்து பேசியவள் பேசுவதையே நிறுத்திக்கொண்டதால்.. பார்வையாலேயே “சீ!” என்ற வார்த்தையை சொல்லாமல் சொன்னதால், கவியால் ஸ்வேதாவை நெருங்க முடியவில்லை.
            “ஆச்சி நீங்க வந்து ஒரு மாதம் ஆகிடுச்சா? நாள் போனதே தெரியல”, கவி ஆச்சிடம் கேட்டாள்.
            கவியிடம் தனம் ஆச்சி கேட்டார், “அப்ப நீ என்னை வேகமாக என் வீடு பார்த்துப்போகச் சொல்ற? ம்..?”
            “என்ன ஆச்சி.. இப்படியெல்லாம் பேசி என்னை அழ வைக்காதீங்க ஆச்சி. நீங்க தானே எனக்கு இவ்வளவு நாளும் அம்மாபோல…”
            கவியால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகை முந்திக் கொண்டு வந்தது. இயலாமையால் வரும் அழுகை. அம்மாவை பேச வைக்க முடியாதலால் வந்த அழுகை. மிகவும் பிடித்த திண்பன்டம் கிடைக்காத குழந்தை சம்பந்தம் இல்லாத சின்ன விஷயத்திற்கு தேம்பித் தேம்பி அழுவது போல… முரட்டு பிடிவாதம் பிடிப்பது போல… கவிக்கு அழுகை முந்திக் கொண்டு வந்தது. கவியும் பிடிவாதம் பிடித்தாள். அம்மாவை பேச வைக்க வேண்டும் என்ற பிடிவாதம். அம்மாவின் சிரிப்பு பெண் பிள்ளைகளுக்குச் சர்க்கரைக்கட்டி தானே?
         
——————–
            ஒரு நாள், கவி பள்ளியிலிருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. ஸ்வேதா கோபம் கொண்டாள். சுதாவுடன் நெடுநாள் கழித்து பேசிப் பேசி, பொழுது போனதே கவிக்குத் தெரியவில்லை.
            மணியைத் தாமதமாகப் பார்த்துவிட்டு திடுக்கிட்டாள். வீட்டிற்கு விரைந்தாள்.. ஸ்வேதா கவியுடன் பேசவில்லை..
ஆனால் அம்மாவின் பார்வை வேறு விதமாக, மிகவும் அலட்சியமாக இருந்தது. கவிக்கு அம்மா தன்னைச் சந்தேகப்படுவது புரிந்தது.
            “அம்மா நான் சுதாவிடம் தான் பேசிக்கிட்டிருந்தேன். நேரம் போனதே தெரியல்ல..”
            “கவி… நான் எதைப்பற்றியும் கவலைப்படலை.. என் வேலையை மட்டும் தானே பார்த்திட்டிருக்கேன். இடத்தைக் காலிபண்ணு.. நான் துணிமணிகளை லான்டிரியில் போடப்போறேன்.”
            “அம்மா நீங்க என்னை நம்பணும். ப்ளீஸ்..”
            “எப்படி கவி? எப்படி உன்னை நம்புவது? அதையும் தான் எனக்குச் சொல்லிக் கொடேன்.. நான் அந்த வழியைக் கேட்கிறேன்.. ம்.. சொல்லு, பத்து நிமிடங்கள்  தாமதமாக நீ வந்தால், உன்னை சந்தேகப்படத்தான் தோன்றும்.. நீ செய்த வேலைக்கு.. எப்படி உன்னை நான் நம்பணும்னு சொல்ற? ம்?”
            “சுஜாதா அன்கிளை நம்புனீங்கல்ல? அதுபோலத்தான் என்னையும் நீங்க நம்பணும். அவரை இப்ப வரை நம்புறீங்கல்ல? என்னையும் அதுபோல நம்புங்க.. கண்டிப்பா நான் வழி தவறமாட்டேன். செய்த தப்புக்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். இனி தவறே செய்யமாட்டேன்னு சத்தியம் செய்றேன். அம்மா சுஜாதா அங்கிளைபோல நான் என் ப்ராமிஸைக் கண்டிப்பா கீப் பண்ணுவேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நான் ஒரு தடவை சுதாவை “டி” போட்டு பேசி அவளுடன் பேசாமல் இருந்தபோது நீங்க என்னைத் திட்டி அவளுடன் பேச வச்சீங்க.. அது நடந்து இரண்டு வருஷம் இருக்கும். நான் உங்ககிட்ட அவகூட இனி பேசாம இருக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்னேன்.. இப்ப வரை அதை மீறல்ல தெரியமா? எனக்கு நீங்க தான் வேணும்மா.. உங்க கூட பேசத்தான் எனக்கு ஆசை.. பிரேமிடம் பேசுவதைவிட உங்ககூட பேசத்தான் ஆசை.. உங்ககிட்ட படிச்சு ஒப்பிச்சாதான் படிச்ச மாதிரி இருக்கு. நான் கண்டிப்பா மெடிசன் சேருவேன். நீங்களும் அப்பாவும் நிச்சியம் என் கிளினிக் கவனிப்பீங்கம்மா..”
            கவி சொல்லி முடித்த போது இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி முத்தமிட்டு அழுதனர்.
            நம்பிக்கை பிறந்தது.. ஒரு வாரம் சென்ற பிறகு தனம் ஆச்சி அவர் வீட்டிற்குச் சென்றார். அம்மாவின் முத்தங்களின் தடை நீங்கியது. அவளும் தனது தலையணைக்குள் அதை நிரப்பினாள்.
            கவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் இரண்டாம்  இடம் பெற்றாள்.
இரவில் கண் விழித்துப் படித்தாள்.
            பன்னிரெண்டாம் வகுப்பில் அவளது ஒரு நாள் தூக்கம் மூன்று மணி நேரம்தான்.
            ஒரு முறை பரீட்சையின் போது, முதல் நாள் வேலையை விட்டுச் சென்ற போது இருந்த இடத்திலேயே மறுநாள் அதிகாலை வேலைக்கு வந்தபோது கவி இருந்தததைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தாள் வேலைக்காரப் பெண்மணி.
            பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியின் முதல் மதிப்பெண்.
            மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அம்மாவை அப்பாவைக் கவனிக்க ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாள். கல்லூரி ஹாஸ்டலிலேயே தங்க முடிவு செய்தாள். தனம் ஆச்சி வீட்டிற்கு போன பிறகும் வாரம் இருமுறை பேத்தியைப் பார்க்க ஹாஸ்டல் வந்துவிடுவார்.
இரவு வரும் பகல் வரும். வாரம் வரும் வருடம் வரும்.. சபலமும் வரும். அதுபோல பகுத்து அறியும் ஞானமும் வரும்….. என்ன ஒரு கஷ்டம் ஞானம் வரும் வரை பொறுமை தான் முக்கியம்! சபலத்திடமிருந்து தள்ளி நிற்பதுதான் முக்கியம்! விலகி நில் மனமே விலகி நில் என்ற மனப்பாடப்பாட்டை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அவ்வளவுதான்! அவ்வளவுதான் விஷயம்!
          

Advertisement