Advertisement

            “கவி இங்க என்னிடம் வாயேன்”
            “ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்.”
            “சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்.”
            கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற நினைப்பது புரிந்தது. எதுவானாலும் சாப்பிடக் கூடாது, அப்போதுதானே அம்மா பார்க்கும்போது மெலிந்து கன்னம் வற்றித் தெரியும், என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டு ஆச்சியிடம் சென்றாள்.
            “ம்.. ஆச்சி எதுக்கு கூப்பிட்டீங்க?”
            “கவி உன்கிட்ட ஒரு கேள்வி!”
            கவி வசதியாக ஆச்சியின் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்தாள்.
            “ம்.. கேளுங்க.”
            “கவி, உன் தாத்தாகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் எதுன்னு தெரியுமா?”
“சொல்லுங்க..”
            “அவர் என்னை “டி” போட்டுப் பேசியதில்லை. என்னை ‘தனம்மா’ என்று அம்மா சேர்த்துதான் கூப்பிடுவார்.. ஒருவர் நம்மை இப்படி நேசித்தால்? அவர்களுடைய அன்பை எப்படி திருப்பிக் கொடுப்பது? அவருடைய சந்தோஷத்திற்கு நாம் முழு காரணகர்தாவாக இருந்து திருப்பிக் கொடுக்கவேண்டும். அதில் நான் உறுதியாக இருந்தேன். அவர் உயிர் பிரியும் வரை அதைக் கடைப் பிடித்தேன் கவிம்மா. நம்மை அன்பால் கட்டிப் போடுபவரை நாமும் அன்பால் கட்டிப் போட்டுவிட வேண்டும்… அந்த கட்டு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? எளிதில் எவரும் அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும். கட்டுண்டவர் நினைத்தால் கூட அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும்.”   ஆச்சி என்ன சொல்ல வருகிறார் என்ற புரிந்து கொள்ள கவி முயற்சி செய்தாள். தனம் ஆச்சி மேலும் தொடர்ந்தார்.
            “கவி ஆனால் ஒரே ஒரு காரணத்தால் அன்பின் கட்டு தெறித்து தானாக அவிழும் தெரியுமா? அது என்ன என்று உனக்குத் தெரியுமா?”
            கவி தெரியாது என தலையாட்டினாள்.
            தனம் ஆச்சி சொன்னார், “நம் அன்பிற்குரியவர் நம்மை ஏமாற்றும்போது! நம் நெஞ்சை பிளக்க வைக்கும் உண்மையை மறைத்து வாய் கூசாமல் பொய் சொல்லும்போது!”
            குற்ற உணர்ச்சி கவியை கூசச் செய்தது. கவிக்கு தலையை நிமிர்த்த முடியவில்லை. அமைதியாக இருந்தாள். அழுகை வரவில்லை…
அழுகை ஒரு உப்புக்கல்லுக்குக்கூட உபயோகம் இல்லை என்று இந்த இரண்டு நாட்கள் அவளுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தன.
இயலாமையில் வரும் அழுகையை கூட, “சரி” என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சும்மா சும்மா கண்களைக் கசக்குவது முட்டாள்தனம். அடி முட்டாள்தனம்.
“கவி.. ஒரு நிஜக் கதை சொல்றேன்.. நாம் சம்பந்தப்பட்டது.. மதுரை அனுப்பானடியில் நம்ம பழைய வீடு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கவிடம் கேட்டார் ஆச்சி. கவி இல்லை என்று தலையாட்டினாள்.
            “உனக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த வீட்டில் குடியிருக்கும் போது ஞாயிற்றுக் கிழமைகளில் கோழிக்கறி வாங்க நான் தான் போவேன். உன் அம்மாவும் வேடிக்கை பார்க்க என்னுடன் வருவாள். அவளுக்கு பத்து வயது இருக்கும்.
            அந்த கோழிக்கடையில் ஒரு பையன் இருந்தான். அவனுக்கு பதினைந்து வயது இருக்கும். நான் கோழி வாங்க போகும் போது நல்லா சிரிச்சி பேசுவான். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் அவனை அங்கு பார்க்க முடியும். விவரம் கேட்டபோது அவன் சொன்னான், “நான் ஸ்கூலுக்கு போறேன் அம்மா. அதனால ஞாயிறுமட்டும் தான் வேலைக்கு வருவேன். உங்களுக்கு கறி வேணும்ன்னா ஃபோனில் ஐயாகிட்ட சொல்லுங்க, அதோ அந்த பச்ச கட்டிடம் உங்க வீடு தான? நானே வந்து தர்றேன்”. என்றான்.
பிறகு, “தங்கச்சி எந்த ஸ்கூல்” என்றெல்லாம் கேட்டான்.
            நம்ம பழைய வீட்டு வாசலில் ஒரு பிச்சிக் கொடியிருக்கும் கவி… எவ்வளவு பூ பூக்கும் தெரியுமா? பூ கட்டி மீள முடியாது. பூவின் வாசனை என்னை தினமும் வாசல் படிக்கட்டில் ஒரு மணி நேரம் உட்கார வைக்கும் தெரியுமா? உன் அம்மா தினமும் சாயங்கால வேளைகளில்,    பூவை ஆசையாக வைத்துக் கொள்வாள். வெள்ளை நிறத்தில்… வாசனை மூக்கைத் துளைக்கும் கவிம்மா.. “பிச்சிக் கொடி வீடு” என்றே போஸ்ட்மேன் அழைப்பான் என்றால் பார்த்துக்கோயேன்.
            அவன் அம்மாவுக்கு பிச்சிப்பூ பிடிக்குமாம் தினம் நம்ம வீட்டுவாசல் பிச்சிப்பூவைப் பறித்துக் கொண்டு போவான். நான் அவனுக்கு அதை சரமாக சில நேரம் கட்டிக் கொடுப்பேன். பற்கள் அனைத்தும் தெரிய சிரித்து வாங்கிச் செல்வான். வெளி வாசல் கேட்டை அவன் பூ பறிப்பதற்காக திறந்தே வைத்திருப்பேன்.”
            தனம் சிறிது நேரம் கழித்து எச்சிலை விழுங்கிக் கொண்டு பேசத் தொடங்கினார். “ஒரு நாள் நானும் உன் அம்மாவும் ஒரு கால்யாண வீட்டிற்கு போய்விட்டு ஆட்டோ கிடைக்காதலால் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் எங்களை தொடர்வதுபோல் ஒரு உணர்வு… நான் நினைத்தது போலவே மூன்று பேர் எங்கள் பின்னே கையில் கத்தியுடன் நின்றனர். அவர்களை நான் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டேன். முகத்தை கர்சீப்பால் மூடியிருந்தனர். எங்களை திரும்பச் சொன்னார்கள். நாங்கள் அவர்கள் பக்கமாக திரும்பியபோது, ஒருவன் தனது கத்தியை கீழே போட்டுவிட்டான். கீழே போட்ட கத்தியை எடுக்கக்கூட நினைக்கவில்லை அவன். பக்கத்தில் இருப்பவனிடம் காதில் ஏதோ பேசினான். பிறகு இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். பிறகு ஒருவன், “ஏய்.. இந்தா வேகமாக நட..! ம் ஓடுங்க.. வேகமா வீட்டப்பார்த்து வேகமாக ஓடுங்க…!” என்றான்.
            “கத்தியைக் கீழே போட்டவன் குனிந்து கத்தியை எடுத்தான்.. அவன் கைகள்… நானும் உன் அம்மாவும் வருடக்கணக்காக பார்த்த கைகள்! நிமிந்தவன் கண்களை நான் உற்று நோக்கினேன். அவன் கண்கள் “என்னிடம் பேச வேண்டாம்” என்று கெஞ்சியது!”
உன்னோட அம்மாவும் அவனை அடையாளம் கண்டுபிடிச்சிட்டா.
            “நான் சிறிதும் தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தேன். உன் அம்மாவும் அவனைக் கண்டு கொண்டாள். அன்றிலிருந்து நான் வாசல் கேட்டை திறந்து வைப்பது கிடையாது. கறி வாங்க போவது கிடையாது. உன் தாத்தாவே வாங்கி விடுவார். கறி வாங்க போகும்போது அவன் எங்களைக் கேட்பானாம். தாத்தா சொல்வார், “அந்த புள்ள உன்னைக் கேட்டுச்சு தனம்மா”
            பிறகு அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவன் பள்ளிக்கே செல்வது இல்லை என்று தெரிஞ்சிடுச்சி. அவன் அம்மா வீட்டு வேலை செய்கிறாளாம். இவன் ஊர் சுத்துவதே தொழிலாக வைத்திருக்கிறானாம்.”
            “ஒரு பத்து நாள் கழித்து வாசலில் சாயங்கால வேளையில் திமு திமுவென்று போலீஸ் அவனை அடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். உன் தாத்தா உடனே போலீஸிடம் சென்று “சார் அவன் நல்ல பையன். எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். நீங்க வேணும்னா என் மிஸ்ஸஸ்கிட்ட கேட்டுப் பாருங்களேன்” என்று என்னைப் பார்த்தார்.”
            நான் உடனே அவரிடம், ‘ஆமாம் சார் நல்ல பையன்.’ என்றேன்.
“நேத்து சாயங்கலம் ஒரு தெஃப்ட் கேஸ் மேடம்… அதுக்கு விசாரிக்க தான் அழைச்சிட்டுப் போறோம்.”
“நேற்று சாயங்காலம் முழுவதும் என் வீட்டைக் கீளின் பண்ணிக் கொடுத்தான்!’ என்றேன்.”
“நான் அவனைப்பற்றி மேலும் நல்லவிதமாகச் சொன்னேன். அந்த காவலாளி அவனை விடுவிக்க சிறு தயக்கத்துடன் சரி சொன்னார்.”
            “உன் அம்மா, இதைப் பார்த்தவள் உடனே போய் கேட்டை மூடிட்டா.”
“அம்மா அந்தப் பையன் ஒரு திருடன். போலிஸ்கிட்டயிருந்து காப்பாற்றியதே தப்பு… ஆனா நம்ம கேட் பக்கம்கூட அவன் இனி வரக்கூடாதுன்னு உன்னோட அம்மா சொல்லிட்டா.”
 அவன் வெகு நேரம் அங்கு நின்றது பிறகு உன் தாத்தா சொல்லித்தான் தெரியும். ஒரு பத்து நாள் கழித்து காலை ஏழு மணிக்கு காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் அவன் வாசலில் நிற்கிறான்.
    பட பட வென்று பொரிந்து தள்ளினான், “அம்மா நான் இப்ப தினம் ஒழுங்கா பள்ளிக்கூடம் போறேன். என்னைக் காப்பாத்தினதுக்கு தாங்க்ஸ். நல்லா படிப்பேன்.. இனி அந்தப் பசங்க கூட சேரமாட்டேன்.”
            “அது நடக்கும் போது பார்க்கலாம்! நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. எங்களை ஆளை விடு என்று பட்டுன்னு சொல்லி அனுப்பிட்டேன்.”
 ஒரு மாதம் போனது. வீட்டிற்கு வந்தான் கையில் கணக்கு மார்க். நூறு மதிப்பெண் கவி. என்னால் நம்ப முடியல. உன் அம்மா அவன் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்தாள். அசந்தே போயிட்டா.
            “அம்மா அண்ணன் நிஜமாகவே நூறு மார்க்” என்று கண்கள் விரியச் சொன்னாள். பிறகு ஸ்வேதா என்ன செய்தாள் தெரியுமா?
            வேகமாக வாசல் பக்கம் போனவள் வாசல் கேட்டை நல்லா அகலமாக திறந்து வச்சா. அவன் அப்ப அழுததை என்னால் இன்னும் மறக்க முடியாது.
            “யாரோ ஒருவன், அவன் செய்த தப்பை, அவன் நேர்மையான நடவடிக்கையால், உன் அம்மா மனதைக்கரைக்க முடிந்தால், உன் அம்மாகிட்ட மன்னிப்பு வாங்க முடிந்தால், உன்னால் அது முடியாதா?”
            கவி ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். பத்து நிமிடத்திற்குப் பிறகு அவள் அழவில்லை. அவள் கையில் கணித புத்தகமும், அறிவியல் புத்தகமும் இருந்தது!
திருந்திவிடு மனமே! திருந்திவிடு! ஒரு மரக்கட்டை கிடைத்தால்கூட அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விடு.
*********

Advertisement