Advertisement

உயிருடன் நகக் கண்ணை பிய்ப்பார்களாம், போர்களத்தில் தோற்றவனுடைய நகக் கண்ணை…. அப்படி யாரும் ஸ்வேதாவின் நகங்களை வேறோடு பிய்த்துவிட்டார்களா? ‘கவி ராஜாத்தி’ “கவிக்குட்டி” “என் அறிவுக்கிளி’ என்று கொஞ்சியவள் எப்படி ஊமையானாள்?
            ஸ்வேதாவின் இதயம் அதன் கூட்டை விட்டு உலாவப் போனதோ? சுடுகாட்டில் உலாவுகிறதோ? இல்லை, அவள் கணவனை வழியனுப்பும் முன் அவனுடன் சென்ற அந்த முக்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் விட்டதோ? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும்! ஏனென்றால் மூச்சு வருகிறதே.. உயிர் இன்னும் இருக்கிறதே… ஆதலால் அவள் இதயம் முக்தீஸ்வரன் கோயிலுக்குத் தான் போயிருக்க வேண்டும்.
            கவியால் ஸ்வேதாவைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ஆச்சியிடம் எல்லா சத்தியமும் செய்தாள். பிரேமைப் பற்றி நினைக்க இது நேரமில்லை என்று அவன் நினைப்பைத் தள்ளி வைத்தாள்.
            ஆச்சி ஸ்வேதாவிடம் பேசிப் பார்ப்பதாகச் சொன்னார். இருந்தாலும் கவிக்கு மனதில் துளிகூட நம்பிக்கையில்லை. அம்மாவை அசைக்க ஒரு வியூகம் கிடைத்தால் போதுமே என்றிருந்தது.
            அறிவாளிகள் எப்படி பிறரை தன்னை அறிவாளி என்று நம்பவைப்பார்கள்?
            பிறரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது என்று யோசிப்பார்கள். உண்மையை மட்டும் பேசி மற்றவர்களை நம்ப வைப்பார்கள்.
            குற்றவாளிகள் எப்படி பிறரை தனது குற்றம் குற்றமே இல்லை என்று நம்பவைக்க யோசிப்பார்கள்?
            தனது பசி, பணத்தின் தேவை ஆகியவற்றைக் கூறி தனது குற்றத்தை நியாயமாக்கப் பார்ப்பார்கள்.     அறிவாளிக் குற்றவாளிகள் என்ன செய்வார்கள்? உண்மையை ஒளிக்காமல் சொல்லி, ஆச்சர்யப்படுத்தி, பிறகு தனது பலவீனத்தின் மேல் பழி போட்டு நம்ப வைப்பார்கள்.
            கவியும் இதையே செய்தாள்.
            “அம்மா நான் பிரேமிடம் ஆறுமாசம் தான் பழகினேன். அவனுடன் பழகியது தப்புதான்.. அது ரொம்ப தப்பு.. என் வயதில் வரும் கோளாறுதான் என்று நான் புரிந்து கொண்டேன். தப்பு செய்ய பிரேம் தூண்டியிருந்தால் கூட நான் தப்பு செய்திருக்கக் கூடாது. ப்ளீஸ் என்கூட பேசுங்களேன்..”        
“நான் நிச்சியம் இனி பிரேமை பார்க்க மாட்டேன். டாட் ப்ராமிஸ். ப்ளீஸ்.. ப்ளீஸ்ம்மா”
ஸ்வேதா காது கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். கைபேசியை சார்ஜில் போட்டாள். கவி அம்மா முன் மண்டியிட்டுக் கொண்டாள்.
            “அம்மா ப்ளீஸ். நான் இனி தப்பே செய்ய மாட்டேன் ஐ ப்ராமிஸ் தௌசன்ட் டைம்ஸ்..”
    கவியின் முகத்தைப் பார்க்கப் பார்க்க ஸ்வேதாவின் கோபம் கூடிக்கொண்டே போனது. அடித்து உதைத்து என்ன பயன்? ஒன்றமில்லை! கவியின் தவிப்பைப் பார்த்து இனி தவறு செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை வந்தபோதும், தவறுக்குரிய தண்டனை போதாதே என்றது ஸ்வேதாவின் மனது. அடித்து உதைத்து என்ன பயன்? ஒன்றுமில்லை. என்ன திமிர்? என்ன தைரியம்? எவ்வளவு துணிச்சல், இப்படி ஒரு தவறை செய்யத் துணிந்திருப்பாள்? என்று நினைக்கையில் ஸ்வேதாவின் இளகிய மனம், மீண்டும் அதே பழைய இடத்தில் வந்து நின்றது. காற்றுக்கு அசைந்து பிறகு மீண்டும் பழைய இடத்தில் வந்து நிற்கும் ஒரு சிறு செடியைப்போல.
            ஷ்யாமிடம் போய்விடுவோமா? ஷ்யாம் கேட்டால் ஏதாவது காரணம் சொல்லலாம். ஆனால் கவியை விட்டு எப்படிப் போக? இங்கே இருக்கவும் கவி முகத்தைப் பார்க்கவும் இஷ்டமில்லையே.. என்று குமுறினாள் மனதினுள்.
            ஸ்வேதா அமைதியாகச் சொன்னாள், “கவி என்னிடம் பேசாதே! எனக்கு உன்னிடம் பேசப் பிடிக்கவில்லை. பிரேமை பாரு, பார்க்காமல் இரு, ஐ டோன்ட் care..”
            பிறகு, ஸ்வேதா தனது அம்மாவின் அறைக்குச் சென்று அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “தலை ரொம்ப வலிக்குதுமா கால்பால் இருக்கா?”- ஸ்வேதா.
            ஸ்வேதாவின் தாயார் தனம் சொன்னார், “அழுது புலம்பாத. மாப்பிள்ளைக்கு இது தெரிய வேண்டாம். நான் கவிய பார்த்துக்கிறேன். மூகாம்பிகை எல்லா பிரச்சனையையும் சரி பண்ணுவாடா..”
            “நீ அலட்டிக்காதே.. பிரச்சனை பெரிதா இருந்தா அதை நம் தலையில் வச்சிக்கக்கூடாது அதற்குதானே விஷ்ணுவுக்கு பத்து தலை இருக்கு. அவர் தலையில் வைத்துவிடு. சாப்பாடு கிடைக்காத ஜீவனுக்கு சாப்பாடு போடு.. “என் பிள்ளையை காப்பாற்று கடவுளே” என்று வயிறு காய்ந்த ஜீவனுக்கு சாப்பாடு போடு.. எல்லாம் சரியாகும்.. கவி உன் பொண்ணுடா.. அவ சோடை போக மாட்டா! எனக்கு பயமே இல்லை தெரியமா?”
தனம் ஆச்சி…
“அட கோமாளி என்ன செய்யிற?” – தனம்.
 அந்த பயங்கர கூட்டத்திலும் தனம் ஆச்சி குரலைக் கேட்டுத் திரும்பாதவர் சிலர்தான். பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
            ஒரு விடலை அவனது லுங்கியில் ஒரு மது பாட்டிலை திணித்து, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் திரு திரு வென்று விழிக்கவும் தொடர்ந்தார், “என்னப்பா குடல் வெந்து சாவதுதான் உனக்கு இஷ்டமா? பதினைந்தில் குடிக்க ஆரம்பிச்சினா இருபத்தைந்தில் ஈரல் எப்படி வெந்துபோகும்னு தெரியுமா? கரிக் கட்டையாகப் போய்விடும்.”
சுற்றியிருந்தவர்கள் அவனைக் கேவலமாக பார்க்க ஆரம்பித்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிடைத்த பஸ்ஸில் ஏறிச் சென்றான் அவன்.
            தனம் ஆச்சி ஸ்வேதாவின் தாயார். கணவர் இறந்த பின்பும் தனியே தன் வேலைகளை தாமே செய்துகொண்டு தனியே வசிக்கும் தைரியம் கொண்டவர். ஸ்வேதா எவ்வளவு கூப்பிட்டாலும் மகள் வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார். வந்தாலும் இரண்டு மணிநேரம் மட்டும் இருந்துவிட்டு நாசுக்காக கிளம்பிவிடுவார்.
            தனம் ஆச்சி காய்கறி வாங்க கடைக்குச் சென்றார். கவியின் கைபேசி பிரேம் எண்ணைக் காட்டி ஒலித்தது.
            பிரேம் அவசரமாகப் பேசினான், “கவி, நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட ஒன்னும் சொல்லவில்லையே? நீ இன்னும் மைனர் தான்.. நீ ஏதும் சொன்னால் எனக்கு தான் பிரச்சனை.. கவி.. கேட்குதா நான் பேசுவது?.. கவி?”
            “ம்.. கேட்குது பிரேம்.. சொல்லு..”
            “கவி நீ உன் அம்மாகிட்ட பேசும் போது ஜாக்கிரதையாக பேசு.. ஏதும் லூஸ் டாக் விடாதே.. என்ன?”
“ம்..”
“இங்க.. நான் பேரன்ட்ஸ்கிட்ட நாம் பேசிப் பழகியதாக மட்டும் தான் சொல்லியிருக்கேன். அவங்க நம்பிட்டாங்க.. நீயும் உன் அம்மாகிட்ட அப்படியே சொல்லு.. என்ன சரியா?”
            “என்னுடைய அம்மா புத்திசாலி நான் சொல்லாமலே கண்டுபிடிச்சிட்டாங்க’ என்பதைச் சொன்னால் அலறி விடுவான் என்பதால் அதைச் சொல்லாமல் மறைத்தாள்.
“கவி கொஞ்சம் நாள் நாம பார்க்காம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்.. கொஞ்ச நாள்தான்.. பிறகு நாம பழைய மாதிரி மீட் பண்ணலாம். என்ன சரியா?”
            “பிரேம்.. என் ஆச்சி இப்ப வந்திடுவாங்க.. நான் ஃபோனை வைக்கட்டுமா?”
            “ம் சரி கவி.. பை. அப்புறம் அந்த போட்டோஸையம் அழித்து விடேன்.. நமக்கு தானே பிரச்சனை?”
            “நமக்கா? உனக்கா?” என்று கேட்டவள் உடனே அழைப்பைத் துண்டித்தாள்.
            இன்னும் ஐந்தாறு வருடம் என்ன?  ஐந்து நாள் கூட பொறுமை காக்க மாட்டான். பிரச்சனை வந்தால்.. தன்னை காப்பாற்ற மட்டுமே நினைக்கிறானே. ஐய்யோ என்று அலறியது உள்ளம். அனுபவித்த சுகம் யாவும் வலியாகிப் போனது. அவமானம் என்றே பொருள் ஆனது. பேசிய பேச்சுகள் பைத்தியக்காரனின் உளரல் ஆனது. அந்தப் பகல் வேளை கூட கைகளை உறைய வைத்தது. கூனிக்குறுகினாள். அழுது கரைந்தாள். “ஏன் ஒரு நோயும் நமக்கு வர மாட்டேன் என்கிறது? காய்ச்சலாவது வரலாமே.. பள்ளிக்குச் சென்றால் கண்ணீர் விட முடியவில்லையே. காய்ச்சல் வந்து தொலைய மாட்டிங்குதே” என்று ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தாள்.
            பிரேமை விடச் சொன்னது மூளை.
            கவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சுதாவின் தந்தை, சுஜாதா அங்கிள். சுதாவை ஏதாவது வேலை கொடுத்து கவியைப் பார்த்துவிட்டு வரச்சொல்லுவார்.
            சுதாவும் குஷியாகக் கிளம்பிவிடுவாள்.
            சுஜாதா அங்கிளின் மாமிதான் கவியை மாலை வேளைகளில் வந்து பார்த்துவிட்டுப் போவார்.
நிமிடங்கள் கடும் இருட்டாக கடந்தன…. அப்படியென்றால் நாட்கள்??? ஐய்யோ… என்று மனதிற்குள் கத்தினாள் கவி.
*****
சுஜாதா அங்கிள்
சுஜாதா அங்கிள் வீட்டிற்கு வந்தால் தயங்காமல் தனம் அம்மாவிடம் துடைப்பத்தைக் கூட வாங்கி பெருக்க ஆரம்பித்திடுவார். தனம் ஆச்சி இங்கு வந்ததில் இருந்து சுஜாதா அங்கிள் கவி வீட்டிற்கு வராத நாள் இல்லை. சுஜாதா அங்கிள் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். அவரது மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியை. இருவரும் கலப்பு திருமணம் செய்தவர்கள். காதல் திருமணமாம். கவிக்கு இந்த சமாச்சாரங்கள் ஆச்சி சொல்லித்தான் தெரியும். ஆப்பிள் வாங்கி வருவார். தனம் ஆச்சி திட்டினால் கூட கேட்காமல் பழங்கள் வாங்கிக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்.
            தனம் ஆச்சியை மருத்தவ பரிசோதனைக்கு தாமே அவரது பழைய ஆம்னியில் பெருமையாக அழைத்துச்செல்வார். தனம் அம்மாவுக்கு எழுபது நெருங்கிவிட்டதால், கவியும் அவரிடம் வேலை வாங்குவதில்லை. தன்னுடைய தோழிகள் பெற்றோரோடு சிரித்துப் பேசினால், ஏங்குவாள். சுதா அவள் அம்மாவிடம் சிரித்துப் பேசி வம்பிழுத்தால்.. புழுவாய் உள்ளே துடிப்பாள்.
            கவிக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுது அழுது கண்கள் எரிந்தது. தொண்டையெல்லாம் வறண்டது.
            ஞாயிறும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. திங்கள் அன்று பள்ளி சென்றாள். வகுப்பில் ஒரு பாடமும் மனதில் பதியவில்லை. பள்ளி நேரம் முடிந்தபோது வயிற்றில் புளியைக் கரைத்தது. வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மா கையில் கல்லூரிப் பாடப்புத்தகம் இருந்தது. கவியைப் பார்த்தும் பார்க்காததுபோல இருந்துகொண்டாள் ஸ்வேதா. தனம் ஆச்சி மட்டுமே கவியுடன் பேசினார். கவியின் திசை பக்கம் ஸ்வேதா திரும்பவில்லை. இரவில் அம்மா தன் கேசத்தை இதமாக வருடிக்கொடுத்து தூங்க வைத்துப் பழக்கப்படுத்தியதால், கவிக்கு தூக்கம் வருவதுபோல் இருந்தாலும் கண்கள் உறங்க மறுத்தது. தினசரித் தேர்வுகளில் முழுமதிப்பெண் பெற்றபோதெல்லாம் உச்சி வகிடில் ஒரு முத்தம், காய்ந்த துணிமணிகளை மழை வரும் முன் கவி எடுத்துவிட்டால்… ஒரு பறக்கும் முத்தம் ஈ.பி பில், ஃபோன் பில், கைபேசிக்கு ரீசார்ஜ் ஆகிய சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்தால் கையைப்பற்றி ஒரு தட்டிக்கொடுத்தல்.. இப்படி பலவற்றை கவி ஒரே நாளில் இழந்தாள்.
இழந்துவிட்டோம் என்ற எண்ணமே வாட்டி வதைத்தது. கவியின் பள்ளி செல்லும் பாதையில் ஒரு ஆஞ்சிநேயர் கோவில் உண்டு. புதன் கிழமை, கவி சுதாவுடன் பள்ளி செல்லும் முன் அந்த கோவிலுக்குச் சென்றாள். ஆஞ்சிநேயரிடம் வேண்டினாள், “கடவுளே, அம்மாவை என்னுடன் பேச வைங்க. நான் இனி தப்பே செய்யமாட்டேன். என் அப்பா மேல் சத்தியம். அந்த பிரேமை பார்க்கமாட்டேன். இந்த ஒரு தப்பை மட்டும் மன்னிச்சிடுங்க, சுஜாதா அங்கிள் சொன்னார், நீங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களாம். பலசாலியாம், கேட்பதைக் கொடுப்பீங்களாம். நான் கேட்பது ஒன்று தான். என் அம்மா என்னுடன் பேச வேண்டும். பேசினால் கூட போதும் என்னை ‘கவி ராஜாத்தின்னு’ கொஞ்சக் கூட வேண்டாம். பேசினால் மட்டும் போதும். என் தப்பை மன்னிப்பீங்களா?”
            கவி ஆஞ்சிநேயரிடம், “என் தவறை மன்னிப்பீங்களா?” என்று மனதாரக் கேட்டபோது சுதா, “பள்ளிக்கு நேரமாகிவிட்டது. கடைசி பெல் அடித்துவிடுவாங்க.” என்று கூறி ஆஞ்சிநேயர் பதில் சொல்லும் முன் கவியை அழைத்துச் சென்றாள்.
            மாலை வீட்டிற்கு வந்த கவிக்கு உடல் முழுவதும் வலித்தது. முதுகுத்தண்டு நரம்பு இழுத்து வலி உண்டு பண்ணியது. வலி அதிகமாக இருக்கவும் கவி துவண்டாள். வலியால் அல்ல.. வலிக்கு மருந்து கொடுக்க அம்மா தன் பக்கம் வரமாட்டாளே! என்று நினைத்து நினைத்து துவண்டாள். சிறிது நேரத்தில் காய்ச்சல் அனலாய் பற்றிக்கொண்டது. மனமும் உடலும் வலித்தபோதும் ஒரு துளி கண்ணீர் விடவில்லை. தனது தவறுக்கு கடவுள் தந்த தண்டனை, அதனை அழாமல் ஏற்கவேண்டும் என்றே எண்ணிக் கொண்டாள். இதுவே ஐந்து நாட்களுக்கு முன்பாக இருந்தால் “அம்மா” என்ற வார்த்தையை கவி முன்னூறு முறை கூறியிருப்பாள்.
ஸ்வேதாவும் “கவிம்மா வலிக்குதாடா?” என்று மூச்சுக்கு மூச்சு கேட்டிருப்பாள். கவியின் அப்பா அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மனைவியை தொந்தரவு செய்யாமல் தனம் ஆச்சியிடம் ஃபோன் செய்து கேட்டிருப்பார். ஆனால் இப்போது??? தான் சாகக்கிடந்தாலும்  அம்மா முகத்தைக் கூட காட்டப்போவதில்லை என்பது திண்ணம்.
            அப்படியே இழுத்துப்போர்த்திக்கொண்டு கட்டிலில் படுத்துவிட்டாள். தனம் ஆச்சிதான் கவியின் காய்ச்சலை கண்டுகொண்டார். பிறகு நெற்றியில், புருவத்தில் சிகப்பு நிறமாய் கொசுக்கடி போல இருக்கவும் சுஜாதா அங்கிளின் மனைவியை அழைத்துவந்து காண்பித்தார். தனம் ஆச்சியும், அங்கிளின் மனைவியும் கவியின் ஆடைகளை களைந்து பார்த்துவிட்டு அவர்களது சந்தேகத்தைத் தீர்த்தனர்.
            அன்று ஸ்வேதா வீட்டிற்கு தாமதமாக வந்தாள்.
            தனம் ஆச்சி ஸ்வேதாவிடம் கவிக்கு அம்மை போட்டிருப்பதாகச் சொல்கிறார். ஸ்வேதா கவியின் அறைக்குச் சென்று கவியை ஒரு நொடி பார்த்துவிட்டு தனது அறைக்குச் சென்று “கால்பால்” எடுத்து தனம் ஆச்சியிடம் “அம்மா மாத்திரையை இங்க வைக்கிறேன். நீங்களே குடுத்திடுறீங்களா? நாளை கண்டிப்பாக கவி ஹாஸ்பிட்டல் போகணும். நீங்க கூட்டிட்டு போங்க சரியா?” என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.
            ஒரு மாதம் சென்றது. கவி இருபது நாட்கள் பள்ளி செல்லவில்லை. பிரேம் அவள் கண்ணில் படவில்லை. அவன் மீண்டும் லன்டன் சென்றுவிட்டதாகப் பேச்சு அவள் காதில் விழுந்தது. கவி தனது மடத்தனத்தை நினைத்து வெட்கினாள்.
            அந்த தகுதியில்லாதவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர்கூட வடிக்கவில்லை. ஆனால் வெட்கினாள். எளிதாய் சிக்கிய சிறு மீன் ஆகிப்போனோமே? என்று கேட்கத்தெரிந்த மனதிற்கு, ஏன் திமிங்கலம் போல் நாம் இல்லை? என்று கேட்கத் தெரியவில்லை. அப்படி கேட்கத் தெரிந்திருந்தால்.. “இனி நான் வலையில் எளிதில் சிக்காத ஒரு திமிங்கலம் போலத்தான் இருப்பேன்!” என்று கவியின் வைராக்கியம் சத்தியப்பிரமாணம் செய்திருக்கும்.
            குற்ற உணர்ச்சி குனியத்தான் வைக்குமோ? நிமிர வைக்காதோ? ‘தவறை உணர்ந்தபோது குனிந்து நில். தவறை சரிபண்ண நினைத்துவிட்டால் நிமிர்ந்து நில் கவி.’ என்று சொல்லிக்கொடுக்க அவளது ஆச்சி நினைத்தார். எழுபது வயது தனம் ஆச்சி கவியை நிமர வைத்தார்.
*****

Advertisement