Advertisement

கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது..
ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம் மீண்டும் அதீத உச்ச நிலை அடைந்தது எப்போது? கவி கைகளில் பேனாவால் ஒரு மெகன்தி டிசைன் போட்டபோது!
“கவி, என்ன செய்யிற? சரி. இனி ஒன்றும் கதைக்கு ஆகாது. நீ போய் தூங்கு, சாயங்காலம் மீதிய பார்க்கலாம். நான் நாளை என் காலேஜ்க்கு தயார் ஆகணும். செல்லை உருட்டாதே.”
            பிரேமின் தந்தையும் ஸ்வேதாவும் ஒரே கல்லூரியில் பணி செய்கிறார்கள். பிரேமின் அப்பா பயங்கர சாது. சிகரட்தான் ரொம்ப அதிகம். அவர் ரிட்டயர்ட் ஆகும் வருடம் இது.
            “யோவ் உம் பக்கத்தில் பத்து நிமிடம் யார் இருந்தாலும் அவருக்கு கேன்சர் வரும் ரிஸ்க் ரொம்ப அதிகமய்யா. நீர் தப்பிப்பதே உன் ஆத்துக்காரி நடத்தும் வரலெட்சுமி விரதம்தான்பா காரணம். நம்ம ஆளு கோயில் பக்கம் போறது கிடையாது. ஸோ நான் கிளம்பிடுறேன்ய்யா” என்று எதிர் வீட்டு சுஜாதா அங்கிள் கூறுவார்.
            “கவி நீ பிரேமுடன் மொட்டை மாடியில் என்ன செய்தாய்? நான் நீ போனதை பார்த்தேன். வேண்டாம் கவி, ஸ்வேதா அம்மாவுக்கு தெரிந்தால்..?” சுதா கேட்டதற்கு பதில் இல்லை. சுதா கவிக்கு பள்ளியின் முதல் நாளில் இருந்தே நல்ல தோழி. அவள் எதிர்வீட்டு சுஜாதா அங்கிளின் ஒரே மகள். இரு குடும்பத்திற்கும் நல்ல உறவு இருந்தது.
“கவி நீ செய்வது தப்பு உனக்கு ரொம்ப நெஞ்சழுத்தம் நான் கத்திகிட்டே இருக்கேன் நீ பேசாம இருக்குற?” – சுதா.
 “சுதா, உன் விஷயத்தில் நான் மூக்கை நுழைப்பது இல்லை, அதுபோல நீயும் இரேன்.”
            “கவி பளீஸ்பா ப்ளீஸ்.”
‘நான் ஸ்மார்டாதான் இதை செய்கிறேன் என்று சொன்னால்? தப்பு தப்பு என்று புலம்புவாள், பிரேமை விட முடியாது. அதை அவளுக்கு, இல்லை இல்லை, யாருக்கும் புரியவைக்க முடியாது. ஒரு ஆண்ணின் கைகளை மறுக்கும் திடம் ஒரு பெண்ணுக்கு இல்லை… முக்கியமாக அவனது உதடுகளை மறுக்கும் திடம் ஒரு பெண்ணுக்கு இல்லவே இல்லை. அவளது பலகீனம் அவளது உடலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.’- கவி  மனதில்.
சுதா தவறு செய்யவில்லையே என்று அவளது மனசாட்சி கேட்டபோது சுதாவிடம் பிரேம் பழகவில்லை என்று கெட்டிக்காரத்தனமாய் காரணம் சொன்னது மனது.
ஆம் பிரேம்மைப் போன்ற ஆளுமைகொண்ட ஆண் தொட்டால் எந்த ஒரு பெண்ணின் மனோபலமும் தீக்கிரையாகித்தான் போகும். இதை சுதாவிற்குச் சொல்லி புரியவைக்க முடியாது. – கவி  மனதில்.
“அப்ப பிரேமிடம் பழகாதே.” என்று ஒரே வார்த்தையில் அட்வைஸ் செய்வாள் சுதா . இப்போ காலம் கடந்தாச்சு… பிரேமின் ஆண்மைக்குள் என் பெண்மை முழுதும் இப்போது அடிமை… பெண்ணடிமை பெண்ணடிமை என்று போராட்டம் நடத்துவோரைப் பார்க்கும் போது சிரிப்பு வந்தது. என் விஷயத்தில் உடலால் ஏற்படும் அடிமைத்தனத்தை எப்படி நீக்க முடியும்?
அவன் முத்தங்களை, அவன் கைகள் செய்யும் மாயங்களை விட முடியாது. நான் என்ன தெரசாவா? இல்லை, இல்லை, சுதாவிற்கு இது புரியாது. தனியே புலம்பட்டும். புலம்பி ஓயட்டும் அதை பற்றி பேசிப் பேசி வெறுத்து நிறுத்தட்டும்.
            மனதில் முடிவு செய்த பின் கவியின் தோற்றம் கல்லைப் போல் மாறியது. கவியின் எண்ணம் போல சுதா வெறுத்து ஓய்ந்தாள். ஆறு மாதம் உருண்டோடியது. திருடன் திருடும் போது தவறு என்று தெரிந்துதான் செய்கிறான் இயேசுபிரான் போதனை அவனை நிறுத்தப் போவதில்லை.
            திருடனுக்கு பசியின் உந்துதல்.
            கொலைகாரனுக்கு பழிவெறி.
            காமக் கொடூரனுக்கு காமபோதை.
தர்மம் நியாயம் என்ற வாழ்ந்த நல்லவர்களுக்கா பஞ்சம் இந்த பூமியில்?
            பிறகு ஏன் கொலை, கொள்ளை நடக்கிறது? தவறு என்று தெரிந்துதான் மனிதன் தவறு செய்கிறான்.
            பஸ்ஸுக்கு நின்று பார்த்து பொறுமை இழந்து ஆட்டோ ஒன்றை பிடித்துக் கொண்டு ஸ்வேதா வீடு வந்து சேர்ந்தாள். வீட்டின் முன் நின்றுகொண்டு தனது கைப்பையில் இருந்து சாவிக்கொத்தை எடுத்தாள். சரியாக தவறான சாவியை பூட்டிற்குள் விட்டுவிட்டு அல்லாடினாள். பிறகு தவறான சாவியை உருவிவிட்டு சரியான சாவியை போட்டு திறந்து கொண்டிருக்கையில், அவள் பின்னே யாரோ நிற்பதுபோல் உணர்ந்து திரும்பினாள். அங்கே அவள் பின்னே வாசலில் பிரேமின் அப்பா நின்று கொண்டிருந்தார்.
            “என்ன சார் ஏதும் மறந்துட்டீங்களா? காலேஜ்ல கடைசி ஹவர்ல கூடப் பார்த்தோமே?”
            “இல்லை… உங்க ஹஸ்பன்ட்கிட்ட ஆஸ்திரேலியன் கேமரா கேட்டேன். அவர் எப்ப இந்தியா வர்றார்?”
            “இந்த மாதம் வரல்ல அடுத்த மாதம் கண்டிப்பா வருவார்.”
            “ஸ்வேதா ஒரு டன்மினிட்ஸ் நான் உங்க கூட பேசணும்.”
            “கண்டிப்பா. உள்ள வாங்க”
            “நான் விஷயத்துக்கு நேரா வர்றேன். பிரேமுக்கும் கவிக்கும் நடுவுல ஏதோ தப்பா இருக்கு. நிறைய ஃபோன்கால் பிரேமுக்கு கவிகிட்டயிருந்து வருது. இந்த நம்பர் கவியுடையதுதானா?” தன் சொல்போனில் கவி நம்பரை காட்டினார்.
            ஸ்வேதா தன்னை யாரோ நிற்க வைத்து அறைவதுபோல உணர்ந்தாள்.
            “ஸ்வேதா டோன்ட் பானிக். பிரேமிற்கும் கவிக்கும் இருப்பது வெறும் சபலம். இதை எப்படி கையாளணும்னு கேட்டா நான் பத்து அறைதான் சரின்னு சொல்வேன். ஆனா அறைவதற்கு முன் இது தப்புன்னு புரியவைத்து பார்ப்போம். புரியலைனா நிச்சயமா அறைந்திடுங்க என் பையனை!”
            மேலும் தொடர்ந்தார், “உங்க பொண்ணு ரொம்ப சின்னவ அதனால பத்து சரியா வராது கூட நாலு சேத்துகுங்க. ஸ்வேதா நீங்க இதை கவனமாக சரி பண்ணணும் அவசரப்பட்டு கோபப்பட்டு… உங்களுக்கு ஒரே பொண்ணு..”
            இவ்வளவு நேரம் பயங்கர வலி அனுபவித்தவள் அந்த ஒரு வார்தையில் துவண்டு அழுதாள். ஒரே மகளுக்காக ஆசை கணவனைப் பிரிந்து, வீட்டில் தனியே உட்கார்ந்தால் கணவன் ஞாபகம் தன்னை வாட்டும் என்று பகுதி நேர விரிவுரையாளராக வேலைக்குச் சென்று.. மகளுக்காக செய்த அத்தனையும் கண்களை தாரை தாரையாக கண்ணீர் சிந்த வைத்தது.
            கவி உன்னிடம் அம்மா எந்த விஷயத்தில் தவறு செய்தேன்? படிப்பில் கண்டிப்பு காட்டியதால் சபலம் பிடித்ததா… இல்லை, இல்லை உனக்கு நல்ல ஐ.கு.. நான் கவனிக்காமல் போனால் கூட நீ உன் படிப்பில் மட்டம் போடமாட்டாய். உன் வயது என்ன? ஐய்யோ கடவுளே! இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய? உன் அப்பாகிட்ட நான்.. ஹும் ஹும்.. ஹீ மஸ்ட் நாட் நோ திஸ்.. நெவர்..
கணவனின் முகம் கண் முன்னே தோன்றியது.
            ஸ்வேதாவுக்கு பிரேமின் அப்பா குரல் கேட்டது..
            கணவனின் நினைவுகளுக்குப் பின்னால் நிகழ் காலத்திடமிருந்து இத்தனை நிமிடங்கள் ஒளிந்து கொண்டவள் இப்போது அதை மீண்டும் எதிர் கொள்ளத் தயாரானாள்.
     “சார் நான் யோசித்து முடிவு செய்யறேன். கவி வரும் நேரம். நாம பேசியது அவளுக்குத் தெரிய வேண்டாமே..”
            “சரி நான் பீரேமை கண்டிக்க டிரை பண்றேன். ப்ளீஸ் கொஞ்சம் நிதானமா..”
            “சரி சார்”
            அவர் சென்ற பிறகு ஐந்து நிமிடம் மயான அமைதி. பிறகு யோசித்தாள்.. தலை வலிக்க வலிக்க யோசித்தாள்.. தன்னை விழுங்க வரும் மிருகத்திடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் சிறு ஜீவனைப்போல.. கடவுள் எந்த திசையில் இருந்து நம்மைக்காக்க கிருஷ்ணனை அனுப்பப் போகிறார் என்று கைவிரல்கள் ஜில்லென்று உறைய மனதில் அனைத்து தெய்வங்களையும் வேண்டினாள்.
******
            கவியின் காலடிச்சத்தம் கேட்டது. அதே நொடியில் ஸ்வேதாவின் அன்னையும் வந்து விட்டார். முதலில் எங்கே நாம் கண்டபடி அடித்து துவைத்து விடுவோமோ என்று பயந்துதான் அன்னையை வரச் சொன்னாள் ஸ்வேதா. இப்போது கவியின்மேல் உள்ள கோபம் அவளைப் பார்க்கக்கூட தடுத்தது.
 “ஆச்சி எப்ப வந்தீங்க? மாத செக்கப்பா?” ஸ்கூல் பேக்கை சோபாவில் வைத்துவிட்டு கண்களை உயர்த்தியவள் முன் முதலில் பட்டது பிரேம் ஐபாட். டேபிலில் அது கிடந்தது. எப்படி மாட்டிக் கொண்டோம் என்றும் எப்படி தப்பிப்பது என்றும் மனது வேகமாக கணக்குப் போட்டது. பிரேம் செல்போனை அஜாக்கிரதையாக வைத்திருப்பான் என்று சரியாக யூகித்தாள். ஆச்சியின் பின்னால் ஒளிந்து கொண்டால்?  
ஆச்சியின் பின் அமைதியாக நின்று கொண்டாள்.
            “கவி, இங்க வா!” ஸ்வேதா கத்தினாள்.
            கவியின் ஆச்சி வேகமாக தன் மகளைத் தடுத்து, “ஸ்வேதா நீ கொஞ்சம் பொறு! நான் அவகிட்ட பேசிக்கிறேன்”
            “கவி நீ ஏன் இவ்வளவு கீழ்தரமா நடந்த? உன் அம்மா உன்னை ஜெம் ஜெம்ன்னு சொல்லி பெருமைபடுவா. நீ மெடிக்கலுக்கு மெரிட்ல போவியாம். அவளும் உன் அப்பாவும் உன் கிளினிக் கவனிப்பாங்களாம். இப்படி எவ்வளவு ஆசை தெரியுமா அவளுக்கு? இனி இப்படி கீழ்தரமா நடக்கமாட்டன்னு அம்மாகிட்ட சொல்லு!”
            “பதில் சொல்லு கவி!”
“……….”
            “பேச மாட்ட? வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? இப்படி இனி நடக்க மாட்டேன்னு சொல்லு!”
கவி பேசியிருந்தால் கூட ஸ்வேதாவின் கோபம் குறைந்திருக்கும். அவள் மௌனம் ஸ்வேதாவை தன்னிலை மறக்கச் செய்தது.

Advertisement