Advertisement

அகில்       
            “அம்மா…. எனக்கு இரண்டு சப்பாத்தி போதும்” என்று கூறிக் கொண்டே அகில் அவன் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் வர நினைத்தான். ஓமம் கலந்த பன்னீரின் நறுமணம் அடுக்களையிலிருந்து அவன் எழுந்த நொடியில் இருந்து வந்து கொண்டிருந்தது. மணி எட்டு, இனி ஒவ்வொரு நிமிடமும் அவன் கடிகாரம் காண்பிக்கும் முன் அவனுக்குத் தெரிந்துவிடும். மனதுக்குள்ளேயே அறுபது நொடிகளையும் எண்ணத் தொடங்கி விடுவான். அடுக்களைக்குள் புகும் முன் அவன் காதுகளில் ஒரு இளம் பெண்ணின் சத்தம். இருபது வயது நிரம்பாத ஒரு இளம் பெண்ணின் குரல் அவனுக்கு மட்டும் கேட்டது…..
            “அகில்…. என் சீப்பை எதுக்கு எடுத்த? எடுத்ததை எடுத்த இடத்தில் வச்சியா? அதுவும் இல்லை. அகில்.. எங்க வச்சித் தொலஞ்ச?”
            அகில் உடனே தனது ஷேவிங் கீரிம் பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில், அதன் பக்கத்தில் இருந்த சீப்பை எடுத்து ட்ரஸிங் டேபிலில் வைத்தான். மீண்டும் அதே குரல்.
            “அகில் ஹாவ் எ குட் டே. பொண்ணுங்களை சைட் அடிக்காதே!”
            அவன் உதடுகள், “சரி. தாங்ஸ் ரேஷ்மா” என்று முணுமுணுத்தன.
அடுக்களைக்குள் நுழைந்தான். அம்மா நின்று கொண்டு சமைப்பதைப் பார்த்தான். அவன் வலது கையோரமாய், சுவர் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து வந்து அம்மா பக்கத்தில் வைத்து, அதில் தன் அம்மாவை உட்காரவைத்தான்.
“நின்று கொண்டே சமைக்கவா இதை மெனக்கெட்டு செய்திருக்கு? அடுப்புத்திண்டின் உயரத்திற்கு ஏற்றார்போல இதை செய்துருக்கேன் மா. உங்களுக்கு இதில் உட்கார்ந்தபடியே சமைக்க முடியும். எவ்வளவு மணிநேரம் நாள் முழுவதும் நிற்பீங்க? இனிமே கிரச்சுக்கு போகணும். அங்கேயும் நின்னுட்டே இருப்பீங்களே?”  
மகனின் பேச்சை சிறு தலையசைவில் மறத்துவிட்டு அகில் அம்மா சொன்னார், “அகில், உன் பாட்டி, பூட்டி செய்த வேலைகளை விட நான் செய்றது கம்மிதான். வா சாப்பிடலாம்.”
            “அவங்க எல்லோரும் உட்கார்ந்து குழல் ஊதி அடுப்பு மூட்டி சப்பாத்தி செய்தாங்கம்மா… அறுபது வருஷம் முன்னாடி அடுக்களையில் யாரும் நின்று கொண்டே சமைப்பது இல்லை. இன்றைய பெண்களுக்கு கால்வலி மூட்டுவலி வருவதே இப்படி நாள் பூராவும் நின்னுட்டே சமைப்பதால் தான். அந்தக் காலத்துல… அதான் அறுபது வருஷம் முன்னே… அம்மியில் அரைப்பதில் தொடங்கி பாத்திரம் கழுவும் வேலைவரை உட்கார்ந்து தான் செய்தாங்க…”
“சரி சரிப்பா. அகில்… நீ சாப்பிடப்பா.. நேரம் ஆகுதுல்ல?”
அகில் சப்பாத்தியை விழுங்கவும் கடிகாரம் மணி எட்டு முப்பது என்று காண்பித்தது. தனது காரின் கதவைப் பிடித்துக் கொண்டு அம்மாவிடம் கிளம்பட்டுமா? என்று கேட்டான். அம்மா அவனிடம் தலை அசைத்து சரி என்றதும் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து F.M ஓடவிட்டுக் கொண்டே வண்டியைக் கிளப்பினான். பழமுதிர்ச்சோலை கடந்து சென்றவனுக்கு, ஒரு மாலையில், அந்த பழமுதிர்சோலையில் சாத்துக்குடி ஜூஸை மிகவும் பொறுமையாக குடித்தது ஞாபகம் வந்தது. அப்போது ஆர்டர் செய்யும்போதே சீனி வேண்டாம், ஐஸ் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அவன் அருகில் இரண்டு குழந்தைகள் வெண்ணிலா மில்க் ஷேக்கை ருசித்து குடித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது.        மனதில் அதன் காலரியை கணக்குப் போட்டான்.
            எஸ்சன்ஸில் உள்ள சுகர்  = 50
            ஐஸ்கிரீமில் உள்ள சுகர்   =600
      பாலில் உள்ள சுகர் =100
       மொத்தம் 750 காலரி.  ஒரு நாள் சாப்பாட்டின் மொத்த காலரி இந்த ஒரு கிலாசில்… என்று துல்லியமாக கணக்குப் போட்டான். நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சர்க்கரை பழக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்தினான். அகில் மருத்துவப் படிப்பு முடிந்து தனது ஒரு வருட பயிற்சி காலமும் முடித்து விட்டு மேற்படிப்பிற்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். இன்னும் ஒரிரு வருடங்களில் அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைத்து விடும் என்பதால் பகுதி நேரமாக மீனாட்சி மிஷனில் பணிபுரிந்தான்.
********
 தலைமை மருத்துவர் நாராயணன்
            நாராயணன் பற்றி எந்நேரமும் யோசித்துக் கொண்டிருப்பாள் கவி. ஒரு நாள் கவி நினைத்தாள், “இவர் எப்படி ஒரு இட்லியைச் சாப்பிடுவார்? இட்லியைப் பிய்த்து வாயில் வைப்பார். பிறகு அது ஈசோபாகஸ் போய் சிறு குடல் போய் சேரும் வரை நாம் இட்லியைப் பிய்க்கக்கூடாது” என்று பொறுமையாக இருப்பாரோ?”
            இவர் கண்டிப்பாக இவருடைய பிள்ளைகளைக்கூட அவரது ஹார்மோனில் ஜெனிடிக் sequence பதிவு செய்துதான் பெற்றெடுத்திருப்பார் என்று கவி பல முறை எண்ணியது உண்டு. செவிலியர்கள் அவரிடம் பணி புரிந்தால்.. எந்த இடத்திலும் வேலை செய்துவிடலாம். நுட்பமாகவும் திருத்தமாகவும் காரியங்களைச் செய்யக் கற்றுத்தருவார்.. எந்த நேரத்திலும் பதட்டப்படமாட்டார். கவி அவருக்கு நேர் எதிர்.
            அவர் முன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொள்வாள். கவி ஒரு நிமிடத்தில் நாற்பது வார்த்தைகள் பேசுவாள் என்று யாரும் சத்தியம் செய்தால் கூட, மருத்துவர் நாராயணன் “அப்படிக் கிடையவே கிடையாது” என்று ஆயிரம் ரூபாய் பந்தயம் வைப்பார். Hostel-லுக்குச் சென்றதும், பொறுமையை இழுத்துப் பிடித்து ஒரு நாள் பட்ட கஷ்டத்தை யாரிடம் ஈடு கட்டுவாள்?
சாட்சாத் நம்ம சுதாவிடம் தான். சுதாவிடம் பேச ஆரம்பித்தால் நிறுத்தமாட்டாள் கவி.
            சுதா கவியிடம், “கவி காதில் இருந்து இரத்தம் வருவது மாதிரி இருக்கு! கண்ணெல்லாம் தானா மூடுது! அவசரமா பாத்ரூம் போகணும்! அம்மா ஒரு மணி நேரமா செகன்ட் கால்ல வர்றாங்க!” இப்படி ஏதாவது காரணம் சொன்னால் தான் அம்மையார், “நீ என் தோழியே கிடையாது” என்று கத்திவிட்டு கைபேசியை அணைப்பாள்.
மறுநாள் வெட்கம் இல்லாமல் சுதாவிடம் “உன்னைப்போல் ஒரு தோழி யாருக்குப்பா கிடைக்கும்?” என்ற பல்லவியோடு ஆரம்பிப்பாள்… அன்றைய பாடல் முடிய இரவு பன்னிரெண்டு மணியாகும்.
            கவி மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்து, ஒரு வருடம் எப்படிப் போனது என்று கவியிடம் கேட்பதை விட சுதாவிடம் தான் கேட்க வேண்டும். கவியின் சுவாரசிய சம்பவங்களும், அறுவைப் பேச்சுக்களும் சுதாவுக்கு அத்துபடி.
கவியை வெகுவாக பாதித்த சம்பவம், சுதா மனதில் அழுத்தமாகப் பதிந்தது. சுதா அவள் நாட்குறிப்பில் அதை எப்படி எழுதியிருந்தாள் என்றால்.
சுதாவின் டைரியில்…
January… 30 2019… கவி இன்று வெற்றி என்ற நோயாளியைப் பார்த்தாளாம். அப்பொழுது காலை ஒன்பது மணி. அவள் அறைக்கு உள்ளே நுழையும் முன் அவர் தனது ஒரு வயது பேத்தியுடன் கிச்சு கிச்சு மூட்டி விளையாடிக் கொண்டிருந்தாராம், தற்செயலாக அவள் அதைக் கவனித்தாளாம். கவியைப் பார்த்து அழகு சிரிப்பு சிரித்தாராம். நர்ஸ் ராணி, அவரிடம் சத்தம் போடாதீங்க சார் என்று சொல்லிவிட்டு போனார்களாம். மணி பத்து ஆனபோது வெற்றி, அவரது பெயர் கூறப்பட்டதும் எழுந்து கவி அறைக்குப்போனாராம். கவியை முதலில் பார்த்தபோது பிரகாசமாய் வீசிய சிரிப்பை மீண்டும் தந்தாராம். அவர் இருக்கையில் அமர்ந்ததும்.     கவி நர்ஸ் ராணியிடம், “பி.பி பாருங்க நர்ஸ்” என்கிறாள்.
            நர்ஸ் பி.பி பார்க்கிறார். பிறகு ஒன்றும் பேசாமல் கவியிடம் தனது பி.பி ரீடிங்கை சொல்கிறார். கவி, “வாட்?” என்று கூறிவிட்டு தானே பி.பி பார்க்கிறாள். அதிர்ந்து போய், “சார் உங்களுக்கு என்ன செய்யிது?” என்று வினவுகிறாள்.
            வெற்றி கவியிடம், “தலை சுத்துது, வயிறு வலிக்கிது. சில நேரம் வயிறு வலி தாங்க முடியல” என்கிறார்.
            கவி உடனே அவரிடம், “சார் உங்க பி.பி உச்ச நிலையில் இருக்கு. 150/95…. Its huge for your age… இதோ இப்ப வெளியில் போனாரே அவருக்கு ஜஸ்ட் அபவ் பார்டர், ஆனா அவர் படும் அவஸ்தை சொல்ல முடியாது. நீங்க எப்படி மேனேஜ் பண்றீங்க? நீங்க கிட்னி டாக்டரைதான் பார்க்கணும். பி.பி கிட்னியை பாதிச்சிருக்கலாம். நான் உடனே அங்க இன்பார்ம் பண்றேன். நீங்க உடனே டாக்டரைப் பார்க்கலாம். அங்கே உடனே போங்க! சரியா?” என்று அவசரப்படுத்துகிறாள்.
            வெற்றி சார் அவசரத்தில் தனது பைக் சாவியை கவியின் மேஜையில் மறந்து வைத்துவிட்டு போய்விடுகிறார். கவி பைக் சாவியை தனது கைப்பையில் போட்டுவிட்டு நர்ஸிடம் யாரும் கேட்டால் தன்னிடம் வந்து வாங்கச் சொல்கிறாள். இரண்டு தினங்கள் கழித்து கவியிடம் சாவி கேட்டு ஒரு இளைஞர் வருகிறான். கவி அவன் யார்? என்ன? என்பதை விசாரித்துவிட்டு சாவியைக் கொடுத்து அனுப்பிவிடுகிறாள். பிறகு ரெஸ்ட்ரூம் செல்வதாகச் சொல்லிவிட்டு செல்கிறாள்.
            ரெஸ்ட்ரூமில் எனக்கு செல்போனில் அழைக்கிறாள். நான் இரண்டு ரிங்கில் ஃபோனை எடுக்கிறேன். ஆனால் அவள் குரலே கேட்கவில்லை.
            “கவி… கவி லைனில் இருக்கியா? பேசு கவி.
    “சுதா.
            ஒரு விசும்பல் கேட்கிறது. . .
            “கவி.. வாட்? அழுகிறியா?”
            “இல்லை சுதா.. அழவில்லை. ஒரு கேஸ் fail ஆகிடுச்சு. அதான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிவிட்டேன். இரண்டு நாள் முன்னே பைக்லதான் வந்தாரு சுதா, இன்றைக்கு பொட்டலமா ஆம்புலன்ஸ்ல போறாரு. அவர் சிரிப்புதான் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவ்வளவு வலியிலும் சிரிச்சார்னா அவர் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்திருப்பார்? ஏன் சுதா, ஆறுமாசத்திற்கு ஒரு முறை பி.பி செக் பண்ணணும் என்று கூடவா மறந்திடுவாங்க? முன்பே கண்டுபிடிச்சிருந்தா பிஃடி பர்சன்டாவது வாய்ப்பு இருந்திருக்கும் சுதா.”
            “கவி, நம் கையில் என்னப்பாயிருக்கு?” என நான் கேட்டு முடிப்பதற்குள், சீஃப் தேடுவார் என்று கூறிவிட்டு செல்போனை கட் செய்தாள் கவி.
            இவ்வாறு அந்த கையேட்டுக் குறிப்பு முடிந்தது. 
இப்படி அந்த கையேடின் பக்கங்கள் பல நிகழ்ச்சிகளால் நிரப்பப்பட்டிருந்தது. கவி சுதாவிடம், “சுஜாதா அங்கிளின் மகளே நான் சொல்வது கேட்குதா?” என்று செல்லமாகப் பேசினால், உடனே அது அவள் நாட்குறிப்பில் இடம் பெரும். கவியின் ரசிகை அவள்.
கவி சிரித்துப் பேசுகையில், உன் சிரிப்புதான் உன்னை கம்பீரமாக காட்டுது என்று சொல்லி பெருமைப்படுத்துவாள். கவி மதிப்பெண்கள் குவித்தபோதெல்லாம் அவளைக் கொண்டாடிவிடுவாள். நியூடனைக் கூட அவள் இவ்வளவு பிரமிப்பாக பார்த்திருக்க மாட்டாள். அவர் ஆப்பிளைத்தானே ஆராய்ந்தார்.. கவி பட்டாம்பூச்சியின் இதயம் பற்றிக் கேட்டால் கூட புட்டு புட்டு வைப்பாளே என்று கவிக்காக வரிந்து கட்டும் ரகம்.
            ஆக மொத்தம் கவிக்கு தோழி என்னும் ரூபத்தில் கிடைத்த மயில் இறகு அவள். இதமாக, சுகமாக வருடிக்கொடுக்கும் மயில் இறகு அவள். வருடும்போது நம்மை ஒரு நொடி தூங்க வைக்கும் மயில் இறகு அவள்.
      *******              
    திருமணப் பேச்சால் கோபம் கொண்ட கவி மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். ஒரு உள்நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுதாவிடம் பேசிவிட்டு கௌஷிக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். கவி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்தத் திருமணப்பேச்சில் அத்தனைக்கோபம். அகிலைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால் அவளுக்கு கோபம் இல்லை, அகில்… is a perfect gentleman. அவளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த சுதா எதுவுமே நடக்காததுபோல தனது திருமணப்பேச்சை எடுத்ததால் தான் கோபம்.
     அகில் அறைக்குள் நுழையும்போதே கவியிடம் தலையசைத்து மௌனமாய் ஒரு குட்மார்னிங் சொன்னான். நேற்று இரவு நாராயணன் அவர்களுக்கு ஒரு அறுவை சிகிச்சையில் உதவியவன், அந்த சிகிச்சையின் ரிப்போர்ட்டுகளை சேகரித்து வருவதற்குள் மணி பதினொன்றானது. அறைக்குள் நுழைந்தவன் கவியும் கௌஷிக்கும் இறுகிய முகமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, ‘காரணம் என்ன?’ என்று சைகையில் கேட்டான்.
            இருவரும் “ஒன்றுமில்லை” என்று சைகை பாஷையில் தோளைக் குலுக்கிச் சொன்னாலும்.. அவன் அதை நம்பவில்லை. ஆனால் நாராயணன் அவர்கள் மூவரையும் அதற்கு மேல் சைகை பாஷையில் பேச விடாமல் வேலை கொடுத்தார். கவியும் அகில் மேற்கொண்டு கேள்வி கேட்டு துளைக்காதலால் நிம்மதி அடைந்தாள். அகில் சுத்த சைவம். மதியம் கேன்டீனில் மூவரும் சைவ உணவு சாப்பிட்டுக்கொண்டே பேசினர்.
            கௌஷிக் தண்ணீரைக் குடித்தபோது, அகில் அவனிடம் கேட்டான், “என்ன கௌஷிக் காலையில் அம்மாவுடன் ரொம்ப நேரம் ஃபோனில் பேசிக்கிட்டு இருந்த?  ம்? என்ன விஷயம்?  
கவிக்கு புரையேறியது… செருமினாள். கொஷிக்கை பார்வையால் “சொன்ன… செத்த..” என்று எச்சரித்தாள்.
கொஷிக் அகிலின் கேள்விக்கு அசடாய் சிரித்தான்.
“ஸ்வர்ணாவின் ஃபோன் நம்பர் அம்மாகிட்ட கேட்டியா? அம்மா நீ என்ன பேசின என்று சொல்ல மாட்டிக்கிறாங்களே.. ம்? விஷயம் என்ன?“
கவி மீண்டும் கண்ணால் கௌஷிக்கிடம் எச்சரிக்கை செய்தாள்.
“ஒண்ணும் பெருசா இல்லடா.”- கௌஷிக்.
“அப்படியா? உன்னோட அம்மா உன்னோட கல்யாண விஷயமா என்கிட்ட பேசுனாங்க கௌஷிக்..”
‘ஹா… ஹா… இரண்டுபேர் அம்மாவுக்கும் நம்மளை யார் கையிலயாவது பிடிச்சிக்கொடுக்கணும்னு ஒரே நேரத்துல தோணிருக்கு..’ என்று மனதில் நினைத்த கௌஷிக் அதைச் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தான்.
“ஸ்வர்ணா பற்றி உன்னோட அம்மா என்கிட்டச் சொன்னாங்க..” –  அகில்.
“அப்படியா?”- கௌஷிக்.
“ம்… Yes. ஸ்வர்ணா ரொம்ப அமைதி. அவளுக்கு உன்னைப் பிடித்தால் நீ லக்கிதான். நீதான் காலம் முழுக்க பேசணும், அவள் வாயே திறக்க மாட்டா. உன் அம்மாவுக்குதான் ஸ்வர்ணாவை ரொம்ப பிடிக்குதாமே. நேற்று கூட என்னிடம் சொன்னாங்க. உன் அம்மா நல்லா செலக்ட் பண்றாங்கப்பா.”
            அப்போதும் கௌஷிக் மனதில் பேசிக்கொண்டான்,
            “அகில், உன் அம்மா செலக்ஷன் இன்னும் டாப். நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுதும் பேசிக்கிட்டே இருக்கணும், வாழ்நாள் முழுதும் சண்டை போடணும் என்று உன் அம்மா ஆசைப்படுறாங்களே! அதற்கு என் அம்மாவை நான் கோயில் கட்டி கொண்டாடணும். என் தங்கக்குட்டி ஸ்வர்ணா இஸ் எ குட் சாய்ஸ். ஸ்வர்ணா இஸ் மை ஏன்ஜல். பிகாஸ் “ஏன்ஜல்” எப்போதும் கேள்வி கேட்பதில்லை. ஒரு அரை மணி நேரம் முன்பு நீ வந்திருந்தால் உனக்கும் விஷயம் புரியும். உன் அம்மா சுதாவிடம் சொன்ன மேரேஜ் ப்ரோபோசல் பற்றி உனக்குத் தெரியாமல் போனது நல்லது தான். விஷயம் தெரிந்து இப்போது தான் என்னையும் சுதாவையும் வெளுத்து வாங்கினா கவி…”
அகில் அதற்குப்பிறகு கௌஷிக்கின் திருமணப் பேச்சை பேசாமல் மருத்துவப் பணிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
கவி அவசரம் அவசரமாக சாப்பாட்டை மென்றும் மெல்லாமலும் இடத்தைக் காலி செய்தாள்.
கேன்டீனை விட்டுச் சென்றதும் கவி தனது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளைப் பொறுத்த வரை அகிலுக்கு விஷயம் தெரியாத வரையில் அவளுக்கும் நிம்மதியே. “நிம்மதி!”, அதுதான் இன்று போய் நாளை வரும் என்ற உறுதி நமக்குத் தருவதில்லையே.

Advertisement