Advertisement

            மறுநாள் அகில் அவள் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை.
            ஒரு நாள் கவி தனது கைபேசியை எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆலோசனை அறையில், அகிலும், கௌஷிக்கும் அவள் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கவியின் தேடும் படலத்தைப் பார்த்து கௌஷிக் கேட்டான். “என்ன கவி முக்கியமானது ஏதும் காணலயா?”
                        “ஆமாம் கௌஷிக், என் செல்போனை தேடுகிறேன்.”
            கௌஷிக்கிற்கு கவியென்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவன் ஆறுயிர்த் தோழனுக்கும் கவிக்குமிடையே வானிலை சரியாக இல்லாத காரணத்தால் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.
            கவி மிகவும் சோர்ந்து தெரிந்தாள். கௌஷிக்கிற்கு மனம் பொறுக்கவில்லை, சட்டென்று கேட்டான், “கவி உன் நம்பர் சொல்லு நான் ஒரு முறை அழைத்துப் பார்க்கிறேன்.”
            பிறகு தனது கைபேசியை எடுத்து அழைப்பு விடுக்க எண்ணி சட்டைப் பைக்குள் கைவிட்டான். செல்பேசி தவிர மற்ற அனைத்தும் இருந்தது. ‘அடடா’ என்றவன் சிறிதும் யோசிக்காமல் அவன் பக்கத்தில் இருந்த அகிலுடைய செல்பேசியை எடுத்து, “நம்பர் சொல் கவி என்றான்.”
கவி தனது நம்பரைச் சொன்னாள். அகிலின் கைபேசியில் இருந்தே அழைப்பு விடுத்தான்.     அகில் அவன் கோப்புகளை குமியலாக வைத்திருந்தான். அதனடியில் கவியின் கைபேசி மாட்டிக் கொண்டிருந்தது.
“இதோ இங்க இருக்கு. அகில் அதை எடு.”- கௌஷிக்
கௌஷிக்கின் ‘உதவும்கரங்கள்’ அதிகாரத்தை நினைத்து கோபமாக கவியின் கைபேசியை எடுத்தான். கைபேசி இன்னும் சப்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது.
“அதான் ஃபோன் கிடைச்சிடுச்சுல… கால்லைக் கட் பண்ணா என்ன?” என்று சலிப்புடன் மனதில் நினைத்தவன் கவியின் கைபேசியை எடுத்தபோது அதன் திரையைப் பார்த்து ஸ்தம்பித்தான்.
கௌஷிக்கும் கவியின் கைபேசித் திரையைப் பார்த்தான். அவனுக்கும் அதே அதிர்ச்சி…
ஏனெனில் கவியின் கைபேசித்திரை சொன்னது…
“B.F calling”
                 —————————
 
 
  
 “B.F calling”
   —————————
 அகில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.
கௌஷிக் குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான்.         கவி அவர்கள் முக மாற்றத்தை அறியாது தன் கைபேசியினால் ஆகவேண்டிய காரியத்தில் இறங்கினாள்.
            மதியம் எப்படா சாப்பிடப்போவோம்.. தலையைக் குடையும் கேள்வியை அகிலிடம் கேட்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த கௌஷிக் ஒரு வழியாக வாயில் சப்பாத்தியை மென்றுகொண்டே அகிலிடம் கேட்டான்.
“B.F என்று உன் பெயரை பதிவு பண்ணிருக்காளே? யாரும் அதை Boy friend என்று தப்பா நினைச்சிட மாட்டாங்க? ஆனா நம்ம ரெண்டு பேருக்கும்தான் நல்லா தெரியுமே… B.F என்றால் Big flirt என்று?”
            கேள்வி கேட்டவன் பாவம் சிரிப்பைத்தான் அடக்க ரொம்ப கஷ்டப்பட்டான்.
            “அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால் உன் கவிக்கு,  இந்தியா பாகிஸ்தான் பார்டர் பிரச்சனையெல்லாம் வந்திடாது. அந்த சப்பாத்தியை நல்லா மென்னும் வேலையை பார்க்கிறியா?” என்றான் அகில் படுகோபமாக.
*********
            கவிக்கு நாராயணன் சில நோயாளிகளைக் கையாளக் கற்றுக்கொடுத்து பிறகு அவர்களுடைய பொறுப்பை கவியிடமே விட்டுவிட்டார்.
தலைமை மருத்துவர் அறையில் அகில் கவி கௌஷிக் மூவரும் இருந்தனர். கவி கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். தனது நோயாளிகளின் இரத்த பரிசோதனை ரிப்போர்ட், scan ரிப்போர்ட் ஆகியவற்றை சரி பார்த்து தெளிவுபடுத்திக் கொண்டாள். அகில் தனது பொறுப்பில் இருக்கும் உள்நோயாளிகளின் விபரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
 அப்போது தலைமை மருத்துவர் நாராயணன் அகிலிடம் சொன்னார், “அகில் இன்று எனக்கு ஒரு முக்கியமான சர்ஜரி இருக்கு நீயும் கவியும் பேஷன்ட் கணபதியை இன்று அட்டன்ட் பண்ணுங்க. அவருக்கு இன்று என்டோஸ்கோபி பண்ணணும். I think you two can nail it…
“sure…sure doctor”-  கவி.
 “நான் உங்களை procedure முடிந்தபிறகு கால் பண்றேன்! சரி நான் கிளம்பட்டுமா?”   
   “ம். சரி சார்.” என்று இருவரும் பதில் தந்தனர்.
************
            கவியின் முதல் பொறுப்பு. அதை நல்லபடியாக முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இந்த அகிலுடன் சேர்ந்தா? என்று யோசித்தாள். தயக்கம் சில நொடிகள்தான். ஆனால், பிறகு வேலை என்று வந்துவிட்டால் சொந்த காரணங்களைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தாள்.
நமக்குதானே அவன் உதவி தேவை.. இந்த முதல் சிகிச்சையில் சிறு தவறுகூட வர விடப் போவதில்லை என்று மனதில் தீர்மானித்து விட்டதால்.. கொஞ்சம் விட்டுக்கொடுக்க நினைத்தாள். அவன் ஏதோ பத்தாவது படிக்கட்டில் நிற்பது போலவும், இவள் முதல் படியே கால் வைக்காமல் நிற்பது போலவும் அவளுக்கு ஒர் விநோத உணர்வு.
            அந்த ஜொல்லு பார்ட்டியை இல்லை இல்லை அகிலை.. சரிகட்ட முதல் அடி எடுத்து வைத்தாள்.
            “அகில்.. ஒரு விஷயம் கேட்கணும்!”
“கவி, எனக்கு தலைக்கு மேல் வேலையிருக்கு. உன் சந்தேகத்தை கௌஷிக்கிடம் கேளேன்.”
“கௌஷிக்கா என்னுடன் என்டோஸ்கோபி பண்ணப் போறான்? சீஃப் உன்னைதான என் தலைமேல கட்டிவிட்டுட்டார்.”- கவி மனதில்.
     முதல்அடி, நன்றாக சருக்கி கீழே விழுந்தாச்சு. பரவாயில்லை என்று திரும்பவும் முதல் அடியை எடுத்து வைத்தாள்.
            “இல்லை அகில் பேஷன்ட்டுக்கு வாய்க்குள் மரத்துபோக கொடுப்போமே அதை மட்டும் ஒரு முறை எப்படி என்று..”
            “அதை நீ நாராயணன் சாரிடமே கேட்டிருக்கலாமே?”
அடி சக்கை! எனக்கு ஒன்று தெரியவில்லை என்று நானே முந்திக்கொண்டு சொல்லணுமாக்கும்? நீ எல்லாம் தெரிந்த ஞானப்பழம்போல் அவர் முன்னே நிற்க நாங்கள் சூனியம்போல் அவரிடம் ஒரு அற்ப சந்தேகம் கேட்கணுமாக்கும்?
            முதல் அடியின் இரண்டாம் முயற்சியும் சருக்கியாச்சு. இவனிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணி தான் சரி.
            “அகில் சொல்வது என்றால் சொல்லு இல்லையென்றால் நான் வேறு வழி பார்த்துக்கிறேன். ஒண்ணு தெரிந்துக்கோ தெரியாததை தெரியாதுன்னு சொல்கிறவன்தான் அதீத புத்திசாலி. உனக்கு சொல்ல இஷ்டமில்லையென்றால் விட்டு விடு. யாரிடம் நம் சந்தேகத்தை தீர்க்கின்றோம் என்பதில் மிக கவனமாக நான் எப்போதும் இருப்பேன். எளிதில் உதவி கேட்டு விட மாட்டேன் தெரியுமா?”
அவளது கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தது. உடனே தனது கோபத்தை புறம் தள்ளினான்.       
“கவி ம்… கேளு உன் சந்தேகத்தை! come on Shoot!!!” என்றான்.
பத்து நிமிட கலந்தாலோசனை. கவியின் பிரச்சனை தீர்ந்தது… சிகிச்சைக்கு அறை தயார் செய்யப்பட்டது. கவியும் அகிலும் தங்களது பணியைத் தொடங்கினர்.
            நோயாளி கணபதியின் வயது நாற்பது. இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு. மூத்தவள் ஆறாவது வகுப்பும் இளையவள் இரண்டாவது வகுப்பும் படித்தனர். சிகிச்சை அறை வாசலில் அவரது மனைவி நின்று கொண்டாள்.
            இரு மகள்களும் இங்கும் அங்கும் சுற்றினர். அகில் கணபதியிடம் சொன்னான், “சார், உங்கள் வாயில் ஒரு scope செலுத்துவோம், அது உணவுக்குழாய் வழியாக குடல் பகுதிகளை நாங்கள் பார்ப்பதற்கு உதவும். இந்த ஸ்பேரேயை உங்கள் தொண்டைக்குள் அடித்ததும் தொண்டைப்பகுதி மதமதப்பாகும். பத்து நிமிடங்கள் கடந்த பிறகு நாங்கள் இந்த scope யை வாயின் உள்ளே நுழைப்போம். தொண்டை மரத்துப்போனதால் இதை விழுங்குவதில் எந்த சிரமும் இருக்காது. எச்சில் வடிந்தால் ஒன்றுமில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அதை நர்ஸ் துடைத்துக் கொண்டேயிருப்பார்.”
            “இப்போது ஆரம்பிக்கலாமா?”- கவி.
            “ம்.. ஆரம்பிக்கலாம்” என்று தலையாட்டினார் கணபதி. ultrasound technique மூலம் செய்ததால் உணவுக்குழாய் தெளிவாக தெரிந்தது, பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கணினி திரையில். பத்து நிமிடங்கள் தான் சென்றன.. கவிக்கு கணினி திரை காட்டியது அவளை திகில் அடையச் செய்தது. உணுவுக்குழாய் மற்றும் சிறு குடலில் தேவையில்லாத செல்கள் இருந்தன. தேவையில்லா ஆயிரம் ஆயிரம் செல்கள்.. கவியின் கண்கள் குளமாகின.. அகிலும் எல்லாவற்றையும் பார்த்தான்தான், ஆனால் அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். கவியால் முடியவில்லை.
“யார் இந்த கணபதி? யாரோ ஒருவர். இன்று காலையில் தானே பார்த்தோம். அவருக்காக மனம் துடிக்கிறதே. வெளியே தனது செருப்பை போட்டுக்கொண்டு தராமல் லூட்டியடித்த அவருடைய சின்னப் பெண் இனி தந்தையில்லாமல்…
            “உன் கணவர் புகையிலை சாப்பிட்டு சாப்பிட்டு உணவுக்குழாயில் புற்றுநோய் வரவழைத்துக் கொண்டார்” என்று எப்படி அவர் மனைவியிடம் சொல்வது என்று நொந்தாள். இதைப் பார்த்த அகில், கவியின் கட்டைவிரலை மெதுவாக நீவி விட்டான். அவனது கட்டைவிரல் கொண்டு இதமாய் விரல்களை வருடிக்கொடுத்தான். பின் அவன் கைகளுடன் அவள் கைகள் கோர்த்து அழுத்தமாக இறுக்கிக்கொண்டான். கவிக்கு அம்மா தன்னை மடிமேல் வைத்து தீயாய் கொதிக்கும் காய்ச்சலுக்கு ஈரத் துணியை ஒத்திக் கொடுப்பதுபோல் இருந்தது. அகிலின் கைகளை விடாமலே சிகிச்சையைச் தொடர்ந்தாள். கணபதியிடம், பயப்படாதீங்க.. தலைமை மருத்துவர் நாளை வந்ததும் என்ன செய்யலாம்ன்னு முடிவு செய்வோம்.” என்றாள்.
 கணபதிக்கு தன் நிலைமுன்பே தெரியும்போல… அதிர்ச்சியோ கலக்கமோ துளிகூட இல்லை.
            “என் பொன்டாட்டிகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீங்க ஒன்னும்..” என்று சொன்ன போதுமட்டும் அவர் குரல் கரகரத்தது.
            “ம் சரி சார்.. பையாப்பசிக்கு செல் டிஸ்யூவை எடுத்து அனுப்பணும். நீங்களும் இன்னும் சிகிச்சைக்காக ஒன்றும் சாப்பிடலை. சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க.” என்று அகில் சொல்லிவிட்டு கவியை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.
 கவி காரில் செல்லும்போது ஒன்றும் பேசவில்லை. வீட்டிற்கு வந்ததும் அகில் அம்மா கவியிடம் இயல்பாகப் பேசி அவள் மனதின் இறுக்கத்தை குறைத்தார்.
            அகில் கவியை அவன் வீட்டு மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான். மொட்டை மாடியில் கவி சொன்னாள், “கணபதிக்கு முன்பே தெரிந்துவிட்டது அகில். அவுங்க மனைவிக்கு மட்டும்தான் இன்னும் தெரியல.”
            “கவி இப்போதெல்லாம் நோயாளிகளே முதற்கட்ட ஆலோசனையை கம்புயூட்டர் மூலம் செய்திடுறாங்க. பிறகு ஒரு குழந்தைகள் நல மருத்துவர்கிட்டயாவது போய் சந்தேகங்களை கேட்டு விடுகின்றனர்.”           
     “சரி தான் அகில். எனக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை தெரியுமா?”
“ம்.. நன்றாகத் தெரியுமே”
“தெரியுமா?.. யார் மேல் கோபம் சொல்லு.”
“என்னைத் தவிர அத்தனை ஆண்கள் மீதும்.”
            “அது என்ன, உன்னைத் தவிர. நீயும் அந்த லிஸ்டில் இருக்கலாம் தெரியுமா?”
            “ஹும்  ஹும் நிச்சியம் இல்லை. ஏன்னா நான்தான் சிகரட் பிடிப்பதில்லையே!” 
            “ஓ! அப்படியா? ஆனால் கோபப்படும் ஆண்களையும் எனக்குப் பிடிக்காது,”
“எனக்கும் தான் கோபப்பட பிடிக்காது. ஆனால் என்ன செய்ய? கொஞ்சம் சிரிச்சிட்டா flirt னு சொல்லிடுறாங்களே!”
            கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது.

Advertisement