Advertisement

சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின் சிறந்த ஹோட்டல் அனைத்திலும் தண்ணீராவது குடித்துவிடுவாள். சுதாவும் கவியும் எங்கு சென்றாலும் ‘பல்லவன்’ தான். ‘பல்லவன்’ புகாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ, கவிக்கு மாதா மாதம் அப்பா அனுப்பும் தொகை ஒருவருக்கு மிகவும் அதிகம் தான். ஆனால் கவி அதை முகம் வாடிக்கிடக்கும் பூக்காரம்மாவுக்கும், பேப்பர் போடும் சிறுவர்களுக்கும் கொடுத்தால்?, இது போக அவள் புத்தகங்கள் செலவு.
            இதை அறிந்த சுதா காரணம் கேட்காமல் கவிக்கு பணம் தேவைப்பட்டால் கொடுத்து விடுவாள்.
2018
மீனாட்சி மிஷன் மருத்துவமனை
            கவி தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இரண்டு தளங்கள் தாண்டியிருக்கும் குடல்பிரிவு பகுதிக்கு செல்வதற்காக லிஃப்டிற்கு காத்துக் கொண்டிருந்தாள். லிஃப்ட் வந்ததும் அதில் ஏறினாள்.
            எங்கும் ஒரே நோயாளிகள் கூட்டம்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து, அரசு மருத்துவமனையில் ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு P.G படிக்க எண்ணினாள். சரி படிக்கும் நேரம் தவிர சும்மாயிருப்பானேன் என்று மதுரை மீனாட்சி மிஷனில் விண்ணப்பித்தாள். உடனே அவளது விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
            அமெரிக்காவில் மேற்படிப்பு மிகுந்த செலவு வைக்கும். அதனால் வேலைக்குச் செல்வது மிகவும் அவசியம் என்று தோன்றவே உடனே கிடைத்த பகுதி நேர வேலையில் சேர்ந்தாள்.
            வேலையில் முதல் நாள். லிஃப்டில் அவள் முதல் நாள் தொடங்கியது. அவள் எதிரே நின்ற லிஃப்ட் ஆப்ரேட்டர் சொன்னார். “வண்டியில் நூற்றி இருபதில் போகுதுங்க இந்த விடலைப் பசங்க… அப்புறம் நூற்றியெட்டில் இங்கு வந்து படுத்துக்குறாங்க.. இன்னைக்கு மட்டும் மூன்று ஆக்சிடென்ட் கேஸ்.”
            அவள் அறைக்கு வந்ததும் தலைமை மருத்துவர் கவியை, அகில் மற்றும் கௌஷிக் என்னும் மேலும் இரண்டு மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
            வேலை முதலில் மெதுவாக பிறகு வேகமாக தொடங்கியது. மதியம் சாப்பாட்டு வேளையில் அகிலும்  கௌஷிக்கும் அவளுடன் சேர்ந்தே சாப்பிட்டனர். இருவரும் அளவாக, தன்மையாகப் பேசினர்.
            நாட்கள் நகர்ந்தது பகலில் மருத்துவமனையில்… சாயங்கால வேளையில் புத்தகங்களுடன் பொழுது போனது.. இரவில் சுதாவுடன் கைபேசியில்.. இரவில் நல்ல நித்திரை கவியின் கண்களைத் தழுவியது. தூக்கம் என்பது சமாதானம் ஆன மனதின் பிரதிபலிப்போ?
            ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். பிறந்த குழந்தை தாயிடம் பால் அருந்திக்கொண்டே தூங்குகிறதே.. அவள் மாரில் விரல்களை படரவிட்டு “அப்பாடா! அணைக்கவும் ஊட்டவும் ஒருத்தி இருக்கிறாள்” என்ற சமாதானம்.
            அந்த வகை சமாதானம் கிடைத்தவன் தூங்குகிறான்.. மற்றவன்… புளிய மரத்தில் ஒன்று இருக்குமே… அதுபோல..
******
            அவளது பழைய நினைவுகள் மறைந்து 2019 செப்டம்பர் மாதம் “இதோ நீ இங்கிருக்கிறாய்” என அவளுக்கு ஞாபகப்படுத்தியது.
இன்று 2019
            “ராம் அண்ணா என்ன முகமெல்லாம் வியர்த்து இருக்கு?”
            “ஒன்றும் இல்லை கவிம்மா. என்ன கவிம்மா கனவு காணுறியா?”
            “ஒன்றுமில்லை ராம் அண்ணா. சும்மா என் பள்ளி காலத்தை நினைச்சிட்டு இருந்தேன். நீங்க முதல்ல இங்க வாங்க. உங்களுக்கு பி.பி. பார்க்கிறேன்.”
 “வேண்டாம்” என்று அவர் மறுக்கும்முன் கவி அவர் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
            பி.பி. பார்த்துவிட்டுச் சொன்னாள், “பி.பி. அதிகமாக இருக்கு பி.பி. மாத்திரைகள் ஒழுங்காகச் சாப்பிடணும் ஒரு நாள் விட விடக்கூடாது. என்ன?.. ராம் அண்ணா புரியுதா?”
            “பையன் என்னை அவன்கூட மலேசியா கூட்டட்டுபோய்ட்டா எல்லா பணப் பிரச்சனையும் சரியாகிவிடும். நானும் நிம்மதியாக இருப்பேன்!”
     “அது நடக்கும்.. இப்ப ஒரு ஊசி போடுறேன்.. ஆனா மாத்திரையை மறக்கக்கூடாது. என்ன?”
            “ம். சரிம்மா… நான் என் ஜோலியைப் பார்க்கிறேன்.. வரட்டா?”
            “ம். ம்.. சரி ராம் அண்ணா.”
துப்பரவு வேலை முடிந்து ராம் அண்ணா கிளம்பும்போது அவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பி.பி. மாத்திரைகள் அவரைத் தேடி வந்தது.
            கவி சுதர்சன் சார் தந்த புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் உள்ள பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தாள். அகில் அந்த புத்தகத்தை அவளிடமிருந்து வாங்கி ஆவலுடன் பார்த்தான். கவியிடம் தனது பரீட்சைக்கு தயார் செய்ய வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான். தினம் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தாள். நாட்கள் கட கட வென்று ஓடியது.
            கவியின் பிறந்த நாள்…
அம்மாவும், அப்பாவும் காலையே வாழ்த்து சொல்லிவிட்டனர். சுதா கவியைத் தேடி ஹாஸ்பிடல் வந்தாள். கவியின் பிறந்த நாள் என்று அகில், கௌஷிக்கிடம், சுதா சொல்லப் போனபோது கவி சைகையால் அவளை அடக்கினாள்.
“யார்கிட்டயும் சொல்லாத…”- கவி.
“ஏன்?”
“நாம தனியா லன்ச் சாப்பிடலாம்ப்பா.”
“ஓ…”
சுதா கவியின் காதில் “எங்க போகலாம்?” என்று கிசுகிசுத்தாள்.
கவி சுதாவிடம் வாயசைவில் ‘தலப்பாகட்டு” என்று சொன்னாள். சுதா கவியின் காதில் ‘இதற்காக எத்தனை நாள் டயட் இருந்த?’ என்று கேட்டாள். ‘ஒரு வாரம்’ என்று பதில் வந்தது.
கவியும் சுதாவும் ரகசியம் பேசுவதைப் பார்த்த அகில் கவியை ஸைட் அடித்தபடியே சுதாவிடம் சிரித்த முகமாய் கேட்டான்,
“எப்படி இருக்கீங்க இன்ஜினியர்?”
“என்ன டாக்டர் முகமெல்லாம் பிரகாசமாய் இருக்கு?”
“நான் தனியா செய்த ப்ரோசீஜர் சக்சஸ்… செலிப்ரேட் செய்யலாமே… நாம் எல்லோரும் சேர்ந்து லன்ச் சாப்பிடலாமே?”
 “இல்ல…”- சுதா.
“நோ நோ வாங்க லெட்ஸ் டீம் அப்… கமான். கவி, கௌஷிக் கமான்.”
            அன்று அகில் செய்த முதல் அறுவை சிகிச்கை பெரிய வெற்றி. அகில் வாழ்வில் நினைத்து நினைத்துப் பூரிக்கும் தருணமும்கூட. எனவே மிக மிக சந்தோஷமாக இருந்தான்.     மற்றவர்கள் வேண்டாம் என்ற போதும் வற்புறுத்தி அவர்களை நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
            சரவண பவன் சைவம் என்ற எழுத்துக்கள் அகில் அழைத்துச்சென்ற உணவகத்தின் போர்டில் இருந்தன.
            “சைவமா” கவிக்கு தொண்டையில் எச்சில்கூட விழுங்க முடியவில்லை. ‘சுதாவிற்கு  நாளையிலிருந்து P.G correspondence பரீட்சை ஆரம்பிக்கிது… அவளை இன்றுவிட்டால் நாளை நாம் மட்டும் பிரியாணி சாப்பிடலாம் தான் ஆனால் அது அவளுடன் சாப்பிட்டதுபோல இருக்குமா?” என்று மனதில் புலம்பினாள்.
கூட்டாஞ்சோறு – முதல் ஏமாற்றம்.
சைவ உணவகம் – இரண்டாவது ஏமாற்றம்.
ஏமாற்றங்கள் பல திடீரென்று முளைத்துவிட்டதால்…      கவி ஒன்றும் பேசவில்லை.
அகில் யார் என்ன பேசினாலும் சிரித்தான். கௌஷிக் அடிக்கும் ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரித்தான். சுதா என்ன சொன்னாலும் சிரித்துக் கொண்டே கேட்டான்.
கவி பேசாமல் இருந்தால், “என்ன கவி அமைதியாக ஹயர் ஸ்டடீஸ்க்கு மனதுக்குள்ள ஒப்பிச்சுட்டு இருக்கியா?” என்று கேட்டான்.
            சரி விட்டுத்தெரிய வேண்டாம் என்று கவி ஏதாவது பேசினால்.. கவி என்ன பேசினாலும் சிரித்தான்.
            சுதாவும், கவியும் சாப்பிட்டதும் ரெஸ்ட்ரூம் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றனர். அகிலும் கௌஷிக்கும் ரெஸ்ட்ரூம் சென்றனர். ஆண்கள் பிரிவிற்கும் பெண்கள் பிரிவிற்கும் ஒரே பொதுச் சுவர். பேச்சுக் குரல் இரண்டு பக்கமும் நன்கு கேட்டது.
            சுதா கவியிடம் பேச வாய் எடுத்த போது… கவி சொன்னாள், “ஒன்றும் பேசாதே சுதா தலைவலிக்குது! இந்த இரண்டு அனுமன் ஜாதியும் laughing gas முழுங்கிடுச்சா? அந்த இரண்டும் சிரிப்பதைப் பாரேன் என்னமோ அடிக்கடி சிரிக்கும்ல்ல அது என்ன?” என்ற கவியின் கேள்வி ஆண்கள் பிரிவில் இருந்த அகிலுக்கும் கௌஷிக்கிற்கும் நன்றாகவே கேட்டது.
 கவியின் கேள்விக்கு ஆண்கள் பாத்ரூமிலிருந்து கௌஷிக் அகிலிடம் வாஷ்பேசினில் கைகழுவிக் கொண்டே சத்தம் குறைவாக கிசுகிசுப்பாய் பதில் சொன்னான் “பைத்தியம்”.
            அகிலுக்கு தன் காதுகளையே நம்ம முடியவில்லை. இருவரும் இப்போது நன்றாக ஒட்டுக் கேட்டனர்.
            தான் பேசுவதை அகிலும் கௌஷிக்கும் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு கேட்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் கொட்டித்தீர்த்தாள் கவி.
            “உனக்கு ஒன்று தெரியுமா? அந்த அகில் இருக்கானே அவன் ஒன்னா நம்பர் ஜொல்லு பார்ட்டி. கௌஷிக் கூட அப்படி இல்லை. அன்று சீஃப் அகில் கிட்ட இன்னொரு stupid டாக்டர் பற்றி கேட்கிறார், “Do u think this man has a fractured brain.” அதுக்கு அகில் என்னைப் பார்த்து கவியும் உங்களைப்போலதான் சொல்லுவா’ என்று என்னை மாட்டிவிடுறான்.”
“நான் சொன்னேன் தான் அதுக்காக ‘ஆம்’ ‘இல்லை’ என்று பதில் சொல்லாமல் அதென்ன “கவியும் உங்களைப் போல தான் சொல்வா…” என்று ஜால்ரா தட்றான்? அப்புறம் ஒரு சிரிப்பு வேறு! அவன் ஒரு Big flirt. என்னை திட்டுவீல இப்ப இவனைத்திட்டேன்.”
            “கவி, அகில் செய்ததில் என்ன தப்பு இருக்கு? எனக்கு ஒன்னும் புரியல! He is not flirting!” – சுதா.
            “உனக்கு ஒன்னும் புரியாது! இப்ப கூட பாரேன். நம்ம வரவில்லைன்னு சொன்னாகூட விட்டுச்சா பாரு.. எனக்கு பிரியாணி சாப்பிட இன்னைக்கு குடுத்து வைக்கல. நான் சப்பாத்தி தான் சாப்பிடணும்னு என் தலையெழுத்துல இன்னிக்கு எழுதியிருக்கு…  அதுங்க சிரிச்சி அசடு வழியும்… அதையும் பார்த்திட்டு வீட்டிற்கு போவோம்!”
 கௌஷிக் அகிலிடம் கேட்டான், “Big flirtன்னா என்ன அகில்? ரொம்ப பெரிய ஜொல்லு பார்ட்டியா? எவ்வளவு பெரிசு அகில்? பைசா கோபுரம் உயரமா?”
கொஷிக் கேலி செய்து சிரித்தான். கவி அகிலை flirt என்றாள்…
இந்த சம்பவத்தை         அகில் எப்படி கையாண்டான்?
கொஷிக்கை அனைத்து நோயாளிகள் முன்பும் அவனை ஒரு முட்டாள் என்றே நம்ப வைத்து விட்டான்.
            ஒரு நாள் எல்லை மீறி ஸ்டத்தை (stethoscope) பிடிக்கக் கூட கற்றுக் கொடுத்தான்.
            சிரித்த நண்பனுக்கே இந்த நிலைமை என்றால் கோபத்தின் காரணகர்த்தாவுக்கு?
புத்தம் சரணம் கச்சாமி!
            கவி காலையில் வந்தவுடன், இரண்டாம் தளத்திற்கு ஓடவிட்டான். இரண்டாம் தளத்திற்கு சென்ற அரை மணி நேரத்தில் சோதனைக் கூடத்தில் கவி குடுத்திருந்த ரிப்போர்ட் வந்தது. அதை தலைவலி வரும் வரை தேடவிட்டான். இவற்றை எல்லாம் சிறு பிசிறிலில்லாமல் செய்து முடித்தான். மறுநாள் கவி மருத்துவமனை வந்ததும் அகிலைப் பார்த்து ஒரு விவரம் கேட்பதற்காக அவன் கைபேசியைத் தொடர்பு கொண்டாள். அழைப்பு துண்டிக்கப்பட்டது! மீண்டும் அழைத்தாள். மீண்டும் துண்டிக்கப்பட்டது! மருத்துவமனை வந்து கொண்டிருக்கிறானோ? கார் ஓட்டுகிறானோ? என்று எண்ணிக் கொண்டு விட்டுவிட்டாள். பிறகு வெளிநோயாளிகள் அதிகம் இருந்ததால் வேலை சரியாக இருந்தது. கவி கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரு வார்த்தை, இல்லை இரண்டு வார்த்தை பதில் ரெடிமேட் ஆக வைத்திருந்தான்.
            இரண்டு நாட்களில் கவிக்கும் அவன் பத்தடி இல்லை.. இல்லை.. நூறு அடி விலகி நிற்பது புரிந்தது. அதை அவள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
சுதர்சன் சார் கையெழுத்திட்ட புத்தகத்தை கவி அகிலிடம் படிப்பதற்காக கொடுத்திருந்தாள்.
 ஒரு நாள் கவி அகிலிடம் அந்தப் புத்தகத்தைக் கேட்டாள்.
            அகில், “வீட்டில் உள்ளது நாளை தருகிறேன்” என்றான். மூன்று நாட்கள் ஆகியும் புத்தகத்தை அவன் தந்தபாடில்லை.
            மறுநாள் அகிலைப் பார்த்தவுடன் புத்தகத்தைக் கேட்டாள். அகில் “புத்தகமா? அது தொலைந்துவிட்டதே!” என்று கவியிடம் பதில் தந்தான்.
            கவி “விளையாடாதே அகில்” என்று சிரித்துக் கொண்டே சொன்னபோது,    அகில் சொன்னான், “கவி நாளை புக்கைப்பற்றி பேசுவோம்.”
மறுநாள் காலையில்…. கவி அறைக்குள் நுழைந்ததும் அகிலிடம் புத்தகத்தை கேட்டாள்.
            “அகில் புக் எங்கே? இங்க இல்லையே!”
            “ஓ! அதுவா! அந்த புக் காணாம போயிடுச்சு. எங்க வைத்தேன்னு தெரியல..” அவன் பேசி முடிக்கவில்லை. கவிக்கு கோபத்தில் வார்த்தைகள் அனலாய் வெளிவந்தது.
            “என்ன தொலைச்சிட்டியா? Is this a joke to you?? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? அதை நான் யாருக்கும் குடுத்தது கிடையாது. பரீட்சை என்று சொன்னதால் குடுத்தேன். உனக்கு ஏதாவது அறிவிருக்கா? நான் என்ன சொல்லிக் கொடுத்தேன்? Its a gift from my professor…”
            கவியின் கோபத்தைப் பார்த்த கௌஷிக் மேஜைக்கடியில் இருந்த புத்தகத்தை நாமே குடுத்து விடலாம் என்று கூட நினைத்தான்.. பிறகு தனியே அகிலிடம் பேசிக் குடுக்கச் சொல்வோம் என்று நினைத்துக் கொண்டான்.
            அகில் சொன்னான், “கவி புக்கை நான் தேடணுமா இல்லை தேடாமல் தொலையட்டும் என்று இருக்கட்டுமா? நீ கத்துவதால ஒன்றும் ஆகாது. எனக்கு நிறைய வேலை இருக்கு புக் கிடைக்கும் போது தந்திடுறேன். புரியிதா?”
            கவி எச்சிலை நன்கு விழுங்கிக் கொண்டாள். பிறகு வார்த்தைகள் தெளிவாக வந்தது.     
“அந்த புக் எனக்கு வந்தாகணும். நீ வானத்துக்கும் பூமிக்கும்  குதித்தாலும் பரவாயில்லை. அந்த புக் எனக்கு வந்தாகணும்.”
  அகில் பதில் பேசாமல் அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தான்.
“யூ டோன்ட் கெட் இட்? ரைட்?? you cant understand my feelings right?? என்கூட இனி பேசவே பேசாத…”
அகில் மௌனம் சாதித்தான்.
அவள் கோபமாக வெளியேறினாள்.
அவள் சென்றபின்  அகில் மனதில் சொல்லிக் கொண்டான், “கொஞ்ச நாளுக்கு புக் இல்லாமல் இருக்கட்டும். என்னை flirt என்று சொன்னதுக்கு கொஞ்ச காலம் அனுபவிக்கட்டும். கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா நான் flirt ஆ? இந்த அம்மா nurse கனிகாகிட்ட பேசி சிரிச்சா! வாட்ச்மேன் கிழவன்கிட்ட “உங்க வேட்டி சட்டை பிரமாதம்”, என்று இவள் சொல்லலை? நான் அப்ப அவளை flirt என்று சொல்லலாமா? இவளை நாலு மாசத்துக்காவது அலைய விடணும். கல்யாணம் பற்றி பேசினால் கண்மூடித்தனமாக மறுக்கிறாள். ஆனால் கோபம் மட்டும் மூக்குமேல வந்திடும். தான் மட்டும் தான் அறிவாளி என்ற நினைப்பு. உன்னிடம் சிரித்து சிரித்து பேசுவதற்கு அர்த்தம் புரியலையா? I love you dammit… I love your stupid brain dammit… பல்லையா கடிக்கிற? இரு இரு பல் இல்லாத கிழவி ஆகும்வரை புக்கை கெஞ்சிக் கெஞ்சி கேட்க வைக்கிறேன்.”

Advertisement