Advertisement

வருண் மூச்சுக்காற்று. . . .
            அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.
            சோதனைக் கூடத்தின் வாயிலில் கவி மதுவிடம் கேட்பதாக எண்ணி  சத்தமாகக் கத்தினாள், “ஏய் மது உன் அனாடமி புக் என்னிடம் இருக்குதுப்பா.. உனக்கு அது எப்போது வேண்டும்?” ஆனால் அவள் பின்னால் திரும்பும் போதுதான் அவள் பின்னால் நின்றது ‘வருண்’ மதுவல்ல என்று புரிந்து கொண்டாள்.
“வருண், மது எங்க? ம்?”
            “மது??? நான் அவளைப் பார்க்கலயே… உன்னைத்தானே பார்த்தேன்..”
            அவன் பதிலில் சிறு நெருடல் இருந்தது. கவி ஏதோ தப்பாகயிருக்கே?? என்று எண்ணும்போதே வருண் அவள் கைகளைப் பற்றி அவள் சந்தேகத்தை உறுதிபடுத்தினான்.
            வருண் மூச்சுக்காற்று கவியின் கண் இமைகளின் மீது வீசியது. கண்களை அவன் மூச்சுக்காற்றிடம் இருந்து விலக்கினாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. மதுவின் குரல் கீழே பால்கனியில் இருந்து வந்தது.
“கவி.. நான் கிளம்பட்டுமா? எனக்கு பஸ் போயிடும்.”
கவி வாயைத்திறக்கும் முன் வருண் அவள் வாயைப் பொத்தினான்.
            “கவி, நான் போறேன். சரியா? நாளை பார்க்கலாம்.” என்று கூறிக்கொண்டே மது வாசலுக்குச் சென்று விட்டாள்.
            கவியால் வருண் பிடியிலிருந்து விலக முடியவில்லை.
            “கவி.. இங்க என்னைப் பாரேன்.. நான் உன்னை முழுங்கிடவா போறேன்? என்னைப் பாரேன்!” கவி கண்களைத் திறந்து வருணைப் பார்த்தாள்.   வருண் அவள் கீழ்ப்படுதலை தனக்கு எப்படி சாதகமாக்க என்று யோசித்தவாரே..
            “கவி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன் கூட பழகணும்னு நினைக்கிறேன்.  நீதான் விலகி விலகி ஓடுற. ஒரு ‘யஸ்’ சொல்லேன். என்னுடன் பழக பயமாக இருக்கா? என் அப்பா ஒரு மினிஸ்டர் என்பதால் என்னைப் பார்த்து பயப்படுறியா? இல்லை நான் என் F.B யில் ஒரு லன்டன் பொண்ணுடன் நின்ற போட்டோ பார்த்து ஓடுறியா, அது போன முறை நான் லன்டன் போனப்ப எடுத்த ரேன்டம் போட்டோ. ம்! சும்மா ஒரே ஒரு போஸ். அவ்வளவுதான். லன்டனில் அந்த இடம் ரொம்ப ‘Eye catching’ ஆக இருந்ததா.. அதான் ஒரு ஃபோட்டோ எடுத்தேன் அவளுடன். ஒரு போட்டோவுக்கு சார்ஜ் செய்வாங்கலாம். ஒரு ஃபோட்டோவுக்கு மட்டும் முன்னூறு யூரோ” என்று கூறியவன் அவள் கன்னத்தில் இரு கை வைத்து கன்னங்களைப் பொத்தினார்போல் முன்னே இழுத்து அவள் இதழை தன் இதழால் மெல்ல மெல்ல வருடிக் கொடுத்தான்.
            கைகள் ஜில்லென்று உறைந்து விட்டதால்… கவிக்கு அவள் கைகள் உபயோகப்படவில்லை… இதழை அவன் பசை போட்டு ஒட்டி விட்டதால்.. இதழ், பேசும் வித்தை மறந்துபோனது…
            கழுத்தை, நெஞ்சை, விரல்களை அவன் அவள் உடல் உறுப்பென்றே கருதவில்லை.. அவை அனைத்தும் தனதெனக் கருதி தன்னுள்ளே இழுத்துக் கொண்டான். அவற்றை தன் ஊணுடன் சேர்த்துக் கொண்டான். “ஈருயிர் ஓர் உடல்” என்று யாரோ சொன்ன பாடத்தை இப்போது கற்கும் மாணவனாய் மாறிப் போனான். கவியின் மொத்த செல் அணுக்களும் அவன் தொடுகைக்கு ஏங்கத் தொடங்கியது. அவன் கைகளைப் விரல்களிடமிருந்துப் பிரித்தால்.. “அச்சோ” என்று அலறியது. உடலின் இறுக்கத்தை குறைத்தால் “ஐயோ” என்று வெட்கம்கெட்டு கூப்பாடு போட்டது. அவன் இதழ்களுக்கு ஒரு நொடி விடுப்புக் கொடுத்தால்… “வேண்டும்” என்று சண்டித்தனம் செய்தது.
            மூளை மட்டும், “எழுந்திடு”, முழிச்சிக்கோ”, “எழு” என்று அதட்டுப்போட்டது.
            சொல்லுகிறவர் ஒழுங்காகச் சொல்லவில்லை போலும்.
மூளை ஒழுங்காகச் சொல்ல வேண்டாமா? கவியிடம் முழித்துக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் மூளை, திரும்பவும் சொன்னது, “கவி லண்டனை நீ மறந்திட்டியா?”
            கொஞ்சம் மயக்கத்திலிருந்து விழித்தாள்.
ஆகா! ‘catch’ என்ற வார்த்தை கேட்டவுடன் நன்றாகவே மோகம் என்னும் தூக்கம் கலைந்தது.
சுதாவிடம் அவள் சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்தியது மூளை. “நான் எப்போதும் Easy catch ஆக இருக்கமாட்டேன்”
மூளையின் கட்டளை பிறந்தது, “தள்ளி நில்.”
     கவி தள்ளி நின்றாள்.
அடுத்த கட்டளை கணினியின் வேகத்தைவிட வேகமாக வந்தது. “அவன் கைகளை உன்னிடமிருந்து பிரித்து எடு!”
            அவன் கைகளைப் பிரித்து எடுத்தாள்.
“இடத்தைக் காலி செய்”, அடுத்த மின்னல் வேக ஆணை.
கவி அவனிடம் இருந்து நன்றாக விலகி கடகடவென்று படிக்கட்டை இரண்டு இரண்டாகத் தாவி வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.
சேறில் விழாமல் தப்பித்த நிம்மதி அவளிடத்தில்.
            காமத்தை தன்னால் வெறுக்கவும் முடிந்ததால் வந்த திருப்தி. மனம் உடலைப் புறக்கணித்து புத்திக்கு வேலை கொடுத்ததால் உண்டான திருப்தி.
            ஒரு சரியான செய்கையால், முன்பு செய்த ஒரு தவறை சரி செய்த திருப்தி. ஒரு தவறை மறக்க கிடைத்த நொடி இது.
பரம சந்தோஷம்     அனுபவித்தாள்.
ஹாஸ்டல் வந்ததும் அம்மாவின் புகைப்படத்தைக் கட்டிக்கொண்டு தன் துணிச்சலுக்காக கற்பனையாக ஒரு முத்தம் பெற்றுக் கொண்டாள்.
            ஒரு வெள்ளியன்று வருண் கவியிடம் கேட்டான், “கவி என்னுடன் வாயேன். நாம் கஃபே போய்யிட்டு அப்படியே உன் ஹாஸ்டல் போவோம். நாளை காலேஜ் லீவ் தானே. ம்..?”
            கவி அமைதியாகச் சொன்னாள், “வருண்.. நான் அந்த மாதிரி உன்னை என்கரேஜ் செய்திருக்கக்கூடாது. ஐ ஆம் வெரி சாரி. அது ஒரு பிக் மிஸ்டேக். இனி நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். நீயும் ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதே.     வருண் உனக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். ஐ ஆம் நாட் கேம். Really I dont like to play games with you..”
“கவி.. ஏன்? you like me dammit… Its nothing serious…” என்று வருண் கேட்டான்.
பதில் சொல்லாமல் கவி நின்றாள்.
அதன் பிறகு வருணும் அவளை தொந்தரவு செய்யவில்லை. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நினைத்தானோ… கெஞ்சுவது அவன் இயல்பல்லவோ… ஏதோ ஒன்று…
கவியின் பலம் கூடியது மட்டும் நிஜம்.
இரவு வரும் பகல் வரும். வாரம் வரும் வருடம் வரும்.. சபலமும் வரும். அதுபோல பகுத்து அறியும் ஞானமும் வரும்….. என்ன ஒரு கஷ்டம் ஞானம் வரும் வரை பொறுமை தான் முக்கியம்! சபலத்திடமிருந்து தள்ளி நிற்பது தான் முக்கியம்! விலகி நில் மனமே விலகி நில் என்ற மனப் பாடப்பாட்டை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அவ்வளவுதான்! அவ்வளவுதான் விஷயம்!
     
     
 இறுதியாண்டு June, 2017
            இறுதியாண்டு. இன்னும் ஒரு நாள் பாக்கி இந்த அனாடமி, பாதாலஜி. பயோகெமிஸ்டிரி எல்லாம் இனி சுதர்சன் சார் வாயிலிருந்து கேட்க முடியாது. சுதர்சன் சார் மாணவர்கள் அனைவர்க்கும் பிடிக்கும். டாக்டர் வித்யா லக்சர் எடுக்கும்போது எங்கே நம்மிடம் அடுத்த கேள்வியோ என்ற பயத்தில் ஒவ்வொரு நொடியம் திக் திக் என்றிருக்கும். ஹவர் முடிந்ததும் ரெஸ்ட் ரூம் ஓடுபவர் பலர்.
            “ச்ச! என்ன மண்ட இவுங்களுக்கு?” என்று கவி நினைக்காத நாள் இல்லை.
            கல்லூரி முடிய இன்னும் ஒரு நாள் பாக்கி. சுதர்சன் சார் வகுப்பு வந்தார். “ஹலோ Young brains” என்று கணீரென்று கூப்பிட்டார்.
            “உங்களுக்கு ஒரு அசைன்மன்ட். My last assingnment..”
            “நீங்கள் உங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம், ஏதாவது இரண்டு விஷயம் பற்றி எல்லோருக்கும் சொல்லணும். சிறந்த எடுத்துக்காட்டு என்னுடைய சிறப்பு பரிசு பெரும்” என்று நாகரீக ஆங்கிலத்தில் தெளிவாகச் சொன்னார். இரவில், ஹாஸ்டலில் கவிக்கு தன்னை வெகுகாலமாக ஆச்சர்யப்படுத்திய விஷயத்தை கண்டுபிடிக்க பத்தே நிமிடங்கள்தான் தேவைப்பட்டது.
            அம்மாவிடம் ஆன்லைனில் பேசிவிட்டு பத்து நிமிடம் கண்களை மூடி கடவுளை வேண்டினாள்.
            மறுநாள் வகுப்பில்,
            கௌதம் ஒரு மல்லிகையும் ஒரு அரளிப்பூவும் கொண்டு வந்தான்.
            விஷால் ஷர்மா ஆண் பெண் என்று இரு உருவப் படங்கள் கொண்டு வந்து “சார் நான் மெடிக்கல் சேர்ந்ததே இந்த இரு ஆச்சர்யங்களால் தான்” என்று கூறி அனைவரின் கைத்தட்டல் பெற்றான்.
            விவேக் விண்வெளியின் ஃபோட்டோ காண்பித்து விட்டு இருக்கையில் அமரப்போன போது சுதர்சன் சார் இன்னொன்று என்ன? என்று கேட்ட போது சிரிக்காமல் அதை என் மனைவியிடம் பெர்மிசன் கேட்டபிறகு காண்பிக்கிறேன் என்று கூறி அனாடமிகிலாஸ் எடுத்த ஜாம்பாவனையே நெளியச் செய்தான்.
            கவியின் முறை வந்தபோது,
            கவி ஒரு செஸ்போர்ட் காண்பித்தாள்.
            அதில், கருப்பு ராஜாவும் வெள்ளை ராஜாவும் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தன. மற்ற காய்கள் இல்லை.
கவி சொன்னாள், “இதில் யார் வெல்லுபவர் என்று எனக்கு எப்போதுமே புரியாது. ஏனெனில் அடுத்த ஆட்டம் ஆடப் போபவர் யார் என்று இரு வீரர்களும் மறந்து விட்ட ஆட்டம் இது. நம் வாழ்வின் இருள் பக்கங்களை மறந்து விட வேண்டும் என்று உணர்த்தும் இந்த செஸ் ஆட்டம்! இருள் பக்கங்களை மறந்துவிட்டால்? அவற்றைக் குப்பையில் போட்டது போல மறந்து விட்டால்?     You will never feel low! அடுத்து ஆடுபவர் யார் என்று உங்களுக்கு மறந்துவிட்டால்? ‘checkmate’ என்று கூறி உங்களைத் தோற்கடிக்க உலகில் எவரும் இல்லை தெரியுமா?”
            கவி முடித்தப் பிறகு முதலில் ஒரே ஒரு ஜோடிக் கைத்தட்டல். பிறகு அது இரண்டாது… ஒரு நிமிடத்திற்குப் பிறகு வகுப்பறையே அதிர்ந்தது.
            “எனது இரண்டாவது ஆச்சர்யம் என் ஆச்சி. எல்லா விஷயத்திலும் அவங்க ஸ்பெஷல், அது எப்படின்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அவர், கடவுள் நம்மை காக்க வரவில்லை என்றால் அவருக்கு காய்ச்சல் என்று சொல்லி கடவுளைக் காப்பாற்றும் ரகம். She always amazes me.”
            அன்றைய வகுப்பு முடியும் போது சுதர்சன் சார் அனைவருக்கும் ஒரு மெடிசின் புக்கில் அவர் சைன் பண்ணிக் கொடுத்தார். கவியின் புக்கில் அவர் செக்மேட் என்று எழுதி அதன் அருகில் சைன் செய்திருந்தார். கவிக்கு, அது அவள் வாழ்நாள் முழுவதும் நினைத்து பூரித்திடும் நொடியானது.
சுதர்சன் சார் கையெழுத்திட்ட புத்தகம் அவளது மகுடம் ஆனது. சக மாணவர்கள் அதன்பிறகு கவியைப் பார்த்தப் பார்வையில் மதிப்பு கூடியிருந்தது.
கர்வம் கொள்க!
            கவிக்கு மனதில், சுதர்சன் சார் அறையில் இருந்த கருமை கொண்ட பெண் சிற்பம் தோன்றியது. அவள், தன்னைத் தாமே எப்படி செதுக்கி, பலர் வியக்கும் விதம் உயர்ந்துள்ளோம் என்று ஒரு நொடி கர்வம் கொண்டாள். கர்வம் கூடாதாம்.. பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், சில பல நல்ல விஷயங்களில் கர்வம் கொள்ளுதல், கர்வம் என்னும் சொல்லுக்கு புது விளக்கம் தரும். ஆகவே சில பல நல்ல விஷயங்களில் “கர்வம் கூடாது” என்று சொன்னவர்கள்கூட சொல்வார்கள் “கர்வம் கொள்க” என்று.
************
           

Advertisement