Advertisement

சோதனைக் கூடத்தில் சுதர்சன் சார். . .
 கை உறைகளைப் போட்டுக் கொண்டதும் சுதர்சன் சார் சொன்னார், “நான் இப்ப உங்களுக்கு இந்த காடிவரில் (cadaver – body of a dead person) இருந்து ஒரு லங்ஸ் டிசக்ட்(desect) செய்து காட்டப்போறேன். இரத்தம் எல்லாம் உறைந்து போய்விடும், இரத்தம் எப்படி உறைந்து இருக்குன்னு பாருங்க. அப்புறம் இந்த இன்டஸ்டைன்ஸ்.. பற்றிப் பார்ப்போம். சரியா? கவனமாக பாருங்க என்று கூறிக் கொண்டே லங்ஸ்சை “ஸகால்பெல்’ (scalpel) கொண்டு பிரித்தெடுத்தார். பிறகு லங்ஸைப் பற்றி விளக்கினார்.
பல்மோனரி வெயின்ஸ், பல்மோனரி ஆர்டரீஸ் எங்கிருக்கும் என்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சரியாகச் சொல்லும் வண்ணம் விளக்கினார். கவியிடம் லங்ஸை கொடுத்து உடம்பில் இது எந்த இடத்தில் இருக்கும் என்பதை காண்பிக்கச் சொன்னார். கவி லங்ஸை தன் உடம்பின் மேல் வைத்து இருப்பிடத்தைச் சரியாகச் சொல்லி ‘வெரி குட்’ வாங்கிக் கொண்டாள்.
            சுதர்சன் அனைவருக்கும் பொதுவான கேள்வி கேட்டார், பிறகு உடனடியாக அதற்கு தாமே விளக்கமும் தந்தார்.
“ஒரு சிறுவன் சில்லரைக் காசை விழுங்கி விடுகிறான். அவனது சுவாசக் குழாய்குள் அது சென்று விடுகிறது. நம்முடைய எந்த லங்ஸ்சில் அது இருக்கும்?”
“வலது லங்ஸ். ஏனெனில் அதுவே டிரக்கியாவுக்கு பக்கத்தில் உள்ளது.”
பிறகு இன்டஸ்டைன்ஸ் பிரித்து எடுத்துக் காண்பித்தார். “இதோ இந்த இன்டஸ்டைன்ஸ் கொஞ்சம் கொல கொலப்பாக இருக்கு. அதனால் தொட்டுப் பார்க்கும் போது கவனமாக இருங்க.” என்று கூறிவிட்டு தனது விரிவுரையைத் தொடங்கினார்.
அந்த பயிற்சிக்கூடத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் மனிதனின் ஒரு உறுப்பை கையில் வைத்திருக்கிறோம் என்பதை புத்திக்குள் ஏற்றாமல் லங்ஸ்ஸை ஆராய்ந்தனர். சுதர்சன் சார் அதை எப்படி ஒரு பிறந்த குழந்தையைப்போல ஏந்திப் பிடித்திருந்தாரோ அதையே அவர்களும் பின்பற்றினார்கள். சுதர்சன் சார் மாணவர்களை தனது புத்திசாலித்தனத்தால் வசியம் செய்திருந்தார். நாட்கள் அவரது தயவால் 1000 வாட்ஸ் மின்சாரத்தின் வேகத்தில் நகர்ந்தது கவிக்கு.
*****
              வசீகரன் வருண்
 வருண் தான் கல்லூரியின் வசீகரன் என்று எல்லோரும் சொல்லுவார்கள். “ஏய் வசீகரா” என்று அவன் பின்னால் கூச்சலிடும் சேட்டைக்கார கல்லூரிப் பெண்கள் அவனை ஈர்க்கவில்லை. மாறாக அவனை ஈர்த்தது கவி.
அவள் ஞானமும் நேர் பார்வையும் அவனை அவள் பக்கமாய் திரும்பச் செய்தது. பல நாள் அவளை தன்னுடன் காஃபி கஃபேக்கு அழைத்துப் பார்த்தான். கவி கொஞ்சமும் அசையவில்லை. ஒரு நாள் கவி பேருந்துக்காக நிற்கையில், வருண் அவளிடம், “கவி நான் உன் ஹாஸ்டலுக்கு உன்னை விட்டு விடட்டுமா? ஏன் என்னைக் கண்டால் ஓடுற?” என்றான்.
“இல்லை வருண்…” என்று சொல்லும்போதே சில மாணவிகள் வந்தனர். ஒருநாள் கவியிடம் “உன் சேலை பிரமாதம்” என்று சொல்லி அவள் சுடிதாரைக்கேலி செய்த மாணவிகள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர்.
உடனே கவி சத்தமாகச் சொன்னாள். “ரொம்ப நன்றி வருண் இன்று எப்படித்தான் போக என்று முழிச்சிட்டு இருந்தேன்.. தாங்ஸ்யா”
அந்த மாணவிகள் அனைவரும் வாய்யைப் பிளக்காத குறைதான். கவி மேலும் ஒரு படியேறி வருண் சட்டைக் காலரைச் சரி செய்வது போல் பாசாங்கு செய்தாள். அந்த மாணவிகளை உசுப்பேற்றத்தான் அவ்வாறு செய்தாள். ஆனால் அதுவே அவளுக்கு பிரச்சனையாகிப்போனது.
சுதாவின் கோபம். . .
சுதா கோபத்தின் எல்லையை தாண்டிவிட்டிருந்தாள். கவி ஒரு ஆணுடன் பைக்கில் செல்வதைப் பார்த்ததும் வந்த கோபம்.
சுதா கவியை பார்த்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட வேண்டும் என்று அவளுடைய ஹாஸ்டலுக்குச் சென்றாள். சுதா முதலில் கவியின் வாயிலிருந்து விஷயம் வரட்டும் என்று அமைதியாக கவியின் கட்டிலில் உட்கார்ந்தாள். கவிக்கு வருணுடன் ஜம்மென்று பைக்கில் சென்றது மிகவும் பெருமையாக இருந்தது. தனது அறைக்குள் வந்ததும் நல்ல குளியல் போட்டாள். வருண் தன்னை அவனது பைக்கில் அழைத்துச் சென்றதை கல்லூரித் தோழிகள் பார்த்து பொருமிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணும்போதே ஜில்லென்று இருந்தது. எதுவும் படிக்கத்தோன்றாமல் தனது மடிக் கணினியில் ஒரு தமிழ்ப் படத்தை ஓடவிட்டாள்.
சுதா வந்ததும் கவி கேட்டாள், “என்ன சுதா திடீரென்று வந்திருக்க?” “ஒரு பொறுக்கிய லஃப்ட் and ரைட் வாங்க வந்தேன்” என்று அவள் சொல்லவேயில்லை.
மாறாக, “பொழுது போகலை கவி அதான் சும்மா உன்கூட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்று சொன்னாள்.
“வா சுதா இந்தப்படம் பார்ப்போம். ரொம்ப நல்லாயிருக்கு எவ்வளவு மெசேஜ் சொல்றாங்க தெரியுமா?”
“ம்.. மெசேஜ் நம்ம குணாதிசியங்களை மாற்ற ரொம்பத்தான் தேவை!” என்று கசந்த குரலில் சுதா சொன்னாள்.
“கண்டிப்பா சுதா இந்த மாதிரி நாலு படம் வந்தால்தான மக்கள்கிட்ட விழிப்புணர்வு வரும்?”
            “ஆமாம்.. சரியாகச் சொன்ன, நிறைய மக்களுக்கு சொல்லிக் கொடுத்தால் தான் புத்தியில் ஏறுகிறது. ஆனால் சிலருக்கு சொல்லிக் கொடுத்தால்கூட ஏறமாட்டேன் என்கிறதே அப்போது என்ன செய்ய?”
            “விட்டு விட வேண்டியது தான். எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.”
            “என்ன செய்ய? கடமை என்று ஒன்று உள்ளதே கவி”
            “அப்படியானால் நாலு போடு போட்டு புரியவைக்க வேண்டியதுதான்.”
ம்… ம்… இதைத்தானே சுதா எதிர்பார்த்தது!
            விசாரணை ஆரம்பம் ஆனது.
            “கவி நீ எப்போது ஹாஸ்டலுக்கு வந்த?”
            “ஐந்து மணிக்கு வந்திருப்பேன் சுதா. சுதா என் கூட கேன்டீன் வருகிறாயா? வயிற்றில் பூனை ராஜா  எலி கேட்கிறார்!”
            “எனக்கு ஒன்றும் வேண்டாம். சும்மா மட்டும் வர்றேன்”
            “வாப்பா நீதான காசு கொடுக்கணும். சீக்கிரம் வா” என்று கூறிக் கொண்டே கவி தனது மடிக் கணினியை அணைத்து விட்டு கட்டிலில் இருந்து இறங்கி சுதாவின் தோளைப் பின்னால் இருந்தே பற்றியவாறு படிகளில் இறங்கினாள்.
கேன்டீனுக்கு சென்று ஒரு பாப்கார்ன், இரண்டு வடையும் வாங்கிக் கொண்டு கவி வந்து சேர்ந்தாள். கவி பாப்கார்னை சுவைத்தபோது சுதா கேட்டாள், “ஐந்து மணிக்கே வந்திட்டியா கவி?”
            “ம்.. ! ஏன் கேட்கிற?”
            “ஐந்து மணிக்கே வந்திட்டேனா.. ஏன் இன்னும் எதுவும் சாப்பிடலை?
            “சீக்கிரமாகவே வந்திட்டேனா.. ரொம்ப பசியில்லை .. அதான்”
            “ஓ! இரண்டு பஸ் உடனே உடனே கிடைச்சிடுச்சோ?”
            கவி மனதில் கணக்கு போட்டாள்.. ஆனால் கணக்கு தப்பாகப் போகிறது… கூட்டலும் கழித்தலும் தம்மைப் பார்த்து சிரிக்கப் போகிறது என்று தெரியாமலே.. மனதில் கணக்கு போட்டாள்…
            “ம். ஆமாம்ப்பா.. கடைசி ஹவர் நடக்கலை. அதான் வேகமாகவே பஸ் பிடிச்சிட்டேன்.”
            சுதாவுக்கு தனது கோபம் இனி தன் சொல்பேச்சு கேட்கப் போவதில்லை என்பதில் இனி ஐயமில்லை.
            கவி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாப்கார்னை அவள் கைகளிலிருந்து பிடுங்கினாள். பார்கார்ன் கப்பை கவியின் தலையிலேயே தலைகீழாக கவிழ்த்தாள். பார்கார்ன் அனைத்தும் கவி தலையிலிருந்து கீழே கொட்டியது. கவிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. சுதா கவியின் சுடிதாரில் இல்லாத காலரை இருப்பதுபோல் பாசாங்கு செய்து, தொட்டு சரி செய்வதுபோல் பாவனை செய்தபோது நன்றாகவே புரிந்தது  கவிக்கு.
கவி வாயில் மென்று கொண்டிருந்த வடையை பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் துப்பினாள்.
            “சுதா ஏன் இப்படி நடந்துக்கிற. எத்தனை பேர் இப்ப நம்மை வேடிக்கை பார்த்தாங்க தெரியுமா?”
    “ம். எனக்கு நல்லாவே தெரியும். நீ ஒரு நெட்டைக் கொக்குடன் பைக்கில் போனியே, அப்ப பார்த்த ஆளுங்களை விட கம்மிதான்.”
கவிக்கு வார்த்தை திக்கியது.
            “அதெல்லாம் ஒன்றுமேயில்லை சுதா. சும்மா ஒரு திரில்.”
“திரில்? அந்த திரில் பற்றி உன் அம்மாவிடம் சொல்லவா?”
            சரியான குளிர்பானம்! திரில் அனுபவித்தவளுக்கு கொடுக்கப்பட்ட சரியான குளிர்பானம்.
            கவிக்கு உறைத்தது. அவள் செய்தது நன்றாக உறைத்தது. ஒன்றும் பேசவில்லை கவி. சுதா கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக் கொண்டாள்.
            “ம் சொல்லு கவி. உன் அம்மா கிட்ட சொல்லவா?”
            கவி சுதாவை முறைத்தாள். சுதா வார்த்தைகளை கவி மனதில் ஆணித் தரமாக பதித்தாள்.
            “நீ ஒரு flirt. உன்னை இந்த நிமிஷத்தில் அப்படித்தான் பார்க்கிறேன். நீ ஒரு சபலக் கேஸ். உன்னை எவனும் எளிதா வீழ்த்திவிடுவான். அப்புறம் இன்னும் ஒன்று சொல்ல மறந்திட்டேன். You are an Easy catch for all the boys in the city… ச்ச! உன்னை எனக்குச் சுத்தமாக பிடிக்கல.”
            கவி பக்கத்தில் இருந்த ஒரு தண்ணீர் ஜக்கை எடுத்து, சுதாவின் முகத்தில் தண்ணீரை ஊற்றினாள்.
            “நான் Flirt ஆ? நான் சபலக் கேஸா, நான் ஈசி கேட்சா? உன்னிடம் இப்ப சொல்றேன். இதைத் தான் என் அம்மாகிட்ட வேற மாதிரி சொன்னேன். இப்ப உன்கிட்டயும் சொல்றேன். இனி நீ திரும்ப என்னை இன்று போல.. இன்று நான் நடந்து கொண்டதுபோல எந்த நொடியில், எந்த இடத்தில் பார்க்கிறாயோ அந்த இடத்திலேயெ என்னை நீ என் பற்கள் உடைய அடிக்க நான் உனக்கு உரிமை தர்றேன். ஆனா நீ என்னை Flirt ன்னு சொன்னதை என்னால் மன்னிக்கவே முடியாது.”
            “கவி நீ என்னை மன்னிக்கவே வேண்டாம். அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கப் போவதில்லை. நான் இப்ப கிளம்புறேன் பை!” சுதா ஹாஸ்டலை விட்டு வெளியேறினாள்.
கவியை நன்கு திட்டியாச்சு.. ஆனால் சுதா மனது தான் கிடந்து அடித்துக் கொண்டது.
“இருந்தாலும் அவளை ரொம்ப திட்டிட்ட.. பாவம் அவள் முகமே செத்துப் போனது. உனக்கு கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியல…” இப்படி பல காரணங்களை மனம் சொல்லி, கவியைப் பார்க்கத் தூண்டியது. சுதாவின் மூளை, மனதின் புலம்பலை நிராகரித்தது.
“உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கத்தானே வேண்டும்?” என்று எதிர் வாதம் ஜெயித்தது. ஒரு பத்து நாள் கழிந்திருக்கும்…. சுதாவின் கைபேசி கவியின் எண்னைக் காட்டி சிரித்தது. சுதா கரைந்தே விட்டாள்.
            ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. தன் தோழியிடம் “ஹலோ’ என்று சுதா தான் பேச்சை ஆரம்பித்தது.
            “ம்.. சுதா இன்னைக்கு என் ஹாஸ்டல் வர்றியா? உன் கூட பேசணும்.”
            “இல்ல.. கவி.. எனக்கு.. இப்ப நேரமில்லை..”
            “சுதா.. நிறுத்து. நீ வருகிற..! உண்மையில் நான் தான் கோபப்படணும், நீ என்கிட்ட அன்று பேசியபேச்சுக்கு… அதிகமா கோபப்படணும். ஆனா நான் பொறுமையை இழுத்துப்பிடிச்சுட்டு இருக்கேன். ஐந்து மணிக்கு ஹாஸ்டல் வந்திடு. நான் ஃபோனை வச்சிடுறேன்.”
            சுதா அறைக்குள் வந்ததுமே கவி கதவை இரு கைகளால் கதவைப் பிடித்துக் கொண்டு.. நிற்பதற்கு கூட பலம் இல்லாமல் கதவின் மேலேயே சாய்ந்து கொண்டு நின்றுவிட்டாள். சுதா உள்ளே நுழைந்து, மெல்லச் சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள்.
            கவி கேட்டாள், “மகாராணி ஒரு ஃபோன் கூட செய்யமாட்டீங்களாக்கும்? நான் தான் முதலில் இறங்கி வரணுமாக்கும்?”
            “அதை விடு. என்ன விஷயம் சொல்லு?”
            “விஷயம் ஒன்று பெரிதில்லை சுதா, நான் ஒரு வாரமா பிரியாணி சாப்பிடலை, ஹோட்டலே போகல. நேத்து கூட கையில் இருந்த முன்னூறு ரூபாயில் ஒரு பீசா சாப்பிடலாமா? இல்லை, தலப்பாகட்டு பிரியாணி சாப்பிடலாமா? இல்லை, இந்த இரண்டும் வேண்டாம் பேசாமல் சினிமா போகலாமா? என்று கேட்க என் பக்கத்தில் எப்போதும் ஒரு ஒள்ளிப்பாச்சான் இருக்கும். அது இல்லை… அதான் அந்த ஒட்டகச்சிவிங்கியை கூப்பிட்டே கேட்கலாமாயென்று…”
            கவி பேசி முடிக்கவில்லை. சுதா தன் கைப்பையை எடுத்து அதில் இருந்த பிரியாணி பார்சலைப் பிரித்தாள்.
            இருவரும் கொஞ்சம் அழுதனர். நிறைய பேசினார்கள்.
            பத்து நாள் கணக்கு பாக்கி இருந்ததே. ரொம்ப நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர். கவி சுதா கிளம்பும்போது சொன்னாள், “சுதா என் வாழ்நாளில் நான் எப்போதும் Easy catch ஆக இருக்க மாட்டேன். இது சத்தியம்!”

Advertisement