Advertisement

 கல்லூரியின் முதல் ஆண்டு. . . .
            கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள் நுழைவதற்காக.. அனைத்து உழைப்புகளும் நிச்சியம் அதன் பயன்களைப் பெற்று விட்டன என்று எண்ணிக் கொண்டாள். கல்லூரியின் அலுவலக அறைக்குச் சென்று தனது பெயரைச் சொல்லி தனது வகுப்பறை, பிரிவு மற்றும் விடுதி விபரம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
            தனது வகுப்பறைக்குள் நுழையும் போது மழலையர் பள்ளிக்குள், அவள் சிறு பிள்ளையாக இருந்தபோது முதல் நாள் சென்றபோது வந்த பயம் போல, ஒரு பயம் மனதில் தோன்றியது. வகப்பறையின் அமைதி அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் வரவர கொஞ்சம் பயமும், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வும் அவளைச் சூழ்ந்து கொண்டது.
            அவள் பக்கத்தில் மதுமித்தா வந்து அமர்ந்த வேகத்தில் கையை நீட்டி “என் பெயர் மதுமித்தா நீதான் கவிதாவா?” என்ற கேள்வியோடு தனது அறிமுகத்தைத் தந்தாள். கவிக்கு மதுமித்தாவின் இனிய அனுகுமுறை அவளை எளிதாக இயல்பாக்கியது. உடனே தனது தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு கையை நீட்டி, “ஆம் நான் கவிதா. கவி என்றுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. நீ எந்த பள்ளியில்?” என்று கேட்டு முடிக்கும் முன் பதில் வேகமாக வந்தது.
            “மதுரையின் ST. Joseph…”
“அப்படியா? என் அம்மா கூட அந்த பள்ளியில் தான் படித்தார்களாம். அங்குபோல் ஒழுங்கு எங்கும் இல்லை என்று எப்போதும் ஒரே பள்ளி புராணம்தான்!” இருவரும் பொதுவான விஷயங்கள் பேசி முடித்த கொஞ்ச நேரத்தில் விரிவுரையாளர் வந்து விட்டார்.
அவர் வகுப்பில் உள்ள அனைவரையம் தங்களைப் பற்றிய அறிமுகம் இரண்டு வரிகளில் கொடுக்கச் சொல்லி தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
            அவரது கல்வித் தகுதியை கேட்டபிறகு இவர் இங்கே இந்தியாவில் என்ன செய்கிறார்? என்று கவி தன்னிடம் கேட்டுக்கொண்டாள்.
            பிறகு அவர் தனது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று கூறிய பிறகு அவளும் அவளுடன் பவ்வியமாக உட்கார்ந்திருந்த அனைவரும் புரிந்து கொண்டனர், அவர் தனது திறமையை இந்த மண்ணில்தான் அவர் உயிர் உள்ளவரை செலவழிப்பார் என்று.
முதல் நாள் கல்லூரி வகுப்புகள் ஆமை வேகம்…
இரண்டாம் நாள் வகுப்புகள் ஒரு ஆமையின் தாத்தா வேகம்.. மூன்றாம் நாள் வகுப்புகள் அந்த ஆமையின் கொள்ளுபாட்டன் வேகம்..
நான்காம் நாள் “இன்று எப்படியோ?” என்று காத்துக்கிடந்த நம் மாணவர்கள் முன் வந்து நின்றார் சுதர்சன் கோபாலகிருஷ்ணன்.
சிலருக்கு மட்டும் மனிதர்களை பேச்சால் கட்டிப்போடும் ஆயுதம் அல்லது வரம், எளிதாய் கிடைத்து விடும்.
அப்படிப்பட்ட ஆயுதமும் வரமும் எந்த நொடியும் வற்றாமல் பெருவதற்கு இந்த புண்ணியவான் எந்த மலையைத் தூக்கினார்? என்று கவி நினைக்காத நாள் இல்லை.
ஒரு நாள் வகுப்பில் சுதர்சன் கேட்டார்,
“நாம் ஏன் தோசையை சாம்பாருடன் சாப்பிடுகிறோம்?”
“தோசையில் லைசைன் இருக்காது. சாம்பாரில் ‘மிதியோனைன்’ இருக்காது. இரண்டும் சேரும் போது ஒரு முழுமையான புரதச் சாப்பாடு நாவிற்கு கிடைக்கிறது!” என்று பதில் சொன்னார்.
அன்றிலிருந்து கேன்டீனில் சேட்டைக்கார மாணவர்கள் தோசையை சாப்பிட்டபோதெல்லாம் சர்வரிடம் “மிதியோனைன்” ஊற்றப்பா என்றனர். இன்னும் பல வாலிபச் சேட்டைகளும் உண்டுதான். அதுவும் இல்லையென்றால் அது கல்லூரி அல்லவே?
சிற்பியின் சிலை. . .
தனது ரெக்கார்ட் புத்தகத்தில் கையொப்பம் வாங்க கவி, சுதர்சன் சாரின் அறைக்குச் சென்றாள்.
ஒரு பெரிய சிலை சுதர்சன் சார் அறையின் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு பத்து மாதக் குழந்தையின் உயரம் இருக்கும். கரு வண்ணத்தில் கம்பீரமாக நின்றது அந்த சிலை.
            தன்னைத்தானே செதுக்கும் ஒரு பெண் சிற்பி போல் இருந்தது அந்த சிலை. அந்த சிலையில் இருந்த பெண் தன்னைத்தானே செதுக்கினாள். அவள் கண்களில் கர்வம் இருந்தது. அந்தச் சிலையில், உளியைத் தாங்கிய அழுத்தமான கைகளில் நரம்புகள்கூடத் தெரிந்தது. கவி அந்த சிலைக்கும் தனக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்தாள்.
தனது புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
            அனாடமி லாப். . .
“மது இன்றைக்கு நமக்கு அனாடமி லாப் இருக்கு தெரியுமா?”
“ம். தெரியும் கவி. ஏன் நமக்கு முதல் வருடமே டெட் பாடியைக் கண்ணில் காண்பிக்கிறாங்கப்பா? நேத்து நைட்லயிருந்து நான் ஒன்றும் சாப்பிடலை தெரியுமா? தூக்கமே வரலை. சுதர்சன் சார். “நாளை உங்களுக்கு அனாடமி லாப். நல்லா தூங்கி எழுந்து வாங்க. ஹாவ் எ குட் சிலீப்.” என்று சொல்லும்போது என்னமோ என்னை பார்த்தே பேசின மாதிரி இருந்ததுப்பா. அதான் தூக்கமே வரல.”
“நைட் முழுவதும் அவர் என்னை எழுப்பி எழுப்பி “நல்லா தூங்குறியா?” என்று கேட்பதுபோல இருந்தது. ஏன் கவி நீ பயப்படவே மாட்டியா?  ஹும் உன்னைப் பார்த்து டெட் பாடிதான் பயப்படணும் நம்மேல் கை வைத்து என்ன செய்யப் போறாளோ என்று.”
 “மது டோன்ட் ஃபஸ்.. என்னிடம் புலம்பும் நேரத்தில் உன் “கன்னிங்காம் டிசக்சன்” புக்கையாவது கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் உபயோகமாக இருக்கும்.”
கவியின் வகுப்பில் முப்பது மாணவர்கள் இருந்தனர். கௌதம் எந்நேரமும் அரட்டை அடிக்கும் ஆள். செல்வா எப்பொழுதும் படிப்பான், படிப்பான், படித்துக் கொண்டே இருப்பான். கவிக்கு முக்கிய பொழுதுபோக்கே அவள் புத்தகங்கள்தான்.
மது, “என்னப்பா கவி, ப்ளஸ் டூவில் படித்தது போதாதா.. இங்கேயும் படித்துக்கொண்டே இருக்கணுமா?” என்று நாள் ஒன்றிற்கு பத்து முறை புலம்பும் ரகம்.
முப்பது மாணவர்களும் சோதனைக் கூடத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர்.
அது ஒரு பெரிய ஹால். அந்த ஹாலில் நறுமணம் பரவ வேண்டி வாசனை திரவியங்களை ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார் துப்புரவு பணியாளர் கனகவேல்.
தனக்குத்தானே பேசினார் கனகவேல், “மகராசன் இறந்த பிறகும் படிக்கிற புள்ளைகளுக்கு உபயோகமா இருக்கான். ஏலே பரணி அந்த ஸ்ப்ரேய இன்னும் கொஞ்சம் அடி. வாடை வந்தா ஐயா கோபிப்பாரு.” பத்து உடல்கள். அங்கே பத்து டேபிலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உடலுக்கும் 5 அடி இடைவெளி இருந்தது.
சுதர்சன் சார் யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார், “யஸ்.. பிரபா.. பத்து காடிவர் தான் இருக்கு. ஜி.ஹச்க்கு கால் பண்ணி பேசியாச்சு. டோனர்ஸ் யாருடையதும் இல்லை என்று சொல்லிட்டாங்க. நீங்க ஸ்டான்லி மருத்துவமனையில் கேளுங்க. நான் விபரம் பிறகு கேட்டு தெரிஞ்சிக்கிறேன். இப்ப எனக்கு லாப் இருக்கு வச்சிடவா?”
சுதர்சன் தனது கைபேசியை அணைத்து விட்டு மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தார். மாணவர்களிடம் கை உறை போட்டுக் கொள்ளச் சொன்னார். பிறகு பதினைந்து மாணவர்களை மட்டும் அனாடமி லாப்பிற்கு அழைத்தார். மீதமிருந்த பதினைந்து மாணவர்கள் போன்ஸ் பிராட்டிகல் லாப்பிற்குச் சென்றனர்.
மதுவும் கவியும் அனாடமி லாப் பிரிவில் இருந்தனர். சுதர்சன் சாரின் முதல் கேள்வி மதுவிடம், “சரி, இந்த காடிவர் எதனால் பதப்படுத்தப்பட்டிருக்கிறது?”
“இவர் மூச்சுகூட விட மறப்பார். ஆனால் கேள்வி…” என்று மது மனதில் நினைத்துக் கொண்டே நிற்க.. செல்வா, ஃபார்மலின்’ என்று பதில் சொன்னான்.
மதுவிடம் சுதர்சன் சார், “புக்ஸை தலைக்கு வைத்துப் படுக்காதே கண்ணுக்கு முன் வை” என்று கூறிவிட்டு கை உறைகளைக் கையில் எடுத்தார்.
அடுத்த கேள்வி முகிலிடம் கேட்டார், “முகில் நமது மூச்சு திணறலின் போது லங்ஸ் எப்படி வேலை செய்யும்?”
அவன் பக்கத்தில் நின்ற கௌதம் சுதர்சன் சாருக்கு கேட்காத வண்ணம் விட் அடித்தான்,
“செத்தான்டா சேகரு!”
 முகில் அரைகுறையாக ஒரு பதிலைத் தர, திருப்தி அடையாத ஆசிரியர் தாமே அதை விளக்கினார்.
கௌதம் தனியாக முகிலிடம் மாட்டியபோது முகில் கோபத்துடன்  பேசும் முன்னே, கௌதம் முகத்தை அழுவதுபோல் வைத்துக்கொண்டு சொன்னான், “சொல்லுங்க கோபால்.. சொல்லுங்க… கோபால் சொல்லுங்க.. லங்ஸ் எப்படி மூச்சு திணறும் போது function செய்யும்?”
முகில் திட்ட நினைத்ததைக் கூட மறந்துவிட்டு சிரித்தான்.

Advertisement