Advertisement

இந்தியா…
நாரயணன் … “பவி கோயில்ல எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சா…?என்று கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் துளசி செடியில் இருந்து ஒரு இலையை எடுத்து வாயில் போட்டு கொண்டே கேட்டார்.
“தாத்தா நீங்க டென்ஷன் ஆகாதிங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.” என்று பவித்ரன்  இங்கு வந்த மூன்று நாளில் இதே வார்த்தையை நூறு முறையாவது  சொல்லி இருப்பான்.
அப்போதைக்கு … “சரி.” என்று சொல்லும் நாரயணன் பின் திரும்பவும் “எல்லா சரியா நடக்குமா…?” என்று திரும்பவும் அதே அர்த்தத்தை கொண்ட வார்த்தைகளையே வேறு மாதிரியாக கேட்டு வைப்பார்.
பவித்ரன் சென்னையில் இருந்து கம்பத்துக்கு வந்து மூன்று தினம் ஆகிறது. மூன்று நாள் கழித்து தன் இரட்டை குழந்தை செல்வங்களான கிருஷ்க்கும், இந்திரனுக்கும், கூடவே வேணியின் மகள் வெண்ணிலாவுக்கு  முடி இறக்கி  காது குத்தும் விழா  அவர்கள் குலதெய்வ கோயிலில் நடை பெற உள்ளது.
அனைத்து ஏற்பாட்டையும் மூன்று நாள் முன்னவே வந்து பவித்ரன் செய்து முடித்து விட்டான். இதோ இப்போது திரும்பவும் சென்னை போகிறான். தன் வேணியை   அழைத்து வர…
எப்போதும் இது போல் தான் பவித்ரன் சென்னையில் இருந்தால், உதய் வேணி சென்னையில் வந்து இறங்கிய உடன் வேணியை ஒரு கைய்யால் பற்றிக் கொண்டால், மறுகையில் வெண்ணிலா இருப்பாள்.
கம்பத்து வரும் வரை பிடித்த கையை பவித்ரன் விட மாட்டான். உதய் ஒரு வாரம் தன் தந்தையின் வீட்டில் இருந்து பார்க்க வேண்டிய வேலைகளை பார்த்து  விட்டு தான் கம்பத்துக்கு செல்வான்.
ஒரு வாரம் பிரிய வேண்டுமே மனைவியிடம் ஏதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட அவனால் செயல் படுத்த முடியாது.
எங்கு இருந்துடா எனக்கு வில்லனா வந்து வாய்க்கிறிங்க…மனதில் தான் திட்டி தீர்ப்பான். வெளியில் மூச்ச்ச்…
அதே போல் சென்னைக்கு  கிளம்பி கொண்டு இருக்கும் பவித்ரன் கையில் காபியை திணித்த காயத்ரி… “இந்த தடவையாவது மொட்டை அடித்து விடுவோமா…?” என்று  கணவனிடம் கேட்டுக் கொண்டே அங்கு இருக்கும் தன் இரு பிள்ளைகளையும் காயத்ரி பார்த்தார்.
இருவருக்கும்  இரட்டை சடை போட்டு மடித்து கட்டினால் கூட, தோள் வரை வந்து விழும் அளவுக்கு முடி வளர்ந்து நீண்டு இருந்தது. ஐந்து வரை முடி வெட்டாது இருந்தால் முடி வளர்ந்து நீண்டு  தொங்க தானே செய்யும்.
வேணியின் மகள் வெண்ணிலாவுக்கு முதல் மொட்டை உதயேந்திரனின் குலதெய்வம் சென்னையில் உள்ள பாடிகாட் முனிஸ்வரர் கோயிலுக்கு மொட்டையாகி, இப்போது போடும் மொட்டை அவளுக்கு இரண்டாம் மொட்டை.
ஆனால் பாவம் நம் கிருஷ், இந்திரனுக்கோ.. இதுவே முதல் மொட்டை. சென்னையில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் அவர்களுக்கு இந்த முடியால் ஏகப்பட்ட  தொல்லைகள் தான்.
அதுவும் அவர்கள் கூட படிக்கும் பிள்ளைகள் இவர்களை பார்த்து… “இரண்டு பேரும் பேன் பாத்துப்பிங்கலா…?”என்று  சேது படத்தில் வரும் வசனம் போல் பேச…
அதற்க்கு எதிரொலி வீட்டில் தான் கேட்கும்… இருவரும் ஒரு சேர…. “இந்த முடி வெட்டாம நான் இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்.” என்று அடம்பிடித்து நிற்பவர்களை தாஜா செய்து திரும்பவும் பள்ளிக்கூடம் அனுப்பும் வேலை நம் பவித்ரனுடையதாகி விடும்.
இனி பவித்ரன் ஜாதா என்ன கூஜா கூட செல்லாது என்பது போல் இரு பிள்ளைகளும் தீர்த்து சொல்லி விட்டனர்…
“இந்த முடி எடுக்காது அடுத்த இரண்டாம் வகுப்புக்கு கால் எடுத்து  வைக்க மாட்டோம்.”  என்று.
அது தான் முந்தையது போல் இந்த தடவையும் தன் குழந்தைகளின் முடி இறக்குவதில் ஏதாவது தடங்கள் வந்து விடுமோ என்று பயந்து போய் தான் காயத்ரி  கேட்டாள்.
முதல் தடவை முடி இறக்கும் போது  முதல் நாள் தான் இந்தியா வர உதய் ப்ளைட் டிக்கட் புக் செய்து இருந்தான். வானிலை காரணமாக அந்த விமானம் ரத்து செய்து விட…
வேணி இந்தியா வர முடியாது போனது. வேணி… “பவி ஆம்பிள்ளை பிள்ளைங்க முடி இருந்தா ஹன் ஈசியா இருக்கும். நான் வெண்ணிலாவுக்கு முதல் மொட்டை போட்டுட்டேன். நீ குழந்தைகளுக்கு முடி இறக்கு. அடுத்த தடவை வெண்ணிலாவோடு  முடி இறக்கலாம்.” என்று  வேணி எவ்வளவு சொல்லியும் பவித்ரன்…
“நம்ம குழந்தைங்களுக்கு ஒன்னாவே முடி இறக்கனும்.” என்று சொல்லி விட்டான்.
சரி என்று  வேணி அடுத்த தடவை விமானத்திற்க்கு டிக்கெட் முன் பதிவு செய்வதை ஒரு வாரம் முன்னவே செய்து இந்தியா வந்து கம்பத்துக்கும் வந்து இறங்கி விட்டாள்.
கம்பத்தில் வந்து இறங்கிய தன் மகளை பார்த்த குஷியில்  புனிதா ஆட்டை அடிப்பது. கோழியை சூப்பு வைப்பது. கூடவே இந்த நண்டை சாப்ஸ் வைத்து கொடுப்பது என்று மகளை கவனித்த கவனிப்பில் மாதவிடாய் பத்து  நாள்  முன்னவே வந்து அவள் கோயில் உள் நுழையக்கூடாது என்ற நிலையில்…
அப்போதும்… “ஏன்டா என் புருஷனை கூட்டிட்டு போய் முடி இறக்கிட்டு வாடா…” என்று வேணி சொன்னதற்க்கு உதயைய் ஒரு பார்வை பார்த்த பவித்ரன்…
“நீ இல்லாது உன் குழந்தைக்கு முடி இறக்குவதா…? அது முடியாது முடியாது.” என்று பவித்ரன் திட்ட வட்டமாய் மறுத்து  விட்டான்.
“அவ என் பொண்ணும் தான்டா…” இவர்களின் பேச்சுக்கு நடுவில் போக கூடாது என்று நினைத்தாலும், இவர்கள் பண்ணும்  அழிச்சாட்டியத்தை பார்த்து போகாது  அவனால் இருக்க முடியவில்லை. அதனால் தன்னையும் மீறி கேட்டு விட்டான்.
“என் வேணி இல்லாம உனக்கு குழந்தை வந்து விட்டதா…?” என்று சொல்லி விட்டு செல்லும் பவித்ரனின்  முதுகை பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகம் கோபத்துக்கு பதிலாய் புன்னகையே நிறைந்து இருந்தது.
அவனுக்கு தெரியாதா…?அவன் வெண்ணிலாவுக்காக எல்லாம்  முடி இறக்கும் விழாவை ரத்து செய்யவில்லை. தன் குழந்தைகளின் விழாவுக்கு வேணி இல்லாமல் நடப்பதா…?
 அதை மனதில் வைத்து தான் பவித்ரன் அந்த விழாவை  ரத்து செய்தான் என்பது அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியுமே… இந்த தடவை எந்த வித தடங்களும் வரக்கூடாது என்பது தான் அனைவரின் கவலையாய் இருந்தது. 
இதோ சென்னையில் விமானநிலையத்தில் வேணியையும் அவள் மகளையும் பார்க்க ஆவளோடு காத்துக் கொண்டு இருந்தான் பவித்ரன்…
அவன் ஆவளுக்கு குறையாத அன்போடு அங்கு வந்த வேணி… “பவி….” அடுத்த வார்த்தை பேசாது அவன்  தோள் சாய்தவளை….
“குட்டிம்மா….எப்படிடா இருக்க…?”  என்று பாசத்துடன் கேட்டான். அவன் குட்டிம்மாவின் குட்டியோ இதை ஏதோ படம் பார்ப்பது போல் பார்த்திருந்தாள்.
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படிடா இருக்க…?” என்று  திரும்ப வேணி பவித்ரனை  நலம் விசாரிக்க…
இதை எல்லாம் பார்க்க முடியாது தன் லக்கேஜ் மேல் அமர்ந்த உதய்…அடுத்த லக்கேஜ் மேல் தன் குழந்தையை அமர வைத்தான்.
என்னவோ பேசி பார்த்து வருட கணக்காக ஆனது போல இவங்க பில்டப் தாங்க முடியலடா… உதய் எப்போது போல் இதையும் மனதில் தான் நினைத்தான் வெளியில் மூச்ச்ச்ச் தான்.
வேணியிடம் பேச வேண்டியது எல்லாம் பேசி விட்டு, அடுத்து வெண்ணிலா பக்கம்  பார்வையை திருப்பிய பவித்ரன் அவளை கொஞ்சோ…கொஞ்சு என்று கொஞ்சி விட்டு போனா  போகுது என்று கடைசியாக தன்னை  பார்த்த பவி…
“எப்படி இருக்கிங்க மிஸ்டர் உதயேந்திரன்.” கை குலுக்கி நலம் விசாரித்தான்.
ஆ இருக்கேன் இருக்கேன். உன்னை போல வில்லன் எல்லாம் வெச்சிட்டு நான் எப்படி  நல்லா இருக்க முடியும் …?என்று மனதில் நினைத்தாலும் வெளியில் தன் பல்லை மொத்தமாய் காட்டி…
“ஓ ரொம்ப நல்லா இருக்கேன் மிஸ்டர் பவித்ரன்.” என்று சிரித்த முகமாகவே சொன்னான்.
இருவரும் வெளியில் சாதரணமாக பேசிக் கொண்டாலும், பவிக்கு வேணியை தினம் பார்க்க முடியாது செய்து விட்டானே இவன் என்று உதயைய் வில்லன் போல் பார்ப்பதும்…உதய் என்னோடு என் ஏஞ்சலுக்கு நீ முக்கியமா…? அவன் இடம் வேறு. தன் இடம் வேறு என்று அவன் அறிவு எடுத்துரைத்தாலும், அவ்வப்போது  அவன் இதயம் இவர்களின் அன்பை பார்த்து  லேசாக பொறாமை கொள்ளும். அதனால் எப்போதும் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருந்துக் கொண்டு இருக்கிறது.
அனைத்து நல விசாரிப்புக்கு பின் எப்போதும் போல்  பவித்ரன் வேணி குழந்தையோடு கம்பத்துக்கு செல்ல…உதயேந்திரன் தன் இல்லம் நோக்கி சென்றான்.
பரமேஸ்வரர் அதே  நிலையில் தான் இருக்கிறார்.தான் எதிரில் நின்றாலும் தன்னை அடையாளம் காண முடியாத நிலையில்…
ஆனால் அதற்க்கு எதிர் பதமாய் அவருடைய பேத்தி  அனைவரும் அடையாளம் காணும் விதமாய்  தொழிலில் எங்கேயோ சென்று விட்டாள்.
பார்க்க வேணி தந்தையை போல் இருந்தாலும், தொழிலில் சந்திர சேகரின் மகளாகவும் தொழிலில் எதிராளியைய் வீழ்த்துவதில் பரமேஸ்வரரின் பேத்தியாகவும் அந்த குழுமத்தையே தாங்கி நிற்க்கும் தூணாய்  கீர்த்தி  உயர்ந்து விட்டாள்.
உதய் இந்தியா வந்த அன்று தான் க்ரீஷுக்கும்  பிறந்த தினம். அதை ஓட்டியே உதயும் விமானத்திற்க்கு டிக்கட்டை புக் செய்தது. 
“உன் தம்பிக்கு வாழ்த்து சொல்ல வர்றியா…?” விமானத்திலேயே வேணியை தன் இல்லத்திற்க்கு அழைத்தான்.
அதற்க்கு மறுப்பாக  தலையசைத்த வேணி… “நான் போன்ல பேசிக்கிறேன்.” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து முடித்துக் கொண்டாள்.
“பேபி…” என்று அவன் வெண்ணிலாவை குறிப்பிட… அதற்க்கும் வேண்டாம் என்று தலையாட்டலே உதய்க்கு பதிலாய் கிடைத்தது.
என்ன தான் வேணி உதயேந்திரனை விரும்பி மணந்து மனமொத்த தம்பதியார்களாய் வாழ்ந்தாலுமே…அந்த வீடு, ஜெய்சக்தி …பரமேஸ்வரர் இவர்கள் வேணிக்கு அலர்ஜி..
வேணி க்ரீஷ் கீர்த்தியிடம் பவித்ரனிடம் பேசுவது போல் தினம் போனில் பேசவில்லை என்றாலும், வாரம் ஒரு முறை அழைத்து பேசிவிடுவாள். பெரியவர்கள் செய்த பாவத்தை பிள்ளைகள் மீது போட கூடாது என்பது அவள் எண்ணம்.
ஜெய்சக்தி தம்பியை பார்த்ததும் …”எப்படிடா இருக்க நல்லா இருக்கியா…?அவ உன்ன நல்லா பார்த்துக்குறாளா…?” என்று கேள்வி கேட்டவள் உதயை பதில் சொல்ல விடாது அவளே…
“அவளுக்கு அவ அம்மா வீட்டு ஆளோடு பேசவே நேரம் போதாது. வீட்ல சும்மா தானே இருக்கா..உனக்கு நல்லா சமச்சி போடலாம்லே…பாரு எவ்வளவு மெலிஞ்சி போயிட்ட….உன்னை கவனிக்கிறதோட அவளுக்கு என்ன வேலை இருக்கு…? என் பொண்ணு போல பிசினஸையா பார்க்குறா…? வெட்டியா வீட்ல தானே இருக்கா… “ எப்போதும் போல் தன் பிரசங்கத்தை ஜெய்சக்தி பேசி முடிக்க…
ஒரு புன்னகையோடு அனைத்தையும் மவுனமாக கேட்டுக் கொண்டு இருந்தான் உதயேந்திரன்…
க்ரீஷ் தான்… “அம்மா போன தடவை வந்ததோடு இப்போ மாமா வெயிட் போட்டு தான் இருக்கார்.” என்று சொல்லி விட்டு தன் அன்னையிடம் முறைப்பையும் வாங்கி கொண்டான்.
க்ரீஷ்  சொன்னது போல் ஐந்து கிலோ ஏறி தான் இருக்கிறான். ஆனால் ஜெய்சக்தி சொன்னதற்க்கு எதுவும் எதிர்த்து பேச மாட்டான். வேணியின் மனதுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறானோ…
அதே  போல் தான் தன் சகோதரியின் மன ஆதாங்கத்தையும், அறிந்தவனாய் அவள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது அனைத்தையும் ஒரு புன்னகையோடு கேட்டுக்  கொள்வான்.(குடும்பஸ்தன் ஆகிவிட்டான்ல.)
அன்று மாலை க்ரீஷ் பிறந்த நாள் விழாவில் க்ரிஷ் பிரன்ட் அனைவரும் வந்து இருந்தனர்…வந்தவர்களை பார்த்த உதய் க்ரீஷ் அருகில் போகும் போது அவன் போனில்… 
“ஆ சரிக்கா…சரி நான் ஒழுங்கா நடந்துக்குறேன். ம்…நல்லா படிக்கிறேன்.” அந்த பக்கம் கேட்ட கேள்விக்கு பவ்யமாய் பதில் அளித்துக் கொண்டு இருந்தான் க்ரீஷ்..
போனை அணைக்கும் வேளயில்.. “அக்கா தேங்ஸ். கிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குக்கா…” என்று ஒரு புன் சிரிப்போடு போனை அணைத்தான்.
போனில் வேணி என்று தெரிந்தமையால் யார் என்று கேட்காது வந்த அவனின் நட்பு வட்டத்தை காண்பித்து…
“ஏன்டா உனக்கு பாய் பிரண்டே இல்லையா…?” என்று உதய் கேட்டதற்க்கு…
“அக்கா அப்பா போல் தாத்தா போல் இருக்கா… நான் என் மாமன் போல் இருக்கேன் அவ்வளவு தான்.” என்று சொன்னதோடு அங்கு சென்று கொண்டு இருந்த ஒரு பெண்ணை நோக்கி  “ரம்யா…” என்று அழைத்துக் கொண்டே அவளிடம் சென்றான்.
“ம்ம் இருடா இரு. என்னை போல் ஒருத்தி வரும் வரை தான் இது எல்லாம்.” என்று சுகமாகவே தன் மனையாளை நினைத்து மகிழ்ச்சியோடு சென்னையில் தன் வருகையை  முடித்துக் கொண்டு…
நாளை விழாவுக்காக இன்று   தன் அக்காவின் இரு பிள்ளைகளோடு கம்பத்தை நோக்கி சென்றான்…
குலதெய்வ ம்கோயிலில் முறைப்படி பொங்கல் வைத்து மூன்று குழந்தைகளுக்கும் முடி இறக்கியது காது குத்தும்   விழாவும் அமர்க்களமாய் நடந்து முடிந்தது.
மொட்டை தலையோடு வெண்ணிலா காது குத்திய வலி பொறுக்க முடியாது அழுதுக் கொண்டு இருக்க..அவளின் இருப்பக்கமும் கிருஷ்…இந்திரன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு…
“பாப்பூ அழாதே இந்தா இந்த  மிட்டாய் சாப்பிடு வலி தெரியாது.” என்று அவளின் அழுகாது இருக்க என்ன என்னவோ செய்து ஒரு வழியாக வெண்ணிலாவின் அழுகையை நிறுத்தி விட்டனர்…
இதை பார்த்த அனைவருக்கும் தோன்றியது இது தான் .அடுத்த நட்பு  தொடங்கி விட்டது.
                                நிறைவு

Advertisement