Advertisement

அத்தியாயம்….46 
பவித்ரன் பேச பேச நாரயணன் அதிர்ச்சியோடு பார்ப்பதை தவிர, அவரால்  வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுவும் பவித்ரன் சொன்ன… “ நீங்க உங்க மகனிடம் கேட்டிங்கலா….?” என்ற வார்த்தையோடு பவித்ரன் சொன்ன…
 “உங்க இந்த முடிவால் பாதிக்கப்பட்டது புனிதா அத்தையும், வேணியும் தான்.” என்று பவித்ரன் சொன்ன  சொல் அடுத்து அவர் ஒன்றும் பேச முடியாது வாய் அடைக்க போதுமானதாய் இருந்தது.
கொஞ்ச காலமாகவே அவர் மனதில்  இதே எண்ணம் தான். அன்று நான் சந்திரசேகரை கட்டாயப்படுத்தி இருக்க கூடாதோ…தன் மனைவியின் கடைசி ஆசையை தவிர…
தன்  தங்கைக்கு அவர் கொடுத்த வாக்கான  உன் பிள்ளைகளை நல்ல முறையில் வாழ வைப்பேன். என்ற சத்தியமும் கூட சேர்ந்து தான் வேறு எங்காவது இந்த பிள்ளைகள் சென்றால் தன்னால் பார்க்க முடியாது என்று நினைத்து தான் தன் பிள்ளைகளுக்கே தன் தங்கை பிள்ளைகளை கட்டி கொடுக்க நினைத்தது.
ஆனால் பிள்ளையார்  பிடிக்க போய் குரங்காய் ஆன மாதிரி தான் அவர் எண்ணம்  பொய்த்து போனது. புனிதா வேறு எங்காவது சென்று இருந்தாலாவது தன் வாழ்க்கையை  நல்ல முறையில் வாழ்ந்து இருப்பாளோ… என்று நாரயணன் என்னும் படி தான் மகள் மருமகள் வாழ்ந்த வாழ்க்கை இருந்தது.
அதுவும் தன் மகருமகள் கை குழந்தையோடு  இருபதே வயதில் தன் கணவனை அடுத்தவள் கணவனாய் பார்க்க நேரிடும் போது எப்படி கஷ்டப்பட்டு இருப்பாள்.
இறந்தவர்களிடம் கொடுத்த வாக்கை காப்பற்ற இருப்பவர்களின்  வாழ்க்கையை சீரழித்து விட்டனே சந்திரசேகராவது தன் இரண்டாம் மனைவியோடு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டே அவன் சென்றான்.
ஆனால் மருமகள் புனிதா… வாழ வேண்டிய வயதில் ஒரு சன்னியாசி போல் தானே வாழ்ந்தாள். தன் மகள் அதுவே அவளுக்கு இருக்கும் ஒரே பிடிமானம்.
அவளின் அந்த பிடிமானமாவது அவளுக்கு மகிழ்சியை தரட்டும். புனிதாவை பிடிக்காத ஒருவனுக்கு வலுக்கட்டாயமாய் திருமணம் செய்து வைத்து விட்டு அவள் வாழ்க்கையை வீணடித்தது போதும்.
விருப்பம் இல்லாதவனை மணம் முடித்து நம் பேத்தி வாழ்க்கையையும் வீணடிக்க வேண்டாம் என்று கருதி…
“சரிப்பா உனக்கு விருப்பமான பெண்ணையே திருமணம் செய்து கொள்.” என்ற நாரயணன் வார்த்தையில்  புனிதாவை தவிர அனைவரும் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தனர்.
பவித்ரனின் தந்தை… “அப்பா…” என்று ஏதோ கூற வருவதை தடுத்தவராய்…
“உனக்கு உன்  மகனுக்கு இந்த பெண்ணை திருமணம் செய்ய  விருப்பம் இல்லை என்றால், ஒரு தந்தையாய் அதை நீ கூறலாம். உனக்கு அதற்க்கு உரிமை இருக்கு. ஆனால் இந்த பெண்ணை மறுக்க வேணி தான் காரணம் என்றால், அது வேண்டாம்.” என்று  கூறிக் கொண்டே தன் மகன் முகத்தை பார்த்தவர்.
“ஏன்னா இனி வேணிக்கு நான் வெளியில் தான் மாப்பிள்ளை தேட போறேன்.” என்று நாரயணன் சொன்னதும்… அடுத்து அங்கு எந்த பேச்சும் இல்லாது நிசப்தமாய் இருந்தது.
சிறிது நேரம் கழிந்து… “அப்பா இந்த பெண்.” என்ற தன் மகனின் பேச்சை தடுத்து நிறுத்தியவர்…
“தெரியும் ராஜசேகர் பெண். ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். நீ அந்த பெண்ணின் அப்பா அம்மாவை பார்க்காதே அந்த பெண்ணை பார். அந்த பெண்ணை உன் மகனுக்கு பிடித்து இருக்கா…. அந்த பெண்ணுக்கு உன் மகனை  பிடித்து இருக்கா…இதை மட்டும் பார். பிடித்தம் தான் வாழ்க்கை.” என்ற அந்த வார்த்தை சொல்லும் போது புனிதா வந்த அழுகையை அடக்கிக் கொண்ட வாறே தன் அறை நோக்கி சென்றார்.
“தாத்தா பிடித்தம் மட்டும் தானே வாழ்க்கை. உங்களுடைய இந்த எனக்கான  ஸ்டேட்மெண்ட் எப்போதும் மாறாதே…” என்ற தன் பேரனின் பேச்சில் வேறு ஒன்றும் ஏதோ பெரியதாய் இருக்கிறது என்று மனது நினைத்தாலும்…
உதடு தன்னால்… “மாறாது.” என்றது.
ஒரு வாரம் கடந்து விட்டது. பவித்ரன்  காயத்ரியை மணம் முடிக்க வீட்டில் அனுமதி கேட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலுமே, ராஜசேகருக்கு இதை நம்பலாமா….?வேண்டாமா….? என்பதில் சந்தேகமாய் இருந்தது.
ஒரு மனது இது கனவோ என்று நினைக்க, மறுகணமே தன் ஹாலை வலம் வந்தவர்…இங்கு தான் பெரியவர் அமர்ந்து இருந்தார்.
இதே இடத்தில் தான் என் நண்பனின் மகள் வேணி அமர்ந்து இருந்தாள். இங்கு இங்கு தான் மாப்பிள்ளை. என் மாப்பிள்ளை அமர்ந்து இருந்தார்.
ராஜசேகரின் மனது பவித்ரனை என் மாப்பிள்ளை என்று   நினைக்கும் போதே மனம் அப்படி பூரித்து போனது.
 பவித்ரனை முதன் முதலில்  பார்க்கும் போதே அப்படி பிடித்து போனதே அவருக்கு. இது போல் தனக்கு மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் ஆசை பட…
இவன்  போல் என்ன…? இவனே உன் மாப்பிள்ளை என்று வீடு தேடி சம்மந்தம் பேசும் போது கூட… ராஜசேகர்   உடனே ஒத்துக் கொள்ளவில்லை.
ராஜசேகருக்கு தான் பவித்ரனுக்கு  வேணியுடனான திருமண பேச்சு முன்னவே தெரியுமே…அந்த தயக்கத்தில் நாரயணனிடம்.. “அய்யா வேணிக்கு…” என்று ராஜசேகர் வேணியை பார்த்த வாறே தயங்கி கொண்டு கேட்டார்.
முதலில் தன்னால்  புனிதாவின் வாழ்க்கை கெட்டது  போதும். இப்போது தன் மகளாள் அவள் மகள் வாழ்க்கை கெட வேண்டுமா…? என்ற  தயக்கத்தில், தன் மகளை பவித்ரனுக்கு திருமணம் செய்ய மனது நிறைய ஆசை இருந்தாலும், தயங்கிய வாறு  ராஜசேகர் இழுத்து நிறுத்த.
“என்  பேத்திக்கு என்னவோய்…இளவரசி. ஒரு ராஜகுமாரன் தேடி வருவான்.” என்று  நாரயணன் சொன்னதும், காயத்ரி சட்டென்று வேணியை நிமிர்ந்து பார்த்தாள்.
வேணியின் முகத்திலோ ஒரு வித  பதட்டம் குடிக் கொள்ள, வரத வியர்வையை வந்தது போல் தன் கைக்குட்டையை கொண்டு அதை துடைத்து எடுத்தாள். இதை அனைத்தும் பாராதது போல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார் நாரயணன். ராஜசேகர் தன் மகள் திருமணம் கனவு இல்லை  உண்மை என்று புரிந்த போய் மகிச்ழ்ழியில் திளைத்தார்.
இந்த ஒரு வாரத்தில்  வேணி அந்த குழுமத்தின் தலமை செயலகத்துக்கு தினம் தோறும் செல்ல வேண்டிய வேலை இருந்தது. நாளை வேலை இல்லை. வேறு கிளைக்கு போகலாம்.  இல்லை வீட்டில் இருக்கலாம் என்று மாலை வேலை முடியும் போது வேணி இப்படி நினைத்து தான் வீட்டிற்க்கு கிளம்புவாள்.
ஆனால் மறு நாள் காலை அந்த தலமை செயலகத்தின் மேனஜர் சங்கரன் ஏதாவது வேலை என்று சொல்லி  தன் கைய்பேசிக்கு அழைத்து சொல்லி விடுவான். அதுவும் முதலில் சங்கரனிடம் இருந்து முதல் மெசஜ் தான் வரும். பின் தான் அழைப்பான்.
வேணி  அவனிடம்…  “ஏன் மெசஜ் அனுப்பிட்டு பேசுறிங்க…? நேரிடையா பேசவே அழைக்கலாமே…”  என்று கேட்டால்…
“நீங்க பிஸியா இருந்தா. அது தான்  மேடம் ப்ரியான்னு கேட்டுட்டு அப்புறம் பேச அழைக்கிறேன்.” என்று அவன் காரணம் சொன்னதும்… அவன் சொல்வதும் சரியே என்பது போல் வேணிக்கு தோன்ற..அதற்க்கு பின் இந்த ஒரு வாரமும்.
“மேடம் இன்னைக்கு இந்த வேலை இருக்கு.” என்று சங்கரன்  சொன்ன போது எல்லாம்…
“நேத்தே சொல்லி இருக்கலாமே சார்.” என்று  கேட்டால்…
ஒரு நாள் “இன்று காலையில் தான் இது முடிக்க வேண்டும் என்பதே எனக்கு தெரியும்.”என்பான்.
மறுநாளோ… “நானுமே இந்த பதவிக்கு புதுசு தான் மேடம்.” என்று சொன்னதும் அவளுக்குமே அந்த காரணம் ஏற்புடையதாய் தான் இருந்தது.
இந்த பவியும், இந்த வேலை சுமையிலும் அவளுமே கொஞ்சம் தடுமாறி தானே போகிறாள்.
அவள் அரசாங்க வேலைக்கு ஆசை பட காரணமே  பாதுகாப்பு, அலச்சல் கிடையாது. இப்படி நினைத்து தானே அவள் அரசாங்க  தேர்வை எழுதியதே…
இப்போது தனக்கே  தலமை பதவி எனும் போது அவள் மிகவும் தடுமாறி தான் போனாள். அதுவும் பவித்ரன் இல்லாது ஒரு கை உடைந்தது போல் ஆனது.
வேணி பவித்ரனை நினைத்த உடன் தன்னால் காயத்ரியின் நினைவும் வந்தது . அன்று திடிர் என்று பவித்ரன் காயத்ரியின் கை பிடித்து வீட்டுக்கு வந்தது. காயத்ரியுடனான தன் திருமணத்தை  பற்றி பவித்ரன் பேசியதை தன் அத்தையின் மூலம் கேள்வி பட்டதும் முதலில் வேணி அதிர்ந்து போனாள்.
பின் ஏதோ யோசித்தவளாய் விரு விரு என பவித்ரனின் அறைக்கு போனவள்… “நீ என்ன தியாகியா…? எதுக்கு இப்போ அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க நினைக்கிற…?” என்று எடுத்த உடன்  வேணி பவித்ரனை திட்ட…
“இரு இரு. இப்போ எதுக்கு இப்படி கத்துற…? நான் உன் பக்கத்தில் தானே இருக்கேன் பொறுமையா பேசு.” என பவித்ரன் வேணியை அமைதி படுத்தினான்.
அப்போது பவித்ரனின் அமைதி பேச்சு வார்த்தைகளை எல்லாம் கேட்கும் நிலையில் வேணி இல்லை. “நீ செஞ்ச காரியத்துக்கு என்னால எப்படி அமைதியா இருக்க முடியும்…?” என்று அவள் எகுற…
“இப்படி நீ குத்திக்கிற அளவுக்கு என்ன நடந்து போச்சு…?”
“இன்னும் என்னடா நடக்கனும்…? என்னால  அந்த காயத்ரி பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டு உன் வாழ்க்கையை வீணடிக்க பாக்குறியே…?” என்று கேட்டவள்.
“நான் இதுக்கு ஒத்துக்கவே  மாட்டேன். நான் இப்பவே தாத்தா கிட்ட போய் இந்த லூசு எனக்காக தான் அந்த பெண்ணை கட்டிக்கிறதா சொல்றான்.   என்று சொல்ல போறேன்.” என்று சொல்லி விட்டு அவன் அறையை விட்டு வெளியில் செல்ல பார்த்தவளின் கை பிடித்து தடுத்து  நிறுத்திய பவித்ரன்..
“இப்போ நீ தான் லூசு காரியம் பண்ன பாக்குற…ஏன்டி அவளை நான் கல்யாணம் செஞ்சா என் வாழ்க்கை பாழாகிடுமா…?” என்று கேட்டவன்…அவள் குழம்பிய முகத்தை பார்த்து…
“நிஜமா சொல்றேன். இதை நம்புவியான்னு எனக்கு தெரியல. காயூவை நான் மூனு வருடம் முன்னவே சென்னையில் பார்த்து இருக்கேன்.” என்று பவித்ரன்  சொன்னதும், வேணியின் குழம்பிய முகம் அதிர்ச்சிக்கு தாவியது.
“கல்யாணத்துல நான் தியாகம் எல்லாம் செய்யல.  நீ நினைக்கும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. என் வாழ்க்கை மகிழ்ச்சியா தான் இருக்கும். நீ உன் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யனும் என்று பாரு.” என்று சொன்னவன்…
“தாத்தா கிட்ட சீக்கிரம் உதயேந்திரனை  வந்து பேச சொல். உன்னுடைய ஜாதகத்தை தாத்தா ஜோசியர் கிட்ட காமிச்சிட்டு வந்து இருக்கார். இன்னும் மூனு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் முடிச்சிடனும் என்று அந்த ஜோசியர் சொல்லி அனுப்பி இருக்கார். இனி காலம் தாழ்த்தாதே….” என்று பவித்ரன் சொன்னதில் அவன் காயத்ரியை விரும்பியே திருமணம் செய்ய நினைக்கிறான் என்பதில் மகிழ்ந்தாலும்…
தன் திருமணத்தை நினைத்து அவளுக்கு கொஞ்சம்  அச்சம் ஏற்படவே செய்தது. அதுவும் பவித்ரன் சொன்ன உதயேந்திரனிடம் பெண் கேட்டு வர சொல். அவள் எப்படி சொல்வாள். எனக்கு அவனை பிடித்து இருக்கு. அதே போல் தான் அவனுக்கு தன்னை பிடித்தம் என்று  தெரியும்.
ஆனால் இப்படி “பெண் கேட்டு வா.” என்று சொல்லும் அளவுக்கு இன்னும் பழக வில்லையே….
உதயேந்திரனுக்கு ஆயிசு நூறு என்பது போல் அவனே அவளை கைய் பேசியில் அழைத்தான்.
“வேணி இன்னைக்கு ஆபிசுக்கு கிட்ட இருக்கும் காபி ஷாப்புக்கு வா.” என்று அவளிடம் சொல்லி விட்டு பேசியை அணைக்க பார்க்க…
“இல்ல இப்போ தான் சங்கரன் போன் செய்தார். ஏதோ முக்கிய வேலை சீக்கிரம் வாங்கன்னு.  ஈவினிங் வரட்டுமா…” என்று கேட்டவள்.
“நானும் உங்க கிட்ட முக்கியமான விசயம் பேசனும்.” என்று  தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள். தயக்கம் பார்த்தால் வேலைக்கு ஆகாது. தாத்தா எதாவது ஒரு இடத்தை கொண்டு வந்து தான் மறுப்பதை விட… உதயேந்திரன் வந்து பேசி விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொஞ்சம் கூச்சம் ஏற்பட்டாலும் தன்னை மணக்க கேட்கும் படி சொல்ல நினைத்தாள்.
உதயேந்திரன் வேணி சொன்ன பின் பாதியை விட்டு விட்டு அவள் சொன்ன மாலையில் பார்க்கிறேன் என்றதை மட்டும் பிடித்துக் கொண்டு…
“ஒழுங்கா ஆபிசுக்கு போகும் முன் வா…புரிதா. சீக்கிரம் வா.” என்ற சொல்லோடு அவன் பேச்சு வார்த்தையை முடித்துக் கொள்ள…
இவள் தான்  அவன் ஏன் கோபமாய் பேசினான் என்பதில் குழம்பி போய்  உதயேந்திரன் சொல் படி அவன் சொன்ன காபி ஷாப்பில் வந்து காத்திருந்தாள்.
அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காது வந்து சேர்ந்தவன்… அவள் கைய் பேசியை அவளிடம் கொடுத்து விட்டு தன்னதை வாங்கிக் கொண்டவன்…
போகும் போது… “இன்னைக்கு ஆபிசுக்கு நானும் வருவேன். வருவேன் அவ்வளவு தான். உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நீ தான் பேசனும். எப்போவும் பவித்ரனும் நானும் உன்னோடு இருக்க முடியாது. தெரியுதா…?” என்றதோடு அந்த  இடத்தை விட்டு அகன்று விட்டான்.
அடப்பாவீ என்பது போல்  அங்கு இவ்வளவு நேரம் அமர்ந்து விட்டு ஒன்றும் குடிக்காது வந்தால் நன்றாக இருக்காது என்று  காபியை பாதி குடித்து விட்டு வேணி தன் அலுவலகத்திற்க்கு நடையை கட்டினாள்.
 
 

Advertisement