Advertisement

அத்தியாயம் 19

அனைவரும் கிளம்பியதும் தனித்து விடப்பட்ட மது அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். வருண் கொடுத்த அந்த நெற்றி முத்தம் லேசான குறுகுறுப்பை ஏற்படுத்த என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன் என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் அதே இடத்தில்  அமர்ந்து விட்டிருந்தாள்.

அந்த நேரம் ராமைய்யா வந்தவர் அவளை சாப்பிட அழைக்க, என்ன முயன்றும் நேற்று அவன் ஊட்டிவிட்டதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இப்போது அவர் அழைக்கவும் தன் கையை பார்த்துக் கொண்டவள் எப்படி சாப்பிட போகிறேன் என்று நினைத்துக் கொண்டே அவருடன் செல்ல, அவரோ ஒரு வெண்கல கிண்ணத்தில் குட்டி குட்டியாக மினி இட்லிகளை நிறைத்து அதில் சாம்பார் விட்டு ஒரு ஸ்பூனும் போட்டு வைத்திருந்தார்.

அதே போலவே இன்னும் இரண்டு கிண்ணங்களில் ஒன்றில் மசாலா இட்லியும், ஒன்றில் பொடி இட்லியும் அடுக்கி வைத்திருக்க, இத்தனையும் எப்படி சாப்பிடுவது என்பது போல அவரை மது பார்க்க அவரோ

” உங்களுக்கு எப்படி சாப்பிட பிடிக்கும்னு தெரியாது இல்லையா மா. அதான் எல்லாமும் எடுத்து வச்சிருக்கேன். நீங்க உங்களுக்கு பிடிச்சதை சாப்பிடுங்கமா ” என்று கூற

அவரின் அன்பில் நெகிழ்ந்தாலும், வெளியே கட்டிக்க கொள்ளாமல் சாம்பார் சேர்ந்திருந்த இட்லியை அவள் உண்ண ஆரம்பிக்க, அருகில் இருந்து அவளை கவனித்தார் அந்த பெரியவர். அவள் அந்த இட்லி கிண்ணத்தை ஒரு வழியாக காலி செய்யவும், உள்ளே சென்றவர் ஒரு டம்ளர் ஜூஸை கொண்டு வந்து அவளிடம் நீட்ட மூச்சு முட்டியது அவளுக்கு.

” இல்ல. எனக்கு வேண்டாம், இதுக்கு மேல என்னால முடியாது ” என்றவள் எழுந்துவிட

” அம்மா, ஐயா தான் கொடுக்க சொன்னாங்கமா. நீங்க குடிக்கலைன்னா கோபப்படுவார் ” என்று கூறினார் அவர்.

மதுவோ ” உங்க ஐயா கோபப்பட்டா என்கிட்ட கேட்டுக்க சொன்னேன்னு சொல்லிடுங்க.” என்றவள் தோட்டத்திற்கு செல்லும் வழியில் நடக்க தொடங்கினாள்.

தோட்டத்திற்கு வந்தவள் வருணை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தாள். தன் உணவு விஷயத்தில் அவன் காட்டும் அக்கறை ஏனோ மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேற்றிலிருந்து அவன் தன்னை கவனித்துக் கொண்ட விதத்தில் எந்த குறையும் சொல்லமுடியாது தான். ஆனால் அதற்காக அவன் எனக்கு செய்தது எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா.

சொல்லப் போனால் இந்த காயமே அவனால் தான் என்று ஒருபுறம் தோன்ற, உன் கையை அவனா கிழித்துவிட்டான் என்று அவள் மனமே எதிர்கேள்வி கேட்டது அவளை. ஏன் அவன் கிழித்தால் தானா, அவன் என்னை நெருங்கியதால் தானே நான் இப்படி செய்ய வேண்டியதாகி போனது என்று அவளுக்கு அவளே கூறிக் கொண்டவள்  அவன் நல்லவன் இல்லை அம்மு, உன்னை எவ்ளோ டார்ச்சர் பண்ணான், ரெண்டு நாள் பார்த்துக்கிட்டா எல்லாம் மாறிடுமா. அவனை நம்பாத அம்மு என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

தன் அலுவலகத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த வருணும் அந்த நேரம் அவளைப்பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.சற்று முன்னர்தான் ராமைய்யா அழைத்து அவள் ஜூஸ் குடிக்காததை கூறியவர், மேலும் என்கிட்டே கேட்க சொல்லுங்க என்று அவள் கூறியதாகவும் சேர்த்து சொல்லி இருந்தார்.

அவள் வார்த்தைகளில் எப்போதும் போல் புன்னகைத்துக் கொண்டவன், ” இந்த வாய் தாண்டி உன்னையே சுத்த வைக்குது ” என்று சொல்லிக்கொள்ள அவன் இதழ்களில் ஒரு மந்தகாச புன்னகை குடி கொண்டது. நேற்று அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிட்டதால் இன்று ஏகப்பட்ட வேலைகள் அவனை சூழ்ந்துகொள்ள அதற்கு நடுவில் அவளை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.அப்போது ஏதோ போன் வரவும், சிந்தை கலைந்தவன் வேலையில் கவனமானான்.

வெண்ணிலாவும் அகிலும் அங்கிருந்து வெளியேறிய பின் வெண்ணிலாவை ஆசிரமத்தில் விட்ட அகில், அவள் காரிலிருந்து இறங்குவதற்கு முன் அவளை இறுக்கமாக ஒருமுறை அணைத்து பின் விடுவித்தவன் ” தேங்க்ஸ். தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் நிலா. இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு”என்று கூற

” என் அகி கிட்ட எனக்கு பிடிச்சது அவர் அம்முவை டீல் பண்ற அவரோட பொறுமை தான் அகில். அது இப்போ உங்ககிட்ட மிஸ்ஸிங். என்ன ஆச்சு அகி உங்களுக்கு”

” தெரியல நிலா. வீடு நல்லாவே இல்ல, அவ இல்லாம. காஞ்சிமா போன்ல அவ்ளோ அழுதாங்க. அப்டி என்ன இவளுக்குன்னு ஏதோ ஒரு கோபம். நேரா அவளை பார்க்க போய்ட்டேன்.அந்த நேரம் நான் பார்த்த விஷயங்களை வச்சு ஏதோ முடிவு பண்ணி என்னமோ பண்ணிட்டேன் நிலா” என்று அவன் வேதனைப்பட

” விடுங்க அகி. நம்ம அம்முப்பா அவ. உங்ககிட்ட பேசாம எல்லாம் அவளால இருக்கவே முடியாது. சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும். நீங்க உங்க காஞ்சிமாவை சரி பண்ணிட்டு ஊருக்கு கிளம்புங்க. நான் திரும்பவும் போய் அம்முவை பார்த்துக்கறேன். கவலைப்படாம இருங்க.” என்று அவனை அவள் தேற்ற, அவள் கையை பற்றிக் கொண்டவன் தன் கையோடு இணைத்து அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

” சீக்கிரமா என் வீட்டுக்கு வந்திரு நிலா. கூடவே இருக்கனுன்னு தோணுது. நான் அடுத்தமுறை வர்றப்போ உன்னை கூட்டிட்டு தான் போகணும் ” என்று கூற அவன் வார்த்தைகளில் சிரித்துக் கொண்டே தலை குனிந்தவளை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவளை விலக மனமே இல்லாமல் அங்கிருந்து விலகி சென்றான்.

அன்று நேரமே வெளியில் கிளம்பி இருந்த ரோஷ்ணி வருணின் அலுவலகம் இருந்தப்பக்கமே சுற்றிக் கொண்டிருந்தவள் அவன் அலுவலகம் வந்ததை குறித்துக் கொண்டாள். இதுவரை வருணுடன் எல்லை மீறி பழகி இருந்தாலும் அவன் வீட்டுக்கெல்லாம் சாதாரணமாக சென்றுவிட முடிந்ததில்லை அவளால். வருணாக அழைக்காமல் அவன் வீட்டுக்குள் யாராலும் சென்று விட முடியாது.

ஆனால் இப்போது ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இவள் மதுவை பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் கிளம்பிவிட்டிருக்க, வருண் வீட்டிலிருந்தால் தன் திட்டம் நிறைவேறாது என்று புரிந்துகொண்டவள் அவன் அலுவகத்தில் இருப்பதை கண்டுகொண்டு அதற்கு பிறகு வருணின் வீட்டை அடைந்திருந்தாள்.

இவள் கேட்டில் நின்று ஹார்ன் அடிக்கவும், இவள் காரை ஏற்கனவே இங்கு பார்த்திருந்ததால் கதவை திறந்துவிட்ட காவலாளி, அதோடு கூடவே வருணுக்கும் அழைத்து சொல்லி இருந்தான் அவள் வருகையை. அதைக்கேட்ட வருண் எதுக்கு இவ வந்திருக்கா என்று யோசித்தாலும் உடனே கிளம்பி இருந்தான் வீட்டிற்கு.

இங்கு வீட்டில் ரோஷ்ணி உள்ளே நுழைந்த நேரம் மது அந்த தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அந்த தோட்டக்காரரின் பேரனோடு ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.அந்த மூன்று வயது குழந்தை மதுவின் கைப்பிடியில் நின்று கொண்டிருந்தவன் அவளின் கேள்விகளுக்கு நெளிந்து கொண்டே பதில் கூற நல்ல கண்ணில் பார்த்தால் கவிதையாக தோன்றும் அந்த காட்சி.

ஆனால் ரோஷ்ணியின் பணத்திமிர் மிகுந்த கண்களுக்கு அந்த குழந்தை அணிந்திருந்த லேசான கிழிந்த உடையும், அவன் தோற்றமும் ஏளனத்தை கொடுக்க அதை பார்வையிலும் வெளிப்படுத்தியவாறே வந்து மதுவின் அருகில் நின்றாள் அவள். அவளைக் கண்ட மதுவுக்கு அவள் யாரென்று தெரியாமல் போக கேள்வியாக அவளை பார்த்தவள் கையை விடவும் அந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட

ரோஷ்ணி மதுவை பார்த்தவள் ” நீ தான் மதுமித்ரா. வருணோட புதுப்பொண்டாட்டி ரைட்” என்று கேட்க

அவள் கேள்வியும், அதை அவள் கேட்ட விதமும்,அவள் பார்வையும் மதுவுக்கு நிச்சயம் அவள் மீது ஒரு நல்ல எண்ணத்தை கொடுக்கவில்லை மதுவுக்கு. அவள் ஒருமையில் அழைத்ததும் உறுத்தவே

” இதுக்குமுன்னாடி நான் உன்னை பார்த்திருக்கேனா ” என்று பதிலுக்கு அவளிடம் கேட்க

அவள் அப்போதும் ஏளனம் குறையாமல் ” நெவர் ” என்று கூற

” அப்புறம். முதல் முறையா பார்க்கிற ஒருத்தர்கிட்ட எப்படி பேசணும்ங்கிற பேசிக் மானேர்ஸ் கூட தெரியாதா. நீ ன்னு சொல்ற ” என்று கேட்க

” ஓஹ் உனக்கு மரியாதை வேற கொடுக்கணுமா. உனக்கு வேணும்ன்னா நான் யாருன்னு தெரியாம இருக்கலாம். ஆனா வருணுக்கு என்னை நல்லாவே தெரியும். எந்த அளவுக்குன்னா…. ” என்று இழுத்தவள் வார்த்தையை நிரப்பாமல் மதுவை பார்க்க

அவள் வந்தவளின் ராகத்தை புரிந்து கொண்டாலும் முகத்தில் ஒன்றையும் கட்டிக்க கொள்ளாமல் ” இப்போ என்ன சொல்ல வர. வருணுக்கு உன்னை நல்லா தெரியும்ன்னா அப்போ அவனை போய் பாரு. என்கிட்ட ஏன் பேசிட்டு இருக்க ” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற

அவளின் இந்த வார்த்தைகளில் ரோஷ்ணிக்கு கோபம் வரவும் ” ஏய். உனக்கு எவ்ளோ தைரியம் இந்த ரோஷ்ணிகிட்டயே இப்படி பேசுவியா நீ “

” ரோஷ்ணிக்கு என்ன ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு. யாரா இருந்தாலும் இப்படிதான் பேசுவேன். நீ மரியாதை கொடுத்தா தான் திரும்பஅது உனக்கு கிடைக்கும். இல்ல ….”

” நான் நெனைச்சா இப்போவே உன்னை இந்த வீட்டை விட்டு துரத்த முடியும் தெரியுமா ” என்று ரோஷ்ணி நக்கலாக வினவ

” தாராளமா ரோஷ்ணி. நீ வேணும்ன்னா ட்ரை பண்ணி பாரேன். வருண் சொன்னா உடனே கிளம்பிடறேன். ஐ ப்ரோமிஸ்” என்று மது கூற

” என்னடி வருணை கைக்குள்ள போட்டுக்கிட்ட கொழுப்பா ” என்று ரோஷ்ணி அநாகரிகமாக பேச

தங்கள் நிலையை நினைத்த மதுவிற்கு சிரிப்பு வரவும் சத்தமாக சிரித்தவள் அவளை வெறுப்பேற்றும் நோக்கில் ” ஏன் உன்னால முடியலைன்னு வருத்தமா இருக்கா ரோஷ்ணி.” என்று மெதுவாக கேட்டவள் கூடவே ” அதோட அவன் என் புருஷன் தானே. நான் கைக்குள்ள போட்டுக்கிட்டா என்ன தப்பு ” என்று கைகளை கட்டிக்கொண்டு கேட்க

எப்படியாவது அவளை காயப்படுத்தி விடும் நோக்கில் ” வருண் ஒருத்தியோட திருப்தி ஆகற டைப் கிடையாது மதுமித்ரா. இப்போ உங்கிட்ட மயங்கி இருக்கலாம். ஆனா நிச்சயம் அவன் வேற தேடி போயிடுவான்.இது அவன் குடும்பத்துக்கு புதுசும் இல்ல ” என்று அவள் குரூரமாக கூற

மதுவோ ” அவன் புதுசு வேணும்ன்னு நினைக்கிறப்போ நிச்சயமா உன் பேரை கன்சிடர் பண்ண சொல்றேன் ரோஷ்ணி. நிச்சயமா உனக்கு செகண்ட் சான்ஸ் கிடைக்கும்” என்று கூறவும், ரோஷ்ணி கொதித்தவள் “ஏய் ” என்று கையை ஒங்க, மதுவும் அவள் கையை திருப்பி ஒன்று வைக்கும் வேகத்தில் தான் இருந்தாள்.

ஆனால் பின்னால் இருந்து “ரோஷ்ணி ” என்ற குரல் அழுத்தமாக உரைக்க, அவள் உயர்த்திய கை அந்தரத்திலேயே நிற்க, உறைந்து நின்றாள் அவள்.  திரும்பி பார்க்காமலே அது வருண் என்பதை உணர்ந்த ரோஷ்ணிக்கு சகலமும் ஆடியது. அவள் உடன் இணக்கமாக இருக்கும்போதே இதுபோன்ற அதிக பிரசங்கி தனங்களை வருண் பொறுத்துக் கொள்ளமாட்டான் எனும்போது இப்போது அவன் இல்லாத சமயம் அவன் மனைவியிடம் தான் இப்படி நடந்திருக்க நிச்சயம் சாதாரணமாக இதை அவன் விடமாட்டான் என்பதை உணர்ந்தவள் பயத்துடன் திரும்பினாள்.

வருண் அவளை பார்த்த பார்வையே அவளை நடுங்க செய்ய, வருண் அவளிடம் எதுவும் பேசாமல் தன் மொபைலை எடுத்தவன் ” கிஷோர் ஆர் ஆர் குரூப் நம்ம கூட அவங்க பிசினெஸ முடிச்சிக்க போறாங்க. அவங்களுக்கு செட்டில் பண்ண போறோம். பேப்பர்ஸ் ரெடி பண்ணி கொண்டு வா. நான் இப்போவே சைன் பண்றேன் ” என்று போனை அணைத்துவைக்க

ரோஷ்ணிக்கு வார்த்தையே வரவில்லை. முயன்று அவனை அழைத்தவள் “வருண் நான் இங்க ” என்று ஏதோ சொல்ல வர அவளை கைகாட்டி நிறுத்தியவன் ” நீ கிளம்பலாம் ரோஷ்ணி. இனி ஒருமுறை இந்த வீட்டுக்கு வரணும்ன்னு நீ யோசிக்க கூட கூடாது ” என்றவன் அவளை மேற்பார்வை பார்க்க அந்த பார்வையின் வீரியத்தை தாங்கி கொள்ள முடியாதவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றதும் மதுவின் அருகில் சென்றவன் ” மது ஆம் சாரி. அவ இங்க வருவான்னு நான் எஸ்பெக்ட் பண்ணல. நீ நீ அவளை ஒரு ஆளுன்னு அவளை மதிக்காத ” என்று தடுமாற

வருண் ரோஷ்ணியிடம் செய்தது போலவே கைகாட்டி அவனை நிறுத்தியவள் ” ஒரு விஷயம் சொல்லட்டுமா.” என்று நிறுத்தியவள் வருணின் முகத்திற்கு நேராக தன் சுட்டு விரலை நீட்டி ஒரு வட்டமடித்து ” இந்த வருண் ங்கிற ஒருத்தன் இல்லனா இது போல கேவலங்களை எல்லாம் நான் பார்க்க வேண்டிய நிலைமையே வந்திருக்காது. சோ நீ அவ பேசினதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் வருண் ” என்று நிறுத்தி நிதானமாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவள் வார்த்தைகளில் அடிவாங்கியவனோ ரோஷ்ணியை விட அதிகமாக அதிர்ந்து நின்றான். ஜான் ஏறினால் முழம் சறுக்கும் தன் நிலை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு. கடவுள் நம்பிக்கையே இல்லாதவன் இதழ்கள் முதல் முறையாக கடவுளே என்று முணுமுணுத்தது.

ஆனால் இந்த நிலையிலும் மது கூறிய “அவன் என் புருஷன் தானே ” என்ற வார்த்தைகள் காதில் ஒலிக்க,மேலும் அவள் சொன்ன ” கைக்குள்ள போட்டுக்கிட்டா என்ன தப்பு ” என்றதும் சேர்ந்துகொள்ள இது மட்டும் நடந்தால் எப்படி இருக்கும் என்று கனவில் மிதக்கவே தொடங்கிவிட்டான் அவன்.

ஆனால் நிஜத்தில் அடுத்தவேளை உணவுக்கே அக்கப்போரை ஆரம்பித்துவிட்டாள் அவன் மனைவி.

Advertisement