Advertisement

அத்தியாயம் – 9

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் அவள். “சரி, நாளைக்கு நான் போய் விண்ணப்பபடிவம் வாங்கிட்டு வர்றேன்” என்றான். “இல்லை அது வந்து நானே வாங்கி வைச்சுட்டேன்” என்று கூறி படிவத்தை அவன் முன் நீட்டினாள். “அதான் நீயே எல்லாம் செஞ்சுட்டியே, எதுக்கு வந்து என்கிட்ட சொல்ற” என்றவனுக்குள் சுறுசுறுவென்று கோபம் வந்தது.

 

“இல்லைங்க, நீங்க வேலை வேலைன்னு பிஸியா இருக்கீங்க, அதான் தம்பிகிட்ட சொல்லி வாங்கிட்டு வரச் சொன்னேன். அத்தை மாமா கூட இந்த ஸ்கூல் நல்லா இருக்கும் சொன்னாங்க” என்றாள் அவள்.

 

“அப்போ என்னைவிட எங்க வீட்டில இருக்கற எல்லாருக்கும் நீ முக்கியம் ஆகிட்ட, உனக்கும் அவங்க தான் முக்கியம் ஆகிட்டாங்க. நான் தான் உங்களுக்கு தேவையில்லாதவனா போயிட்டேன். அப்படிதானே, என்னை ஒருவார்த்தை கேட்கணும்னு உனக்கு தோணவே இல்லையா. இந்த குழந்தைகளுக்கு நான் தானே தகப்பன். எனக்கில்லாத உரிமை உனக்கு எங்கு வந்தது” என்று அள்ளமுடியாத வார்த்தைகளை கோபத்தில் சிதறவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவன், அவனே சாப்பாட்டை எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட்டு வந்து கதவை அடைத்துவிட்டு படுத்துக் கொண்டான். கட்டிலில் வந்து படுத்தவன் அசையாது படுத்திருந்த அவளைக் கண்டு‘புருஷன் வீட்டுக்கு வருவானே, அவனை பார்ப்போமேன்னு இல்லாம நல்லா எப்படி தான் இவளுக்கு தூக்கம் வருதோ’ என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.

 

காலையில் அவன் பேசி அனைத்தும் மறந்து அவன் இப்படி எண்ணிக் கொண்டிருக்க அவன் கையை சுரண்டுவது போல் இருக்க யாரென்று பார்த்தால், கவினி தான் அவனை சுரண்டிக் கொண்டிருந்தாள். குழந்தை எழுந்து அவன் காதில், “அப்பா, அம்மா பாவம் காலையில இருந்து அழுதுட்டே இருக்கு. புவாகூட சாப்பிடலை, எங்கள மட்டும் சாப்பிட வைச்சுட்டா” என்று தெளிவாக பேசிய குழந்தையை அவன் அணைத்துக் கொண்டான்.

 

“சரி நீ தூங்கு, நான் பார்த்துக்கறேன்” என்று அவளை அவன் அருகில் படுக்க வைத்துவிட்டு அவள் உறங்கியதும் எழுந்து உட்கார்ந்தான். காலையில் நடந்த விஷயங்களை எண்ணிப் பார்த்தான், அவன் தேவையில்லாமல் வார்த்தையை விட்டது ஞாபகம் வர அவனுக்கு அய்யோ என்றிருந்தது. அவளை எப்படி சமாதானப் படுத்தப் போகிறேன்.

 

“ஆதிரா” என்று அவன் அழைக்க அவளிடத்தில் எந்த சலனமும் இல்லை. அவன் மீண்டும் மீண்டும் அழைக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஏதோ சரியில்லை தோன்ற, அவளருகே சென்று அவளை தட்டி எழுப்ப அழுது சிவந்திருந்த அவள் முகம் கண்ணில் பட்டது. ‘ச்சே நான் ஒரு முட்டாள் அவளை நான் இப்படி பேசி இருக்கக் கூடாது, பாவம் அதை தாங்காமல் தான் இவள் அழுதிருக்கிறாள். இனி இவள் மனம் புண்படும்படி பேசவே கூடாது, என்று முடிவெடுத்தான்.

 

‘ஏற்கனவே சாப்பிடாமல் வேறு இருக்கிறாள், அழுது சோர்ந்தவள் ஒருவேளை மயக்கமுற்றிருப்பாளோ என்று எண்ணி அவள் முகத்தில் நீரை அடிக்க அவள் லேசாக கண் திறந்து பின் மூடிக்கொண்டாள். விரைந்து சமையலறைக்குள் சென்று ஒரு தட்டில் சாப்பாடு போட்டு குழம்பை ஊற்றி பிசைந்து எடுத்துக்கொண்டு அவள் அருகில் வந்து உட்கார்ந்தான்.

 

அவளை தூக்கி உட்காரவைத்து அவன் தோள் மீது சாய்த்துக் கொண்டான். அவள் கன்னத்தை தட்டி எழுப்பி அவள் வாயை திறக்கச் செய்து அவளை உணவருந்தச் செய்தான். அவளுக்கு கொஞ்சம் உணவு உள்ளே சென்றபின்னே தான் ஓரளவு சுயநினைவு வந்தது, அவள் வாயை துடைத்துவிட்டு தலையணையை அவளுக்கு அணைவாகக் கொடுத்து அவளை சாய்ந்து அமரச் செய்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்தான்.

 

குளிர்சாதனப்பெட்டியில் இருந்து பாலை எடுத்து சூடு பண்ணியவன், அதை கொண்டு வந்து அவளுக்கு புகட்டினான். அவன் தோள் மேலேயே அவளை சாய்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான். அப்போது தான் அவளுக்கு சுயஉணர்வு நன்றாக திரும்பியது, அவன் மேல் சாய்ந்திருக்கிறோம் என்பது அவளுக்கு உவப்பானதாக இருந்தது. “ஆரா இப்போ உனக்கு பரவாயில்லையா” என்றான் அவன். அவனின் செல்ல அழைப்பில் அவள் உடல் சிலிர்த்து போக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“ஏன் ஆரா இப்படி செஞ்ச, நான் பேசினது தப்பு தான் அதுக்காக நீ உன்னை வாட்டிக்கலாமா” என்றான் அவன். அவள் தலை குனிந்துக் கொள்ள அவள் தாடையை தொட்டு அவன் நிமிர்த்த அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

 

“என்ன ஆரா, ஏன் இப்படி அழற. தப்பு தான் நான் பேசியது தப்பு தான்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நீங்க ஏன் அப்படி சொன்னீங்க, இவங்க என்னோட பிள்ளைங்க, நான் இவங்களுக்கு அம்மாங்கறதை நீங்க என்னைக்கு புரிஞ்சுப்பீங்க. அன்னைக்கும் இப்படி தான் ஒரு வார்த்தையை விட்டீங்க, நான் இவங்களை பார்த்துக்கற வேலை பார்க்கறதா, நான் அப்படி நினைக்கலைங்க.

 

“இவங்க தான் எனக்கு உயிர், இனி ஒரு தரம் நீங்க நான் இவங்களுக்கு யாரோன்னு பேசினா நிச்சயமா இந்த உயிர் உடம்புல தங்காதுங்க. என்னால தாங்க முடியாது. நான் ரொம்பவும் உடைஞ்சு போயிட்டேன். நான் உங்ககிட்ட கேட்காதது தப்பு தான். ஆனா இனி ஒரு தரம் இப்படி நீங்க சொல்லாதீங்க” என்று கதறியவளை இழுத்து தன்னையறியாமலே அணைத்து ஆறுதல் படுத்தினான். “ஆரா நிச்சயாம சொல்லறேன், உன் மனசு புண்படும்படி நான் எப்போதும் பேசவே மாட்டேன், நடந்து கொள்ளவும் மாட்டேன். போதுமா, நீ சாப்பிடாமல் மட்டும் இருக்காதே” என்றான் அவன்.

 

 “இம்… சரிங்க” என்று தலையாட்டியவளை “சரி நீ தூங்கு” என்று கூறி அவன் அணைப்பிலேயே வைத்திருந்தான். அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருக கண்மூடி உறங்க ஆரம்பித்தவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை படுக்கவைத்து விட்டு எழுந்தான் அவன்.

 

அவனுக்குள் பலவித உணர்வுகளின் கலவை ஓடிக் கொண்டிருந்தது. அவனால் நிம்மதியாக சுவாசிக்க கூட முடியவில்லை, ஹரிணி, ஆதிரா என்று இரண்டு பெண்கள் அவன் வாழ்வில் வந்ததை எண்ணி பலவாறாக குழம்பிப் போனான் அவன்.

 

எவ்வளவு யோசித்தும் அவனால் தெளிவாக ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அந்த குழப்பத்தின் விளைவாக ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது அது அவன் ஆதிராவை விரும்புவது, கதிரிடம் காதல் என்றால் என்ன என்று கேட்ட ஆதி இன்று ஆதிராவை காதலிக்கிறான். இது எப்படி சாத்தியம் ச்சே இது காதல் எல்லாம் இல்லை என்று அவன் மனம் மீண்டும் முரண்டு பிடித்தது. அவனுக்கே அது அதிகப்படியாக தோன்றியது.

 

தூக்கம் வாராமல் புரண்டவன் வெளியில் எழுந்துச் சென்று டிவியை ஆன் செய்து பார்த்தான். அவன் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற பாடல் ஒன்று அதில் ஒலித்தது

 

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்

தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்…

 

எப்படி இது என் எண்ணம் போலவே பாடல் ஒலிக்கிறது. அவள் கண்கள் பார்த்தால் அவன் பேச்சிழந்து போவதை எண்ணினான். அன்று வயலில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவள் அவனை முறைத்து பார்த்தது அவன் கண் முன் நிழலாடியது. ச்சே என்று எண்ணியவாறே வேறு சேனலை மாற்றினான். அதில் ஒரு பழைய காதல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

இன்பமேஉந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி...

 

என்ன இது மனிதனை கொல்வது போலவே பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இரவில் இப்படிதான் காதல் பாடலாக போட்டு கொள்வான் போலிருக்கிறது என்று நினைத்தவாறே வேறு ஒரு சேனலை மாற்றினான். அவன் மனமாற்றத்தை சித்தரிக்கும் பாடலாக காக்க காக்க திரைப்படத்தில் இருந்து ஓடியது அந்த பாடல்…

 

சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே

என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே

அந்த பாடலில் ஆண் பாடும் வரிகள் அவனுக்காகவே எழுதியது போல் இருந்தது அவனுக்கு, அந்த வரிகளை அவன் மிகவும் ரசித்தான்.


வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை
இன்றுமட்டும் கொஞ்சம் நின்று
ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை

அடுத்து வந்த இந்த வரியும் அவன் மனதில் பதிந்து போனது.


அருகினில் அமர்ந்தென்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன

அவன் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை, டிவி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க, அதிகாலையில் கண் விழித்தாள் ஆதிரா. என்ன இது டிவி ஓடும் சத்தம் கேட்கிறது என்று எழுந்து உட்கார்ந்தவள் அருகில் திரும்பி பார்க்க அவன் படுக்குமிடம் காலியாக இருந்தது.

 

இரவில் நடந்த நிகழ்வுகள் அவள் எண்ணத்தில் வந்து அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எழுந்து சென்று வெளியில் பார்த்தவள் அவன் ஹால் சோபாவில் முறுக்கிக் கொண்டு படுத்திருப்பதை பார்த்தாள். ரிமோட் கொண்டு டிவியை அணைத்தவள், அவனை எழுப்பினாள்.

 

“என்ன ஆரா” என்றான் தூக்கக் கலக்கத்துடன் அவனின் செல்ல அழைப்பில் அவள் உள்ளம் துள்ள அவனருகில் வந்தவள் அவனை உசுப்பினாள். “இங்கயே படுத்துட்டீங்க, உள்ள போய் படுத்துக்கோங்க, நான் உங்களை அப்புறமா எழுப்பறேன்” என்றாள் அவள். இம்மென்றவாறே தூக்கக் கலக்கத்தில் தடுமாறிக் கொண்டே எழுந்து சென்று உள்ளே படுத்தான். அவளுக்கு எப்போதும் அதிகாலையில் எழுந்தே பழக்கம், அவள் தந்தையுடம் சிறு வயதில் நேரமாக எழுந்து வயலுக்கு செல்லுவாள்.

 

அந்த பழக்கம் அவள் சென்னை வந்தும் விடவில்லை. அவனின் மனமாற்றம் அவளுக்கு சந்தோசத்தை தர அவனுக்காக பார்த்து பார்த்து காலை உணவை சமைக்க ஆரம்பித்தாள், அவள் மாமியாரிடம் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று முதலிலேயே அறிந்திருந்தவள், அவனுக்கு பிடித்த வெல்லப் பாயாசம் செய்தாள்.

 

நேரம் ஏழு மணியை நெருங்க அவனை எழுப்பவென அவர்கள் அறைக்கு வந்தாள். இதுவரை அவள் எழுப்பியது இல்லை, எப்போதும் குழந்தைகளை முன்னிறுத்தியே எழுப்பியவள் அன்று காலை அவனை உள்ளே படுக்க சொல்லும் போதுகூட வாய் விட்டு கூப்பிட அவன் எழுந்து உள்ளே சென்றான்.

 

இப்போது அவனை எப்படி அழைப்பது என்று அவள் குரல் கொடுத்து எழுப்ப அவன் செவிகளை அந்த குரல் தீண்டாமல் போக, அவனை தொட்டு எழுப்பினாள், மெதுவாக கண் விழித்து பார்த்தவனின் எதிரில் குளித்து முடித்து கூந்தல் முன்னே விழ அதன் நுனியில் அவள் போட்டிருந்த முடிச்சில் இருந்து நீர் சொட்டு சொட்டுடாக விழுந்து அவன் கைகளில் பட்டு தெறிக்க, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவள் உடுத்தி இருந்த மஞ்சள் வண்ணத்தில் லேசாக பச்சை வண்ண ஜரிகை இழையோட அவள் அணிந்திருந்த அந்த புடவை அவள் அழகை எடுத்துக் காட்ட அவன் கண்கள் அவள் கண்களில் நின்றது, ஆம் அவள் கண்களில் அவள் மையிட்டிருந்தாள்.

 

ஆதியை பற்றி கேட்கவும்  வேண்டுமா, தன்னிலை இழந்து அவள் விழிகளில் உறைந்தான். “என்னங்க, என்னாச்சு” என்று பதறியவள் அவனை மீண்டும் உலுக்க தன்னிலை பெற்றவன் “இல்லை, ஒண்ணுமில்லை” என்று கூறிவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு விரைந்தான். ச்சே இனிமே இவளை பார்க்கவே கூடாது, இவளை யாரு மை போட்டுட்டு வந்து என் முன்னாடி நிக்கச் சொன்னது.

 

மை விழி மோகினி என்று அவளை மனதுக்குள் வைதான். நேற்று டிவியில் பார்த்த நகைச்சுவை சேனலில் ஒருவர் ஒரு பெண்ணை காந்தக்கண்ணழகி என்பார், சம்மந்தமேயில்லாமல் அந்த நினைவு வந்து தொலைத்தது. இவள் காந்தக்கண்ணழகியா இல்லை மை விழி மோகினியா என்று அவன் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

 

அவன் தயாராகி வெளியே வர குழந்தைகள் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தனர், ‘என்ன இது எப்போதும் இந்நேரம் எழுந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள், இன்று இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான். “டிபன் வைக்கட்டும்மா” என்று அவள் கேட்க தன்னையறியாமலே அவன் தலையாட்ட அவள் டிபன் எடுத்து வைத்தாள். அவள் பரிமாறியது அவனுக்குள் ஏதேதோ செய்ய வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது, அவனுக்கு ஹரிணியின் நினைப்பு அந்த நேரத்தில் வந்துவிட்டது.

 

“நீ போ நானே போட்டுக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவனே சாப்பிட்டான், அவன் சாப்பிட்டு எழுந்திருக்கும் தருவாயில் அவள் சூடாக வெல்லப் பாயாசம் கொண்டு வந்து தர அவனுக்கு ஹரிணியை பற்றி எண்ணங்களில் “எனக்கு பாயாசம் வேண்டாம், சாரி” என்று எழுந்து கைகழுவ சென்றான். அவளும் இப்படித்தான் அவனுக்கு பிடித்த அந்த பாயாசத்தை அடிக்கடி செய்வாள்.

 

பாவம் ஆதிரா அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது, அவள் யோசித்து பார்த்த போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, ஹரிணி அவனுக்கு பிடிக்குமென்று வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பாயாசம் செய்துத் தருவாள் என்று அவளின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது, ஒருவேளை நாம் அவருக்கு ஹரிணியை பற்றி நினைவு படுத்தி விட்டோமோ என்று வருந்தினாள் அவள்.

 

ஆதிரா அவனின் ஆரா என்ற அழைப்புக்காய் காத்திருந்தாள், இரு வேறு மன நிலையில் இருந்தவன் ஒரு சிறு தலையசைப்புடன் அவளிடம் விடை பெற்று சென்றுவிட்டான். அதன் பின் குழந்தைகளை எழுப்பி குளிக்க வைத்து அவர்களுக்கு காலை உணவளித்து அவளும் உண்டு முடித்த போது அவள் கைபேசி சிணுங்கியது.

 

அழைத்தது நேத்ரா “சொல்லுடி, எப்போ வர்ற, நான் வீட்டில தான் இருக்கேன், இல்லை குழந்தைங்க இருக்காங்க, நான் அவங்களை தனியா விட்டு வரமுடியாது. நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.

 

“அம்மா யாரு வர்றாங்க” என்றாள் விவரமான கவினி. “அம்மாவோட தோழி நேத்ரா சித்தி வர்றாங்க” என்றாள் அவள். “நீ போய் விளையாடு” என்று குழந்தையை அவள் அனுப்பி வைக்க, சிறுது நேரத்தில் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வாசலுக்கு விரைந்து சென்று கதவை திறக்க நேத்ரா நின்றிருந்தாள்.

 

“வாடி நேத்ரா, இப்போ தான் உனக்கு என் வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா. வா வா உட்கார்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு தம்ளரில் அவளுக்கு பாயாசம் எடுத்து வந்து கொடுத்தாள். “சாப்பிடு நானே செஞ்சது” என்றாள் அவள்.

 

“உன்னவருக்கு கொடுத்தியா” என்றாள் அவள். “அவர் வேணாம் சொல்லிட்டார், சரி நீ அதை விடு. நீ ஏதோ என்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் சொன்னீயே. என்ன அது” என்றாள் அவள். “அது அது எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை” என்றவளை வினோதமாகப் பார்த்தாள் ஆதிரா, “நீயாடி இப்படி சொல்லற, படபடன்னு பொரிஞ்சு தள்ளுறவ இப்படி பேசறது ஆச்சரியாம இருக்கு. அப்படி என்னடி விஷயம், சொல்லுடி என்கிட்ட தயங்காதே” என்றாள் அவள்.

 

“எல்லாம் ஆதுவை பத்தி தான்” என்றாள் அவள். “ஆதுவா, யாருடி அது ஆது” என்றாள் அவள் விளங்காதவளாக, “சின்னத்தானை சொன்னேன்” என்றாள் அவள். “அவரை பற்றி இப்போ என்ன” என்று யோசித்தவள் “நீ அவரை” என்று இழுத்தாள். “அப்படிலாம் ஒண்ணுமில்லை” என்றாள் நேத்ரா, “அப்போ என்ன தான்டி நீ சொல்ல வந்தது” என்றாள் ஆதிரா. “ஆது என்கிட்ட பேசமாட்டேங்கறார்டி, என்னை பார்த்து மூஞ்சியை திருப்பிட்டு போறார். எனக்கு கஷ்டமா இருக்கு, நான் என்ன தப்பு செஞ்சேன்” என்றாள் அவள்.

 

“என்ன தான் உன் பிரச்சனை இப்படி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நீ பேசுவது எனக்கு விளங்கவில்லை. என்ன நடந்துச்சு அவர் ஏன் உன்கிட்ட பேசமாட்டேங்குறார், முதல்ல அதை சொல்லு” என்றாள் ஆதிரா.

 

“எங்க பார்வதி அத்தை ஒரு இரண்டு வருஷம் முன்ன ஆதுக்காக என்னை பொண்ணு கேட்டுருக்காங்க எங்க வீட்டில, அப்போ எங்க வீட்டில அவருக்கு நிலையான வருமானம் இல்லைன்னு சொல்லி மறுத்துட்டாங்க. இந்த விஷயமே எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி கீர்த்தி மூலமா தான் தெரியும். ஒரு வேளை அதை மனசுல வைச்சுட்டு தான் என்கிட்ட சரியா பேசமாட்டேங்குறார்ன்னு எனக்கு கவலையா இருக்கு” என்றாள் அவள்.

 

“கள்ளி பொய்யா சொல்லற, அவர் உன்கிட்ட பேசலனா உனக்கு என்னடி வந்தது, அதான் உங்க வீட்டில வேணாம் சொல்லிட்டாங்களே அப்புறம் நீ எதுக்கு பீல் பண்ற” என்றாள் அவள். “அதுவந்து எனக்கு தெரியலைடி, அன்னைக்கு நான் வீட்டுக்கு வந்தப்ப அவர் முகத்தை திருப்பிட்டு போய்ட்டார். என்னால தாங்கவே முடியலை நான் அவர் பார்க்கறத்துக்காகவும் தான் அன்னைக்கு வந்திருந்தேன். அவரை நான் விரும்புறனான்னு நீ கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்லைடி” என்றாள் அவள்.

 

“லூசு லூசு விரும்பாமலா அவரை பார்க்கறத்துக்காக வந்தேன் சொன்னே, உன் மனசுக்குள்ள அவர் தான் இருக்கார். இதுகூடவா உனக்கு புரியலை சரியான லூசுடி நீ. நீ விரும்பாமலா இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்து இந்த விஷயத்தை பத்தி சொல்லற” என்றாள் ஆதிரா.

 

நேத்ரா முகத்தில் டன்டன்னாக அசடு வழிந்தது. “எதாச்சும் செய்டி, முன்னலாம் அவர் என்கிட்ட எப்படி பேசுவார் தெரியுமா, கலகலப்பான ஆளுடி அவரு, இப்போ என்னை பார்த்தாலே காத தூரம் போறார்டி. உன் ஆளு போலவே என் ஆளும் இப்ப முறைக்க ஆரம்பிச்சுட்டார். இதைத்தான் முறை மாமான்னு சொல்றாங்களோ” என்றாள் அவள். “ஹேய் எதுக்குடி அவரை இழுக்குற, பேசாம இருக்க மாட்டியோ” என்றாள் ஆதிரா.

“சரி விடு ஆதி நீ நம்ம விஷயத்தை கொஞ்சம் கவனி. எனக்கு அவர்கிட்ட பேசணும்டி” என்றாள் நேத்ரா. “ஹேய் என்னை அப்படி கூப்பிடாதடி” என்றாள் அவள். “ஏன் என்னவாம், நான் எப்பவும் உன்னை ஆதின்னு தானே கூப்பிடுறேன்” என்றாள் அவள்.

 

“ஹேய் அவரை எல்லாரும் அப்படி தான் கூப்பிடுறாங்க, நீ என்னை அப்படி கூப்பிடறது அவரை கூப்பிடுற மாதிரியே இருக்கு. ப்ளீஸ்டி புரிஞ்சுக்கோ” என்றவளை “சரி சரி விடு, நீ ஆதுகிட்ட பேசுடி” என்றாள். “நான் எப்படி தம்பிகிட்ட இதை பத்தி பேசமுடியும். அய்யோ என்னால முடியாதுப்பா” என்றாள் ஆதிரா.

 

நேத்ராவுக்கு அழுகை வரும் போல் இருந்தது அவள் அப்படிக் கூறியது “ஹேய் சும்மா சொன்னேன்டி, அதுக்கு முன்ன எனக்கு சில வேலைகள் இருக்கு. நீ கவலைப்படாதே, தம்பி கூடிய சீக்கிரமே உன்கிட்ட பேசுவாங்க. சரியா, இப்போ கொஞ்சன் சிரியேன்” என்றாள் ஆதிரா. அவள் சிறுது நேரம் இருந்து ஆதிராவுடன் பேசிவிட்டு குழந்தைகளிடமும் விளையாடிவிட்டு கிளம்பினாள்.

 

“நேத்ரா நீ கார்ல தானே வந்திருக்க, எங்களை அத்தை வீட்டில விட்டுடுறியா” என்றாள் அவள், “சரிடி வா” போகலாம் என்றாள் மற்றவள். “நான் அவருக்கு போன் பண்ணி சொல்லிடறேன்” என்றவள் ஆதிக்கு போன் செய்தாள். ‘என்ன இது ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது என்று யோசித்தவாறே கைபேசியை காதுக்கு கொடுத்தான் ஆதி.

 

“ஹலோ நான் ஆதிரா பேசறேன்” என்றாள் அவள். ஆதி இத்தனை நாளில் ஆதிராவுக்கு என்றுமே போன் செய்ததில்லை, அவன் அவள் எண்ணை குறித்துக் கொண்டதுமில்லை, அது தான் அவன் குழம்பி இருந்தான். ‘ச்சே என்ன ஒரு முட்டாள்தனம் அவ போன் நம்பர் வாங்கிக்கணும்ன்னு எனக்கு ஏன் தோணவே இல்லை. இவ மட்டும் நம்மை பத்தி எல்லாம் தெரிஞ்சு வைச்சு இருக்காளே, என்று குறுகினான்’ அவன். “சொல்லு” என்றான்.

 

“நேத்ரா வந்து இருக்காங்க, நான் அத்தையை பார்க்க போறேன், நீங்க சாயங்காலம் எங்களை அங்க வந்து அழைச்சுட்டு போறீங்களா” என்றாள். “சரி வர்றேன்” என்று கூறி போனை வைத்தான். “வாடி போகலாம்” என்று நேத்ராவுடன் கிளம்பினாள் அவள். “என்னடி சொல்லறார் உன் முறைக்கிற மாமன்” என்றாள் அவள், “என்ன சொன்ன” என்றவளிடம் “இல்லைடி முறைமாமன்னு தான் சொன்னேன், உன் காதுல தான் சரியா விழலை” என்றாள் அவள்.

 

“இருடி, அங்க உன்னோட முறைக்கிற மாமன் இருப்பார்ல, அங்க வைச்சு பேசிக்கறேன்” என்று அவளை வாரினாள் ஆதிரா. நேத்ரா முகம் வாடினாள், அவள் முகம் வாடியது கண்ட ஆதிரா, நமக்காக எவ்வளவு செய்த இவள் இனியும் வாடக் கூடாது என்று எண்ணினாள் அவள். ஆதிராவை அங்கு விட்டு சென்றவள் உள்ளே வர மறுத்துவிட்டாள், தற்செயலாக அவன் அறை சன்னலின் வழியே எட்டிப் பார்த்த ஆதவன் நேத்ராவைக் கண்டான்.

 

அவன் மனம் பழைய நினைவுகளை அசைபோட்டது. “அத்தை எனக்கு உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும் கேக்கலாமா” என்றாள். “சொல்லும்மா ஆதிரா” என்றார் லட்சுமி. “ஏன் அத்தை நம்ம ஆதர்ஷாக்கு நாம கல்யாணம் பண்ண இன்னும் மூணு வருஷம் ஆகும்ல, அதுக்கு முன்ன நம்ம தம்பிக்கு ஒரு கல்யாணம் பண்ணிடலாம் இல்லையா அத்தை” அவர் எதுவும் பேசாமல் இருக்க “நான் கேட்டது ஏதும் தப்பு இருந்தா மன்னிச்சுடுங்க அத்தை” என்றாள்.

 

“இல்லைம்மா ஆதிரா, நீ கேட்டதுல ஏதும் தப்பில்லை, ஆனா அவன் தான் எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்குறான். நாங்களும் அவனுக்குக்காக ஒரு பொண்ணை பார்த்தோம். பொண்ணு வேற யாரும் இல்லை சந்திரா பொண்ணு நேத்ரா தான், பார்வதி தான் அவங்ககிட்ட போய் பேசினா, ஆனா அவங்களுக்கு இந்த சம்மந்தத்துல அவ்வளவு விருப்பம் இல்லை, ஏன்னா ஆதவன் அப்போ தான் தனியா சொந்தமா வியாபாரம் பண்ண போறதா சொல்லிட்டு அதை பார்த்துட்டு இருந்தான். அவனுக்கு நிலையா ஒரு வருமானம் இல்லைன்னு சொல்லி அவங்க ரொம்ப சங்கடப்பட்டு தான் மறுப்பு சொன்னாங்க”.

 

“ஆதவனுக்கு தெரியாம தான் நாங்க பொண்ணே கேட்டோம். அவங்க சம்மதிச்சுட்டா அவன்கிட்ட பேசி அவனை ஒத்துக்க வைச்சுக்கலாம் நினைச்சோம். ஆனா அவங்க மறுத்துட்டாங்க, பார்வதி இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டு இருக்கும் போது ஆதவன் அதை கேட்டுட்டான்.

 

“அவனுக்கு ரொம்பவும் கோபம், அவ என்ன பெரியா உலக அழகியா, அவளை விட்டா பொண்ணே கிடைக்காதா, உங்களை யாரு எனக்கு பொண்ணு பார்க்க சொன்னது, இப்படி அவமானப்படச் சொன்னது, நானா சொல்ற வரைக்கும் நீங்க எனக்கு பொண்ணு பார்க்கக் கூடாதுன்னு ரொம்பவும் கோபமா பேசிட்டான். அதுக்கு அப்புறம் நாங்க அவன்கிட்ட அதை பற்றி பேச்சே எடுக்கலை. அவனுக்கு அவன் தொழிலை நல்ல படியா கொண்டு வந்துட்டு தான் கல்யாணம் பண்ணிக்கணும் ஒரு வெறி வந்துடுச்சு. ஆனா பாவம் அவனுக்கு எதுவுமே ஒரு தோதா அமையலை” என்று வருந்தினார் அவர்.

 

அப்போது ஆதவன் கீழிறங்கி வர “தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா” என்றாள். “சொல்லுங்கண்ணி” என்றான் அவன். “இல்லை உங்களுக்கு விளம்பரத்துறையில ஆர்வம் இருக்குன்னு அத்தை சொன்னாங்க. எனக்கு ஒரு சின்ன ஐடியா. நான் பேஷன் டிசைனிங் படிச்சு இருக்கேன் இதை பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை. உங்க விளம்பரத்துக்கு நான் ஆடைகளை வடிவமைச்சு கொடுக்கலாமா, நான் வீட்டில இருந்தே செய்யறேன். நாம வேணா முதல்ல நம்ம ஆபீஸ்ல இருந்து செய்ய ஆரம்பிக்கலாமா. உங்க அண்ணன்கிட்ட கேளுங்க, எப்படியும் அவங்க விளம்பரதுக்காக வெளிய தான் குடுக்கறாங்க, நீங்க முயற்சி செஞ்சா உங்களுக்கே இனி அது கிடைக்குமே. நீங்களும் மாமாவோட தொழில்ல உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும் இல்லையா” என்று பேசி அவன் மனதை கரைத்தாள். அவனுக்கும் இந்த யோசனை சரியாகவே பட்டது.

 

“சரிங்கண்ணி, நான் அண்ணாகிட்ட பேசறேன்” என்றான். “உங்க அண்ணா இன்னைக்கு வீட்டுக்கு வருவாங்க, அப்போவே பேசிடுங்க தம்பி” என்றாள் அவள். அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி உள்ளம் உருகிப் போனார்.

 

ஆதி வீட்டிற்கு வர ஆதிரா அவனுக்கு காபி எடுத்து வர உள்ளே சென்றாள். எல்லோருக்குமே காபியை கலந்து எடுத்து வந்து அவரவர்களிடம் கொடுத்தாள். ஆதவன் ஆதியின் அருகில் அமர்ந்திருந்தான், ஆதிரா ஆதவனிடம் பேசுமாறு சைகை செய்ய, “என்ன ரெண்டு பேரும் ஏதோ என்கிட்டே சொல்ல வர மாதிரி தெரியுது. என்ன விஷயம்” என்றான் ஆதித்தியன்.

 

“அண்ணா அது வந்து, நம்ம ஆபீஸ்க்கு விளம்பரத்துக்கு இப்போ நாம வெளியே தானே குடுக்கறோம். அதை நானே செஞ்சு தரேனே” என்றான் அவன். “அப்பா உனக்கு இப்பவாச்சும் இது தோணிச்சே, உனக்கா தோணிச்சா இல்லை உங்க அண்ணி எதாச்சும் சொன்னாளா” என்றான் அவன். “அய்யோ நான் எதுவும் சொல்லலைங்க தம்பி தான் கேக்குறாங்க, அதான் நானும் அவங்களுக்கு உதவி பண்ணறேன் சொன்னேன். நானே அந்த மாடல்க்கு எல்லாம் டிசைன் பண்ணி தரேன்னு சொன்னேன். நான் சொன்னது சரி தானேங்க” என்றாள் அவள்.

 

“நீயா நீ எப்படி டிசைன் பண்ணுவ” என்றான் அவன், “நான் பேஷன் டிசைனிங் தான் படிச்சு இருக்கேன். மறந்துட்டீங்களா இல்லை உங்களுக்கு தெரியாதா” என்றாள் அவள். “சாரி மறந்துட்டேன், நீ நல்ல ஓவியம் கூட வரைவதானே. ஆமா ஆதவா உனக்கு நல்ல ஆளு தான் கிடைச்சு இருக்காங்க, உங்க அண்ணியை நீ வேலை வாங்கிக்கோ. நானே அவளோட திறமையை பார்த்து இருக்கேன் அதை நீ உபயோகப்படுத்திக்கோ” என்றான் ஆதி.

 

உன் மில்லிமீட்டர்

சிரிப்பு சென்டிமீட்டர்

சிரிப்பாவது எப்போது…

 

உன் செல்ல

அழைப்பில் என்

உள்ளம் துள்ளியது

இப்போது…

 

உன் கோபம்

எல்லாம் நீ உனக்கு

போட்டுக் கொள்ளும்

திரையோ என்று

எண்ணத் தோன்றுகிறது…

 

என்னில் உன்னை

கண்ட நான்

உன்னில் என்னை

தேடுகிறேன்…

உன் கண்களில்

தெரிகிறது காதல்

அதை நீ மறைப்பாயோ

அல்லது மறுப்பாயோ

என்று கலங்கித்தவிக்கும்

நெஞ்சுடன் நான்…

 

அத்தியாயம் – 10

 

சரி ஆதவா, நான் இதை பத்தி அப்பாக்கிட்ட பேசிடறேன். நீங்க உங்க திட்டத்தை தயாரிச்சு கொண்டு வாங்க. அது எனக்கு பிடிச்சு இருந்துச்சுன்னா தான் நான் உங்களுக்கு இந்த வாய்ப்பு கொடுப்பேன்” என்றான் ஆதித்தியன். தொழிலில் அவன் கண்டிப்பானவன் என்று தந்தை கூறியிருந்தது ஆதவனுக்கு ஞாபகம் வர, “கண்டிப்பா அண்ணா எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு, நாங்க செய்து முடிப்போம், உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்றான் புது நம்பிக்கையுடன்.

 

 

ஆதர்ஷாவும் வந்திருக்க அவள் ஆதிராவின் அருகில் அமர்ந்திருந்தாள், “என்ன உங்க அண்ணன் பயங்கரமா பில்ட்அப் குடுக்கறாங்க” என்று ஏதோ அவளின் காதை கடிக்க, “என்ன சொல்றாங்க உங்கண்ணி, உன் காதை கடிக்கிறாங்க. என்ன விஷயம்” என்றான். “இல்லைண்ணா நீங்க ரொம்ப பில்ட் அப் குடுக்கறீங்களாம். அதான் அண்ணி சொன்னாங்க” என்று உடனே அவள் போட்டுக் கொடுத்தாள்.

 

“உங்கண்ணிகிட்ட சொல்லு, நான் ஒண்ணும் பில்ட்அப் கொடுக்கலை, பிடிக்கலைனா பிடிக்கலைன்னு முகத்துக்கு நேராவே சொல்லிடுவேன். அதை அவங்களுக்கு சொல்லிடு. நான் எப்படின்னு என்னோட ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லு”. “ஆபீஸ்லயா உங்க அண்ணன் என்னை அங்கெல்லாம் கூட்டி போனதே இல்லையே, அவங்க ஆபீஸ் பத்தியே என்கிட்டே எதுவும் சொன்னதில்லை” என்று அங்கலாய்த்தாள் அவள்.

 

“என்னண்ணா அண்ணிகிட்ட நம்ம ஆபீஸ் பத்தி எதுவும் சொன்னதில்லையா” என்றான் ஆதவன். “உங்கண்ணி ரொம்ப பிஸியானவங்க, நான் வீட்டுக்கு வரும் போது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைக்க, குழந்தைகளை பார்க்க இதுக்கே அவங்களுக்கு நேரம் பத்தலை. இதுக்கு நடுவில அவ வந்து என்கிட்டே கேட்கிறதாவது, நானா சொல்லனும்னா அவங்க ரொம்ப வேலையா ஓடி ஆடுறாங்க. நான் என்ன செய்ய, என்னை கவனிக்க தான் அந்த வீட்டில ஆள் இல்லை” என்றான் அவளை பார்த்துக் கொண்டே சோகமாக.

 

‘இவனுக்கு ரொம்பவும் கொழுப்பு தான், நானா பார்க்க மாட்டேன் சொன்னேன். இவர் தான் என்கிட்ட வராதே, என் வேலை நான் பார்த்துக்கறேன், அப்படி இப்படின்னு ஓவரா பேசினார். இப்போ நான் தான் எல்லாம் செய்யற மாதிரி பேசுறார்’ என்று அவனை மனதுக்குள் வைதாள். “அண்ணா நீங்க இங்க வாங்க நாங்க உங்களை பார்த்துக்கறோம்” என்றாள் ஆதர்ஷா. “ஹேய் நீ வாயை மூடிட்டு இருக்கமாட்ட, உங்க அண்ணனை உங்கண்ணி பார்த்துப்பாங்க, நீ கொஞ்சம் வாயை குறை” என்று அதட்டினார் லட்சுமி.

 

மருமகளிடம் தனியே “நீ தப்பா எடுத்துக்காதேம்மா” என்றார் லட்சுமி. “என்ன அத்தை நீங்க எனக்கு தெரியாதா, அவ சின்ன பொண்ணு நீங்க எதுக்கு அவளை திட்டுறீங்க” என்றாள் ஆதிரா. “மேடம் கிளம்பலாமா, வீட்டுக்கு போற உத்தேசமே உங்களுக்கு இல்லையா” என்றான் அவன்.

 

அவளுக்கு எல்லாம் புதிதாக இருந்தது, இவறுக்கு என்ன ஆயிற்று, ஒரு மார்க்கமாகவே பேசுகிறாரே, நடந்து கொள்கிறாரே என்று நினைத்துக் கொண்டே அவனை நோக்க அவன் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் போகலாம் என்பதாய் தலையசைக்க, அவன் அவள் கண்களுள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். இவர் ஏன் இப்படி பார்க்குறார்.

 

“போகலாம்ப்பா” என்று கவினி அவன் கால்களை கட்டிக் கொள்ள தன்னுணர்வுக்கு வந்தவன், “சரி போகலாம்” என்று எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினர். வீட்டிற்கு வந்தவன் இயல்பாக இல்லை என்பதை உணர்தவள் அவனிடம் பேசி எதையும் கெடுத்துக் கொள்ளவேண்டாம் என்று எண்ணினாள். “சாப்பிட வாங்க” என்றாள், இம் என்று சொல்லி உடனே அவன் எழுந்து வந்தது அவளுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றவன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

 

ஆதிரா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்து அவளும் படுத்தவள் சிறிது நேரத்திலேயே உறங்கிப் போனாள். உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டவன் முன்தினம் போல் டிவியை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதை படித்த பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்தது.

 

ஒருவாறு கண்கள் செருக டிவியை அணைத்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தான். காலை விடிந்தும் உறங்கிக் கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவள் முன் தினம் போலவே அவனை வந்து எழுப்பினாள். “என்னங்க, நேரமாச்சு எழுந்துக்கோங்க. ஆபீஸ் போகவேண்டாமா” என்றாள் அவள். அவள் முகத்தை பார்த்தவாறே எழுந்தவன் குளியலறை நோக்கிச் சென்றான். குளித்துவிட்டு வந்து சாப்பிட்டவன் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

 

“ஆரா நீயும் ஆதவனும் திங்கள் கிழமை ஆபீஸ் வந்து பாருங்க. நான் அப்பாகிட்ட பேசிட்டேன், நீங்க உங்க திட்டத்தை தயாரா வைச்சுகோங்க” என்றுவிட்டு அவன் கிளம்பினான்.“நானும் வரணுமா” என்றாள் அவள் ஒருவித பதட்டத்துடன், “ஆமா அதில என்ன சந்தேகம், ரெண்டு பேரும் சேர்ந்து தானே பண்றீங்க, அப்போ நீயும் தான் வரணும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்களோட திட்டம் தயார் செய்து அதை சரியா ப்ரோஜக்ட் பண்ணுங்க. சரியா, தைரியமா செய்ங்க” என்று அவன் அவளை தைரியப்படுத்தி விட்டு சென்றான்.

 

அவன் கிளம்பிச் சென்றதும் அவள் குழந்தைகளை சாப்பிட வைத்து சிறிது நேரம் கழித்து தூங்கச் செய்தாள். பின் பேப்பர் பென்சில் எடுத்துக் கொண்டு வரைய ஆரம்பித்தாள். அவள் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த மடிகணினியை அவள் தம்பிக்கு கொடுத்து விட்டாள், இப்போது அவளுக்கு ஒரு மடிகணினி தேவைப்பட்டது, என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு நேத்ராவை அழைக்கலாம் என்று தோன்றியது.

 

உடனே நேத்ராவிற்கு போன் செய்தாள், “ஹலோ நேத்ரா என்னடி செய்யற, கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போயேன், நீ ப்ரீயா தான் இருக்கியா” என்றான். “எனக்கு என்ன வேலையா வெட்டியா, நான் சும்மா தானே இருக்கேன்டி. நான் என்ன பண்ணனும் சொல்லு” என்றாள். “சரி நீ உன்னோட லேப்டாப் எடுத்துட்டு வீட்டுக்கு வா, ஆட்டோவில் வா” என்றாள். “எதுக்குடி நான் ஆட்டோல வரணும், நான் ஸ்கூட்டியில் வந்துடுறேன்” என்றவளை, “சொன்னதை செய்டி” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

 

அரைமணி நேரத்திற்கு பின் நேத்ரா அவள் வீட்டிற்கு வர ஆதிரா அவள் திட்டத்தை மடிகணினி உதவியுடன் தயார் செய்தாள். சிறிது நேரம் கழித்து வெளியில் சென்றவள், “நேத்ரா நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன், எனக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும், நீ வீட்டில இரு குழந்தைங்களை பார்த்துக்கோ. நான் போய்ட்டு ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவேன். யாராச்சும் வந்தா எனக்கு போன் பண்ணு, நான் உடனே வர்றேன். சரியா” என்றாள்.

 

“என்னடி நினைச்சுட்டு இருக்க, என்னை தனியா விட்டுட்டு நீ மட்டும் எங்க போற உனக்கு என்ன வேணும் சொல்லு நானே போய் வாங்கிட்டு வர்றேன்” என்றவளை, “ஏய் எனக்கு கொஞ்சம் சார்ட் பேப்பர், பென்சில், இன்னும் கொஞ்சம் பொருள் எல்லாம் வேணும். உனக்கு அதை பத்தி தெரியாது இல்லையா. அதான்டி நான் போயிட்டு வர்றேன் சொல்லறேன்” என்றாள். “சரி போய்ட்டு வா” என்று அரைமனதாக தலையை ஆட்டினாள் அவள்.அவள் சென்ற சிறிது நேரத்தில் வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

யாராக இருக்கும் என்று நினைத்தவாறே நேத்ரா யோசித்துக்கொண்டே எழுந்து செல்ல நினைத்தவள் அப்படியே நின்று விட்டாள் வெளியில் இருந்து வந்தவனை பார்த்து ‘இவளா இவ எதுக்கு இங்க இருக்கா, அண்ணி அவங்க தோழி இருப்பாங்கன்னு தானே சொன்னாங்க. இவ வந்து உட்கார்ந்து இருக்கா’ என்று நினைத்தவாறே உள்ளே வந்தான்.

 

“நீ எதுக்கு இங்க வந்த” என்றான் அவன் அவளிடம் எகத்தாளமாக “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க” என்றாள் அவள் பதிலுக்கு. “என்னடி கொழுப்பா இது எங்க அண்ணன் அண்ணி வீடு நான் வருவேன், போவேன் உனக்கு என்ன வந்துச்சு” என்றான் அவன். “உங்களுக்கு அண்ணன் அண்ணி வீடுன்னா எனக்கு எங்க பெரியத்தான் வீடு, என் உயிர் தோழியோட வீடு. நீங்க யாரு என்னை கேள்வி கேட்க” என்று பதிலுக்கு அவளும் பொரிந்தாள்.

 

“ஏய் என்னடி ஆழாக்கு மாதிரி இருந்துட்டு ரொம்ப அதிகமா பேசுற” என்று அவன் எகிற அந்த நேரத்தில் அவன் கைபேசி அழைத்து அவன் கோபத்தை குறைத்தது. “ஹலோ சொல்லுங்கண்ணி, வீட்டுக்கு வந்துட்டேன். இம் இருக்காங்க, சரிங்கண்ணி நான் திறந்து பார்க்கறேன்” என்று கூறி போனை வைத்தான். “அண்ணியோட லேப்டாப் எங்க இருக்கு” என்றான் அவளிடம். அவள் கையால் அதன் இருப்பிடம் காட்ட அருகில் சென்று அதனை திறந்தான். லேப்டாப்பில் அவளுடைய பெயர் வர “அண்ணியோட லேப்டாப் தானே கேட்டேன், நீ உன்னோடதை காட்டுற” என்றான்.

 

“அவ என்னோடதுல தான் வேலை செஞ்சுசட்டு இருந்தா, அவளுடைய லேப்டாப் அவளோட கல்யாணத்துக்கு முன்ன அவ தம்பிக்கு கொடுத்துட்டா, அவகிட்ட லேப்டாப் இல்லை. அதான் என்னோடதை எடுத்து வரச் சொல்லி அதுல தான் வேலை செஞ்சுட்டு இருந்தா” என்றாள் அவள்.  “லேப்டாப் கொடுத்தியே, பாஸ்வோர்ட் போடணும்ன்னு தெரியாதா” என்று அவன் அவளை மேலும் சீண்டினான். அவனிடம் இருந்து அதை வாங்கி பாஸ்வோர்ட் போட்டு அவனிடம் கொடுத்தாள். அவனுடைய மடிகணினியையும் எடுத்து வைத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாக வைத்து ஏதேதோ செய்துக் கொண்டிருந்தான்.

 

ஒரு அரைமணி நேரத்திற்கும் மேல் கடந்தது. அதன்பின் அதை மூடி வைத்துவிட்டு ஆதிராவுக்கு போன் செய்தான். “அண்ணி எப்போ வருவீங்க, என் வேலை முடிஞ்சு போச்சு. சரி வாங்க நான் காத்திருக்கேன். பசங்க தூங்கிட்டு தான் இருக்காங்க” என்றான்.அவனுக்கு போரடிக்க டிவியை ஆன் செய்தான். அதில் சூழ்நிலை தெரியாமல் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

“ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேத்து வரை நினைக்கலையே…

ஆசை விதை முளைக்கலையே

சேதி என்ன வனக்குயிலே…”

 

வேறு சேனலை மாற்றினான். அதிலும் ஒரு பாடல் ஓடிக் கொண்டிருந்தது…

 

“மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே” என்ற வரிகளில் தன்னையறியாமல் அவன் விழியுயர்த்தி அவளைப் பார்க்க அவளும் அவனை பார்த்தக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் பார்த்தவாறே இருக்க, “சித்தப்பா” என்று ஓடிவந்தாள் கவினி.

 

“ஹாய் செல்லகுட்டி என்னடா இவ்வளோ நேரம் தூங்கிட்டு இருந்தியா” என்று அவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு குழந்தையை தூக்கியவாறே கேட்டான். “ஆமா சித்தப்பா தூங்கிட்டேன். அம்மா எங்க, ஹாய் சித்தி நீங்களும் இங்க தான் இருக்கீங்களா” என்றாள் அவள்.

 

“சித்தியா” என்று அவன் அவளை முறைக்க, “ஆமா சித்தப்பா, நேத்ரா ஆன்ட்டியை அம்மா சித்தின்னு தான் கூப்பிட சொன்னாங்க” என்றாள் குழந்தை வெள்ளந்தியாக. “அவ சரியா தானே சொல்றா, அதுக்கு எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்குறீங்க, முறைக்கு நான் அவளுக்கு சித்தி தானே ஆகணும்” என்றாள் அவள் பதிலுக்கு. குழந்தை அதற்குள் வெளியில் சென்றிருக்க, சண்டை கோழிகள் இரண்டும் மீண்டும் சிலுப்பிக்கொண்டு தங்கள் சண்டையை தொடங்கினர்.

 

“என்ன முறைக்கு நீ சித்தி ஆகணும், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா. அவ உன்னை சித்தின்னு கூப்பிட” என்று சத்தமாக இரைந்தான் அவன். “ஆமாடா உன்னை இந்நேரம் கல்யாணம் பண்ணி இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி தானே, உங்கண்ணன் குழந்தைகளுக்கு நான் சித்தி தானே ஆகிருப்பேன் போதுமா” என்று அவளும் வார்த்தைகளை விட, அந்நேரம் ஆதிரா குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள். கவினியை தூக்கிக் கொண்டு வந்தவளை கண்டதும் இரு கோழிகளும் அமைதி காத்தன.

 

“அண்ணி நான் வேலை முடிச்சுட்டேன், இதுல எல்லா தகவலும் இருக்கு. நீங்க பார்த்துட்டு வேற ஏதாச்சும் செய்யணும்னா செய்ங்க. நான் கிளம்புறேன்” என்றான் அவன். அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது அதனாலேயே அவன் கிளம்பயத்தனித்தான். “நேத்ரா உன்னோட லேப்டாப் இங்க இருக்கட்டும், நாளைக்கு நான் உனக்கு திரும்பித் தர்றேன், நீ தம்பி கூட வீட்டுக்கு போய்டு. தம்பி அவ ஆட்டோவில் தான் வந்தாள். பாவம் எப்படி திரும்பி போவாள். நீங்கள் கூட்டிப் போய் விட்டுவிடுகிறீர்களா” என்றாள் ஆதிரா.

 

“என்கூட எல்லாம் அவங்க வரமாட்டாங்க அண்ணி” என்றான் அவன் வீம்பாக, “நான் எப்போ அப்படி சொன்னே, தேவையில்லாமல் அவரை பேசவேணாம் சொல்லி வைடி” என்றாள் அவள் பதிலுக்கு. “இந்த அரைக்காப்படி எதுக்கு இப்போ துள்ளுது அண்ணி, வர்றதுனா வரச் சொல்லுங்க, எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பணும்” என்றான் அவன். “அப்படி வேலை இருந்தா போக வேண்டியது தானே, இன்னும் எதுக்கு இங்க நிக்கிறார்” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“ஏன்டி உனக்கு இவ்வளவு வாய், கொஞ்சம் குறையேன், பதிலுக்கு பதில் பேசி தான் ஆகணுமா, பேசாம கிளம்புடி” என்றாள் ஆதிரா. “அப்படி சொல்லுங்க அண்ணி, இவ சின்ன வயசில இருந்தே இப்படி தான் என்கூட வாயடிச்சு பழகிட்டா, அதான் துள்ளிக்கிட்டு வர்றா, அந்த வாயை இப்படி தான் அடைக்கணும்” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப, ‘கிளம்புடி’ என்பது போல் அவள் சைகை செய்ய, நேத்ரா அவனுடன் கிளம்பினாள்.

 

அவன் பைக்கில் அவள் ஏறி உட்கார பேசாமல் அமர்ந்திருந்தவன் அமைதியாகவே வண்டியை ஓட்டினான். நேத்ராவும் எதுவும் யோசிக்கவில்லை, அவள் எண்ணம் முழுதும் அவனுடன் மல்லுகட்டியதிலேயே இருந்தது. வண்டி ஓரிடத்தில் நிற்க சுற்றுப்புறம் உணர்ந்தவள், “இது என்ன இடம்” என்றாள்.

 

“பார்க்” என்றான் அவன். “இங்க எதுக்கு என்னை அழைச்சுட்டு வந்தீங்க” என்றாள் அவள். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா” என்றான் அவன்.பதிலேதும் பேசாமல் அவனுடன் சென்றாள் அவள். ‘என்ன பேசப் போகிறான், மீண்டும் என்னுடன் சண்டைக்கு வர போகிறானா, இவன் சும்மாவே எகிறுவான், தனியே வேறு கூட்டி வந்து என்ன பஞ்சாயத்து வைக்கப் போகிறானோ தெரியவில்லை’ என்று யோசித்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

 

“உட்கார்” என்று அவன் காட்டிய இடத்தில் அவள் உட்கார, “நிஜமா” என்றான் அவன். “என்னது நிஜமா” என்றாள் அவள்.“சொல்லு நீ சொன்னது நிஜமா” என்றான் அவன் மீண்டும், அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியாதவள் “நீங்க என்ன சொல்ல வர்றீங்க எனக்கு புரியலை, புரியற மாதிரி கேளுங்க” என்றாள் அவள்.

 

“என்னடி அப்போ நீ சொன்னது பொய்யா, நான் உங்களை கட்டி இருந்தா உங்க அண்ணன் குழந்தைகளுக்கு நான் சித்தி தானேன்னு சொன்னியே. அது பொய்யா, புரியாத மாதிரி நடிக்க உன்கிட்ட தான்ட கத்துக்கணும்” என்று பாய்ந்தான் அவன்.

 

“எதுக்கு இப்படி பேசுறீங்க, இப்படி பேசுனீங்க இனிமே என்கிட்ட பேசாதீங்க” என்று அழுதுக் கொண்டே அவள் எழுந்து சென்றுவிட்டாள் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல். தரையில் காலை வேகமா உதைத்தவன், “போடி வராதே, என்னை விட்டுட்டு ஓடறதே உனக்கு பழக்கமா போச்சு, என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கே. போடி” என்று மீண்டும் அவனுக்குள்ளேயே இரைந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

____________________

 

ஆதிரா காலையிலேயே சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற, அப்போது தான் அவனுக்கும் அது ஞாபகத்திற்கு வந்துது. குளித்து சாப்பிட்டு அவன் கல்லூரிக்குள் நுழைந்தான். அவன் கல்லூரிக்கு நுழைய நண்பர்கள் கூட்டம் அவனை சூழ்ந்தது.

 

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா” என்று அவனை தலையில் தூக்கி வைத்து தட்டாமாலை சுற்றினர் அவன் நண்பர்கள். “டேய் விடுங்கடா போதும்” என்று கூற அவனை இறக்கிவிட்டனர். அப்போது தூரத்தில் ஆதர்ஷா வந்து கொண்டிருக்க அவனுக்குள் ஏதோ தோன்றியது, அவனும் என்று அவளை திட்டினானோ அன்றிலிருந்து இன்று வரை அவளை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்திருக்க, அவளோ அவனிடம் இருந்து ஒதுங்கி போனாள்.

 

அவன் அவ்வளவு தூரம் பேசியதில் அவளும் மனவருத்த முற்றிருந்தாள். ‘இன்று எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டும். ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்து இன்று எனக்கு பிறந்த நாள் என்று கூறி அவளிடம் பேச ஆரம்பிப்போம் என்று நினைத்துக் கொண்டு அவளை நோக்கிச் சென்றான். அவள் அவளுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ஹேய் ஆஷா என்னடி உங்க அண்ணியோட தம்பி உன்னைத் தேடித் தான் வர்றார் போல அன்னைக்கு அவர் ஏதோ ரொம்ப திட்டிட்டார்ன்னு நீ வருத்தப்பட்டே, தலைவர் உன்னை தேடி வர்றத பார்த்தா நீ அந்த சிங்கத்தை உன் சின்ன கம்மல்ல பூட்டிட்ட போல” என்றாள் அவள் தோழி ஒருத்தி.

 

“இவ என்னடி ஏதோ லூசு மாதிரி உளறி வைக்கிறா, சிங்கம் கம்மல்ன்னு ஏதோ பினாத்துறா” என்றாள் ஆதர்ஷா. அவள் தோழிகள் அவளை செல்லமாக ஆஷா என்று அவளை சுருக்கி கூப்பிடுவர், “அது ஒண்ணுமில்லை ஆஷா நேத்து அவ ஐயா படம் பார்த்து இருக்கா, அதுல நயன்தாரா பாடுற பாட்டில இப்படி தான் வரும்” என்று அவள் பாடிக் காண்பித்தாள்.

 

“சூரியனை சூரியனை சுருக்குப் பையில்

நான் அள்ளிவர அள்ளிவர ஆசைப்பட்டேன்…

சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா

என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டி வைச்சேன்…”

 

என்று அவள் பாட ஆதர்ஷாவுக்குள் அவனை தான் இப்படித்தான் தன்னுள் சுருக்கிக் கொள்ள ஆசைப்படுகிறோமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே சூர்யா அவளை நெருங்கி வந்துவிட்டான்.

 

“ஹாய் தர்ஷு” என்றான் அவன், அவனின் இந்த திடீர் செல்ல சுருக்கத்தில் அவள் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. ‘என்னையா இவன் கூப்பிடுகிறான்’ என்று எண்ணியாவாறே அவள் திரும்பினாள்.

 

“இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் அதான் சாக்லேட் கொடுக்கலாம்னு வந்தேன். அப்புறம் அன்னைக்கு நடந்ததுக்கு ரொம்ப சாரி. நான் அன்னைக்கு உன்னை தேவையில்லாமல் பேசிட்டேன். அன்னைல இருந்து நான் உன்கிட்ட பேச முயற்சி பண்றேன், ஆனா நீ தான் என்னை பார்த்தும் பார்க்காதது போல போயிட்டு இருக்க, நீ ரொம்ப அழுதேன்னு என் நண்பர்கள் சொன்னார்கள். எல்லாம் அவர்களால் வந்தது, மன்னித்துவிடு” என்றான் அவன்.

 

“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க, நான் எதுவும் தப்பா எடுத்துகலை, ஆனால் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. அதான் தேவையில்லாம உங்க விசயத்துல மூக்கை நுழைக்க வேண்டாம்ன்னு தான் நான் பேசாம ஒதுங்கி போனேன்” என்றாள் அவள்.

 

“சரி நீங்க என்னை மன்னிச்சது உண்மைனா இந்த சாக்லேட் பார் வாங்கிக்கோங்க” என்றான் அவன். “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று அவள் கைகொடுக்க அவன் பதிலுக்கு கை கொடுக்காமல் கையை குவித்து அவளுக்கு நன்றி கூறினான். அவளிடம் சாக்லேட் கொடுத்துவிட்டு அவள் தோழிகளுக்கும் கொடுத்துவிட்டு அவன் தன் வேலை முடிந்தது என்பது போல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

“ஏன்டி இவன் நல்லவனா, இல்லை ரொம்ப நல்லவனா, இப்படி ஓவரா குழப்பிட்டு போகுது இந்த பயபுள்ள, இப்போ கேட்டோமா வந்து சாரி கேளு, சாக்லேட் கொடுன்னு, வந்து சாக்லேட் கொடுத்துட்டு அது பாட்டுக்கு போகுது பாரு. சரியான சாமியார் போல” என்று அவள் தோழி ஒருத்தி அவனை வசை பாடிக் கொண்டிருக்க, “வாயை மூடுடி, பிறந்த நாள் அதுவுமா அவரை எதுக்கு திட்டுற” என்று  ஆதர்ஷா கடிந்து கொள்ள, “அம்மா தாயே நான் உனக்காக தான் பேசினேன்னு உனக்கு புரியலையா, கஷ்டம் தான் ரொம்ப கஷ்டம் தான் அவன் உன்னை என்னைக்கு புரிஞ்சு நீ அவனை புரிஞ்சு நீங்க ஒண்ணா சேர்ந்து, எப்படியோ போங்க. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க” என்று அவள் சந்தானம் பாணியில் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தாள்.

 

ஆதர்ஷா அவனின் தர்ஷு என்ற அழைப்பில் குளிர்ந்து போயிருந்தாள், அவன் மனதில் அவளுக்கு ஒரு இடம் இல்லாமலா அவன் இப்படி செல்ல சுருக்கமாக அவளை அழைப்பான்’ என்று நினைத்து அவள் மனம் இறக்கை கட்டி பறந்தது.

 

____________________

 

அன்று மாலை நேரத்தோடு வீடு திரும்பிய ஆதித்தியன் அவளை அழைத்தான் “ஆதிரா, ஆதிரா” என்றழைத்தான். ‘ஏன் நேத்து எல்லாம் ஆரா ஆரான்னு கூப்பிட்டார், இன்னைக்கு என்னவாம், ஆரா ஆதிராவாகி போய்ட்டா’ என்று நினைத்தவாறே “என்னங்க” என்று அவள் முன் வந்து நின்றாள். அவளை நேரில் கண்டதும் அவன் முகம் லேசாக, “ஆரா, கொஞ்சம் சீக்கிரம் கிளம்புறியா, வெளிய போயிட்டு வரலாம்” என்று அவன் அழைத்தான்.

 

‘கடவுளே இது நிச்சயமாக உலக அதிசயம் தான் என்னை வெளியில் கூட்டி போகிறேன் என்று இவர் அழைப்பது கனவா இல்லை நனவா என்று அவள் கிள்ளிப் பார்க்க முயலுவதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன், “நீ எதுக்கு கிள்ளுற, இரு நானே கிள்ளி விடுறேன்” என்று கூறி அவள் கையை நன்றாக கிள்ளிவிட்டான்.

 

“ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ” என்று வலியில் முனகியவளை “சாரி சாரி, ரொம்ப வலிக்குதா” என்றான் அவன். இல்லை என்பதாய் தலையசைத்துவிட்டு வேறு உடை மாற்ற அவள் உள்ளே விரைந்தாள், குழந்தைகளை தயார் செய்து வெளியில் அனுப்பியவள், ஒரு ரோஜா வண்ண பிரிண்டட் சில்க் சேலையை எடுத்து உடுத்தினாள், அதற்குள் அவள் தயாராகி விட்டாளா என்று பார்க்க அவன் கதவை தட்ட கையை உயர்த்த அவள் கதவை திறக்க சரியாக இருந்தது. அவன் இடது கை பழக்கமுடையவன் ஆதலால் அவன் இடது கையை மேலுயர்த்தி இருந்தான்.

 

அவள் கதவை திறக்க அவன் கைகள் அவள் தோள்களில் விழுந்தது, அவள் பதைத்து பின்னால் சாய ஹேய் என்றவாறே அவன் வலது கை முன்னே சென்று அவள் இடையை பற்றியது. அவளை தன்னில் சாய்த்துக்கொண்டு அவள் விழியில் உள்ளே சென்று அவன் எதையோ தேட அந்த மிரட்சியான விழிகள் அவனுக்கு ஏதேதோ எண்ணங்களை விதைத்தது.

 

கரிய நிற விழிகள் அல்ல அவளுக்கு, மயக்கும் காந்த விழிகள், அவளுள் மொத்தமாக அவனை கரைப்பது போல் இருந்தது அவன் பார்வை. தன்னை மறந்து அவன் கற்பனை குதிரை எங்கெங்கோ சென்றுக் கொண்டிருக்க, “அம்மா” என்று கவினி அழும் குரல் அவர்களின் அந்த ஏகாந்த நிலையை கலைத்தது.

 

“என்னம்மா” என்று பதறி வெளியில் ஓடியவள் அவளை தூக்கி தன் மேல் சாய்த்துக் கொண்டாள். “என்னாச்சு தங்கம்” என்றாள். “அம்மா பாருங்கம்மா கவின் என்னை கிள்ளிட்டான். அப்பா உங்களை கிள்ளினாங்கல அதை இவன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். இப்படியா கிள்ளுனாங்கன்னு சொல்லி என்னை நல்லா கிள்ளி வைச்சுட்டான்மா. எனக்கு வலிக்குதும்மா. உனக்கும் இப்படி தான் வலிச்சுதாம்மா” என்றாள் குழந்தை வெகுளியாக.

 

‘அப்பனும் புள்ளையும் ஒரே மாதிரியா கிள்ளி வைப்பாங்க போல’ என்று நினைத்தவள் எதிரில் அவன் சிரித்துக் கொண்டு வருவதை பார்த்ததும் “என்ன சிரிப்பு இல்ல என்ன சிரிப்புன்னு கேக்குறேன். அப்பாவும் பிள்ளையும் இப்படி தன் கிள்ளி வைப்பீங்களா. பாருங்க என் பொண்ணு எப்படி அழறா” என்று அவனை பார்த்து அவள் கேட்க, கவினியும் அவனுடன் சண்டைக்கு நின்றாள். “அப்பா நீங்களும் அம்மாவை கிள்ளிட்டீங்க, பாவம் அம்மா ரொம்ப சத்தம் போட்டு அழுதாங்க, நீங்க அம்மாகிட்ட சாரி கேளுங்க. நீங்க செஞ்சது தப்பு தானே. கவின் நீயும் என்கிட்ட சாரி கேளு” என்றாள் பெரிய மனுஷியை போல்.

 

சரி குட்டிம்மா, நான் அம்மாகிட்ட சாரி கேட்குறேன். சரியா, சாரி” என்றான் அவன் ஆராவிடம். “கவின் நீ சாரி கேளு என்கிட்ட” என்றாள் குழந்தை. “போ நான் கேக்க மாட்டேன், அப்பா பாருங்கப்பா” என்று அவன் ஆதித்தியனை அழைக்க, அவனோ “கவின் அப்பா அம்மாகிட்ட சாரி கேட்டேன்ல அது மாதிரி நீயும் கவினிகிட்ட சாரி சொல்லு” என்றான். “சாரி” என்று அவன் சொல்ல இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.

 

“குட்டீஸ் நாம கிளம்பவேணாம் வாங்க போகலாம்” என்று அவன் அழைக்க ‘இவன் எங்கு அழைத்துச் செல்கிறான் என்று சொல்லாமலே கூட்டிச் செல்கிறானே’ என்று நினைத்துக் கொண்டே அவளும் கிளம்பிச் செல்ல அவன் காரை கிளப்பினான். ஒரு பெரிய கடையின் வாயிலில் கார் சென்று நின்றது. ‘இங்கு எதற்கு அழைத்து வந்திருக்கிறான்’ என்று யோசித்தவாறே அவள் கீழிறங்கினாள். “என்னங்க இங்க என்ன வாங்கப் போறோம்” என்றாள் அவள்.

 

“உனக்கு அறிவு வாங்கலாம்னு தான் இந்த கடைக்கு வந்தேன், வா போய் வாங்கிட்டு வருவோம்” என்று அவன் கிண்டலடிக்க, அவர்கள் உள்ளே சென்றனர். கடைக்காரரை கூப்பிட்டு அவனுக்கு தேவையானதை கேட்க அவன் ஒரு மடிகணினியை காண்பித்து அதன் உபயோகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். ஆதிரா குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க, “ஆரா எங்க வேடிக்கை பார்க்குற, உனக்காக தான் நாம இதை வாங்க வந்தது. உனக்கு எப்படி இருக்கணுமோ சொல்லு அதே மாதிரி வாங்கிடலாம்” என்றான் அவன்.

 

“என்னது எனக்கா, எனக்கு எதுக்குங்க லேப்டாப் இப்போ” என்று அவள் அவனை புரியாமல் பார்க்க, ‘இப்படி பார்த்து பார்த்து தான் நம்மளை இம்சை கொடுக்கிறா’ “என்ன அப்போ உனக்கு லேப்டாப் வேணாமா, நான் இதை கூட உனக்காக வாங்கி தரமாட்டேன்னு நினைச்சுட்டியா, அதுனால தான் நேத்ராகிட்ட அவளோட லேப்டாப் எடுத்து வரச்சொல்லி நீ வேலை பார்த்தியா. இப்போ என்ன உனக்கு என்னை அசிங்கப்படுத்தணும் அதானே, நீ வேண்டாங்கற” என்று அவன் பேச ஆரம்பிக்க, “நீங்களே வாங்குங்க எது வாங்கினாலும் சரி தான்” என்று அவள் இசைந்து கொடுக்க, அவன் கடை சிப்பந்தியை ஒருவழியாக்கி அவனுக்கு திருப்தியான ஒன்றை தேர்ந்தெடுத்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.

 

“இங்க பாரு, இனி உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு, நீ பாட்டுக்கு யார்கிட்டயாச்சும் கேட்டு வைக்காதே, ஆதவன் வந்து சொல்லி தான் எனக்கு தெரியனுமா, உனக்கு என்ன வேணும்னு. நீ என்கிட்ட வந்து கேட்க மாட்டியா” என்றான் அவன் ஒருவிதமான குரலில். “உங்ககிட்ட கேட்க எனக்கும் ஆசை தான் ஆனா நீங்க தான் உங்க விஷயத்துல நான் தலையிடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களே, அதுக்கு அப்புறம் எனக்குன்னு ஏதாவது உங்ககிட்ட கேட்ககூட எனக்கு சங்கடமாக தான் இருக்கிறது. அப்புறம் எப்படி நான் இயல்பாக உங்களிடம் கேட்பது” என்று அவள் பதிலிறுக்க அவன் முகம் கருத்தது.

 

அவள் பேசியதில் இருந்த உண்மை அவனை சுட்டது, அவள் தன்னிடம் எதையும் கேட்கவில்லை என்று அவன் கோபப்படும் போது, அது போன்ற உணர்வு அவளுக்கும் இருக்கும் என்பதை எப்படி மறந்தோம் என்று எண்ணி அவன் குழம்பிக் கொண்டிருந்தான். கடையில் யாரோ “ஹரிணி அங்க போகாதே” என்று குரல் கொடுக்க அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

 

நான் எப்படி அவளை மறந்தேன், அவளை மறந்து எப்படி இவளுடன் என்னால் ஒன்றி பேச முடிகிறது என்று மீண்டும் அவளுக்குள் குழப்பம் ஆரம்பித்தது. இவளை பார்த்தாலே எனக்கு என்னமோ ஆகிறது, அவள் கண்களை பார்த்தாலே எனக்கு ஏதோ ஆகிறது. அவனுக்கு சற்று தனிமை வேண்டும் போல் இருந்தது. தனிமையில் மட்டுமே அவனால் நிதானமாக சிந்திக்க முடியும் என்று தோன்ற, அவள் பக்கத்தில் இருந்தால் எதுவும் முடிவெடுக்க முடியாது என்று உணர்ந்தவனுக்குள் ஒரு முடிவு வந்திருந்தது. ஆதிராவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

 

உங்கள் கண்கள்

என்னை பருகும் போது

என் தேகம் முழுதும்

தோன்றும் அதிர்வில்

நான் தொய்ந்து

போகிறேன்…

 

அஞ்சாமல் உன்னிடம்

பேச முடியும் ஆனால்

உன் கண்களில்

நீ என்னை கட்டிப் போடும்

போது முழுதும்

நான் கரைந்து

போகிறேன்…

 

தினம் தினம் உன்னை

எழுப்ப என் கைகள்

உன்னை தீண்டும்…

ஏனோ நான்

உன் இதயத்தையே

தீண்டியதாக உணர்ந்து

உயிரில் உறைந்து

போகிறேன்…

 

Advertisement