Advertisement

அத்தியாயம் – 7

 

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்

 

“சரிங்க நாங்க இப்படியே கிளம்புறோம், வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் வர்றோம்” என்று சங்கரன் அருணாசலத்திடம் விடைபெற்றுக் கொண்டிருக்க, அதுவரை எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த ஆதிராவுக்கு சட்டென்று கண்கள் நிறைந்தது. தாயை பிரிந்த கன்றாக அவள் மனம் வாடியது. பெட்டிகளை அப்போது தான் இறக்கி வைத்துவிட்டு ஆதிராவை கவனித்தவன் அவள் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்டான். ஏனோ அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று உயர்ந்த அவனது கையை கஷ்டப்பட்டு தரை இறக்கினான்.

 

“என்ன மாமா எங்க கிளம்பிட்டீங்க, வாங்க நம்ம கார் வந்தாச்சு எல்லாரும் சேர்ந்து போய்டலாம்” என்றான் அவன். “இல்லை மருமகனே நாங்க வீட்டுக்கு போய்ட்டு பிறவு வர்றோம், சூர்யாவும் காலேஜ்க்கு போகணும், கோமதி கிளம்பலாமா. ஆதிரா நாங்க வீட்டுக்கு போய்ட்டு கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திடுறோம். நீ ஏதும் கவலைப்படாதேம்மா” என்று சொன்னவர் சின்னக் குழந்தையாக கண்கள் கலங்க முகத்தை வேறு புறம் திருப்பினார். ஆதித்தியனுக்கு இதெல்லாம் கொஞ்சம் புதிதாக இருந்தது.

 

ஏனேனில் அவன் ஹரிணியை திருமணம் செய்து வரும் போது அவள் அவனுடன் சந்தோசமாகவே கிளம்பி வந்தாள், அது அவளின் தப்பில்லை. மனதிற்கு பிடித்தவனுடன் தான் வாழப் போகிறோம் என்ற எண்ணத்தில் அவளுக்கு அப்படி எந்த கவலையும் இருக்கவில்லை.

 

இந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் என்ற மனோபாவமே அவள் கொண்டிருந்தாள். அவளின் தந்தைக்கும் தாய்க்கும் மகள் சென்னையில் தானே இருக்கப் போகிறாள் என்ற எண்ணத்தில் அவர்களும் கண்ணீர் சிந்தவில்லை.

 

அவள் அன்னைக்கு சற்று வருத்தமாக இருந்த போதும் நாம் கவலை பட்டால் மட்டும் மகள் தலையில் தூக்கி வைத்து ஆடப்போகிறாளா என்ன எப்போதும் போல் அவள் நம்மிடம் முகம் திருப்பவே செய்வாள் என்று அவர் நினைத்துக் கொண்டார்.

பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா இப்படித் தான் அழுவாங்களா என்று நினைத்துக் கொண்டான். அவனுக்கு இது போன்று அனுபவம் இல்லாததால் அப்படி எண்ணினான், பாவம் அவன் என்ன செய்வான் தங்கைக்கு திருமணம் ஆகிச் சென்றிருந்தால் அவனுக்கு அந்த உணர்வு என்னவென்று தெரிந்திருக்கும். ஒருவழியாக அவர்கள் விடைபெற்றுச் செல்ல அவன் கார் ரயில் நிலையத்தின் வாசலில் நின்றது. காரில் ஏறிக்கொண்டு அவர்கள் உடமைகளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் ஏறிக்கொள்ள கார் அவன் வீட்டை நோக்கி விரைந்தது.

 

“லட்சுமி நாம ஆதி வீட்டில இருந்து அப்படியே வீட்டுக்கு போயிடலாம் தானே” என்றார் அருணாசலம். “இல்லைங்க இன்னைக்கு நாம அங்க தங்கிட்டு நாளைக்கு போகலாங்க, ஆதிராவுக்கு எல்லாம் புதுசா இருக்கும் இல்ல, அவ தனியா என்ன செய்வா” என்றார் லட்சுமி. “என்னக்கா நான் பார்த்துக்கமாட்டேனா மருமகளே” என்றார் பேச்சி.

 

“பேச்சி நீ என்னைவிட நல்ல பார்த்துப்பன்னு தெரியும், ஆனா பாவம் இப்போ தானே அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் பிரிஞ்சு வந்து இருக்கா, நாங்களும் இன்னைக்கே கிளம்பிட்டா ரொம்பவும் தவிச்சு போவா இல்லையா. அதுவும் இல்லாம அவங்க அம்மா அப்பாவும் வருவாங்க நாம சேர்ந்து தானே அவங்களுக்கு விருந்து சமைக்கணும்” என்றார் லட்சுமி.

 

ஆதி வீட்டிற்கு வந்திறங்கியதும் அவர்களை வெளியே நிற்கச் சொல்லி உள்ளே வேகமாக விரைந்தனர் லட்சுமியும் பேச்சியும். ஆரத்தி தட்டுடன் விரைந்து வந்தவர்களை கண்டதும் ஆதி “என்னம்மா இது, இதெல்லாம் தேவையா இப்போ” என்றான். லட்சுமி பரிதாபமாக முழித்தார். அதற்குள் பேச்சி “என்னடே இப்படி சொல்ற, ஆதிரா முதமுதல்ல நம்ம வீட்டுக்கு இப்போ தானே வருது, அதுக்கு தான் அம்மா ஆரத்தி எடுக்கறாங்க” என்று அவனுக்கு பதில் அளிக்க பேச்சியை கண்டு ஒரு நிம்மதி பார்வை பார்த்தார் லட்சுமி.

 

அவர்கள் உள்ளே செல்ல ஆதி வேகமாக சென்று ஒரு அறையில் நுழைந்துக் கொண்டான். “லட்சுமி நான் ஆபீஸ் கிளம்பணும், ஆதி இன்னைக்கு ஆபீஸ் வரவேண்டாம். நான் பார்த்துகறேன்” என்று அவர் சொல்லி முடிக்கும்முன் ஆதி உள்ளேயிருந்து வெளியில் வந்தான், “அப்பா நான் இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன், நிறைய வேலை இருக்கு இன்னைக்கு எனக்கு. நானும் உங்ககூட ஆபீஸ் வர்றேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

 

“ஆதிரா நீ போய் அவனுக்கு என்ன வேணும் பார்த்து கவனிம்மா, ஆதவா மதினிட்ட குழந்தைய கொடு. உள்ள படுக்க வைக்கட்டும்” என்று அவர் சொல்ல அவள் கவினி தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். “அம்மா நான் ஆச்சிகிட்ட போய் இக்கேன், நீ அப்புறம் வா” என்றான் கவின் அவள் சேலை முந்தியை இழுத்து, “சரி கண்ணா, ஆச்சியை தொல்லை பண்ணக்கூடாது” என்று சொல்லிவிட்டு அவள் கவினியை அந்த அறையின் கட்டிலில் படுக்க வைத்தாள். ஆதியை அந்த அறையில் காணவில்லை, குளியலறையில் இருந்து நீர் கொட்டும் சத்தம் கேட்க அவன் குளிக்கச் சென்றிருப்பான் என்று எண்ணியவள், பெட்டியை திறந்து துணிமணிகளை எடுத்து அங்கிருந்த பீரோவில் அடுக்கலானாள்.

 

இருபது நிமிடம் கடந்திருக்கும் குளியலறை கதவை திறந்து ஆதி இடுப்பில் துண்டுடன் வெளியில் வந்தான். “நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டவன் அங்கிருந்த இன்னொரு துண்டை எடுத்து உடம்பில் போர்த்துக் கொண்டான். “இல்லை அத்தை அத்தை தான் நீங்க ஆபீஸ் கிளம்புறீங்க உங்களுக்கு என்ன வேணுமோ கேக்க சொன்னாங்க, நீங்க குளிச்சுட்டு இருந்தீங்க அதான் துணி எல்லாம் எடுத்து பீரோல அடுக்கிட்டு இருந்தேன்” என்றாள்.

 

“உனக்கு பிரஷ் பண்ற எண்ணம் எல்லாம் இல்லையா” என்றான் அவன். “பண்ணனும் நீங்க குளிச்சுட்டு வந்த பிறகு தானே நான் உள்ளே போகமுடியும்” என்றாள் அவள். “ஏன் அங்க ஒரு வாஷ்பேசின் இருக்குல்ல அதுல போய் பிரஷ் பண்ணி இருக்க வேண்டியது தானே” என்றான் அவன். அவள் அப்போது தான் அங்கு ஒரு வாஷ்பேசின் இருப்பதை பார்த்தாள்.

 

“நான் இன்னைக்கு தானே இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன், எது எது எங்க இருக்கும்ன்னு எனக்கு எப்படி தெரியும்” என்றாள் அவள். அவள் சொன்னதில் இருத்த உண்மையை அவன் அப்போது தான் உணர்ந்தான். பீரோவின் அருகில் சென்று அவன் உடைமைகளை எடுத்தவன் “நீ போய் குளிக்கறத்துன்னா போய் குளி” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஒரு அறைக்குச் சென்றான்.

 

அதற்குள் பீரோவில் துணியை அடுக்கி முடித்திருந்தவள் அவள் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு விரைந்தாள். பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வெளியில் அவள் வர அவனும் தயாராகி இருந்தான். “உன்கிட்ட பேசணும், அதுக்கு முன்ன இங்க வா” என்று அவளைக் கூட்டிச்சென்று அவர்கள் அறையை சுற்றிக் காட்டினான்.

 

“இது தான் நம்ம படுக்கையறை, இது என்னோட அலுவலக அறையா நான் பயன் படுத்றிட்டு இருக்கேன், இனிமே நீ வேணா இதை உன்னோட அறையா பயன்படுத்திக்கோ, இந்த கோப்புகள் எல்லாம் அந்த கண்ணாடி பீரோவிலே இருக்கட்டும், இதெல்லாம் முக்கியமான கோப்புகள். அப்புறம் இந்த கண்ணாடி பீரோவில் இருக்கற புத்தகம் எல்லாம் வேளாண்மை பற்றியதா இருக்கும். வேற புத்தகங்களும் இருக்கும் படிக்கறதான படி” என்று சொல்லிவிட்டு மேலும் அந்த வீட்டை பற்றி அவன் அவளுக்கு ஆசிரியர் போல் சொல்லிக் கொடுக்க அவளும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஏதோ தோன்ற எழுந்து சென்றவன் கையில் பணத்துடன் வந்தான் “இந்தா இதை வீட்டு செலவுக்கு வைச்சுக்கோ, தீர்ந்து போனதும் சொல்லு நான் திரும்ப கொடுக்கிறேன்” என்று அவளிடம் ஐந்தாயிரம் ரூபாயை திணித்தான். தன்னை நம்பி அவன் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்ததை எண்ணி மகிழ்ந்தவள் அவளுக்கு அடுத்த நிமிடம் அவன் சொன்னது வேதனையை கொடுத்தது.

 

“அப்புறம் நான் திரும்ப திரும்ப சொல்லறேன்னு நினைக்காதே, உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட கேளு, எனக்கு என்ன வேணுமோ அதை நானே பார்த்துக்குவேன். அம்மா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு சொல்லி என்கிட்ட எந்த காரணமும் சொல்லாதே. அப்படி நீ சொல்லறதுக்கு இனி வாய்ப்பு இருக்காது. ஏன்னா எல்லாரும் நாளைக்கு அங்க வீட்டுக்கு போய்டுவாங்க. நீ குழந்தைங்களை பார்த்துக்கற வேலையை மட்டும் பார்த்தா போதும்” என்றான் அவன். அவன் வேலையை என்று சொன்னது அவளுக்குள் வலியை ஏற்படுத்தியது.

 

“நேத்து நீங்க அவ்வளவு தூரம் பேசின பிறகும் நான் அப்படி நடந்துக்குவேன்னு நீங்க நினைக்கிறீங்களா, இனி தேவை எதுவும் இல்லாமல் உங்ககிட்ட பேசமாட்டேன். நீங்க ஏன் திரும்ப திரும்ப என்கிட்ட அதையே சொல்றீங்க, உங்களுக்கு சொல்லிக்கிறீங்களா, இல்லை எனக்கு சொல்றீங்களா. அப்புறம் ஒரு கேள்வி” என்று நிறுத்தினாள்.

 

‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “நீங்க குழந்தைங்களை பார்த்துக்க ஒரு நல்ல வேலைக்காரியை ஏற்பாடு பண்ணி இருக்கலாமே, எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, சம்பளம் இல்லாத வேலைக்காரின்னு நினைச்சா கட்டிகிட்டீங்க. நான் அவங்களை நம்ம குழந்தைங்களா நினைக்கிறேன், நீங்க அதை வேலைன்னு சொல்றீங்க” என்று நறுக்கு தைத்தார் போல் கேட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

 

‘என்ன சொல்லிவிட்டேன் ஏதோ தெரியாமல் அந்த வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டேன், அதற்கு இவள் என்னவெல்லாம் கேட்கிறாள், இதற்கு தான் நான் கல்யாணமே வேண்டாம் என்றேன். எங்கே கேட்டார்கள் குழந்தைகளை காரணம் காட்டியே என்னை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

 

எப்படி தேள் கொட்டுவது போல் என்னை கேள்வி கேட்டுவிட்டு போகிறாள், இராட்சசி யாருமே என் முன் நின்று இப்படி கேள்வி கேட்டதில்லை, அவர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு அவன் வைத்துக் கொண்டதுமில்லை. அவளின் மீதான அவன் கோபம் அதிகமாகியது.

 

‘ஏன் திரும்ப திரும்ப என்கிட்ட அதையே சொல்றீங்க, உங்களுக்கு சொல்லிக்கிறீங்களா, இல்லை எனக்கு சொல்றீங்களா’ என்று அவள் கேட்டது அவன் இன்னமும் காதில் ஒலித்தது அவனுக்கே அந்த சந்தேகம் இருந்தது அவன் மீண்டும் மீண்டும் சொல்லியது அவளுக்கா இல்லை அவனுக்கா என்று. ஆனால் அவன் தேடலின் பலன் அப்போதைக்கு பூஜ்யமாகவே இருந்தது.

 

இனி பழைய மாதிரி நாம் வேலையில் மூழ்கினால் தான் இது போன்ற எண்ணங்களை ஒதுக்க முடியும் என்று முடிவு செய்துக் கொண்டு அவன் வேலைக்கு கிளம்ப ஆயத்தமானான். கிளம்பி வெளியில் வந்தவன் உணவு மேஜைக்கு வர அனைவரும் உட்கார்ந்திருந்தனர். “ஆதர்ஷா எல்லாரும் சாப்பிடட்டடும், வாயேன் நீயும் நானும் பரிமாறுவோம்” என்றாள் அவள்.

 

“சரிங்கண்ணி” என்று அவளும் எழுந்து வந்தாள். “நானும் பரிமாறுறேன்” என்ற மாமியாரை நீங்களும் சாப்பிடுங்கள் அத்தை என்று அமரச் செய்தாள். பேச்சி உள்ளே இருக்க அவரையும் அழைத்து வந்து மேஜையில் அமர வைத்தாள், பேச்சி ரொம்பவும் சங்கடப்பட்டு போனார்.

 

“என்ன பேச்சி அத்தை நீங்களும் நம்ம குடும்பத்தில ஒருத்தர் தானே, நீங்க மட்டும் உள்ள தனியா எங்களை விட்டு சாப்பிடுவீங்களா, உட்காருங்க நாங்க ரெண்டு பேரும் உங்களை நல்லா கவனிச்சுக்கறோம்” என்று எல்லோருக்கும் பரிமாறினார்கள் இருவரும். ஆதிரா தப்பித் தவறிகூட ஆதியின் பக்கம் செல்லவில்லை. ஆதர்ஷாவே அவனுக்கு பரிமாருமாறு பார்த்துக் கொண்டாள்.

 

ஆதி நல்லதாக போயிற்று என்று நினைத்துக் கொண்டான், இருந்தாலும் மனதில் ஓரத்தில் அவளின் அந்த உதாசீனம் அவனுக்குள் ஒரு வலியை தந்தது. கவினும் அவர்கள் அருகில் இருந்து எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான். “ஹைய் நானும் தனியா சாப்புவேன், அம்மா என்கு தனியா தட்டு, புவா போடும்மா” என்றான் குழந்தை.

 

அப்போது உள்ளறையில் இருந்து கவினியின் அலறல் கேட்க ஆதிரா உள்ளே விரைந்தாள். குழந்தை கனவில் எதையோ கண்டு பயந்து “அம்மா, அம்மா” என்று அழ ஆதிரா ஓடிச்சென்று கவினியை தூக்கி அணைத்தாள். “அம்மா அம்மா” என்று அழுத குழந்தை அவளை இருக்கக் கட்டிக் கொண்டது. “அழாதே செல்லம், அம்மா உன்கூடவே தான் இருக்கேன்டா. பயப்படாத அம்மு, அம்மா இருக்கேன்டா” என்று கூறி அவளை சமாதானபடுத்தினாள்.

 

அதற்குள் ஆதியும் கையை கழுவிவிட்டு உள்ளே வந்தான். “என்னாச்சு, என்னம்மா இங்க வாங்க அப்பாக்கிட்ட வாங்க” என்று அவன் கையை நீட்ட குழந்தை ஆதிராவை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டு, “வேணாம் அம்மா தான் வேணும்” என்று மீண்டும் விசும்ப ஆதிரா கண்கள் கலங்கினாள்.

 

எங்கே கவினி தன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டாளோ என்று நினைத்திருந்தவளுக்கு அவளின் அம்மா தான் வேணும் என்ற சொல் அவள் உயிர் வரை சென்று இனித்தது. இது போதும் இந்த மழலைகளின் சந்தோசம் மட்டும் போதும் என்று எண்ணி கலங்கினாள் அவள்.

 

அதற்குள் எல்லோரும் அங்கு வந்து சூழ்ந்து கொள்ள கவினி ஆதிராவை இருக்க கட்டிக்கொண்டு அம்மா அம்மா என்றதை கண்டு அவர்களும் மனம் குளிர்ந்தனர். “அம்மா உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன் உன்கூடவே இருப்பேன்” என்று ஆதிராவும் அவளை கட்டி அணைக்க “ஏம்மா அழற” என்று அவள் ஆதிராவின் கண்ணீர் துடைக்க அந்த இனிய சூழல் எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்க “அம்மா என்னை தூக்கும்மா, கவின் குட் பாய் அம்மா” என்று கவின் அவள் புடவையை இழுக்க அவனையும் ஒருகை கொண்டு தூக்கி இன்னொரு தோளில் சாய்த்துக் கொண்டாள். ‘ச்சே இவள் எப்படி நடந்துக் கொள்கிறாள் நம் குழந்தைகளிடம், நாம் வேறு இவளிடம் முட்டாள்தனமாக பேசிவிட்டோமே” என்று நினைத்தான் ஆதி.

 

“வீட்டில யாரும் இல்லையா” என்ற குரல் கேட்க அனைவரும் வாசலுக்கு விரைந்தனர். “வாங்க மதினி” என்று ஆதிராவின் பெற்றோரை வரவேற்றார் ஆதியின் அன்னை. “வாங்க மாமா, வாங்க அத்தை, அம்மா அவங்களுக்கு சாப்பாடு வைங்க” என்றான் ஆதி. “இருக்கட்டும் மாப்பிள்ளை நாங்க சாப்பிட்டாச்சு, சூர்யாவை காலேஜ் கிளம்பச் சொல்லிட்டு நாங்க இங்க வந்துட்டோம்” என்றார் சங்கரன்.

 

‘அய்யோ அவன் கல்லூரிக்கு கிளம்பிவிட்டானா, நாமும் தான் இன்று கல்லூரிக்கு செல்லவேண்டும்’ என்று நினைத்த ஆதர்ஷா “அம்மா எனக்கும் காலேஜ்க்கு டைம் ஆச்சும்மா, நானும் கிளம்பணும் என்று அவசரப்பட்டாள்” அவள். “நீயும் சூர்யா படிக்கற காலேஜ்ல தானேம்மா படிக்கற, சரி சரி நீ காலேஜ் கிளம்பு” என்றார் கோமதி.

 

விதியா இல்லை வேண்டுமென்று நிகழ்ந்ததா என்று தெரியவில்லை, சூர்யா அப்போது உள்ளே வந்து கொண்டிருந்தான். “என்ன சூர்யா காலேஜ் கிளம்பிட்டு இருக்கன்னு அத்தை சொன்னாங்க. என்ன காலேஜ் கட் அடிச்சுட்டியா” என்றான் ஆதவன்.

 

“இல்ல சின்னத்தான் அம்மா கிளம்பற அவசரத்துல வீட்டு சாவி எடுத்துவர மறந்துட்டாங்க அதான் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். இந்தாங்கம்மா” என்று அவரிடம் கொடுத்துவிட்டு அவன் எல்லோரிடம் விடைபெற எத்தனிக்க “சூர்யா கொஞ்சம் நில்லுப்பா, மதினி ஆதர்ஷா காலேஜ்க்கு எப்படி போவா” என்றார் கோமதி.

 

“அவ காலேஜ் பஸ்ல தான் போவா அந்த பஸ் அங்க வீட்டுக்கு கிட்ட தான் வரும், இங்க இருக்கறதுனால ஆதவனை தான் அனுப்பனும்” என்றார் லட்சுமி. “நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஆதர்ஷா சூர்யாவோடவே காலேஜ் போகலாமே, அவன் கார்ல தான் போகப் போறான்” என்றார் அவர் அனுமதி வேண்டி.

 

லட்சுமி திருதிருவென விழிக்க (லட்சுமி விழிக்க காரணம் இருக்கிறது, பெண் பிள்ளையை ஒரு ஆணுடன் தனித்து அனுப்ப அவர் சற்று யோசிக்க, இதில் தப்பொன்றும் இல்லை என்று அவருக்கு தெரிந்திருந்தாலும் கணவரும் மகன்களும் என்ன சொல்லுவார்களோ, நாம் வேறு தேவையில்லாமல் ஏன் வாயை விடுவானேன் என்று தான் அவர் முழித்தார்), “அதுக்கென்னம்மா சூர்யா கூட்டிப் போகட்டும், மாப்பிள்ளை உங்களுக்கு ஒண்ணும் சங்கடம் இல்லையே” என்று அருணாசலம் கேட்க “அவனுக்கு எதுக்கு சங்கடம் ஆதர்ஷாவை அவனா சுமக்க போறான், வண்டி தானே சுமக்க போகுது. என்னப்பா சூர்யா சரி தானே” என்றார் சங்கரன். “சரி தான்ப்பா” என்றான் அவன்.

 

‘இந்த லூசு அன்னைக்கே நம்மளை அப்படி பருக்கு பருக்குன்னு பார்த்துச்சு  என்ன ஆகப்போகுதோ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியில் சிரித்தவாறே இருந்தான் சூர்யா. ஆதர்ஷாவை கேட்க வேண்டுமா “ஒரு நிமிஷம்” நான் என்னோட தோள் பை எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லி உள்ளே சென்றவள், சந்தோசத்தில் ஒரு குதியாட்டம் போட்டுவிட்டே வெளியில் வந்தாள்.

 

எல்லோரிடமும் விடைபெற்று அவர்கள் கல்லூரிக்கு கிளம்பினர். “ஆதர்ஷா இந்தா நீ டிபன் சாப்பிடாம போற, இதை எடுத்து போ” என்று ஒரு டிபன் பாக்சில் காலை உணவை அடைத்துக் கொடுத்தாள் ஆதிரா. (இவர்கள் என்ன செய்தார்கள் என்று பிறகு பார்ப்போம் இப்போது நாம் இங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்)

 

சங்கரனும் கோமதியும் அவர்களுக்கு வீட்டிற்கு தேவையானதை வாங்கி கொடுத்துவிட்டு அன்று மதியம் அங்கேயே உணவருந்தினர். ஆதியும் அவன் தந்தையும் அவர்களிடம் விடைபெற்று அலுவலகத்திற்கு சென்று விட்டனர், ஆதவனும் அவனுடைய அலுவல்களை பார்க்கச் சென்று விட்டான். மாலையில் சீக்கிரமே வீடு திரும்பினர் ஆண்கள் இருவரும். “மருமகனே நீங்க நம்ம வீட்டுக்கு மறுவீட்டுக்கு வரணும், என்னைக்கு வர்றீங்கன்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க” என்றார் சங்கரன்.

 

‘என்னம்மா இது’ என்று அவன் எப்போதும் போல் லட்சுமியை பார்க்க, ‘இவன் வேறு யாராவது ஏதாவது கேட்டால் என்னை பார்த்து வைக்கிறான். இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நான் தான் உரல் எல்லோரும் என்னையே இடிக்கிறார்கள்’ என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

 

“ஆமாம்ப்பா போகணும் இல்லையா” என்றார் அவர். “ஞாயிற்று கிழமை வேணா போயிட்டு வாங்களேன்” என்று ஐடியா கொடுத்தார் அருணாசலம். “என்ன சம்மந்தி போயிட்டு வாங்களா, நீங்களும் எல்லாரும் வரணும்” என்று செல்லமாகக் கடிந்தார் ஆதிராவின் தந்தை.

 

“இல்லைப்பா, ஞாயிற்றுக்கிழமை வேண்டாம், வேண்டுமானால் புதன்கிழமை வருகிறோம்” என்றாள் அவள். “என்னம்மா என்னாச்சு” என்றனர் எல்லோரும். “ஒண்ணும் இல்லை அன்னைக்கு நாள் நல்லா இல்லை அதான் சொன்னேன்” என்று சமாளித்தாள் அவள். எல்லோரையும் அவர்கள் அழைத்துவிட்டு ஆதிராவின் பெற்றோர் வீட்டிற்கு கிளம்பினர், ஆதிரா அவனுக்கு காபி போட்டு எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள். இயந்திரமாக அவனிடம் சென்றவள் “தப்பா எடுத்துக்காதீங்க, அத்தை மாமா இங்க இருக்க வரைக்கும் என்னோட இந்த பணிவிடைகளை நீங்க பொறுத்துக்கணும், உங்க பேச்சை மீறுறதா நினைக்காதீங்க” என்று அவனுக்கு காபி கொடுத்தாள்.

 

“ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றான் அவன். அவள் நின்று அவனை திரும்பிப் பார்த்தாள், “ஏன் உங்கவீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போகவேணாம் சொன்ன, நீ அவங்களை ஏதோ சொல்லி ஏமாத்திட்ட, எனக்கென்னமோ அது உண்மை போல தோணலையே. என்ன காரணம்” என்றான் அவன்.

 

அவள் அப்படி அவர்களிடம் சொல்லும்போது அவன் அவள் முகத்தை பார்த்திருந்தான், அவர்கள் கேள்வி கேட்க அவள் வாயில் வந்ததை உளறியது போன்று தோன்றியது. “நீங்க நினைச்சது சரி தான், நீங்க அன்னைக்கு உங்க நண்பர்களை பார்க்க போவீங்கள்ல அதான் அன்னைக்கு வேணாம்ன்னு சொன்னேன்” என்றாள் அவள். ‘”அதெப்படி உனக்கு தெரியும்” என்றான் அவன்.

 

அவனின் அந்த கேள்வியில் அவளுக்கு சட்டென்று வியர்த்தது, “அது அது வந்து அத்தை அத்தை தான் சொன்னாங்க” என்றாள். ‘வந்த ரெண்டு நாளில் இவள் நம்மை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டான் அவன். அவள் சொல்லியபின் தான் அவனுக்கு நினைவு வந்தது, ஹரிணி உண்டானதில் இருந்து அவனால் அவன் நண்பர்களை பார்க்க முடியவில்லை.

 

எப்போதாவது பார்த்து கொண்டிருந்தவர்களை அவள் இறந்த சோகத்தில் அவன் சுத்தமாக பார்க்க செல்லவில்லை. அவர்களும் ஹரிணியின் இறப்பிற்கு வந்த சென்றபின் அவனை தொந்திரவு செய்ய நினைக்கவில்லை. இருந்தும் அவன் சோகம் மாறவேண்டும் என்று அவனை சில தடவை வெளியில் செல்ல அழைத்தனர், ஆனால் அவன் தான் மறுத்துவிட்டான், என்ன இருந்த போதும் அவன் அவர்களுடம் போனில் பேசத் தவறுவதில்லை.

 

ஆதிராவின் பேச்சில் அவனுக்கு அவன் நண்பர்களை பார்க்க வேண்டும் என்று தோன்ற உடனே, ராஜீவிற்கு போன் செய்தான். “ராஜீவ் நான் ஆதி பேசறேன்” “நாங்க ஊருல இருந்து வந்தாச்சு”, இந்த வாரம் நாம எல்லாரும் சந்திப்போமா” என்றான். “இம் சரி நீயே எல்லாரையும் வரச் சொல்லிடு, இடத்தை நான் அப்புறம் சொல்லறேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான். அதற்குள் ஆதிரா அந்த இடத்தை காலி செய்திருந்தாள்.

 

மறுநாள் ஆதியின் பெற்றோர், ஆதவன், ஆதர்ஷா அவர்களிடம் விடைபெற்று அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட ஆதிராவுக்கு வீடே வெறிச் சென்று இருந்தது போல் இருந்தது. எல்லோரும் ஒன்றாக இருக்கலாமே, இப்போதே எதற்கு தனித்குடித்தனம், எல்லோரும் சந்தோசமாக கூட்டுக் குடும்பமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஆதிரா.

____________________

ஆதர்ஷா சந்தோசமாக எல்லோரிடம் விடைபெற்று சூர்யாவின் காரில் ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தாள். போகலாமா என்பது போல் அவன் தலையசைத்துக் கேட்க அவள் தலை தன்னையறியாமல் ஆடியது. நல்லவேளை இவ அந்த கீர்த்தி மாதிரி என்னை பேசியே கொல்லலை, ஆனா பார்த்துக் கொல்லுறாலே. எதுக்கு இப்படி பார்க்குறா என்று விழித்தான் அவன்.

 

அவளின் மனநிலையோ குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது, அவள் நாயகன் அருகில் தனிமையில் அவனுடன் அவள் கல்லூரி வரை செல்லப் போகிறாள் அந்த எண்ணமே அவளுக்கு இனித்தது. அவன் ஏதாவது பேசுவானா என்று அவனை பார்க்க அவனோ எனக்கென்ன என்பது போல் வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தான். ‘கடவுளே இவனுக்கு என்று தான் புரியும் என் மனதை பற்றி, இப்படி எந்த உணர்ச்சியும் காட்டாமல் வந்துக் கொண்டிருக்கிறான் என்று மனம் நொந்தாள் அவள்.

 

இவனுக்கு கீர்த்தி மாதிரி ஆள் தான் சரியாக இருப்பாள், அவள் பேசுகிற பேச்சில் இவன் வாயை திறந்து கொஞ்சமாவது பேசுவான், ஒருவேளை நானும் அப்படி பேசவேண்டும் என்று நினைக்கிறானோ, எப்படி ஆரம்பிக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டே வந்ததில் கல்லூரியே வந்துவிட்டது.

 

காரில் இருந்து இறங்கியவள் என்ன பேசுவது என்று முழிக்க, ‘என்ன இந்த பிள்ளைக்கு ஒரு மட்டு மரியாதைகூட தெரியலை. கூட்டிட்டு வந்துவிட்டதுக்கு ஒரு நன்றிகூட சொல்லாம நிக்குத்து, சரி நம்ம வேலை முடிஞ்சது கூட்டிட்டு வந்து விட்டாச்சு’ என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டே காரின் கதவை அடைத்து பூட்டினான்.

 

அதற்குள் தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் நின்றிருந்த நம் சூர்யாவின் தோழர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். “என்னடா மச்சான் நம்ம நாட்டு புறத்தான் ஒரு அழகான பட்டணத்து குயிலோட வந்து இறங்குறான். இவனையே நாம இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் மாத்தி அந்த ஊரு பேச்சு குறைஞ்சு போயிருக்கு. ஆனா பய இந்த விஷயத்துல ரொம்ப கெட்டியா இருக்கானே. டேய் அந்த பொண்ணு ECE., முதலாம் வருஷம் தானே படிக்குது. அதுக்குள்ள இவன் எப்படி அதை புடிச்சான் என்று பேசிக் கொண்டே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

“என்னடா சூர்யா இது அண்ணியா, பரவாயில்லை நல்லா தேறிட்ட. நீ ஊருக்கு உங்க அக்கா கல்யாணத்துக்கு தானே போனே. ஆனா இது எப்ப நடந்துச்சு. ஊருக்கு போறதுக்கு முன்னவே வா” என்று அவன் நண்பர்கள் அவள் முன்னமே கேட்டு வைக்க, அவனுக்கு கோபம் இமயமலை அளவுக்கு வந்தது.

 

“என்னடா விட்டா ரொம்ப பேசிட்டே போறீங்க. அந்த பொண்ணை நான் இப்போ தான் பார்க்குறேன். அவங்க என் அக்காவோட நாத்தனார், அவங்க நம்ம காலேஜ் தான் எனக்கே இன்னைக்கு தான் தெரியும். அம்மா சொன்னாங்களேன்னு தான் நானே அவங்களை என்னோட வண்டில கூட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள என்னேன்னமோ பேசுறீங்க. இனிமே நீங்க யாரும் என்கூட பேசாதீங்கடா. எப்போ பார்த்தாலும் எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்த்துக்கிட்டு” என்று கூறி விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

“சாரி சிஸ்டர், தப்பா பேசியிருந்தா மன்னிச்சுருங்க. அவன்கிட்ட சொல்லி கொஞ்சம் சமாதானம் பண்ணி வைங்களேன், எங்களை மாதிரியே அவனையும் நினைச்சு பேசிட்டோம். ஆனா அவன் ரொம்ப நல்ல பையன் அவன மாதிரி ஒருத்தன் எங்களுக்கு நண்பனா கிடைச்சதுக்கு நாங்க ரொம்ப கொடுத்து வைச்சு இருக்கணும்.

 

“எல்லாருக்கும் உதவுற குணம், தப்பை தப்புன்னு தட்டி கேக்குற தைரியம்ன்னு அவன் ரொம்ப நேர்மையா இருக்கணும் நினைக்கிறவன். உங்களை அவனோட இணைச்சு தேவையில்லாம பேசி, இப்போ  அவன் எங்ககூட பேச மாட்டேன் சொல்லிட்டான். அவன் சொன்னா சொன்ன மாதிரி செய்யறவன். தயவு செய்து எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன்” என்று கெஞ்சினர் அவன் நண்பர்களில் ஒருவன்.

 

சரியென தலையாட்டியவன் கோபமாக சென்று அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்த அவனிடம் போய் நின்றாள். அவளுக்கு அவனிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை, இது தான் அவனிடம் பேச்சு கொடுப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் என நினைத்து ஆரம்பித்தாள். “வந்து வந்து” என்றாள்.

 

அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன” என்றான். “வந்து அவங்க பேசினது தப்பு தான் பாவம் என்கிட்ட அதுக்கு அவங்க மன்னிப்பு கேட்டுட்டாங்க. நீங்க அவங்ககூட பேசலைன்னு வருத்தப்பட்டாங்க. ப்ளீஸ் அவங்களை கொஞ்சம் மன்னிச்சு அவங்ககூட பேசுங்களேன்” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.

 

“நீ யாரு” என்றான் அவன். அவள் முழிக்க “நீ யாரு எங்களுக்கு நடுவுல, நாங்க இன்னைக்கு சண்டை பிடிப்போம் நாளைக்கு பேசிகிடுவோம். நீ எதுக்கு நடுவுல வந்து நாட்டாமை பண்ற, உன் வேலை என்னமோ அதை போய் பாரு. தேவையில்லாத விஷயத்துல எல்லாம் தலையிடாதே.

 

“அவனுங்க செஞ்ச அதே தப்பை நீயும் செய்யாதே, அவனுங்களுக்கு வேணும்னா அவனுங்களே என்கிட்ட வந்து பேசுவானுக. நீ கிளம்பு உன்னை கூட்டிட்டு வந்ததோட உன் சோலி முடிஞ்சது” என்றான் அவன் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல். அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, எதுவும் பேசாமல் அந்த இடத்தை காலி செய்தாள் அவள்.

 

“என்னடா அந்த பொண்ணை என்ன சொன்ன அழுதுட்டே போகுது, நாங்க பண்ண தப்புக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும்” என்று அவன் பேசுவதை கேட்டுவிட்டிருந்த அவன் நண்பர்கள் நெருங்கி வந்து அவனிடம் கேட்டனர். “அந்த பொண்ணு ரொம்பவும் அமைதிடா, வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. நம்ம பசங்க சொல்லி இருக்காங்க அந்த பொண்ணை பத்தி” என்று அவர்கள் பேசிக்கொண்டே போக அப்போது தான் அவள் அழுதுக் கொண்டே செல்வதைக் கண்டான் அவன்.

 

‘நாம அவளை ரொம்ப திட்டிட்டோமோ, இல்லையே அவளுக்கு நல்லா தானே பேச வருது, இவனுங்களுக்காக வந்து நாட்டாமை பண்ணாளே, கூட்டிட்டு வந்து விட்டானே ஒரு நன்றி சொல்லுவோம்கற எண்ணம் கூடவா ஒரு படிச்ச பிள்ளைக்கு இருக்காது. நாம நல்லா உரைக்கற மாதிரி தான் சொன்னோம். நாம பேசினதுல எதுவும் தப்பில்லை என்று நினைத்துக் கொண்டான் அவன்.

 

 

இரண்டு பிள்ளைகள்

உண்டென்று பெருமை

கொண்டிருந்த எனக்கு

உன் வார்த்தைகள்

சம்மட்டியாய்….

அம்பாய்…

என் நெஞ்சை தைக்க

ஊமையாய் அழுதது

என் நெஞ்சம்…

 

நீ என்ன சொல்வது

நான் வேண்டாமென்று…

உனக்கொன்று தெரியுமா

என் பிள்ளைகள்

சொல்லிவிட்டார்கள்

நான் அவர்களுக்கு

வேண்டுமென்று…

 

நான் வேண்டிய

வரம் நீ…

நான் வேண்டாத

வரம் நம் பிள்ளைகள்…

நான் கேட்ட

வரம் கொடுத்த

இறைவன்…

நான் கேளாமல்

எனக்கு கொடுத்த

வரம் நம் பிள்ளைகள்…

 

 

 

 

 

அத்தியாயம் –8

 

எல்லோருமாக ஆதியுடனும் ஆதிராவுடனும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு செல்ல சூர்யாவும் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தான். அன்று கல்லூரியில் ஏற்பட்டிருந்த மனகசப்பில் ஆதர்ஷாவுக்கு அவனை மீண்டும் பார்க்கும் எண்ணம் இல்லாததால் அவள் கல்லூரிக்கு செல்வதாக கூறி கிளம்பிவிட்டாள். அவளை அனுப்பிவிட்டே அவர்கள் ஆதிராவின் வீட்டிற்கு சென்றனர்.

 

எல்லோரையும் வரவேற்று உள்ளே அமர வைத்தனர். “என்ன மதினி ஆதர்ஷாவும், ஆதவன் தம்பியும் வரலையா” என்றார் கோமதி. “இல்லை மதினி, ஆதர்ஷாவுக்கு காலேஜ் இருக்கு அதான் போய்ட்டா, ஆதவன் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன் சொன்னான். அதான் நாங்க எல்லோரும் வந்துட்டோமே மதினி” என்றார் லட்சுமி.

 

“ஆதிரா மாப்பிள்ளை உள்ளே கூட்டிட்டு போம்மா, அவர்க்கு தேவையானதை பார்த்து செய்ம்மா, மாப்பிள்ளை நீங்க போய் கொஞ்சம் ஓய்வு எடுங்க” என்றார் சங்கரன். அதன் பின் சம்மந்திகள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். சூர்யாவுக்கு ஆதர்ஷா வராமல் இருந்தது சுருக்கென்று இருந்தது.

 

ஒருவேளை ‘நாம் பேசியதால் தான் வரவில்லையோ. நம் முகத்தில் எப்படி விழிப்பது என்று தான் வரவில்லையோ’ என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க அவன் அவனுடைய வீட்டிலும் தனியாக உணர்ந்தான். நல்லவேளை கவினும் கவினியும் ஓடி வந்தனர் அவன் தனிமையை போக்கவென்று.

 

ஆதிரா ஆதித்தியனை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள், “சாரி அம்மா சொன்னாங்களேன்னு தான் வந்தேன். இதெல்லாம் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு தானே கொஞ்சம் பொறுத்துக்கோங்க. உங்களுக்கு எதாவது வேணுமா” என்றாள் அவள்.

 

“இல்லை எதுவும் வேணாம்” என்றான் அவன். அவனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவன் தர்ம சங்கடம் புரிந்து அவள் “நான் போய் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வர்றேன்” என்று வெளியில் எழுந்து சென்றாள். அவள் சென்றது அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது.

 

ஆனால் சங்கடமாகவும் இருந்தது. அவன் அந்த அறையை சுற்று முற்றும் ஆராய்ச்சி செய்தான், சுவரில் அழகான ஓவியங்கள் மாட்டி இருக்க எழுந்து சென்று அதன் அழகை ரசித்தான். அங்கு இருந்த அலமாரியில் சில புத்தகங்கள் இருக்க அதை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சில காகிதங்கள் இருக்க அதில் அழகாக படம் வரையப்பட்டிருந்தது, ஒரு வேலை இந்த ஓவியங்கள் எல்லாம் இவள் வரைந்ததாக இருக்குமோ என்று மேலும் பார்த்தவனின் கண்களில் ஒரு டைரி தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்து அதன் முதல் பக்கம் பார்க்க ஆதிரை லட்சுமி என்று எழுதப்பட்டிருந்தது.

 

‘ஹோ இவள் முழுப்பெயர் ஆதிரை லட்சுமியா’ என்று நினைத்துக் கொண்டே அடுத்த பக்கங்களை புரட்டுவதற்குள் அறைக்குள் ஜூஸுடன் உள்ளே நுழைந்தாள். அவன் கைகளில் அவளின் டைரி இருப்பதைக் கண்டு அவளுக்கு லேசாக வியர்த்தது. “இந்தாங்க ஜூஸ்” என்று அவனிடம் பேசிக் கொண்டே, “அதை இப்படி வைங்க” என்று அவனிடம் இருந்து டைரியை வாங்கி அவன் பார்க்காத தருணத்தில் எடுத்து உள்ளே ஒளித்து வைத்தாள்.

 

“ஆதிரை லட்சுமி தான் உன் முழுப்பெயரா” என்றான், “ஆமாம்” என்றாள் அவள். “உனக்கு எப்படி அந்த பெயர் வந்தது” என்றான் அவன். “நான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்ததால் ஆதிரை என்று வைத்தனர், ஒரே பெயராக இருந்ததால் லட்சுமியையும் சேர்ந்து வைத்துவிட்டனர்” என்றாள்.

 

“நானும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன், உங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஆ வரிசையில் பெயர் வைத்திருக்கிறீர்களே, என்ன காரணம்” என்றாள் அவள்.

 

“அதுவா நானும் ஆதவனும் சிறு வயதில் எங்கள் தாத்தா வீட்டில் தான் வளர்ந்தோம், எங்கள் தாத்தாவிற்கு உழவு தான் மூச்சு. நான் பிறந்த போது அந்த உழவிற்கு மூச்சான அந்த கதிரவனின் பெயரை எனக்கு வைக்க நினைத்தார். அதனால் எனக்கு ஆதித்தியன் என்றும் என் தம்பிக்கு ஆதவன் என்றும் பெயரிட்டார் அவர்.

 

“ஆதர்ஷா பிறக்கும் போது அவர் உயிருடன் இல்லை, எங்கள் இருவருக்கு ஆ வரிசையில் பெயர் இருந்ததால் அவளுக்கும் அதே வரிசையில் பெயர் வைக்க முடிவு செய்தோம். என்னோட பால்ய நண்பன் ஆதர்ஷின் நினைவில் நான் அவளுக்கு ஆதர்ஷா என்று பெயர் வைக்க வேண்டும் என்று அடம்பிடிக்க என் அப்பாவும் அம்மாவும் சரி என்று கூற அதையே வைத்துவிட்டோம்” என்றான் அவன் நீளமாக.

 

கீழிருந்து கோமதி குரல் கொடுத்தது கேட்க, “அம்மா கூப்பிடுறாங்க நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன், நீங்க வேணா டிவி பாருங்க” என்று கூறி டிவியை ஆன் செய்துவிட்டு மறக்காமல் அவளுடைய டைரியை எடுத்துக் கொண்டு சென்றாள். கீழே வந்தவளுக்கு ஆச்சரியம் அவள் உயிர் தோழி நேத்ரா வந்திருந்தாள் அங்கு, “வா சந்திரா, வாம்மா நேத்ரா எல்லாரும் எப்படி இருக்கீங்க” என்று ஒருவர் மாற்றி ஒருவராக அவர்களை வரவேற்றனர்.

 

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, நேத்ரா ஆதிராவை அழைத்துக் கொண்டு பின்புறம் சென்றாள். “வாடி உன்கிட்ட பேசணும் தான் வந்தேன்” என்றாள் அவள். “எப்படி இருக்கடி, உன்னோட ட்ரைனிங் நல்லபடியா முடிஞ்சுதா” என்று ஆதிரா அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஹேய் லூசாடி நீ, நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்லற, சந்தோசமா இருக்கியாடி. நாம நினைச்ச மாதிரி தானே நடந்துச்சு. எந்த ப்ரிச்சனையும் இல்லையே. நான் அங்க போயிட்டேன் தான் பேரு ஆனா உன்னையே தான்டி நினைச்சுட்டு இருந்தேன். உன்னோட தவத்துக்கு பலன் கிடைச்சுடுச்சுடி. நீ கேட்ட வரம் கிடைச்சுடுச்சு சொல்லுடி. உன்னை பார்க்கத்தான் நான் வந்தேன்” என்றாள் நேத்ரா.

 

“எல்லாம் நல்லபடியா நடந்துச்சு நேத்ரா, ஆனா அவர்க்கு தான் என்னைக் கண்டா அவ்வளவா பிடிக்கலை. அதான் கஷ்டமா இருக்கு, மத்தபடி கவின், கவினி ரெண்டு பேரும் என்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாங்க, நான் ரொம்பவும் சந்தோசமா இருக்கேன்டி. அவர்க்கு என்னை எப்ப புரியும் தெரியலை, ஆனா இப்போதைக்கு அவர் நிழலே எனக்கு போதும்டி. அந்த சந்தோசத்துலையே நான் வாழ்ந்துடுவேன்” என்றாள் ஆதிரா. “

 

அத்தான் பத்தி தெரிஞ்சு தானே நீ கல்யாணம் பண்ண, அவருக்கு நீ உன்னை புரியவை, உன்னோட அன்பை முழுசா அவருக்கு புரியவை, உன் காதலோட சக்தி உங்களை நிச்சயமா சேர்க்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றாள் நேத்ரா. தோழிகள் மேலும் ஏதோ பேசிவிட்டு உள்ளே வர எதிரில் ஆதவன் வந்து கொண்டிருந்தான். ஆதவனின் பார்வை ஆதிராவின் அருகில் நின்றிருந்த நேத்ராவின் மீது படிந்தது, நேத்ராவும் அவன் முகம் பார்த்து மலர்ந்தாள்.

 

ஆதவன் அவளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டான். சூர்யாவின் அருகில் சென்று அமர்ந்தான், குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தான். நேத்ராவின் பார்வை முழுதும் அவனிடமே இருந்தது. நேத்ரா ஆதிராவை பார்க்க வந்தது எந்த அளவுக்கு உண்மையோ, அதே போல் அவள் ஆதவனை பார்பதற்காகவும் வந்திருந்தாள்.

 

கண்களில் ஜீவனில்லாமல் இருந்தான் அவன், இலக்கற்று எங்கோ வெறித்தான். இவனுக்கு என் மனதை எப்படி புரிய வைப்பேன் என்று அவள் மனம் நினைக்க, நடந்ததில் என் தவறு எங்கிருக்கிறது, என்னை என்று தான் புரிந்து கொள்ள போகிறாரோ ஆதிராவிடம் இது பற்றி பேசவேண்டும் என்று எண்ணினாள். (ஆதவனுக்கும் நேத்ராவிற்கும் இடையில் என்ன நடந்தது என்பதை பின்னர் பார்க்கலாம்).

 

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அமர, “ஆதர்ஷா கல்லூரியில் இருந்து வந்துவிடுவாள் நாங்கள் கிளம்புகிறோம்” என்று லட்சுமி கிளம்ப ஆயத்தமாக, “என்ன மதினி நீங்க இப்போது தான் வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள கிளம்புறேன் சொல்றீங்க. நீங்க இருங்க நான் வேணா சூர்யாவை அனுப்பி அவளையும் இங்க கூட்டி வரச் சொல்றேன், ஆதவன் தம்பியும் வேணா கூட போய் கூட்டிட்டு வரட்டும்” என்று அவர் கூற சரியென்று லட்சுமி தலையாட்ட, சூர்யாவும் ஆதவனும் கிளம்பினர்.

 

ஆதர்ஷாவை அழைக்க செல்லவேண்டும் என்றதும், மனதிற்குள் ஒரு இதம் வந்தது போல் இருந்தது சூர்யாவுக்கு. அவளை கூட்டி வரும் போது அவகிட்ட சாரி கேட்டுடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அவன் அன்னை ஆதவனையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கூற அவனுக்கு எல்லாம் புஸ்வானமாகப் போனது. ஆதர்ஷா வீட்டிற்கு வந்து சாப்பிட எல்லோருமாக கிளம்பினர். அதில் இரண்டு ஜோடிகள் தங்கள் இணை தங்களை பார்க்காதா புரிந்து கொள்ளாதா என்று ஏங்கியவாறே சென்றனர்.

 

எல்லோரும் வீட்டிற்கு செல்ல, ஆதிரா ஆதியின் காரில் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள். அவளின் ஓவிய திறமையை பற்றி அப்போது தான் அவளுடைய தந்தை அவனிடம் கூறியிருந்தார். அவன் அவளையே ஆச்சரியமாக பார்த்தான். இவள் தான் எவ்வளவு விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாள் ஆனால் எவ்வளவு சாதாரணமாக நடந்து கொள்கிறாள் என்று அவளை நினைத்து அவன் பெருமை கொண்டான்.

 

தன்னை பற்றி அவன் எண்ணுகிறான் என்று தெரியாத அந்த பேதை நெஞ்சம் அவன் மனதில் எப்படி இடம் பிடிக்கப் போகிறோம் என்று யோசனையில் ஆழ்ந்தாள். தினமும் காலையில் வேலைக்கு செல்பவன் இரவு எட்டு மணிக்கே வீட்டிற்கு வருவான். வந்ததும் குளித்துவிட்டு குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடுவான் பின்னர் உணவு முடிந்ததும் மடிகணினியை எடுத்து வைத்துக் கொண்டு வேலை செய்வான்.

 

ஆதிரா, கவின், கவினி உறங்கியதை அறிந்ததும் உறங்கிவிடுவான். இல்லையென்றால் அவள் வந்து உறங்கும் முன் அவன் உறங்கி இருப்பான். அவளிடம் அவன் பேசும் சந்தர்ப்பம் என்பது அரிதாகியது. காலையில் அவன் வேலைக்கு செல்லும் முன் அவனுக்கு தேவையானது எல்லாம் அவனே பார்த்துக் கொள்வான்.

 

எந்த ஒரு வேலையையும் அவள் செய்து விடக்கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இப்படியே அந்த வாரம் ஒரு சோம்பலுடன் கழிய அந்த ஞாயிறு காலை அவன் உறங்கிக் கொண்டிருக்க கவினி வந்து அவனை எழுப்பினாள்.

 

“அப்பா நீங்க எங்க வெளிய போகணுமே அம்மா சொன்னாங்க. எந்திங்கப்பா” என்றாள் அவள். சோம்பலுடன் கண்ணுயர்த்தி பார்த்தவன் எதிரில் ஆதிரா நிற்க, “இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, ஆபீஸ் லீவ் தானே அதான் படுத்து இருக்கேன்” என்றான் அவன். “இல்லை நீங்க உங்க நண்பர்கள் பார்க்க போகணுமே, அதான் எழுப்பினேன்” என்றாள். “ஓ ஆமாமில்லை, மறந்துட்டேன், நல்லவேளை ஞாபகப்படுத்துன என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

 

துண்டை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றான். குளித்து முடித்து அவன் வெளியில் வந்திருக்க, பீரோவில் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தான். ஒருவழியாக அவன் தேடிய சட்டையை எடுத்து பார்த்தால் அதில் ஒரு பட்டன் அறுந்து போயிருந்தது. அதை தூக்கி கட்டிலில் வீசி எறிந்து விட்டு வேறு ஒரு பனியனை எடுத்து அணிந்துக் கொண்டு கிளம்பினான் அவன்.

 

“கவின், கவினி, அம்மா எங்க கூப்பிடுங்க” என்றான், அவன் இப்படி கூப்பிட்டதற்கு நேரடியாக அவளையே கூப்பிட்டிருக்கலாம். ஏனேனில் அவளும் குழந்தைகளின் அருகில் தான் இருந்தாள். “சொல்லுங்க” என்று அவன் முன் சென்று நின்றாள். “நான் கிளம்புறேன், மதியம் வெளிய சாப்பிடுவேன், நைட் வந்து வீட்டில சாப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

 

 

காபி டே – அண்ணா நகர்

 

 

ராஜீவ் – ராதிகா, அர்ச்சனா – ராகுல், கதிர் – அனு மற்றும் அவர்கள் வாண்டுகளையும் அழைத்து சென்றிருக்க ஆதி மட்டுமே தனியாளாக வந்திருந்தான். “என்னடா சிஸ்டர் குழந்தைங்கள் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல, உன் கல்யாணத்துக்கு தான் நாங்க வரலை அவங்களை கூட்டி வந்துருந்தா பர்த்துருப்போம்ல” என்றான் கதிர்.

 

அவனுக்கும் அப்போது அப்படி தான் தோன்றியது, ச்சே நம்மை ஞாபகப்படுத்தி எழுப்பி அனுப்பி வைத்தவளை கூட்டி வராமல் விட்டு விட்டோமே என்று அவனுக்கும் ஒரு உறுத்தல் இருந்தது, ஆனால் அவளை கூட்டி வர அவனுக்கு மனமில்லை. ஒருவேளை அவளும் ஹரிணியை போல் நடந்து கொண்டால் என்று அவன் மனம் நினைக்க, மேலும் ஏதோ ஒன்று அவனை தடுக்க முடிவாக வேண்டாம் அவளை கூட்டி வரவேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

 

ஆனாலும் நண்பர்களை சமாளிக்கவென்று “சாரிடா நான் அதை யோசிக்கலை, அடுத்த முறை கூட்டிட்டு வர முயற்சி பண்றேன், நீங்க வேணும்னா எல்லாரும் ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்” என்றான் அவன்சம்பிரதாயமாக. “அப்பாடா ஒரு வழியா நம்மை அவங்க வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டான்டா, டேய் கண்டிப்பா கறி, மீனு எல்லாம் இருக்கணும்டா எனக்கு. சொல்லிட்டேன் என் வயிறு வாடிச்சுன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவ” என்றான் ராகுல்.

 

“ஏன் அர்ச்சு இவன் இன்னும் இப்படியே தான் இருக்கானா, நீ அவனை மாத்தவே முயற்சி பண்ணலையா. எப்போ பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு இருக்கானே” என்றான் ஆதி. “ஏன்டா ராகுல் இப்படி என் மானத்தை வாங்குற, உனக்கு வேண்டியதை நான் தான் சமைச்சு தரனே அப்புறம் ஏன்டா இப்படி பண்ற” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அவள். எல்லோரும் ஜாலியாக நீண்ட நாட்களுக்கு பின் அரட்டை அடுத்துவிட்டு அஞ்சப்பரில் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். ஆதி எல்லோரையும் ஒரு நாள் இரவு விருந்துக்கு அவர்களை அழைத்திருந்தான்.

 

அவன் வீட்டிற்கு வரும் போது மணி ஏழரையை நெருங்கி இருந்தது, குழந்தைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள் ஆதிரா. அவன் இரவு வீட்டில் சாப்பிடுவதாகச் சொன்னானே, அவனிடம் எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உடைமாற்றி வந்து உணவு மேஜையில் உட்கார பேச்சி அங்கு வந்தார். “ஆதிரா குழந்தைங்களுக்கு நான் சாப்பாடு ஊட்டிக்கறேன், நீ போய் உன் புருஷனுக்கு சாப்பாடு போடும்மா” என்று அவளை விரட்டினார்.

 

தயங்கியாவாறே அவனருகே சென்று அவனுக்கு டிபன் எடுத்து வைத்தாள், நல்லவேளையாக அவன் ஒன்றும் சொல்லவில்லை. சாப்பிட்டுவிட்டு அவன் படுக்கையறைக்குள் நுழைய கட்டிலின் மீது அவன் காலையில் வீசி விட்டு சென்றிருந்த சட்டை அழகாக மடிக்கப்பட்டு இருந்தது, அதை எடுத்துப் பார்க்க அந்த அறுந்திருந்த பட்டன் தைக்கப்பட்டிருந்தது.

 

இரவு அவள் படுக்க வரும் போது “என்ன இது” என்றான் அவன். “இல்லை பட்டன் அறுந்து போய் இருந்துச்சு அதான் எடுத்து தைச்சேன், இந்த ஒரு சின்ன உதவிகூட நான் செய்யக்கூடாதா” என்றாள் அவள். அவள் கேட்டவிதம் அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.

 

மறுநாள் காலை அவள் அவனிடம் “என்னங்க எங்களை அத்தை வீட்டில விட்டு போங்க, அவங்களை பார்க்கணும் போல இருக்கு. பேச்சி அத்தை கோவிலுக்கு போறேன்னு சொன்னாங்க, நாங்க அங்க போய்ட்டு வர்றோம்” என்றாள் அவள். “ஏன் உனக்கே போகத் தெரியாதா” என்றான் அவன். “நாங்க இந்த ஊருக்கு வந்தே சில வருஷங்கள் தான் ஆகுது, எனக்கு இந்த ஏரியா அவ்வளவா தெரியாது” என்றாள் அவள்.

 

“சரி வா” என்று விட்டு அவன் காரை எடுக்கச் சென்றான், குழந்தைகள் ஆச்சி தாத்தா வீட்டிற்கு என்றதும் குதூகலத்துடன் கிளம்பினர். அவர்களை இறக்கிவிட்டு அவன் கிளம்ப எத்தனிக்க, “என்னங்க இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ளே வராம போறீங்க. வாங்க வந்து அவங்களை பார்த்துட்டு போங்க. அவங்களும் சந்தோசப்படுவாங்க இல்ல” என்றாள். சரியென்று அவனும் அவளுடன் உள்ளே சென்றான், ஆதியை பார்த்த லட்சுமியின் முகம் மலர்ந்தது.

 

“வாப்பா, வாம்மா ஆதிரா” என்று அவர் மகிழ்ந்தது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது, ஏதோ வராத விருந்தாளி வந்தது போல் அவர் வரவேற்றார். அவருக்கு தானே தெரியும் ஆதி என்று அந்த வீட்டை விட்டு தனியாக சென்றானோ அதன் பின் அவன் இங்கு அவ்வளவாக வந்ததில்லை என்று.

 

“என்ன குட்டிம்மா, காலேஜ் கிளம்பலியா” என்றான் ஆதர்ஷாவை பார்த்து. அவளும் மகிழ்ந்து போக “எங்க அண்ணா எல்லாம் அந்த தடிமாடுக்காக தான் காத்திட்டு இருக்கேன். இன்னைக்கு எங்க காலேஜ் பஸ் வராது, நீ கூட்டிப் போன்னு சொன்னேன். இன்னும் கிளம்பி வருது” என்றாள் அவள். “குட்டிம்மா என்ன இது அண்ணாங்கற மரியாதை இல்லாம பேசுற, தப்பு நாளைக்கு அவனுக்கு ஒரு கல்யாணம் ஆச்சுன்னா அவன் மனைவி முன்னாலயும் நீ இப்படியே கூப்பிட்டு வைச்சா அவனுக்கு என்ன மரியாதை இருக்கும். இதே பழக்கம் உன் புகுந்த வீட்டிலையும் வரும், மாத்திக்கோ” என்றான் அதே பழைய கண்டிப்புடன்.

 

“என்னம்மா நீங்களும் அவ பேசுறது பார்த்திட்டு இருக்கீங்க, சொல்லமாட்டிங்களா” என்று அன்னையை வேறு கடிந்தான். “இல்லப்பா ஆதி இவளுக்கு உங்கப்பா ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சு இருக்கார். இவளை எதாச்சும் சொன்னா அவர் என்கிட்ட மல்லுக்கு நிக்கிறார். இவ உன் ஒருத்திக்கு தான் அடங்குவா, நீ சொல்லிட்டல்ல இனிமே நான் பார்த்துகறேன்” என்றார் அவர்.

 

“ஹேய் கிளம்பிட்டியாடி வாலு” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், “வாங்கண்ணா, வாங்கண்ணி, ஹேய் குட்டீஸ்” என்றான் அவன். “என்ன ஆதவா நீயும் அவளை இன்னும் வாடி போடின்னு கூப்பிடுற, நாளைக்கு வேற வீட்டுக்கு போற பொண்ணுடா, இப்படி கூப்பிட்டு பழகாதே” என்றான் ஆதி. “சரிண்ணா” என்று அவனும் ஆமொதித்தான்.

 

“ஆதவா உன்னோட பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு, எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கு” என்றான் அவன். “நல்லா போயிட்டு இருக்குண்ணா, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு இருக்கேன். சீக்கிரம் பிக்அப் ஆகிடும் அண்ணா” என்றான் அவன்.

 

“உனக்கு எப்ப உதவி வேணும்னாலும் என்னை கண்டிப்பா கேளு, தயங்கிட்டு நிக்காதே. உனக்கு நான் எப்பவும் ஆதரவா இருப்பேன்” என்று கூறிவிட்டு கிளம்ப சென்றவனை அவள் பெருமையுடன் பார்த்தாள், இவன் தான் எவ்வளவு பொறுப்பான அண்ணனாக இருக்கிறான் என்று கர்வம் கொண்டது அவள் மனது.

 

அவன் வெளியில் செல்ல பின்னேயே சென்று “என்னங்க, சாயங்காலம் நீங்க வீட்டுக்கு போகும் போது வந்து எங்களையும் கூட்டிட்டு போங்க, எனக்கு வழி தெரியாது” என்று அவன் அருகில் சென்று கூறினாள். “சின்ன பாப்பா வழி தெரியாது தொலைஞ்சு போய்டுவ” என்றான் அவன்.

 

“ஆமாங்க அதுனால தான் நான் உங்களை வரச் சொல்லறேன்” என்றாள் அவளும் பதிலுக்கு வெடுக்கென்று, “பதிலுக்கு பதில் பேசுற, கொழுப்புடி உனக்கு. உன்கிட்ட பேசி முன்னுக்கு வரமுடியாது, நான் வர்றேன்” என்று அவளிடம் கூறிவிட்டு கிளம்பினான் அவன். “அப்போ சாயங்காலம்” என்றவளை, “அதான் வர்றேன்னு சொல்லிட்டேன்ல” என்றான் அவன்.

 

“அம்மா அப்பா கிளம்பியாச்சா, கிளம்பிட்டாங்கன்னா நானே அவங்களை கூட்டிட்டு போறேன். சாயங்காலம் நான் இங்க வந்து இவங்களை கூட்டிட்டு போவேன். அதுனால நானே வந்து விட்டுட்டு போறேன் சொல்லுங்கம்மா” என்றான் அவன். “வாப்பா ஆதி அம்மா இப்போ தான் தான் சொன்னா, ஒரு பத்து நிமிஷம்ப்பா நான் சாப்பிட்டு வந்துறேன். நாம கிளம்பலாம்” என்று அவர் உணவருந்த சென்றார்.

 

அவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்லிவிட்டு அவளே எல்லோருக்கும் பரிமாறினாள். ஆதர்ஷா ஆதிராவை தனியே அழைத்துச் சென்று “அண்ணி எப்படி அண்ணி எங்க அண்ணனை மாத்தினீங்க, எங்கண்ணன் இப்போ தான் பழைய மாதிரி இருக்கற மாதிரி எனக்கு தோணுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணி” என்று  கூறிவிட்டு அவள் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

 

ஆதிராவுக்கோ ஒன்றும் புரியவில்லை, இவள் ஏன் இப்படி சொல்லிவிட்டு செல்கிறாள். நாம் என்ன பெரிதாக செய்துவிட்டோம், இதை பற்றி கண்டிப்பாக மாமியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தாள். எல்லோரும் கிளம்பிச் சென்றபின் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு அவள் மாமியாரை தேடிச் சென்றாள்.

 

“அத்தை எனக்கு உங்ககிட்ட சில விஷயம் கேட்கணும், நீங்க மறைக்காம எனக்கு சொல்லணும்” என்றாள். “என்னமா” என்றார் அவர். “ஹரிணி எப்படி இருப்பாங்க அத்தை அவங்களை பத்தி எனக்கு சொல்லுங்க, நம்ம வீட்டிலயும் அவங்க போட்டோ ஒண்ணு கூட இல்லை, சாமி அறையிலயும் நான் பார்த்துட்டேன், அங்கேயும் இல்லை.

 

“இல்லைம்மா ஆதிரா நான் தான் அங்க சாமியறையில் போட்டோ வைக்க வேணாம்ன்னு சொல்லிட்டேன். ஆதி அதை நினைச்சு கஷ்டப்படுவான், அவளோட போட்டோ இங்க பூஜையறையில் இருக்கு” என்று கூறி அவளை கூட்டிச்சென்று காட்டினார் அவர். இவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசனையானாள் அவள்.

 

“அத்தை நான் இவங்களை பத்தி தெரிஞ்சுக்கலாமா” என்று அவள் கேட்க யோசனையாக அவளை ஏறிட்டார் அவர். “இல்லை அத்தை என்னோட எந்த ஒரு செயல்லயும் நான் அவங்களை அவருக்கு ஞாபகப்படுத்திட கூடாது இல்லையா, அதுக்காக தான் கேட்டேன். அவங்க அவர்கிட்ட எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரிஞ்சா நான் அதுக்கு ஏத்த மாதிரி பார்த்து நடந்துக்குவேன்” என்றவளிடம் எதையும் மறைக்காமல் தன் மனதில் இருந்தது முழுவதும் மொத்தமாக கொட்டினார் அவர்.

 

“அத்தை ஒரு சந்தேகம் கேட்கலாமா” என்றாள் அவள், “சொல்லும்மா” என்றார் அவர். “இல்லை நீங்க ஹரிணி பத்தி அவர்கிட்ட எதுவுமே சொன்னது இல்லையா. ஹரிணி உங்ககிட்ட திரும்பவும் இங்க வந்துடுறோம் சொன்னப்ப நீங்க சரி சொல்லி இருக்கலாமே. நீங்க அப்போவோம் சொல்லலை இப்பவாச்சும் சொல்லி இருக்கலாமே அத்தை. இப்போ பாருங்க அவர் ஒரு இடத்துல நீங்க ஒரு இடத்துலன்னு இப்போ தனியா இருக்கீங்க. அவர் அவங்களை பத்தி இப்பவரைக்கும் தெரிஞ்சுக்கலையா” என்றாள் அவள். “இல்லைம்மா ஹரிணி உண்மையா தான் என்கிட்ட மன்னிப்பு கேட்டா ஆனா அவளால எப்பவும் ஆதியை விட்டு தரமுடியாதுன்னு எனக்கு தெரியும், அதுனால தான் நான் அப்போ எதுவுமே சொல்லலை.

 

“ஒருவேளை நான் சரின்னு சொல்லி அவங்க இங்க வந்து திரும்பவும் ஒரு பிரச்சினைனா என்னால தாங்க முடியாதும்மா. அதான் நான் அதை பத்தி பேசலை, அவ இறந்த பிறகு அவளை பற்றி ஆதிக்கிட்ட பேசறது சரியா இருக்கும்ன்னு தோணலை. இறந்தவகளை பற்றி நாம எதுவும் பேச வேணாம் நினைச்சேன், என் மகன் என்னை புரிஞ்சு பழைய மாதிரி வரணும், அந்த நம்பிக்கை இப்ப உன்னால எனக்கு திரும்ப கிடைச்சு இருக்கு.

 

“இன்னைக்கு அவன் இங்க வந்தது சகஜமா அவன் கூடபிறந்தவங்க கிட்ட பேசினது எல்லாமே எனக்கு நிறைவா இருக்கு. இது வரைக்கும் நானா தான் அங்க வந்து அவன்கிட்ட வலிய வலிய பேசுவேன். இன்னொரு கல்யாணம் பற்றி நான் ஆரம்பிக்கும் போதுகூட அவன் எனக்கு பிடி கொடுத்து பேசவில்லை. கடைசியில் என் அம்மாவும் அவரும் பேசிய பிறகு தான் சம்மதமே தெரிவித்தான்”.

 

“இன்னொரு விஷயம்மா, ஹரிணி எங்ககிட்ட எப்படி நடந்துகிட்டாலும், ஆதி மேல அவ உயிரா இருந்தா, அவனுக்கு எல்லாமுமா அவ தான் இருந்தா. அவனை ஒரு வேலை கூட அவள் செய்யவிட்டதில்லை. அவன் துணிகளை துவைப்பது, மடிப்பது, தேய்ப்பது, அவன் அலுவலகம் செல்ல அவள் தேர்ந்தேடுக்கும் உடை தான் அவன் உடுத்துப் போவான். அவனுக்கு வித விதமாக சமைப்பதிலும் அவள் குறை வைத்ததில்லை.

 

“ஹரிணி இறந்தப்போ ஆதி ரொம்பவும் கஷ்டப்பட்டு போனான். நாங்க அவனை இங்க வந்து இருக்க சொன்னபோது முடியாதுன்னு மறுத்துட்டான். அவனோட எல்லா தேவைகளையும் அவளே கவனிச்சுட்டு இருந்ததுனால அவனுக்கு அவளோட இழப்பு ரொம்பவும் பாதிச்சுடுச்சு, அதுக்கு அப்புறம் தான் அவன் பிடிவாதமா அவனோட வேலைகளை அவனே செய்ய பழகுனான்.

 

“ஆபீஸ் வேலைகள்ல அவனோட கவனத்தை செலுத்தி இரவு பகல் பாராம உழைச்சான், இப்போது தான் அவன் அவளோட நினைவுல இருந்து ஓரளவு அவள் வெளிய வந்து இருக்கான். ஆதி இன்னமும் முழுதாக அவளை மறக்கவில்லை என்று தெரிகிறது. அவன் ஏதாவது உன் மனம் சங்கடப்படும்படி பேசினாலோ, பேசி இருந்தாலோ, அவனை மன்னித்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளம்மா” என்றார் அவன் தாய்.

 

“அத்தை பெத்த தாய் நீங்க அவருக்காக இவ்வளவு கஷ்டப்படும் போது நான் அவர் பேசுவதை பொறுத்துக்க மாட்டேனா. நீங்க வருத்தப்படாதீங்க அத்தை. அவரை திரும்ப பழைய மாதிரி இந்த வீட்டில கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னோட கடமை. நீங்க வேணா பாருங்க இது கண்டிப்பா நடக்கும். அத்தை எனக்கு இன்னமும் ஒரு சந்தேகம், அதாவது ஹரிணியின் பெற்றோரை ஏன் நீங்கள் எங்கள் திருமணத்திற்கு அழைக்கவில்லை” என்றாள் அவள்.

 

“அவங்களை நாங்க கூப்பிட்டோம், ஆனா அவங்க அம்மா வரமறுத்துட்டாங்க, ஆதியின் மனதில் வேண்டாத குழப்பம் வரும், அவரே ஒருவழியாக இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். நாங்கள் வந்தால் உங்கள் எல்லோருக்குமே ஹரிணியை பற்றிய எண்ணங்கள் தான் வரும். அதனால் நாங்கள் வரவில்லை என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்” என்றார் அவர். மாலை அவள் சொன்னது போலவே அவனே வந்து அழைத்துச் சென்றான்.

 

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க ஆதியையும் ஆதிராவையும் பேச்சி கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சி அவன் அவளிடம் இருந்து தள்ளி இருப்பதை ஒரு சில நாட்களிலேயே கண்டு பிடித்துவிட்டார். கவினி ஆதிராவிடம் இருப்பாளோ மாட்டாளோ என்று யோசித்தவர், கவினி அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டதில் மகிழ்ந்தார்.

 

ஒரு முடிவவெடுத்தவாறாக ஆதியை நாடிச் சென்றார். “ஆதி வெளிய கிளம்பிட்டியாப்பா” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிராவும் அங்கு வந்தாள். “சொல்லுங்க சித்தி, என்ன விஷயம்” என்றான் அவன்.

 

“இல்லைப்பா நான் கொஞ்ச நாளைக்கு ஊருக்கு போயிட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன். எனக்கு என் தங்கச்சி ஒருத்தி சேர்மாதேவில இருக்காளே, அவளை பார்த்துட்டு அப்படியே கொஞ்ச நாள் பெரியம்மா கூட இருந்துட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்ப்பா.

 

“குழந்தைகளுக்காக தான் நான் எங்கேயும் போகாம இருந்தேன், அவங்க தான் ஆதிராகிட்ட நல்லா சேர்ந்துட்டாங்களே” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரா இடைமறித்து பேச்சியிடம் கேட்டாள், “என்ன அத்தை ஏன் இப்படி சொல்றீங்க, நான் உங்களுக்கு எதாச்சும் குறை வைச்சுட்டனா. இந்த வீட்டில எனக்கு இருக்குற ஒரே துணை நீங்க தானே” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

 

அந்த கணம் அவர் சந்தேகம் ஊர்ஜிதமானது பேச்சிக்கு, கொண்டவன் இருக்கும் போது ஒருத்தி உடனிருப்பவளை துணையாக நினைத்தால் அவர்கள் கொஞ்சமும் ஒட்டாமல் வாழ்கிறார்கள் என்று தானே அர்த்தம். ஆதிக்கு பிடிக்காத திருமணமாக இருக்கலாம், அதற்காக ஒரேடியாக இருவரும் தள்ளி இருப்பது அவருக்கு சரியாக படவில்லை.

 

ஆதி அவன் வேலைகளை அவனே பார்ப்பது அவள் சாப்பாடு எடுத்து வைப்பதற்கு முன் அவனே போட்டு சாப்பிட்டுக் கொள்வது, இல்லை தன்னை அவன் உதவிக்கு அழைப்பது என்று எல்லாமும் அவர் கவனித்துக் கொண்டுதானிருந்தார். தான் ஒருத்தி இங்கிருந்து கிளம்பினால் அவன் ஏதாவது ஒரு விஷயத்திற்காகவாவது அவளின் உதவியை நாடாமல் போவானா, ஆதிராவும் நாம் இருப்பதால் தான் அவனிடம் நெருங்கவில்லை என்று உணர்ந்தவர் லட்சுமியிடம் பேசிவிட்டு தான் ஊருக்கு போவது என்று முடிவெடுத்தார்.

 

“ஆதிரா என்னம்மா இது நான் அப்படி சொன்னா அடுக்கவே அடுக்காதும்மா, என் தங்கச்சியும் ரொம்ப நாளா கூப்பிட்டு இருக்கா, என்னால தான் போக முடியலை. இப்போ உங்க கல்யாணத்துக்கு ஊருக்கு போன போது நாம சீக்கிரமே திரும்பி வந்துட்டோம். அதான் அவ வீட்டுக்கு போயிட்டு பெரியம்மை பார்த்துட்டு அவங்க வந்தா அவங்களையும் கூட்டிட்டு நான் இங்க வர்றேன்ம்மா. ஒரு இரண்டு மாசம் தான் நான் போய்ட்டு கண்டிப்பா வந்துடுவேன், என்னாலையும் உங்க எல்லாரையும் விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது” என்றார் பேச்சி அவர் முடிவில் உறுதியாக.

 

“சரி சித்தி, நான் உங்களுக்கு ஊருக்கு போறதுக்கு டிக்கெட் போட்டுட்டு சொல்லறேன், ஆனா நீங்க சொன்ன மாதிரி ஆச்சியை கூட்டிட்டு இரண்டு மாசத்துல இங்க வந்திடணும், இல்லைனா நானே அங்க வந்து உங்களை கூட்டிட்டு வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு அவன் அலுவலகம் சென்றான். ஆதிரா தான் வேதனையடைந்தாள், அவளை ஒருவாறு பேசி பேச்சி சமாதானப்படுத்தினார். அந்த வார இறுதியிலேயே அவரும் ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

 

ஞாயிறுகளில் அவன் நண்பர்களை பார்க்க வெளியில் செல்பவன் ஒருநாளும் அவளை வா என்று அழைத்ததே இல்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவள் மாமியாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவனை கூட்டிக் கொண்டு அங்கு சென்று வந்தாள்.

 

ஒருநாள் ஞாயிறு அன்று அவன் நண்பர்களை காணச் சென்றிருந்தான். ஆதிரா வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை ஹாலில் விளையாடவிட்டு வீட்டு வேலை செய்யும் ராணியை அவர்களுக்கு காவல் வைத்துவிட்டு அவள் குளிக்கச் சென்றாள்.

 

வெளியில் சென்றிருந்த ஆதி ஆடிட்டர் சில கணக்குகள் பற்றிய தகவல்கள் கேட்க நண்பர்களிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தான். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க எங்கே போய்விட்டாள் ஒருவேளை சமையலறையில் இருப்பாள் என்று நினைத்தவாறே அவர்கள் அறைக்குச் சென்றான் அவன்.

 

அவன் கோப்புகள் வைக்கும் அறையை நாடிச் செல்ல லேசாக அடைத்திருந்த கதவை திறந்து உள்ளே சென்றவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அங்கு ஆதிரா அப்போது தான் குளித்துவிட்டு புடவையை கட்டிக் கொள்ள வென்று உள்ளே சென்றிருந்தாள். அவனை கண்ட அதிர்ச்சியில் புடவை நழுவவிட்டவள், சட்டென்று கைகளை மார்ப்புக்கு குறுக்காக மறைத்து திரும்பி நின்று கொண்டாள். “சாரி, ஒரு முக்கியமான பைல் எடுக்க வந்தேன்” என்று சொல்லிவிட்டு கதவை முன்பு போலவே அடைத்துவிட்டு வெளியில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

புடவையை கட்டி முடித்தவள் எப்படி வெளியே செல்வது அவன் முகத்தை பார்ப்பது என தயங்க ஒரு பெருமூச்சை உள்ளிழுத்தவாறே வெளியே சென்றாள். அவனும் அங்கேயே உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன் அரவம் கேட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான், “சாரி” என்று அவளிடம் மீண்டும் சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்று அவனுக்கு தேவையான கோப்புடன் வெளியில் வந்தான்.

 

ஆடிட்டர்க்கு போன் செய்து விபரம் உரைத்தான். அவன் வீட்டிற்கு வந்திருந்ததால் அவள் அவனுக்கும் சேர்த்து சமைத்தாள். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவள், “சாப்பிட வாங்க” என்றாள். அவள் முகத்தை அப்போது தான் நேருக்கு நேர் பார்த்தான் அவன். அன்று போல் இன்றும் அவள் மை தீட்டி இருக்கக் கூடாதா, என்று மனதிற்குள் எழுந்த எண்ணத்தை அடக்கினான். எதுவும் பேசாமல் எழுந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்தான்….

 

உன் நினைவுகள்

என்னுள் ஆணிவேராய்

ஊன்றியிருக்க..

 

உன் அருகாமை

என் நினைவுகளுக்கு

நீருற்ற…

 

என் நெஞ்சில்

மலர்ந்த அந்த

காதல் பூவை

நீ என்றறிவாய்…

 

பல நாட்களாய்…

பல வாரங்களாய்…

பல மாதங்களாய்…

பல வருடங்களாய்…

காத்திருக்கிறேன்

என் நேசப் பூவை

நீ என்றறிவாய் என்று…

காத்திருப்பேன் உனக்காய்…

என் இறுதி மூச்சு வரை…

 

 

 

 

Advertisement