Advertisement

அத்தியாயம் –29

 

வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது. என்னன்னு தான் சொல்லுடா” என்றான் அருகில் இருந்த கதிர்.

 

“சரி ஹரிணியோட அம்மா, அப்பா எல்லாரும் எங்க இருக்காங்க. இந்த ஊர்லயா இல்லை வெளியூர்லையா” என்றான் அவன். “இந்த ஊர்ல தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன், ஆனா அவங்களை பத்தி எனக்கு மேல எந்த விவரமும் தெரியலை. ஒருவேளை ஆதியோட அம்மாக்கு தெரிஞ்சிருக்கலாம்” என்றான் ராஜீவ்.

 

“சரி நான் போய் அம்மாவை பார்க்குறேன்” என்று எழுந்தான் வெற்றி. “டேய் என்னடா நீ வந்த கேள்வி கேட்ட, நீ பாட்டுக்கு கிளம்புறேன்னு சொல்ற. ஏதாச்சும் சொல்லிட்டு போடா. ஆதிராவுக்கும் ஹரிணிக்கும் என்ன சம்மந்தம்” என்றான் ராஜீவ்.

 

“அவங்க ரெண்டு பேரும் அக்கா, தங்கை அது தான் அவங்க உறவு, அதுக்கு அப்புறம் என்ன ஏதுன்னு எனக்கே இன்னும் விவரம் தெரியலை, நான் முதல்ல அம்மாவை போய் பார்க்குறேன்” என்றவன் அவர்களை குழப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் அங்கிருந்து கிளம்பி நேரே சென்றது ஆதியின் வீட்டிற்கு.

 

வெற்றி வீட்டிற்கு நுழைய அவன் தேடியவர் எதிரிலேயே நின்றிருந்தார், “அம்மா” என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். “வாப்பா வெற்றி எப்படி இருக்க அன்னைக்கு போனவன் இன்னைக்கு தான் வர்ற, அன்னைக்கும் வந்துட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிட்டியேப்பா” என்று வருந்தினார் அவர்.

 

“இல்லைம்மா ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு அதான் கிளம்பிட்டேன், நான் இப்போ உங்களை பார்க்கத் தான் வந்தேன்” என்றான் அவன். “சொல்லுப்பா என்னை தேடி வந்திருக்கன்னா சும்மா வந்திருக்க மாட்ட என்னப்பா விஷயம்” என்றார் அவர்.

 

“அம்மா ஹரிணியோட அம்மா அப்பா பத்தி எனக்கு தெரியணும்” என்றான் அவன். “ஹரிணியோட அம்மா அப்பாவா…. உனக்கு எதுக்குப்பா அந்த விவரம்” என்றார் அவர் புரியாமல். “அம்மா கொஞ்சம் தயவு செஞ்சு சொல்லுங்க அவங்க இப்போ எங்க இருக்காங்க, நான் அவங்களை போய் பார்க்கணுமே” என்றான் அவன்.

 

“என்னப்பா நீ தலையும் புரியாம வாலும் புரியாம பேசுற எதுவா இருந்தாலும் நேராவே சொல்லுப்பா” என்றார் அவர் பொறுக்கமாட்டாமல்“அம்மா ஹரிணியோட அம்மாவை நான் எங்கயோ பார்த்திருக்கேன் அவங்க போட்டோவை நான் இப்போ தான் ராஜீவ் வீட்டில பார்த்தேன். அவங்க பேரு மீனாட்சி தானே” என்றான் அவன். “ஆமாம்ப்பா” என்றார் அவர். “அம்மா அவங்க இப்போ எங்க இருப்பாங்க நான் பார்க்கணுமே, நீங்க சொன்னதுல எனக்கு உறுதியா தோணுது அவங்க தான்  கோமதி அக்காவோட சித்தி பொண்ணு” என்றான் அவன்.

 

“என்னப்பா சொல்ற” என்று லட்சுமி விழிக்க அவன் மேலும் விவரங்கள் கூற அப்போது உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா வெளியில் வந்தாள். “என்ன சொல்றீங்க, நீங்க சொல்றது எல்லாம் உண்மையா” என்றாள் அவள். “ஆமாம் உங்களுக்கு சந்தேகமா இருந்தா நீங்க என்னை அவங்க வீட்டுக்கு கூட்டி போங்க, அப்புறம் இன்னொரு விஷயம் அது தான் எனக்கும் புரியலை. இதுல நீங்க ஒரு விஷயம் கவனிச்சீங்களா” என்று நிறுத்தினான் அவன்.

 

“என்ன விஷயம்ப்பா” என்றார் லட்சுமி. “ஹரிணியும், லட்சுமியும் கொஞ்சம் ஒரே சாயல்ல இருக்கறது உங்களுக்கு தெரியலையா” என்றான் அவன். லட்சுமி அவனுக்கு பதிலளித்தார், “தோணிச்சுப்பா கொஞ்சம் சாயல் இருந்ததா எங்க எல்லாருக்குமே பட்டுச்சு, அதுனால தான் ஆதிராவை நாங்க ஆதிக்கு கட்டி வைக்க முடிவு செஞ்சோம். ஆனா நாங்க யாரும் இதை பத்தி ஆதிகிட்ட பேசினது இல்லை. ஏன்னா நாங்களே அவனுக்கு ஹரிணியை பற்றி ஞாபகம் படுத்தினது போல இருக்கும்ன்னு, நாங்க யாரும் இதை பத்தி பேசினது இல்லை” என்றார் அவர்.

 

“என்ன அத்தை சொல்கிறீர்கள், இருவரும் ஒன்று போல இருக்கிறார்களா” என்றாள் நேத்ரா. “எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை” என்றாள் அவள். “இல்லைம்மா நேத்ரா நீ ஹரிணியை அதிகமா பார்த்தது இல்லை, அதுனால தான் உனக்கு அப்படி எதுவும் தோணலை. அந்த பூஜை அறையில அவளோட புகைப்படம் இருக்கு, உனக்கு சந்தேகமிருந்தா நீ போய் பாரு. ஆதிராவுக்கும் ஹரிணிக்கும் கொஞ்சம் ஒரே சாயல் தான்” என்றார் அவரும்.

 

“அம்மா எனக்கு இதுல இன்னொரு விஷயம் புரியலை, உங்களுக்கு புரிந்த இந்த விஷயம் ஆதிக்குமா புரியாமலிருக்கும்” என்றான் அவன். “புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன்ப்பா அதான்…” என்று நிறுத்திவிட்டார் “என்னம்மா ஏதோ சொல்ல வந்து நிறுத்திட்டீங்க” என்றான் வெற்றி விடாமல்.

 

“அத்தை என்ன சொல்ல வர்றாங்கன்னா அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இல்லைன்னு சொல்ல வர்றாங்க. அதானே அத்தை” என்றாள் நேத்ரா. “நேத்ரா உனக்கு எப்படி…” “என்ன அத்தை எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறீங்களா” என்றாள் அவள். “ஆதிரா என்னோட தோழி நீங்க அதை மறந்துட்டீங்களா” என்றாள்.

 

அவள் ஆதிராவிடமும் ஆதியிடமும் குழந்தை பற்றி பேசியது ஆதிரா அவளிடம் சண்டையிட்டது என்று அவள் ஒவ்வொன்றாக கூற வெற்றிக்கு தலை வலிப்பது போல் இருந்தது. ஏனோ அவனால் ஆதியை தப்பாக நினைக்க முடியவில்லை. ஹரிணியின் நினைவில் ஆதிராவை அவள் தள்ளி வைத்திருப்பான் என்பதை அவன் மனம் ஏற்கவில்லை. அந்த பிரச்சனையை பிறகு யோசிப்போம் இப்போது வந்த வேலையை பார்ப்போம் என்று நினைத்தவன் லட்சுமியை அழைத்துக் கொண்டு மீனாட்சியின் வீட்டிற்கு சென்றான்.

 

மீனாட்சியை வரவேற்றவர் அவருடன் வந்தவனையும் வரவேற்று உள்ளே அமர வைத்தார். ஈஸ்வரனும் அப்போது வீட்டிலிருந்தார். “மதினி இவன் பேரு வெற்றி நம்ம ஆதியோட நண்பன், உங்களை பார்க்கணும்ன்னு சொன்னான். அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றார் அவர்.

 

‘நம்மளை பார்க்கணுமா இவர் யாருன்னே தெரியலை நம்மளை எதுக்கு பார்க்க வந்திருக்கார்’ என்று நினைத்தவர் அவர் நினைப்பை ஒதுக்கி அவனை பார்த்து “சொல்லுங்க தம்பி என்ன விஷயமா எங்களை பார்க்கணும்ன்னு சொன்னீங்க” என்றார் மீனாட்சி.

 

ஈஸ்வரனும் அவனை புரியாமல் பார்த்தார். “உங்களுக்கு கோமதி அக்காவை ஞாபகம் இருக்கா” என்றதும் மீனாட்சியின் முகமும் ஈஸ்வரனின் முகமும் ஒருசேர இருண்டதை லட்சுமி கவனித்தார். ‘கோமதி பற்றி கேட்கிறான் யாராக இருக்கும்’ என்ற சிந்தனையில் முழ்கியவரை அவன் குரல் கலைத்தது.

 

“நீங்க என்ன சொல்லணுமோ அதை சுத்தி வளைக்காம சொல்லுங்க தம்பி” என்றார் மீனாட்சி தீனக்குரலில். “நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே” என்றான் அவனும் விடாமல். “தெரியும்” என்றது அவர் குரல் சின்ன தடுமாற்றத்துடன்.

 

“அவங்க இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா” என்றவனை நிமிர்ந்து பார்த்தார் மீனாட்சி அவர் கண்களில் ஒரு அலைப்புறுதல் தெரிந்தது. “சொல்லுங்க தம்பி எங்க இருக்காங்க உங்களுக்கு தெரியுமா” என்றவரை திரும்பி பார்த்தான் வெற்றி. சொல்லியது வேறு யாருமல்ல ஈஸ்வரன் தான்.

 

“சென்னையில தான் இருக்காங்க” என்றதும் மீனாட்சிக்கு கண்களில் நீர் துளிர்த்தது. “தம்பி நாங்க அவங்களை பார்க்கலாமா” என்றார் மீனாட்சி. “கண்டிப்பா கூட்டிட்டு போறேன், நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேணாமா. என்னோட பெயர் வெற்றிச்செல்வன் நான் காமாட்சியம்மாவோட மகன்” என்றதும் “செல்வம் நீயா உன்னை கைக்குழந்தையா பார்த்தது. ஆமா உனக்கு எப்படி என்னை ஞாபகம் இருக்கு” என்றார் மீனாட்சி.

 

“அதெல்லாம் அப்புறம் சொல்லறேன் சரி கிளம்புங்க கோமதி அக்கா வீட்டுக்கு போகலாம்” என்று சொல்லி எழுந்து நின்றான் வெற்றி. “என்னப்பா இப்போவே வா” என்றார் ஈஸ்வரன். “என்ன அத்தான் அதுக்கு எதாச்சும் நேரம் காலம் பார்க்கணுமா” என்றான் அவன்.

 

“இல்லைப்பா போகலாம் ஆனா அவங்க எங்களை…” என்று அவர் இழுக்க “எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பார்த்துக்கறேன் நீங்க வாங்க” என்றவன் லட்சுமியிடம் திரும்பி “அம்மா இங்க நடக்கற எதுவும் உங்களுக்கு புரியலை இல்லையா, நீங்க கோமதி அக்கா வீட்டுக்கு என்னோட வாங்க உங்களுக்கு எல்லாமும் புரியும்” என்று சொன்னான். “அப்புறம் அக்கா, அத்தான் அங்க வைச்சு உங்களுக்கு இன்னொரு விசயம் சொல்றேன்” என்று பீடிகை போட்டு நிறுத்தினான் அவன்.

 

அவர்கள் அங்கிருந்து கிளம்பி நேரே கோமதியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மாலை நேரமாக இருந்ததால் கோமதி வீட்டு வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். கோலம் போட்டு முடித்து நிமிர்ந்தவர் அவர்கள் வீட்டின் அருகில் ஒரு கார் வந்து நிற்க கோல டப்பாவை அருகில் இருந்த திண்டில் வைத்து விட்டு யார் என பார்த்தார்.

 

‘யார் வர்றாங்க நம்ம வீட்டுக்கு அதும் இந்த நேரத்துக்கு, மாப்பிள்ளையும் லட்சுமியும் ஊருக்கு போயிருக்காங்க யாரா இருக்கும்’ முதலில் லட்சுமி இறங்க ‘மதினி வந்திருக்காங்க, செல்வம் அது….’ “மீனு” என்று சொல்லி வேக நடை போட்டவர் இரண்டு எட்டில் மீனாட்சியை அடைந்து அவரை கட்டிக் கொண்டார்.

 

“மீனு எப்படி இருக்க எங்களை எல்லாம் மறந்துட்டியா, நீ என்னை கூட மறந்துட்டல எப்படி இத்தனை வருஷமா யாரும் வேணாம்னு இருந்துட்ட நாங்கலாம் உனக்கு வேண்டாதவங்களா போயிட்டமா….” என்று அவர் பேசிக் கொண்டிருக்க வெற்றி “அக்கா உள்ளே போய் பேசலாமா, இல்லை இப்படியே வாசலையே வச்சு பேசி அனுப்பப் போறியா” என்றதும் தான் கோமதி வாசலில் அவர்களை வைத்து பேசிக் கொண்டிருக்கும் மடத்தனத்தை எண்ணி “உள்ளே வாங்க, வாங்க அத்தான்” என்று அழைத்தார்.

 

அவர்களை அழைத்து உள்ளே அமர வைத்து விட்டு தன் கணவரை தேடிச் சென்றார் அவர். உள்ளறையில் இருந்த அவரிடம் நேரே சென்றவர் “என்னங்க மீனு… மீனாட்சியும் அத்தானும் வந்திருக்காங்க” என்றவரை புரியாமல் பார்த்தார் சங்கரன்.

 

“நம்ம மீனாட்சி தாங்க, சம்மந்தியும் வந்திருக்காங்க, செல்வம் தான் அவங்களை கூட்டி வந்திருக்கான். வந்து அவங்களோட பேசுங்க, எத்தனை வருஷம் கழிச்சு அவளை பார்க்குறேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க” என்றவரை ஆச்சரியமாக பார்த்தார் அவர்.

 

“ஏன் கோமதி உனக்கு அவங்க மேல எந்த வருத்தமும் இல்லையா” என்றார் அவர். “இருக்குங்க வருத்தம் இருக்கு அது அவங்க இத்தனை வருஷமா நம்மை தேடி வராம இருந்தாங்களேன்னு தான்” என்றார் அவர். “சரி வா” என்று அவருடன் வெளியில் வந்து எல்லோரையும் சம்பிரதாயமாக வரவேற்றார்.

 

“மீனு உங்க அத்தான்” என்று மீனாட்சியிடம் அவர் அறிமுகப்படுத்த “அத்தான் உங்களுக்கு இவரை தெரியுதா” என்று ஈஸ்வரனை பார்த்து அவர் கேட்க “சங்கரா” என்று சொல்லி எழுந்து வந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டார் ஈஸ்வரன். சங்கரனோ சங்கடமாக உணர்ந்தாரே தவிர ஏதும் சொன்னாரில்லை.

 

அவருடைய சங்கடத்தை உணர்ந்தவராக மீனாட்சி எழுந்து வந்து அவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க அதை சற்றும் எதிர்பாராத சங்கரன் “மீனாட்சி எழுந்திரும்மா” என்றார். “இல்லை அத்தான் எங்களை மன்னிச்சுடுங்க எந்த சொந்தமும் வேணாம்ன்னு எல்லாரையும் தூக்கி எறிஞ்சுட்டு போனோம் நாங்க பெத்து வளர்த்த சொந்தம் கூட இல்லாம இப்போ நாங்க தனிமரமா தான் இருக்கோம் அத்தான்” என்று அவர் கதறிய கதறலில் கோமதி வந்து அவளை தூக்கினார்.

 

“மீனு இங்க பாரு உங்க மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு உங்க மேல ஒரு வருத்தம் தான் அது நீயாவது என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா என்று தான் எனக்கு வருத்தம், உனக்காக நான் எல்லார்கிட்டயும் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி இருக்க மாட்டேனா. நீ என்கூட பழகினது அவ்வளோ தானா நாம அக்கா தங்கையாவா பழகினோம். ஒரு நல்ல சினேகிதிகளா தானே பழகினோம். நான் உனக்கு உண்மையா இல்லைன்னு நினைக்கிறேன் மீனு அதான் நீ என்கிட்ட சொல்ல பயந்திருக்க” என்று வருந்தினார் அவர்.

 

“கோமு அப்படி எல்லாம் பேசாத தப்பு எல்லாம் எங்களோடது தான்” என்று மீண்டும் அழ ஆரம்பிக்க “சங்கரா என்னை மன்னிச்சுடு” என்று மீண்டும் அவர் கைகளை பிடித்துக் கொண்டார் ஈஸ்வரன். “ஈஸ்வரா எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கோமதி சொன்னது தான் நானும் சொல்லறேன்” என்றார் அவர். “இருந்தாலும் அன்னைக்கு இந்த கல்யாணம் நின்னு போயிருக்குமே எவ்வளவு அவமானம் ஆகி போயிருக்கும்” என்று அவர் வருந்த “அன்னைக்கு கல்யாணம் நடந்துது, என்ன பார்க்குற அன்னைக்கு கல்யாணம் நடந்தது. எங்களோட கல்யாணம் அன்னைக்கு தான் நடந்தது” என்றார் அவர்.

 

அவர்கள் நால்வருமாக பேசிக் கொண்டிருக்க அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த சூர்யாவும் செல்வம் லட்சுமியுடன் சேர்ந்து என்ன நடக்கிறது என்று முழித்துக் கொண்டிருக்க வெற்றி இடைமறித்தான். “கொஞ்சம் நீங்க நாலு பேரும் பேசறதை விட்டுட்டு என்ன நடந்ததுன்னு எங்களுக்கும் சொல்லுங்க. நாங்க எல்லாரும் முழிச்சுட்டு இருக்கறதை பார்த்தா பாவமா இல்லையா” என்றான் அவன்.

 

____________________

 

பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வை சங்கரனே கூற ஆரம்பித்தார். கோமதியின் அன்னையுடன் பிறந்த தங்கையின் மகள் தான் மீனாட்சி. கோமதியின் தாய்க்கு குழந்தை இல்லாமல் சில வருடங்கள் கழித்து அவர் கருவுற்றார். அவர் கருவுற்ற சில மாதங்களிலேயே மீனாட்சியின் தாயும் கருவுற கோமதியும் மீனாட்சியும் அடுத்தடுத்து பிறந்தனர். பிறந்ததில் இருந்து ஒன்றாகவே வளர்ந்த அவர்களுக்குள் இருந்த இடைவெளி சில மாதங்கள் மட்டுமே. இருவரும் அக்கா தங்கை போல் அல்லாமல் உயிர் தோழிகளாகவே பழகினர்.

 

ஈஸ்வரன் அவர்களுக்கு சொந்த தாய்மாமனின் மகன். இருவருக்கும் திருமண வயது நெருங்க ஈஸ்வரனுக்கும் கோமதிக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்க அப்போது தான் ஈஸ்வரனும் மீனாட்சியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டனர்.

 

கடிதத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புவதாகவும் இந்த திருமணத்தை நிறுத்த வேறு வழி தெரியாததால் அவர்கள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்வதாகவும் எல்லோரும் தங்களை மன்னித்து விடுமாறும் வேண்டி இருந்தனர்.

 

கோபத்தில் கொதித்த எல்லோரும் நினைத்து வருந்தியது கோமதியை நினைத்தே இன்னும் பத்து நாட்களில் திருமணம் என்று இருக்க இப்போது மாப்பிள்ளை இல்லை ஓடிப்போய் விட்டார் என்றால் இனி கோமதியை யார் கட்டிக் கொள்வார்கள் என்று எல்லோருமே கதறி துடித்தனர். அவர்கள் கதறல் எல்லாம் ஒட்டு மொத்தமாக கோபமாக ஓடிப் போனவர்கள் மேல் திரும்பியது.

 

அந்த நேரத்தில் தான் சங்கரன் கோமதியின் அத்தை மகன், தானே  கோமதியை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூற எல்லோரும் மகிழ்ந்து திருமண ஏற்பாடுகளை கவனித்தனர். சங்கரன் கோமதியை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறினாலும் அவருக்கு மனதில் ஒரு உறுத்தல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் கோமதியுடன் பேச வேண்டும் என்று எல்லோரிடமும் சொன்னார்.

 

கோமதியிடம் தன் சங்கடத்தை அவர் வெளிபடுத்த கோமதியோ தனக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்று தெரிவித்தார். தன் தங்கை தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் தாமே முன்வந்து அத்திருமணத்தை நடத்தி இருப்பேன் என்று அவர் கூற சங்கரன் கோமதியை பெருமையாக நோக்கினார். சங்கரனுக்கு சிறு வயதில் இருந்தே கோமதியின் மீது ஒரு பிடிப்பு இருந்தது, ஆனால் கோமதிக்கு ஈஸ்வரனை பேசி முடிக்கவும் அவர் ஏதும் சொல்லவில்லை.

 

பெரியவர்கள் விருப்பம் என்று இருந்துவிட்டார். கோமதியை போல் சங்கரனுக்கும் ஒரு வருத்தம் இருந்தது அது வேறு ஒன்றுமல்ல ஈஸ்வரனும் சங்கரனும் ஒரே பள்ளியில் ஒன்றாகவே படித்தவர்கள். நண்பர்களாகவே பழகினர். தன்னிடம் கூட நண்பன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே என்று அவரும் வருந்தினார்.

 

“அன்றைய நிகழ்வுக்கு பின் அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது, இன்று தான் உன் முயற்சியால் தான் மீண்டும் இவர்களை சந்தித்திருக்கிறோம்” என்றார் சங்கரன். “ஆமா செல்வம் நீ அப்போ சின்ன குழந்தையா தானே இருந்திருப்ப உனக்கு எப்படி மீனாட்சியை தெரியும்” என்றார் அவர்.

 

“நல்லா கேட்டீங்க போங்க கோமதி அக்கா தான் அடிக்கடி ஒரு போட்டோவை கைல வைச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்குமே. நான் தான் பார்த்திருக்கனே ஒரு நாள் என்ன ஏதுன்னு நான் அக்காகிட்ட கேட்க அந்த பக்கமா வந்த நீங்க அக்காவை சத்தம் போட்டீங்க. அக்கா எதுவும் சொல்லாம உள்ளே போய்டுச்சு. அதுக்கு அப்புறம் நான் தான் எங்க அம்மாச்சியை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். மீனாட்சி அக்காவையும் அந்த போட்டோல தான் பார்த்திருக்கேன்” என்றான் அவன்.

 

“அப்புறம் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும் கோமதி அக்கா மீனாட்சி அக்கா யாருன்னு தெரியுமா” என்று நிறுத்தினான். “என்னடா கொழுப்பா அவ என்னோட தங்கச்சி” என்றார் அவர். “அது மட்டுமில்லை அவங்க தான் ஹரிணியோட அம்மா, மீனாட்சி அக்கா இவங்க தான் லட்சுமி…ச்சே ஆதிராவோட அம்மா” என்று அவன் மேலும் ஒரு அறிமுகம் கொடுக்க கோமதி மீனாட்சியை கட்டிக் கொண்டு அழுதார்.

 

“விடு கோமு நீ எதுக்கு அழற எல்லாம் நாங்க செஞ்ச தப்பு தான் எங்க பொண்ணோட வாழ்க்கையை பறிச்சுடுச்சு. அவளுக்கு வாழ கொடுத்து வைக்காம போய்ட்டா. இப்போ மட்டும் என்ன என்னோட பொண்ணு தானே அங்க வாழறா. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கோமு” என்றார் மீனாட்சி.

 

“என்னோட ரெண்டு சம்மந்தியும் உறவு முறையா கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. எத்தனை வருஷம் கழிச்சு சந்திச்சு இருக்கீங்க” என்று சிலாகித்தார் லட்சுமி. “ஆமாமாம் எத்தனை வருஷம் ஆகி இருக்கு, ஏன்க்கா நீங்க ஆதியோட கல்யாணத்துக்கு கூட வரலையே, உங்களுக்கு உங்க பேரன் பேத்தி பார்க்கணும்ன்னு கூட தோணலையா. எப்படிக்கா இப்படி இருந்தீங்க” என்று கேள்வி எழுப்பினான் அவன் மீண்டும்.

 

“இல்லை செல்வம் நாங்க அங்க அடிக்கடி வந்து போனா மாப்பிள்ளைக்கு ஹரிணியோட நினைப்பு வரும்ன்னு தான் நாங்க கல்யாணத்துக்கும் வரலை அதுக்கு பிறகும் வரலை. ஆனா குழந்தைகளை கோவில்க்கு மதினி கூட்டிட்டு வருவாங்க அவங்களை நாங்க பார்த்திட்டு தான் இருக்கோம். அதுவுமில்லாம ஆதிரா அவங்களுக்கு அம்மாவாவே மாறிட்டான்னு மதினி சொன்னதுல இருந்து அவளை பார்க்கணும்ன்னு பல தடவை நினைச்சு இருக்கேன்”.

 

“நீங்க என்ன பார்த்து என்ன புண்ணியம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நீங்க எதை நினைச்சீங்களோ அது நடக்கவே இல்லை. ஹரிணியும் ஆதிராவும் கொஞ்சம் ஒரே சாயல்ல இருக்கறது உங்களுக்கு தெரியுமா. அக்கா நீ போய் ஆதிராவோட போட்டோ எடுத்து வா” என்று சொல்ல கோமதி விரைந்து சென்று எடுத்து வந்தார். அதை கையில் வாங்கி பார்த்த மீனாட்சி அந்த புகைப்படத்தை கண்கொட்டாமல் பார்த்தார்.

 

“என்னங்க ஆதிரா நம்ம ஹரிணி மாதிரியே இருக்காங்க, கோமு சின்ன வயசுல நீயும் நானும் ஒரே மாதிரி இருக்கோம்னு எல்லாரும் சொல்லுவாங்க. பாரேன் நம்ம பொண்ணுங்களும் நம்மளை மாதிரியே இருக்காங்க” என்றார் அவர் மகிழ்ச்சியுடன்.

 

“என்ன சொல்ற மீனு, ஹரிணி இப்படி தான் இருப்பாளா” என்றார் கோமதி. “ஆமா கோமு ஹரிணி இன்னும் கொஞ்சம் ஒல்லியா இருப்பா, ஆதிரா கொஞ்சம் பூசினாப் போல இருக்கா. அவங்களுக்கு நம்மை மாதிரியே கொஞ்சம் சாயல் இருக்கு. நீ நம்ம வீட்டுக்கு வரும் போது நான் ஹரிணியோட போட்டோவை காட்டுறேன் அப்போ பாரு உனக்கு புரியும்” என்றார் அவர்.

 

“உங்க எல்லாருக்கும் நான் ஒருத்தன் இங்க இருக்கறது ஞாபகம் இருக்கா, இல்லையா, அம்மா நானும் உன் பிள்ளைதாம்மா. ஏன் சித்தி நீங்களும் என்னை கேட்க மாட்டீங்களா” என்றான் சூர்யா கிண்டலாக. “மீனு இவன் தான் சூர்யா லட்சுமிக்கு அடுத்தது இவன் தான்” என்றார் கோமதி.

 

மீனாட்சி அவனை அணைத்து உச்சி முகர்ந்தார், ஈஸ்வரனும் எழுந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டார். “நீ உங்கப்பாவை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்க” என்றார் அவர். “இதோ பாருங்க இனிமேலும் நீங்க ஆதி வீட்டுக்கோ இங்கயோ வந்து போகாம இருக்காதீங்க. இப்படி யாரும் இல்லாம நீங்க மட்டும் ஏன் தனித்தீவா இருக்கீங்க” என்றான் வெற்றி.

 

“நாங்க இனிமேலும் இப்படி இருக்க மாட்டோம் செல்வம், கோமு வீட்டுக்கு அடிக்கடி வருவோம். எங்க புள்ளைங்களை பார்க்க நாங்க வரமாட்டோமோ, ஆனா குழந்தைகளை பார்க்க மட்டும் நாங்க போகலை வெற்றி. நாங்க வந்தா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்” என்றார் மீனாட்சி.

 

“அம்மா என்னம்மா அவங்க இப்படி சொல்றாங்க, நீங்களாச்சும் அவங்களை கூப்பிடக் கூடாதா இவங்க வரலைன்னா மட்டும் எல்லாம் மாறிடுமா, ஆதி எப்பவும் போல தானே இருப்பான். இப்ப மட்டும் அவங்க ஒண்ணாவா சந்தோசமா இருக்காங்க” என்று வார்த்தையை விட்டான் வெற்றி.

 

பதறியபடி எழுந்தார் சங்கரன், “என்ன சொல்ற செல்வம் என் பொண்ணு சந்தோசமா இல்லையா” என்றார் அவர். ‘அய்யோ தேவையில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டோமே எப்படி சமாளிப்பது’ என்று யோசித்தான் அவன். அதற்குள் அவர் பார்வை லட்சுமியை துளைத்தது.

 

அதற்குள் கோமதி “என்னங்க நம்ம பொண்ணோட விருப்பத்துக்கு தானே நாம இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். மாப்பிள்ளை கொஞ்சம் கொஞ்சமா தான் மனசு மாறுவார், நீங்க இதுக்கு எல்லாம் பதறாதீங்க அன்னைக்கு கூட லட்சுமி வீட்டுக்கு தனியா தான் வந்தா, நான்கூட என்னமோ ஏதோன்னு பயந்தேன். ஆனா அன்னைக்கே மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கூடவே அவளை கூட்டிட்டு போய்ட்டார்”

 

“இது அவங்க வாழ்க்கை அவங்களுக்குள்ள என்ன நடந்தாலும் அதை அவங்களே பேசி சரி பண்ணிக்குவாங்க” என்று அவரும் தன் பங்குக்கு ஆதிரா தனியாக வந்தது பற்றி தன் கணவரிடம் கூறினார். அவர் தன் கணவரை சமாதானம் படுத்தும் நோக்கோடு தான் கூறினார், ஆனால் அது ஒரு விளைவை பின்னால் ஏற்படுத்தப் போவது அறியாமல். மனைவின் பதிலில் சங்கரன் தற்சமயம் அமைதியடைந்து விட்டார்.

 

“ஆதிக்கிட்ட இந்த விஷயத்தை நானே சொல்லிக்கறேன், அவங்களுக்கு இது இப்போதைக்கு தெரிய வேண்டாம் சரியா. அவங்களுக்கு இது சர்ப்ரைஸா இருக்கட்டும், உங்களை எல்லாம் ஒண்ணா ஒரே இடத்துக்கு வரவழைச்சு அங்க வைச்சு அவங்களுக்கு இந்த நானே சொல்றேன்” என்றான் வெற்றி.

 

“செல்வம் உனக்கு கல்யாணம் எப்போ” என்றார்கள் எல்லோரும் “அடுத்த மாசம் கடைசில கல்யாணம் நான் சீக்கிரமே பத்திரிக்கையோட வர்றேன்” என்றான் அவன். எல்லோரும் சந்தோசமாக அங்கிருந்து விடை பெற்றி கிளம்பினர். வீட்டிற்கு சென்ற லட்சுமியும் விஷயத்தை எல்லோரிடம் சொல்ல எல்லோருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது.

 

____________________

 

ரயிலில் ஏறி அமர்ந்தார்கள் ஆதியும் ஆதிராவும், அவர்களுக்கு என்று முதல் வகுப்பில் பதிவு செய்திருந்தான் ஆதி. எதிர் இருக்கையும் சேர்த்து அவன் பதிவு செய்திருக்க அங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். “என்னங்க கதவை அடைக்கறீங்க வேற ஆளுங்க வருவாங்கல” என்றாள் அவள். “அப்படியா வருவாங்களா” என்று அவன் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

 

“என்ன கண்ணடிக்கறீங்க அப்போ யாரும் வரமாட்டாங்களா எல்லா டிக்கெட்டும் நமக்கே போட்டு இருக்கீங்களா” என்றாள் அவள். அதற்கு அவன் சிரித்து வைத்தான். “என்னங்க விளையாட்டு இது” என்றாள் அவள். “ஆசை உன்னோட விளையாடணும்னு எனக்கு ஆசை அதான் டிக்கெட் பதிவு பண்ணேன். நாம ரெண்டு பேரும் தனியா போறோமே பக்கத்துல எவனாச்சும் வந்தா இந்தி பேசிட்டு வருவோனோன்னு நான் முன்னாடியே யோசிச்சு தான் இப்படி செஞ்சேன் ஆனா நீ என்னை தப்பா நினைக்கற மாதிரி இருக்கே. எனக்கு இது தேவை தான், ஆதி நல்லதுக்கே காலம் இல்லைடா” என்று அவனையே திட்டிக் கொண்டதை பார்த்து அவள் சிரித்துவிட்டாள்.

 

டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றதும் கதவை அடைத்தவன் அவளருகே வந்து அவளை அணைத்தான். “இதுக்கு தான் டிக்கெட் பதிவு பண்ணன்னு நீங்க சொல்லி இருக்கலாமே” என்றான் அவன். “அடிப்பாவி நெஜமாவே நான் சொன்னது தான் காரணம் இது நடக்கும்ன்னு அப்போ எனக்கு தெரியாதே, அப்படி செஞ்சதும் இப்போ எனக்கு வசதியா போச்சு” என்றான் அவன். “உங்களை…” என்று ஆரம்பித்தவளை பேசவிடாமல் அவள் இதழ்களை சிறை செய்தான் ஆதி.

 

மறுநாள் இரவு அவர்கள் சென்னை வந்திறங்கினர் ஆதவன் அவர்களை அழைத்துச் செல்ல காருடன் வந்திருந்தான். ஆதவனுக்கு அவர்களை கண்டதும் அவர்களுக்கு இடையில் இருந்த அன்னியோன்னியத்தை கண்டு கொண்டான். ஆதிராவை எதுவும் செய்யவிடாமல் ஆதியே எல்லாமும் செய்வது அவன் கண்ணில் பட்டது. மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டான்.

 

ஆதி முன்பக்கம் ஏறிக் கொள்ள வரும் வழியில் அவ்வபோது அவன் பார்வை ஆதிராவின் பக்கம் பாய்ந்தாலும் ஆதவனிடம் வீட்டு நிலவரம் பற்றி கேட்டுத் தெரிந்துக் கொண்டான். அவர்கள் வீட்டிற்கு அருகில் நெருங்க நெருங்க ஆதிராவுக்குள் குழந்தைகளை பற்றிய எண்ணம் அதிகமாகியது. அவர்கள் காரை விட்டிறங்க கவனியும் கவினும் ஓடிவந்து அவள் கால்களை கட்டிக் கொண்டனர்.

 

இருவரையும் இருபக்கமும் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவளை பெருமிதமாகப் பார்த்தார் லட்சுமி. “என்னடி ஒரு வழியா மும்பை உன்னை விட்டுச்சா” என்றாள் நேத்ரா. “என்ன நேத்ரா இப்படி கேட்குற அவருக்காக தானே நானும் கூட போனேன் அங்கேயே இருக்க போன மாதிரி கேட்குறீயே” என்றாள் ஆதிரா. “சும்மா தான் கேட்டேன்டி குழந்தைங்க தான் உன்னை ரொம்பவும் தேடிட்டாங்க” என்றாள் அவள்.

 

மறுவாரமே சின்ன காந்திமதிக்கு சீமந்தம் வைத்திருக்க எல்லோரும் ஊருக்கு சென்று அவளுக்கு சீமந்தம் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். நேத்ராவிற்கும் அடுத்த வாரத்திலேயே சீமந்தம் முடித்து அவளும் அவளின் தாய் வீடு சென்றுவிட்டாள்.

 

ஆதி அவளை விடாமல் சுற்றி சுற்றி வந்தான், அவன் வீட்டிலிருக்கும் நேரத்தில் பெரும்பாலும் ஆதிராவின் பக்கத்திலேயே இருந்தான். இரவில் அவளை தன் அணைப்பிலேயே வைத்திருந்தான். காலையில் இருந்து வீடே அமைதியாக இருந்தது போல் இருந்தது ஆதிராவிற்கு, லட்சுமி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தார். ஆதர்ஷாவும் அவள் தோழியை பார்க்க வெளியே சென்றிருந்தாள்.

 

அவள் மட்டுமே வீட்டில் தனித்திருந்தாள், அவளுக்கு தலைசுற்றுவது போல் இருந்தது, வாந்தி வருவது போலவும் இருந்தது.அவளுக்கு ஏதோ புரிவது போல் இருக்க ஒரு பக்கம் சந்தோசமாகவும் அதே நிமிடம் சங்கடமாகவும் உணர்ந்தாள். அவளே அதை சரி பார்த்துக் கொள்ள எண்ணி கடைக்கு சென்று தேவையானதை வாங்கி வந்து பரிசோதித்து பார்க்க அது உறுதியானது.

 

 

அவள் கர்ப்பமாக இருக்கிறாள், தன்னையறியாமல் அவள் கைகள் அவள் வயிற்றை தடவி பார்த்தது. அவர்கள் காதலுக்கு கிடைத்த பரிசு அது, ஆனாலும் அவளால் முழுக்க சந்தோசப்பட முடியவில்லை. ஏற்கனவே தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்க இந்த குழந்தை அவசியமா என்று நினைத்தாள். மேலும் அவள் எண்ணங்கள் ஏதேதோ கற்பனையில் ஆழ்ந்தது.

 

நாளை இந்த குழந்தை பிறந்தால் எல்லோரும் என்ன சொல்லுவார்கள் என்று கண்டதை போட்டு மனதில் குழப்பிக் கொண்டவள் ஒரு முடிவுக்கு வந்தாள். லட்சுமி வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

 

லட்சுமி குழந்தைகளுடன் வீடு திரும்பினார், பின்னாலேயே ஆதர்ஷாவும் வந்திருந்தாள். குழந்தைகளை ஆதர்ஷாவிடம் விளையாட விட்டவள் லட்சுமியிடம் தனியே சென்று அவள் கர்ப்பத்தை பற்றி கூற அவர் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அடுத்து அவள் கூறியதை கேட்டதும் அவருக்கு இடி விழுந்தது போல் இருந்தது.

 

“நீ என்னம்மா நினைச்சுட்டு இருக்க எதுக்கு உனக்கு இப்படி எல்லாம் யோசனை வருது. ஊரு உலகம் என்ன சொல்லும்ன்னு நினைச்சு நீ இந்த குழந்தை வேணாம்னு எப்படி நினைப்ப” என்று கொதித்தார் அவர். எப்போதும் அமைதியாக பேசும் அவருக்கே கோபம் கொப்பளித்தது அவள் கூறியதில்.

 

“அத்தை நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க கவினும் கவினியும் எங்களுக்கு போதும் அத்தை. நாளைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் அத்தை நான் நினைக்கறேன். வாங்க அத்தை நாம மருத்துவரை பார்த்து வரலாம்” என்று அவள் சொல்ல அவர் அவளிடம் முகத்தில் அடித்தது போல் வரமுடியாது என கூறிவிட்டார்.

 

“நீ என்ன செஞ்சாலும் உன் புருஷன்கிட்ட கேட்டு செய், எனக்கு இதில இஷ்டமில்லை. நான் இதுக்கு துணை போக மாட்டேன். உன் புருஷன் என்ன சொல்றானோ நீ அது படி கேட்டுக்கோ” என்று சொல்லிவிட்டு அவர் கோபத்துடன் உள்ளே சென்று விட்டார்.

 

சிறிது நேரம் அவர்கள் அறையில் அமர்ந்து யோசித்தவள் வேறு வழியில்லாமல் ஆதிக்கு போன் செய்தாள் அவள். “என்னங்க xxx ஆஸ்பத்திரிக்கு வாங்க” என்று அவள் மொட்டையாக சொல்ல அதற்குள் லட்சுமி ஆதிக்கு விஷயத்தை சொல்லிவிட்டிருந்தார்.

 

பயங்கர கோபத்தில் அவன் இருக்கும் போது ஆதிரா போன் செய்து அவனை மருத்துவமனைக்கு வரச்சொல்ல வர்றேன் என்று ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு உடனே கிளம்பிச் சென்றான். ‘என்ன இது நாம வாங்கன்னு சொன்னதும் என்ன ஏதுன்னு கூட கேட்காம வர்றேன்னு சொல்லிட்டு போனை வைச்சுட்டாரே, ஒருவேளை அத்தை எதுவும் சொல்லி இருப்பார்களோ’ என்று நினைத்துக் கொண்டே அவள் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றாள். கிளம்புமுன் லட்சுமியிடம் சொல்ல அவர் இம்மென்றதுடன் வேறு எதுவும் பேசவில்லை.

 

ஆதியோ அங்கு பயங்கர சிந்தனையில் இருந்தான், அன்று காலையில் கூட அவனுக்கு அவளை பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. ஆதிராவிடம் அவனே பேசிவிடலாமா இல்லை அவளை பேச வைக்கலாமா அல்லது இப்படியே விட்டுவிடலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையில் அவள் கருவுற்றிருப்பதாக அன்னை கூறியதும் மகிழ்ந்தவன் அடுத்து அவர் பேசியதை கேட்டதும் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

 

ஆதிரா மருத்துவமனையில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள், முன்னமே அந்த மருத்துவரிடம் போன் செய்து அவள் வரப்போவதை பதிவு செய்திருந்தாள். அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் ஆதி வந்து சேர்ந்தான். அவள் ஏதோ பேச வாயெடுக்கும் முன் “வா போகலாம்” என்று அவள் கைப்பிடித்து அவளை இழுத்துச் சென்றான்.

 

“என்னங்க எங்க கூட்டிட்டு போறீங்க நான் உங்ககிட்ட பேசணும்” என்றாள் அவள். “என்ன பேசறதா இருந்தாலும் நாம நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் முதல்ல நாம இங்க இருந்து கிளம்பலாம்” என்றான் அவன். “என்னங்க என்னை கொஞ்சம் பேசவிடுங்க” என்றாள் அவள் சத்தமாக அவள் குரலில் அங்கு நடந்துக் கொண்டிருந்த ஓரிருவர் அவர்களை திரும்பி பார்த்துவிட்டு சென்றனர்.

 

அதை பார்த்த ஆதியின் முகம் கோபத்தில் சிவந்தது. அவளை இழுத்துக் கொண்டு கார் நிறுத்துமிடம் சென்றான் அவன். “என்ன பேசப் போற எப்படிடி உனக்கு இப்படி தேவையில்லாத சிந்தனை எல்லாம் வந்துது” என்று அவனும் கிட்டத்தட்ட அழுத்தமாகவும் அவளுக்கு மட்டும் கேட்கும் படியும் பேசினான்.

 

“முதல்ல இங்க இருந்து போகலாம் வா” என்றவனிடம் முதல் முறையாக முகத்தை திருப்பினாள் ஆதிரா. “முடியாது என்னால இங்க இருந்து வர முடியாது, நீங்க எப்போமே இப்படி தான் நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்காமலே நீங்க என்ன நினைக்கறீங்களோ அதை தான் நான் செய்யணும் நினைக்கறீங்க. நான் நம்ம நல்லதுக்கு தான் யோசிக்கறேன்ன்னு நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க, இந்த குழந்தை நமக்கு வேண்……….” அவள் முடிப்பதற்குள் அவன் கைகள் அவளை அடிக்க உயர்ந்து விட்டது, உயர்ந்த கைகள் ச்சே என்று சொல்லி அவன் உயர்த்திய வண்ணமே கையை மடக்க ஆதிரா அதிர்ந்து போனாள்.

 

அந்த நேரம் அந்த மருத்துவமனையில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரை பார்ப்பதற்கு என்று வந்திருந்த சங்கரன் ஆதி ஆதிராவை கை ஓங்குவதை பார்த்து கொதித்துவிட்டார். வேகமாக அவர்களருகில் வந்தவர் அவனிடம் கோபமாக இரைந்தார்.  “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க, என் பொண்ணை அடிக்க கையை ஓங்குவீங்களா. அவளுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுட்டீங்களா, என் பொண்ணை நானே இதுவரைக்கும் கையை நீட்டி அடிச்சதில்லை, நீங்க அவளை அடிக்க கையை ஓங்கிட்டு வர்றீங்க. நீங்க எதுவும் சொல்ல வேணாம் என்ன நடந்திருந்தாலும் நீங்க இப்படி செஞ்சது தப்பு” என்றவர் மகளிடம் திரும்பி “நீ வாம்மா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அவள் கையை பிடித்து அவர் அவளை அழைத்துச் சென்றார்.

 

அவளோ என்ன நடக்கிறது என்பதை உணராதவளாக அதிர்ந்து போய் நின்றிருந்தாள், அவளுக்கு அவன் அடிக்க கையை ஓங்கியதை தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை, அவள் தந்தை அவனை சத்தமிட்டதையோ அவளை காரில் உட்கார வைத்ததையோ அவர்கள் வீட்டிற்கு அவளை அழைத்து வந்து அவளை படுக்க வைத்ததையோ அறியாமல் இலக்கின்றி எதையோ வெறித்தவாறு இருந்தாள்.

 

தன்னையுமறியாமல் அவள் கண்கள் செருக அப்படியே உறங்கிப் போனாள். வெளியே சங்கரன் மனைவியிடம் குதித்துக் கொண்டிருந்தார், “என்ன நினைச்சுட்டு இருக்கார் அவர் என் பொண்ணையே அடிக்கப் போறார் எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நான் அவரை எதுவும் செய்யாம வந்ததே பெரிசு. இனிமே என் பொண்ணு அங்க போகவே வேணாம்” என்று கத்திக் கொண்டிருந்தார்.

 

கோமதிக்கு சங்கரன் இப்படி பேசுவது உள்ளுக்குள் பயத்தை விதைத்தது, இது அவளாக விரும்பிய வாழ்க்கை ஆயிற்றே அவளுக்கு நிச்சயமாக எந்த பிரச்சனையும் இருக்காது என்று அவர் நம்பினார், மனைவிடம் கோபித்துக் கொள்ளக் கூட ஒரு கணவருக்கு உரிமையில்லையா. அவர் கையை ஓங்கியதை தானே பார்த்தார் அடிக்கவில்லையே அவர் அப்படி செய்யக் கூடியவர் அல்லவே என்று மருமகனுக்காக அவர் மனம் பரிந்தது.

 

மனைவியை பிரிந்திருக்க முடியாமல் தானே அன்று கூட அவரே வந்து மகளை அழைத்துச் சென்றார் என்று மேலும் நினைத்தார் அவர். இங்கு ஆதியின் நிலையோ விவரிக்க முடியாததாக இருந்தது, சங்கரன் பேசியதும் ஆதிக்கு அவமானமாக இருந்தது, என்ன இருந்தாலும் ஆதிராவை அடிக்க கையை ஓங்கியதை நினைத்து அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது….. இனி என்ன நடக்கும் ஆதிரா அவள் வீட்டிற்கு திரும்பி வருவாளா, அல்லது ஆதி அவளை அழைத்து வருவானா…………………

 

சூறாவளியாய் உன்

வார்த்தைகள் என்னை

சுழற்றி அடிக்க…

 

உன் நினைவுகள்

என் நினைவலையில்                   

அடித்துக் கொண்டிருக்க…

சூழ்நிலை மாற்றத்தில்

நான் கலந்துவிட

இது தான் வாழ்க்கை

என்றிருந்தவன்

வாழ்வைஇழந்தேன்

என்றிருந்தேன் அமைதியாக…

குழந்தைகள் தான் என்னுலகம்

என்றிருந்தவனின் வாழ்வில்

நீ வந்தாய்….

 

என்னுள் வசந்தமேன

வந்து என் வாழ்வை

வாசமாக்கினாய்…

என்னை உன்

வசமாக்கினாய்…

என் வாழ்க்கையை

இனிமையாக்கினாய்…

உன் வருகை என்

வாழ்வை மீட்டேடுத்தது…

 

மறந்துவிட்டேன்

என்று நினைத்தாயாடி…

உன்னை பற்றிய

நினைவுகள் என்னுள்

உதிரமாக கலந்து

போனதறிவாயடி…

நீ வாழ்வின் மூச்சு

என்று அறிவாயடி…

நீ என் இதயத்துடிப்பு

என்று எப்போதடி அறிவாய்…

 

 

அத்தியாயம் –30

 

 

கண்விழித்து பார்த்த ஆதிராவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தாள் அவள். அவள் எழும் அரவம் கேட்டு உள்ளே வந்தார் கோமதி. “நீ எப்போமா இங்க வந்த” என்றாள் அவள். “நீ தான்மா இங்க வந்திருக்க மறந்துட்டியா, அப்பா தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தார்” என்றார் அவர்.

 

“அப்பாவா என்னம்மா சொல்ற” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் குரல் கேட்டு உள்ளே வந்தார் சங்கரன். “லட்சுமி என்னடா என்னாச்சு” என்றார் அவர் பரிவாக. ஆதிரா கண்ணை மூடி நடந்ததை அசை போட்டாள். நிழலாக நடந்தது நினைவு வர யாரோ அவளை அழைத்து கொண்டு போனது மட்டும் தான் அவளுக்கு ஞாபகம் இருந்தது. ஆதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு லேசாக தலைசுற்றுவது போல் இருந்தது,அப்போது தான் அவள் தந்தை வந்து அவளை அழைத்துச் சென்று இருக்க வேண்டும்  என்று நினைத்தாள்.

 

“எதுக்குப்பா என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க” என்றாள் அவள். “என்னம்மா கேட்குற மாப்பிள்ளை உன்னை கை நீட்டி அடிக்க வந்தது பார்த்துட்டுமா என்னை சும்மா இருக்க சொல்ற, அதான்மா நான் மாப்பிள்ளையை சத்தம் போட்டுட்டு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். பாரு கோமதி நடந்ததுகூட என் பொண்ணுக்கு நினைவு இல்லை எந்த அளவுக்கு இருக்குன்னு பாரு” என்று அவர் வருந்தினார்.

 

“என்னப்பா சொல்றீங்க அவரை நீங்க சத்தம் போட்டீங்களா, எதுக்குப்பா இப்படி செஞ்சீங்க, என்ன நடந்துதுன்னு தெரியாம ஏன்ப்பா இப்படி பண்ணீங்க. முதல்ல என்னை கொண்டு போய் எங்க வீட்டில விட்டுட்டு வாங்க, கிளம்புங்க  போகலாம்” என்றாள் அவள்.

 

“என்னம்மா உனக்கு என்னாச்சு என் பொண்ணை கை ஓங்கிட்டு வருவார் நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா” என்றார் அவர். “அப்பா அவர் என் புருஷன் இது கணவன் மனைவி விவகாரம் நீங்க எதுக்குப்பா இடையில வந்து அவரை பேசினீங்க… என்ன நடந்துச்சுன்னு கூட தெரியாம அவரை எதுக்குப்பா பேசினீங்க… நான் பண்ண தப்புக்கு அவரை போய் நீங்க பேசி இருக்கீங்க” என்றவள் மருத்துவமனைக்கு எதற்கு சென்றாள் என்ற விபரம் உரைக்க கோமதி ரௌத்திரமானார்.

 

“உன்னை மாப்பிள்ளை அடிக்காம விட்டதே ரொம்ப தப்பு, உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க. எப்போமே நீ நினைக்கறதையே நடத்தி பழகிட்ட. எங்களை ஆட்டி வைக்கறதே உனக்கு வேலையா போச்சு” என்று மகளை அவர் ஏச மகளுக்காக பரிந்து வந்தார் சங்கரன். “விடு கோமதி அவ தெரியாம பண்ணிட்டா” என்றவரை திரும்பி கோமதி ஒரு முறை முறைத்தார்.

 

“நீங்க தான் நீங்க மட்டும் தான் இவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்துட்டீங்க. முதல்ல கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னா, சரின்னு பேசாம இருந்தோம். அப்புறம் இவரை தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிச்சா அதுக்கும் சரின்னோம். அப்புறம் அவங்க ரெண்டு பேரும் தான் இவளோட குழந்தைங்கன்னு சொன்னா அதையும் ஏத்துக்கிட்டோம். இப்போ அவ வயித்துல உருவான கருவையும் வேணாம்கறா இதுக்கும் நீங்க சரின்னு சொல்லுவீங்களா” என்று கணவரை எரிப்பது போல் பார்த்தார் அவர்.

 

மனைவி இவ்வளவு காரமாக பேசி அவர் இன்று தான் பார்க்கிறார், ஆதிராவுமே திகைத்து விழித்தாள் அவள் அன்னையின் புதிய அவதாரத்தில். “நீ பண்ணதுலையே ரொம்பவும் நல்ல விஷயம் மாப்பிள்ளை தேர்ந்து எடுத்தது தான். இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து தான் வைச்சு இருக்கணும். அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து அவரை என்னன்னு நினைச்சீங்க”

 

“கிளம்பு, நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு, இனி நீ தனியா கூட இந்த வீட்டுக்கு வரக் கூடாது. மாப்பிள்ளை வந்தா தான் நீ இனிமே இங்க வரணும் புரிஞ்சுதா. என்ன பார்க்குறீங்க கிளம்புங்க, நீங்க பண்ணி வைச்ச வேலைக்கு நானே வந்து அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறேன். இங்க பாரு லட்சுமி உனக்கு முதலும் கடைசியுமா சொல்றேன், இந்த குழந்தை வேணாம்ன்னு நீ சொன்னா நான் பெத்த பொண்ணு நீயும் எனக்கு வேணாம்னு நான் தலை முழுகிடுவேன் ஞாபகத்துல வைச்சுக்கோ” என்றார் அவர்.

 

“அம்மா என்னம்மா இப்படி பேசுறீங்க, நான் அப்படி பேசினது தப்பு தான்மா, ஆனா ஏன் அப்படி பேசினேன்ன்னு புரிஞ்சுக்கோங்கம்மா…” என்று எதையோ பேச வந்தவளை, “நான் சொல்றது மட்டும் கேளு நீ எனக்கு எதுவும் சொல்ல வேணாம்” என்றவர் நேராக மகளையும் கணவரையும் அழைத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றார்.

 

உள்ளே செல்லவும் எதிரே வந்த லட்சுமி அவர்களை வரவேற்றார். “என்னம்மா ஆதிரா நீ வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்ன்னு இப்போ தான் ஆதி சொன்னான். அவன் உங்க வீட்டில விட்டுட்டு வந்த கொஞ்ச நேரத்துல நீ இங்க வந்து நிக்குற” என்றார் அவர். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

வீட்டிற்கு வந்த ஆதி அன்னையிடம் தங்களுக்குள் பேசி சரி செய்தாயிற்று இனி எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவனே அவளை அவள் வீட்டில் இரண்டு நாட்கள் இருக்கச் சொல்லி விட்டுவிட்டு வந்ததாக சொல்லி சமாளித்திருந்தான். கோமதி கணவரை முறைத்தார் ‘பாருங்கள் நீங்க செய்த செயலை மறைத்து மாப்பிள்ளை வீட்டில் கௌரவமாக பேசி இருக்கிறார்’ என்பது போல் இருந்தது.

 

வெளியில் பேச்சு குரல் கேட்கவும் ஆதியே வெளியில் வந்தான். “என்ன அதுக்குள்ள வந்துட்ட இப்போ தானே உன்னை உங்க வீட்டில விட்டுட்டு வந்தேன். உன்னால எங்களை விட்டு இருக்க முடியலையா அதான் உங்களையும் கூட்டிகிட்டு வந்துட்டாளா” என்றான் அவன் இயல்பாக.

 

லட்சுமி முகம் ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என்று நினைத்து வருந்துவதை பார்த்தவன் அவர் மனம் வருந்தாதவாறு பேசி சமாளித்தான் அவன். “சரி நீங்க உட்காருங்க நான் போய் காபி எடுத்துட்டு வர்றேன்” என்று அவர் உள்ளே செல்ல கோமதி அவனருகில் வந்து பேச ஆரம்பித்தார். “மன்னிச்சுடுங்க இவங்க ரெண்டு பேரும் பேசினதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இனி இவ இந்த மாதிரி பேசமாட்டா” என்று வருத்தம் தெரிவித்தார். சங்கரனும் சங்கடமாக உணர்ந்தவர் “என்னை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை நான் ஏதோ தெரியாம பேசிட்டேன். என் பொண்ணு மேல ரொம்ப பாசம் வைச்சுட்டேன். அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியாது, அந்த கோபத்தில ஏதோ பேசிட்டேன் தப்பு தான் என்னை என் பொண்ணையும் மன்னிச்சுடுங்க” என்றார் அவர்.

 

“என்ன மாமா நீங்க எனக்கும் பொண்ணு இருக்கு உங்க நிலைமையில நான் இருந்திருந்தாலும் இதே தான் செஞ்சு இருப்பேன் மாமா எனக்கு உங்க மேல எந்த கோபமும் வருத்தமும் இல்லை. நான் செஞ்சதும் தப்பு தானே இனி இப்படி எப்பவும் நடக்காது மாமா நீங்க என்னை நம்பலாம்” என்று அவனும் அவர்களிடம் மன்னிப்பு தெரிவித்தான். ஒருவழியாக அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

 

ஆதி அவர்கள் அறைக்குள் நுழைய ஆதிராவும் பின்னோடு நுழைந்தாள். அவள் அவனிடம் ஏதோ பேச முயற்சிக்க ஆதி அவளுக்கு பிடிகொடுக்காமல் அதை கவனிக்காதவன் போல் சென்றுவிட்டான். அதற்கு பின் வந்த நாட்களும் இப்படியே சென்றது.

 

அவள் எழுந்து சென்ற பின் அவன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொள்வான். சாப்பிட்டுவிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பிச் சென்று விடுவான். மாலை வீட்டிற்கு வருபவன் குழந்தைகளிடம் விளையாடிவிட்டு சாப்பிட்டு அவள் வரும் முன் உறங்கச் சென்று விடுவான்.

 

எது எப்படி இருந்த போதும் அவன் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆதிரா தான் மிகவும் தவித்துப் போனாள். அவன் அவளிடம் பேசி முழுதாக நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இன்று எப்படியும் அவர் என்னிடம் பேசி தான் ஆக வேண்டும். ஞாயிற்று கிழமை எங்கு செல்லமுடியும் வீட்டில தான் இருந்தாக வேண்டும்.

 

‘நல்லவேளை வீட்டில் இன்று யாரும் இல்லை, தம்பி நேத்ராவை பார்க்க நேற்றே சென்று விட்டார். அத்தையும், மாமாவும் குழந்தைகளையும் ஆதர்ஷாவையும் கூட்டிக் கொண்டு காஞ்சிவரம் கோவிலுக்கு சென்று விட்டனர். இனி எல்லோருமே மாலையில் தான் வீடு திரும்புவார்கள்’ என்று முடிவெடுத்தவளாக அவனுக்காக காபி தயாரித்தாள்.

 

விடுமுறை தினம் என்பதால் அன்று தாமதமாக எழுந்தவன் காலை கடனை எல்லாம் முடித்துவிட்டு வெளியில் வந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்தவன் சிறிது நேரம் சோபாவில் அமர்ந்து தினசரியை புரட்டினான். அவள் அவனுக்கு காபி கொண்டு வந்து நீட்டினாள்.

 

“என்னங்க காபி” என்று அவள் அழைப்பதை அலட்சியம் செய்தவன் உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டு அவன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். “என்னங்க எங்க கிளம்பிட்டீங்க” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க அவன் வெளியில் சென்று பைக்கை உதைத்து கிளம்பிச் சென்றுவிட்டான். ‘ஏன் இப்படி பண்றாரு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்து தன்னிலை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் கைகளில் உணவு பொட்டலம் இருந்தது.

 

ஹோட்டலுக்கு சென்று இருவருக்குமாக காலை உணவை வாங்கி வந்திருந்தான். அங்கிருந்த மேஜையில் ஒன்றை வைத்தவன் அவனும் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “என்னங்க இப்போ எதுக்கு வெளிய போய் டிபன் வாங்கிட்டு வந்தீங்க. நான் செஞ்சு தரமாட்டேனா” என்றாள் அவள் கண்ணீருடன்.

 

“இங்க பாரு உன்கிட்ட பேச எனக்கு இப்போ தெம்பில்லை எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட்டு நம்ம சண்டை எல்லாம் வைச்சுக்கலாம். உனக்கும் சேர்த்து தான் டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடு” என்றான் அவன். அவளுக்கும் பசி எடுப்பது போல் தோன்ற அந்த பொட்டலத்தை பிரித்தாள் அவளுக்கு பிடித்த மசால் தோசையும் கேரட் அல்வாவும் இருந்தது.

 

‘எனக்கு பிடித்ததாக வாங்கி இருக்கிறாரே’ என்று மனம் நெகிழ்ந்தாள் அவள். நல்ல பசியாக இருந்ததில் வேகவேகமா உண்டு முடித்தாள் அவள். அவன் சாப்பிட்டு விட்டு எப்போதோ எழுந்து உள்ளே சென்று விட்டிருந்தான். அவளும் அவனைத் தேடி அவர்கள் அறைக்கு வந்தாள். “என்னங்க உங்ககிட்ட பேசணும்” என்றாள் அவள்.

 

“நீ என்ன பேசப் போறன்னு எனக்கு தெரியும். நான் அதை பத்தி உன்கிட்ட பேசவிரும்பலை, அதனால தானே இத்தனை நாளும் தள்ளி தள்ளி போனேன். இப்போ எதுக்கு வந்து நீ இப்படி என் உயிரை எடுக்கற. உனக்கு தான் நான் வேணாம்னு முடிவு பண்ணிட்ட இல்ல. பேசமா உங்க வீட்டிலேயே இருந்துருக்க வேண்டியது தானே இப்போ இங்க எதுக்கு வந்து என் நிம்மதியை குறைக்கிற” என்றான் அவன்.

 

“நான் உங்க நிம்மதியை குறைக்கிறனா நீங்க தான் பேசாம என்னை கொல்றீங்க அது ஏன் உங்களுக்கு புரியலை” என்றாள் அவள் பதிலுக்கு. “உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு என்னைக்கு என்னோட குழந்தை உனக்கு வேணாம்னு முடிவு பண்ணியோ அன்னைக்கே எல்லாம் செத்து போச்சு. இனி உன்கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை. நீ மும்பைல வைச்சு ஹரிணியை பற்றி பேசும் போதே நான் யோசிச்சு இருக்கணும். அப்போ ஏதோ தெரியாம பேசிட்டேன் நினைச்சேன். இப்போ தானே தெரியுது நான் ஹரிணி நினைப்புல உன்னை தொட்டிருப்பேன்னு நீ நினைச்சுட்ட அதுனால தான் நீ என்னை அப்படி கேட்டேன்னு” என்று மேலும் பொரிந்தான் அவன்.

 

“நானா கல்யாணம் வேணும்னு கேட்டேன் எதுவும் வேணாம்னு தானே இருந்தேன். சந்தோசமா என் குழந்தைகளை பார்த்துட்டு நான் பாட்டுக்கு இருந்துருப்பேன். தேவையில்லாம எனக்கு கல்யாணம் பேசி விருப்பமில்லாத பந்தத்துல உன்னையும் சிக்க வைச்சு, எல்லாம் என் தலைவிதி. எனக்கு மனைவி ராசியில்லை போலும். நீ உங்க வீட்டுக்கு போறதுனா போயிடு, குழந்தை விஷயத்தை இனி நீயே முடிவு பண்ணிக்கோ நான் அதுல தலையிடமாட்டேன்”

 

“இவ்வளவு நாளும் நீ எங்களால ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, நான் உனக்கு தாலி கட்டிடதுனால தான் நீ என்னை சகிச்சுக்கிட்டு இருக்கேன்னு எனக்கு இப்போ தான் புரிஞ்சது. அன்னைக்கு உன்னை கைநீட்டி அடிக்க வந்தது தப்பு தான் அதுக்காக என்னை மன்னிச்சுடு”

 

“உனக்கு விவாகரத்து பத்திரம் சீக்கிரமே வந்து சேரும், நீ இனி சந்தோசமா உங்க வீட்டிலேயே இருக்கலாம். நானும் என்னோட குழந்தைகளும் இனி உனக்கு எப்போமே பாரமா இருக்க மாட்டோம்.

 

“நீ எப்போ கிளம்புறன்னு சொல்லு உன்னை நானே கொண்டு போய் விடறேன். வேண்டாத பந்தத்தில உன்னை பிடிச்சு வைக்க எனக்கு விருப்பம் இல்லை, இத்தனை நாளா உன்னை புரிஞ்சுக்காம இருந்ததுக்கு திரும்பவும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றான் அவன்.

 

“போதும் நிறுத்துங்க இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க இனி நீங்க ஒரு வார்த்தை பேசினாலும் என்னால தாங்க முடியாது. என்னல்லாம் சொல்லிட்டீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, நீங்களும் குழந்தைகளும் எனக்கு பாரமா. நீங்க எனக்கு பாரம்னா இந்த ஆறு வருஷம் மட்டும் இல்லை இந்த உடம்பில உயிர் இருக்க வரைக்கும் இந்த பாரத்தை சந்தோசமா சுமக்க நான் தயாரா தான் இருக்கேன்” என்றவளின் கண்கள் கண்ணீரை நிற்காமல் பெருக்கியது.

 

“என்ன சொன்னீங்க நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டீங்களா, என்ன புரிஞ்சுகிட்டீங்க நீங்க என்னை. என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா, உண்மையிலேயே நீங்க என்னை புரிஞ்சு வைச்சு இருந்தா இந்த மாதிரி பேசி இருக்க மாட்டீங்க. எனக்கு உங்களை பிடிச்சு தான் நான் கல்யாணம் பண்ணேன். யாரும் என்னை கட்டாயப்படுத்தலை” என்றாள் அவள்.

 

“ஹா எதுக்கு இப்போ பொய் சொல்ற” என்றான் அவன். “உண்மையா தான் சொல்றேன், உங்களை இப்போ இல்லை நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியில இருந்து நான் ரொம்ப விரும்பறேன். ஆறு வருஷமா நான் உங்களையே தான் நினைச்சுட்டு இருக்கேன். இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க தான் என் மனசுல இருக்கீங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க. உங்களை போய் எனக்கு பிடிக்கலைன்னு சொல்றீங்களே. விவாகரத்துன்னு என்னென்னமோ பேசுறீங்களே” என்றவள் ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

 

அவன் எதுவும் பேசாமல் எழுந்து வெளியில் சென்று விட்டான். இவ்வளவு சொல்லியும் என்னை நம்பாமல் வெளியில் எழுந்து செல்கிறாரே என்று தன்னை நினைத்தே இன்னும் அழுதாள் அவள். அவள் முன் ஆதி எதையோ நீட்ட நிமிர்ந்து பார்த்தாள். “இந்தா வாங்கி பாரு” என்றான் அவன்.

 

அவனிடமிருந்து அவள் அதை வாங்கி பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, அவளின் டைரி. ‘இது எப்படி இவரிடத்தில் அது அவர்கள் வீட்டில் அல்லவா இருந்தது என்று அவள் நினைத்துக் கொண்டே இருக்க அவள் வரைந்த அவனின் ஓவியத்தை அவளிடத்தில் நீட்டினான் அவன்.

 

அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக “இது… இதெல்லாம் எப்படி உங்களிடம்” என்றாள் அவள் மகிழ்ச்சி கலந்த சந்தோசத்தில். “இராட்சசி என்னை பிடிச்சுருக்கு சொல்ல உனக்கு இவளோ நாளாடி உனக்கு. அப்பப்பா ரொம்பவும் என்ன பேசவைச்சுட்ட இருந்தாலும் உனக்கு இவ்வளோ அழுத்தமா” என்றான் அவன்.

 

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை “என்ன சொல்றீங்க என்னை பேச வைச்சீங்களா எதுக்கு” என்றாள் அவள். “அதான் சொன்னனே உன் வாயால என்னை பிடிச்சுருக்குன்னு நீயே சொல்லணும்ன்னு நான் எதிர் பார்த்தேன். ஆமா இத்தனை நாள்ல இதை பத்தி நீ ஏன் என்கிட்ட ஒரு தரம் கூட சொல்லலை. உனக்கு என் மேல இப்படி ஒரு காதல் இருக்குங்கறதை உன்னோட கண்கள் கூட வெளிப்படுத்தலையே. எதுக்குடி என்கிட்ட மறைக்கணும்ன்னு நினைச்ச. இந்த டைரி மட்டும் கிடைக்கலைன்னா என்னாகி இருக்கும்” என்றான் அவன்.

 

“உன்னை முழுசா எனக்கு அடையாளம் காமிச்சது இந்த டைரி தான். சொல்லுடி நீ ஏன் என்கிட்ட எதையும் சொல்லலை” என்றான் அவன். “நான் மறைக்கணும்ன்னு நினைக்கலை” என்றாள் அவள். “அப்புறம் ஏன் என்கிட்ட நீ சொல்ல முயற்சி பண்ணலை” என்றான் அவன்.

 

“என்னோட காதல் உங்களுக்கு தெரியாமலே போயிடுச்சு. நம்ம கல்யாணம் கூட நேத்ரா என்னை கட்டாயப்படுத்தலைன்னா நடந்திருக்காது. இந்த ஜென்மத்தில நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு அவளுக்கு தெரிஞ்சு போச்சு. எனக்கு ஹரிணியோட இழப்புல ஆதாயம் தேட விருப்பம் இல்லை அதுனால தான் நான் கல்யாணம் வேணாம்னு நினைச்சேன்”

 

“இன்னொரு காரணம் உங்களை அந்த நிலையில பார்க்கவும் எனக்கு மனசில்லை. நேத்ரா தான் உங்களுக்கு எப்படியும் வேற கல்யாணம் பண்ண தான் போறாங்க அது ஏன் நீயே இருக்கக்கூடாதுன்னு சொல்லி என்னை இந்த  கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சா நானும் குழந்தைகளுக்காகவும் உங்களுக்காகவும் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். என்னோட காதலை சொல்லி நான் உங்ககிட்ட காதலை யாசகம் வாங்க விரும்பலை, என்னோட அன்பு உங்களுக்கு என்னை உணர்த்தும்ன்னு நினைச்சேன், நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும் அதன் மூலமா நம்ம உறவு வளரணும் நினைச்சேன். எந்த ஒரு காரணத்துக்காகவும் என்னோட இந்த  காதல் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைச்சேன்.

 

“ஒரு வேளை எல்லாரும் நான் இந்த சந்தர்ப்பத்துக்காக தான் காத்திட்டு இருந்தேன்னு நினைச்சா என்னால தாங்க முடியாது. என்னோட காதலை நான் சொல்லி நீங்க ஏத்துக்கிட்டு உங்களை யாரும் இதுக்காக தான் காத்திட்டு இருந்தீங்கன்னு சொல்லிடக் கூடாதுன்னு நினைச்சேன். நான் நினைச்சது தப்பாங்க” என்றாள் அவள்.

 

“எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்க எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆரா. இவ்வளவு அன்பு என் மேல வைச்சுட்டு அதை எங்கயும் எப்பவும் கொஞ்சம் கூட நீ காமிச்சதில்லையே. உன்னோட கண்கள் கூட அதை வெளிபடுத்தினது இல்லை. எப்படி உன்னால முடிஞ்சது” என்றான் அவன்.

 

“நீங்க என்கிட்ட பேசணும் பழகணும்ன்னு மனசு பூரா ஆசை இருக்கும், ஆனா உங்களால ஹரிணியோட நினைப்புல இருந்து முழுசா வெளிய வரமுடியாதுன்னு எனக்கு புரிஞ்சது. நீங்களா கொஞ்சம் கொஞ்சமா தான் வெளிய வருவீங்கன்னு நினைச்சேன். அதுக்காக எவ்வளோ நாள் வேணா காத்திட்டு இருக்கலாம்ன்னு நினைச்சு தான் நான் எதையுமே வெளிக் காட்டிக்கலை” என்றாள்.

 

“என்னை இவ்வளவு கேட்டீங்களே நீங்க எதையுமே சொல்லையே” என்றாள் அவள். “எனக்கு இன்னும் ஒண்ணு தெரியணும், சரி விடு அதை நான் கடைசியா கேட்டுக்கறேன். சரி இங்க வா என்று அவளை எழுப்பி தன்னருகில் அமர வைத்தான். உனக்கு என் மேல அவ்வளவு அன்பாடி நான் அதுக்கு தகுதியானவன் தானா” என்றவனின் வாயை தன் கை கொண்டு பொத்தினாள். “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றாள் அவள்.

 

அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான், அவன் தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டு “என்னங்க உங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு தானே, உங்களுக்கு அந்த டைரி படிச்சதும் தான் என்னை பிடிச்சுதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்றவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க “உனக்கு சந்தேகமா சொல்லுடி… சொல்லு உனக்கு சந்தேகமா நான் முழுசா சொன்னா தான் உனக்கு என்னை புரியும்” என்றவன் பேச ஆரம்பித்தான்.

 

“எங்க வீட்டில எனக்கு பொண்ணு பார்த்திட்டு இருந்த நேரம் அது பொண்ணோட புகைப்படம் கொண்டு வந்து எனக்கு காமிச்சாங்க. இந்த பொண்ணை எங்கயோ பார்த்த ஞாபகமா இருக்கேன்னு முதல்ல நினைச்சேன். ஏனோ அந்த முகம் எனக்கு மறக்க முடியலை சரின்னு சொல்லி பொண்ணு பார்க்க போனோம். உனக்கு ஒண்ணு தெரியுமா ஹரிணி பார்க்க உன் சாயல்ல இருப்பா, நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியுதா” என்றான். அவள் திகைத்து அவனை பார்க்க அவளுக்கும் ஹரிணியை பார்த்த போது எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. இன்னொரு விசயம் சொல்றேன் அது சொன்னா உனக்கு எல்லாமும் புரியும்” என்றவன் ஹரிணிக்கும் ஆதிராவுக்கும் உள்ள பந்தத்தை அவளிடம் கூறினான்.

 

அவள் வியப்புடன் அவன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தாள். “என்னங்க சொல்றீங்க ஹரிணி எனக்கு தங்கையா” என்றாள் அவள். “ஆமா உங்களுக்கு எப்படி இந்த விசயம் தெரியும் என்கிட்ட யாருமே சொல்லவே இல்லை” என்றாள் அவள். “அதுக்கு காரணம் உன்னோட மாமன் வெற்றி தான், அவன் தான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு சேர்த்து வைச்சு இருக்கான். நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு உன் மாமன் நம்மகிட்ட சொல்ல வேணாம்னு எல்லார்கிட்டயும் சொல்லி வைச்சு இருக்கான். ராஜீவ்க்கு மட்டும் நடந்ததை சொல்லி இருக்கான், ராஜீவ் என்கிட்ட எதையும் மறைச்சது இல்லை, அவனுக்கு மட்டும் தான் என்னோட எல்லாமும் தெரியும். அதுனால அவன் நான் ஊர்ல இருந்து வந்த அன்னைக்கே என்கிட்ட சொல்லிட்டான்” என்றான்.

 

“நான் சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுறேன். உன்னை முதன் முதலா பார்த்த அந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கு. ஆனா உன்னோட முகம் எனக்கு நிழலா தான் ஞாபகத்துல இருந்துச்சு. வெற்றியோட அக்கா கல்யாணத்துல நான் உன்னை கேட்டதா நீ உன்னோட டைரில எழுதி இருந்த, ஒரு வேளை நீ எனக்கு நின்னு பதில் சொல்லி இருந்தா நான் மறந்திருக்க மாட்டேனோ என்னவோ. எனக்கு அந்த சம்பவமும் நிழலா தான் ஞாபகத்துல இருக்கு”.

 

“ஆனா எங்க வீட்டில நாங்க எல்லாரும் ஹரிணியை பெண் பார்க்க போனோம். கல்யாணமும் முடிவாச்சு, அப்பவும் ஒரு தடவை நான் ஹரிணிகிட்ட கேட்டேன் இதுக்கு முன்னாடி என்னை பார்த்த ஞாபகம் இருக்கான்னு, அவ தெரியலைன்னு சொன்னா. ஒரு வேளை அவ மறந்திருப்பான்னு நான் நினைச்சேன். கல்யாணத்துக்கு பிறகு ஒரு தரம் ஸ்பென்சர் போயிருந்தோம். அப்போ தான் எனக்கு மனசுல ஒரு சின்ன நெருடல் ஹரிணி ரொம்ப சந்தோசமா நகரும் படிக்கட்டில ஏறினதை பார்த்தேன்”

 

“எந்தவித தயக்கமும் அவகிட்ட அப்போ இல்லை, அப்போ தான் எனக்கு உன்னை பார்த்த ஞாபகம் வந்தது. உண்மையை சொல்லணும்னா அப்போ நான் உன்னை காதலிச்சேனான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா உன் முகம் மட்டும் என் மனசுல பதிஞ்சு போயிருந்தது. நான் கல்யாணம் பண்ணிகிட்டது நான் பார்த்த பெண்ணில்லையோ என்று நினைத்தேன். அது அவ இல்லைன்னு தெரிஞ்சாலும் ஒரேடியா என்னால அவளை விட்டு இருக்க முடியலை. அப்போ தான் அவ கர்ப்பமா ஆனா, ஹரிணியை சந்தோசமா பார்த்துக்கிட்டேன், அவ கருவுற்றிருக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்”

 

“இரட்டை குழந்தைகள் என்றதும் மனம் கொள்ளா உற்சாகம் எனக்கு, ஹரிணியும் மற்றவர்களிடம் எப்படியோ என்னிடம் அவள் மொத்த அன்பையும் கொட்டினாள். என்னை எந்த வேலையும் செய்யவிட்டதே இல்லை, அலுவலகம் செல்ல நான் அணியும் உடை கூட அவளே தேர்வு செய்து எடுத்து வைத்துவிடுவாள். அவள் மேல் எனக்கு தனி வீடு வந்தது பற்றி இருந்த கோபம் கூட இல்லை, ஏனெனில் அவள் என் மேல் காட்டிய அன்பு அப்படி”

 

“குழந்தைகள் பிறந்த போது நான் அவர்களுடனே இருக்க விரும்புவேன், அவள் என்ன செய்தாள் தெரியுமா அவளுடன் நான் இருக்கும் நேரம் குறைகிறது என்று நினைத்தவள் நான் குழந்தைகளை பார்க்க வரும் நேரம் அவர்களை தூங்க வைத்து விடுவாள், அவர்களை தூக்கி வரச் சொன்னால் அவர்கள் அழுகிறார்கள் அப்படி இப்படி என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லுவாள்”

 

“காலையிலும் மாலையிலும் எப்படியாவது அவர்களை பார்ப்பதை நான் விடவே இல்லை அவளும் கொஞ்சம் மனம் மாறினாள், அம்மாவிடம் தனி வீடு வந்ததிற்காக மன்னிப்பு கேட்டாள், என்னிடமும் பேசினாள். நான் வருத்தப்படுவேனோ என்று மீண்டும் அங்கு சென்று விடலாம் என்று அவள் சொல்ல நான் அவள் குணமறிந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்”

 

“அது தப்போ என்று நான் பலமுறை வருந்தி இருக்கிறேன். அதற்கு பின் அவள் உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது. நான் வேலையிலேயே கவனமாக இருந்ததில் அவளை என்றுமே நான் கவனித்ததில்லை பேச்சி சித்தி அம்மாவிடம் சொல்லி அவர்கள் வந்து ஒரு நாள் அவளை மருத்துவமனை அழைத்து செல்ல அங்கு விபரீதமாக ஏதோ சொல்ல நான் மருத்துவமனை விரைந்தேன்”

 

“மருத்துவர் என்னை கன்னாபின்னாவென்று சத்தம் போட்டார். மனைவி எப்படி இருக்கிறாள் என்று கூட பார்க்காமல் அப்படி என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று சத்தம் போட்டார். நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினார். இரண்டு நாட்களாக கோமாவில் இருந்து பின் கண் திறந்து என்னை பார்த்தவள் அவள் மூச்சை நிறுத்திக் கொண்டாள்” என்று சொல்லும் போது அவன் முகம் வாட ஆதிரா “போதும் விடுங்க நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

 

“விடு ஆரா எனக்கு ஒண்ணுமில்லை, இதுவரைக்கும் இதை பத்தி நான் யார்க்கிட்டயும் சொன்னதில்லை, இப்போ தான் உன்கிட்ட சொல்றேன். என்னோட மனசு கொஞ்சம் கொஞ்சமா லேசா ஆகறதை நான் உணர்றேன். என்னை பேசவிடு” என்றான் அவன். அவனே தொடர்ந்தான்.

 

“உண்மையை சொல்லணும்னா மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒருவன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்பதை அன்று நான் உணர்ந்தேன். ஒரு பெண் மனைவியா அவன் வாழ்க்கையில எந்தளவு முக்கிய பங்கு வகிக்கறான்னு அன்னைக்கு தான் நான் முழுசா உணர்ந்தேன். காலையில எழுந்து கணவனுக்கு சமைச்சு அவனுக்கு தேவையானது எடுத்து கொடுத்து குழந்தைகளையும் கவனிச்சு சமையலை முடித்து, துணி துவைத்து, பாத்திரம் விலக்கி என்று வீட்டு வேலைகளை அத்தனையும் முடித்து மாலையில் வீட்டிற்கு வரும் கணவனுக்கு தேவையானதை மீண்டும் கவனித்து இரவில் அவன் தேவையை தீர்ப்பது வரை ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறாள் என்று எண்ணி வியந்திருக்கிறேன்”

 

“ஹரிணி இல்லாததோட வலி எனக்கு புரிஞ்சுது, எது எது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியலை, என்னோட உடுப்புகள் கூட எது எங்க இருக்குன்னு தெரியாம நான் முழிச்சது இப்பவும் எனக்கு நினைவிருக்கு. அதுக்கு அப்புறம் தான் முடிவு பண்ணேன், என்னோட தேவைகளை நானே செஞ்சுக்கணும், யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக் கூடாதுன்னு. என்னோட துணிமணிகளை துவைப்பது, இஸ்திரி செய்வது அதை மடித்து வைப்பது என்று ஒவ்வொன்றையும் நானே பார்த்து பார்த்து செய்தேன்”

 

“குழந்தைகளை பேச்சி சித்தி பார்த்துக் கொண்டதால் நான் சற்று நிம்மதியடைந்தேன். நான் வீட்டில் இருக்கும் சமயங்களில் என்னாலான உதவிகளை குழந்தைகள் விஷயத்தில் செய்தேன். இப்படியே என் வாழ்நாளை கழித்து விட எண்ணி இருக்க அம்மா, அப்பா, ஆச்சி என்று ஆளாளுக்கு என்னை பேசியே கரைத்தனர் மறு திருமணம் செய்து கொள்ள சொல்லி, பிடிவாதமாக மறுத்தேன். கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார்கள் நீ பெண் பிள்ளை வைத்திருக்கிறாய், நாளை அவளுக்கு ஒரு நல்லது கெட்டது பார்ப்பதற்கு இந்த வீட்டில் ஒரு பெண் வேண்டாமா, அந்த குழந்தை ஏங்காதா என்று கேட்க ஒருவழியாக நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்”

 

“உன்னோட புகைப்படம்கூட நான் பார்க்கலை, வேணாம்ன்னு சொல்லிட்டேன். உன்னை நான் திருமணத்தன்று தான் பார்த்தேன். அப்போதும் நான் உன்னை சரியாக பார்க்கவில்லை. அன்று இரவு உன்னோடு பேசும் போது கூட நான் என்னை பற்றி மட்டுமே யோசித்து பேசினேன்.

 

“ஆனால் மறுநாள் என்னோட அத்தனை கட்டுப்பாடும் உடைந்தது என்னையறியாமலே, கோவிலில் வைத்து நீ என்னிடம் பேசியது படகில் செல்லும் போது நீ பயந்தது, ஏனோ அப்போது என்னையறியாமலேயே உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்துதல். அன்று வீட்டிற்கு வந்து வெகு நேரம் யோசித்தேன் நேற்று தான் திருமணம் நடந்தது அதற்குள் எப்படி எனக்கு இப்படி ஒரு எண்ணம் என்று ஒரே குழப்பம். உன்னிடம் இருந்து தள்ளி இருக்க முடிவு செய்தேன்”

 

“மறுநாள் கறிவிருந்தில் என் ஒட்டுமொத்த சபதமும் தவிடு பொடி ஆனது. இடுப்பில் கை வைத்து நீ என்னை பார்த்த பார்வை இப்போதும் என் கண் முன் நிழலாடுகிறது. என் மனதில் உள்ள பெண் இவள் தான் என்று அந்த கணம் எனக்கு புரிந்தது. அப்போது தான் நீ பார்ப்பதற்கு ஹரிணியின் சாயலில் இருந்தது எனக்குப்பட்டது. ஒருவேளை இது அதனால் வந்த ஈர்ப்போ என்று நான் அதற்கும் ஒரு விளக்கம் எடுத்துக் கொண்டேன். நீ குழந்தைகளை உன்னோட குழந்தைகளை பார்த்துக்கிட்டப்போ உன்னை எனக்கு முழுசா புரிஞ்சுது. ஆனாலும் என்னால என்னை ஒத்துக்க முடியலை. ஹரிணியை பற்றி நினைவுகள் என்னை அலைகழித்தது, ஏதோ நான் பெரிய தப்பு செய்து விட்டதாக தோன்றியது.

 

“ஹரிணிக்கு துரோகம் செய்துவிட்டதாவும், உன் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டதாகவும் எனக்குள் அவ்வபோது எண்ணங்கள் வந்து வட்டமிடும். அவ்வப்போது உன் அஞ்சனை விழிகளை பார்க்கும் போது நான் அதில் வீழும் போது எனக்குள் நான் தேடியவள் இவள் தான் என்ற எண்ணம் தோன்றும். உன்னோட கண்களை பார்த்தா என்னோட சுயத்தை இழந்து நான் உன்வசமாறது உணர்ந்தேன். அதுல இருந்து தப்பிக்க தான் அப்பப்போ என்னை நான் கோபமா காட்டிக்கிட்டேன். உன்கிட்ட இருந்து விலகி இருக்கறது போல இருந்தேன்”.

 

“டெல்லிக்கு கூட நானா விரும்பி தான் போனேன், உன்னை பிரிஞ்சு ஊருக்கு போனா உன்னோட நினைவுகள்ல இருந்து தப்பிக்கலாம்ன்னு நினைச்சு தான் போனேன். அங்க போன பிறகும் எனக்கு உன்னோட நினைவுகள் தான் உன்னோட மை பூசிய கண்கள் என்கிட்ட பேசுறது போல தோணும். என்னோட வேலைகளை சீக்கிரமா முடிச்சேன். உனக்காகவும் எல்லாருக்காகவும் பரிசுகள் வாங்கிட்டு வந்தேன். உனக்காக நான் வாங்கிட்டு வந்து ஆனா கொடுக்காம விட்ட பரிசு ஒண்ணு இருக்கு” என்று நிறுத்தினான் அவன்.

 

“என்னங்க என்ன சொல்றீங்க, நீங்க தான் புடவை என்கிட்ட கொடுத்துட்டீங்களே” என்றாள் அவள். “புடவையை கொடுத்துட்டேன் ஆனா நான் வாங்கிட்டு வந்த அந்த இன்னொரு பரிசு…” என்று நிறுத்தினான் அவன். “அது என்னங்க” என்றாள் ஆவலாக, எழுந்து சென்று பீரோவில் பத்திரப்படுத்தி இருந்த அந்த சிறு பெட்டியை எடுத்து வந்தான்.

 

“இந்தா பிரிச்சு பாரு, பிரிச்சு பார்த்ததுக்கு அப்புறம் என்னை பார்த்து சிரிக்கக் கூடாது” என்றான் அவன். அவள் வேகமாக அதை பிரிக்க உள்ளே சிறு பெட்டி போல் இருந்தது, அதை திறந்து பார்க்க உள்ளே இருந்த அத்தனையும் வித விதமான கண் மை. ஆச்சரியமும் சந்தோசமுமாக அவனை நோக்கி “என்னங்க இதெல்லாம்” என்றாள் அவள்.

 

“எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட கண்கள் தான் அதுல நீ மையிட்டு என்னை பார்த்தா நான் அவ்வளோ தான், நான் மொத்தமா விழுந்துடுவேன். இந்த கண்கள் தானே உன்னை எனக்கு அடையாளம் காட்டிச்சு அதுக்கு பரிசு தான் இது. அதுவும் இல்லாம நீ ஒரு நாள் மை வைப்ப, ஒரு நாள் வைக்க மாட்ட அப்போவே முடிவு பண்ணேன். உனக்கு மை டப்பாவா வாங்கி கொடுக்கணும்னு” என்று சிரித்தான் அவன்.

 

“நீ ரொம்ப பெரிசா எதையாச்சும் நினைச்சு இருப்ப ஒரு மை டப்பாவை கொடுத்துட்டேன்” என்றான் அவன். “என்னங்க பேசுறீங்க நீங்க நான் அப்படி நினைப்பேனா, இது நீங்க எனக்கு ஆசையா வாங்கி வந்தது, எனக்கு எவ்வளோ சந்தோசமா இருக்கு தெரியுமா இப்போ” என்றாள் அவள் கண்களில் நீர் துளிர்க்க. “விடுடி நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்” என்றவன் தொடர்ந்தான்.

 

“உன்கிட்ட முன்னமே பார்த்தது பத்தி பேசணும்னு நினைப்பேன், ஆனா ஹரிணி மாதிரி நீயும் அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சு நான் தள்ளி போட்டுகிட்டே வந்தேன். அப்புறம் அம்மு, ஆதவன், கீர்த்தின்னு எல்லார் கல்யாணமும் வந்தது. அன்னைக்கு இரவு அலங்காரம் பண்ணப்போ என்னை என்னால கட்டுபடுத்திக்கவே முடியலை உன்கிட்ட எப்படியாவது பேசணும் நினைச்சேன்.

 

“நீ மயங்கி விழுந்து என்னை பயப்பட வைச்சுட்ட, நான் திரும்பவும் நம்ம வீட்டுக்கு வர சம்மதிச்சதுக்கு காரணம் நீ சொன்னதுனால மட்டும் இல்லை. ஹரிணி தனியா இருந்ததுனால தான் அவளை சரியா பார்த்துக்க முடியலையோன்னு எனக்குள்ள ஒரு நெருடல் எப்பவும் இருந்தது”

 

“பேச்சி சித்தியை குழந்தைகளை பார்த்துக்க வந்தா ஆயாவா தான் அவ அவங்களை பார்த்தா, அதுனால அவ அவங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே தான் பேசுவா, பழகுவா. அப்படி இருந்தும் அவங்க தான் அவளை எப்படியோ கவனிச்சு அம்மாகிட்ட சொல்லி அவனை மருத்துவமனைக்கு அழைச்சு போனது எல்லாம். வீட்டில பெரியவங்க இருந்தா ஒரு துணையா இருக்கும்ன்னு நினைச்சேன். ஹரிணி இழந்தது மாதிரி உன்னையும் இழக்க என்னால முடியும்ன்னு தோணலை. அதுனால தான் நாம ஒண்ணா இந்த வீட்டுக்கு வந்து இருக்க சம்மதிச்சேன்”

 

“நீ மயக்கம் போட்டு விழுந்து என் உயிரே என்கிட்ட இல்லை, அன்னைக்கு நான் ரொம்பவும் துடிச்சு போனேன். உன்னை விட்டு விலகி இருக்கவும் முடியாம சேர்ந்திருக்கவும் முடியாம தவிச்சேன். கீர்த்தி கல்யாணம் முடிச்சதும் தான் வெற்றி ஊர்ல இருந்து வந்தான். அவனை பார்க்க ராஜீவ் வீட்டுக்கு போனேன். அவன் லட்சுமிக்கு யாரோ ஒருத்தனோட இரண்டாவதா கல்யாணம் ஆகிப்போச்சுன்னு சொல்லி வெற்றி புலம்பியது எனக்குள் எதுவோ செய்தது. உனக்கு இது போல் தான் நான் தீங்கிழைத்து விட்டேனோ என்று நினைத்தேன்”

 

“என் சங்கடம் உணர்ந்த ராஜீவ் என்னை அலுவலகம் கிளம்பி போகச் சொன்னான். அன்று மாலை வெற்றியை வீட்டிற்கு வரச் சொன்னேன். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத இரண்டு நிகழ்வுகள் நடந்தது அன்றைய இரவில் தான். வெற்றி வந்து உன்னை லட்சுமி என்று அழைக்க நான் உள்ளுக்குள் நொறுங்கி போனேன். உன்னை முதன் முதலில் பார்த்த போது எனக்குள் காதல் இருந்ததா தெரியவில்லை, ஆனால் நம் திருமணம் முடிந்த பின் எனக்குள் உன் மேல் காதல் வந்திருந்தது. அது எப்போது எப்படி வந்தது என்று என்னாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை. வெற்றியின் பேச்சில் அன்று நான் மொத்தமாக உடைந்து போனேன்”

“ஒரு வேளை உன்னை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்திருந்தால் உனக்கு வெற்றியுடன்…” என்று சொன்னவனை இடைமறித்தாள் அவள். “அப்படி எதுவும் நடந்து இருக்காதுங்க” என்றாள் அவள். “எனக்கு தெரியும் ஆரா, நான் அப்போதைய என்னோட மனநிலையை சொன்னேன். என்னை பேசவிடு இன்னைக்கு என் மனசுல இருக்கற எல்லாமும் நான் பேசிடறேன்” என்று தொடர்ந்தான். “உன் வாழ்க்கை வேறு விதமாக நல்லபடியாக அமைந்திருக்கும் என்று எண்ணினேன்”

 

“மொட்டை மாடிக்கு சென்று அப்படியே உட்கார்ந்து விட்டேன். எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேனோ தெரியவில்லை நீ வந்து ராஜீவ் அழைக்கிறான் என்ற போது தான் ஓரளவு உணர்வுக்கு வந்தேன். உன்னை சமாளித்து கீழே அனுப்பினேன், அதற்கு பின் உன் அலுவல் அறையில் சென்று அமர்ந்தேன். அப்போது தான் உன்னுடைய டைரியை நான் படித்தேன். அது எப்படி இங்க வந்துச்சுன்னு உனக்கு தெரியணும்ல”

 

“சொல்றேன் நீ வரைஞ்ச ஓவியம் எல்லாம் உங்க வீட்டில இருந்து எடுத்து வரும் போது உங்க அப்பா இதையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். நான் அப்போ அதை பார்க்கலை, ஒரு முறை நேத்ரா என்னிடம் நீங்கள் எப்போது நல்ல சேதி சொல்லப் போகிறீர்கள் என்று கேட்ட போது மனது சரியில்லாமல் நான் அன்றும் மொட்டை மாடியில் தான் உலா வந்தேன். அப்போதும் நான் அந்த அறைக்கு வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். உன் ஓவியம் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் என் கண்ணில் உன் டைரி பட்டது அதற்குள் நீ வரும் அரவம் கேட்க அதை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு நான் அதை மறந்துவிட்டேன்”

 

“வெற்றி வந்து போன அன்று உன் அலுவல் அறையில் அமர்ந்திருக்கும் போது ஏனோ எனக்கு சட்டென்று உன் டைரி பற்றி தோன்ற அதை தேடினேன். அவசரமாக எடுத்ததில் அதில் இருந்த என்னுடைய ஓவியம் கீழே விழுந்தது. அந்த ஓவியம் நான் கல்லூரி முடித்த புதிதில் நீ வரைந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த தோற்றம் என்னுடைய அப்போதை தோற்றத்தை பிரபலித்தது. அந்த டைரியின் பக்கங்களை புரட்டினேன். உன் மனதை அறிந்தேன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்”.

 

“ஒரே இரவில் அளவில்லா கவலையும் சந்தோசமும் கிடைத்த ஒரு ஆள் நானாகத் தான் இருக்க முடியும்” என்றான் அவன். அதை சொல்லும் போது அவன் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. “உங்களுக்கு தான் என்னை பத்தி அப்போவே தெரிஞ்சி இருக்கே அப்புறமும் ஏன் என்கிட்ட கோபமாவே இருந்தீங்க” என்றாள் அவள்.

 

அவளை இழுத்து இறுக்கி அணைத்தவன் “எல்லாம் உன் வாயால உண்மையை சொல்ல வைக்கணும்னு தான்” என்றான். “என் வாயாலயா” என்று வாயை பிளந்தாள் அவள்.

 

“பார்த்துடி எதுக்கு இப்படி முழிக்கற ஏற்கனவே உன் கண்ணை பார்த்து பார்த்து தான் நான் இப்படி ஆகி போய் இருக்கேன். நீ வாயையும் சேர்த்து பிளந்து வைக்கிற, எனக்கு என்னென்னமோ ஆகுது” என்று அவளை அவன் இழுக்க “இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் நடந்ததை முதல்ல சொல்லுங்க” என்றாள் அவள் விடாமல்.

 

“அந்த டைரி படிச்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு எனக்கு புரியலை, எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது. உன் பக்கத்துல இருந்தா என்னால நிம்மதியா யோசிக்க முடியாதுன்னு முடிவு பண்ணேன். அதுனால தான் ஊருக்கு போனேன், ஆனா நீ இருக்கியே சரியான கல்லுளிமங்கிடி வெற்றிக்கு போன் பண்ணி சண்டை போட்டு இருக்க, ராஜீவ்கிட்ட என்னை பத்தி விசாரிச்சு இருக்க. எனக்கு போன் பண்ணி ஏன் போனீங்கன்னு கேட்கவே இல்லை”

 

“இந்த மக்கு பொண்ணை எப்படி நம்ம வழிக்கு வரவைக்கலாம்னு யோசிச்சேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவள் இடைமறித்தாள். “யாரு மக்கு என்னை பார்த்தா உங்களுக்கு மக்கு மாதிரியா இருக்கு” என்றாள் அவள். “நீ மக்கு தான் இல்லன்னா குடிச்சவனுக்கும் குடிக்காதவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரிஞ்சு இருக்குமே” என்றான் அவன் பதிலுக்கு. “என்னதூ… நீங்க குடிக்கலையா… அப்போ… அப்புறம்… ஏன் அப்படி எல்லாம்…நடந்துக்கிட்டீங்க” என்றாள் அவள்.

 

“தப்பு தான்டி அதுக்காக என்னை நீ மன்னிக்கணும். அன்னைக்கு உன்னோட விருப்பத்தை எதிர் பார்க்காம அப்படி ஒண்ணு நடந்தது ரொம்பவே தப்பு தான், நீ எவ்வளவு துடிச்சு போயிருப்பன்னு எனக்கு புரியுதுடி. என்னை மன்னிச்சுடு” என்றான் அவன்.

 

“அது தப்புன்னா அப்போ மும்பைல நடந்தது…” என்று அவள் வம்பிழுத்தாள். “உண்மையை சொல்லு மும்பைல நடந்த எதுவும் உனக்கு சந்தோசமில்லைன்னு சொல்லு நான் இப்போவே உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாரா இருக்கேன் சொல்லு… சொல்லு… சொல்லுடி” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

 

“அய்யோ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று முகம் சிவந்தாள் அவள். “அதை விடுங்க நீங்க மேல சொல்லுங்க” என்றாள் தன்னை சமாளித்துக் கொண்டு.

 

“சமாளிச்சுட்ட சரி விடு. அன்னைக்கு வேணும்னு தான் அப்படி செஞ்சேன், நீ நம்பணும்கறதுக்காக தான் ராஜீவை அழைத்துக் கொண்டு வந்தேன். ஆனா நீ என்னை கேள்வி கேட்ப அப்போ உன்கிட்ட சண்டை போடலாம் உன்னை பேச வைக்கலாம்னு நினைச்சா, நீ நின்னு நிதானமா ராஜீவை விசாரிச்ச. என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன், அப்புறம் தான் உன் விருப்பம் இல்லாம நமக்குள்ள அந்த நிகழ்வு நடந்தது”

“மறுநாளாச்சும் நீ என்னை ஏதாவது கேட்ப உனக்கு பதிலடி கொடுக்கலாம்னா நீ பிடி கொடுக்கவே இல்லை. அதுக்கு பிறகு நானும் உன்னை எப்படி எல்லாமோ பேசி பார்க்க நீ திருவாரூர் தேர் மாதிரி அசையவே இல்லை. எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமா என் கால்ல அடிபட்டுச்சு, விமானத்தில் பதிந்த பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு நீ என்னுடன் வருவதால் வேண்டுமென்றே ரயிலில் பதிவு செய்தேன். அப்போதாவது நீ என்னிடம் மனம் விட்டு பேசுவாய், நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்திருக்கும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால் அந்த வேலை செய்தேன்”

 

“நான் நினைச்ச மாதிரி மும்பைல நாம சந்தோசமா இருந்தோம், பேசினோமான்னு கேட்டா பேசவே இல்லைன்னு தான் சொல்லணும். ஆனா அங்க வைச்சு தான் நீ என்கிட்ட இயல்பா இருக்க ஆரம்பிச்ச அப்போ தான் உன்கிட்ட பேசலாமா வேணாமா இப்படியே விட்டுடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்.

 

“ஆனா அன்னைக்கு அம்மா போன் பண்ணி நீ கர்ப்பமா இருக்கற விஷயம் சொன்னதும் சந்தோசப்பட்டேன். ஆனா உடனே அம்மா நீ அவங்ககிட்ட பேசினதையும் அப்புறம் அவங்க பேசினதையும் என்கிட்ட சொல்ல எனக்கு உன் மேல பயங்கர கோபம் வந்துச்சு”

 

“என்னோட அன்பை நீ புரிஞ்சுக்கவே இல்லையேன்னு, ஏன் ஆரா நீ அன்னைக்கு அப்படி யோசிச்ச, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா. ஆனா பொறுமையா யோசிச்சு பார்க்கும் போது இதை சொல்ல நீ எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருப்பன்னு தோணிச்சு. என்னை விடவும் நீ ரொம்பவும் வருத்தப்படுவன்னு புரிஞ்சுது. சொல்லு உனக்கு என்ன வேதனை எதனால அந்த மாதிரி சொன்ன” என்றான் அவன்.

 

அவள் முகம் வேதனையில் வாடுவது புரிந்தது, அவள் முகத்தை இருகைகளாலும் ஏந்தி அவனை நோக்கி இழுத்தான். அவள் முகத்தை நிமிர்த்த அவள் கண்களில் கண்ணீர் துளிகள், “என்னடி நான் கேட்டா பதிலே சொல்லாம அழற என்னன்னு சொல்லு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னோட கஷ்டத்தை என்கிட்ட பகிர்ந்துக்க மாட்டியா” என்றான் அவன்.

 

“தப்பு தாங்க நான் அந்த மாதிரி ஒரு முடிவெடுத்தது தப்பு தான், நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோசம்ங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு நினைச்சீங்களே அதுவும் உண்மை தான்” என்று முகம் கசங்கினாள் அவள். அவளை தன் மார்பின் மீது அவன் சாய்த்துக் கொள்ள அதில் ஆறுதல் தேடியவள் அவள் மேலேயே சாய்ந்துக் கொண்டு பேசினாள்.

 

“அன்னைக்கு நேத்ரா பூ முடிப்பு நடந்ததுல அன்னைக்கு என்னையும் அடுத்து உட்கார வைச்சு சடங்கு பண்ணாங்கல அதுக்கு அப்புறம் அங்க வந்திருந்த ரெண்டு பேர் சாப்பிட்டு கை கழுவற இடத்துல நின்னு பேசி இருந்தாங்க. அவங்க பேசினது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு, இவளுக்கு பிள்ளை பிறக்காத வரைக்கும் தான் இவ அந்த ரெண்டு பிள்ளைங்களையும் நல்லா பார்த்துப்பா, நாளைக்கு இவளுக்குன்னு ஒரு பிள்ளை வந்துட்டா இந்த பிள்ளைங்களை அனாதையா விட்டு…” என்று சொன்னவள் அவனை அணைத்துக் கொண்டு கதறி தீர்த்தாள்.

 

“ஆரா அழாதேடி யாரோ ஏதோ சொன்னாங்கனா அதுக்காக நீ இப்படி யோசிப்பியா, விடும்மா எங்களுக்கு தெரியாதா உன்னை. நாம ஊர்ல இருக்கறவங்களுக்காக வாழக் கூடாது, நமக்காக தான் நாம வாழணும். நீ வருத்தப்படாதே ஆரா தயவு செய்து அழாதே இந்த குழந்தை நம்ம அன்போட பரிசு, உனக்கு என்னோட காதல் பரிசுன்னு கூட வைச்சுக்கோ சரியா. இனி உன் மனசுல வேற எந்த நினைப்பும் வரக் கூடாது”

 

“நான் வேற இன்னைக்கு உன்னை பேச வைக்க நெறய பேசிட்டேன். ரொம்பவும் களைப்பா இருக்கு எனக்கு மணியாகுது நான் கடைக்கு போய் நமக்கு எதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வர்றேன். சாப்பிட்டு வந்ததும் நமக்கு முக்கிய வேலை இருக்கு” என்றான் அவன்.

 

“என்னங்க முக்கியமான வேலை” என்றாள் அவள் கண்களை துடைத்துக் கொண்டே, சட்டையை மாற்றியவன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு கிளம்ப அவள் கன்னம் சிவந்தது. இருவருமாக சாப்பிட்டு முடிக்க தங்களுக்குள் பேசி தீர்த்ததில் இருவரும் எல்லையில்லா நிம்மதியை அடைந்தனர்.

 

“சரி சொல்லு உனக்கு என்னை பார்த்தும் பிடிச்சு போச்சா எப்படிடி. உன்னை நான் அன்னைக்கு ஒரு பத்து நிமிஷம் பார்த்திருபேனா. எனக்கு உன் முகம் மனதில் பதிந்ததே தவிர காதலித்தேனா என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்வேன். சொல்லுடி எப்படி உனக்கு அப்படி தோணிச்சு” என்றான் அவன்.

 

அவள் எழுந்துக் கொள்ள “எது சொல்றதா இருந்தாலும் இங்க இருந்தே சொல்லு” என்று அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான். “அது… அது எப்படி சொல்றது” என்று வெட்கினாள் அவள். “அது… அது நீ அப்படி தான் சொல்லணும்” என்று அவனும் அவள் போல் பேசிக் காட்டினான்.

 

“ஏனோ அன்னைக்கு நீங்க என் கையை பிடிச்சு கூட்டிட்டு போனதும் என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசினதும் எனக்கு பிடிச்சிருந்தது. நான் பெரியவளான பிறகு என் கையை பிடித்த முதல் ஆண் நீங்கள் தான். எங்கள் ஊரில் ஒரு வயதுக்கு மேல் தந்தையாய் இருந்தாலும் உடன் பிறந்தானாய் இருந்தாலும் தொட்டு பேசியதில்லை”

 

“நீங்கள் என் பயத்தை போக்க தான் என் கையை பிடித்தீர்கள், நீங்கள் என் கையை பிடித்ததை நான் எப்படி சுலபமாக எடுத்துக் கொண்டேன் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. பள்ளிக்கு செல்லும் போது பேருந்தில் ஒருவன் என் கை மேல் அவன் கையை வைக்க வருவதை பார்த்து கோபத்தில் என் கால் செருப்பால் அவனை நன்றாக மிதித்துவிட்டேன்”

 

“அம்மா தாயே நீ மட்டும் அன்னைக்கு என்னை அடிச்சிருந்தா…” என்று ஆதி பயப்படுவது போல் நடிக்க, “அதெப்படி நான் உங்களை அப்படி செஞ்சு இருப்பேன், நீங்க தான் என் மனசுல பதிஞ்சு போயிட்டீங்களே. இந்த ஊருக்கு வந்ததுல இருந்து நானும் நேத்ராவும் எங்க போனாலும் யாராவது ஒருத்தர் எங்களை பார்த்துட்டே இருந்தாங்க. நேத்ராவோட நண்பர்கள் கூட ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாங்க, யாருமே கண்கள் பார்த்து பேசவே இல்லை”

 

“நீங்க எந்த தயக்கமும் காட்டாம என் பக்கத்துல வந்து என்ன பிரச்சனைன்னு கேட்டது பிடிச்சு இருந்தது. அதுனால தான் நீங்க என் கை பிடிச்சதுக்கு கூட நான் பத்திரமாவும் நிம்மதியாவும் உணர்ந்தேன். அந்த ஓவியம் கூட நான் உங்களை ஸ்பென்சர்ல பார்த்ததுக்கு மறுநாள் வரைஞ்ச ஓவியம் அது, இதுநாள் வரைக்கும் என் மனசுல பார்த்தும் நான் வரைஞ்ச ஒரு ஓவியம்னா அது உங்க ஓவியம் மட்டும் தான். எனக்குள்ள இருந்த அந்த ஏதோ ஒண்ணு தான் உங்களை வரைய வச்சுது”

 

“அதுக்கு பிறகு ஊர்ல செல்வம் மாமாவோட அக்கா கல்யாணத்துல மறுபடியும் உங்களை பார்த்தேன். மாமாவுக்கு நீங்க பண்ண உதவி மாப்பிள்ளை வீட்டுல மாமா தான் எல்லாம் செஞ்ச மாதிரி நீங்க பண்ணது எல்லாம் பார்த்தேன். எனக்கு உங்க மேல ஒரு பெரிய மதிப்பு வந்துடுச்சு. உங்க மேல இருந்த அந்த ஏதோ ஒண்ணு காதல் தான்ன்னு எனக்கு அப்போ தான் புரிஞ்சுது” என்றாள் காதலாக.

 

அவளை நிமிர்த்தியவன் அவள் கண்களோடு தன் கண்களை கலந்து ஊன்றிப் பார்த்தான், அதில் அவன் மேல் அவளுக்கு தெரிந்த அளவில்லா காதலும் அன்பும் அவனை மெய் சிலிர்க்க வைத்தது. வெகு நேரமாக அவன் அவள் கண்களை சளைக்காமல் பார்க்க பதில் பார்வை பார்க்க முடியாமல் தலை தாழ்த்தினாள் அவள். அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து அவன் பயணத்தை ஆரம்பிக்க அவளும் ஒன்றினாள்.

 

தொலைந்து போய்

விடுமோ என் நேசம்

என்றிருந்தேன்…

 

அது தொலையவில்லை

என்னுள் பத்திரமாய்

இருக்கிறதென்று

கண்ணாமூச்சி

காட்டுகிறாய் நீ…

 

அன்று என் நெஞ்சில்

உன்னை சுமக்க

ஆரம்பித்தேன்

பின் நம் குழந்தைகளை

சுமந்தேன்

இன்று என்னில்

உன் மகவை

சுமக்க வைத்தாய்…

 

சுட்டேடுத்த சூரியனே

இன்று தென்றலாய்

மாறி நிலவாய்

குளிர்விக்கிறாய் நீ…

 

 

 

Advertisement