Advertisement

அத்தியாயம் –27

 

 

“சரி எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு, நாம போய் முதல்ல சாப்பிடுவோம். அப்புறமா வெளிய போகலாம் என்றான் அவன். “அய்யாவுக்கு இப்போ தான் சாப்பிடணும் தோணுதா என்று முணுமுணுத்தாள் அவள். “என்னடி சொன்ன கொஞ்சம் சத்தமா தான் சொல்லேன், இம்ம்ம் என்ன சொல்லி இருப்ப, இப்போ தான் சாப்பிடணும்ன்னு தோணுதான்னு சொல்லி இருப்ப அதானே என்று அவளை பார்த்தான் அவன்.

 

பின் அவளை பார்த்து கண்ணடித்து விட்டு “நான் வேலைன்னு வந்தா பசி, தூக்கம் இதெல்லாம் பார்க்க மாட்டேன். வேலை முடிஞ்சா தான் எனக்கு பசி வரும், ஏன் உனக்கு இவ்வளோ நேரம் பசி ஞாபகம் வந்துச்சா என்று கேட்டு அவளை மேலும் முகம் சிவக்க வைத்தான்.

 

“அய்யோ போதுமே இந்த பேச்சு, எனக்கும் பசிக்குது நான் போய் குளிச்சுட்டு வர்றேன் சாப்பிட போகலாம் என்று அவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள். அவனும் குளித்துவிட்டு வர இருவருமாக அவர்கள் அறையை அடைத்துவிட்டு வெளியில் வந்தனர்.

 

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே என்றான் அவன். “என்ன கேட்டீங்க என்றாள் அவள் பதிலுக்கு. “வேலைன்னு வந்தா… என்று அவன் ஆரம்பிக்கும் போதே “ஆளை விடுங்க நீங்க எப்படி இப்படி எல்லாம் பேசக் கத்துக்கிட்டீங்க என்றாள் அவள். “ஆ…ஆன்… சமாளிக்காதா என்றவன் முன்னே ஓடச் சென்றவளை அவள் கையை பிடித்து நிறுத்தி தன்னுள் அவள் கைகளை கோர்த்துக் கொண்டு உணவருந்தச் சென்றான்.

 

இருவருமாக சேர்ந்து உணவருந்திவிட்டு அங்கிருந்து முதலில் சென்றது ஹாஜி அலி தர்காவிற்கு கடலுக்குள் பாதை செல்ல அந்த தர்காவிற்கு அதில் அவனுடன் சேர்ந்து நடந்து சென்றது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதி அவளின் கையை விடாமல் பற்றி இருந்தான். அவ்வப்போது அலை வந்து லேசாக அடித்து கொஞ்சம் பயமுறுத்துவது போல் இருந்தாலும் ஆதியின் கை பற்றி நடந்தவளுக்கு எந்த பயமும் தோன்றவில்லை.

 

அங்கிருந்து அடுத்து அவர்கள் சென்றது தொங்கும் தோட்டத்திற்கு, ஆதி அவளுக்கு அதை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான். “ஆமா நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா, உங்களுக்கு ஹிந்திகூட நல்லா பேசவருதே என்றாள் அவள்.

 

“இம் ஆமாம் நான் நெறய தடவை வந்திருக்கேன், நான் பள்ளி கல்லூரி படுக்கும் போதே ஹிந்தியும் சேர்த்து தான் படிச்சேன். அதான் நல்லா பேசுறேன். அப்புறம் கேளு இது வெறும் தொங்கும் தோட்டம் மட்டுமில்லை இதுல ஒரு பெரிய நீர் தேக்கமே இருக்கு. இங்க இருந்து தான் மும்பை நகரத்துக்கு தண்ணீர் போகுது. இது மலபார் குன்றுகள் மேல இருக்கு என்று அவளுக்கு விளக்கம் அளித்தான் அவன்.

 

அவளை அங்கே நிற்கச் சொல்லி அவன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவருமாக சேர்ந்து நிற்க வழிப்போக்கர் ஒருவரை நிறுத்தி புகைப்படம் எடுத்து தருமாறு ஆதி கேட்க அவரும் இரண்டு மூன்று படங்கள் எடுத்துக் கொடுத்தார்.

 

அவளை ஓரிடத்தில் உட்காரவைத்து விட்டு ஆதி எங்கோ சென்றான், திரும்பி வரும் போது சூடாக மசால் பொறி வாங்கி வந்தான். “என்னங்க ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கீங்க, உங்களுக்கு வாங்கலையா என்றாள் அவள். “எனக்கு தான் வாங்கிட்டு வந்தேன் என்றான் அவன்.

 

“அப்போ எனக்கு என்று அவள் கேட்க, “மக்கு நாம ரெண்டு பேரும் இதுலயே சாப்பிட வேண்டியது தான், உன்னை வைச்சுட்டு நான் என்ன செய்யப் போறேனோ. கடவுளே எனக்கு சக்தி கொடு என்று அவன் சலித்துக் கொள்ள ஆதிரா சிரித்தாள்.

 

“எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவீங்களா, நீங்க என்கூட இவ்வளவு சகஜமா பேசுறது இப்போ தாங்க. ஆனா நீங்க மத்தவங்க கிட்டயும் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. நீங்க எப்போமே இப்படி தான் இருப்பீங்களா என்று அவள் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்டாள்.

 

“என்னடி என்னை பார்த்தா சாமியார் மாதிரி தெரியுதா உனக்கு, நானும் மனுஷன் தானே, எனக்கும் பேச வரும். அதுல உனக்கென்ன சந்தேகம் என்றான் அவன். “இல்லைங்க சும்மா தான் கேட்டேன். நீங்க எப்போமே இப்படியே இருந்தா ரொம்ப சந்தோசமா இருக்கும் எனக்கு என்றாள் அவள். “நான் எப்படி இருக்கணும்கறது உன்கையில தான் இருக்கு என்றான் அவன் ஒரு மாதிரி குரலில். “என்ன சொல்றீங்க என்றாள் அவள்.

 

“ஒண்ணுமில்லை, ஆமா நாம இங்க வந்ததில இருந்து ஊருக்கு போன் பேசவே இல்லையே, சரி நான் போன் பண்றேன் என்றவன் ஊருக்கு போன் செய்தான். “ஹலோ அம்மா, இம் நாங்க நல்லபடியா வந்து சேர்ந்துட்டோம்மா, குழந்தைங்க என்ன பண்றாங்க என்றான் ஆதி. “என்னம்மா சொல்றீங்க, சரி இருங்க நான் அவங்க அம்மாகிட்ட போனை கொடுக்கறேன் என்று சொல்லி அவளிடம் கொடுத்தான்.

 

என்னவோ ஏதோவென்று அவள் பரபரப்புடன் அவனிடமிருந்து போனை வாங்கினாள். “அத்தை என்னாச்சு குட்டிம்மா எப்படி இருக்கா, கவின் எப்படி இருக்கான் என்றாள் அவள். “உன் பிள்ளைகள் ரெண்டு சமத்தா இருக்கறேன்னு சொல்லிட்டு நேத்து இரவு என்னை படுத்தி எடுத்துட்டாங்கம்மா. கவினாச்சும் பரவாயில்லை ஏதோ சொல்லி அவனை சமாளிச்சு தூங்க வைச்சுட்டேன். கவினி தான் என்னை படுத்தி எடுத்துட்டா, அம்மா எப்போ வருவாங்க நான் அந்த அறையில தான் படுத்து தூங்குவேன்ன்னு, என்னை ஒரு வழி ஆக்கிட்டா

 

“எல்லாரும் சமாதானப்படுத்தி பார்த்தோம் அவளுக்கா தூக்கம் வந்த பிறகு தான் தூங்கினா, இப்பவும் ஒரே அழுகை தான் நீ கொஞ்சம் அவகிட்ட பேசும்மா, நானே உங்களுக்கு போன் பண்ணி இருப்பேன், நீங்க வேலையா இருப்பீங்கன்னு தான் போன் எதுவும் செய்யலை என்றார் அவர்.

 

ஆதிராவுக்கு கண்கள் கலங்கிவிட்டது, ஆதி அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை தன்னுள் வைத்துக் கொண்டு அவளை அணைவாக பற்றி இருந்தான். “குட்டிம்மா அம்மா பேசறேன்டா, செல்லம் அம்மா தேடுனீங்களா என்று சொல்லும் போதே அவள் குரல் தழுதழுத்தது. ஆதிக்கு அவளை ஊரிலேயே விட்டு வந்திருக்கலாமோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

 

“அம்மா நீ எப்போ வருவா, இப்போவே வாம்மா என்று குழந்தை எதிர்முனையில் அழ ஆதிராவுக்கு அழுகை பொங்கியது, அவளிடமிருந்து போனை வாங்கியவன், “செல்லக்குட்டி அழக்கூடாதுடா, அப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு தானே அம்மா கூட வந்தாங்க, அப்பா பாவம் இல்லை. என் குட்டிம்மா அழாம இருந்தா அப்பா வரும் போது நீங்க கேக்குறது எல்லாம் வாங்கிட்டு வருவேன் என்றான் அவன்.

 

அதற்குள் போனை அவனிடமிருந்து பிடுங்கியவள், “குட்டிம்மா அழாதேடா கவின் குட்டி எங்கடா, பேசச் சொல்லுங்க என்றாள் அவள். “அம்மா நீ எப்போ வதுவ, அப்பா எங்க எனக்கு என்ன வாங்கித்து வதுவ என்றான் அவன். “அம்மா உனக்கு பொம்மை வாங்கி தரேன் செல்லம். நீங்க சமத்தா இருங்க, நான் சூர்யா மாமாகிட்ட சொல்லி உங்களை வெளிய அழைச்சுட்டு போகச் சொல்லறேன். மாமா தினமும் வந்து உங்களை வெளிய கூட்டிட்டு போவாங்க, சந்தோசமா குட்டீஸ் என்றாள் அவள். இருவரும் சந்தோசமாக பேச அதன் பின் லட்சுமியிடமும் நேத்ராவிடமும் பேசிவிட்டு போனை வைத்தாள் அவள்.

 

“முடிஞ்சுதா நீயே பேசி முடிச்சுட்டியா, ரெண்டும் அப்பாவை தேடிச்சா பாரு, அம்மா எங்கன்னு என்னை கேக்குதுங்க. என்னை யாருக்குமே ஞாபகம் வரமாட்டேங்குது என்று சொல்லி அவளை ஊருடுவும் பார்வை பார்த்தான் ஆதி.

 

அவன் பார்வை ஏதோ செய்ய அவளுக்கு உள்ளுர சில்லிட்டது. “சரி போகலாமா என்றான் அவன். “என்னங்க உங்க வேலை எப்ப முடியும் என்றவளை முறைத்தான் ஆதி. “இன்னைக்கு தான் நாம இங்க வந்தோம், அதுக்குள்ள எப்போ முடியும்ன்னு கேக்குற, கஷ்டகாலம் உன்னை அங்கேயே விட்டுட்டு வந்திருக்கணும் என்று சொல்லி வேகமாக எழுந்தவன் எதிலோ இடித்துக் கொண்டான்.

 

வலியில் அவன் ஆவென்று முனக ஆதிரா பதறிப் போனாள். “ஒண்ணுமில்லை விடு என்று அவன் தனியே நடக்க அவள் முகம் வாடியது. “என்னங்க சூர்யாகிட்ட பேசணும் என்றாள். பேசிக்கோ எனக்கென்ன என்பது போல் அவன் தாங்கி தாங்கி நடந்துக் கொண்டிருந்தான். அவன் என்ன சொல்வது என்று வேகமாக அவனருகில் சென்றவள், “கொஞ்சம் நில்லுங்க என்றாள்.

 

“என்ன என்றான் அவன். அவன் கையை எடுத்து தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவன் இடையில் மறுகரம் கொடுத்து அவள் நடக்க ஆரம்பித்தாள். “என்னடி செய்யுற என்றான் அவன். “பேசாம வர்றீங்களா இல்லையா என்று முறைத்தாள் அவள். “என்ன பார்க்குறீங்க உங்களுக்கு மட்டும் தான் மிரட்ட தெரியுமா, நீங்க பேசாம வரலை அப்புறம் பாருங்க நடக்கறதை என்று அவனை எச்சரித்தாள் அவள்.

 

ஆதி அவளை பார்த்து சிரித்துக் கொண்டான், இப்போதாவது உனக்கு என் மேல் உள்ள உரிமையை காட்டத் தெரிகிறதே என்பது போல் அவளை பார்த்தான் அவன். ‘நீ சீக்கிரமே மாறிடுவ, அது போல என்னை ரொம்ப காக்க வைக்காம உன் மனசுல என் மேல உள்ள காதலையும் சீக்கிரம் சொல்லிடுடி என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான்.

 

ஆனாலும் அவனுக்குள் மேலிதான ஒரு ஆச்சரியம் உருவாகியிருந்தது. அவளால் எப்படி தன் பிள்ளைகளை அவள் பிள்ளைகளாகவே நினைக்க முடிந்தது, இதில் கவினி வேறு இவள் இல்லாமல் அழுகிறாளாம். இதெல்லாம் எப்படி நடந்தது. நினைத்ததை அவளிடம் மறைக்காமல் கேட்டான்.

 

“ஆரா நான் ஒண்ணு கேட்குறேன் தப்பா நினைக்காத” என்றான் பீடிகையாக. “என்னங்க” என்றாள் அவள். “ஒண்ணுமில்லை நீ எப்படி எல்லாருக்கும் சொக்கு பொடி போட்ட, குழந்தைங்களை உன்னோட குழந்தைகளாவே எப்படி நினைக்கிற. நீ மட்டும் இல்லை அவங்களும் உன்னை அவங்க அம்மாவாவே நினைக்குறாங்க. முறைக்காதடி உனக்கு நான் இப்படி கேட்டா பிடிக்காதுன்னு தெரியும் இது தான் கடைசி இனி கேட்க மாட்டேன்”

 

“இது தான் விதியா, இந்த அன்பு எப்படி வந்தது என்னால நம்பவே முடியலை. இதுக்கு மேல எதுவும் இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கும் போது நீ தீடிர்னு வந்த, எல்லார் மனசயும் எப்படியோ கவர்ந்த. இது எப்படி சாத்தியம் எனக்கு நிஜமாவே புரியலை. ஆனா சந்தோசமா இருக்கு” என்றான் அவன். அவன் கேட்டதில் அவள் முகம் மாறினாலும் அவனுக்கு பதிலளித்தாள்.

 

“இது தான் நீங்க இப்படி சொல்றது கடைசின்னு சொல்றதால சொல்றேன். இனிமே எப்பவும் இப்படி கேக்காதீங்க. இந்த மாதிரி நினைக்கவும் நினைக்காதீங்க. என்னால தாங்க முடியாது, அவங்க என்னோட பிள்ளைகள் தான் அன்பு கொடுத்தா அன்பு தானேங்க கிடைக்கும்”

 

“எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நாம கொடுக்கற அன்பு நமக்கு பன்மடங்கா திருப்பிக் கிடைக்குது. குழந்தைகளும் எனக்கும் நடுவில எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ரெண்டு பேருமே அம்மாங்கற சொந்ததுக்கு ஏங்கி கிடந்து இருக்காங்க, அந்த ஏக்கம் என்னால அவங்களுக்கு தீர்ந்து போச்சு. அவங்க அம்மாவை அவங்க பார்த்தே இல்லைங்கறதுனால என்னை அவங்க அம்மாவாவே ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்றாள் அவள் நீளமாக. “இருந்தாலும்….” என்று இழுத்தவனிடம் “வேணாம்ங்க இனி எதுவும் கேட்காதீங்க. என்னால தாங்க முடியாது” என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள் அவள்.

 

அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, அவளை பேச வைக்க அவன் செய்த முயற்சி பலிக்கவில்லை. இந்த தருணத்திலாவது அவன் மேல் உள்ள காதலினால் தான் அவர்கள் தம் மக்களாகவே எண்ணுகிறேன் என்று சொல்லுவாள் என்று அவன் எண்ணினான். அவளோ அதற்கு மேல் பேச மறுத்துவிட்டாள். ‘இவ்வளவு அழுத்தம் உனக்கு ஆகாது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

அவர்கள் நேரே கிளம்பி ஓட்டலுக்கு சென்றனர், அப்போது தான் ஆதிரா அவன் காலில் ரத்தம் வருவதை கவனித்தாள். இடித்ததில் அவனுக்கு ரத்தகசிவு ஏற்பட்டிருந்தது. “என்னங்க ரத்தம் வருதுங்க, நாம உடனே மருத்துவரை பார்க்கலாம்” என்றாள் அவள் பதட்டத்துடன். “இங்க அவங்க எங்க இருப்பாங்கன்னு கேட்டு வண்டியை அங்க விடச் சொல்லுங்க” என்றாள் அவள்.

 

“ஒண்ணும் வேணாம் ஒட்டல்ல எப்படியும் மருத்துவர் இருப்பார், நாம நேரா அங்கேயே போய் பார்த்துடலாம்” என்று விட்டான் அவன். ஓட்டலுக்கு சென்றதும் அவள் விரைவாக இறங்கி வரவேற்பிற்கு சென்று மருத்துவர் யாரும் இருக்கிறார்களா என்று கேட்க அவர்கள் மருத்துவரை அவர்கள் அறைக்கே அனுப்புவதாக சொல்ல அவளோ அவரை பார்த்துவிட்டே செல்வதாக கூற பணியாள் ஒருவர் உடன் வந்து அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

 

மருத்துவர் அவன் ஏற்கனவே போட்டிருந்த கட்டை கழற்றிவிட்டு புதிதாக மருந்திட்டு ஒரு பிளாஸ்திரி மட்டும் ஓட்டிவிட்டார். காயம் ஏற்கனவே ஆறிவிட்டதாகவும் இது தற்போது இடித்ததினால் அங்கு ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி அவனுக்கு ஒரு ஊசியையும் போட்டு மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்தார்.

 

ஒருவழியாக அவர்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். “ஹேய் இன்னைக்கு உன்னை ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போகணும் நினைச்சேன். மருத்துவர் தான் எனக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டார்ல வர்றீயா நாம போய்ட்டு வருவோம்” என்றான் அவன்.

 

“அதெல்லாம் எங்கயும் போய்டாது, நீங்க கொஞ்சம் பேசாம படுங்க” என்றவள் தொலைபேசியை எடுத்து ஏதோ சொல்ல ஒன்றும் புரியாமல் அவனிடம் வந்தவள் “என்னங்க நான் ஒண்ணு பேசினா அவங்க ஒண்ணு புரிஞ்சுக்கறாங்க அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா. இந்தியிலேயே பேசுறாங்க எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்களே பேசுங்க” என்றாள் அவள்.

 

“முதல்ல நீ யாருக்கு போன் பண்ண அதை சொல்லு” என்றான் அவன். “உங்களுக்கு சூடா வெந்நீர் எடுத்துட்டு வர சொல்லலாம்னு தான் போன் பண்ணேன்” என்றாள். அவன் அவளிடமிருந்து போனை வாங்கி ஏதோ பேசிவிட்டு கீழே வைத்தான். “ஆமா சூர்யாகிட்ட பேசணும்னு சொன்னியே” என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினான் அவன்.

 

“ஆமாங்க மறந்துட்டேன், இருங்க போன் போடுறேன்” என்று அவள் போனை எடுத்து தன் தம்பிக்கு போன் செய்தாள். “நீ பேசிட்டு என்கிட்ட கொடு” என்றான் ஆதி. “சரிங்க” என்றவாறே தன் தம்பியுடன் பேச ஆரம்பித்தாள் அவள். “ஹலோ எப்படிடா இருக்க, அம்மா அப்பா எப்படி இருக்காங்க, இம் நாங்க நல்ல படியா வந்துட்டோம். அத்தானுக்கு இப்போ பரவாயில்லை நல்லா இருக்காங்க” என்றாள்.

 

“சொல்லுக்கா என்ன விஷயம், சோழியன் குடுமி சும்மா ஆடாதே, நீ எனக்கு போன் பண்ணி இருக்கனா எதாச்சும் விஷயம் இருக்கும். சொல்லு” என்றான் அவன். “எப்படிடா கண்டுபிடிச்ச” என்றாள் அவள். “கோடாங்கி குறி சொன்னான், அடபோக்கா உனக்கு அம்மா, அப்பாகிட்ட பேசணும்னா நீ அவங்களுக்கே பேசி இருப்ப, எனக்கு எதுக்கு போன் பண்ணி இருக்க போற, எதாச்சும் விஷயம் இருக்கும் தானே, சொல்லு” என்றான் அவன் அலுத்தவன் போல்.

 

 

“உனக்கு ரொம்ப தான் வாயாகி போச்சு. ஒண்ணுமில்லை கவினியும் கவினும் என்னை தேடி அழறாங்களாம், நீ ஒரு எட்டு போய் அவங்களை பார்த்துக்கோடா, அவங்களை எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டு போயேன். அவங்களும் கொஞ்சம் என்னை தேடாம இருப்பாங்க, அவங்ககிட்ட நீ வருவேன்னு சொல்லி இருக்கேன். அவங்க ரொம்ப சந்தோசத்துல இருக்காங்க, என்னடா போயிட்டு வர்றீயா. உனக்கு தான் கடைசி வருஷ பரீட்சை எல்லாம் முடிஞ்சு போயிடுச்சுல” என்றாள் அவள்.

 

“என்னக்கா நீ கூட்டிட்டு போன்னு சொன்னா நான் கூட்டி போக மாட்டேனா. அதுக்கு எதுக்கு இவ்வளவு கதையை வளக்குற. நாளைக்கே போய் அவங்களை வெளிய அழைச்சுட்டு போறேன். போதுமா, நீ அத்தானை நல்லா பார்த்துக்கோ கவலைபடாதே சரியா” என்றான் அவன்.

 

“சரிடா எனக்கு ரொம்ப சந்தோசம் இரு அத்தான் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்” என்றவள் “என்னங்க இந்தாங்க சூர்யா லைன்ல இருக்கான்” என்று சொல்லி போனை அவனிடம் கொடுத்தாள். போனை வாங்கிக் கொண்டு அவன் தனியாக வெளியே சென்றான். ‘எதுக்கு தனியா வெளிய போறார் என்ன ரகசியம் ரெண்டு பேருக்கும்’ என்று அவள் நினைத்தாலும் அவனை பின் தொடரவில்லை.

 

“ஹலோ எப்படி இருக்க சூர்யா” என்றான் ஆதி. “நல்லாயிருக்கேன் அத்தான் நீங்க எப்படி இருக்கீங்க, உங்களுக்கு இப்போ பரவாயில்லையா” என்றான் அவன். “நான் நல்லாயிருக்கேன், அப்புறம் ஒரு விஷயம் நாளைக்கு நீ குழந்தைகளை கூட்டிட்டு போகும் போது ஆதர்ஷாவும் கூட வருவா, உன் ஒருத்தனால குழந்தைகளை சமாளிக்க முடியாது. சரி பார்த்துக்கறீயா” என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சூர்யாவை தாக்கியது.

 

“அத்தான் அவங்க எதுக்கு நான் பார்த்துக்க மாட்டேனா” என்றான் அவன். “சூர்யா நான் காரணமா தான் செய்யறேன் உனக்கு புரியலையா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா. ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசாம எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்பீங்க. உன்னோட படிப்பு முடிஞ்சது நீ அடுத்து ஒரு வேலை பார்க்க ஆரம்பி, அதுக்குள்ள ஆதர்ஷாவும் படிப்பை முடிச்சுடுவா, நான் சொன்ன மாதிரி உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்” என்றான் ஆதி.

 

“அத்தான் எனக்கு பயமாயிருக்கு” என்றான் அவன். “நான் எந்த அளவுக்கு இறங்கி உன்கிட்ட பேசிட்டு இருக்கேன், என்கிட்ட என் தங்கச்சியை பார்த்து பயமாயிருக்குன்னு சொல்ற நீ” என்றான் ஆதி. “அய்யோ அத்தான் பயம் உங்க தங்கையை பார்த்து இல்ல, என் அக்காவை நினைச்சா தான்” என்றான் அவன்.

 

“உன் அக்காவை நான் சரி பண்ணிக்கறேன் நீ அவங்களை பார்த்துக்கோ உன்னை நம்பி தான் அனுப்பறேன். நான் குழந்தைகளை மட்டும் சொல்லலை” என்றான் அழுத்தி. “புரியுது அத்தான் இப்ப மட்டும் இல்ல எப்பவும் நான் நல்லா பார்த்துப்பேன். நீங்க என்னை நம்பலாம். அத்தான் நான் கூப்பிட்டா வீட்டில எதுவும் சொல்ல மாட்டாங்களா” என்றான் சூர்யா. “நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன் நீ எதுவும் கேக்குற மாதிரி இருக்காது, அவங்களே அவளை உன்னோட அனுப்புவாங்க போதுமா. அப்புறம் நாங்க வர்றவரைக்கு நீயே அவங்களை தினமும் போய் பார்த்துக்கோ, வெளிய கூட்டிப் போகச் சொன்னா கூட்டிட்டு போ” என்றான் அவன்.

 

இருவருமாக பேசிய பின் போனை வைத்தான் ஆதி. உடனே லட்சுமிக்கும் போன் செய்து சூர்யா வரும் விபரம் உரைத்தவன் குழந்தைகளை தனியே அவனுடன் அனுப்பினால் அவனால் சமாளிக்க முடியாது என்றும் ஆதர்ஷாவை துணைக்கு அனுப்பி வைக்குமாறும் சொல்லிவிட்டு வைத்தான் அவன். (என்னடா நடக்குது இங்கன்னு நீங்க என்னை கேள்வி கேக்குற மாதிரி இருக்கு, ஆதிக்கு எப்படி சூர்யா விஷயம் தெரியும்னு தானே யோசிக்கறீங்க. என்ன நடந்துச்சுன்னு நாம கொஞ்சம் பின்னாடி போய் பார்ப்போம்)

 

____________________

 

தீபாவளி அன்று ஆதியும் சூர்யாவும் வெளியில் கிளம்பினர். செல்லும் வழியில் சூர்யாவின் முகம் ஏதோ யோசனையிலேயே இருக்க ஆதிரா சொல்லியது போல் அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான் ஆதி. “சூர்யா” என்று மெதுவாக அழைத்தான். அவன் காதுக்கு அந்த சத்தம் போய் சேரவில்லை. ஆதி இரண்டு மூன்று தரம் கூப்பிட்டு பின் அவனை உலுக்க தன்னிலைக்கு வந்தான் சூர்யா.

 

“என்ன அத்தான் என்ன கேட்டீங்க” என்றான் அவன். “என்னாச்சு சூர்யா ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்றான் ஆதி. “அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தான் நான்… நான் நல்லா… நல்லா தான் இருக்கேன்” என்றான் திணறியவாறே. “சூர்யா என்னை வேற யாரோவா நினைச்சா நீ எதுவும் சொல்ல வேண்டாம், நானும் இந்த குடும்பம்னு நினைச்சா நீ என்கிட்ட சொல்லு” என்றான் அவன்.

 

சூர்யாவுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஆதர்ஷாவின் முகம் அவன் கண் முன் வந்து போனது. ஆதியிடமே அதை பற்றி எப்படி சொல்வதென்ற தயக்கம் அவனை பேசவிடாமல் செய்தது. பெரிய தவறு இழைத்தது போல் நெஞ்சம் குறுகுறுத்தது. அவன் பேசாமலிருப்பது பார்த்து ஆதியே மீண்டும் பேசினான், “சூர்யா நீ யாரையாவது விரும்பறியா, அதை சொல்ல தான் தயங்குறியா. அதுல எதுவும் உனக்கு பிரச்சனையா” என்றான்.

 

அவன் இப்படி கேட்டதில் சூர்யாவின் முகம் வெளுத்துப் போனது. “அத்தான்” என்று மென்று விழுங்கினான் அவன். அவன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி “தர்ஷு… தர்ஷு” என்று அவன் திணறியதில் ஆதிக்கு ஏதோ புரிந்தது. அவன் ஏதோ பேச வரும் முன் “தப்பு தான் அத்தான் எனக்கு அப்படி ஒரு நினைப்பு வந்திருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடுங்க இந்த நினைப்பு எனக்கு எப்படி வந்ததுன்னே எனக்கு புரியலை. இன்னைக்கு வீட்டில உங்களை பார்த்ததும் எனக்கு தர்ஷு ஞாபகம் தான் வந்துச்சு, ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டதா தோணிச்சு.

 

“அக்கா என்னாச்சுன்னு கேட்கும் போது எனக்கு உயிரே போச்சு, அக்கா நான் வருத்தமா இருக்கேன்னு என்னை எவ்வளவு அக்கறையா விசாரிச்சா. ஆனா நான்… எல்லாரும் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சு இருக்காங்க, நான் அதை கெடுக்கறது போல நடக்க கூடாது இல்லையா. அத்தான் இந்த நினைப்பு எனக்கு மட்டும் தான் இருக்கு அது வந்ததும் தப்பு தான் நான் என்னை மாத்திக்கறேன்” என்றான் யாசிப்பாக.

 

“சூர்யா என்னை கொஞ்சம் பேசவிடுறியா” என்றான் ஆதி. சூர்யா அவன் முகத்தை பார்த்தான் “சொல்லுங்க அத்தான் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கறேன்” என்றான். “உனக்கு ஆதர்ஷாவை பிடிச்சு இருக்கா” என்றான் அவன். ‘என்ன அத்தான் இப்படி கேட்கிறார் இதை தானே நான் இவ்வளவு நேரமும் சொன்னேன்’ என்று அவன் நினைத்தான்.

 

அவன் கேள்விக்கு பதிலாக தலையை ஆம் என்பது போல் அசைத்தான். “இதுல என்ன தப்பு இருக்கு அவ உனக்கு முறை பொண்ணு தானே ஆகுது” என்று ஆதி சொல்ல சூர்யா ஆடிப் போனான். ஆதி சொன்னது முதலில் அவன் காதில் விழுந்தாலும் கருத்தில் ஏறவில்லை, நிதானமாக அவன் பேசியது அவன் கருத்தில் பதிய ஆதியை ஏறிட்டான்.

 

“இங்க பாரு நீ தைரியமா எனக்கிட்ட சொன்னது எனக்கு பிடிச்சு இருந்தது. அதுவும் இல்லாம உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ ஏதோ தப்பு பண்ணிட்டேன்ன்னு நினைச்சு என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டது உன்னை பற்றி எனக்கு ஒரு உயர்வான மதிப்பை கொடுக்குது. இதுனால அக்காவுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு யோசிக்கறது எனக்கு புரிஞ்சுது. நீ உன் படிப்பை முடி, நல்ல வேலைக்கு போ ஆதர்ஷாவோட படிப்பு முடிஞ்சதும் உங்க கல்யாணத்தை நடத்த வேண்டியது என்னோட பொறுப்பு சரியா” என்றான் அவன்.

 

“அப்புறம் இந்த காதல் விவகாரம் அவளுக்கு தெரியுமா” என்றான் அவன். “தெரியாது அத்தான் என்னோட காதலை நான் முதன் முதலா உங்ககிட்ட தான் சொல்லி இருக்கேன்” என்றான் அவன். “ஆமா உனக்கு எப்போல இருந்து இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு” என்றான் ஆதி பேச்சை மாற்றும் விதமாக, சூர்யாவும் சற்று சகஜ நிலைக்கு திரும்பியிருந்தான்.

 

“எல்லாம் நீங்க ஊர்ல பண்ண வேலை தான் சின்னத்தான் கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருந்தோம்ல அங்க வைச்சு தான் இதெல்லாம் நடந்துச்சு, அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்க எல்லாரும் தான்” என்றான் அவன். “என்ன சூர்யா சொல்ற நாங்க என்ன செஞ்சோம்” என்றான் ஆதி.

“என்னை நடுவுல வைச்சுட்டு ஆளாளுக்கு அவங்க அவங்க ஆளுங்களை நல்லா சைட் அடிக்கறீங்க, நடுவுல நான் மட்டும் தனியா பலியாடு மாதிரி சிக்கிட்டேன். என்னால எந்த பக்கமும் போக முடியலை, அப்போ தான் என்னை மாதிரியே உங்க தங்கச்சியும் முழிச்சுட்டு இருந்தாங்க”.

 

“எனக்கும் கம்பெனிக்கு ஆளு இருக்குன்னு நினைச்சேன், அப்போ தான் நீங்க உங்க தங்கச்சியை படகுல வைச்சு என் பக்கத்துல உட்கார சொன்னீங்க, அப்போ மனசுக்குள்ள ஏதோ பட்டாம்பூச்சி பறக்கற மாதிரி இருந்துச்சு. மறுநாள் கறி விருந்துலயும் நீங்க எல்லாரும் அவங்கவங்க ஆளுங்களையே கவனிச்சுட்டு இருந்தீங்க. அப்போ தான் நான் திரும்பவும் தர்ஷுவை பார்த்தேன். அப்போல இருந்து தான் நான் இப்படி ஆகிட்டேன்னு நினைக்கிறேன் அத்தான்” என்றான் அவன்.

 

அதன்பின் நேத்ராவிற்கு பூ முடித்த அன்று ஆதியே சூர்யாவை போன் செய்து வீட்டிற்கு வரச் சொன்னான். ஆதர்ஷாவிடம் போய் பேசுமாறு அவனே தான் சூர்யாவை மாடிக்கு அனுப்பி வைத்தான். அதன் பின் அவர்களுக்குள் முட்டிக் கொள்ள திரும்பி வந்தவன் உடனே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று குதித்தான். அவன் கிளம்பிச் சென்றபின் ஆதி சூர்யாவுக்கு போன் செய்து நடந்த விபரத்தை கேட்டறிந்தான்.

 

ஆதி ஆதர்ஷாவிடம் பேசுமாறு சொல்ல, சூர்யாவோ “இல்லை அத்தான் எல்லாம் நல்லதுக்கு தான் எனக்கும் கடைசி வருஷ பரீட்சை நெருங்குது. என்னோட கவனம் மொத்தமும் இதுலயே இருக்கட்டும் வேற நினைவுகள்ல என் கவனம் போச்சுன்னா அப்புறம் நீங்க எனக்கு தர்ஷுவை தரமாட்டீங்களே” என்று சொல்லி அத்துடன் அந்த பேச்சை முடித்துவிட்டான். (இவ்வளோ தாங்க அந்த பிளாஷ்பேக்)

 

____________________

 

ஆதிக்கும் ஆதிராவுக்கு இரவு உணவு வர இருவரும் உண்டுவிட்டு உறங்கினர். மறுநாள் காலை ஆதிரா கண் விழிக்க ஆதி தயாராகி இருந்தான், அவன் மடிகணினியில் ஏதோ விபரம் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னங்க நீங்க மட்டும் எழுந்து கிளம்பிட்டீங்க, என்னை எழுப்பி இருக்கக் கூடாதா” என்று கடிந்துக் கொண்டே எழுந்தாள்.

 

“நீ எங்க கிளம்ப போற நீ பேசாம படுத்து தூங்கு. நான் மீட்டிங் முடிச்சுட்டு வந்துடறேன், அதுவரைக்கும் நீ இங்கயே இரு” என்றவனை முறைத்தாள் அவள். “எதுக்குத் முறைக்கற” என்றான் அவன் உல்லாசமாக. “இம் என்னவா நான் இங்க அறையில இருக்கறதுக்கா உங்க கூட வந்தேன், அதுக்கு நான் ஊர்லையே இருந்து இருப்பனே, இங்க எதுக்கு வந்தேன். உங்கக்கூட பேசினா நேரமாகும். நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்” என்றவள் வேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

குளித்துவிட்டு பார்த்தபின் தான் அவளுக்கு தெரிந்தது, அவனிடம் பேசிக் கொண்டே அவசரத்தில் அவள் மாற்றுடை எடுத்து வர மறந்தது, அய்யோ என்ன செய்வது என்று யோசித்தாள். வேறு வழியில்லை அவனை கூப்பிட வேண்டியது தான் என்று நினைத்தவள், மெதுவாக கதவை திறந்து “என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன்” என்றுவிட்டு கதவை அடைத்துக் கொண்டாள். அவள் கூப்பிட்டது கேட்க ஆதி எழுந்து வந்தால் குளியலறை கதவு அடைத்திருந்தது. ச்சே ஏதோ பிரமை என்று நினைத்தவன் திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தான்.

 

அப்போது அவன் அவள் எடுத்து வைத்திருந்த துணியை பார்த்தான், ‘ஒருவேளை துணி எடுக்காம போயிருப்பாளோ அதுக்கு தான் கூப்பிட்டாளா இருக்கட்டும் அவளே திரும்ப கூப்பிடட்டும்’ என்று காத்திருந்தான். ‘என்ன இது நாம கூப்பிட்டோம் அவர் வரவே இல்லையே, என்று நினைத்து மீண்டும் அவள் மெதுவாக கதவை திறக்க ஆதி அந்த இடைவெளியில் அவள் ஆடைகளுடன் உள்ளே நுழைந்து விட்டான்.

 

“அய்யோ என்னங்க இது நீங்க எதுக்கு உள்ள வந்தீங்க” என்றவளுக்கு அப்போது தான் உரைத்தது, மார்புக்கு குறுக்காக அவள் துண்டை மட்டுமே கட்டியிருந்தாள். ஒரு வழியாக இருவரும் குளித்து வெளியே வந்தனர். ஆதிக்கு மீட்டிங்கிற்கு நேரமாகி விட இருவருமாக அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்பினர்.

 

“எல்லாம் உன்னால தான்டி” என்று அவன் அவளை குறை சொல்ல, “நானா உங்களை தொல்லை பண்ணேன். எல்லாம் உங்களால தான் என்று பதிலுக்கு சிணுங்கினாள் அவள். “எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது அதான் அதை தவறவிடாம நான் பயன்படுத்திக்கிட்டேன். இருந்தாலும் தப்பு உன் மேல தான்” என்று அவர்கள் மாத்தி மாத்தி பேசிக் கொண்டிருக்க அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்தது.

 

ஆதி உள்ளே சென்று அவர்களிடம் பேசிவிட்டு அவளை வரவேற்பறையில் அமரவைத்து அவன் உள்ளே சென்றுவிட்டான். இரண்டு மணி நேரத்திற்கு பின் வந்தவன் முகம் பலமடங்கு மகிழ்ச்சியுடன் இருந்தது. “ஆரா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டி, எல்லாம் உன்னால தான் நாளைக்கு நான் போய் பார்க்க வேண்டியவரையும் இன்னைக்கே பார்த்திட்டேன். அதுவும் இல்லாம எதிர்பார்த்தைவிட கூடுதால அவங்க நமக்கு ஆர்டர் தர்றேன்னு சொல்லி இருக்காங்க. வந்த வேலை நல்ல படியா முடிஞ்சது, நாம எல்லாரும் ஒன்னா வெளிய போய் சாப்பிட போறோம்” என்று அவளையும் அழைத்துக்கொண்டு வந்தவர்களுடன் வெளியில் சென்றனர்.

 

எல்லோருக்கும் ஆதியே விருந்து வைக்க அவர்கள் வந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. சாப்பிட்டுவிட்டு அவளை நேராக மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்துச் சென்றான் ஆதி. சந்தோசமாக சாமி கும்பிட்டுவிட்டு அவர்கள் ஓட்டல் அறைக்கு திரும்பினர். “நீ காலையில கொடுத்த உற்சாகம் தான் எனக்கு இதெல்லாம் நடந்தது” என்று ஆதி அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான். ஆதிராவுக்கோ வெட்கமாக இருந்தது, அவளை தன் புறம் திருப்பியவன் அவள் கண்களை நோக்க அவள் அதில் கண்ணீரை தேக்கியிருந்தாள். “என்னாச்சுடி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், நீ கண்ணு கலங்குற” என்றான் ஆதி. “அழகி சொல்லுடி எதுக்கு அழற” என்றான் அவன் மீண்டும்.

 

“உங்க சந்தோசம் நினைச்சு தான் எனக்கு ஆனந்த கண்ணீர்” என்று சமாளித்தாள் அவள். “ஏங்க ஹரிணி ரொம்பவும் அழகு தானே” என்றதும் ஆதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவள் எதற்கு ஹரிணியை இப்போது நினைவு படுத்துகிறாள் என்று எண்ணியவன் அவளுக்கு இம்மென்று பதிலளித்து விட்டு பலகணியில் சென்று நின்றான்.

 

கடல் காற்று முகத்தில் பட அவன் ஆதிரா ஏன் அப்படி கேட்டாள் என்ற சிந்தனையிலேயே இருந்தான். ‘அய்யோ ஹரிணியை பற்றி பேசி அவருக்கு வருத்தம் ஏற்படுத்தி விட்டோமே. அமைதியாகி விட்டாரே ஏதும் பேசவில்லையே’ என்று நினைத்தாள் ஆதிரா.

 

அவளும் தான் என்ன செய்வாள், ஆதி அவளை என்ன புகழ்ந்த போதும் அவளால் ஹரிணியை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இது அவள் இருந்து வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை என்ற குற்ற உணர்வு அவளுக்கு எழுந்திருந்தது.

 

அவரை சமாதானப்படுத்துவோம் என்று எண்ணியவள் அவன் அருகில் சென்று அவன் கைகளை பற்றி தன்னுள் அடக்க நினைக்க ஆதியோ தள்ளி நின்றான். “என்னங்க…” என்று ஆரம்பித்தவளிடம். “கொஞ்ச நேரம் எதுவும் பேசாத இங்க இருந்து போ என்னை தனியா விடு” என்று அமைதியாக குரலில் அழுத்தமாக சொல்ல ஆதிரா வந்த கண்ணீரை அடக்கி உள்ளே எழுந்து சென்றாள்.

 

நேரம் இரவு எட்டு மணியை நெருங்கி இருக்க ஆதி தன்னிலைக்கு வந்து ஆதிராவை தேட அவளோ அழுதுக் கொண்டே கட்டிலில் படுத்து தூங்கிவிட்டிருந்தாள். ‘எதுக்குடி தீடிர்னு இப்படி பேசுன, இப்போ நீயே அழுதுருக்க’ என்று அவளை நினைத்து வருந்தியவன் அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான். அவளை எழுப்பி சாப்பாடு வரவழைத்து இருவருமாக உண்டு முடித்தனர். ஆதி இயல்பாக பேசியபோதும் ஆதிராவால் தாங்க முடியவில்லை. “என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் அவள். “நான் மறந்துட்டேன்” என்றான்.

 

“சரி கிளம்பு வெளிய போகலாம்” என்றான் அவன். “எங்கங்க தூங்க வேண்டாமா” என்றான் அவன். “அதுக்குள்ள உனக்கு அவசரமா” என்று அவளை பார்த்து கண்ணடித்தான் ஆதி. “நான் அதுக்கு சொல்லலை படுக்க போற நேரத்துல எங்க போகலாம்ன்னு சொல்றீங்க” என்றாள் அவள். “அதை நீ வந்து பாரு” என்று அவளை கிளப்பி அழைத்துச் சென்றான்.

 

மும்பையின் நுழைவுவாயிலுக்கு அவர்கள் வந்திருந்தனர். கடற்காற்று முகத்தில் வந்து இதமாக மோத அந்த கடலை சுற்றி ஒளிவட்டம் போல் வெளிச்சம் பரவியிருந்தது. “எப்படி இருக்கு” என்றான் அவன். “இது தான் அரேபிய ராணியின் கழுத்தாரம்” என்றான் அவன். அவனை வியப்புடன் நோக்க “இந்த வளைவை சுற்றி பார் விளக்குகளாக எறிகிறதா, அது இந்த அரேபிய கடல் ராணியின் கழுத்துக்கு ஆரமிட்டது போல் இருக்கிறாதா. அதனால் தான் இந்த இடத்திற்கு அந்த பெயர்” என்று விளக்கினான் அவன்.

 

அங்கிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்து அந்த அழகை ரசித்தனர். ஆதியின் கரம் அவளை அணைத்தவாறே இருந்தது. மனம் மகிழ்ச்சியில் துள்ள இருவரும் ஒரு மோன நிலையிலேயே இருந்தனர். அங்கிருந்து கிளம்பி அவர்கள் அறைக்கு வர மணி பதினொன்றை தொட்டிருந்தது. ஆதிராவும் உள்ளுக்குள் சிலிர்த்து போயிருக்க அவள் கதவை அடைக்கும் முன் ஆதியின் கரங்கள் அவளை பற்றியிருந்தது.

 

அவளை தன் பக்கம் இழுத்து வழக்கம் போல் அவள் கண்களுடன் உறவாட முயல அவளோ கிறங்கி அவள் விழிகளை தாழ்த்தினாள். அவளை நிமிர்த்தி அவள் கண்களிடம் பேசியவன் பின் அவள் இதழ்களுடன் கலந்து அவளுடன் உறவாடினான்……………

 

 

கண்கள் கலந்து

உன் இதயம்

நுழைய நினைத்தேன்…

 

எனக்கு முன்னே

உன் இதயம்

களவாடப்பட்டிருந்தது…

 

எங்கு சென்றிருக்கும்

என் இதயத் துடிப்பு

மெல்லிசையாக.

கேட்கிறதே…

 

மெதுவாக

கை வைத்து பார்த்தேன்

எனக்காக துடித்தது

என் இதயமல்ல

உன் இதயம் கண்ணே…

 

 

என் சுவாசமானவனே…

என் உயிரானவனே…

இதயம் கவர்ந்தவனே…

என்னுள் இரண்டற கலந்தவனே…

என்னில் இருந்த நான்

உன்னில் என்னை

தொலைத்து பல

வருடங்களாகிவிட்டது…

 

 

அத்தியாயம் –28

 

மறுநாள் விடிந்ததும் ஆதிரா அவனிடம் “என்னங்க நாம இன்னைக்கே ஊருக்கு கிளம்பலாமா” என்றாள். “இல்லை ஆரா நமக்கு நாளை மறுநாள் தான் ரயிலில் முன்பதிவு செய்திருக்கிறேன். இன்று மீட்டிங் இருக்கும் நாளை சுற்றிப் பார்க்க போகலாம் என்று நினைத்து பதிவு செய்திருந்தேன், மாற்ற முடியாது ஆரா. நாம் இன்று எல்லோருக்கும் துணி எடுக்க செல்லலாம் இங்கு அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. நீ தயாராகு சென்று வருவோம்” என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்பச் சென்றான்.

 

இருவரும் சேர்ந்து எல்லோருக்கும் உடைகள் வாங்கினர், ஆதி ஆதிராவுக்கு அழகிய டிசைனர் புடவை சிலவற்றை எடுத்தான். அவளுக்கு சுடிதாரும் எடுக்க ஆதிராவோ “அய்யோ எனக்கு இதெல்லாம் வேண்டாம் நான் இதெல்லாம் இப்போ போடுறதே இல்லை” என்றாள். “நீ கல்யாணத்துக்கு முன்ன போட்டுட்டு தானே இருந்த இப்போ மட்டும் தீடிர்னு ஏன் போடுறது இல்லை” என்றான் அவன்.

 

“இல்லைங்க எனக்கு புடவை கட்டுறது தான் ரொம்பவும் பிடிக்கும். நான் அப்படியே இருக்கேன் விட்டு விடுங்களேன்” என்றாள். ஆதியும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. குழந்தைகளுக்காக இருவருமே நிறைய வாங்கினர். இதை எடுத்து செல்லவென்று கடைசியில் அவர்கள் ஒரு பெட்டியும் வாங்க வேண்டி வந்தது. அவ்வளவு துணிமணிகள் பொம்மைகள் பைகள் என்று வாங்கினர். அன்று இரவு ஆதிரா மீண்டும் கடற்கரைக்கு செல்ல விரும்ப ஆதி அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

 

மறுநாளும் அவர்கள் அங்கிருந்த மால் ஒன்றுக்கு சென்று அன்றைய பொழுதை கழித்தனர். அங்கிருந்த அத்தனை நாளும் ஆதி அவளுடனே ஒட்டிக் கொண்டு இருந்தான். எவ்வளவு சந்தோசமாக கழிய முடியுமோ அவ்வளவு இனிமையாக அவர்கள் பொழுது சென்றது. மறுநாள் எங்கும் வெளியில் செல்லாமல் அவர்கள் அறையிலேயே பொழுதை கழித்தனர், மதிய ரயிலில் அவர்கள் அன்று கிளம்ப எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

 

இவர்கள் ஊருக்கு வருவதற்குள் இவர்கள் இல்லாத அந்த பொழுதில் அங்கு என்னென்ன நடந்தது என்பதை பார்த்துவிடுவோம்…..

 

____________________

ஆதிரா சூர்யாவிடம் பேசிய மறுநாள், காலை உணவுக்கு பின் சூர்யா அவன் தாய் தந்தையும் அழைத்துக் கொண்டு ஆதிராவின் வீட்டிற்கு வந்தனர். “வாங்க சம்மந்தி, வாங்க அண்ணே, வாப்பா சூர்யா” என்று எல்லோரையும் உபசரித்தார் லட்சுமி. அலுவலகம் செல்லக் கிளம்பிக் கொண்டிருந்த அருணாசலமும் அவர்களை வந்து விசாரித்தார். அதற்குள் இவர்கள் குரல் கேட்டு கவினியும் கவினும் உள்ளிருந்து வந்தனர். நேத்ராவும் ஆதவனும்கூட அவர்களை வந்து விசாரித்தனர்.

 

கோமதி நேத்ராவிடம் அவள் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். “மதினி நேத்ராவுக்கு எப்போ சீமந்தம் பண்ணலாம்ன்னு இருக்கீங்க. மாசம் நெருங்கி கிட்டு இருக்கே” என்றார் கோமதி. “ஆமா மதினி ஆதிராவும் ஆதியும் ஊர்ல இருந்து வந்த பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து சீமந்தம் செய்ய வேண்டியது தான் அதுக்காக தான் பார்த்திட்டு இருக்கோம்” என்றாள் லட்சுமி.

 

கவினியும் கவினும் சூர்யாவின் மடியில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு “மாமா வெளிய போகலாமா” என்று அவன் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். சூர்யாவின் கண்கள் ஒரு அலைப்புறுதலுடன் அங்குமிங்கும் சுற்றியது. அவன் தேடிக் கொண்டிருந்தவள் பரீட்சை முடிந்து விடுமுறை விட்டிருந்ததால் இன்னும் திருப்பள்ளியெழுச்சி கொள்ளாமல் படுக்கையில் புரண்டு கனவு கண்டுக் கொண்டிருந்தாள்.

 

லட்சுமி அவள் இன்னும் எழுந்து வராமல் அவள் அறையிலேயே உறங்கிக் கொண்டிருப்பது கண்டு உள்ளே செல்வது போல் சென்று அவளை முதுகில் ஒன்று வைத்தார். “என்னம்மா என்னாச்சு எதுக்கு இப்படி அடிக்கறீங்க, எனக்கு தான் பரீட்சை முடிஞ்சுதே இப்போ காலேஜ்க்கும் விடுமுறை தானே நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேனே” என்று சிணுங்கினாள்.

 

“நல்லா தூங்கின போ, பொம்பளைபிள்ளை காலையில எழுந்து பழக வேணாம், நீ போற வீட்டுல எனக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துடுவ போல இருக்கே. அங்க உங்க அண்ணி வீட்டில இருந்து வந்திருக்காங்க, நீ இன்னும் எழுந்து வராம இருந்தா என்னை என்ன நினைப்பாங்க. எழுந்து சீக்கிரம் குளிச்சுட்டு வந்து அவங்களை வாங்கன்னு கேளு. நான் வெளிய போய் ஐந்து நிமிடத்தில் நீ அங்கிருக்கணும்” என்று சொல்லி விட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

துள்ளி குதித்து எழுந்தவள் அவள் உடையை எடுத்துக் கொண்டு நேரே குளியலறை சென்று குளித்து விட்டு அவள் அன்னை சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் வெளியில் வந்தாள். அவள் அறையில் இருந்து வரவும், சூர்யாவின் கண்கள் அவளை மொய்க்கவும் சரியாக இருந்தது.

 

ஏதோ பெண் பார்க்கவென்று வந்திருப்பது போல் இருந்தது அவன் இருந்த தோரணை. அவர்களை பரஸ்பரம் நலம் விசாரித்தவள் அன்னை சமையலறையில் இருக்க அங்கு சென்றுவிட்டாள். “அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் வந்துட்டேனா” என்றாள் அவள்.

 

“அதான் எனக்கும் புரியலை இன்னைக்கு மழை கொட்டப் போகுதுன்னு நினைக்கிறேன். இந்தா இந்த காபியை அவர்களுக்கு கொண்டு கொடு. நான் பலகாரம் எடுத்து வருகிறேன்” என்று அவள் கையில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டைக் கொடுத்தார் அவர்.

 

ஆதர்ஷாவுக்கு நிஜமாகவே தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று இருந்தது. மாப்பிள்ளைக்கு காபியை கொடுத்து வா என்பது போல் இருந்தது அவள் அன்னை சொன்னது. எதுவும் பேசாமல் வெளியில் சென்று எல்லோருக்கும் காபி கொடுத்தாள். அவனுக்கு கொடுக்கும் போது தன்னையுமறியாமல் அவள் கண்கள் அவனை நோக்க அவன் விழிகளில் ஒரு சிரிப்பு தெரிந்தது போல் இருந்தது.

 

“மதினி நாங்க கிளம்புறோம், உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்ன்னு தான் வந்தோம். நேத்து ஆதிரா போன் பண்ணி சூர்யாகிட்ட குழந்தைகளை வெளிய கூட்டிட்டு போகச் சொன்னாளாம். சூர்யா காலையில கிளம்பும் போது நாங்களும் வர்றோம்ன்னு வந்துட்டோம். எங்களுக்கும் உங்களை எல்லாம் பார்த்து நாளாச்சு, நேத்ராவையும் ஒரு எட்டு பார்த்துடலாம்ன்னு தான் வந்தோம். இதுல நேத்ராவுக்கு பிடிச்ச மாதிரி பலகாரம் எல்லாம் செஞ்சு வைச்சு இருக்கேன் மதினி. அவளுக்கு கொடுங்க, நேத்ரா எல்லாமே நீ எங்க வீட்டுக்கு வரும் போது விரும்பி சாப்பிடுற பலகாரம் தான்” என்றார் கோமதி.

 

“என்ன மதினி நீங்க இப்போ தான் வந்தீங்க, அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்றீங்க. இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என்றார் லட்சுமி. “இல்லைம்மா எனக்கு கடைக்கு போகணும், நேரமாச்சு இன்னும் இரண்டு இடத்தில் கடை போடலாம்ன்னு ஒரு எண்ணம் இருக்கு. சூர்யாவும் அதே தான் விரும்பறான். அதான் அதுக்கு தோதா இடம் பார்த்துட்டு இருக்கேன், அதுக்கு அங்க இங்கன்னு அலைஞ்சுட்டு இருக்கேன். உங்களை எல்லாம் பார்த்துட்டு போகணும் தோணிச்சு அதான் வந்தோம்” என்றார் சங்கரன்.

 

“என்ன சம்மந்தி நீங்க என்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கக் கூடாதா, என்னோட நண்பர் ஒருத்தர் ஒரு இடம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தார்…” என்று அருணாசலம் ஆரம்பித்தார். சூர்யாவுக்கு தலையை சுற்றியது இவர்கள் இப்போதைக்கு முடிக்க மாட்டார்கள் என்று எண்ணியவன் நைசாக குழந்தைகளின் காதில் “கிளம்பலாமா” என்றான்.

 

அவர்களும் குதித்துக் கொண்டு “ஆச்சி நாங்க மாமாகூட கிளம்பறோம், எங்களுக்கு நேரமாச்சு” என்று பெரிய மனுஷியாக கவினி சொல்ல லட்சுமியும் சரியென்றார். குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் எல்லாம் எடுத்து அவனிடம் கொடுத்தார்.“சரி அத்தை நாங்க கிளம்பறோம். குட்டீஸ் எல்லாருக்கும் bye சொல்லுங்க” என்றான் அவன். குழந்தைகளும் எல்லோருக்கும் bye சொல்லி முத்தம் வைத்து அவனுடன் சந்தோசமாக கிளம்பினர். அப்போது தான் நினைவு வந்தவராய் லட்சுமி, “தம்பி கொஞ்சம் இருங்க ஆதர்ஷா நீயும் கூட போய்ட்டு வாம்மா, அவர் ஒருத்தரால ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாது” என்றார் லட்சுமி.

 

ஆதர்ஷாவிற்கு சொல்லொணாத சந்தோசம் மனதில் தோன்றினாலும் அன்னையை கேள்வியாக நோக்கினாள். “அத்தை அதெல்லாம் வேணாம் நானே பார்த்துப்பேன் அத்தை” என்றான். “ஆமா மதினி அதெல்லாம் அவன் பார்த்துப்பான். நீங்க படிக்கற பிள்ளையை போய் அவனோட அனுப்பறீங்க” என்றார் கோமதியும்.

 

“இல்லை மதினி நேத்தே ஆதி போன்ல சொன்னான். சூர்யாவால தனியா ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாது அதுனால ஆதர்ஷா அனுப்பி வைங்கன்னு. அவளுக்கும் பரீட்சை எல்லாம் முடிஞ்சு போச்சு, அவளுக்கு இப்போ விடுமுறை தானே போயிட்டு வரட்டும்” என்றார் லட்சுமி.

 

சூர்யா அவள் எதற்கு என்று சொன்னதும் ஆதர்ஷாவின் முகத்தை பார்க்க வேண்டுமே அம்மாவே போன்னு சொல்றாங்க இவர் என்ன வேணாம்னு சொல்றார் என்று அவனை மனதுக்குள் நன்றாக வசை பாடினாள்.

 

ஆதவனும் ஏதோ மறுத்து சொல்ல வந்தவன் ஆதி தான் சொன்னான் என்றதும் வாயை மூடிக் கொண்டான். “அம்மா நான் எதுக்கும்மா” என்று சிணுங்கினாள். “ஆதர்ஷா உனக்கு கூட போய்ட்டு வர என்ன கஷ்டம், குழந்தைகளை வைச்சுட்டு அவர் எப்படி பார்த்துப்பார்ன்னு சொன்னா ரொம்பவே அலுத்துக்கற, நீ போய்ட்டு வர்ற” என்று அவர் கண்டிப்புடன் அவளை தனியே கூப்பிட்டு கண்டித்தார்.

 

ஒருவழியாக ஆதர்ஷாவும் கிளம்பி வர அவளை காரில் ஏறச் சொன்னான் சூர்யா. அவள் இரு குழந்தைகளையும் பின்னிருக்கையில் ஏற்றி விட்டு அவளும் ஏறி உட்கார்ந்தாள். அங்கு எல்லோரும் இருந்ததால் சூர்யாவும் எதுவும் பேசாமல் இன்முகத்துடன் காரை கிளப்பினான்.

 

சிறிது தூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தினான். “உனக்கென்ன நான் டிரைவரா ஏன் உங்களால முன்னாடி உட்கார முடியாதா” என்றான் அவன். அவள் பக்கென்று சிரித்து விட்டாள். “என்ன சிரிப்பு உனக்கு” என்று பற்களை நறநறத்தான் சூர்யா.

 

“இல்லை நிஜமாவே நீங்க ஊர்சுத்தி பார்க்க தான் கூட்டிட்டு போறீங்க. கிட்டத்தட்ட நீங்க டிரைவர் மாதிரி தானே அதை நினைச்சேன். சிரிப்பு வந்துடுச்சு” என்றாள் அவள்.“என்ன என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு, அன்னைக்கு என்னன்னா என்னை ஒரு பொம்பளை பொறுக்கி மாதிரி பேசுன, இன்னைக்கு என்னை டிரைவர்ன்னு கிண்டல் பண்ற. என்ன தான் நினைக்கிற, இப்போ முன்னாடி வந்து உட்கார முடியுமா முடியாதா” என்று அவன் குரலை உயர்த்தவும் மறுபேச்சின்றி கவினையும் கவினியையும் தூக்கிக் கொண்டு முன்னே ஏறி அமர்ந்தாள்.

 

குழந்தைகள் இருவரும் அடுத்தத்தடுத்து ஜன்னோர இருக்கையில் அமர ஆதர்ஷா சூர்யாவின் தோள்களை உரசியவாறு அமர்ந்தாள்.அதன் பின் சூர்யா காரை கிளப்பினான். ஆதர்ஷாவுக்கு அவன் முகம் கடுகடுத்தது உள்ளுக்குள் குளிரை பரப்பியது. அவனிடம் மன்னிப்பு கேட்க இது தான் சந்தர்ப்பம் என்று தோன்ற மென்று விழுங்கியவாறே ஆரம்பித்தாள்.

 

“நீங்க இன்னும் என் மேல கோபமா தான் இருக்கீங்களா, நான் அன்னைக்கு பேசினது தப்பு தான் ஆனா எதுக்காகன்னு நீங்க புரிஞ்சுக்கணும்” என்றாள் அவள். “கொஞ்சம் நிறுத்து எது பேசுறதா இருந்தாலும் நாம அங்க போன பிறகு பேசிக்கலாம், நான் வண்டி ஓட்டணும்” என்று அவன் அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான்.

 

சூர்யா அவர்களை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான், செல்லும் வழியில் அவர்களுக்கு மதிய உணவை வாங்கிக் கொண்டு அவர்கள் அங்கே செல்லும் போது நேரம் மதிய வேளையை நெருங்கி இருந்தது. முதலில் அவள் குழந்தைகளுக்கு உணவை ஊட்டிவிட பின் இருவருமாக ஒன்றாக உணவருந்தினர்.

 

அவர்களை அழைத்துக் கொண்டு பூங்காவை சுற்றி வந்தனர். கவினும் கவினியும் அங்கிருந்த மிருகங்களை பார்த்து ஆர்ப்பரித்தனர். சந்தோசமாக சுற்றி வந்தனர். சற்று களைப்படைவது போல் தோன்றினால் அங்கிருக்கும் பெஞ்சில் அவர்கள் அமர்ந்து கொள்வார்கள்.

 

அங்கு பக்கத்தில் இருந்த ஒரு குரங்கு கூண்டை ஆதர்ஷா அருகில் சென்று நின்று எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். திடிரென்று எங்கிருந்தோ இருந்து வந்த குரங்கொன்று சட்டென்று அவள் எதிரில் வந்து அது வாயை ஆவென்று காட்ட பயந்து போய் திரும்ப சூர்யாவின் மேல் இடித்துக் கொண்டாள்.

 

சற்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க “நான் ரொம்ப பயந்துட்டேன்” என்று கண்களை இருக்க மூடி எதை பற்றியவள் மெதுவாக கண்களை திறக்க அவள் பற்றி இருந்தது சூர்யாவின் சட்டையை அவளுக்கு வெட்கமாக இருந்தது. கவினி வேறு பக்கம் ஏதோ பறவை கூண்டினை பார்த்துக் கொண்டிருக்க கவின் களுக்கென்று அவளை பார்த்து சிரித்தான்.

 

“அத்தை பயந்துட்டியா, பயத்தில மாமா கட்டி புடிச்சுடியா ஹாஹாஹா” என்று சிரித்தான் அவன். அவனிடமிருந்து அவள் விலக “சாரி” என்று ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு அங்கிருந்த மரபெஞ்சில் சென்று அமர்ந்தாள்.‘ச்சே என்ன வேலை செஞ்சுட்டேன் என்னை பத்தி என்ன நினைப்பான் நான் அவனை ஏதோ மயக்க நினைக்கிறேன் நினைக்க மாட்டானா. ஒரு வேளை நான் அவனை சமாதானப் படுத்த இப்படி நடந்துக்கறதா நினைச்சுக்குவானோ’ என்று எண்ணி அவள் தலையில் லேசாக அடித்துக் கொள்ள சூர்யா அவளருகே வந்தான்.

 

குழந்தைகளை அவர்கள் பார்வையில் படுமாறு பார்த்துக் கொண்டே அவளிடம் பேச்சு கொடுத்தான் சூர்யா. “சொல்லு கார்ல வரும் போது ஏதோ சொன்னியே. என்ன அது” என்று ஆரம்பித்தான்.அவளுக்கு பேச வந்தால் தானே அவளுக்கு உள்ளுக்குள் ஒரே உதறலாக இருந்தது.

 

“இல்லை நான் அன்னைக்கு பேசினது தப்பு… தப்பு தான்…ஏ என்னை… என்னை மன்னிச்சுடுங்க” என்று திணறினாள் அவள்.“சரி அன்னைக்கு உனக்கு எதுக்கு அவ்வளவு கோபம்” என்றான் அவன் நிதானமாக. “அது… அது வந்து…” என்று அவள் மீண்டும் இழுக்க “அது வந்து என்னன்னு தான் கேட்குறேன், எதுக்கு இப்படி இழுக்கற” என்றான் அவன்.

 

“அது வந்து ஏதோ ஒரு கோபம், நீங்க எல்லார்கிட்டயும் நல்லா பேசுறீங்க. என்கிட்ட மட்டும் பேசவே மாட்டேங்கறீங்க. எனக்கு அந்த கோபம் தான் நீங்க என்கிட்ட மட்டும் பேசணும்ன்னு நான் நினைச்சேன். நீங்க அன்னைக்கு கீர்த்திக்கிட்ட பேசின போது அதுனால தான் எனக்கு கோபம் வந்துச்சு” என்று கூறி முடித்தாள்.

 

“நீ என்ன சொல்ல வர்றன்னு புரிஞ்சு தான் சொல்றியா” என்றான் அவன் மீண்டும் நிதானமாக. “நீங்க என்ன சொல்றீங்க” என்று அவனை புரியாமல் பார்த்தாள் அவள். “நீ என்னை விரும்பறியா” என்றான் அவன். அவனின் இந்த நேரடி தாக்குதல் அவள் எதிர்பாராதது, அவள் கண்கள் சட்டென்று கலங்கியது.

 

தலையை குனிந்துக் கொண்டே அவனுக்கு தலையை ஆம் என்பது போல் ஆட்டினாள் அவள். அவள் கைகளை எடுத்து தன்னுள் வைத்துக் கொண்டு “எனக்கும் தான்” என்று அவன் சொன்னதை முதலில் அவள் கவனிக்கவே இல்லை. அவன் கைகளுக்குள் தன் கைகள் சிறைபட்டிருக்கிறது என்பதை அவள் உணர ஆரம்பித்ததும் நிமிர்ந்து அவன் கண்களை சந்தித்தாள்.

 

“என்ன உனக்கு புரியலையா எனக்கும் உன்னை பிடிச்சுருக்கு” என்றான் அவன். அவள் எதையோ எதிர்பார்ப்பது போல் தோன்ற அதை புரிந்தவன் “நான் உன்னை காதலிக்கிறேன், போதுமா இதை தானே நீ என்னிடம் எதிர் பார்த்தாய். நீ எதிர்பார்த்ததை நான் சொல்லிட்டேன், எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் தானே” என்றான் அவன்.

 

பதிலுக்கு அவளும் அவனை விரும்புவதாகக் கூற இருவரும் தங்களுக்குள் எப்படி காதல் அரும்பியது என்பதை பகிர்ந்து கொண்டனர். சூர்யா திடிரென்று “தர்ஷு ஒரு வேளை உங்க வீட்டில நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா என்ன செய்வ” என்றான் அவன்.

 

“அவங்களை சம்மதிக்க வைக்க எவ்வளவு முயற்சி பண்ணணுமோ அவ்வளவு முயற்சி பண்ணுவேன், இல்லைனா எனக்கு கல்யாணமே வேணாம்னு இருப்பேன்” என்றாள் அவள். அவள் உறுதி அவனுக்குள் அவள் மேல் உள்ள காதலை அதிகமாக்கியது.

 

“சரி உன்னோட படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, நீ நல்லா படிக்கணும், நானும் எனக்கான வேலையை தேர்வு செய்யப் போறேன். உன்னை சந்தோசமா வைச்சு நல்லா பார்த்துக்கற அளவுக்கு என் தகுதியை நான் வளர்த்துக்கணும். அப்போது தன் என்னால் உங்கள் வீட்டிற்கு வந்து தைரியமாக பெண் கேட்க முடியும். நான் உன்னை எந்த விதத்திலும்  தொந்திரவு செய்ய மாட்டேன், ஆனா அப்பப்போ கொஞ்சம் போன்ல மட்டுமாவது பேசு சரியா” என்று சொன்னான் சூர்யா.

 

அவளுக்காக அவன் யோசிப்பது புரிய அவளும் அதற்கு இசைந்தார் போல் தலையாட்டினாள். இருவரும் சந்தோசமாக பேசியவாறே குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்களை கூட்டிச் சென்று வீட்டில் விட்டு விட்டு சூர்யா மறுநாள் வருவதாக கூறிச் சென்றான்.

 

ஆதிக்கும் போன் செய்து ஆதர்ஷாவிடம் பேசியது பற்றி சொன்னான் சூர்யா. ஆதர்ஷாவும் அவனை விரும்புவது உறுதியாக தெரிந்ததும் ஆதி சற்று நிம்மதியடைந்தான். மேலும் தங்கைக்கு அவர்கள் எப்படியும் மாப்பிள்ளை பார்க்க வேண்டும், அப்போது யாரோ ஒருவருக்கு கட்டிக் கொடுப்பதை விட நன்கு தெரிந்த சூர்யா அவனுக்கு சரியென்றேப்பட்டது.

 

சூர்யா நல்ல பையன் என்றும் அவனுக்கு தோன்றியதால் தான் அவன் விருப்பத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்து தங்கையை கட்டிக் கொடுக்க நினைத்தான். இருந்தும் ஒரு அடி ஆழத்தில் ஆதர்ஷாவிற்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது சென்று தோன்றியது.

 

நேத்ராவின் பூ முடிப்பு அன்று ஆதர்ஷாவிற்கும் விருப்பம் இருப்பது போல் தோன்றுவதாக சூர்யா சொன்ன போதும் ஆதிக்கு அதை அவளே நேரிடையாக ஒப்புக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.

 

அதற்காகவே தான் ஆதி யோசித்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து தத்தம் மனதில் உள்ளதை பேசிக்கொள்ள ஏற்பாடு செய்தான். சூர்யாவின் சந்தோசம் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது, தங்கைக்கு பிடித்த வாழ்க்கையை தான், தாமும் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நிம்மதியானான்.

 

____________________

 

 

“ஹேய் வெற்றி வாடா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து இருக்க” என்று அவனை வரவேற்றான் ராஜீவ். “ராதி வெற்றி வந்திருக்கான் எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வாயேன்” என்றான் அவன்.

 

“என்னடா நான் உன் வீட்டுக்கு வரக் கூடாதா முன்னாடியே தந்தி கொடுத்துட்டு தான் வரணுமா” என்று அலுத்தான் வெற்றி. “டேய் நான் அப்படிலாம் எதுவும் சொல்லலை. தீடிர்னு வந்திருக்கியே, நீ வர்றதா இருந்தா என்கிட்ட போன் பண்ணி சொல்லி இருப்பியே அதான்டா கேட்டேன். வேற எதுவுமில்லை நீ எப்போ வேணாலும் இங்க வரலாம்” என்றான் ராஜீவ்.

 

“அப்புறம் சொல்லுடா தங்கச்சி கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு” என்றான் அவன் மீண்டும். “தங்கச்சிக்கு மட்டும் இல்லை எனக்கும் தான் கல்யாணம்” என்றான் வெற்றி அசுவாரசியமாக.

 

“என்னடா உனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லைங்கற மாதிரி அலுப்பா சொல்ற, பொண்ணு யாரு என்ன விவரம். நீ எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட” என்றான் அவன்.

 

“பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறோம்டா, அவங்க முதல்லயே கேட்டாங்க, நான் தான் அப்போ மறுத்திட்டேன். ஆனா எங்க வீட்டில இப்போதைக்கு தங்கை கல்யாணம் முதல்ல முடிக்கலாம் அப்புறம் மத்தது பேசிக்கலாம்னு சொல்லி இருப்பாங்க போல. நான் ஊருக்கு போனதும் என்கிட்ட கேட்டாங்க நானும் சரின்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்”.

 

“இனியாவது ஆதிக்கு என்னோட சகஜமா பேச முடியுதான்னு பார்க்கலாம்டா, லட்சுமியும் அன்னைக்கு என்கிட்ட கோபமா பேசும் போது என்னை முதல்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லிச்சு. அதான் நானும் வீட்டில கேக்கும் போது இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன். அவங்களும் ரெண்டு கல்யாணமும் ஒண்ணாவே வைச்சுடலாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றான் அவன்.

 

“சந்தோசமா இருக்குடா நம்ம நண்பர்கள்ல நீ தான் கல்யாணம் பண்ணிக்காம இருந்த, உனக்கும் கல்யாணம் நினைச்சா சந்தோசமா இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராதிகா காபியுடன் வந்தாள்.

 

“என்ன வெற்றி கல்யாணம்னு பேச்சு வந்துச்சு, சந்தோசம்டா எங்களை எல்லாம் எப்போ கூப்பிடுவ, கல்யாணம் எங்க ஊர்ல தானே” என்றாள் அவள். “ஆமா ராதிகா நீங்க எல்லாருமே குடும்பத்தோட வரணும், நான் அடுத்த மாசம் பத்திரிக்கையோட வர்றேன்” என்றான் அவன்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராகுலும், கதிரும் வந்தனர். “என்னடா இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து தரிசனம் தர்றீங்க” என்றான் ராஜீவ். “இவன் தான்டா வரச் சொன்னான்” என்று அவர்கள் வெற்றியை கைக்காட்டினர்.

“இல்லைடா நாம எல்லாம் சந்தோசமா பேசி சிரிச்சு எத்தனை நாள் ஆச்சு, நான் ஊருக்கு போய்டதால உங்க எல்லாரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணேன்டா. ஆதியை நான் கூப்பிட்டா வருவானான்னு தெரியலை ராஜீவ், நீயே போன் பண்ணி வரச் சொல்லேன்” என்றான் வெற்றி.

 

“இல்லை வெற்றி அவன் ஒரு வேலை விஷயமா மும்பை போயிருக்கான். ஆதிராவும் கூட போயிருக்கா” என்றான் அவன். “அவன் என்கிட்ட சரியாவே பேசலை எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா, உங்க எல்லாரையும் விட அவன் என்கூட எவ்வளவு நெருக்கமா இருந்தான், நான் தான் ஏதேதோ பேசி அவனை சங்கடப்படுத்திட்டேன்டா. அவன் எனக்கு எவ்வளவு உதவி செஞ்சு இருக்கான்….” என்று நினைத்து வருந்தினான் வெற்றி.

 

“வெற்றி நீ இன்னும் அதையே ஏன் நினைக்கிற, அவனுக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. உனக்காக தான் அவன் வருத்தப்பட்டிருப்பானே தவிர, நீ பேசியதில் எதுவும் வருந்தி இருக்க மாட்டான்” என்று ராஜீவ் ஆறுதல் கூறினான்.

 

கதிரும் ராகுலும் பேச்சை மாற்றும் விதமாக அவர்கள் கல்லூரியில் அவர்கள் அடித்த லூட்டியை பற்றி பேச ஆரம்பித்தனர். நேரம் போவதே தெரியாமல் பேசினர், தீடிரென்று ஞாபகம் வந்தவனாய் வெற்றி ராஜீவிடம் “டேய் ராஜீவ் நாம எல்லாரும் கொடைக்கானல் போகும் போது எடுத்த போட்டோ எல்லாம் இருக்காடா பார்க்கணும் போல இருக்கு” என்றான்.

 

“இருடா எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்று அவன் இரண்டு போட்டோ ஆல்பங்களை எடுத்து வந்தான். சந்தோசமாக எல்லாவற்றையும் வெற்றி பார்த்துக் கொண்டு வந்தான். அடுத்த ஆல்பத்தை எடுத்து பார்த்தவன் “இது என்னடா எல்லாருடைய கல்யாண போட்டோ மாதிரி இருக்கு” என்றான் வெற்றி.

 

“ஆமாடா நம்ம நண்பர்கள் கல்யாணத்துல நாம எல்லாரும் இருக்கற போட்டோவா இருக்கும். அவங்கவங்ககிட்ட கேட்டு தனியா வாங்கி இப்படி ஆல்பம் போட்டு வைச்சு இருக்கேன்” என்றான் ராஜீவ். “இதுல உங்க அக்கா கல்யாண போட்டோ கூட இருக்கும்” என்றான் அவன்.

 

“நான் தான் எல்லா கல்யாணத்துலயும் இல்லாத ஒரு ஆளு, அதுக்காக என்னோட கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வராம இருந்துடாதீங்கடா” என்றான் வெற்றி. ஒவ்வொரு பக்கமாக திருப்பி கொண்டே வந்தவனின் பார்வை அடுத்து வந்த புகைப்படத்திலேயே நின்றது.

 

“கதிர் இது லட்சுமி தானே” என்று அவன் காண்பித்த புகைப்படத்தில் இருந்தது ஹரிணி “ஆனா கொஞ்சம் ஒல்லியா தெரியறா, அவளுக்கு எப்போமே கொஞ்சம் பூசின உடம்பு வாகு தானே. தலை எல்லாம் கூட வேற மாதிரி வாரி இருக்கு, யாரோ ஒருத்தி மாதிரி தெரியுது” என்றவனிடமிருந்து அந்த ஆல்பத்தை பிடுங்காத குறையாக வாங்கி எல்லோரும் பார்த்தனர். “வெற்றி நீ ஹரிணியை பார்த்ததில்லையா” என்றான் ராஜீவ். “ஹேய் என்னடா நான் தான் யார் கல்யாணத்துக்குமே வரலையே” என்றான் அவன்.

 

“இந்த புகைப்படத்துல இருக்கறது ஹரிணி” என்றான் ராஜீவ்.வெற்றி அதை வாங்கி வெகு நேரம் பார்த்தான், அது ஆதிரா போல் இல்லை தான் ஆனால் கொஞ்சம் முகம் ஒற்றுமையாக இருந்தது. “ஏன்டா உங்களுக்கு அப்படி தெரியலையா” என்றான் வெற்றி. “நீ சொன்னபிறகு பார்த்தா எங்களுக்கும் கொஞ்சம் அப்படி தான் தெரியுது” என்றான் ராகுல்.

 

“இதுவரைக்கும் உங்களுக்கு இப்படி தோணினதே இல்லையா” என்றான் வெற்றி. “இல்லைடா நாங்க ஹரிணியை எப்போதாவது தான் பார்த்திருக்கோம். அவங்க வீட்டுக்கு கூட நாங்க அவ்வளவா போனதில்லை. ஆதிரா வந்த பிறகு தான் இப்போலாம் அடிக்கடி நாங்க அவங்க வீட்டுக்கே போறோம்” என்றான் ராகுல்.

 

அடுத்த பக்கத்தை திருப்பிய வெற்றிக்கு ஏதோ புரிந்தது போல் தோன்றியது, ராஜீவ்விடம் விபரம் கேட்டறிந்தவன் அவனுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொண்டான் அவன்………. வெற்றியின் சந்தேகம் தான் என்ன ஹரிணிக்கும் ஆதிராவுக்கும் இருக்கும் முக ஒற்றுமைக்கு காரணத்தை கண்டு பிடித்திருப்பானோ……

 

 

குழந்தைகளின் மீதான

உன் நேசத்தில்

தாய்மையை காண்கிறேனடி…

 

என் மீதான

உன் நேசத்தில் கரையில்லா

காதலை உணர்கிறேனடி…

 

நீ சொல்வதற்குள்

என் நேசம் கரை உடைத்து

உன்னில் என்னை

காட்டிக் கொடுத்து விடுமோ

என பயந்தேனடி…

 

கரை புரளும் முன்

என்னை காக்க வைக்காமல்

உன் மனதில் உள்ளதை

வெளிபடுத்துவது எப்போதடி…

 

 

 

 

Advertisement